Tuesday, December 10, 2024
முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்நூல் அறிமுகம்: தெலுங்கானாப் போரில் தீரமிகு பெண்கள்!

நூல் அறிமுகம்: தெலுங்கானாப் போரில் தீரமிகு பெண்கள்!

-

தெலுங்கானா

பெண் என்றால் ? வம்பு பேசுவாள், வாயாடுவாள், ஜாடை பேசுவாள், இல்லையென்றால் மாமியார், மருமகள், நாத்தனார், கணவன் என அணி பிரித்துக் கொண்டு தங்களுக்குள்ளாகவே ஒரு தர்மயுத்தத்தை நடத்திப் போராடுவாள்’. இன்னும் புத்திசாலிப் பெண்ணோ மத்தியான மகளிர் மட்டும் தொடரில் வந்து எம்பிராய்டு பின்னிக் காட்டுவாள். எப்படி வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்கலாம் என்று விபரம் சொல்வாள்.அனைத்துக்கும் மேலே கள்ள உறவுக்கு பொறி பறக்க வசனம் பேசி புரட்சியே?’ செய்வாள்.. இப்படித்தான் தொலைக்காட்சிகளும், சினிமாக்களும் பெண்களை தமது வர்த்தக வட்டத்துக்குள் சுழல விட்டுக் காட்டுகின்றன.

ஆனால் தெலுங்கானாவின் உழைக்கும் வர்க்கத்துப் பெண்களோ எமது பேரழகும் ஆளுமையும் சமூக உணர்வில் வெளிப்படுகின்றதுஎன்று இரத்தசாட்சியாக நம்முன் வந்து உரக்கப் பேசுகிறார்கள். அவ்வாறு நடைமுறையில் வாழ்ந்த தெலுங்கானா பகுதி பெண்களின் வகை மாதிரியாக ஏழு பெண்களின் வாழ்க்கைக் கதையை நம்முன் நடத்திக் காட்டி, நமது வாழ்வின் அற்பக்கண்ணோட்டங்களைத் தகர்த்து எறிகின்றது ஒரு புத்தகம். அந்தப் புத்தகத்தின் பெயர் தெலுங்கானாப் போரில் தீரமிகு பெண்கள்”.

அளப்பரிய வீரமும், தியாகமும் ததும்பி நிற்கும் தெலுங்கானாவில் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ் மக்கள் அணிதிரண்டனர். நிலப்பிரபுக்களின் கேட்பாரற்ற கொடிய சுரண்டல், போலீசு இராணுவத்தின் அடக்குமுறைகள் படுகொலைகள் இவைகளைக் கண்டு பயப்படாமல், பணியாமல் நிலத்துக்காகவும், தங்கள் விடுதலைக்காகவும், அதிகாரத்திற்காகவும் ஆர்த்தெழுந்தது தெலுங்கானா. திருப்பித் தாக்கி திமிறி எழுந்த தெலுங்கானாவின் பெண்களில் ஒருவர்தான் இந்த நூலில் முதலில் நமக்கு அறிமுகமாகும் பண்டி ராஜக்கா. போராளிகளுக்கு சோளக்கதிரை சுமந்து சென்றபோது வழியிலேயே போலீசும், இராணுவமும் நிலப்பிரபுவின் ஆட்களோடு சேர்ந்துகொண்டு அவளைப் பிடித்து சித்திரவதை செய்கின்றார்கள். உதைத்தால் போராட்ட விபரங்களையும் கட்சி இரகசியங்களையும் காட்டிக்கொடுத்து விடுவாள் என்பது அவர்களது கணக்கு.

மேலும் பெண்தானே ! இரகசியம் காக்க மாட்டாள். கற்பழிப்பு வரை சென்றால் பயந்து விசயத்தை வெளியிடுவாள் என்று அந்தக் கயவர்கள் கடைசி எல்லை வரைக்கும் போனாலும் அவள் உடம்பிலிருந்து இரத்தத்தைத்தான் கறக்க முடிந்ததே ஒழிய, மக்கள் விடுதலைக்காகப் போராடும் கட்சியின் திட்டங்களைப் பற்றி ஒரு வார்த்தை கூடப் பெற முடியவில்லை.

