privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்ஈழம்: உயிர் பிழைக்க ஓடு, ஓடிக்கொண்டே இரு....!!

ஈழம்: உயிர் பிழைக்க ஓடு, ஓடிக்கொண்டே இரு….!!

-

ஈழம்: உயிர் பிழைக்க ஓடு, ஓடிக்கொண்டே இரு….!!

ஒப்பரேஷன் லிபரேஷன் (Operation Liberation), தமிழில் “விடுதலை நடவடிக்கை” இதுதான் நான் யாழ்ப்பாணம் வடமராட்சியில் இருந்த காலங்களில் சிங்கள ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட பாரிய ராணுவசுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கை. இந்த விடுதலை நடவடிக்கை என்பதன் அர்த்தம்தான் எனக்கு சரியாக புரிவதில்லை. இவர்கள் யாருடைய விடுதலையைப்பற்றி குறிப்பிடுகிறார்கள்? சிங்கள ராணுவத்திற்கு முகாமிலிருந்து விடுதலையா? அல்லது போராளிகளிடமிருந்து மக்களை காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் இனவழிப்பு செய்தார்களே, அதுவா? சிங்களராணுவத்தை நாங்க கேட்டமா எங்களை காப்பாற்றுங்கள் என்று. பிறகு யாருடைய விடுதலையைப் பற்றி இவர்கள் பேசினார்கள். எங்கள் மண்ணை விட்டு விலகிப்போங்கள் நாங்கள் குறைந்தபட்சம் உயிர்ப்பயமின்றி நிம்மதியாகவேனும் இருப்போமே. இதைத்தானே கேட்கிறோம். இது புரியாமல் காப்பாற்றுகிறோம், காப்பாற்றுகிறோம்… என்று எங்கள் உயிர்களை எடுத்துக்கொண்டல்லவா இருக்கிறார்கள்.

சரி, யாருடைய விடுதலை என்ற கேள்வியெல்லாம் தாண்டி இறுதியில் கேட்பாரின்றி, நாதியற்றவர்களாக, மிருகங்களை விட மோசமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படுபவர்கள் அப்பாவித் தமிழர்கள்தானே. எப்படிப்பார்த்தாலும் ராணுவம் முகாமிலிருந்து வெளியேறினால் எங்களுக்கு சாவு நிச்சயம் என்பது எல்லோருக்கும் தெரியும். கொல்லப் பிறந்தவன் கொல்கிறான். சாகப் பிறந்தவன் சாகிறான். அவலமாய் சாகப்போகிற தமிழனுக்கு எதற்கு இந்த விசாரணையெல்லாம்? அன்று, இந்த விடுதலை நடவடிக்கையின் போது ராணுவத்திடமிருந்து தப்புவதற்காக உயிரை கையில் பிடித்துக்கொண்டல்ல, இந்த உயிர் ஓர் விமானக்குண்டிற்கோ அல்லது துப்பாக்கிகுண்டிற்கோ இரையாவது மேலென்று மனதில் நினைத்துக்கொண்டு ஊரூராக ஓடியிருக்கிறேன்.

ராணுவத்தால் சாவதானால் அது நிச்சயமாக வலிநிறைந்த மரணமாகத்தானிருக்கும். இதுவே ஒரு குண்டடிபட்டு சாவதானால் வலிகுறைவாகத்தானே இருக்கும். எங்கள் வாழ்க்கைதான் நித்தம் நித்தம் வலிகளோடு நகர்கிறது. குறைந்தபட்சம் நாங்கள் வலியில்லாத சாவையாவது சந்திக்கவேண்டும் என்பதுதான் என் பேராசை. ஊரிக்காடு வல்வெட்டித்துறை ராணுவமுகாமிலிருந்து ராணுவம் வடமராட்சியை கைபற்ற எடுத்த முயற்சி ஒரே நாளில் நடந்ததல்ல. மிக நீண்டநாட்களாக ராணுவம் வெளியேறுவதும், பிறகு முகாமிற்கே திருப்பி அனுப்பபடுவதுமாகத்தானிருந்தது. முகாமிற்குள் ராணுவம் முடக்கப்பட்ட காலங்களில் தரை, கடல், ஆகாயம் என்று மும்முனைகளிலும் இருந்து எங்கள் தலைகள் மீது குண்டுமழை பொழிந்துகொண்டுதானிருந்தது.

