Wednesday, December 4, 2024
முகப்புஉலகம்ஈழம்ஈழம்: பொருளாதாரத் தடையில் ஈழத்து வாழ்க்கை !

ஈழம்: பொருளாதாரத் தடையில் ஈழத்து வாழ்க்கை !

-

ஈழம்: பொருளாதாரத் தடையில் ஈழத்து வாழ்க்கை !

ஈழத்தமிழர்கள் மீது உள்ளூர் முதல் உலக அளவில் விதிக்கப்படாத தடைகளே இல்லையென்று சொன்னால், அது மிகையில்லை. ஈழத்தில் பொருளாதாரத்தடை முதல் உலக அரங்கில் பயங்கரவாதிகள் என்று ஈழத்தமிழர்களை இலங்கை அரசு முத்திரை குத்தி தடை விதித்தது வரை உலகின் எந்த மூலைக்குப் போனாலும் தடைகள் மூலம் முடக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம். ஈழத்தமிழர்களின் பேச்சுரிமை, கருத்துரிமை முதற்கொண்டு வாழ்வுரிமை வரை திட்டமிட்டே பறிக்கப்பட்டது, இன்றுவரை பறிக்கப்படுகிறது. எத்தனையோ தடைகளை நாங்கள் தாண்டி வந்திருந்தாலும், எங்களை மிகவும் வாட்டியதும், வாட்டிக்கொண்டிருப்பதும் பொருளாதாரத்தடை தான்.

ஒரு தனியினமாக எங்கள் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கான வழிமுறைகள்அனைத்திற்கும் பொருளாதார தடை மூலம் முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. அரசவர்த்தமானியில் வார்த்தையளவிலேனும் கூட வடபகுதிக்கு நல்ல செய்தி வந்து நான் அறிந்ததில்லை. நான் ஈழத்தில் இருந்த காலங்களில் பொருளாதார தடை, அதன் தாக்கங்களை பற்றி மட்டுமே சிந்தித்ததால், அது எங்கள் மீது ஏவிவிடப்பட்ட காரணங்களோ சிங்கள அரசின் அரசியல் உள்நோக்கங்களோ எனக்கு அவ்வளவாக புரிபடவில்லை. அதாவது, சீனிக்கு பதில் பனங்கட்டி, உருளைகிழங்கிற்கு பதில் மரவள்ளி இதையெல்லாம் மாற்றீடாக எப்படி பாவிப்பது, Wonderlight (சோப்) இல்லாமல் எப்படி துணி துவைப்பது என்ற சிறுபிள்ளைத்தனமான சிந்தனையில் தான் இருந்தேன். இப்போது அதை மீட்டிப்பார்த்தால், அது எங்களின் மீது தொடுக்கப்பட்ட ஓர் உளவியல் மற்றும் பொருளாதார அடக்குமுறை என்றுதான் எனக்கு தோன்றுகிறது.

என் அறிவுக்கு எட்டியவரையில் நாடுகள் (ஈராக், கியுபா, ஹெய்ட்டி மற்றும் பல) மீது தான் பொருளாதார தடை விதித்ததை படித்திருக்கிறேன், கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு நாடு அதன் சொந்தநாட்டு மக்கள் மீதே, அதுவும் அறிவிக்காமலேயே இப்படி ஓர் தடையை விதிப்பது பற்றி நான் கேள்விப்பட்டதில்லை. பொருளாதாரத்தடைக்கு பொதுவாகவே மனித உரிமை ஆர்வலர்கள், அமைப்புகள், மற்றும் சிறுவர் நலம் பேணும் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தே வருகின்றன. காரணம், அதன் மூலம் “மனித உரிமைகள்” பாதிக்கப்படுவதுதான்.

எனக்கு எப்பொழுதுமே மனித உரிமைகள் அது தொடர்பான சட்டங்கள் மீதான ஓர் ஆர்வத்தால் இந்த தடை மூலம் பாதிக்கப்படும் எங்களின் உரிமைகள் என்னென்னவென்று தேடித்தெரிந்துகொண்டேன். ஐ. நா. மற்றும் சர்வதேச சட்டங்களின் படி பார்த்தால் அது வெறும் உணவுக்கும் மருந்துக்குமான தடையாக மேலோட்டமாக எனக்கு தோன்றவில்லை. என்னுடைய அனுபவத்தில், என்னைச்சுற்றி நடந்தவைகளைப் பார்த்ததில் ஈழத்தமிழர்களை பொறுத்தவரை பொருளாதார தடை ஓர் கருவியாக, ஆயுதமாக எங்கள் மீதான ஒடுக்குமுறைக்கும், இனவழிப்புக்கும் மட்டுமே பிரயோகிக்கப்பட்டது என்றுதான் சொல்லத்தோன்றுகிறது.

நான் ஏன் அடிக்கடி சர்வதேச மற்றும் ஐக்கிய நாடுகள் பற்றி பேசுகிறேன் என்று சிலர் நினைக்கலாம். சிலர் எரிச்சலடையலாம். இலங்கையில் எங்களின் அடிப்படை உரிமைகள் சட்டரீதியாக பாதுகாக்கப்படாததால் தான், சர்வதேச சட்டங்களின் சந்து, பொந்துகளில் எல்லாம் நுழைந்தாவது நாங்கள் எங்கள் உரிமைகள் பற்றிப்பேசவேண்டியுள்ளது. இது ஓர் துர்ப்பாக்கிய நிலைதான். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பிரகடனம் (Universal Declaration of Human Rights-UDHR), பன்னாட்டு பொருளாதார, சமூக, மற்றும் கலாச்சார உரிமைகள் ஒப்பந்தம் ( International Covenant of Economic, Social, and Cultural Rights-ICESCR-1996), பன்னாட்டு குடிமக்கள் மற்றும் அரசியல் உரிமைகள் ஒப்பந்தம் (International Covenant of Civil and Political Rights-ICCPR), சிறுவர் உரிமைகள் (Convention on the Rights of the Child-CRC) போன்ற ஆவணங்களின் படி பொதுவாக அடிப்படை மனித உரிமைகள் பொருளாதார தடை மூலம் பாதிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. அவ்வாறான அடிப்படை உரிமைகளில் சில முக்கியமானவை: வாழ்வுரிமை (Right to Life), பேச்சு மற்றும் கருத்துரிமை (Right to Freedom and Expression), சுகாதாரம், கல்வி, போதிய உணவு இன்றி பசி பட்டினி, போதிய இருப்பிட வசதிப்பிரச்சனை என பட்டியலிடப்படுகின்றன.

