privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்ஈழம்: விவசாயத்தை ஆக்கிரமிக்கும் இந்தியாவின் நரித்தனம்!

ஈழம்: விவசாயத்தை ஆக்கிரமிக்கும் இந்தியாவின் நரித்தனம்!

-

ஈழம்: விவசாயத்தை ஆக்கிரமிக்கும் இந்தியாவின் நரித்தனம்!

இருபதாயிரம் மக்களுக்கும் மேற்பட்டோரைத் துடிதுடிக்கக் கொன்றொழித்து, ஈழப்போரை துயரமான முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறது, சிங்கள இனவெறி அரசு. இந்த இன அழிப்புப் போரின் பங்குதாரர்களாக இலங்கை அரசுடன் இந்தியாவும் சீனாவும் கைகோர்த்திருந்தன. புவியியல் ரீதியாக இராணுவ, பொருளாதார முக்கியத்துவமுடையதாக இலங்கை இருப்பதால் அமெரிக்க ஏகாதிபத்தியமும், அதற்குப் போட்டியாக உருவெடுத்து வரும் சீனாவும் அங்கு தமது மேலாதிக்கத்தை நிறுவும் போட்டியில் ஈடுபட்டுள்ளன. இந்திய அரசும் தன் பங்கிற்கு போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஈழப்பிரதேசத்தில் தன் மேலாதிக்கத்தைத் தக்க வைக்கும் பொருளாதார நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. போரின் பிடியில் சிக்கியிருந்த வடக்கு பகுதிகளின் மறுகட்டமைப்புக்கு ’வடக்கின் வசந்தம்’ எனக் கவர்ச்சியான பெயரைச் சூட்டி இருக்கும் இலங்கை இனவாத அரசு, தனக்கு உதவிகள் சீனாவிலிருந்து வந்தாலும்  இந்தியாவிலிருந்து வந்தாலும் ஏற்றுக்கொண்டு அந்நாடுகள் விதிக்கும் நிபந்தனைகளுக்குக் கட்டுப்படும் நிலையில் உள்ளது.

விவசாய நிபுணரும், ‘பசுமைப் புரட்சி’ மூலம் இந்திய விவசாயிகளை ஓட்டாண்டி ஆக்கியவருமான எம்.எஸ்.சுவாமிநாதன் ஈழத்தமிழர் சிந்திய ரத்தம் உலரும் முன்னரே இலங்கைக்குப் பறந்து சென்று வன்னி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் பகுதிகளின் விவசாய மறுசீரமைப்புக்கான திட்டத்தை முன்மொழிந்து வந்திருக்கிறார்.

அரசு நிறுவியுள்ள அகதிகள் முகாம்களில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அடைபட்டுள்ளனர். இவர்களில் இளைஞர்களைத் தனியே பிரித்து வதைமுகாம்களுக்கு அனுப்பிவிட்டு, எஞ்சி இருக்கும் பெண்கள் அனைவருக்கும் பயிற்சி அளித்து வன்னி, மன்னார், முல்லைத்தீவு பகுதிகளில் இருக்கும் 3 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்களை இந்தியாவுக்கும் பிற நாடுகளுக்கும் தேவையான உணவு தானியங்களைப் பயிரிட்டு ஏற்றுமதி செய்யும் திட்டத்தை சுவாமிநாதன் தீட்டியிருக்கிறார். தற்போது முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள வன்னிப்பெருநிலப்பரப்பின் மக்கள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக விவசாயம் செய்து பெற்ற பாரம்பரிய அறிவைக் கொண்டுள்ளவர்கள்தான்.  இவர்களால் அப்பகுதியில் 1 லட்சம் ஹெக்டேரில் நெல்லும், 2 லட்சம் ஹெக்டேரில் பாசிப்பயிறு, மிளகா, எள், தேங்கா, சேனைக்கிழங்கு போன்ற விளைபொருட்களும் போருக்கு முன்புவரை உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. இம்முகாம்களிலிருக்கும் பெண்களுக்கு மண்புழு வளர்த்தல், இயற்கை எரு தயாரித்தல், ஊடுபயிராக நைட்ரஜன் சத்தைத் தக்கவைக்கும் அகத்தி பயிரிடல் போன்றவற்றை சுவாமிநாதனின் ஆராச்சி நிறுவனம் கற்றுத் தரப்போகிறதாம். அங்குள்ள மண்ணின் தன்மையை ஆவு செய்ய நடமாடும் மண்பரிசோதனைக் கூடங்களும், ஒவ்வொரு விவசாயிக்கும் மண்பரிசோதனை அடையாள அட்டையும் வழங்கப்பட்டு மண்ணின் தன்மைக்கேற்ற நீர்ப்பாய்ச்சலளவு வரையறுக்கப்படுமாம்.

