2010-ல் இசுலாமியப் பெண்கள்: மதமும் வாழ்க்கையும் !!

426
72

உழைக்கும் மகளிர் தினச் சிறப்புக் கட்டுரை – 7

வீட்ல யாரது?” கதவைத் தட்டியதும் உள்ளே கலகலவென்று கேட்டுக் கொண்டிருந்த பெண்களின் குரல்கள் கப்சிப் என அடங்கி சில வினாடிகள் அமைதியாகக் கழிந்தன.

“மீண்டும் வீடல யாரது?” என்று கேட்டதும் “யாரு?” என்று உள்ளிருந்து பதில் வினாவாக கேட்க…
“நான்தான் சாகித் வந்திருக்கிறேன். கஹாரின் இருக்காங்களா?”
“அவுங்க கடைக்கு போயிருக்காங்களே” பதிலாக பெண்குரல்.
அந்தக்குரல் எனது நண்பனுடைய துணைவியாரின் குரல் எனபது பழக்கப்பட்ட எனக்கு எளிதாக அடையாளம் தெரிந்தது.

“எப்ப வருவாங்க?”
“கொஞ்சம் நேரமாகும் என்று சொல்லிட்டுப் போனாங்க”
“அப்படியா! வந்தவுடன் நான் வந்துட்டுப் போனதாக சொல்லுங்க. அப்புறமா வர்ரேன்”
“சரி சொல்றேன்.”
கதவைத் திறக்காமலேயே உள்ளிருந்தபடியே பதில் சொன்னார் என் நண்பனின் மனைவி. அரைக்கால் ட்ரவுசரை போட்டுக் கொண்டு தெருவில் விளையாடிய போதிலிருந்தே அவன் எனக்கு நணபன்.
_____________________________________________

ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன், 1980களின் வாக்கில் தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இசுலாமியர்களின் வீடுகளுக்குச் செல்லும் ஒரு ஆடவரின் அனுபவம் இப்படியாகத்தானிருக்கும். பெரும் நகரங்களில் சற்று வேறுபாடாக கதவுகளில் மாட்டப்பட்டுள்ள பாதுகாப்புச் சங்கிலிக்கு அந்தப் பக்கமிருந்து சிறிது நீக்கப்பட்ட இடைவெளியில் பதில் கிடைக்கும். அதுவே சந்திக்கச் சென்ற நபர் வீட்டிலிருந்தால் கதவைத் திறந்து யார் என்று பார்ப்பதுக்கு முன்னே வீட்டினுள் தாராளமாக புழங்கிக் கொண்டிருந்த பெண்கள் உள் அறைகளுக்கோ அல்லது அடுப்படிப் பக்கமோ ஒதுங்கிக் கொண்ட பிறகே உற்ற நண்பராக இருந்தாலும், அந்நிய ஆண்களாக, ஓரளவு பழக்கமுள்ள உறவினர்களாக எவராக இருந்தாலும் வீட்டினுள் வரவேற்கப்படுவர். மாமா, மச்சான், சித்தப்பா என்று நெருங்கிய ஆனால் குடும்ப உறவில் அதிக தொடர்புள்ளவர்கள் மட்டுமே இதற்கு விதி விலக்கு.

உங்களின் நண்பர் உங்களை வரவேற்று உட்காரச்சொல்லி பேசிக் கொண்டிருக்கும்போது உங்களுக்காக தேனீர் தயாரிக்கச் சொல்லியிருந்ந்தால் அதனைத் தயாரித்துக் கொண்டுவரும் உங்கள் நண்பரின் துணைவியார் கதவுகளுக்குப் பின்னால் நின்றுகொண்டு “ஏங்க, டீ கொண்டு வந்திருக்கேன்” என்று சொன்னதும், உங்களின் நண்பர் சென்று தேனீர் டம்ளரை பெற்றுவந்து உங்களுக்குத் தருவார். அல்லது வீட்டில் பருவமடையாத சிறுமிகளிருந்தால் அவர்கள் எடுத்து வருவர். நண்பரின் துணைவியார் கதவுகளுக்குப் பின்னால் நின்றுகொண்டு “ நல்லா இருக்கீங்களா? ஊட்டுல எல்லோரும் நல்லா இருக்காங்களா?” என்று நலம் விசாரிப்பார். அநேகமாக அவர் பேசிய சொற்கள் அவ்வளவாகத்தானிருக்கும்.

