privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்ஈழம்: பதுங்குகுழிகளும் பாடசாலைகளும் !

ஈழம்: பதுங்குகுழிகளும் பாடசாலைகளும் !

-

பதுங்குகுழிகளும் பாடசாலைகளும்

ஈழத்தின் நினைவுகள் பாகம் –2

ஈழவிடுதலைக்கான‌ போராட்டத்தோடு இணைந்ததுதான் எங்கள் வாழ்வியல் போராட்டங்களும். அதன் தாக்கங்கள், பாதிப்புகள் ஒவ்வொரு ஈழத்தமிழ‌ன் வாழ்விலும் நிறையவே காயங்களை உண்டாக்கியது. போர் ஓய்ந்த பின்னும் கூட எங்கள் வலிகள் இன்னும் ஆறவில்லை. அது சுலபமாக ஆறக்கூடியதுமல்ல. ஒரு சராசரி மனிதனின் வாழ்வியல் போராட்டங்களின் அடிப்படை அம்சங்களான கல்வி, பொருளாதாரம், சமூக மாற்றம் இன்னபிற விடயங்களில் போர் எவ்வளவு தாக்கங்களை உண்டாக்கியது என்பதுதான் நான் சொல்லவிளைவது. எல்லா சமூகங்களையும் போல் ஏன் எங்களால் ஓர் இயல்பு வாழ்வை வாழமுடியவில்லை என்ற கேள்வி என்னை வாட்டுவதுண்டு. ஆனாலும், எவ்வளவு வலிகளையும் தாங்கிக்கொண்டு ஈழத்தமிழர்கள் நிறையவே சாதித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

கல்வி, தனிமனிதன் ஆனாலும் சரி , சமூகமானாலும் சரி, முன்னேற்றத்திற்கு அடித்தளம் அமைப்பது இதுதான். ஆனால், இந்த கல்வியை நான் மற்றும் ஈழத்தில் என்னைப்போன்றவர்கள் பெறுவதற்கு போர்ச்சூழலில் பட்ட அல்லது படுகிற சிரமங்கள் கொஞ்சநஞ்சமல்ல. சிங்கள அரசு தமிழ்மாணவர்களின் கல்வியைசிதைக்கிறது என்றுதான் தோன்றுகிறது. கல்வி மறுக்கப்பட்டால் ஈழத்தமிழர்களின் சமூக, பொருளாதார முன்னேற்றத்தை, அவர்களின் விடுதலை உணர்வை தடுக்கலாம் என்பது சிங்கள பேரினவாதிகளின் குறிக்கோளாக இருக்கலாம்.

நான் வாழ்ந்த ஊரில் எல்லாமாக‌ மூன்று பெரிய பாடசாலைகள் இருந்தன. அவற்றில் இரண்டு உயர்தர பாடசாலை, மற்றது எட்டாம் வகுப்புவரை உள்ளது. அதில் இரண்டு பாடசாலைகள் ராணுவ ஆக்கிரமிப்புக்கு உள்ளாகிவிட்டிருந்தன.பாடசாலைகள் கூட ராணுவ முகாம்களாக ஆக்கப்பட்டு, குண்டு வீச்சில் பாடசாலைகள் சிதைக்கப்பட்டு,மாணவர்கள் கைதுசெய்யப்பட்டும், கொலைசெய்யப்பட்டும் எங்கள் கல்வி மற்றும் மாணவர் சமுதாயம் சத்தமில்லாமல் ஈழத்தில் அன்றுமுதல் இன்றுவரை சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.ஈழத்தில் நான் படித்தது பெண்கள் பாடசாலை. ராணுவமுகாமிலிருந்து கொஞ்சம் விலகி இருந்ததால் தப்பித்துவிட்டது.ஆனாலும் விமானக்குண்டு

வீச்சுக்கும் ஷெல் அடிக்கும் (முகாம் அல்லது நேவி) தப்பியதில்லை. இப்படி பாடசாலைகள் ராணுவமுகாம்கள் ஆனதால் எங்கள் ஊரிலுள்ள என் நண்பர்கள் அருகிலுள்ள வேறு ஊர்களுக்கு நிறையநேரம் சைக்கிளில் சென்று கல்வி கற்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளானார்கள்.

யாழ்ப்பாணத்தில் ராணுவம் முகாம்க‌ளிலிருந்து முன்னேற முயன்ற காலங்களில் எங்கள் தலைகள் மீது குண்டுகளை வகைதொகையில்லாமல் கொட்டியது. விமானக்குண்டு வீச்சு என்றால் சில சமயங்களில் காலை ஆறுமணிக்கெல்லாம் தொடங்கி விடும். அது ஒரு சிலமணிநேரங்களில் முடிந்ததும் உண்டு. பல மணிநேரம் நீடித்ததும் உண்டு. பல மணிநேரம் என்றால் இரண்டு அல்லது மூன்று விமானங்கள் மாற்றி மாற்றி வந்து குண்டுபோடுவார்கள். இடையிடையே ஹெலிகாப்டரிலிருந்தும் சுடுவார்கள். வெளியில் தலை காட்டமுடியாது. குண்டுவீச்சு முடியும்வரை பதுங்குகுழி தான். காலையிலேயே எங்கள் தலைமீது குண்டு வீசத் தொடங்கினால், அந்நாட்களில் எங்களுக்கு பாடசாலையும் கிடையாது; படிப்பும் கிடையாது.எனக்கு கல்வி ஒன்றுதான் என் வாழ்வில் வெளிச்சம் தரும் என்பதால் அதை என் உயிராக மதிக்கிறவள் நான். இப்படி போர்ச்சூழலில் என் கல்வி எங்கே பாதிக்கப்பட்டுவிடுமோ என்று நான் ஏங்கி அழுதநாட்களும் நிறையவே உண்டு. என் வீடு, உடமைகளை விட‌ பாடப்புத்தங்கள் குண்டுவீச்சில் தப்பவேண்டும் என்று மனம் பதறிக்கொண்டிருக்கும். அந்த குண்டுச்சத்தங்களிலும் அதன் நச்சுத்தன்மை மற்றும் வெடிமருந்தின் மணம் கலந்த காற்றிலும் என்மனம் மிகவும் சோர்வடைந்த வேளையிலும் சுதந்திரம் வேண்டும் என்ற அவா மட்டும் எனக்கு ஏனோ குறையவேயில்லை.

இப்படி நான் பலநாட்கள் பாடசாலை நடைபெறாமல் கல்வி கற்கும் சந்தர்ப்பங்களை நிறையவே இழந்திருக்கிறேன். இது எல்லோருக்கும் பொதுவானதுதான் என்றாலும் பரீட்சை காலங்களில் மிகவும் வேதனையாக இருக்கும். ஒன்று பாடத்திட்டம் முழுமையாக முடிந்திருக்காது மற்றது குண்டு வீச்சுக்களாலும் அதன் சத்தங்களாலும் மனம் மிகவும் சோர்ந்து போயிருக்கும். படிப்பில் கவனம் செலுத்துவது என்பது மிகவும் கடினமாகவும் வேதனையாகவும் இருந்தது. வேதனைகளில் மனம் சோரும் தருணங்களில் உடம்பில் வெறும் காற்று மட்டும்தான் இருப்பது போலவும் உடம்பு வெறும் கூடு போலவும் உண்ர்ந்திருக்கிறேன்.

பாடசாலையில் இருக்கும் நாட்களில் குண்டு வீச்சு என்றால், அது இன்னொரு நரகவேதனை. எங்கள் பாடசாலையில் ஏறக்குறைய ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்றார்கள், முதலாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்புவரை. இந்த குண்டு போடும் கிராதகன்களுக்கு பாடசாலைகள், கோயில்கள், தேவாலயங்கள், சந்தை என்று மக்கள் அதிகம் சேரும் இடங்களில்தான் குண்டுபோட பிடிக்கும். அந்ததெரியவராத நாட்கள். அதனால் இந்த இடங்களில் எல்லாம் ஆசைக்கு குண்டுபோட்டு எங்கள் மக்களை கொன்று குவித்தது சிங்கள அரசு. அதனால் அதற்கு சாட்சியும் இல்லாமல் போனது, தனிமனித சாட்சிகளைத்தவிர.