அவர்களுக்கு அவை ஆவணங்கள் மட்டுமே. எங்களுக்கு அவை வாழ்நாளில் மறக்கமுடியாத வலிகள், அனுபவங்கள். நான் இங்கே சட்டங்கள் பற்றிப் பேசப்போவதில்லை. பொருளாதாரத்தடை மூலம் மறுக்கப்பட்ட என் உரிமைகள் பற்றியே பேசப்போகிறேன்.  இது பிழையென்றால் யாராவது என்னை திருத்துங்கள். இதையெல்லாம் படித்தபிறகு நான் நினைத்துக்கொண்டேன், வழக்கம் போல் ஐ. நா. பாதிக்கப்படுபவர்களின் உரிமைகளை பாதுகாக்கிறார்களோ இல்லையோ எல்லாவற்றையும் நன்றாகவே வரையறுத்தும், பட்டியலிட்டும் வைத்திருக்கிறார்கள். பொருளாதார தடை என்றவுடன் ஏதோ அரிசி, பருப்பு, மருந்து மட்டும் தான் பிரச்னை என்று அன்று அந்த சூழலில் அப்பாவித்தனமாக நினைக்கத் தோன்றியது. ஆனால், ஈழத்தில் எனக்கு, (ஒரு தனி மனிதனுக்கு) பொருளாதார தடை மூலம் மறுக்கப்பட்டதும், பறிக்கப்பட்டதும் என் அடிப்படை உரிமைகள் தான் என்று இப்போதுதான் புரிகிறது. இந்த பொரளாதார தடை மூலம் வாழ்வுரிமை பறிக்கப்படுமா என்றெலாம் யாராவது நினைக்கலாம். ஆம், ஈழத்தில் அப்படியும் பறிக்கப்பட்டது.

சிங்களப் படைகள் குண்டுகளை எங்கள் தலைகள் மீது போட்டு எங்களை கொன்றார்கள். அதோடு சேர்த்து, பொருளாதார தடை கூட ஓர் கருவியாக, ஆயுதமாக எங்களின் உயிரை குடித்தது. அரிசி, பருப்பு, முக்கியமாக தடுப்பூசி மருந்துகள், Antibiotics, வலிநிவாரணிகள் இதெல்லாம் ஒரு மனிதனின் உயிரைக்காக்க அத்தியாவசியமான பொருட்கள். இவற்றையெல்லாம் இலங்கை அரசு பொருளாதார தடை என்ற போர்வையில் வடபகுதிக்கு வரவிடாமல் தடுத்தது. உள்ளூர் உற்பத்திகள் போர்ச்சூழலில் பாதிக்கப்பட்ட நிலையில் இதையெல்லாம் எங்கிருந்து பெறுவது. வாழ்வுரிமை என்பது வேறொரு விதமாகக் கூட மறுக்கப்பட்டது.

போர், பொருளாதாரத்தடை இவற்றின் காரணமாக உள்ளககட்டுமானப்பணிகள் என்பது முற்றுமுழுதாக தடைப்பட்டு இருந்தது. இவ்வாறான கட்டுமானப்பணிகள் என்பதற்குள் தொழில்வாய்ப்புகள், போக்குவரத்து (எரிபொருள்) போன்ற முக்கியமான விடயங்களும் அடங்கும். தொழில்வாய்ப்புகள் என்பது வாழ்வாதாரங்கள் என்பதைக் குறிக்கும். வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டால் மனிதன் எப்படி உயிர்வாழ முடியும்?

குறிப்பாக மீன்பிடி, விவசாயம் மற்றும் அன்றாட கூலி வேலை போன்ற தொழில்வாய்ப்புகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது.  என் ஊரில் வசதியாக வாழ்ந்தவர்களும் இருந்தார்கள். அதே நேரம் அன்றாடம் உழைத்துப்பிழைப்பவர்களும் இருந்தார்கள். பொருளாதார தடையின் பாதிப்பு எல்லோருக்கும் பொதுவானது என்றாலும், அது அன்றாடம் உழைத்துப்பிழைப்பவர்களுக்கு ஓர் வலி தானே. அவ்வாறான குடும்பங்களுக்கு பங்கீட்டு முறையில் அவர்களுக்கு கிடைத்த உணவு அவர்கள் பசியை போக்க போதுமானதாக இருந்ததில்லை. அவ்வாறான குடும்பங்களில் உள்ள குழந்தைகள் சிலர் காலை சாப்பாட்டிற்கு அந்த நாட்களில் பனம்பழம் சாப்பிட்டுவிட்டு பள்ளி சென்ற பரிதாபக்கதைகளும் உண்டு. அவர்கள் வீட்டில் பனைமரம் கிடையாது. வேறு இடங்களுக்கு சென்று பொறுக்கி வருவார்கள்.

நான் ஏன் இதையெல்லாம் சொல்கிறேன் என்றால், ஈழத்தில் ஏற்கனவே இடப்பெயர்வு, சாவு, காணாமல் போனவர்கள், வாழ்விடங்களை இழந்தது என்று நிறைய கஷ்டங்களுக்கு பிறகு பொருளாதார தடை என்பதும் சேர்ந்து எங்களை வாட்டியதானால் பல பிரச்சனைகளுக்கு முகம் ொடுக்கவேண்டியிருந்தது. பொருள் வசதி இல்லாத குடும்பங்களில் பிரச்சனைகள் என்பதும் சில சமயங்களில் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது என்றே நினைக்கிறேன். குறிப்பாக வாழ்வாதரங்களை இழந்ததால் வந்த மன உளைச்சலால் தான் குடும்பம்களுக்கிடையே இவ்வாறான பிரச்சனைகள் தோன்றின. இது மன உளைச்சல் என்றோ, அதற்கு ஏதாவது மன ஆறுதல் தரும் விடயங்களில் மனதை செலுத்த வேண்டுமென்பதோ பாதிக்கப்பட்ட யாரும் அறியாத ஓர் விடயம். சரி, ஒருவேளை அதை புரிந்துகொண்டாலும், எந்த வழியில் மனதை ஆற்றுவது? அதனால் அது முடிவில்லாமல் நீண்டுகொண்டே போனது.