நண்பரின் வீட்டுக்குச் செல்லும் போதெல்லாம் ஓடிவந்து “மாமா” என்று மடியில் உட்கார்ந்து கொள்ளும் அவரது மகள் பர்ஹானா பருவமடைந்து விட்டதால் தாய்க்கு அருகில் நின்று கொண்டே “மாமா” நல்லா இருக்கீங்களா? எப்பவந்தீங்க? என்று நலம் விசாரிக்கும் பண்புக்கு மாறிவிட்டாள்.
____________________________________________

பொதுவாக இசுலாமியர்கள் ஒரு சிறு நடைப்பகுதி தலைவாசலில் இருக்குமாறுதான் தங்களின் வீடுகளைக் கட்டுவர். 70, 80 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சுற்றுக்கட்டு முற்றம் உள்ள வீடுகளாக இருந்தாலும் தலைவாசல் பகுதியில் ஒரு அடைப்புச் சுவர் இருக்கும். இதுவே அந்நிய ஆடவர்களுக்கான எல்லையாக இருந்தது.

ஆனால் தான் மதிப்புமிக்க கௌரவமான குடும்ப பாரம்பரியம் கொண்டவர்கள் என தன்னைக் கருதிக் கொள்ளும் நடுத்தரவர்க்கத்தின் மத்தியில் மட்டுமே இந்தப் பண்பாடு காணப்பட்டது. இவர்களே இசுலாமிய சமுதாயத்தின் பிரதான தூண்களாகவும் இருந்தனர். சமூக குற்றச்சாட்டுக்களும், உலமாக்களின் கண்டிப்புகளும் ஒரு ஆணோ பெண்ணோ மாற்றங்களை விரும்பினாலும் தடுக்கும் சக்திகளாக இருந்தன.

உழைக்கும் பெண்களிடமும் கடைநிலையில் இருந்த அன்றாடங்காச்சி களிடமும் இந்தப் பண்பாடு வேறாகத்தானிருந்தன. வண்ணாரப்பேட்டை ஜான் பாட்சா (இவர் மாந்திரீகர்) வீதியில் இருந்த அவருடைய லைன் வீடுகளில் (17வீடுகள் _ 1974களில் உள்ள நிலை) ஒரே ஒரு அறையும் அடுப்பாங்கரையாக இருந்த முன் நடையையும் தவிர மறைந்துகொள்ள அல்லது மறைத்துக்கொள்ள ஏதும் அற்ற இல்லங்களில் வசித்த இசுலாமியர்களின் பண்பாடும், திருச்சி குத்பிஷா நகர் பீடி சுற்றும் தொழிலாளர்கள், பாலக்கரை ஆற்றோரத்தின் அருகில் புறம்போக்கு நிலத்தின் குடிசைகளில் வாழும் அன்றாடங்காச்சிகள், பாலையங்கோட்டை பீடி சுற்றும் தொழிலாளர், ஓட்டு மண்வீடும் சில முந்திரி (நிலஅளவு 16 முந்திரி 1 ஏக்கர்) நிலமும் உடைமையாகக் கொண்ட இசுலாமிய விவசாயக் குடும்பங்கள் என தமிழமெக்கும் இவர்களின் பண்பாடு வேறாகத்தானிருந்தது.

எனது நண்பர் கஹாரின் தாயார் விவசாயி. அவர் திருமணம் செய்ததிலிருந்து அவரை கதவுகளும் பாதுகாப்பு செயினும் தடுக்கவில்லை. தலையில் சாணம் சுமந்து விவசாயம் செய்தவர். ஆனால் கஹாரி எலக்ட்ரிசியன் பட்டப்படிப்பு படித்துவிட்டு ஓரளவு சுமாராக சம்பாதிக்கத் தொடங்கியதால் நடுத்தரவர்க்கத்தின் பண்பாட்டினையே கௌரவம் என வரித்துக் கொண்டுவிட்டார்.

உலமாக்கள், இந்திய இசுலாமிய அமைப்புகள் போன்றவர்கள் கிராமங்களிலுள்ள ஏழை விவசாயிகளை தன்னுடைய சமூக அங்கமாக ஏற்றுக்கொண்டாலும் சேரிகளில் வாழ்பவர்களையும், அன்றாடம் கூலி வேலைக்குச் செல்லும் பெண்களின் குடும்பங்களையும் கண்டுகொள்வதே இல்லை. இவர்களின் உழைக்கும் வர்க்க பண்பாடு இசுலாமியக் கோட்பாடுவாதிகளுக்கு நெருடலாக இருப்பதே காரணம்.