குண்டு வீச்சு விமானங்கள் குண்டு வீசும்போது அல்லது நேவி/ராணுவ முகாமிலிருந்து ஷெல் அடிக்கும் போது பாடசாலையில் சிறிய குழந்தைகள்தான் மிகவும் பயந்து போய் என்ன செயவதென்றுதெரியாமல் அழத்தொடங்கி விடுவார்கள். பெரும்பாலும் நாங்கள் தான் இப்படியான சந்தர்ப்பங்களில் ஆசிரியர்களுக்கு துணையாக அனுப்பி வைக்கப்பட்டதுண்டு. எங்களை கண்டவுடன் தாங்கள் பெற்றோரிடம் போகப்போகிறோம் என்று கேட்பார்கள். அழும் குழந்தைகளை எப்படி தேற்றுவது என்று தெரியாமல், ஏதோ ஒர் கோழைபோலவும், கையாலாகத ஜென்மம் போலவும் அச்சமயங்களில் உணர்ந்திருக்கிறேன். நாள் தொடக்கம் முதல் இந்தநாள்வரை இலங்கை அரசு, ஐக்கியநாடுகளினதும் சரி சர்வதேசத்தினதும் சரி, எந்தவொரு போர்விதிகளையும் மதித்து நடந்தது கிடையாது என்பதற்கு பாடசாலைகள், கோயில்கள், தேவாலயங்கள், சந்தை,பாதுகாப்பு வலயம் (No Fire Zone) என்று பொதுமக்கள் கூடும் இடங்களிலெல்லாம் குண்டு போட்டதே சான்று. ஆனால், அந்தக்காலங்களில் ஈழப்பிரச்சனை மற்றைய நாடுகளுக்கு

குண்டுகள் வெடிக்கும் சத்தங்களே மிகவும் அதிகமாய் எல்லோரையும் பயமுறுத்தும் என்று நினைக்கிறேன். விமானங்கள் குண்டு வீசும்போது யாரும் நடமாடாமல் குப்புற விழுந்து தரையில் படுக்க வேண்டும் (அது வீடானாலும் சரி, வீதியானாலும் சரி) என்பது பொதுவான எச்சரிக்கை என்றாலும், அதையெல்லாம் எந்த பெற்றோரும் தங்கள் குழந்தைகள் விடயத்தில் கடைப்பிடிப்பது கிடையாது. விமானம் சுற்றத்தொடங்கவே பாடசாலைக்கு அருகில் வசிக்கும் பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்துப்போக வந்துவிடுவார்கள். இப்படி குழந்தைகளை படிக்க அனுப்பிவிட்டு எப்போ ராணுவம் முகாமிலிருந்து வெளியேற முயற்சிக்குமோ, குண்டுவீச்சு நடக்குமோ என்று பயத்தில்தான் பெற்றோரின் பொழுதுகள் கழிந்ததுண்டு படிப்பதற்குரிய எந்தவொரு தகுந்த அமைதியான சூழ்நிலையும் அன்றும் சரி இன்றும் சரி ஈழத்தில் இருந்ததில்லை. அல்லது இருப்பதில்லை. எங்கள் விடுதலைக்கு அது அவசியம் கூட‌ என்பது என் கருத்து. என்வரையில் காற்றைப்போல சுதந்திரம், காட்டாற்றைப்போல சிந்தனை நிறைந்தது மாணவப்பருவம்.

சராசரி மாணவர்களைப்போல் எங்களுக்கும் சுதந்திரமான, கவலைகளற்ற மாணவப்பருவத்தை அனுபவிக்க வேண்டும் என்றுதான் ஆசை. நண்பிகளோடு/நண்பர்களோடு அரட்டை அடிக்க ஒரு பொது இடம், கூட்டாக சென்று சினிமா பார்க்க, அல்லது ஒன்றாயிருந்து பரீட்சைக்கு படிக்க என்று சின்னச்சின்ன, ஆனால் நியாயமான‌ ஆசைகள் நிறையவே இருந்தன. ஆனால், நான் உயர்தரப்பாடசாலையில் கல்வி கற்கும் காலங்களில் போர்ச்சூழல் (1980 களின் நடுப்பகுதிப் பிறகு) மிகவும் மோசமடைந்திருந்தது. குறைந்தபட்சம் பாடசாலைக்கு போய் படித்துவிட்டு உயிரோடு திரும்பி வந்தாலே போதும் என்ற மனோநிலைதான் பெரும்பாலும் எல்லா மாணவர்களிடமும் இருந்தது. தவிரவும் குண்டுவீச்சில் பாதி ஊர் சிதிலமடைந்தே இருந்தது. இதில் பொது இடமேது? சினிமா கூடம் ஏது? குண்டுவீச்சில் அதன் அனர்த்தங்களில்,போர்ச்சூழலில் இருந்த இறுக்கமான சூழ்நிலையிலும் எங்கள் நியாயமான சின்னச்சின்ன ஆசைகள் கூட அடங்கிபோயின.

வடபகுதியில் ராணுவம் முகாம்களில் முடக்கப்பட்ட காலங்களில் விமானம் மற்றும் ஷெல் குண்டுவீச்சுகளால் பெரும்பாலும் நாங்கள் பாடசாலை தவிர்த்த நேரங்களில் எங்கள் வீடுகளில் முடக்கப்பட்டோம்.ராணுவம் முகாமிலிருந்து வெளியேற முயற்சிக்கும். ஆனால், விடுதலைப்புலிகள் அதை முறியடிக்க முனைவார்கள். பிறகு வேட்டுச்சத்தங்கள் கேட்கும். விமானங்கள் வந்து கண்மண் தெரியாமல் எங்களை தாக்கும். இதுவே பலநாட்கள் தொடர்ந்தது. நாங்கள் வீடுகளில் பெரும்பாலும் இருக்க விரும்பிய காரணம், ஒரு வேளை சாவது என்றாலும் குடும்பத்தோடு சாகலாம் என்ற சின்ன ஆசைதான். இப்படியான காரணங்களாலேயே கூட்டாக நண்பிகளோடு படிப்பதை கூட தவிர்த்தேன். பல சமயங்களில் நான் பதுங்குகுழியில் மெழுகுவர்த்தி வெளிச்சதில் கூட படித்திருக்கிறேன். அப்படி படித்து பல்கலைக்கழக அனுமதியும் வாங்கியிருக்கிறேன். இதெல்லாம் ஈழத்தில் வடபகுதியில் அந்தக்காலத்தில் சர்வ சாதாரணமாக எல்லா மாணவர்களுக்கும் நடந்ததுதான். ஆனாலும், நான் தொடர்ந்து என் மண்ணில், என் உறவுகளோடு தொடர்ந்து படிக்க முடியாமல் யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயரவேண்டியதாகிவிட்டது.

பரீட்சை எழுதிய சில நாட்களிலேயே நான் இந்தியாவுக்கு அகதியாய் சென்றுவிட்டேன். எனக்கு பல்கலைக்கழக அனுமதி கிடைத்தது என் நண்பி மூலம் இந்தியாவில் இருக்கும் போதுதான் தெரியவந்தது.ஈழத்தில் நிலைமை மிகவும் மோசமாக இருந்ததால் திரும்பி ஈழத்துக்கு போக என்னை வீட்டில் அனுமதிக்காததால் படிப்பை தொடரும் அந்த பொன்னான சந்தர்ப்பத்தை இழந்தேன். ஈழத்தில் நான் எவ்வளவையோ இழந்தாலும், இது என்னை அதிகம் பாதிக்கும் விடயங்களில் ஒன்று. இப்படி ஈழப்போர்ச்சூழலின் காரணமாக தங்கள் படிப்பை தொடரமுடியாமல் போன சகோதர சகோதரிகள் நிறைய‌ப்பேர். தவிரவும், போர்ச்சூழலில் வாழ்வியல் போராட்டங்களுக்கு மத்தியில் கல்வியை

தொடர்வதன் பயன் என்னவென்று மனம் சலித்தவர்களும் உண்டு. ஒருமுறை என் நண்பியின் தாயார் சொன்னது என் நினைவில் இன்றும் உள்ளது. நீங்கள் எல்லாரும் என்னதான் படிச்சாலும் சிங்களவன் என்ன உங்களுக்கு வேலையை தூக்கியோ தரப்போறான்”. அவர் சொன்னதில் அதிகம் உண்மை இருந்தாலும், இதையெல்லாம் காரணம் காட்டி யாராவது படிப்பை பாதியில் நிறுத்துவது என்பது ஏனோ எனக்கு உடன்பாடாக இருந்ததில்லை. கல்வி ஒரு மனிதனுக்கு நிறைய தன்னம்பிக்கையை கொடுக்கும். ஒரு ஒடுக்கப்பட்ட இனமாய் எங்கள் விடுதலைக்கு அது அவசியம் கூட‌ என்பது என் கருத்து.