இதன்படி,சுவாமிநாதனின் ஆராய்ச்சி நிறுவனம், விவசாய நிலங்களில் புதைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகளை அகற்றியும் அங்குள்ள 2300 கண்மாய்களையும் 50 நடுத்தர மற்றும் 11 பெரும் குளங்களையும் சீரமைத்தும் இப்பெண்களைக் கொண்டு போய் வடக்குப் பிரதேசத்தில் குடியமர்த்தி, தாம் திட்டமிட்டுள்ள இந்தியாவிற்குத் தேவையான விளைபொருட்களைப் பயிர் செய்யும். விவசாயத்தை, வரும் விதைப்புக் காலமான அக்டோபரில் நடைமுறைப்படுத்தும். வன்னிப்பெருநிலப்பரப்பில் போருக்கு முந்தைய உணவு உற்பத்தி மட்டும் 8 லட்சம் டன்களாகும். இதைத் தவிர தலா 10 செண்டுகள் கொண்ட வீட்டுத் தோட்டங்கள் மூலமும், கணிசமான தோட்டப்பயிர் விளைச்சலும், கால்நடை விளைபொருட்களும் இத்திட்டத்தின் இலக்கில் வருவன.

மன்னார் மாவட்டத்தில் மீன்பிடித் தொழிலையும் சுவாமிநாதனின் நிறுவனம் விட்டுவைக்கவில்லை. மீன்பிடித் தொழிலை இந்திய நலனுக்கேற்ற வகையில் மாற்றியமைக்கும் வகையில் பயிற்சி தரும் மையம் ஒன்றையும் அது நிறுவ உள்ளது. இத்திட்டங்களுக்கெல்லாம் சுமார் ரூ. 500 கோடியை இந்திய அரசு ஒதுக்கியுள்ளது.

இத்திட்டங்களைப் பற்றி “இந்து” நாளேட்டில் விளக்கமளித்திருக்கும் சுவாமிநாதன், “போர் இப்போது முடிந்திருக்கிறது. வடக்குப் பிரதேசத்தின் பொருளாதாரப் போராட்டம் இப்போதுதான் தொடங்கியுள்ளது” என்றும், “மக்கள் விரும்பியது சமாதானத்தையும், உணவையும்தான்” என்றும் சொல்லியுள்ளார். அதாவது ரேடார்களையும், எரிகுண்டுகளையும் வழங்கி இருபதாயிரம் பேரை அழித்து சமாதானத்தை(!) நிறுவிய இந்தியா, இப்போது அவர்களுக்கு உணவை ‘வடக்கின் வசந்தம்’ ஊடாக வழங்கப் போகிறது.

ஈழமக்களின் உணவு குறித்து சுவாமிநாதனுக்கு ஏன் இவ்வளவு அக்கறை?

இதனைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், விவசாயத்தில் இன்றைக்கு உலகளாவிய அளவில் ஏற்பட்டு வரும் உலகமயத் தாக்கத்தைக் காணவேண்டும். உற்பத்தித் தொழிலிலும் கணிப்பொறித் துறையிலும் தேசங்கடந்த உழைப்பை “அவுட் சோர்சிங்” மூலம் உறிஞ்சிவரும் ஏகாதிபத்தியம், இன்று விவசாயத்தையும் நாடுகடத்தும் திட்டத்தில் நுழைந்துள்ளது. அண்மையில் தென்கொரிய டேவூ நிறுவனம், மடகாஸ்கர் நாட்டின் பாதி விவசாய நிலங்களைக் குத்தகைக்கு எடுத்து தனது நாட்டின் உணவுத் தேவையை ஈடுகட்ட ஒப்பந்தம் போட்டிருக்கிறது. இதேபோன்று சீனா, கொரியா, ஜப்பான் மற்றும் அரபு நாடுகளும் பிற மூன்றாம் உலக நாடுகளின் விவசாய நிலங்களை வாங்கிக் குவிக்கின்றன. இந்திய நிறுவனங்கள் மடகாஸ்கரில் நெல், கோதுமை மற்றும் பயறு வகைகளையும், மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் எண்ணெ வித்து மற்றும் பயறுவகைகளையும் உற்பத்தி செய்வதில் ஆர்வம் காட்டுகின்றன. சீனா தன் வருங்கால விவசாயத் தேவைகளை காங்கோ, சூடான், சோமாலியா, தென் அமெரிக்க நாடுகள், ரஷ்யா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கும் அவுட்சோர்சிங் செய்ய உள்ளது.

சுவாமிநாதனே தனது “இந்து” கட்டுரையில் குறிப்பிட்டிருப்பது போல வியட்நாமும், கம்போடியாவும் விவசாயத்தில் காலனி நாடுகளாக்கப்பட்டுள்ளன. விவசாயத்தில் அவுட்சோர்சிங் தான் ‘வடக்கின் வசந்தம்’ எனும் பேரால் இலங்கையின் வடக்குப் பகுதியை இந்தியாவின் காலனியாக்கப் போகிறது. ஈழமக்களைக் கொன்றொழித்து, அவர்களின் விடுதலைப்போரைக் கருவறுத்த இந்தியா, அம்மக்களின் பொருளாதார சுதந்திரத்தைத் தன் காலடிக்குக் கொண்டுவரப் போகிறது.

ஈழத்தில் விவசாயத்தை ஏற்கெனவே போர் அழித்து விட்டது. போரில்லாத மற்ற நாடுகளிலோ உலகமயமானது விவசாயத்தை விவசாயிகளிடம் இருந்தே பறித்து விட்டது. இப்போது அவர்களிடமிருந்து நிலத்தைக் கைமாற்றி விட்டு அவற்றைப் பன்னாட்டு நிறுவனங்களுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் இணைக்கும் பல நுணுக்கமான திட்டங்களுடன் பல ஆய்வு நிறுவனங்களும் செயலில் இறங்கி உள்ளன. இந்திய விவசாயிகளின் பாரம்பரிய நெல் ரகங்களை ராக்பெல்லர்/போர்டு பவுண்டேசனுக்குத் திருடிச் சென்று, இந்திய விவசாயிகளின் வாழ்வைச் சீரழித்த மக்கள்விரோதியான சுவாமிநாதன், இப்போது போரின் கொடுமைகளால் குறுக்கொடிந்து போக்கிடக்கும் ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரத்தையும் பறித்தெடுக்கும் சதியுடன் இந்திய-இலங்கை அரசுகளின் ஆசிபெற்று “ஒவ்வொரு பேரழிவும் வளர்ச்சிக்கானதொரு வாய்ப்பை அளிக்கிறது!” என்று அறிவித்தபடி ஈழத்தின் உள்ளே நுழைந்திருக்கிறார்.