இசுலமியப் பெண்களுக்கிடையே பண்பாடுகளின் மாற்றம், முன்னேற்றம் அகியவற்றினைப் பற்றி முழுமையாக எழுதவேண்டுமானால் இந்த சிறு கட்டுரை போதாது. சமூக நலன் கருதி இப்படிப்பட்ட விரிவான ஒரு ஆய்வு வேண்டும். இது இங்கு முடியாது. மிகவும் பிரச்சனைக்குரிய முதன்மை தரக்கூடிய சிலவற்றைப் பற்றி பார்ப்போம்.
__________________________________________

புர்கா

இசுலாமியப் பெண் எனள்ற விவாதம் தொடங்கினாலே முதன்மைப்படுத்தப்படும் பொருள் புர்காவாகத்தான் உள்ளது. தஸ்லிமா நஸ்ரினுடைய புர்கா பற்றி ஒரு கட்டுரையை கன்னடத்தில் மொழிபெயர்த்து (கன்னட நாளிதழ் நன்று) வெளியிட்டதற்காக லத்திஜார்ஜ் துப்பாக்கிசசூடு என்று பெரும் கலவரமே கர்நாடகாவின் பல நகரங்களில் சில நாட்களுக்கு முன் நடந்து முடிந்துள்ளது. வினவில் கூட சுமஜ்லா என்ற பிளாக்கரின் புர்கா பற்றிய தம்பட்டத்தாலும் சூடான விவாதம் நடந்துள்ளது. இசுலாமியப் பெண்களின் பிரச்சினைகள் பற்றி விவாதிக்கும்போது நடைமுறை வாழ்க்கையின் வெளிப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் இசுலாமியர்கள் புர்கா என்றதும் சூடாகி விடுவது ஏன்?

பொதுவாக எந்த மதத்தினராக அல்லது மதம் சாராதவர்களாக இருந்தாலும் தங்கள் வீட்டு பெண்களை எவராவது சைட் அடித்தாலோ, இல்லை சாதாரணமாக பார்த்தாலோ அல்லது காதலித்தாலோ ஏற்றுக் கொள்வதில்லை. தொண்டி என்ற சிறு நகரத்தின் வாலிபர்கள் பிற மதத்தின் பெண்களை சூன்காளி (அழகிய பெண்) பூதிகாளி (அசிங்கமான பெண்) என்று ஒன்றுகூடி விமர்சித்தாலும் தன் மதத்தினுடைய பெண்களை அவ்வாறு நாலுபேர் நின்று கமெண்ட் அடிக்கவிடுவதில்லை. தகராறுதான்! அடிதடிதான்! இதே நடைமுறையில் சைட்அடித்துக்கொண்டு திரிந்து இன்று அப்பாவாக தாத்தாவாக மாறியுள்ளவர்களும் தங்கள் வீட்டுப் பெண்களை பிறர் கமெண்ட் அடிக்க விடுவதில்லை. இது எல்லா சமூகத்தினருக்கும் பொதுவானதுதான். ஆனால் பிற மதத்தினரிடம் தன் வீடு என்று சுருங்கியுள்ள உணர்வு இசுலாமியர்களிடம் தம் சமூகம் என்று விரிந்துள்ளது. அதற்காக இசுலாமிய வாலிபர்களும் குமரிகளும் தமக்குள் ஒருவர் ஒருவரை காதலிப்பது இல்லையா என்று கேட்க வேண்டாம். அதனையும் இக்கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.

இந்த சைட் அடிக்கும் பிரச்சனைதான் “புர்கா” என்றதும் இசுலாமியர்களை கொதித்தெழவைக்கிறது. சமூக ஆர்வாலர்கள் அப்பெண்களுக்கு புர்காவினால் ஏற்படும் சிரமங்களை முன்வைக்கும் போது அது அப்படி இல்லை என்று மறுப்பதும் அதனையே பெண்களை விட்டு பேசவைப்பதும் விவாதத்தில் எட்டப்படாத முடிவாக உள்ளது.

கண்கள் தவிர பிறவற்றை மறைக்க வேண்டும், திரை மறைவுக்குப் பின் நின்றே அந்நிய ஆடவர்களுடன் உரையாற்ற வேண்டும், என்று கோட்பாடு கூறினாலும் நடைமுறை அவ்வாறு இல்லை. புர்காவின் இன்றைய நிலைதான் என்ன? பொதுவாக தமிழை தாய்மொழியாகக் கொண்டவர்களிடம் இந்த கருப்பு வண்ண புர்கா அணியும் பழக்கமில்லை என்பது நாம் அறிந்ததுதான். பத்தானியர்கள் (பட்டாணியர்கள்) என்றழைக்கப்படும் உருதுவை தாய்மொழியாகக் கொண்டவர்களே அதிகம் அணிந்தனர். அதுவும் அவர்களிடம் ஒரு சடங்குத்தனமான மனநிலை இருக்கிறதேயொழிய கடவுள், கோட்பாடு, சொர்க்கம் என்ற உணர்விலெல்லாம் அணிவது இல்லை.