நானும் என் நண்பிகளும் பாடசாலை நாட்களில் ஈழப்போராட்டம் பற்றி பேசும் போது என் நண்பிகளில் சிலர் சொல்வார்கள் தாங்கள் விடுதலை இயக்கத்தோடு சேரப்போவதாக. ஒருத்தி சொன்னார் எல்லாரும் போராடப்போனால், பிறகு ஊரில் பொடியன்களுக்கு யார் வாழ்வு குடுக்கிறதுஎன்று. எல்லோரும் சிரித்து விட்டோம். உண்மையில்ஈழத்தில் பெரும்பாலும் ஆண்கள் தங்களை விடுதலைப்போராட்டதில் இணைத்துக்கொண்டதால் ஆண் பெண் விகிதாசாரம் சம அளவில் இருந்ததில்லை. அதுவல்ல நான் சொல்ல வருவது.

இப்படி எங்களோடு ஒன்றாய் பழகி, சண்டைபோட்டு,சமாதானமாகி ஒர் நட்பின் இணைப்பில் இருந்த என் நண்பிகளில் சிலர் தங்களை விடுதலைப்போராட்டதில் இணைத்தும் கொண்டார்கள். திடீரென்று ஓர் நாள் பாடசாலைக்கு வராமல் விட்டார்கள். சில நாட்கள் கழித்து தான் தெரிந்தது அவர்கள் எங்கே போனார்கள் என்று. அதோடு அவர்களின் தொடர்பு எனக்கு அறுந்து போனது. என் வாழ்நாளில் நான் இனி அவர்களை பார்க்கப்போவதில்லை.இதுவும் கசப்பான, ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கும் ஓர் யதார்த்தம்.

கடந்த ஞாயிறு என் ஊர்க்காரர் ஒருவர் சொன்னார் என் பாடசாலை நாட்களின் நண்பி ஒருவர் வன்னி களமுனையில் வீரகாவியம் ஆகிவிட்டதாக. என் நண்பி கொழும்பிலிருந்து 1983 தமிழின அழிப்பில் தந்தையை பறிகொடுத்துவிட்டு பின் ஊரோடு வந்து கல்வியைதொடர்ந்தார். ஈழத்தில் நாங்கள் நிம்மதியாக எங்கள் கல்வியை கற்கவேண்டுமானால் எங்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்று பாடசாலைநாட்களில் அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார். ஈழத்து மாணவர்களின் சுதந்திரத்திற்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டார் போலும். இன்று என் நண்பி இல்லை. ஆனால், என் நண்பியின் சுதந்திரக்கனவு நிறைவேற வேண்டும். ஈழத்தில் ஒவ்வொரு தமிழ்மாணவனுக்கும் கல்வியும், அதை பெறுவதற்கு ஓர் அமைதியான சூழலும் வேண்டும். இது தான் என் நீண்டநாள் விருப்பம், ஆசை எல்லாமே. முடிந்தால், ஈழத்து வாசகர்கள் போர்ச்சூழலில் உங்கள் பள்ளிக்கூட அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தொடரும்

ரதி

 1. //பாதுகாப்பு வலயம் (No Fire Zone) என்று பொதுமக்கள் கூடும் இடங்களிலெல்லாம் குண்டு போட்டதே சான்று.//

  பாதுகாப்புவலையம் என்பது இராணுவ முகாம்களை சுற்றியுள்ள பகுதியைக் குறிக்கும். பொது மக்கள் கூடும் இடமல்ல.

  //ராணுவம் முகாமிலிருந்து வெளியேற முயற்சிக்கும். ஆனால், விடுதலைப்புலிகள் அதை முறியடிக்க முனைவார்கள். //

  ரதி குறிப்பிடும் காலத்தில் (1980 களின் நடுப்பகுதிப் பிறகு) விடுதலைப் புலிகள் மட்டும் களத்தில் நிற்கவில்லை. TELO, PLOT, EPRLF, EROS ஆகிய இயக்கங்களும் சேர்ந்து நின்று இராணுவ வெளியேற்றத்தை முறியடித்தார்கள். விடுதலைப் புலிகள் பதவி அதிகார வெறியில் மற்றைய விடுதலை இயக்கங்களை இயங்க விடாமல் தடை செய்தனர். மற்றைய இயக்கங்களில் இருந்த ஆயிரக்கணக்கான தமிழர்களை இனப்படுகொலை செய்தனர். சண்டையிடாமல் சரணடைந்த போராளிகளை காட்டுமிராண்டித்தனமாக யாழ்ப்பாண தெருக்களில் உயிரோடு கொளுத்தினார்கள். புலிகளின் இனப்படுகொலைக்கு தப்பிப் பிழைத்த போராளிகள் எதிரியான இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தார்கள். யாழ்ப்பாணத்தில் போராளிகளின் எண்ணிக்கை ஐந்தில் ஒரு பங்காக குறைந்தது. கிடைத்த சந்தர்ப்பத்தை தவற விடாமல் இராணுவம் யாழ் குடாநாட்டை கைப்பற்றியது. ரதிக்கு இந்த உண்மை நன்றாக தெரியும். தெரிந்து கொண்டே வேண்டுமென்று மறைக்கிறார்.

 2. //ராணுவம் முகாமிலிருந்து வெளியேற முயற்சிக்கும். ஆனால், விடுதலைப்புலிகள் அதை முறியடிக்க முனைவார்கள். //

  However, around January 1986, it was a general belief among Tamils that no single group could proceed alone against the might of the Sri Lankan army. Attempts by the Sri Lankan Army in early 1986 on an L.T.T.E. camp at Suthumalai and a subsequent thrust into Tellipallai, were repulsed by all the groups acting together, including the T.E.A.. The T.E.L.O. provided critical help in saving the day when troops landed by helicopter and attacked the L.T.T.E.’s camp at Suthumalai. This was publicly acknowledged by the L.T.T.E.

  The manner in which the T.E.L.O. members were killed, shocked Tamil people everywhere. Many died without knowing what hit them. Twelve were killed near Manipay while they were asleep. Several were caught unawares, shot and burnt at junctions at Thirunelvely, Mallakam, and Tellipallai. Eight persons were killed at the camp behind the St. John’s principal’s bungalow. One person was thrust into a car, which was then exploded, leaving severed limbs strewn around. On hearing this the St. John’s College principal, Mr. Gunaseelan, who was in hospital, had a relapse which forced him into an early retirement. Many of the T.E.L.O. members who were from areas outside Jaffna had to flee in fear without knowing the streets or where they were going. The people were so terrified, that few found the courage to give shelter to the fugitives. While this unprecedented display was on, people stood mutely at junctions and watched, as persons hardly dead, were doused and burnt. Hardly anyone protested, which is understandable. Some went home saying things such as: “We have produced our own Hitlers.” Others gave a display of that opportunism that had become a characteristic feature of Jaffna. Some shop keepers offered aerated waters to those who had exhausted themselves putting on the show. Some students at the University attempted to take out a procession to stop the fighting but had to abandon it. The fighting was over in less than a week and Sri Sabaratnam was killed in circumstances which are not clear. Most sources agree that he was wounded in the shoot out, while his two companions escaped. Sri Sabaratnam then stood up and requested an opportunity to talk to Kittu, the Jaffna L.T.T.E. leader. He was then gunned down. Whether he was killed personally by Kittu and whether the order to kill him came from Prabhakaran himself, or from Kittu, are matters on which the various reports disagree. All this time the Sri Lankan army had remained quiet except for a bit of helicopter firing here and there. Outsiders saw the L.T.T.E.-T.E.L.O. clash as fatally weakening the militant cause. Kautiliya, a columnist for the Sunday Island asked satirically whether the L.T.T.E. had taken a sub-contract with the Ministry for National Security to take on the T.E.L.O..

  One factor which distinguished the militant movement in the East was that ideological and group differences were over-ridden by a feeling that they were all Eastern Province Tamils united through the experience of common suffering, who must stand together or perish. Group differences mattered far less than in Jaffna. Often they shared camps and meals. When the L.T.T.E. was given orders by radio to go for the T.E.L.O. in May 1986, the killings in the East were far fewer than in Jaffna. At Sambur, according to a T.E.L.O. source in Trincomalee, T.E.L.O. members who were having a meal were called out by members of the L.T.T.E. who had been erstwhile friends. The T.E.L.O. men were unaware of such orders having been given and went out as if to meet friends, when their leader and two others were killed. At Sambaltivu, according to a Trincomalee resident, women went out with rice pounders to ensure that there was no killing. This was in contrast to suburban Jaffna where people watched mutely during the killings. However, during December 1986 when the L.T.T.E. went after the E.P.R.L.F., some villagers in rural Jaffna protected the E.P.R.L.F. cadre by blocking the roads, armed with knives and chillie powder.