ஆணாதிக்கத் திமிரோடு அந்த அயோக்கியர்கள் அந்தப் பெண்ணின் மேல் உடல்வதையில் மட்டுமல்ல, சொல்வதையிலும் இறங்கினார்கள். நிலப்பிரபுத்துவத்தின் எந்த அடக்குமுறைக்கும் பணியவில்லை பண்டி ராஜக்கா. பொதுவாழ்க்கைக்கு வந்து கட்சி, அரசியல் என்று செயல்படப் போனால் ஒரு பெண்ணின் ஒழுக்கத்துக்கே கேடு வந்து சேரும் என்று எக்கச்சக்கமாக யோசிக்கின்ற நடுத்தரவர்க்க மனநிலையாளர்கள் மத்தியில் பெண்டல பாடு என்ற சாதாரண கிராமத்துப் பெண்ணான ராஜக்கா எதிரிகளின் வதைமுகாமில் நேருக்குநேர் வாதம் செய்யும் துணிச்சலை நீங்களே பாருங்கள்.

என்னடி தேவடியா ? இனியாவது சொல்றியா ?” என்று போலீசு இன்ஸ்பெக்டர் அதட்டினான்.

என்ன சொல்லச் சொல்றீங்க ?” என்று கேட்டாள் அவள்.

உன்னோட ஆம்படயான்கள் சங்கதிதான்என்று தாஸ் என்கிற ஜமீன்தார் எகத்தாளமாகக் கூறினான்.

“.. .. அவ சும்மாவே சொல்லுவாளா சார் ? போட்டு நொறுக்குங்க ! பாருங்களேன் எவ்வளவு சதை போட்டிருக்கா ? இவளுக்குப் போராட்டக் குழுவில் பத்துப்பேர் ஆம்படையான்களாம் !என்று கூறி, ஜமீன்தார் தூண்டி விட்டான். (நூல்: பக்.7)

நடத்தையைக் கேள்விக்குள்ளாக்கினால் ஓவென்று அழுது தங்கள் வழிக்கு வந்து விடுவாள் என்ற அவர்களின் சம்பிரதாயமான கலாச்சாரத்தின் முகத்தில் காறித்துப்பும்படி முன்னை விடத் தீவிரமாகப் பேசினாள்.

ஒழுக்கமே இல்லாத நீ என்னை அவதூறு பேசறியா ? நீ பிழைக்கிற பிழைப்பு ஒழுக்கங்கெட்ட பிழைப்பு ! திங்கறதெல்லாம் இரத்தச்சோறு ! உன்னையும் உன் குடும்பத்தையும் யாருக்குத்தான் தெரியாது ? அப்படிப்பட்ட நீ, என்னைப்பத்தி அவதூறு பேசறியா ?” (நூல்: பக்.8).

ஒரு பெண் தனது குடும்ப நலனுக்காக வாழ்வதையும், கணவனது விருப்பப்படி இருப்பதே குடும்ப லட்சணம் என்று அவன் விருப்பப்படி தாசி வீட்டுக்குத் தூக்கிச் சென்றதை இலக்கியமாகப் புராணமாகப் பேசும் இந்த நாட்டில் தான் பாலியல் வன்முறைக்கு உள்ளாகும்போதும் தனது சமூகத்தின் மக்களுக்காக அனைத்து இன்னல்களையும் எதிர்கொண்டு சமூக உணர்வுடன் ஒரு பெண்ணால் போராட முடியும் என்பதை நடைமுறை சாத்தியமாக்கிக் காட்டுகிறாள் ராஜக்கா.அது மட்டுமல்ல.

பாவிகளா ! உங்களிடம் உள்ள மிருகத்தனத்தை எல்லாம் காட்டிடுங்க ! ஆனா நான் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் துரோகம் மட்டும் செய்வேன்னு நினைக்காதீங்க ! போராட்டக் குழுக்களுக்கு நான் துரோகம் செய்ய மாட்டேன். நான் கட்சியிலே கத்துக் கொண்டது துரோகத்தை அல்ல. கொடுமைகளையும் அநியாயங்களையும் உயிரையும் பொருட்படுத்தாம எதிர்க்கிறதைத்தான் நான் கட்சியிலே கற்றுக் கொண்டேன்..