ஒரு மனித உயிர் உருவாவதிலிருந்து மரணிக்கும்வரை (ஈழத்தில் மரணத்திற்கு வயது எல்லை கிடையாது…….) மனிதவாழ்க்கையில் நடக்கும் அத்தனை விடயங்களும் பெரும்பாலும் குண்டுச்சத்தத்துடன்தான் நடந்தது. அத்தனை வலிகளுக்குமிடையில் வாழ்க்கை என்பதும் ஆங்காங்கே ஒட்டிக்கொண்டும், ஓடிக்கொண்டும்தானிருந்தது. அந்நாட்களில் நாங்கள் எப்போதுமே இடம்பெயர்ந்து ஓடுவதற்கு தயாராக ஓர் பையில் மாற்று உடுப்புகளும் இன்னபிற முக்கியமான சில பொருட்களுடனும் எந்த நிமிடமும் தயாராகத்தானிருந்தோம்.

“ஆமி வெளிகிட்டிட்டானாம் ….” என்று யாராவது என் வீடு கடந்து ஓடிக்கொண்டிருந்தால் நாங்களும் எங்கள் பைகளை வாரிக்கொண்டு ஓடத் தொடங்குவோம். அப்படி ஓடியபோதெல்லாம் பைகளை விடவும் எங்கள் உயிர்கள்தான் அதிகசுமையாக இருப்பது போல் தோன்றியதுண்டு. ஓடியோடி கால்களை விடவும் எங்கள் மனம் அதிகமாக வலித்தது. பிறகு, ஓரிடத்தில், யாராவது அடைக்கலம் கொடுப்பவர்கள் வீட்டில் தற்காலிகமாக தங்கியிருந்து விட்டு ராணுவம் மீண்டும் முகாமிற்குள் சென்றுவிட்டது என்று தெரிந்தால் மறுபடியும் வீட்டிற்கு திரும்புவோம். ராணுவம் நெருங்கி வருகிறதென்றால் எங்களுக்கு அடைக்கலம் தருபவர்களும் ஓடத்தான் வேண்டும். ஆனால், இலங்கை ராணுவம் இல்லாத ஊர் ஒன்றை கண்டுபிடித்து ஓடவேண்டும். அதனால் தான் உறவுகளை கடந்து, ஊர் கடந்து, கடல் கடந்து, இன்னும் என்னென்னவெல்லாமோ கடந்து இன்றுவரை ஓடிக்கொண்டிருக்கிறோம்…..

அப்போதெல்லாம் ராணுவ உலங்குவானூர்திகளிலிருந்து (அட, அதாங்க ஹெலிகாப்டர்!) அடிக்கடி துண்டுப் பிரசுரங்கள் வீதிகளிலும் வீட்டு முற்றங்களிலும் வீசி எறியப்பட்டதுண்டு. அதை ஊரில் எல்லோருமே ஏதோ நடக்கப்போகிறது என்ற பயப்பிராந்தியுடன்தான் படித்தாலும், அது என்னவென்று அந்த நேரத்தில் யாருக்கும் புரிந்திருக்கவில்லை. அந்த துண்டுப் பிரசுரங்களில் நிறையவே தமிழ் எழுத்துப் பிழைகளுடன் குறிப்பிடப்பட்ட செய்தி, ராணுவம் எங்களை அவர்கள் குறிப்பிட்ட இடங்களுக்கு சென்று தங்குமாறு போடப்பட்டிருந்தது. அதாவது கோவில்கள், பாடசாலைகள் போன்ற இடங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. எங்களை பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாப்பதற்கு தான் இந்த நடவடிக்கையாம். நாங்க கேட்டமா? கைதுகளுக்கும் கூட்டமாக குண்டுபோட்டு கொல்லவும் சிங்கள ராணுவத்துக்கு இதுதானே வசதி. நிற்க, இவர்கள் சொன்ன காலக்கெடுவில் நாங்கள் போய் பாடசாலைகளிலும் கோவில்களிலும் தங்கியிருந்தால் மாதக்கணக்கில் அங்கேயிருந்து நாறியிருப்போம். ஒப்பரேஷன் லிபரேஷன் (விடுதலை நடவடிக்கை) போது எங்களை காப்பாற்ற எந்தவொரு தொண்டர் நிறுவனங்களும் மனிதாபிமான அமைப்புகளும் அந்தநாட்களில் வடமராட்சியில் இருந்ததில்லை.