  One newspaper editor who came out well during the affair was Mr. S. M. Gopalaratnam of the Eelamurasu. He had once served as editor of the Eelandu and was made editor of the Eelamurasu a short while before the protest. During the crisis he wrote several bold editorials and articles. The need for unity amongst Tamils was something he felt strongly about. When the L.T.T.E. took on the E.P.R.L.F. he wrote an editorial expressing his concern for the hundreds of youths who had died in disillusionment with a feeling of being abandoned. He said that the Tamils’ failure to unite had left them exposed before their enemies. Barely two months after he took over, the paper passed under L.T.T.E. management.

  University Teachers for Human Rights (Jaffna) http://www.uthr.org/BP/volume1/Chapter5.htm

  • தயவு செய்து தமிழில் எழுதுங்க ஆங்கிலத்தில எழுதினாலே அதை விட்டு விட்டு தாவத்தோணுகிறது?

 3. ஈழம்: பதுங்குகுழிகளும் பாடசாலைகளும் !…

  ஈழத்து நினைவுகள் – 2 ….ஈழவிடுதலைக்கான‌ போராட்டத்தோடு இணைந்ததுதான் எங்கள் வாழ்வியல் போராட்டங்களும். அதன் தாக்கங்கள், பாதிப்புகள் ஒவ்வொரு ஈழத்தமிழ‌ன் வாழ்விலும் நிறையவே காயங்களை உண்டாக்கியது. போர் ஓய்ந்த பின்னும் கூட எங்கள் வலிகள் இன்னும் ஆறவில்லை…. …

 4. தெக்கான்,

  ரதி அவர்கள் யுத்தத்தை தாம் புரிந்து கொண்டதிலிருந்து – அதன் வலியை அவர் அனுபவித்த கோணத்திலிருந்து எழுத முயல்கிறார். அவரிடம் போய் நீ ஏன் இப்படி எழுத வில்லை ஏன் அப்படி எழுத வில்லை என்று நீங்கள் கேட்பது முறையா?

  யுத்தத்தின் வலியை அது தனிநபர்களின் வாழ்வில் எத்தனை ஆழமான காயங்களை ஏற்படுத்துகிறது என்பதை அவர் தனது அனுபவங்களூடாக பகிர முற்படுகிறார். நீங்கள் உங்கள் அரசியலை அவர் வாயிலிருந்து வரவழைக்க வேண்டும் என ஏன் முயல்கிறீர்கள்?

 5. ஆர்.கே What you mean உங்கள் அரசியலை? யுத்தத்தை மற்றவர்களும் புரிந்து கொண்டதிலிருந்து – அதன் வலியை மற்றவர்களும் அனுபவித்த கோணத்திலிருந்து எழுத முயன்றால் அது அரசியலா?

 6. ஆர்.கே, Tecan,

  உங்கள் இருவரது கருத்துக்களுக்கும் நன்றி.

  ஆர்.கே அரசியல் தாண்டி அப்பாவி ஈழத்தமிழர்களின் அவலங்களை சொல்ல வேண்டுமன்றுதான் முயற்சிக்கிறேன். உங்கள் கருத்தும் அதையே பிரதி பலிக்கிறது நன்றி.

  Tecan,

  பாதுகாப்பு வலயம் என்ற பதம் குறித்த உங்கள் கருத்துக்கு நன்றி. நன்றி அதற்கு மட்டுமல்ல. பாதுகாப்பு வலயம் பற்றி பேச ஓர் சந்தர்ப்பம் கொடுத்தமைக்கும் தான். பாதுகாப்பு வலயம் என்பது ராணுவ முகாம்களுக்குள் உள்ளடக்கப்பட்ட பகுதிதான். அதன் தார்ப்பரியத்தை கண்டுபிடித்தவர் “செம்மணி” புகழ் அம்மணி சந்திரிகா என்று நினைக்கிறேன். எங்கெல்லாம் அதிகமாக தமிழர்கள் புதைக்கப்பட்டார்களோ அதெல்லாம் பாதுகாப்பு வலயம். முள்ளிவாய்க்கால் கூட “அதி, அதி உயர் பாதுகாப்பு வலயமாக” ஆக்கப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை. புதைக்கப்பட்ட அப்பாவித்தமிழர்களின் பற்களும் எலும்புகளும் மக்கிப்போகும் வரை அது பாதுகாப்பு வலயம் தான்.

  மற்றப்படி, நான் சொன்னது Safety Zone, No Fire Zone என்று ராணுவத்தால் அறிவிக்கப்பட்டு, மக்களை பாதுகாப்பு தேடச்சொன்ன இடங்கள் பின்னர் குண்டுகள் போடப்பட்ட இடங்கள்.

  ஈழத்தமிழ் மாணவர்களின் கல்வி பற்றி ஒரு வார்த்தையாவது கவலைப்படுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். பரவாயில்லை.

 7. ஏங்க tecan (தேகனா இல்ல தேசனா), கிடைக்குற சந்துல்லெல்லாம் புலிகளை விமர்சனம் பண்ணுரீங்க பரவாயில்ல ஆனா நீங்களும் ஈழத்துலிருந்துதானே வெளிநாடு போயிருப்பீங்க உங்க அனுபவங்களை எழுதுங்களேன், நீங்க புலிகளை மட்டுமே விமரிசனம் பண்ணிகிட்டு வேறெதையும் எழுதாம இருந்தா அப்புறம் உங்க பின்னூட்டத்த யாருமே படிக்க மாட்டாங்க, இவரா இவரு புலி எதிரத்துதான் எழுதியிருப்பாருன்னு படிக்காம போயிடுவாங்க… கொஞ்சம் யோசிங்களேன்

 8. ரதி சென்ற பகுதியை விட இந்த பகுதியில் உங்கள் எழுத்து நடை அருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள். உண்மையிலேயே ஈழம், பாலஸ்தீனம் இப்போ ஈராக் போன்ற நாடுகளின் குழந்தைகளின் குழந்தைதன்மையையே இந்த போர்கள் உறிஞ்சி விடுகின்றன. நம் வீட்டு பிள்ளை படிக்கட்டில் நடப்பதை கூட ஆள் போட்டு பார்த்துக்கொண்டிருக்கும் காலத்தில் அந்த பிஞ்சுக் குழந்தைகள் பீரங்கி வண்டிகள் கன்னி வெடிகள் மத்தியில் விளையாடிக் கொண்டிருப்பதை பார்க்க மனம் பதறுகிறது. அரசியல் ரீதியாக யார் மீது தவறுகள் இருந்தாலும், தனது அரசியலை இன்னமும் தேர்ந்தெடுக்காத குழந்தைகளின் வாழ்க்கையை பொருத்த வரை, இது இன்னாருடைய பொறுப்பு என்று ஓதுங்கவா முடியும்.. பிள்ளைகள் மொத்த மனித இனத்தின் சொத்தல்லவா? உங்கள் வாழ்க்கையை நான் வாழா விட்டாலும் அந்த வலியை என்னால் உணர முடிகின்றது.

 9. பாதுகாப்பு வலயம் என்ற தமிழ்ப்படுத்தல் இருவழியிலும் பொருந்துவதே சிக்கல். ஆனால் நடைமுறையில் பாதுகாப்பு வலயம் என்பது மக்களைப் பாதுகாப்பதற்கென உருவாக்கப்பட்டவற்றைக் குறிப்பதற்கும் ( No fire zone, Safety zone), உயர் பாதுகாப்பு வலயம் என்பது வெளியாரின் பிரவேசத்தைத் தடுக்கும்நோக்கில் இராணுவத்தினால் ஏற்படுத்தப்பட்ட இடங்களைக் குறிப்பதற்கும் (high security zone) பயன்படுத்தப்படும் தமிழ்வடிவங்கள்.

  ரதி அடைப்புக்குறிக்குள் No Fire Zone எனக்குறிப்பிட்ட பிறகும் முட்டையில் மயிர் பிடுங்கப் புறப்பட்டிருக்கிறார் Tecan. No fire zone / Safety zone எப்படி தமிழிற் சொல்லப்படுகிறது என்பதையாவது அப்பின்னூட்டத்தில் அவர் குறிப்பிட்டிருந்தால் உத்தமம்.