சாதாரணமாக இரண்டு பேர் சந்தித்தால் அந்நாட்களில் தங்களுடைய குடும்பங்கள் இலங்கை ராணுவத்தாலும் (Operation Liberation), இந்திய ராணுவத்தாலும் எப்படி பாதிக்கப்பட்டார்கள் என்றே பேசிக்கொண்டார்கள். உங்கள் வீட்டில் எத்தனை பேர் இறந்தார்கள், ராணுவம் உங்கள் வீட்டை நாசப்படுத்தியதா இப்படியான விசாரணைகளும், இந்த துன்பங்களிலிருந்து எப்போது விடுதலை என்ற வேதனையும் வலியும் கலந்த அங்கலாய்ப்புகளும் தான் எங்களின் அன்றாட குசலம் விசாரிப்பாக இருந்தது. குடும்பத்தலைவர்கள் கொல்லப்பட்ட அல்லது காணாமல் போன குடும்பத்தில் அந்த பொறுப்பு குடும்பத்தலைவி மீது, குருவி தலையில் பனம்பழம் போலானது.

அவ்வாறான குடும்பங்களின் கஷ்டங்களை நான் கண்கூடாகவே கண்டிருக்கிறேன்.  மீன்பிடித்தொழில் செய்து அன்றாடம் பிழைத்தவர்கள் வாழ்வும் கஷ்டங்கள் நிறைந்ததுதான். ஆழக்கடலில் சென்று மீன்பிடிக்க முடியாது, “தடை”. அதனால், கரையோரப்பகுதிகளில் மாலைவேளைகளில் போய் ஏதோ கிடைக்கும் சிறிய மீன்களை பிடித்து அன்றாடம் வயிற்றுப்பிழைப்பை பார்த்துக்கொண்டவர்களும் உண்டு. இரவு நேரங்களில் வீதியோரம் மீனை சிறிய கூறுகளாக போட்டு விற்பவர்களை பார்த்திருக்கிறேன். இது தவிர மீன்பிடித்தொழில் தடை, விவசாய நிலங்கள் ராணுவ ஆக்கிரமிப்புக்குள்ளானது போன்ற காரணங்களால் ஏற்பட்ட இடப்பெயர்வுகள் மக்களை வாட்டியது. ஏற்கனவே இருந்த தொழிலை இழந்தவன் பொருளாதார தடை இருக்கும் இன்னோர் இடத்திற்கு சென்று புதிதாக எந்த தொழிலை செய்யமுடியும்?

இப்படி இடப்பெயர்வும், வயிற்றுப்பிழைப்புமே அன்றாட பிரச்சனைகள் என்றான பின் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்ற ஓர் பிடிப்பு இயல்பாகவே மக்கள் மனதில் இல்லாது போனது என்றுதான் நினைக்கிறேன்.  அந்த நாட்களில் யாருமே வாழ்க்கையில் ஓர் குறிக்கோளோடு இருந்தார்களா என்பது சந்தேகமே? எப்போது பட்டினியால் சாகப்போகிறேன் என்று நினைப்பவனுக்கு எங்கிருந்து குறிக்கோள் வரும்? ஒரு நாடு உண்மையாகவே தன் குடிமக்களின் உயிரை காப்பாற்ற நினைத்தால், பொருளாதார தடை என்ற பெயரில் எங்களை வாட்டியிருக்குமா? எங்களின் உயிரை தடை என்ற பெயரில் குடித்திருக்குமா?  வன்னியிலும் என் மக்களை சிங்கள அரசு இப்படித்தானே பட்டினிபோட்டும் கொன்றார்கள். இப்போது இதையெல்லாம் நான் மீட்டிப்பார்க்கும் போது எம் வாழ்வுரிமை பொருளாதார தடை மூலம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை. எங்களை பட்டினி சாவிற்குள் தள்ளி எங்கள் வாழ்வுரிமை பறிக்கப்படுவது எந்த விதத்தில் நியாயம்?

ஏற்கனவே, பொருளாதார தடை என்பதால் பொருட்களுக்கு தட்டுப்பாடு. அதனால் உள்ளூர் உற்பத்திகளுக்கும் விலையேற்றம், பொருட்களுக்கான போட்டி என்று வழக்கமான அக்கப்போரும் இருந்தது. இருந்தாலும் இலங்கை அரசு வீசியெறிந்த அரிசிப்பருக்கைகளை ரேஷன் என்ற முறையில் பொறுக்கி, பொங்கித்தின்றுதான் உயிர் வளர்க்க வேண்டிய சூழ்நிலையிலிருந்தோம்.

விதானையார் (கிராமசேவகர்-அரசாங்கஊழியர்) மூலம் முறையாகப் பதிந்து எங்கள் வீட்டில், ஆடு, மாடு, கோழி, போரில் செத்தவர்கள்-குறிப்பாக குடும்பத்தலைவர்கள், செத்துக்கொண்டிருப்பவர்கள், சாகாதவர்கள், கணக்கெல்லாம் காட்டினால்தான் அந்த ரேஷன் அட்டையும் (ஈழத்தில் அதை கூப்பன் என்று சொல்வார்கள்) கிடைக்கும். சரி, விதானையோடு மல்லுக்கட்டி ரேஷன் அட்டை எடுத்து பங்கீட்டு முறையில் அரிசி, சீனி வாங்க கடையில் போய் கால்கடுக்க, வெயில் குளித்து செத்து, சுண்ணாம்பாகி நிற்கும்போது….. சிங்களப்படைகள் தங்கள் பங்கிற்கு ஹெலிகாப்டர் இல் வந்து சில சமயங்களில் சுட்டுவிட்டும் போவார்கள். என்னே மனித நேயம்?  நான் சாகும் வரையிலும் மறக்கமுடியாத இன்னொரு அனுபவமும் உண்டு.