அதனால் எங்கள் அவலங்களுக்கும் சாவுக்கும் எங்களைத் தவிர சாட்சியும் இல்லை. இப்படியே பயமும் பதுங்குகுழி  வாழ்க்கையுமாக நாட்கள் நகர்ந்துகொண்டிருந்தன. ஒரு நாள் வழக்கம் போல் விமானக் குண்டுவீச்சு சில சுற்றுகள் முடிந்து ஓரளவிற்கு ஓய்ந்து போயிருந்தது. துப்பாக்கி வேட்டுச்சத்தம் மட்டும் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது. கிடைத்த இடைவெளியில் இயற்கை உபாதைக்கு பரிகாரம் தேடி, ஏதோ வெந்ததை தின்றுவிட்டு பதுங்குழிக்கு பக்கத்திலேயே ஒருவர் முகத்தை ஒருவர் வெறுமையோடு பார்த்துக்கொண்டு கிடந்தோம். யார் யாருடன் பேச, என்ன பேச என்றெல்லாம் தெரிந்திருக்கவில்லை.

எப்போது விமானம் குண்டு வீசுவதை நிறுத்தும், குண்டு தங்கள் மீதும் விழுமா என்று கேட்டு, கேட்டு களைத்துபோய் என் சிறிய தாயாரின் பிஞ்சுகள் பதுங்குகுழிக்குள் தூங்கிக்கொண்டிருந்தன. எங்களயெல்லாம் விட ஏதும் அறியாத குழந்தைகளின் மனோநிலைதான் ஈழத்தில் மிகவும் பரிதாபத்திற்குரியது. அவர்களை சுற்றி நடப்பது ஏதும் அவர்களுக்கு புரிவதுமில்லை. அதற்கு அர்த்தம் கற்பிக்க அவர்களுக்கு தெரிவதுமில்லை. விமானம் சுற்றும் சத்தம் கேட்டாலே போதும் என் சிறியதாயாரின் குழந்தைகள் அவர்களாகவே, யாருக்கும் சொல்லாமலே பதுங்குழிக்குள் இறங்கி இருப்பார்கள். குண்டுச்சத்தங்களினால் பயத்தில் நடுங்கி பதுங்குகுழிக்குள் ஒளிவதை தவிர அந்த குழந்தைகளுக்கு வேறெதுவும் தெரிந்திருக்கவில்லை. ஏதாவது கேள்வி கேட்டு எங்களை துளைத்தெடுத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு பதில் சொல்வதென்பது ஓர் சவால்தான்.

என் பாட்டியின் ஓர் ஒன்றுவிட்ட சகோதரியார் ஒருவர் எங்களுடன்தான் தங்கியிருந்தார். அவருக்கு சுவாசம் சம்பந்தமான பிரச்சனைகள் இருந்ததனால் அவர் பதுங்குகுழிக்குள் இறங்குவதில்லை. என்னதான் குண்டுவீசினாலும் இருமிக்கொண்டே மூச்சு விடமுடியாமல் கண்களால் கண்ணீர் வழிய வழிய வெளியிலேயே நின்றிருப்பார். வழக்கம் போல் அவர் பதுங்குகுழிக்கு வெளியில் நின்று இருமி, இருமி மூச்செடுக்க சிரமப்பட்டுக்கொண்டிருந்தார். ஒருவாறாக அன்று மாலை வேளையில் சத்தமெல்லாம் அடங்கி ஓர் நிசப்தம் நிலவியது. நான் என் வீட்டு முற்றத்தில் நின்றிருந்தேன். திடீரென ஏதோ இரைச்சல் போல் ஓர் சத்தம் கேட்டது. அது சிறிது சிறிதாக அண்மையில் கேட்கத்தொடங்கியது. இரைச்சல் மிக அண்மையில் தெருவில் கேட்க நான் என்னையும் அறியாமல் தெருக்கதவை திறந்து வெளியில் எட்டிப்பார்த்தேன். ஏறக்குறைய ஆயிரம் பேராவது இருக்கும் பொதுமக்கள் “எல்லாரும் ஓடுங்கோ, ஓடுங்கோ ஆமிக்காரன் கிட்டடிக்கு வந்திட்டான். எல்லாரும் ஓடுங்கோ” என்று குழறிக்கொண்டும், அழுதுகொண்டும், ஓடிக்கொண்டும் இருந்தார்கள்.

