privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்அவலத்தினாலான பெண்வாழ்வு மீள்வது எப்போது? - தீபா

அவலத்தினாலான பெண்வாழ்வு மீள்வது எப்போது? – தீபா

-

உழைக்கும் மகளிர் தினச் சிறப்புக் கட்டுரை – 4

பெண்கள் தினத்தை ஒட்டி என்னையும் கட்டுரை எழுத அழைத்திருக்கும் வினவுத் தோழர்களுக்கு என் நன்றி.

பெண்ண‌டிமைத்த‌ன‌ம், பெண் விடுத‌லை போன்ற‌ சொற்றொட‌ர்க‌ளைச் சிறு வ‌ய‌தில் அறிந்த‌ போது அவை எல்லாம் ஏதோ பெரிய‌ம்மை, ப்ளேக் நோய் போன்ற‌ பெருவியாதிக‌ள்; அவை இக்கால‌த்தில் முற்றாக‌ அழிக்க‌ப்ப‌ட்டு விட்ட‌ன; அதைப்ப‌ற்றியெல்லாம் க‌வ‌லைப்பட‌வே தேவையில்லாத‌ கால‌த்தில் வாழ்வ‌தாக‌ ந‌ம்பினேன். ப‌தின்ம‌ வ‌ய‌தில் முத‌ல் முத‌லாக‌க் க‌ண் திற‌ந்து என் தாயின் வாழ்க்கையையும், மாமியின் வாழ்க்கையையும் உற்றுப் பார்க்கும் வரை.

அவர்கள் என்னதான் மறுத்தாலும், தங்கள் வாழ்க்கைக்குச் சப்பைக்கட்டு கட்டினாலும், அவ‌ர்க‌ளின் ஆத‌ர்ச‌ க‌ண‌வ‌ரான‌ என் த‌ந்தை என்கிற‌ ஆல‌ம‌ர‌த்தின் நிழ‌லில் வெளுத்துச் சாம்பிய‌ செடிகள் என்றுதான்
தோன்றும்.

ஆண்தான் உய‌ர்ந்த‌வன்; பெண் அவ‌னுக்கு அடுத்த‌ ப‌டிதான் என்ற ந‌ம்பிக்கை என‌க்கும் அக்காவுக்கும் சிறுவய‌து முத‌லே ஊட்ட‌ப்ப‌ட்ட‌து. வீட்டில் அப்பா, தாத்தா ஆகியோரை ‘நீங்க‌ வாங்க’ என்று மரியாதையாகவும், அம்மா, பாட்டியை ‘நீ வா’ என்று ஒருமையிலும் விளிப்போம்.

என‌க்கும் என் அண்ண‌னுக்கும் சின்ன‌ வ‌ய‌தில் ஆகாது. சண்டை போட்டுக் கொண்டே இருப்போம்; போட்டியும் இருக்கும். அவ‌னோடு போட்டியிடுவ‌த‌ற்கே என‌க்குத் த‌குதியில்லை என்று என் ம‌ண்டையில் அடிக்க‌ப்பட்ட‌து என் ப‌தின்ம‌ வ‌ய‌தில். “அண்ண‌ன் சாப்பிட்ட‌வுட‌ன் அவ‌ன் த‌ட்டையும் சேர்த்து எடுத்துட்டுப் போ!” என்றார் அம்மா. அப்போது அவ‌னுட‌ன் எனக்கு ஏதோ சண்டை. ஆம்பளை த‌ட்டெடுக்க‌க் கூடாது, துடைப்ப‌த்தை எடுக்கக்கூடாது என்று காரணம் வேறு. நான் அதைச் செய்த போது என் மனம் வெதும்பியதும் அவன் கொக்கரித்ததும் இன்னும் நினைவில் இருக்கிறது.

திரும‌ண‌த்துக்குப் பின், ச‌மைக்க‌த் தெரியுமா என்று கேட்ட கணவனை அச‌த்த‌ வேண்டும், பாராட்டு ம‌ழையில் ந‌னைய‌ வேண்டும் என்று சில நாள் வ‌ரிந்து க‌ட்டிக் கொண்டு ச‌மைத்தேன்.  என்றைக்கு அது என் வேலைதான் என்று Taken for granted ஆன‌து என்றே புரிப‌டவில்லை. (திடீரென்று ஒரு நாள்  தான் மூளையில் அந்த பல்பு எரிந்தது!) அதற்கப்புறம் எனக்கு அதில் முன்பிருந்த ஈடுபாடு இல்லை. (இல்லை என்பதால் லேசான குற்ற உணர்வுதான் இருக்கிறது!)