என் மைத்துனர் (என் தாயாரின் சகோதரரின் மகன்) பத்து வயதில் சிங்களப்படையின் குண்டுவீச்சில் அங்கவீனமாக்கப்படதுதான். அது எப்படி நடந்தது என்று பின்னொரு பதிவில் சொல்கிறேன். ஆனால் அவர் குண்டடிபட்டு Antibiotics கிடைக்காததால் தான் அங்கவீனராக்கப்பட்டார். யாழ்ப்பாணம் வடமராட்சியில் இருந்த உருப்படியான ஒரேயொரு வைத்தியசாலை மந்திகை வைத்தியசாலை. பெரும்பாலான காயமடைந்தவர்கள் அங்கேதான் கொண்டுசெல்லப்பட்டார்கள். அதற்கு முக்கிய காரணம் அங்கே வெளிநாடுகளில் இருந்து தொண்டு நிறுவனங்கள் மூலம் வந்து பணியாற்றிய வைத்தியர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டதுதான். என் மைத்துனருக்கு முழங்காலுக்கு பின்னால் தான் காயம்பட்டது. அதை அப்போது பார்க்க ஏதோ ஓர் சிறுகாயம் போல்தான் எனக்கு தெரிந்தது. ஆனால், உரிய நேரத்தில் உரிய சிகிச்சை கிடைக்காததால் அவர் முழங்காலுக்கு மேல் ஓர் காலை இழக்க நேரிட்டது.

வலியில் முனகும் அந்த குழந்தையை சைக்கிளில் வைத்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்றால், அங்கே சொன்னார்கள் இப்போது இதற்கு சிகிச்சையளிக்கும் வைத்தியர்கள் யாருமில்லை. பிரான்ஸ் இலிருந்து வரும் வைத்தியருக்காக காத்திருக்க வேண்டும் என்று. வைத்தியசாலையில் அனுமதிக்க மறுத்து வலிநிவாரணி மட்டும் கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். அந்த வலிநிவாரணி பலனில்லாமல் குழந்தை வலியில் துடித்தது வேறுவிடயம். வைத்தியர்களுக்காக காத்திருந்ததில் என் மைத்துனரின் காயம் சிதழ் பிடித்து, மெல்ல மெல்ல அழுகத்தொடங்கிவிட்டது (Necrotic). சிதழ் ஒருபுறமும், புண்ணின் துர்நாற்றம் ஒருபுறம், அந்த குழந்தையின் வலி ஒருபுறம் என்று பார்க்கவே வேதனையாகவும் கொடுமையாகவும் இருந்தது. ஒருவாறாக பிரான்சிலிருந்து வைத்தியர்கள் வந்து சொன்னார்கள், இது காலம் கடந்துவிட்டது. முன்பே Antibiotics கொடுத்திருக்கவேண்டும் என்றும் அப்படி கொடுக்காததால் தான் infection ஆகிவிட்டது என்றும் சொன்னார்கள். காலை முழங்காலுக்கு மேல் வெட்டவேண்டும் என்றும் சொன்னார்கள்.

இப்பொது நினைத்துப்பார்க்கிறேன், ஒருவேளை அந்த வைத்தியர்கள் வராமலே விட்டிருந்தால் என் மைத்துனர் செப்டிக் ஷாக் வந்து உயிர் விட்டிருப்பார். என் மைத்துனர் இப்போது கனடாவில் தான் இருக்கிறார். அவரை பார்க்கும் போதெல்லாம், அவர் செயற்கை கால் மூலம் தாண்டித்தாண்டி நடக்கமுடியாமல் நடக்கும் போது ஏனோ என்னால் வன்னியில் காயம் பட்ட குழந்தைகளை நினைக்காமல் இருக்கமுடிவதில்லை. நான் வாழும் நாட்டில் ஒரு குழந்தை சிறுவயதில் ஓர் பல்லை இழந்தாலும், அதற்கு ஓர் தேவதை (Tooth Fairy) வந்து மீண்டும் ஓர் புதிய பல் ஒன்றை தரும் என்று எத்தனையோ கதைகள் சொல்கிறார்கள். அந்த குழந்தையை தேற்றுகிறார்கள். ஆனால், ஈழத்தில் ஆயிரக்கணக்கில் அங்கவீனர்களாக்கப்பட்ட எங்கள் குழந்தைகளை எந்த தேவதையும் வந்து தேற்ற வேண்டாம். அவர்களை முட்கம்பி வேலிகளுக்கு வெளியே விடுங்கள் என்றுதானே கேட்கிறோம். இப்படித்தான், ஈழம் பற்றி நான் எழுதத்தொடங்கினால் நினைவுகள் எங்கெங்கோ சுழன்று கடைசியில் வன்னியில் வந்து நிற்கிறது.

நான் மேலே சொன்ன என் மைத்துனரின் சிறிய தாயார் அதாவது என் தாய்மாமனின் மனைவியாரின் சகோதரி கூட அண்மையில் வன்னியில் சிங்களப்படையின் குண்டுவீச்சில் இடுப்பருகே குண்டடிபட்டு ஓர் சிறுநீரகத்தை இழந்து ICRC யினால் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டவர். தற்போது சிகிச்சைக்காக, அவரது சகோதரரால் அழைத்துச் செல்லப்பட்டு தமிழ்நாட்டில் தான் இருக்கிறார். ஆனால், அவருடைய கணவரும் பதிமூன்று வயது மகளும் ஒரு முகாமிலும், பதினாறு வயது மகன் ராணுவத்தால் தனியாகப் பிரிக்கப்பட்டு வேறோர் முகாமிலும் இலங்கையில் தான் இருக்கிறார்கள். என்னுடைய இன்னொரு உறவினர் தடுப்பு முகாமில் சில வாரங்களுக்கு முன் பிரசவ நேரத்தில் போதிய மருத்துவ வசதி கிடைக்காமல் அவருடைய குழந்தை பிறக்கும் போதே இறந்துவிட்டது. குழந்தையை பறிகொடுத்தவரின் தாயாரும் இன்னுமோர் சகோதரியும் யாழ்ப்பாணத்தில் தான் இருக்கிறார்கள். இருவரும் இருமுறை முகாமிற்கு சென்று குழந்தையை பறிகொடுத்தவரை தங்களோடு யாழ்பாணம் கூட்டிச்செல்ல அனுமதி கேட்டால் அது மறுக்கப்படுவதாக தொலைபேசியில் அழுகிறார்.