படிப்பும், தோழமையும், சமத்துவமும் கத்துக்கிட்டேன். உங்களையும் உங்களது கொடுமைகளையும் ஒருநாள் போராளிகள் கோதாவரி நதியிலே மூழ்கடிக்கத்தான் போறாங்க.. நான் உங்களுக்கு அடிபணிய மாட்டேன். கம்யூனிஸ்ட் கட்சிக்குத் துரோகம் செய்ய மாட்டேன்.என்று ஆவேசமாகக் கூறினாள் அவள். (நூல்: பக்.9)

இப்போதென்ன புரட்சியா வந்துவிட்டது ? வரும்போது நானும் மாறிக் கொள்கிறேன். அதுவரைக்கும் ஊரோடு ஒத்துப்போவதுதான் புத்திசாலித்தனம் என்று அநீதிக்கெதிராக சமரசமாக வாழ்வதையே சாமர்த்தியமாக வெளிப்படுத்துபவர்களின் மனப்போக்கை பண்டி ராஜக்காவின் இலட்சிய உறுதி இடித்துறைக்கிறது. கணவனுக்கு மனைவி துரோகம், மனைவிக்கு கணவன் துரோகம், குடும்பத்திற்கு மகன் துரோகம் என்பதே வாழும் கலையாக வளர்ந்து வரும் இந்த சமூகத்தில் கட்சிக்குத் துரோகம் செய்வதையே ஆகக் கேவலமாகக் கருதும் ராஜக்காவின் சமூக உணர்வு புதிய கலாச்சார விழுமியங்களையும் நம்முன் படைத்துக் காட்டுகிறது.

மகிழ்ச்சியான குடும்பம், அன்பான கணவன், ஆசையோடு பார்க்கின்ற அம்மா, அப்பா, தங்கையை விட்டுவிட்டு கட்சிக்காக போலீசிடம் சிக்கி.. அவமானப்பட்டு.. இது உனக்குத் தேவையா ?” என்று எவ்வளவோ நைச்சியமாகப் பேசியும், ராஜக்காளிடம் சராசரிப் பெண் உணர்வை விடக் கட்சியின் இலட்சிய உணர்வே மேலோங்கி இருப்பதை நேருக்கு நேர் பார்த்து வெறுத்துப் போன போலீசும், இராணுவமும் அவளைப் பன்னிரெண்டு நாட்கள் வதைமுகாமிலே வைத்து பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியும், இரவு முழுக்க ஏரித்தண்ணீரில் நிர்வாணமாக நிற்க வைத்தும் துன்புறுத்தினார்கள். ராஜக்காவின் போர்க்குணமோ எதிரிகளின் அதிகாரத்தை நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்தியதே ஒழிய மக்களுக்காகப் போராடும் அவளது நெஞ்சுறுதி இறுதி வரை தோற்கவே இல்லை.

எல்லா சித்திரவதைகளையும் கடந்து அவள் ஊருக்கு வரும்போது போலி கம்யூனிஸ்டுகளோ போராட்டத்தைக் காட்டிக் கொடுத்து ஆளும்வர்க்கத்தோடு சமரசமாகி தேர்தலில் பங்கெடுக்கப் போகின்றனர். கொள்கைக்குத் துரோகமிழைத்தவர்களைப் பார்த்து மனம் கசந்து போய் விடுகிறாள் ராஜக்கா. எதிரிகளிடம் அவள் பட்ட சித்திரவதையை விலாவாரியாக விவரித்த நூலாசிரியர் போராட்டத்தின் துரோகிகளால் அவள்பட்ட மனத்துயரை விவரிப்பதற்கு மனமின்றி ராஜக்காவின் வருத்தத்தை ஒரு சுமாரான தொனியில் பதிவு செய்துவிட்டு, போலிக் கம்யூனிஸ்டுகளுக்கே உரிய சரிக்கட்டும்நுணுக்கத்தோடு எந்த பரிசீலனையும் இன்றி கதையை முடிக்கிறார்.