  ரதி சொல்லிக் கொண்டிருக்கும் காலப்பகுதி எண்பதுகளின் நடுப்பகுதியாகத் தெரியவில்லை. இந்திய இராணுவத்தின் வருகைக்குப் பின்னான காலப்பகுதியாகத்தான் எனக்குத் தெரிகிறது. அதுதான் சரியென்றால் Tecan இங்கே மறுத்துக் கதைப்பதற்கு எதுவுமில்லை. தனது காலத்தையும் அனுபவத்தையும்தான் ரதி எழுதிக்கொண்டிருக்கிறார்.

  காலப்பகுதி பற்றி ரதிதான் விளக்க வேண்டும்.
  ———————————————–
  யாழ்ப்பாணத்தில் போதனா வைத்தியசாலையை மையமாக வைத்து அதன் சுற்றாடலை பாதுகாப்பு வலயமாக அரசு அறிவித்திருந்தது. சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம், அந்தச் சுற்றுவட்டத்தை எண்ணெய் பரல்களை அடுக்கி வெள்ளை, சிவப்பு வண்ணமடித்து, தமது செஞ்சிலுவைச் சங்கக் கொடிகளைக் கட்டி பெருமெடுப்பாக இனங்காட்டியது. ஆனால் யாழ்ப்பாண வைத்தியசாலையும், அதன் சுற்றாடலும் விமானத் தாக்குதலுக்கு இலக்காக்கப்பட்டது. வல்வை வெளியில் செஞ்சிலுவைச் சங்க வாகனம் அரச விமானப்படையால் கலைத்துச் செல்லப்பட்டுத் தாக்கப்பட்டது, அதில் வெளிநாட்டைச் சேர்ந்த செஞ்சிலுவைச் சங்க அதிகாரியொருவர் கொல்லப்பட்டார்.
  இப்படி பாதுகாப்பு வலயத் தாக்குதல்கள் பற்றி நிறையச் சொல்லலாம்.

 10. Mambo8,

  உங்கள் உற்சாகப்படுத்தும் விமர்சனத்திற்கு நன்றி.

  கொண்டோடி, நான் இதில் இந்திய ராணுவம் வருவதற்கு முற்பட்ட மற்றும் பிற்பட்ட பாடசாலை காலத்தின் என் சொந்த அனுபவங்களைத்தான் சொல்கிறேன். காரணம் இந்திய ராணுவம் பற்றிய ஈழத்தின் நினைவுகளை தனியாக சொல்லவே விரும்புகிறேன். அது தவிர‌ ஈழம் பற்றிய சில கசப்பான என் அனுப்வங்களை நான் மறக்கவே விரும்புகிறேன். அதனால் எந்த தேதி, எந்த நாள், எந்த வருடம் என்பதெல்லாம் நான் குறித்து வைத்ததில்லை.

  பாதுகாப்பு வலயம் பற்றிய விளக்கத்திற்கு நன்றி. நீங்கள் குறிப்பிடும் வல்வை வெளி என்பது வல்லை வெளி என்பது தான் சரி என்று நினைக்கிறேன்.

 11. நண்பர் ரதி… அருமையான கட்டுரை..தமிழகத்தில் ஈழ தமிழர்களின் அனுபவித்த அனுபவித்து கொண்டு இருக்கும் துன்பங்களைப் பற்றி இன்றைய தலைமுறைக்கு அதிகம் தெரிவது இல்லை… உங்களின் இந்த தொடர் பலருக்கும் போரின் மடியில் வாழ்வின் கொடுமையை எடுத்துரைக்கும்…
  பிச்சை புகினும் கற்கை நன்றே என்பது ஔவை இன் முதுமொழி.. அவர் இன்று இருந்து இருந்தால்.. பதுங்கு குழியிலும் கற்கை நன்றே என உரைத்து இருப்பார்…

 12. யாரவது ஒருவர் வந்து ‘ஈழம்’ என்று சொல்லிவிட்டால் போதும் இந்த Tecanனுக்கு. உடனே தினம் தினம் அந்த தளத்தில் வந்து புலிப் பாய்ச்சல் செய்துவிட்டு தான் மறுவேலை. உணவு உண்ணாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் தினம் ஒரு முறையாவது புலிகளை திட்டி விட வேண்டும் இவருக்கு. ஈழத் தமிழனும் புலிகளும் வேறு என்று பேசுகிறீர்கள் தானே, பின்னர் ஏன் சிங்களவனால் வதைபடும் ஈழத் தமிழர்களின் வாழ்வைப் பற்றி பேசினால் புலிகள் என்று பேசி திசை திருப்புகிறீர்கள்.

  ஏன்யா Tecan நான் தெரியாமல் தான் கேட்கிறேன், நீர் என்ன புலித் தலைமைகளிடமோ அந்த இயக்கத்தவர்களிடமோ நெருங்கிப் பழகியுள்ளீரா? இல்லையென்றால் உம்மையோ அல்லது உம் குடும்பத்தில் உள்ளவர்களையோ புலிகள் துன்புறுத்தி இருக்கிறார்களா? அப்படிச் செய்தார்கள் என்றால் நீதி மன்றத்தில் போய் முறையிட்டீரா? இது எதுவுமே நடந்திருக்கவில்லை என்றால் இணையதளம், செய்தித்தாள்களில் படித்தது, மற்றவர்கள் கூறியதையெல்லாம் கேட்டு விட்டு இங்கு வந்து கதைப்பதை தவிர்க்கவும். உம் வாழ்வில் அப்படி ஏதாவது நடந்திருந்தால் உம் அனுபவம் பற்றி தனியாக வினவில் ஒரு கட்டுரை எழுத வேண்டியதுதானே.

  Mr.Tecan, உமக்கும் புலிகளை விமர்சிக்கவேண்டும் என்றால் தனியாக வினவில் ஒரு கட்டுரை எழுதி விமர்சித்துக் கொள்ளுங்கள். ஒருவர் தன் வாழ்வில் அனுபவித்த இன்னல்களையும் வலியையும் கூற முயலும் போது உங்கள் புலி அரசியலை உள்ளே புகுத்தாதீர்கள். இத்துனை உயிர் இழப்புகள் நடந்தும் கவலைப்படாமல் சாதாரணமாக இங்கு வந்து மற்றவர்களிடம் புலிப்புராணம் பேசிக் கொண்டிருக்கிறீரே. எப்படி அய்யா உம்மால் மட்டும் முடிகிறது?

  ரதி, உங்களின் வலியை Tecan போன்றோர்க்கு உணர்த்தவேண்டிய அவசியம் இல்லை. அப்படி உங்கள் வலியை உணர்ந்து கொள்ளும் நிலையிலும் அவர் இல்லை.

 13. //நீதி மன்றத்தில் போய் முறையிட்டீரா?// எந்த நீதிமன்றத்தில் முறையிடச் சொல்கிறீர்? ராஜபக்ஷவின் நீதிமன்றத்திலா? ரதியும் இங்கே வந்து கதைப்பதை தவிர்த்து நீதிமன்றம் சென்று முறையிட சொல்வீரோ? புலிகளுக்கு வக்காலத்து வாங்கும் நீரெல்லாம் ஈழத்தமிழனா?

  //அப்படி உங்கள் வலியை உணர்ந்து கொள்ளும் நிலையிலும் அவர் இல்லை.// ரதிக்கு மட்டும் வலிக்குமா?மற்றவர்களுக்கு வலிக்காதா? மற்றவர்களின் வழியை ரதி புரிந்து கொள்ளக் கூடாதா? //இத்துனை உயிர் இழப்புகள் நடந்தும் கவலைப்படாமல் சாதாரணமாக இங்கு வந்து மற்றவர்களிடம் புலிப்புராணம் பேசிக் கொண்டிருக்கிறீரே. எப்படி அய்யா உம்மால் மட்டும் முடிகிறது?//

  இத்துனை உயிர் இழப்புகள் நடந்தும் கவலைப்படாமல் சாதாரணமாக இங்கு வந்து மற்றவர்களிடம் புலிகளுக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருக்கிறீரே. எப்படி அய்யா உம்மால் மட்டும் முடிகிறது? தமிழ் மக்களின் உயிர் இழப்புகளுக்கும் புலிகளுக்கும் சம்பந்தமே இல்லையா? ஏன்யா முழுப் பூசணிக்கையை சோற்றுக்குள் மறைக்கிறீர்? ரதி தன் வாழ்வில் அனுபவித்த இன்னல்களுக்கும் வலிக்கும் புலிகளும் காரணமாக இருக்கலாம். அதை இங்கே வந்து சொல்ல மாட்டார். புலிகளை குறை சொன்னால் நாளைக்கு அவர் உயிரோடு இருக்க முடியாது.