இவர்களின் கதைக்கும் பொருளாதார தடைக்கும் சம்பந்தம் உண்டா எனக்கு தெரியவில்லை. ஆனால், என்னால் சொல்லாமல் இருக்கமுடியவில்லை. இப்படி என்னென்னவோ தடைகள் மூலம் எங்களுக்கு குறைந்தபட்ச உரிமைகள் கூட மறுக்கப்படுகிறது. நாங்கள் உலக சுகாதார நிறுவனத்தின் வரையறைகளின் படியோ அல்லது சர்வதேச தராதரங்களின் அளவிலோ எந்தவொரு சிக்கிச்சையையும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், அடிப்படையான, குறைந்தபட்ச வைத்தியமும் ஏன் எங்களுக்கு மறுக்கப்பட்டது? அதுவும் போர்ச்சூழலில்? நாங்கள் தமிழர்கள் என்பதாலா?

உணவும் மருத்துவமும் என் உறவுகளின் வாழ்வுரிமையை பறிக்கும் ஆயுதங்களாகவே பொருளாதார தடை மூலம் மாற்றப்பட்டிருந்தன என்பது தான் என் புரிதல். பொருளாதார தடை என்ற பெயரில் வடக்கில் எங்கள் உரிமைகளும் உணர்வுகளும் மறுக்கப்பட்டும், அடக்கப்பட்டும் ஏதோ ஓர் இனம்புரியாத சூனியத்திற்குள் தள்ளப்பட்டோம். வாழ்விடங்கள் சிதைக்கப்பட்டு, வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டு, வெளியுலக தொடர்பு இல்லாமல் எங்களைச்சுற்றி என்ன நடக்கிறது என்று புரியாமல் ஓர் கசப்பும் வெறுப்புமே என் மனதில் மிஞ்சியிருந்தது.

வானொலி கேட்க முடியாது, காரணம் மின்சாரமோ அல்லது பாட்டரிகளோ கிடையாது. பாட்டரிகள் வடக்கிற்கு வருவது சுத்தமாக தடைசெய்யப்பட்டிருந்தது. மின்சாரமும் கிடையாது ஆதலால் நிலாவெளிச்சம் இருக்கும் நாட்களில் அதில் தான் இரவுச்சாப்பாடு. அது இல்லாத நாட்களில் கிடைக்கும் மண்ணெண்ணையில் ஓர் சிறிய விளக்கொளியில் தான் சாப்பாடு, மாணவர்களின் படிப்பு எல்லாமே. செய்தித்தாள்கள் கிடையாது. எங்களின் அவலங்கள் வெளியுலகிற்கு தெரியுமா? தெரியாதா? என்றெல்லாம் அறிய எனக்கு எந்த ஊடக வசதியும் தொடர்பும் இருக்கவில்லை. வேலை வெட்டியும் கிடையாது. பங்கீட்டு உணவில் தான் உயிரை தக்கவைக்கவேண்டிய அவலம்.  பொதுப் போக்குவரத்து வடக்கில் ஏற்கனவே செயலிழந்து விட்டிருந்தது.

ஒருசில தனியார் வாகனங்களும் எரிபொருள் தடையினால் ஓடாமலே போனது. காயம் பட்டவர்களை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்ல வடமராட்சியில் நான் இருக்கும் வரை எந்தவொரு வசதியும் இருக்கவில்லை. போக்குவரத்து வசதியின்றி உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் இறந்தவர்கள் பலர். அங்கு ஆம்புலன்ஸ் இல்லையா என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். நான் வடமராட்சியில் காயம்பட்ட எவரையுமே ஆம்புலன்ஸ் ஏற்றிச்சென்றதை என் கண்களால் பார்த்ததில்லை. பாடசாலைகள் ராணுவமுகாம்கள் ஆனதால் பல மாணவர்கள் நீண்டதூரம் சென்று கல்வி கற்க போதிய போக்குவரத்து வசதி கூட இருக்கவில்லை.

போக்குவரத்துக்கு உரிய ஒரேயொரு ஊடகம் “சைக்கிள்” தான்.  ஈழத்தமிழர் வாழ்வில் சைக்கிளின் பயன் சொல்லிமாளாது. போக்குவரத்திற்கு சைக்கிளை மாற்றீடாக பயன்படுத்தலாம். உணவுக்கும் மருந்துக்கும் எதை மாற்றீடாக பாவிப்பது? இப்படி வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டு பொருளாதார தடை என்ற பெயரில் வாழ்வுரிமை மறுக்கப்பட்டால் வாழ்க்கையில் எதில்தான் பிடிப்பு வரும்? வாழ்க்கையே கேள்விக்குறியாய், சூனியமாய் இருந்தது. இதுதான் பலபேரை என் ஊரிலிருந்தும் அருகிலுள்ள ஊர்களிலிருந்தும் தமிழ்நாடு நோக்கி இடம்பெயர வைத்தது.

தொடரும்

ரதி

  1. ரதி,

    மீண்டும் எழுதுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. மாற்று கருத்து உள்ளவகளுக்காக – அவர்கள் நண்பர்களாக இருந்தாலும் சரி – தயங்காமல், விடாமல் தொடருங்கள்! நட்பு கருத்து உள்ளவர்களின் எதிர்ப்பை கண்டு குழம்பாமல் இந்த பதிவுகளை தொடர வைக்கும் வினவு குழுவினருக்கும் வாழ்த்துக்கள்!