தமிழ் முசுலீம்களிடம் கருப்பு அங்கி என்ற பண்பாடு முற்றிலும் இல்லாவிட்டாலும் வெள்ளை வேட்டியை தமது கலர் சேலைக்குமேல் சுற்றிக்கொண்ட வழக்கமிருந்தது. இன்று அந்த வெள்ளைவேட்டி அகன்றுவிட்டது. கருப்பு அங்கி அல்லது எதுவும் இல்லை (சேலை, சுடிதார் போட்டுக்கொண்டுதான்) என்ற நிலை பொதுப்பண்பாக மாறியுள்ளது. குமரிப் பெண்கள், பள்ளி கல்லூரிகளுக்கு படிக்கச் செல்வது அத்திபூத்தது போன்று அரிதாக இருந்த அன்றைய நிலையில் புர்கா அணிந்து சென்றதில்லை. ஆனால் பரவலாக இன்று அனைவரும் படிக்கவைக்கும் நிலையில் அந்த பெண்கள் புர்கா அணிந்தாலும் படிக்கச்செல்ல முடிகிறதே என்ற சந்தோஷத்தில் புர்காவை ஒரு அடக்குமுறையாகக் கருதுவதில்லை. ஒரு சில தீவிர மதப்பற்று இல்லாத குடும்பங்கள் அல்லது பெண்கள் மட்டுமே புர்கா அணியாத நிலையில் பள்ளி கல்லூரிகளுக்குச் சென்றாலும் பெரும்பாலனவர்கள் புர்கா அணிவதை ஒரு பொருட்டாக கருதுவதில்லை.

மூன்று சகோதரிகளுடன் மட்டும் பிறந்து கல்லூரிக்குச் செல்லும் பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஆயிஷா தன் தமக்கைகளிடம் “இந்த பாரு யார் என்ன சொன்னாலும் பெரியவங்க சொல்லிட்டாங்க என்பதற்காக அப்படியே ஏத்துக்கக்கூடாது. நாமும் சிந்தித்து பார்க்கனும். ஆனாலும் அவர்களிடம் விவாதம் பண்ணிக்கிட்டு இருக்காம காலச் சூழ்நிலைக்கு ஏற்ப அட்ஜஸ்ட் செய்துகிட்டு நம்ம காரியத்தை சாதிக்கனும்” என்று கூறுகிறார். கணினித் துறையில் பொறியியல் பட்டப்படிப்பு படிக்கும் இவரும் இவரது தந்தைக்கும் புர்கா என்பதில் நம்பிக்கை இல்லை. தம்மைச் சுற்றியுள்ளவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாக வேண்டாமே என்பது அவர்களின் கருத்து. இவரின் தாய்வழி சுற்றம் எந்த பெண்களையும் பருவமடைந்த பிறகு பள்ளிக்கூடம் அனுப்பியதில்லை என்பது குறிப்பிடதக்கது.

ஸகனாஸ் கணினித் துறையில் பொறியியல் வல்லுனர். புர்கா இல்லாமல் கல்லூரிக்குச் சென்றதில்லை. கை நிறைய சம்பளம் வாங்கும் பணிக்குச் செல்லும் போதும் புர்கா அணியவே செய்வார். புர்கா பற்றி பெருமையாகவும் சொன்னவர்தான். ஆனால் கல்லூரியில் படிக்கும்போது ஒரிசாவைச் சார்ந்த மாணவரைக் காதலித்து முஸ்லீமாக ஒரு திருமணச்சடங்கு, ஒரிசா சென்று கணவரின் குடும்பத்தினருக்காக ஒரு இந்துமத திருமணச் சடங்கு. இன்று தாய் வீட்டுக்கு வந்தால் புர்கா, தனது வீட்டிலும் பணியிடத்திலும் அது இல்லை. பிள்ளைகளுக்கும் இரண்டிரண்டு பெயர்கள்.

மதுரைச் சேர்ந்த பாத்திமா, ராகேஷ்ஷுடன் இந்துவாக மாறித் திருமணம் செய்தார். திருச்சியைச் சேர்ந்த பானு, அகஸ்டின் தங்கராஜுடன் கிறித்தவராக மாறி திருமணம். இவர்களும் புர்காவின் குடும்பத்திலிருந்து வந்தவர்கள்தான். இன்று குடும்ப உறவுகளும் தொடரத்தான் செய்கிறது.

திருமணவிழா மண்டப்பத்திலே 18 வயது ஜுவைரியா புர்காவுடன் “வணக்கம் தோழர்” என்று எமது தோழர்களுக்கு கை கூப்பி வரவேற்கிறார். திருமண விழாக்களில் புர்காவுடன் வலம் வரும் பெண்கள், ஆண்களின் கூட்டத்திடையே இயல்பாக வலம் வருகின்றனர். எதிர் எதிர் வரிசையில் அமர்ந்து விருந்துண்ணுகின்றனர். யாரும் எதற்கும் சங்கடப்படுவதில்லை எல்லாம் இயல்பாக குற்றமற்ற செய்லபாடுகளாக நாம் காணுகிறோம்.