ஈழத்தின் மீதான் இந்திய மேலாதிக்கத்தின் பகுதியான இதனைப் புரிந்துகொள்ளத் தவறும் இனவாதிகளோ, சுவாமிநாதன் பார்ப்பான் என்றும், சிலகோடிகளுக்காக தமிழ்ப்பெண்களை விவசாயத்தில் ஈடுபடுத்தி வதைக்கத் திட்டமிட்டுள்ளார் என்றும், ஆண்களை சித்திரவதை முகாம்களில் அடைத்துவைத்து பெண்களின் மானத்தோடு விளையாடும் பார்ப்பனிய சதி இது என்றும் சொல்லி சுவாமிநாதனை, பார்ப்பனர் என்பதால் மட்டும் எதிர்க்கின்றனர். இவர்கள் நினைப்பது போல எம்.எஸ்.சுவாமிநாதன் ஒரு தனிநபர் அல்ல. இந்தியத் தரகு முதலாளிகளின் நலன்களும் இந்திய அரசின் மேலாதிக்கமும் பின்னிப் பிணைந்திருப்பதுதான் இந்தக் கிழட்டுப்பார்ப்பன ஓநாயின் ஆய்வு நிறுவனம். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை இந்த நிறுவனத்துக்கு அரசு தாரைவார்த்திருப்பதும், சுவாமிநாதனை நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக்கி இருப்பதும் தற்செயலானவை அல்ல.

இனவாதிகளாவது இதனைப் பார்ப்பனியம் எனக் குறுக்கிப் பார்க்கிறார்கள். ஆனால் ‘தமிழர் தலைவர்’ வீரமணியோ “விவசாயம் பாவகரமானது என்பதுதானே மனுநீதி! பரம்பரையாக ஏர்பிடிக்காத இனத்திலிருந்து விவசாய நிபுணர்கள் வருவது விளம்பர வெளிச்சத்தால் தொடரும் வித்தைகள்” என்றும், “பார்ப்பனர்கள் எந்த ஆட்சி வந்தாலும் நிரந்தரச் செல்வாக்குடன் இருக்கிறார்கள் பாருங்கள்” என்றும் அறிக்கை விட்டு சுவாமிநாதனை அறிமுகம் செய்கிறார். ஈழ விவசாயம் இந்தியாவுக்குத் திறந்துவிடப்படும்போது, அதில் பார்ப்பான் பலனடைகிறானே என்ற வயிற்றெரிச்சலைத் தவிர, இதில் வேறு எந்த வெங்காயமும் இல்லை. ஒருவேளை, நாளை ஈழத்தில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் கல்வி வியாபாரம் நடத்தலாம் எனும் வாப்பு வரும்சூழலில், ஈழத் தமிழர்களின் கல்வியை மேம்படுத்தக்கூட இந்த ‘தமிழர் தலைவர்’ மனக்கணக்கு போட்டிருக்கக் கூடும். அதனால்தான் சுவாமிநாதனைக் கூட ‘தமிழர் தலைவர்’ கடுமையாகச் சாடவில்லை.

செருப்புக்கேத்தபடி காலைவெட்ட முடியாது. அதைப்போலவே தாங்கள் வைத்திருக்கும் பார்ப்பன எதிர்ப்பு எனும் ஒரே வட்டத்துக்குள் சுவாமிநாதனின் ‘ஈழ விவசாயப் புரட்சியை’ அடைக்கப் பார்ப்பதன் மூலம் இந்தியாவின் ஆதிக்கத்துக்குத் துணைபோகின்றனர், தமிழினவாதிகள். ஒருவேளை ‘வடக்கின் வசந்தம்’ திட்டத்தை நிறைவேற்றும் இடத்தில் சுவாமிநாதன் எனும் பார்ப்பானுக்குப் பதிலாக சூத்திரன் ஒருவன் இருந்திருந்தால் எனும் கேள்வியில் இவர்களின் சாயம் வெளுத்துவிடும்.

______________________________________________

புதிய ஜனநாயகம் ஆகஸ்டு  2009
______________________________________________