தனிப்பட்ட முறையில் யோசித்தால், இதெல்லாம் ஒரு குறையா? வ‌ர‌த‌ட்ச‌ணை கொடுமை, மாமியார் கொடுமைன்னு நாட்ல‌ எத்த‌னை பெண்க‌ள் எவ்வ‌ள‌வு க‌ஷ்ட‌ப்ப‌டுகிறார்க‌ள். அவ‌ர்க‌ளை எல்லாம் பார்த்தால் ந‌ம‌க்கென்ன‌ குறை என்றும் தோன்றுகிற‌து.

இந்த‌க் குறுகிய‌ ம‌ன‌ப்பான்மைதான், ஒப்பிட்டுப் பார்த்துத் தன்னளவில் மட்டும் திருப்தியோ ஆத‌ங்க‌மோ அடையும் ம‌ன‌ப்பான்மையாலும்தான் பெண்க‌ளுக்குப் பொருளாதார‌ச் சுத‌ந்திர‌ம் அடைந்திருந்தாலும் இன்னும் முழுச்சுத‌ந்திர‌ம் கிடைக்க‌வில்லை என்று நினைக்கிறேன். இத‌ற்கு இன்னும் ப‌ல‌ கார‌ண‌ங்க‌ள் இருக்கலாம்.

தோன்றுவதில் சில:

முதலாவது, ப‌யம்; குடும்பம் சமூகம் மீதுள்ள அளவற்ற பயம். குடும்ப‌த்தில் எல்லாரையும் அனுச‌ரித்துப் போக‌வேண்டும் என்று நமக்குக் க‌ற்றுத் த‌ர‌ப்ப‌ட்டிருக்கிறது. இன்னும் ந‌ம் நாட்டைப் பொறுத்த‌வ‌ரை பெண் என்ப‌வ‌ள் ஆணை ம‌ட்டும‌ல்ல‌,அவ‌ன் குடும்ப‌த்தையும் சேர்த்தே திரும‌ணம் செய்து கொள்கிறாள்.

அதனால்தான்: நண்பனாக, காதலனாக இருந்த போதெல்லாம் ‘டா’ போட்டுப் பேசியவனைத் திருமணமானதும் கஷ்டப்பட்டு ‘நீங்க’ என்று பேசியாக வேண்டிய கட்டாயம், அதற்கு மறுக்கும் மறு நொடியே அவன் தன் கணவன் முகத்தைக் காட்டி “இப்போது மரியாதையில் அழைக்கச் ச‌ம்ம‌த‌மா, நான் இனி உன் ந‌ண்ப‌ன் இல்லை” என்ப‌து போல் ந‌ட‌ந்து கொள்வ‌தும் ந‌ட‌க்கிறது.

மாம‌னார் பூர்விக வீட்டை விட்டு வரமாட்டார் என்ப‌த‌ற்காக, அலுவ‌ல‌க‌த்துக்கு அருகில் வீடு மாற்றிக் கொள்ளாம‌ல், தின‌மும் நான்கு ம‌ணிக்கு எழுந்து, எல்லோரும் எழுந்திருக்கும் முன் வீட்டு வேலைகளை முடித்து, ச‌மைய‌ல் செய்து கணவனுக்குக் கட்டி வைத்து, தனக்கும் எடுத்துக்கொண்டு முப்பத்தைந்து கிலோமீட்ட‌ர் ப‌ஸ்ஸிலும் ஷேர் ஆட்டோவிலும் ப‌ய‌ணம் செய்து அலுவ‌லக‌த்துக்கு வ‌ந்து தூங்கி விழும் புதும‌ண‌ப்பெண்க‌ள் இருக்கிறார்கள்.

எவ்வளவு தான் படித்தாலும் உயர்பதவியில் இருந்தாலும் ஜோசியம் ஜாதகம் போன்ற அழுக்குகளை விட்டொழிக்க முடியாமல் தொங்கிக் கொண்டிருப்பதனால்தான்: காத‌லித்துத் திரும‌ண‌ம் செய்து கொண்ட‌வ‌ன், ஆண்மைய‌ற்ற‌வ‌ன் என்று மருத்துவரீதியாகத் தெரிந்த பின்னும், ஜோசிய‌ர் அடித்துச் சொல்லி இருக்கிறார் என்ற நம்பிக்கையில், இல்லறம் ஆரம்பிக்கும், குழ‌ந்தைப் பேறுவ‌ரும் என்று ஆண்டுக்கணக்கில் க‌ன்னித் த‌வ‌ம் புரிந்து கொண்டு கணவன் வீட்டுக்குச் ச‌ம்பாதித்துக் கொட்டும் ஆஃபிஸ‌ர் பெண்க‌ள் இருக்கிறார்கள்.