அன்று ஜவுளிக்கடை, நகைக்கடை, வளையல்கடை போன்றவற்றிற்கு மட்டும் ஆண்களுடன் சென்றுவந்த பெண்கள் இன்று தனியாகவும்
சென்றுவருகின்றனர். கடைத்தெருவுக்கு செல்லும் பெண்களை “ஊர் மேய்பவள்” என்று இழித்துரைத்த காலம் கண்ணாடி பெட்டகத்திற்குள் ஒளிந்து கொண்டுவிட்டது. அன்றாடத் தேவைகளுக்கு ஆண்களே கடைத்தெருவுக்குச் செல்லும் காலமும் மலைஏறிவிட்டது. காதுகளையும், நகை அலங்காரங்களையும் மறைத்துக்கொள்ளும் புர்காவெல்லாம் இன்று கிடையாது. இதுவே அவர்களின் புர்கா பற்றிய கோட்பாடு சார்ந்த இன்றைய யதார்த்த மதிப்பீடுக்குச் சான்றாக உள்ளது. இன்னும் ஏராளமான சான்றுகளை நாம் காணலாம்.

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் போன்ற இசுலாமிய அமைப்புகள் தமிழக இசுலாமியப் பெண்களை புர்கா அணியச் செய்வதில் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களின் இலக்கு 30, 35க்குள் உள்ள பெண்கள் மட்டுமே. சற்று வயதானவர்கள் தம் நிலையில் மாற்றமில்லாமலயே தொடரமுடிகிறது. புர்கா அணிபவர்களோ, “புர்காதானே அணிந்துவிட்டு போகிறோம், ஆனால் நாங்கள் வேலைக்கு போவதையே, படிப்பதையோ தடுக்க முடியாது” என்கின்றனர். இன்று பரவலாக இதில் மட்டுமே என்றில்லாமல் அனைத்துத் துறைகளிலும் இசுலாமியப் பெண்கள் வேலை செய்வதை நாம் காண்கின்றோம். அவர்கள் அணியும் புர்காவே இதற்கு சாட்சியாகவும் உள்ளது.

________________________________________

பெண் உழைப்பு

“ஆண்கள், பெண்களை நிர்வகிப்பவர்கள். பெண்கள் உங்களுக்கு விளைநிலங்கள்” என்று குர்ஆன் கூறுகிறது. உழைக்கும் பெண்களைப் பொருத்தவரை அன்றும் இன்றும் ஏற்ப்பட்டுள்ள வேறுபாடு முதலாளித்துவத்தின் பண்பாடுதானேயொழிய குனர்ஆனுக்கும் இவர்களுக்கும் வெகுதூரம்.

ஆமினாம்மாள்! நெல் அவித்து அரிசி விற்பதில் கடந்த 40 ஆண்டுகாலமாக தன் காலத்தை கழித்துக் கொண்டிருப்பவர். தெருக்குழாயில் தண்ணீர் பிடித்து மேன்மைமிக்க குடும்பங்களுக்கு சேவை செய்து வயிறு பிழைக்கும் ஜமால்மாமி நடுத்தர வர்க்கத்தினராக வளர்ந்து வறுமையின் காரணமாக தொழில் செய்து பிழைப்பவர். இவர்களின் பண்பாடு வேறாகத்தான் உள்ளது. பருவமடைந்த அல்லது பருவம் அடையாத, திருமணமான அல்லது விதவைகள் என்ற எந்த வேறுபாடும் இல்லாத பெண் உழைப்பு சமூகத்தின் கட்டாயமாகிவிட்டது.

“தானும் உயர்குடியே. தமக்கென்று ஒரு தராதரம் உள்ளது. தராதரத்திற்கேற்ற சமூகத்துடன்தான் நாம் பழக வேண்டும்” என்று கருதுபவர்கள், முதலாளித்துவப் பண்பாட்டினை செரித்துக்கொண்டு தாங்கள் வறுமையில் வாடினாலும் முதலாளித்துவம் வழங்கும் சமூக மதிப்பீடுகளுடன் உறவாடவே விரும்புகின்றனர். இதனை குட்டி முதலாளித்துவ பண்பாடு என்று சொல்லலாம். ஆனால் புதிய பொருளாதாரத்தால் விழுங்கப்பட்டு சாறுபழியப்பட்ட சக்கைகளாக வெளித் தள்ளப்பட்ட பின் இவர்களும் உழைக்கும் பெண்கள் அணியில் (தமது தராதர மதிப்பீட்டின் உண்மைநிலை உணர்ந்து) ஒன்றிணைகின்றனர். அகலத்திறந்த கதவுகளில் தஞ்சமடைகின்றனர். சமூக மதிப்பீடுகளும் மாறிவிட்டன..