  2. “ஈழத்தில் பொருளாதாரத்தடை முதல் உலக அரங்கில் பயங்கரவாதிகள் என்று ஈழத்தமிழர்களை இலங்கை அரசு முத்திரை குத்தி தடை விதித்தது வரை உலகின் எந்த மூலைக்குப் போனாலும் தடைகள் மூலம் முடக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.”
    உலக அரங்கில் பயங்கரவாதிகள் என தடைவிதிக்கப்பட்டவர்கள் புலிகள்தான். நீங்கள் ஈழத்தமிழர்கள் என பொதுவாக குறிப்பிடுகிறீர்களே.

    • தோழர் அஸ்கர், ரதி எழுதியதை மீண்டும் வாசியுங்கள்

      @@@ ஈழத்தில் பொருளாதாரத்தடை முதல் //உலக அரங்கில் பயங்கரவாதிகள் என்று ஈழத்தமிழர்களை இலங்கை அரசு முத்திரை குத்தி தடை விதித்தது வரை//

      இதில் அவர் சொல்லியிருப்பது, இலங்களை அரசு ஈழத்தமிழர்களை உலக அரங்கில் பயங்கரவாதிகள் என முத்திரை குத்த முயல்வது.. (இசுரேல் பாலஸ்தீனியர் பிரச்சனையை நினைவில் கொள்க)

      இலங்களை அரசு புலிகளுக்கு மட்டும் எதிரானது என்று நீங்கள் நம்புகிறீர்களா?

      தவிர…

      சதாமும், லேடனும் முசுலீமாகிப்போன காரணத்துக்காக அனைத்து இசுலாமியர்களையும் தீவிரவாதிகளாக பார்க்கும் மேற்குலகு, ஈழத்தமிழர்கள் தீவிரவாதிகளாய்/ஆதரவாளர்களாய்/ பினாமியாய் இருக்கலாம் என ஒரு நாட்டு அரசு அறிவித்தபின் அவர்களை பரிவோடு பார்க்குமா?

      • நன்றி தோழர் கேள்விக்குறி,
        எனது தவறான புரிதமையை சுட்டிகாட்டியமைக்கு நன்றி.

  3. ஈழத்தின் நினைவுகளை நீங்கள் இங்கே பதிவது நல்லதுதான்

    அங்குள்ள மக்களின் வாழ்க்கை கலாசாரம் அதன் சிதைவு இது எதுவுமே தெரியாமல் இருப்பதை காட்டிலும் புலி ஆதரவு நிலையில் இருந்தாலும் இத்தகைய கட்டுரைகள் வருவது நல்லது மேலும் புலிகள் மீதான உங்கள் விமர்சனமும் நீங்கள் கட்டுரைகளில் சொல்லவேண்டும் உதாரணமாக புலி ஆண்ட பகுதியில் ஒப்ப்பீட்டளவில் அதிக வரி வசூலிக்கப்பட்டது போன்றவை மேலும் துரோகிகள் என கடத்தி சென்றவர்களின் மேல் என்ன விசாரணை செய்து கொலை செய்தார்கள் அது சரிதானா எனபது போல அவர்களது தவறுகளையும் சொல்லுங்கள் வாழ்த்துக்கள்

  4. … பேரினவாதம் தனது பொருளாதார தடை மூலம் தமிழ் சமூகத்தை பட்டினிக்குள் தள்ளியது என்றால், சிங்கள மக்கள் தமிழ் மக்களுக்கு தமது உழைப்பில் உணவிட்டதை ஓத்துக் கொள்வதாகின்றது. சிங்கள மக்கள் தமக்கும், மற்றய மக்களுக்கும் உணவிட முடிந்தது என்றால், தமிழ் மக்களால் தமக்கு கூட இதை ஏன் செய்ய முடியவில்லை? யார் தடையாக இருக்கின்றனர் என்றால், புலிகளைத் தவிர வேறு யாருமல்ல அல்லவா!

    http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=396:2008-04-14-07-02-08&catid=180:2006

    • இரயாகரன் ஐயா,

      எழுதுவதை சற்று பொருளோடு எழுதுமைய்யா! பேரினவாதம் பொருளாதாரத் தடை போட்டதற்காக சிங்கள மக்கள் தமிழ் மக்களுக்கு உணவளித்தார்களா? என்ன உளறல் இது? இலங்களை அரசுக்கு தெரியாமல் சிங்கள மக்கள் லாரி லாரியாய் உணவை வடக்கிற்கு அனுப்பி வைத்தார்களா? அப்படிப் பார்த்தால் இந்திய அரசு விமானங்கள் மூலம் உணவை ஈழத்தில் வீசியதே? இதனால் இந்திய மக்கள் செய்த்தை ஈழத்து மக்கள் செய்யவில்லை என்று அதாவது ஈழத்து மக்களும் சில விமானங்களை ஏற்பாடு செய்து வடக்கில் வீசியிருக்கலாமோ? உளறுவதற்கும் ஒரு அர்த்தம் வேண்டாமா? புலிகள் என்றில்லை. உங்கள் தலைமையில் ஒரு சுமாரான கம்யூனிஸ்ட்டு கட்சி போராடியிருந்தாலும் பேரினவாத அரசு பொருளாதாரத்தடை போட்டிருக்கும். இதனால் குற்றம் உம்மைச் சாருமா? பாலஸ்தீனத்தில் பொருளாதாரத் தடைக்கு ஹமாஸ் இயக்கம்தான் காரணமா? புலிக்காய்ச்சலில் கண்டதை வாந்தி எடுக்காமல் இருந்தால் உடலுக்கு நல்லது.

      காளமேகம்

  5. “ஈழத்தமிழர்களின் பேச்சுரிமை, கருத்துரிமை முதற்கொண்டு வாழ்வுரிமை வரை திட்டமிட்டே பறிக்கப்பட்டது,”

    “மேதகு” தலைவர் பிரபாகரன் பெயரில் வெளியிட்ட துண்டுப்பிரசுரத்தில் “விடுதலைப் புலிகளை அரசியல் அனாதைகளாக்கக் கூடிய மேலும் இரு கோரிக்கைகள்” என்று புலிகள் அறிவித்து நிராகரித்த இரு கோரிக்கையும் என்ன எனப் பார்த்தால்

    1.மக்களுக்கு எழுத்து, பேச்சு, கருத்து, பத்திரிகைச் சுதந்திரம் வேண்டும்.