ராஜக்காவின் வாழ்க்கைக் கதையில் இந்த இடத்தின் மூலம் போலிக் கம்யூனிஸ்டுகளையும் அவள் அம்பலப்படுத்தி விடுகின்றாள். இப்படி ராஜக்கா என்ற ஒரு பெண் மட்டுமல்ல, ரங்காபுரம் என்ற கிராமத்தில் வாழ்ந்த வெர்ரம்மா என்ற பெண்ணின் வழியாக அந்த வீட்டில் உள்ள வயதான மூதாட்டி உட்பட எப்படி மெல்ல மெல்ல போராட்டக் குழுவுக்கு ஆதரவாக தங்களது வாழ்க்கையை மாற்றிக் கொள்கிறார்கள் என்பதையெல்லாம் எதார்த்தமாக அறிய முடிகின்றது. வீட்டுக்கு போலீசு வந்தாலே, குடும்ப கவுரவம் போச்சு ! நமக்கு இந்த புரட்சி அரசியல்லாம் வீண் வம்பு என்ற மதிப்பீட்டின் படி வாழச் சொல்லும் ராகவம்மா பாட்டியிடம், சீதாராமையா பேசும் வார்த்தைகள் பாட்டியை ஒத்த கருத்துடைய அனைவருக்கும் பதிலாக அமைகிறது. மக்கள், விவசாய சங்கத்தையும் கம்யூனிஸ்ட் கட்சியையும் அமைத்து கொடுமைகளை எதிர்த்துகிட்டு இருக்காங்க ! நாமும் அவங்களுக்கு துணையா நிற்போம். அவங்களோடேயே இன்ப துன்பங்களை அனுபவிப்போம். இதுதான் நம்ம குடும்பத்துக்கும் வம்சத்துக்கும் மதிப்பு தரும் ! ஊரோட ஒட்டித்தான் நாம் போகணும்என்று கூறினான் சீதாராமய்யா. (நூல்: பக்.34)

போராட்டக் குழுக்களுக்கு உதவி செய்வதிலும், கம்யூனிச லட்சியங்களை குடும்பப் பண்பாகக் கருதி செயல்படுவதிலும் தன்னிகரற்று விளங்கிய பெண்களில் நடிகட்டா கிராமத்தின் சலவைத் தொழிலாளியான லச்சம்மாவும் ஒருவர். லச்சம்மா போராட்டக்குழு தோழர்களுடன் தொடர்பு வைத்திருப்பதை அறிந்து போலீசு பட்டாளம் அவளை ஊருக்கு மத்தியில் நிர்வாணப்படுத்தி, தலைகீழே மரத்தில் தொங்கவிட்டு அடிக்கிறது. போராட்டக்குழுத் தோழர்கள் எங்கிருக்கிறார்கள்.. காட்டிக்கொடுஎன்று எவ்வளவோ கேவலமாக வைதும், அடித்தும் லச்சம்மாவோ மானத்தினும் பெரிதாக மக்களுக்காகப் போராடும் கட்சித் தோழர்களைப் பற்றி ஒரு வார்த்தையும் கூற மறுக்கிறாள். படிக்காத அந்த சலவைத் தொழிலாளி பட்ட சித்திரவதைகளை அறிந்து பார்க்க வரும் போராட்டக் குழுவைச் சேர்ந்த ராமுலம்மாவின் ஆறுதலுக்கு லச்சம்மாவின் பதிலைப் பாருங்கள். அதென்னம்மா ! அப்படிச் சொல்றே ! எனக்கு அவமானம் நேர்ந்தா, உங்களை ஏசுவானேன் ? என் ஒருத்திக்கு மட்டுமா, அவமானங்களும் கஷ்டங்களும் ? இந்த பாழாய்ப் போன அரசாங்கத்தாலே எல்லோருக்கும்தான் கஷ்டங்களும், அவமானங்களும் ? ..” (நூல்: பக்.75)