ஃபாத்திமா. இவர் மின்னணு பொறியியல் பட்டதாரி. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பறக்கும் படையில் ஒரு அதிகாரியாக கைநிறைய சம்பளம் வாங்கும் தொழில். கணவர் ஒரு ஆசிரியர். இவருக்கு வெளிநாட்டில் மிகவும் உயர்ந்த சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கிறது. வீடு, கார், குடும்பத்திற்கான விசா என்று அனைத்தும் வழங்கப்படும் வேலை. கணவரை, வேலையை விட்டுவிட்டு உடன்வர அழைக்கிறார். ஆனால் “பெண்ணின் உழைப்பில் உட்கார்ந்து தின்பதா? அல்லது அவள் வெளிநாடு சென்று சம்பாதிக்க நாம் இங்கே ‘பொட்டையைப்’ போல் பிரிந்து வாழ்வதா?” சுய கௌரவம் இடம்தரவில்லை. சமூகம் தனக்கு வழங்கியுள்ள விவாகரத்து என்ற அங்குசத்தை நீட்டத் தொடங்கினார்.

பாத்திமாவோ “எதுவானாலும் பரவாயில்லை, நான், எனது முன்னேற்றத்தை கெடுத்துக்கொள்ள முடியாது” என்று உறுதியாக வீசிய கவண்கல் வேலை செய்தது. அது “இருவர் சம்பளத்திலும் சொகுசாக வாழ்ந்த வாழ்க்கையை இழக்க முடியுமா” என்ற கனியில்பட்டு பறித்தெடுத்துவிட்டது. இன்று இவர்கள் வெளிநாட்டில் கோடிஸ்வரர்களாக!.

நிறைய எடுத்துக்காட்டுகள் உள்ளன. தான் சம்பாதிக்கும் தொகையை தனது பெற்றோர்களுக்கு கொடுப்பதில் கட்டுப்பாடு இருக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக உறுதிமொழிகளைப் பெற்றுக்கொண்டு திருமணம் செய்து கொள்ளும் பெண்களும் இவர்கள் மத்தியில் வளர்ந்து கொண்டுதான் வருகின்றனர். இசுலாமிய பெண் உழைப்பை முதலாளித்தவம்தான் தீர்மானிக்கிறதேயொழிய மதக் கோட்பாடுகள் இல்லை.

_________________________________________

தலாக் – விவாகரத்து

ஆணின் ஆளுமை அதிகாரத்தினால் தலாக் தலாக் தலாக் என்று மும்முறை ஒருவன் கூறிவிட்டால் அவனது மனைவி விவாகரத்து செய்யப்பட்டவளாக கருதப்படும் நிலையே அன்றும் இன்றும் உள்ளது. இதற்கு சாட்சிகள் தேவையில்லை. அல்லாவே சாட்சியாக உள்ளதால் இது ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவே சமூகம் உள்ளது. ஒருவன் சச்சரவினால் ஏற்பட்ட கோப உணர்ச்சியின் உந்துதலில் இப்படி தலாக் செய்து விட்டாலும் அது விவாகரத்து ஆனதாகவே கருதப்படும். அவன் மனம் மாற்றம் அடைந்து இவ்வாறு செய்துவிட்டதாக வருந்தினாலும் தலாக் தலாக்தான். அவன் விரும்பினாலும் மீண்டும் இணைந்து வாழ முடியாது. ஏனெனில் இவ்வுறவு சமூக கட்டுமானத்தினுடைய ஆளுகையின் கீழ் உள்ள உறவு.

இந்த மூன்று முறை தலாக் என்று சொல்லும் உரிமை, சிந்தித்து தெளிவாக நிதானமாக முடிவெடுத்தாலும் ஒரு பெண்ணிற்கு கிடையாது. தனக்கு பொறுப்பானவர்கள் மூலம் தன் கணவனை இந்த உறவிலிருந்து விடுவிக்கச் செய்துகொள்ளத்தான் ஒரு பெண்ணுக்கு இருக்கின்ற உரிமையாகும்.

தலாக் என்பது போல்தான் குளலா என்பதும் என்று சில இசுலாமிய பெண் அமைப்புகள், தாங்களும் நேரிடையாக தலாக் செய்துகொள்ள உரிமையுண்டு என்று வாதாடினாலும் ஆண்களால் மட்டுமே நிர்வாகிக்கப்படும் உலமாக்கள் சபை அதை நிராகரித்துவிட்டது. குலா என்பதன் பொருள் “விவாகரத்து செய்துவிடச் சொல்லுங்கள்” என்று கோரிக்கை வைப்பதே ஆகும்.