 14. ரதி அவர்களுக்கு,

  நேற்று அலுவலகத்தில் படிக்க வாய்ப்பில்லாது போனதால், உங்கள் நினைவுகளை பிரிண்ட் அவுட் எடுத்துகொண்டேன்.

  எல்லா வேலைகளையும் முடித்து விட்டு, உங்கள் நினைவுகளை படிக்க துவங்கும் பொழுது, இரவு 11.30 மணி. படித்து முடித்த பிறகு, தூங்க போகிறேன். தூக்கமே வரவில்லை. என் தலையிலேயே குண்டு போடுவது போல நினைவுகள் ஓடிக்கொண்டே இருக்கின்றன. நானெல்லாம் படுத்து 3வது நிமிசத்தில் தூங்குகிற ஆள். பிறகு, புரண்டு புரண்டு தூங்குவதற்குள் இரவு 2.00 மணி. நேற்று இரவு 1 மணிக்கு சென்னையில் மழை வேறு பெய்தது.

  தூங்கிய பிறகும், கனவிலும் வந்து குண்டு போட்டார்கள். என்னத்தைச் சொல்ல! இப்படி என்பாடு நேற்றிரவு திண்டாட்டமாகிவிட்டது.

  இனி, உங்கள் நினைவுகளை மட்டும் பகலிலேயே படித்துவிடுவது முடிவு செய்துவிட்டேன்.

 15. ரதி,

  உங்கள் எழுத்து உங்கள் வலியை மிக தெளிவாக வெளிப்படுத்தி இருக்கிறது. புலி எதிர்ப்பாளர்களை கண்டு மனம் சோராமல் (என் புலி எதிர்ப்பு நிலையும் உங்களுக்கு தெரிந்ததுதான்) தொடர்ந்து எழுதுங்கள்!

 16. ஈழத்தின் கடந்த கால கவலையான நிலைமைகளை புரிந்து கொள்ள முடிகிறது.

  ஆனால், நீங்கள் எழுதுகிற விதத்தில் கொஞ்சம் மாற்றம் செய்து கொள்ள வேண்டும் என தோன்றுகிறது.

  அன்றைய கால நிலைமைகளை இன்றைய மனநிலையில் நினைத்துப் பார்த்து எழுதுவதில், நெருக்கம் குறைவாக உணர முடிகிறது.

  பள்ளி நாட்களை எழுதுகிறீர்கள் என்றால்… ரதி பாவாடை, சட்டை அணிந்த ரதியாக மாற வேண்டும். அந்த நாளில் நீங்கள் பயணிக்க வேண்டும். அப்படி உணர்ந்து, நீங்கள் ஒரு நாள் பதட்டமான வாழ்வை கொஞ்சம் விரிவாக பதிவு செய்தீர்கள் என்றால் கூட… இன்னும் கொஞ்சம் நிலையை சரியாக புரிய வைக்கும்.

  என்ன சில பதிவுகள் நீளும். பரவாயில்லை. வினவு அதற்காக இடம் தாராளமாய் தரும்.

  என்ன வினவு இடம் தருவீர்கள் தானே!

 17. K.R. அதியமான், பகத், ஈழத்தமிழன், சுனாபானா , நொந்தகுமாரன், RV, குருத்து அனைவருக்கும் நன்றிகள்.

  ஈழத்தில் இன்று தமிழ்மாணவர்களின் கல்வி என்பது ஏறக்குறைய கேள்விக்குறியாகவே ஆகிவிட்டது என்றுதான் தோன்றுகிறது. நான் ஈழத்தில் படித்த நாட்களே மிகமோசமான சூழ்நிலை என்றால், இப்போது அது தாங்கொணா கொடுமையாகவே மாறிவிட்டிருக்கிறது. முகாமகளில் பெரும்பான்மையினர் மாணவபருவத்தை உடைய வயதுள்ளவர்கள் தானாம். வதைமுகாம்களில் மாணவன் ஒருவன் ஒரு வேளை உணவுக்காக காலையிலேயே வரிசையில் போய் நிற்பானா அல்லது முகாமிற்குள்ளேயே ஏதோ பாடசாலை இருக்கிறது??? என்கிறார்கள். அங்கே படிக்க போவானா? அப்படியே படிக்கப்போனாலும் எப்படி படிக்க முடியும்? இயற்கை கடன் கழிப்பது முதற்கொண்டு வைத்தியசாலைக்கு (மிகவும் மோசமாக காயமடைந்தவர்கள் மட்டும்) போவது வரை ஆயுதமுனையிலேயே நடக்கிறது. சரி, பாடசாலை முடிந்ததும் மறுபடியும் எலிவளையவிட மோசமான அதே கூடாரம் அதில் முப்பது பேரின் ஜீவனம். இதில் எங்கே படிக்க?

  என்றைக்கு ஈழத்தில் தமிழ்மாணவன் ஒருவன் உயிர் பயமின்றி நிம்மதியாக படிக்கவும் வாழவும் முடிகிறதோ அன்று எங்களுக்கு பாதி சுதந்திரம் கிடைத்து விடும். இதற்காக நாங்கள் எல்லாம் என்ன செய்யப்போகிறோம் என்பதே என் மனதில் எழும் கேள்வி. விடைகாண நீங்களும் உதவுவீரகள் என நம்புகிறேன்.

  நொந்தகுமாரன், ஈழத்தில் மாணவர்கள் நிம்மதியாக படிக்க, நிம்மதியாக உறங்க‌ நிச்சயமாக ஒரு நாள் வரும். நம்பிக்கையோடு இருக்கிறேன்.

  குருத்து, நானும் முதலில் நீங்கள் சொன்னது போல் தான் எழுதலாம் என்று யோசித்தேன். ஒரு நாள் காலையில் தொடங்கி இரவு வரை எங்கள் வாழ்வு எப்படிப் போராட்டம் நிறைந்தது என்று எழுதலாம் என நினைத்தேன். அது வர்ணனை கூடியதாகவும் அதே நேரம் நான் சொல்ல வந்த விடயத்தை சொல்லாமல் விட்டுவிடுவேனோ என்ற பயமும் இருந்ததால் அதை தவிர்த்துக்கொண்டேன். நீங்கள் சொல்வது போல் தான் இந்திய ராணுவ காலகட்டத்தை சொல்லலாம் என்று நினைக்கிறேன். எங்களை ஓய்வு ஒழிச்சலின்றி நாள் பூராவும் ஓடவைத்த பெருமை அவர்களையும் சாரும்.

 18. ரதி,

  நீங்கள் எழுதிய இவ்விடுகையில் சொல்லப்பட்டுள்ள காலப்பகுதி பற்றியே நான் குறிப்பிட்டிருந்தேன்.
  ஆம், இந்திய இராணுவத்தின் வருகைக்கு முன்பே சிறிலங்காவின் விமானப்படை தமிழர்மேல் தாக்குதலைத் தொடங்கிவிட்டதுதான். ஆனால் நீங்கள் இடுகையிற் குறிப்பிட்டது போல் மணிக்கணக்கில் அகோரமாக நடத்தப்பட்டிருக்கவில்லை என்றே நினைக்கிறேன். அதன் காரணத்தாலேயே நீங்கள் சொல்வது பிற்காலப்பகுதி எனக்குறிப்பிட்டிருந்தேன்.

  வல்லை வெளி என்பதுதான் பேச்சுவழக்கிலுள்ளது. எழுத்தில் எப்படியென்று தெரியாது. ஏதோ ஞாபகத்தில் வல்வை என எழுதிவிட்டேன்.