    2.மக்களுக்கு விரும்பிய அரசியல் ஸ்தாபனங்களில் இருக்கவோ அரசியல் நடத்தவோ சுதந்திரம் வேண்டும்.

    இந்த இரு கோரிக்கைகளும் “புலிகளை அரசியல் அநாதையாக்கிவிடும்” என்று கூறியவர்கள் புலிகள்.

    பார்க்க தமிழீழ விடுதலைப் புலிகள் பல்கலைக்கழக மாணவர்களுக்கு

    http://www.tamilarangam.net/document/StudentRevolt/05.pdf

    • புலிகள் பேச்சுரிமையை மறுத்தது இருக்கட்டும். தமிழரங்கத்தில் எந்த விமரிசனங்களையும் தாங்கள் அனுமதிக்காமல் இருக்கும் மர்மம் என்ன? உங்கள் கருத்துக்கு விரோதமாக யார் பேசினாலும் அதை உங்கள் தளம் என்பதால் தனிச்சொத்துடமையின் பெயரில் தடை செய்கீறீர்கள். அதைத்தான் ஈழம் தங்கள் சொத்து என்று புலிகள் தடை செய்கிறார்கள். கருத்துக்களை தடை செய்வதில் உங்களுக்கும் புலிகளுக்கும் என்ன வேறுபாடு? புலிகள் கையில் துப்பாக்கி இருந்த்து. உங்கள் கையில் மவுஸ் இருந்த்து. இரண்டுமே மாற்றுக்கருத்துக்களை மறுக்கின்றது. சரிதானே?

      • “ஒரு முறை முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்” என்று “போக்கிரி” என்ற படத்தில் நடிகர் விஜய் ஒரு வசனம் பேசுவார். எத்தனை முறை யோசித்தும் “இது எப்படி சாத்தியம்?” என்று புரியவேயில்லை,அய்யன் ரயாகரன் அவர்களை அறியும் வரை.
        புலிகளை எதிர்க்க வேண்டும் என்ற முடிவு எடுத்துவிட்ட பிறகு, அவரது எழுத்துக்கள் இந்த. வகையில்தான் இருக்கிறது
        நீங்கள் கேட்டது போன்று அவரது தளத்தில் நானும் பலமுறை கேட்டுப் பார்த்துவிட்டேன். மனுஷன் அசைஞ்சு கொடுத்தாதானே?! நம்முடைய பின்னூட்டம் உடனடியாக தூக்கப்பட்டுவிடும்.காரணம், இவர் ஒரு சோசலிசவாதி. ஆனால் இவரே, புலிகள் பாசிட்டுகள் என்பார்.

  6. “ஒரு தனியினமாக எங்கள் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கான வழிமுறைகள்அனைத்திற்கும் பொருளாதார தடை மூலம் முட்டுக்கட்டைகள் போடப்பட்டன.”

    மக்களின் உழைப்பு எந்த உற்பத்தி மீது….

    http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3398:2008-08-29-20-42-10&catid=72:0406&Itemid=76

  7. ” இப்போது இதையெல்லாம் நான் மீட்டிப்பார்க்கும் போது எம் வாழ்வுரிமை பொருளாதார தடை மூலம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை. எங்களை பட்டினி சாவிற்குள் தள்ளி எங்கள் வாழ்வுரிமை பறிக்கப்படுவது எந்த விதத்தில் நியாயம்?
    ஏற்கனவே, பொருளாதார தடை என்பதால் பொருட்களுக்கு தட்டுப்பாடு. அதனால் உள்ளூர் உற்பத்திகளுக்கும் விலையேற்றம், பொருட்களுக்கான போட்டி என்று வழக்கமான அக்கப்போரும் இருந்தது. இருந்தாலும் இலங்கை அரசு வீசியெறிந்த அரிசிப்பருக்கைகளை ரேஷன் என்ற முறையில் பொறுக்கி, பொங்கித்தின்றுதான் உயிர் வளர்க்க வேண்டிய சூழ்நிலையிலிருந்தோம்.”

    வரி அனைத்துத் துறையிலும் காணப்படுகின்றது. புலிகளின் எல்லைகளைத் தாண்டி வரும் ஒவ்வொரு பொருளுக்கும் வரி அறவிடப்படுகின்றது. மறைமுக வரி பரந்த தளத்தில் காணப்படுகின்றது. வர்த்தக ரீதியாக முஸ்லீம் மக்களின் ஆதிக்கத்தை ஒழித்துக் கட்டவேண்டும் என்ற சிறப்பு பிரச்சாரத்தைக் கூட புலிகள் செய்கின்றனர்.

    http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3399:2008-08-29-20-46-55&catid=72:0406&Itemid=76

    • உலகில் உள்ள எல்லா கொரில்லாக் குழுக்களும் தமது ஆதிக்கம் செய்யும் பகுதியில் வரி வசூல் செய்கின்றன. இந்தியாவிலும், நேபாளிலும் மாவோயிஸ்ட் கட்சியினரும் இப்படித்தான் வரி வசூல் செய்து தமது நிதியாதாரங்களை திரட்டுகின்றனர். இப்படி வரி வசூலிக்காத ஒரு தூய இயக்கத்தை உலக வரலாற்றில் எங்காவது காட்டமுடியுமா இரயாகரன் அவர்களே?

  8. ரதி உங்களிடம் ஒரு குறிப்பான கேள்வி. சொந்த நாட்டை உறவுகளை விட்டு இன்னொரு தேசத்துக்கு அகதியாக பயணப்பட்டவர்களுக்கு அந்த நாள் திகதி நேரம் ஈறாக அன்றைய தினத்தில் நடந்தவைகள் அனைத்துமே பசுமரத்தாணி போல நினைவில் பதிந்துவிடும் என்பதை மறுக்கமுடியாது.
    இது எனக்கு உங்களுக்கு எல்லாருக்கும் பொருந்தும். நீங்கள் எப்போது இலங்கையை விட்டு அகதியாக இந்தியாவுக்கு அல்லது கனடாவுக்கு புறப்பட்டீர்கள் ?