ஆனால் விவாகரத்து வழக்குகளில் இன்றைய நடைமுறை மதக்கோட்பாட்டிற்கு வெளியே ஜமாத்துகளால் தீர்மானிக்கப்படுகின்றன. ஆண் தலாக் செய்தால் தான் கொடுத்த மகர் தொகையை (திருமணத்தின்போது ஆண் பெண்ணிற்கு வழங்கப்படும் பொருள்) இரட்டிப்பாக்கித் தரவேண்டும். இது கோட்பாடு. நடைமுறையில் அப்பெண்ணிற்கு இருக்கும் குழந்தைகளின் பால், வயது ஆகியனக் கணக்கிடப்பட்டு அதற்குப் பாதுகாப்பு தரும்வகையில் தண்டத்தொகையாக தீர்மானிக்கப்பட்டு ஆணிடமிருந்து பெற்று பெண்ணிற்கு வழங்கப்படுகிறது. கொடுக்கப்பட்ட வரதட்சனைகள், நகைகள், சீதனங்கள் திருப்பியளிக்கப் படுகின்றன. ஜீவனாம்சம் என்றச் சொல் மட்டும உச்சரிக்கப்படுவதில்லை.

குழந்தைகள் ஆண்களுக்கே உரியன. அவர்கள் அவர்களை தமது பொறுப்பில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே கோட்பாடு. நடைமுறையில் ஒரு சிலர் அவ்வாறு தமது பொறுப்பில் எடுத்துக்கொண்டாலும் பலரும் அதனால் ஏற்படும் மறுமண வாழ்க்கைகான இடையூறுகளைக் கணக்கிட்டு ரொக்கத் தொகைக்கு விலை பேசிவிடுகின்றனர். ஆனால் சம்பாதிக்கும் பருவத்தில் உள்ள ஆண்பிள்ளைகளாக இருந்தால் ஆண்களின் பாசம் கரைகடந்து ஷரியத் சட்டம் கோலேச்சுகிறது. கணவன்களால் மட்டுமே தான் கர்ப்பமுற்று குழந்தை பெற்றெடுப்பதாகவும், அதில் தனக்கு பங்கேதுமில்லை என்று இன்னும் இப்பெண்கள் அறிவியலுக்கு அப்பாற்பட்டு சிந்திப்பதால் இப்பிரச்சனையில் தமக்கு ஏதும் உரிமை இல்லை என்பதை எவ்வித மனவருத்தமுமின்றி ஏற்றுக்கொள்கின்றனர். அதுவே குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு இவள்மீது சுமத்தப்படும்போது இயல்பாகவே உள்ள தாய்ப்பாசம் அதனை தன் தலையில் கட்டும் ஏமாற்றம் என்று கருதுவதற்கு இடமளிப்பது இல்லை.

பெண்ணின் விருப்பத்திற்கிணங்க விவாகரத்து நடந்தால் பெண், தான் பெற்ற மகர் தொகையுடன் சிறுதொகை ஒன்றையும் (திட்டவட்டமான அளவு இல்லை) கொடுக்க வேண்டும். அல்லது மகர் தொகையை மட்டுமாவது கொடுக்கவேண்டும், என்று கோட்பாடு கூறுகிறது. நடைமுறை அவ்வாறு இல்லை. பெண் தலாக் செய்யச் சொல்லும் சூழ்நிலை பரிசீலிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக குடிகாரக் கணவன், விபச்சாரிகளுடன் சுற்றும் கணவன், சமூக குற்றங்களைச் செய்வதால் தொடர்ந்து சிறைசென்று வரும் பொறுக்கி போன்ற அடிப்படை நிகழ்வுகள் பரிசீலிக்கப்பட்டு தீர்த்து வைக்கின்றனர். குற்றம் கணவன் மீது என்றால் கணவனுக்கு தண்டத்தொகையும். மனைவி மீது என்றால் மனைவிக்கு தண்டத்தொகையும் தீர்மானிக்கப்படுகிறது.

ஆண் தலாக் செய்ய மறுத்தாலும் வலுக்கட்டாயமாக விவாகரத்தை பெற்றுக்கொள்ளும் பாதுகாப்பும் இன்று பெண்களுக்கு ஏற்பட்டுள்ள மாற்றத்தின் முன்னேற்றம். சமூகத்தின் இன்றையநிலை பெற்றோர்களிடம் ஏற்பட்டுள்ள மாற்றமும், பெண்ணுழைப்பும் அடிப்படைக் காரணங்களாக அமைகின்றன. “கல்லானாலும் கணவன்…” மலை ஏறிக் கொண்டிருக்கிறது.