ஊர் உல‌க‌ம் என்ன‌ சொல்லுமோ? குழ‌ந்தைக்குத் த‌க‌ப்ப‌ன் அவ‌ன் தானே.. என்ற‌ ம‌றுகலால்தான்: திரும‌ண‌மாகிப் ப‌த்தே மாத‌ங்க‌ளில் குழ‌ந்தையைப் பெற்று, அடுத்த ஆண்டிலேயே தொட‌ர்ந்த‌ ம‌ன‌க்க‌ச‌ப்புகளாலும் கொடுமைக‌ளாலும் பிரிந்து சென்றாலும், இன்னொரு திரும‌ண‌த்தை நினைத்தும் பார்க்க‌ முடியாம‌ல் எதிர்கால‌மே இருண்டுவிட்ட‌தாயக் க‌ண்ணீரில் நாட்க‌ளைக் க‌ரைக்கும்
பேதைக‌ள் இருக்கிறார்கள்.

கல்வி என்ப‌து ப‌ண‌ம் ச‌ம்பாதிக்க‌ ம‌ட்டுமே ப‌ய‌ன்ப‌டும் க‌ருவியாக‌ இருப்பதும் இன்னொரு முக்கிய‌ கார‌ண‌ம்.ப‌டிப்ப‌தும் வேலைக்குச் சென்று ச‌ம்பாதிப்ப‌தும் ஓர‌ள‌வு த‌ன்ன‌ம்பிக்கையைப் பெண்க‌ள் ம‌ன‌தில்
விதைத்தாலும், தங்கள் வாழ்க்கையைத் த‌ன்போக்கில் த‌ங்க‌ளுக்குப் பிடித்த‌ வ‌கையில் தீர்மானித்துக் கொள்ளும் சுத‌ந்திர‌ம் பெரும்பாலான பெண்களுக்கு இன்னும் இல்லை.

மேலும்,

சிக‌ப்ப‌ழகும், க‌ருமையான‌ நீண்ட‌ கூந்த‌லும், ச‌ம்க்கி ஒர்க் வைத்த‌ ப‌ட்டுப் புட‌வைக‌ளும்தான் உங்க‌ள‌து அத்தியாவ‌சிய‌த் தேவைகள். மிருதுவான சப்பாத்தியும், வெள்ளை வெளேரென்ற சட்டைக் காலரும், (“மிஸஸ் கிட்ட சொல்லு பிரஷ் பண்ண…ஹி ஹி!”) அப்ப‌ழுக்க‌ற்ற‌ கிச்ச‌ன் மேடைக‌ளும் உங்க‌ள் க‌ட‌மைகள்.

உங்க‌ளைப் பார்த்த‌ மாத்திர‌த்தில் ஆண்க‌ள் வாய் பிள‌ப்ப‌தும் த‌டுமாறிக் கீழே விழுவ‌தும்தான் உங்க‌ள் பெருமைக‌ள் என்று விள‌ம்ப‌ர‌ங்க‌ளும், ஊட‌க‌ங்க‌ளும் நமக்குத் தொடர்ந்து நினைவுபடுத்திக் கொண்டிருக்கும் போது வேலைக்குப் போய் வ‌ந்த‌ மிச்ச‌ நேரத்தில் இந்த டார்கெட்டுகளை அடையத்தானே உழைத்துக் கொண்டிருக்கிறோம்!

டிவியை நிறுத்தி விட்டு நிறைய படிப்போம். நிதானமாக மாற்றிச் சிந்திப்போம். மீட்டெடுப்போம் நமக்கான உலகத்தை.

பெண்ணாக‌ப் பிற‌ந்த‌த‌ற்குப் பெருமைப்ப‌டும் வித‌மாக‌, என்னைக் கவ‌ர்ந்த‌ பெண்க‌ள் அனைவ‌ருக்கும் என் ம‌ன‌மார்ந்த‌ பெண்க‌ள் தின‌ வாழ்த்துக்கள்!

–          தீபா

_________________________

தீபா
ப‌டிப்பு: க‌ட்டிட‌ப் பொறியிய‌ல்
வ‌சிப்ப‌து: சென்னையில் க‌ண‌வ‌ர் குழ‌ந்தையுட‌ன்
வேலை: த‌னியார் நிறுவ‌ன‌த்தில்
வ‌லைப்பூ ஆர‌ம்பித்த‌ நோக்க‌ம்:  முதலில் எழுதிப் ப‌ழகத்தான். ஒத்த‌ சிந்த‌னையுடைய‌ ப‌லரின் ந‌ட்பு கிடைத்த‌தும், நல்ல எழுத்துக்களை வாசிப்பதும் என்னை உயிர்ப்புட‌ன் வைத்திருக்க‌ உத‌வுகிற‌து.

தீபாவின் வலைப்பூ:http://deepaneha.blogspot.com/

______________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்