  • கொண்டோடி,

   நீங்கள் யாழ்ப்பாணம் என்றவுடன் அதன் நகரத்தையும் அதனை அண்டிய பகுதிகளையும் குறிப்பிடுகிறீர்களோ எனக்கு தெரியவில்லை. நான் யாழ்ப்பாணத்தின் வடமராட்சி பகுதியில் ஊரிக்காடு வல்வெட்டித்துறை ராணுவமுகாமிலிருந்து ராணுவம் வெளியேற எடுத்த முயற்சிகளிலும் விடுதலைப்புலிகளின் முகாம்களின் மீது குண்டு போடுகிறோம் என்று பொது இடங்களில் வடமராட்சியில் வாழ்ந்த எங்கள் தலைகள் மீது விழுந்த குண்டுகளை(கடல்,ஆகாயம், தரை‍‍‍_முகாம் மூலம்) தான் சொல்கிறேன். உங்களுக்கு அது ஒருவேளை “அகோரமாக” இல்லாமல் இருந்திருக்கலாம். நான் என் அனுபவத்தை தான் சொல்கிறேன். எனக்கு அது தாங்கமுடியாத அகோரமாகத்தானிருந்தது.

   //ஏதோ ஞாபகத்தில் வல்வை என எழுதிவிட்டேன்.//

   நீங்கள் வல்வையை சேர்ந்தவரா?

   //ஆனால் நீங்கள் இடுகையிற் குறிப்பிட்டது போல் மணிக்கணக்கில் அகோரமாக நடத்தப்பட்டிருக்கவில்லை என்றே நினைக்கிறேன். //

   நான் பொய் சொல்கிறேன் என்பது உங்களின் வாதமா?

 19. //இடுகையிற் குறிப்பிட்டது போல் மணிக்கணக்கில் அகோரமாக நடத்தப்பட்டிருக்கவில்லை என்றே நினைக்கிறேன்.// நான் அதை வழிமொழிகிறேன்.

  //வடபகுதியில் ராணுவம் முகாம்களில் முடக்கப்பட்ட காலங்களில் விமானம் மற்றும் ஷெல் குண்டுவீச்சுகளால் பெரும்பாலும் நாங்கள் பாடசாலை தவிர்த்த நேரங்களில் எங்கள் வீடுகளில் முடக்கப்பட்டோம்.//

  இது கொஞ்சம் ஓவர்

  //என் நண்பிகளில் சிலர் தங்களை விடுதலைப்போராட்டதில் இணைத்தும் கொண்டார்கள்.// ரதி குறிப்பிடும் காலத்தில் விடுதலைப் புலிகள் பெண் போராளிகளை இயக்கத்தில் சேர்த்துக் கொள்ளவில்லை. அப்படியே போனாலும் இன்று ஒட்டுக் குழுக்கள் என்று அழைக்கப்படும் PLOT, EPRLF ஆகிய இயக்கங்களில் சேர்ந்திருப்பார்கள்.

 20. //நான் யாழ்ப்பாணத்தின் வடமராட்சி பகுதியில் ஊரிக்காடு வல்வெட்டித்துறை//

  //நீங்கள் வல்வையை சேர்ந்தவரா?//

  வே பிரபாகரன் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகக் கொண்டதால் புலிகள் இயக்கத்தின் ஆரம்பகாலங்களில் அப்பகுதியைச் சேர்ந்தவர்களே முக்கிய பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டனர். நம்பகமானவர்களாகக் கருதப்பட்டனர். புலிகள் இயக்கத்தின் அசையும் அசையாச் சொத்துக்களையும் அதன் வருமானத்தையும் வல்வெட்டித்துறைக் குழு நிர்வகிக்கின்றது. புலிகள் குழுத் தன்மையைக் கொண்டிருந்த போதும் யாழ் சைவவேளாள கருத்தியலையே பிரதிநிதித்துவப்படுத்தினர். அவ்வாறு அல்லாமல் அவர்களால் நிலைத்து நின்றிருக்க முடியாது. அதே சமயம் யாழ் சைவவேளாள சமூகமும் பிரபாகரனையும் அவர் சார்ந்தவர்களையும் தத்தெடுத்துக் கொண்டது.

  தமிழர்களாகிய நாம், போராட்டத்தின் சமகாலத்தில் வாழ்ந்த நாம், எமது வரலாறுகளை சரியாக எழுதிச்செல்லத் தவறினால் மகிந்த சிந்தனையாளர்கள் எழுதுவதே தமிழ் மக்களுடைய வரலாறாக ஆகிவிடும். அதனால் உணர்ச்சிகளுக்கு இடம்கொடாமல் வரலாறுகளை விஞ்ஞானபூர்வமாக பதிவு செய்வது அவசியம்.

 21. ேபாருக்குள் வாழ்ந்த வாழ்க்கையில் யாரும் புனைவுகள் புகுத்த மாட்டார்கள்.

  ஷெல்லடி விமானக்குண்டுகளின் மத்தியில்தான் நாம் படித்தோம். மெதடிஸ்ட்கல்லுாரி ,வட இந்து மகளிர் கல்லுாரிக்கும், காட்லி கல்லுாரி ,புட்டலை மஹா வித்தியாலத்துக்கும் இடம் மாற்றப்பட்டன ஷெல்லடியிலிருந்து மாணவா்கள் காப்பற்றப்படுவதற்காக

  சிவப்பு பிளம்பாக மேலே ஷெல் பறக்க நான் துவிச்சக்கரவண்டியுடன் தெருவில் விழுந்து படுத்திருக்கிறேன்.
  பங்கருக்குள் இரவு முக்க இருந்திருக்கிறோம்.

  ரதி நானும் வடமராட்சி தான் . உங்களுடன் சேர்ந்த்து பயணித்து உங்கள் எழுத்துக்கு சாட்சியாக என் அனுபவங்களை நிச்சயம் எழுதுகிேறன்.

  லிபரேசன் ஒப்பிரேசனுக்கு வாருங்கள் அப்போது சொல்கிேறன் என் ஊரில் நடந்த கொடூரங்களை.

  • கீர்த்தனா,

   உங்கள் வருகை சந்தோசமாக இருக்கிறது. பாடசாலைகள் பருத்தித்துறையில் இடம்மாறியது உண்மையில் அந்தநாட்களில் மிகவும் வேதனையாகத்தான் இருந்த‌து. நானும் லிபரேசன் ஒப்பரேசன் போது புட்டளை பாடசாலையில் தான் சில வாரங்கள் இருந்திருக்கிறேன்.

   //சிவப்பு பிளம்பாக மேலே ஷெல் பறக்க நான் துவிச்சக்கரவண்டியுடன் தெருவில் விழுந்து படுத்திருக்கிறேன்.பங்கருக்குள் இரவு முக்க இருந்திருக்கிறோம்.//

   நானும் ஊரில் இப்படி சைக்கிளை எறிந்து விட்டு தெருவில் குப்புற விழுந்து படுத்த அனுபவமும் உண்டு. இரவில் ஷெல் அடித்தால் பங்கருக்குள் எடுத்த எடுப்பிலேயே ஓடிப்போய் இறங்கவும் பயம், பாம்பு, பூச்சி ஏதும் இருக்குமோ என்று. தலைக்கு மேல் நெருப்பு பந்து போல் கண்மூடி முழிக்கமுன் பறந்து போகும் ஷெல், எந்த திக்கிலிருந்து வருகிறது என்று கிரகிக்கவே கொஞ்சநேரம் எடுத்தது எனக்கு. ஒரு மாதிரி சுதாகரித்துக்கொண்டு பங்கருக்குள் ஓடமுதல் எத்தனையோ ஷெல் தலைக்கு மேலாக பறந்துவந்து வெடிக்கும். நான் உயிரோடு இருக்கிறேனா இல்லையா, ஏதாவது காயம் பட்டிருக்கிறதா என்று என்னை நானே தொட்டும் பார்த்த சந்தர்ப்பங்களும் உண்டு. இப்படி எத்தனையோ அனுபவங்கள். எல்லாவற்றையும் எழுத்தில் சொல்லமுடியாத கஸ்டங்கள் எத்தனையோ…

   தொடர்ந்து உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.

 22. ‍‍‍‍‍‍‍‍யாழ் ‍‍‍‍‍‍‍‍‍பெற்றோர்களினதும், பிள்ளைகளினதும் இலட்சியம் பல்கலைக்கழ‌க அனுமதிதான். போருக்கு முன்னாலும் பின்னாலும் ‍‍‍‍‍‍‍‍யாழ் மாணவா்கள் அகில இலங்கை ரீதியில் முன்னிலை வகித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
  அதிஉக்கிரமான போருக்குள் கூட உயா் புள்ளிகள் யாழ மாணவா்களுக்கே.

  போர் காரணமாக அதிகமான மாணவா்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயா்ந்து தமது கனவுகளை தொலைத்தவர்களும், அனுமதி கிடைத்தும் அதனைத் தொடர முடியாது போனவா்களும் எண்ணிலடங்கா. ரதி , நீங்கள் அந்த இழப்பை என்றும் மறக்க முடியாது இல்லையா?