எங்களுக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. எங்கள் பைகளை கூட எடுக்க நேரமில்லாமல் பதட்டத்திலும், பயத்திலும் உறைந்து போய் செய்வதறியாது கூட்டத்தோடு நாங்களும் ஓடத்தொடங்கினோம். வழக்கம் போல் என் இதயம் மார்புக்கூட்டிற்குள் இருந்து வெளியே எகிறி விழுந்துவிடும் போலிருந்தது. கை கால்கள் நடுங்க ஓடிக்கொண்டிருந்தேன். ஓர் இடத்தில் ஓடிக்கொண்டிருந்தபோது ஹெலிகாப்டரிலிருந்து வேறு எங்களை துரத்தி துரத்தி சுட்டுக்கொண்டிருந்தார்கள். சிலர், “சுடுறான், சுடுறான் யாராவது வெள்ளை கொடி இருந்தால் காட்டுங்கோ” என்று கூவிக்கொண்டே ஓடினார்கள். இரைச்சலும், ஓலமும் மேலும் மேலும் கூடியது. ஓடிக்கொண்டிருந்த கூட்டத்தில் பலவிதமான சம்பாஷனைகளும் கேட்டுக்கொண்டிருந்தன. கணவனை தவறவிட்ட மனைவி, மனைவியை தவறவிட்ட கணவன், இப்படியே எவ்வளவு தூரம், எங்கே ஓடுவது…… இப்படியெல்லாம் அழுதுபுலம்பிக்கொண்டே ஓடிக்கொண்டிருந்தார்கள்.

இந்த கூட்டத்தில் எங்கள் உறவினர் ஒருவர் எங்களை பார்த்ததும் கதறி அழத்தொடங்கிவிட்டார். “சாமி மாமா ஆமிக்காரன் வர்றது தெரியாமல் கடற்கரை பக்கம் போனவர். அவர் எங்கேயோ தெரியவில்லை” என்றார். எங்களை பார்த்ததும் ஏதோ புதுப்பலம் வந்தவர் போல் கூட்டம் ஓடிய திசைக்கு எதிர் திசையில் ஓடத்தொடங்கினார். தான் அவரைப்போய் தேடப்போவதாக சொன்னார். அவரை ஒருவாறு சமாதானப்படுத்தி சாமி மாமா எப்படியாவது தப்பித்து வந்துவிடுவார் என்று ஆறுதல் கூறி எங்களோடு அழைத்துக்கொண்டு சென்றோம். ஆனால், இறுதியில் சாமி மாமாவின் பிணம் தான் ஏறக்குறைய அழுகிய நிலையில் கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டது. நெற்றியில் பட்டை திருநீறு, சந்தனம், குங்குமம், வாய்நிறைய என்னை மருமகள், மருமகள் என்று கூப்பிடும் சாமிமாமா இப்போது நினைவுகளாகவே மட்டுமே….

இந்த கொடுமைக்கு மத்தியிலும் ஓர் இடத்தில் நாங்கள் பாட்டிக்காக காத்திருக்க வேண்டியிருந்தது. காரணம், அவரின் ஒன்றுவிட்ட சகோதரியால் ஓடவெல்லாம் முடியாது. அவரை யாராவது சைக்கிளில் வைத்துதான் தள்ளிக்கொண்டு போகவேண்டும். அதனால் அவர் தன் சகோதரியின் மகன் வந்து அவரை அழைத்து சென்ற பின் எப்படியாவது எங்களுடன் வந்து சேர்வதாக சொன்னார். பாட்டி முந்திக்கொள்வாரா அல்லது ராணுவம் முந்திக்கொள்ளுமா என்று உயிர் பதைக்க காத்திருந்தோம். என் பாட்டி அப்படித்தான் தன் உயிர் போனாலும் பரவாயில்லை தன்னால் முடிந்தவரை மற்றவர்கள் உயிர்களை காப்பாற்ற வேண்டுமென்று நினைப்பவர். ஒவ்வொரு கணத்தையும் ஒரு யுகமாக்கி எங்கள் உயிரை பதறவைத்து ஒருவாறாக வந்து சேர்ந்தார் பாட்டி.