______________________________________________________

இத்தா : காத்திருத்தல்

இத்தா என்பது பற்றிய விரிவான விளகத்தை பறையோசையில் கர்பப்பை இல்லாவிட்டாலுமா! படித்துக் கொள்ளுங்கள். அன்றும் இன்றும் என்ற ஒப்பீட்டை மட்டும் பார்ப்போம். இதன் மதிப்பீடு நானறிந்த வரையில் அன்றும் இன்றும் மாறவே இல்லை. கோட்பாட்டின்படி சிறிதும் பிசகாமல் கடைபிடிக்கப்படுகிறது. ஆனாலும் ஒரு சந்தேகம் எனக்கு உண்டு.

முகம்மது நபி (ஸல்) அவர்கள் போர் ஒன்றிற்குச் சென்று திரும்பியதும் தமது வெற்றியை அறிவித்துவிட்டு “கணவன் இறந்த பெண்கள் மழித்துக் கொள்ளுங்கள் (மொட்டையடித்துக் கொள்ளுவது)” என்று கூறுகிறார். அந்த அறிவிப்பைத் தவிர அது தொடர்பான வேறு எதனையும் சான்றாக நான் படிக்கவுமில்லை. பார்க்கவும் இல்லை. அது அன்றைய நடைமுறையாக இருந்தால் அது இன்று இல்லை என்பது மட்டுமே மாற்றமாகும். இந்தியச் சூழ்நிலையில் அன்று “வெள்ளை புடவை” இந்துமதத்தைப் போல இவர்களும் அணிந்தாலும் இன்று அது நடைமுறையில் இல்லை.

தன் கர்பப்பையில் உள்ளதை மறைக்க வேண்டிய அவசியமற்ற காலச் சூழ்நிலையிலும், அது அவசியம் தான் என்றால் அறிந்துகொள்ள மிக நவீன கருவிகள் இருக்கும் இந்தக் காலத்திலும் இத்தா இன்னும் ஏன் தொடர்கிறது? கணவன் இறந்துவிட்ட துயரத்தில் உள்ள பெண் அந்த பசுமையான வாழ்க்கையின் நினைவாக இந்த இத்தாவை ஒரு சுமையாக கருதுவதில்லை. அது தனது கணவனை சொர்க்கத்திற்கு இட்டுச் செல்வதில் பங்காற்றும் நன்மைகளின் எண்ணிக்கையை கூட்டும் என்றும் அவள் மனதார நம்புவதால்அப்பெண்களின் மனதில் எவ்வித எதிர்ப்பையும் ஏற்படுத்தவில்லை. சமூக ஆர்வலர்களும் இதில் தலையிட்டதும் இல்லை. அது ஏன் என்று எனக்கும் புரியவில்லை.

விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள் இத்தாவைக் கடைபிடிக்கும் நிலையிலும் மாற்றம் இல்லை. விவாகரத்து விரும்பியோ விரும்பாமலோ நடந்தாலும் கணவன்மீது ஏற்பட்டுள்ள “கசப்புணர்வு” அங்கே ஏற்பட்டுள்ளது என்பது தெளிவான ஒன்றே. அப்படியிருந்தும் அவர்கள் இந்த இத்தாவை கடைபிப்பது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. அப்படிப்பட்டவர்களின் மனநிலையை அறிந்துகொள்ளும் வாய்ப்பும் எனக்கு ஏற்படவில்லை. எனவே இப்படிப்பட்டவர்களின் மனநிலையை அறிந்தவர் எவரேனும் இருந்தால் இங்கே எழுதுங்களேன்.

முகம்மது நபி (ஸல்) அவர்கள் தனது மகள் பாத்திமாவின் கணவனரான அலியிடம் “என் மகளே ஆனாலும் பெண்கள் சொல்வதைக் கேளாதீர்கள்” என்று கூறியிருந்தாலும் அவரின் மரணத்திற்குப்பின் அவரது மனைவி ஆயிஷா அரசியலில் மிகவம் முக்கியமான பங்காற்றத் தொடங்கியதிலிருந்து இன்று வரை மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டேதான் வருகின்றன. இந்த மாதம் மகளிர் மாதமாக உள்ள நிலையில் ஒவ்வொரு இசலாமியப் பெண்களும் தங்களை சுற்றியுள்ள சூழ்நிலைகளையும் அதன் காரண காரியங்களையும் தன்சுய விருப்பு வெருப்புக்கு அப்பாற்பட்டு ஆய்வு செய்து பெண்களின் உரிமைகளைப் பெற பங்காற்றுவோம் என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். கடவுள் நம்பிக்கைக்கும் இம்மாற்றத்திற்கும் இடையில் முடிச்சுவிழாமல் இதுவேறு அதுவேறு என பிரித்திட்டு செயலாற்ற வேண்டும்.

– சாகித்

http://paraiyoasai.wordpress.com/
_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

சந்தா