தனக்கு மிஞ்சிதான் தானமும் தர்மமும்,.. புரட்சியும் போராட்டமும்என்று புத்திசாலித்தனமாகப் பேசும் படித்த வர்க்கத்தின் சுயநலத்தை இந்த இடத்தில் வெளுத்து வாங்கும் சலவைக்காரியாக உயர்ந்து நிற்கிறாள் லச்சம்மா. இதேபோல நரசம்பேட்டையை சேர்ந்த மல்லிகாம்பா, வாரங்கல் மத்திய சிறையில் அடக்குமுறைக்கு எதிராக உயிர்நீத்த ராம் பாயம்மா, சூர்யாபேட்டையைச் சேர்ந்த சிவம்மா, ஜனகாம் வட்டாரத்தைச் சேர்ந்த அகிலம்மா, .. இப்படி ஒவ்வொரு பெண்களும் வெவ்வேறு வகையில் தெலுங்கானா மக்கள் போராட்டத்தோடு தங்கள் வாழ்க்கையை இணைத்துக் கொண்டதை நமக்கு அறிமுகப்படுத்துகிறது என்ற வகையில் இந்நூலாசிரியரின் உழைப்பு வரவேற்கத் தகுந்ததாக உள்ளது. அதேவேளையில் தெலுங்கானாப் போராட்டத்தில் பங்கேற்ற தீரமிகு பெண்களின் போராட்ட மரபை, சீரழிந்து போன போலிக் கம்யூனிஸ்டுகள் தங்களுடையது எனப் பீற்றிக் கொள்வதற்கு எந்த நியாமும் இல்லை. ஏன் இப்படி எங்கள் கம்யூனிச லட்சியத்தை சீரழித்தீர்கள் ?” என்று தெலுங்கானாப் போரின் பெண்களின் வாரிசுகளாய் நாம் கேள்வி கேட்பதற்கான நியாயத்தை இந்நூல் வழங்குகிறது.

அறிந்தோ, அறியாமலோ இதற்கு உதவி செய்வதற்காக இந்நூலாசிரியரை நாம் பாராட்டலாம். தேர்தல் பாதைக்கு இழுத்துப் போய் தெலுங்கானாவின் இறுதி லட்சியத்தை மூழ்கடித்து விட்டோம் என்ற கனவில் மிதக்கும் போலிக் கம்யூனிஸ்டுகளின் கண்களை உறுத்தும்படி மேற்கு வங்கத்தின் நந்திகிராமிலும், லால்கரிலும் தெலுங்கானாப் போரின் தீரமிகு பெண்கள் மீண்டும் எழுந்து நிற்கிறார்கள்.இப்படி எல்லா இன்னல்களையும் எதிர்த்துப் போராடும் மனவலிமை ஒரு பெண்ணுக்கு எங்கிருந்து வந்தது என்று நீங்கள் கேட்டால், பண்டி ரமாக்காவும், லச்சம்மாவும், ராம் பாயம்மாவும் எங்களது வலிமை சமூக உணர்வில், கம்யூனிச சித்தாந்தத்தில் இருக்கிறது என்கிறார்கள் அழுத்தமாக. இது சாத்தியமா ? என்பவர்கள் அவர்களுடனேயே விவாதிக்க இந்தப் புத்தகத்திற்குள் செல்லுங்கள்.

  • நூலின் பெயர்: தெலுங்கானாப் போரில் தீரமிகு பெண்கள்
  • ஆசிரியரின் பெயர்: எம்.ஏ. பழனியப்பன்
  • விலை: ரூ. 50.00
  • வெளியீடு: அறிவுப் பதிப்பகம், சென்னை-14.
  • கிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, அவுலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002. பேச: 044-2841 2367.

______________________________________________________

-புதிய கலாச்சாரம், ஆகஸ்ட்டு’2009
______________________________________________________

  1. ஒவ்வொருவரும் சுயவிமர்சனம் செய்து கொள்ளலாம் இதை படித்த பிறகு. ஆம் நாம் எங்கிருக்கிறோம், என்ன செய்து கொண்டிருக்கிறோம் என.

  2. இந்த கட்டுரையை பிரசுரம் செய்வதற்கு முன்னர் தெலுங்கானா போராட்ட வரலாற்றை பற்றிய ஒரு சிறு குறிப்பாவது எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதுவும் இப்போது வேறு தனித் தெலுங்கானா போராட்டம் நடக்கிறது.

  3. நடிகை நடிகையின் நாய் குட்டியின் பெயர் இவைகளை மட்டும் கற்று கொடுக்கும் ஜனரஞ்சக பத்திரிக்கை இதனால் ஆபத்து இல்லை என்பதால் அதற்கு ஒத்து ஊதும் அரசு இவைகளுக்கு மத்தியில் இது போன்ற சிறந்த முன்மாதிரி சகோதரிகளை நாங்கள் தெரிந்துக்கொள்ள உங்களின் முயற்சிகளுக்கு நன்றி

  4. பெண்கள் குடும்பத்தை விடுத்தது, சமூகத்தின் மேல் அக்கறையாய் இருப்பது ஆச்சரியமே, பாரடதக்கதும் கூட…! எடுத்துரைத்தமைக்கு நன்றி புதிய ஜன நாயகம்..!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க