என் பாட்டியின் சகோதரியும் அவர் மகளும் பின்னர் ஓர் கோவிலில் தங்கியிருந்தபோது குண்டு வீச்சில் காயம் பட்டு அந்த இடத்திலேயே “தண்ணி, தண்ணி…” என்று கேட்டு உயிர்களை விட்டார்கள். ஒப்பரேஷன் லிபரேஷன்/விடுதலை நடவடிக்கையின் போது எங்கள் உறவினர்கள் எத்தனையோ பேரை நாங்கள் இழந்திருக்கிறோம். அதற்கு கணக்கும் இல்லை. அந்த கண்ணீருக்கு பதில் சொல்ல ஆளுமில்லை. நாதியற்ற ஈழத்தமிழன் சாவுக்கு யாராவது கணக்கு காட்டவேண்டுமா? இல்லையென்றால் பதில்தான் சொல்லவேண்டுமா என்ன? எந்த ராணுவம் வேண்டுமானாலும் எங்களை கொல்லலாம். இலங்கை ராணுவம், இந்தியராணுவம்….. யார்வேண்டுமானாலும்…..
இப்படி நீண்டதூரம் ஓடியபிறகு கூட்டம் வெவ்வேறு திசைகளில் பிரிந்து போகத் தொடங்கியது. எங்களுக்கும் எங்கே போவது என்று தெரியவில்லை. ராணுவம் முகாமிலிருந்து வெளியேறி வரும்போது ஆரம்பத்தில் வெறிபிடித்தது போல்தான் நடந்து கொள்வார்கள். அவர்கள் எப்போதுமே அப்படித்தானே நடந்து கொள்கிறார்கள். ஒருவாறாக, இறுதியில் ராணுவத்தின் துண்டுப் பிரசுரங்களில் குறிப்பிட்ட இடங்களில் ஒன்றுக்கு செல்வதாக முடிவெடுத்து மேலும் நடக்கத்தொடங்கினோம். இப்படி நடந்துகொண்டிருந்த போது ஓர் இடத்தில் ஆண் ஒருவர் நின்றுகொண்டு “அந்தப்பக்கம் திரும்பி பாக்காதேங்கோ, பாக்காதேங்கோ..” என்று கூவிக்கொண்டிருந்தார்.

நான் திடுக்கிட்டுப்போனேன். ஒருவேளை ராணுவம் பதுங்கியிருக்கிறதா என்ன? அப்படி அவர்கள் பதுங்கியிருந்தாலும் எங்களை சுட்டிருப்பார்களே என்று நினைத்துக்கொண்டு மெதுவாக தலையை திருப்பி பார்த்தேன். அங்கே மூன்று ஆண்களின் பிணங்கள் திக்கிற்கொன்றாய் கிடந்தது. ஓர் உடலில் தலை இருக்கவில்லை. கழுத்துப்பகுதியிலிருந்த தசைகளை காகங்கள் கொத்திக்கொண்டிருந்தன. ஆங்காங்கே மனித தசைகள் சிதறிக்கிடந்தது. ஏற்கனவே பயந்துகிடந்த எனக்கு என்னைசுற்றி எல்லாமே உறைந்தது போலிருந்தது. அப்படியே உறைந்து போய் அசையாமல் நின்றிருந்தேன். யாரோ என் தோள்மீது தொட்டு என்னை உலுப்பினார்கள். நல்லவேளை இன்னும் நாய்கள் ஏதும் அவர்கள் உடல்களை குதறவில்லை என்ற ஏதோ ஓர் சிறிய திருப்தியுடன் அந்த காட்சி என் கண்ணிலிருந்து மறையும் வரை திரும்பிப்பார்த்தவாறே நடந்தேன். வாழ்நாளில் என் நினைவுகளிலிருந்து மறைய மறுக்கும் ஓர் அவலக்காட்சி இது.

நாங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தமிழன் என்ற முத்திரை எங்கள் மீது சிங்கள ஆட்சியாளர்களால் குத்தப்பட்டு இப்படித்தான் ஆண்டாண்டுகாலமாய் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம். இப்படியே ஓடி, ஒருவாறாக பருத்தித்துறையில் இருந்த புட்டளை மகாவித்தியாலயம் என்ற பாடசாலையில் தஞ்சம் கோரினோம். இந்த முகாமில் முட்கம்பி வேலிகள் இருக்கவில்லை, ஆனால், இன்றைய வன்னி வதைமுகாமின் தராதரத்திற்கு குறையாமல் அவலங்கள் நிறைந்ததாகவே இருந்தது.

தொடரும்

ரதி

தொடர்புடைய பதிவுகள்

ஈழத்தின் நினைவுகள் – பாகம் -1

ஈழம்: பதுங்குகுழிகளும் பாடசாலைகளும் ! பாகம் –2

ஈழம்: நீங்கள் அறியாத பெண்ணின் வலி ! – பாகம் -3

பொருளாதாரத் தடையில் ஈழத்து வாழ்க்கை !- பாகம் -4

ஈழம்: சிங்கள இராணுவத்தின் பயங்கரவாத நினைவுகள்!! பாகம் -5