  நாங்கள் உயா்தரம் படிக்கும் போது பாடசாலைகள் ஒழுங்காக நடைபெறாமல் விஞ்ஞான செய்முறைகளை இழந்ததும், அதே வகையில் பல்கலைக்கழகத்தில், பல வருடங்கள் பிற்போடப்பட்டதும் வருந்த வைத்த விடயங்கள்.

  அண்ணா பல முறை ராணுவத்தால் பிடிக்கப்பட்டுச் சென்றதும், உயா்தர வகுப்புக்குச் செல்கையில் இந்திய ராணுவத்தாலும் தமிழ சகோதரா்களாளும் தடுக்கப்பட்டுத் தலையில் கல் போடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டு தகுந்த நேரத்தில் சிகிச்சை வழங்கப்பட்டதால் காப்பாற்றப்பட்டார். அவா் பின் பொறியியல் துறைக்குத் தேர்வாகி இன்று பொறியியலாளராக உள்ளார்.
  இது எங்கள் வீட்டில் நடந்த சம்பவம். இதே மாதிரி அனேக மாணவர்களின் கல்வி பல வடிவங்களல் பாதிக்கப்பட்டது.

  படிக்கும் காலஎல்லை நீண்டதால் , பெண்களின் திருமணவயது 30 இற்கு அண்மித்ததும் ஒரு முக்கிய விடயமானது. இது ஒரு சாதரணமான விடயமாக எஙகளுக்கு மாறி விட்டாலும் இந்திய நண்பர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம்.

 23. வினவு அவா்களுக்கு நன்றிகள் !!!எங்கள் போராட்ட வாழ்க்கையை உங்கள் பதிவில் அனுமதித்ததற்கு!!!

  பூபாளம் அல்லது பாமினி எழுதி வகையை அனுமதித்தால் அதில் பழக்கமான எம் போன்றவா்க்கு எமது பதிவுகளைப் பதிவதற்கு இலகுவாக இருக்கும்.கருத்தில் எடுத்து உதவுவீர்கள் என நினைக்கின்றேன்.

  • கீர்த்தனா,
   உங்கள் பதிவுகளை பூபாளம், பாமினியில் எழுதி அனுப்புங்கள். அதை நாங்கள் யூனிகோடில் மாற்றிக் கொள்கிறோம். நன்றி

 24. //ஈழம்: பதுங்குகுழிகளும் பாடசாலைகளும் !// இனிப் பதுங்கு குழிகளும் வேண்டாம். புதை குழிகளும் வேண்டாம்.

  தியாகிகள் பட்டியலும் வேண்டாம். துரோகிகள் பட்டியலும் வேண்டாம்.

  வீரத்தை வழிபடப்போய் முடிவில் மரணத்தை மகிமைப்படுத்தி வாழ்வை நிராகரித்தது போதும்.

  இனி அறிவை வழிபடுவதிற் தொடங்கி வாழ்வை ஆமோதிக்கும் ஒரு புதிய அரசியல் நாகரீகம் தேவை.

  தான் சாகத் தயாராக இருந்த ஒரே காரணத்திற்காக பிற உயிர்களை ஒரு பொருட்டாகத்தானும் மதிக்காத ஒரு வீரமரபு இனி வேண்டாம்.

  பதிலாக, தன்னுடைய உயிரின் பெறுமதி தெரிந்த காரணத்தினாலேயே பிற உயிர்களையும் தன்னுயிர்போல நேசிக்கும் ஒரு புதிய அரசியல் நாகரீகமே இனித் தமிழர்களுக்கு வேண்டும்.

 25. போர் மாணவர்களைப் பாதித்த இன்னொரு விடயம், மின்சாரம் இல்லாமை. 90 களின் பின் யாழ் மாவட்டத்தில் மின்சாரம் முற்றாக இல்லாமல் போனது. மண்ணெண்ணெய், தேங்காயெண்ணை விளக்குகள்தாம், இரவுகளில் எம்மை ஒளியை நோக்கி நடக்க உதவின. எண்ணெய்கள், கடைகளில் உயா;விலைக்கு விற்கப்பட்டதுடன் அரிதாகவே கிடைத்தும் வந்தது.
  ஜாம் போத்தல்களில் தண்ணீரையும்; எண்ணெயையும் கலந்து மேலிருந்து திரியை பொருத்திய விளக்குகள் நீண்ட நேரம் படிக்க உதவின.
  பல்கலைக்கழக மாணவா;களும் இதனையே பாவித்தனா;. இந்த நிலமையிலும் மருத்துவாகளும் பொறியியலாளாகளும் பட்டதாரிகளும் உருவாகிக் கொண்டுதான் இருந்தனா;
  எந்தப் போர் நிலைமையிலும் யாழ் மாவட்ட மாணவா;களுக்கான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் குறைக்கப்படவில்லை என்பதோடு, இலங்கையின் ஏனைய மாவட்டங்களை விட உயா; வெட்டுப்புள்ளிகள் இந்த மாவட்டத்திற்கே அறிவிக்கப்படுவதும் முக்கிய விடயங்கள்.
  ஷெல் வீச்சுக்குள்ளும் விமான குண்டுகளுக்குள்ளும் தமிழ் மாணவாகள் படித்துக் கொண்டிருக்க, ஏனைய மாவட்ட மாணவாகள் சகல வசதிகளுடனும் எந்தவித உயிர்பயமுமற்ற சுகமான வாழ்வுக்குரியவாகளாகவும், போர் பற்றிய எந்தவித தகவல்களோ தாக்கமோ இல்லாதவர்களாக இருந்ததும் மிகவும் குறிப்பிடத்தக்க விடயம்.

 26. ரதி,

  நீங்கள் பொய் சொல்வதாக நான் சொல்கிறேனென்று நீங்களாகவே கற்பனை பண்ணிக் கொள்கிறீர்கள்.
  உண்மையில் நான் கதைக்க வெளிக்கிட்டது Tecan னோடுதான். நீங்கள் உங்கள் இடுகையில் குறிப்பிடும் காலப்பகுதி இந்திய இராணுவ வருகைக்குப் பின்தான் என்பது எனது அனுமானமாயிருந்தது. அதை Tecan இற்குத் தெளிவுபடுத்தவே நான் சில விடயங்களைச் சொன்னேன்.

  இதிலே நீங்களும், கீர்த்தனாவும் என்னோடு தனகுவது ஏனென்று தெரியவில்லை.

  வரலாறு சரியானமுறையில் அதுவும் காலவழுக்களின்றிச் சொல்லப்பட வேண்டுமென்பதில் அதிக அக்கறை இருப்பதாலோ என்னவோ இப்படி முட்டையில் மயிர் பிடுங்கும் கணக்கில் கதைக்க வேண்டி வந்துவிடுகிறது.

  நீங்கள்கூட ‘ஒப்பறேசன் லிபரேசனை’க் குறிப்பிட்டு அந்த விமானத் தாக்குதல்கள், எறிகணைத் தாக்குதல்கள் பற்றிச் சொல்லியிருந்தால் பரவாயில்லை. நாங்களும் சத்தம் போடாமல் இருந்திருப்போம். பொத்தாம் பொதுவாகச் சொன்னதால் வந்த வினை. (‘இது கொஞ்சம் ஓவர்’ என்று Tecan நக்கலடித்தது போல் நான் சொல்லப் போவதில்லை. ஓம்! ஒப்பரேசன் லிபரேசன் அகோரம் என்பது உண்மையேதான்.)

  இதற்கு மேலும் கதைத்துக் கொண்டிருந்தால் அது விதண்டாவாதமேதான்.

  Tecan,
  இரண்டுபேர் தங்கள் ஊர்களைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் – அதுவும் இங்கே எழுதப்படும் விடயத்தோடு முழுக்க முழுக்கத் தொடர்புற்ற வகையில் -உரையாடும்போது, அதைவைத்து உங்கள் புலியெதிர்ப்பு – பிரபாகரன் எதிர்ப்புப் போன்ற அரிப்புக்களைத் தீர்த்துக் கொள்ள முயல்வதேன்?

  இங்கே கதைக்கப்படும் விடயத்தோடு எவ்விடத்திலே உங்கள் புலம்பல் தொடர்புபடுகிறது? உங்கள் புலம்பலை மறுக்க ஏராளமான விடயங்கள் இருக்கின்றன என்பதையும் நினைவிற் கொள்க.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க