    • நண்பர் sri

      உங்களிடம் குறிப்பாக ஒரு கேள்வி. பிரெஞ்சு நாட்டில் தாங்கள் எத்தனை ஆண்டுகளாக வாழ்கீறீர்கள் என்பதை சொல்ல முடியுமா? இத்தனை ஆண்டுகளில் எத்தனை புலி ஆதரவாளர்களை மாற்றியிருக்கீறீர்கள் என்பதை விளக்க முடியுமா? முந்தைய விவாதத்தில் பாசிசத்திற்கெதிராக முப்பது ஆண்டுகளாக போராடியதாக சொல்லியிருந்தீர்கள். அந்த சாதனை வரலாற்றில் என்னென்ன தியாகம் செய்தீர்கள், எத்தனை குடும்ப உறுப்பினர்களை இழந்தீர்கள், என்ன சாதித்தீர்கள் என்பதை கூற முடியுமா? இதெல்லாம் மறக்காமல் பசுமரத்தாணி போல மனதில் இருக்கும் என நினைக்கிறேன். பதிலுக்கு காத்திருக்கிறேன்.

      காளமேகம்

  9. எச்சூச்மீ ஜென்டில்மேன், நம்ம வறட்டுவாத பாசிச உளவாளி மென்டல் Tecan அண்ணனை இன்னோமும் காணுமே? ஜந்தேகமா கீதே…வினவு ஒரு வேள ஆப்பு வச்சிட்டாங்களோ… அடடா… கழுத்து வரைக்கும் கருத்த(?) வச்சிகினு அத சொல்லவும் முடியாம முழுங்கவும் முடியாம மூல வியாதி வந்த மேதிரி இருக்குமே …அத பாக்க கொடுத்து வக்கலயே…சொக்கா சொக்கா

  10. காளமேகம்…சபாசு! ..காமாலை கண் மஞ்சா பெயின்டுக்கு நடுவுல சிலு சிலுன்னு பச்ச கலர எட்து ஊத்துன மேரி ஜில்லுனு கீது… காம்பஸ் வச்சு ரவுண்டு கட்ட சொல்லவே நடுவு நெலம மேக்கப்ப ஆசிட் ஊத்தி கயுவினது…Excellent

      • இப்போ தாம்பா மொதோ தபா மிஷ்டர் எலக்கியவாதி நம்பள கண்டுகுனு ஆவாஜ் குட்துகிறாரு. 🙂

      • இல்லை கேள்விக்குறி. முதலிலிருந்தேதான் கவனித்து வருகிறேன். தொடருங்கள்….

  11. முந்தைய சர்ச்சைகளின் பாதிப்பு சிறிதும் இன்றி மிகவும் நிதானித்து இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. கண்ணீரின் ஈரம் ஒவ்வொரு வார்த்தையிலும் படிந்துள்ளது. ரதி இந்தக் கட்டுரையில் எந்த வலுவான அரசியலையும் முன் வைப்பதாகத் தெரியவில்லை. தமிழஅரங்கம் ஒரு அரசியல் முகம் கொடுத்து எதிர் கருத்தாடுவது புரியவில்லை. அவருடைய குறுக்கீடுகள் அவருடைய அரசியல் முதிர்ச்சிக்கும், வயதுக்கும் தகுதியானதா என்பதை அவரே பரிசீலிக்கட்டும்.

  12. தமிழகத்தில் ஈழத்தமிழர்களின் அவலங்கள் பற்றி யாரேனும் பேசினால் உடனே இங்குள்ள காங்கிரஸ்காரர்கள் புலிகள் பெயரை சொல்லி அதை தடுப்பார்கள். அதையேதான் இங்கு இரயாகரன் அவர்களும் செய்துகொண்டிருக்கிறார். பொதுவாக இப்படிச் செய்பவர்களுக்கு கண்டிப்பாக ஒரு உள்நோக்கம் இருக்கும். இனவெறி சிங்கள அரசும் இப்படித்தான் ஈழத்தமிழர்கள் அவலங்களை யாரேனும் வெளிக்கொண்டு வந்தால் அவர்களை பயங்கரவாதிகள் என்றும் பயங்கரவாதிகளுக்கு துணை போகிறார்கள் என்றும் சொல்லி அவர்களுக்கு சிறைத்தண்டனையும் கொலை மிரட்டல்களும் கொடுத்து வருகிறது.

    தோழமையுடன்,

    செந்தில்.

    • காங்கிரஸ் இரயாகரன் மகிந்த மூவரையும் எப்படி ஒரே நேர்கோட்டில் இணைக்கிறீர்கள்? இரயாவின் உள்நோக்கம் என்ன என்று விளக்குவீர்களா

      • மூவருமே புலிகளை வெறுப்பவர்கள். மூவருமே ஈழப் போராட்டத்தை புலிகள் ஊடாகவே பார்ப்பவர்கள் (அல்லது அவர்களை முன்னிறுத்தி மற்ற அவலங்களை மறைப்பவர்கள்). இதில் இராயகரன் அவர்கள் மட்டும் ஈழப் பிரச்சனையில் 90 சதவிகிதம் புலிகளை திட்டுவார், 10 சதவிகிதம் இனவெறி சிங்கள அரசை திட்டுவார். மற்றபடி பெரிய வேறுபாடில்லை.

        தோழமையுடன்,

        செந்தில்.

  13. பொருளாதாரத் தடையில் ஈழத்து வாழ்க்கை !…

    சிங்களப் படைகள் குண்டுகளை எங்கள் தலைகள் மீது போட்டு எங்களை கொன்றார்கள். அதோடு சேர்த்து, பொருளாதார தடை கூட ஓர் கருவியாக, ஆயுதமாக எங்களின் உயிரை குடித்தது. https://www.vinavu.com/2009/09/12/eelam-rathi-4/trackback/

  14. ஈழ மக்களின் அவல நிலைக்கு விடுதலைப்புலிகளின் பாசிச செயல்களும் ஒரு காரணிதான்.

  15. சிறீ என்பவரின் கேள்விக்கு கட்டுரையாளர் ரதி அவர்கள் ஏன் இன்னும் பதில் தரவில்லை? 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க