உழைக்கும் மகளிர் தினச் சிறப்புக் கட்டுரை – 13
அலுவலக வாயிலில் அந்த வேலைக்காரப் பெண்கள் அவசர அவசரமாக பெரியதொரு ரங்கோலிக் கோலம் போட்டுக் கொண்டிருந்தனர். வழக்கமான வேலைகளோடு கூடுதலாய் சேர்ந்துவிட்ட வேலை அது. ’எஜமானி அம்மாக்கள்’ வழக்கத்துக்கு மாறாக சற்று முன்னதாகவே அணிதிரளத் தொடங்கிவிட்டதால், நேரமாகிவிட்டதே என்ற பதட்டம் வேறு. எனவே வண்ணங்களை அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தனர்.
உள்ளே நுழைந்ததும் ஒரு மேசையில் பாங்காய் அமர்ந்திருந்த குடத்துக்குத் தங்க முலாம் பூசப்பட்டிருந்தது. அது பூரணகும்பம். யாருக்கு? யாரோ அதிகாரக்கொம்பின் உச்சாணிக்கிளையைப் பிடித்துவிட்ட ஒரு அம்மணிக்கு. அவர் போன்றவர்கள்தான் இவர்களுக்கு ஆதர்ஷ புருஷிகள்.
இரும்புப் பெட்டியில் புழுங்கிக்கொண்டிருந்த தங்க நகைகளும், தங்க சரிகைச் சேலைகளும் பரோலில் வெளிவந்து எங்கும் பளபளத்தன. [கல்யாணம் கார்த்தி, அலுவலக விழாக்கள்.. இப்படி அவற்றுக்குக் கூட அடிக்கடி விடுதலை கிடைப்பதுண்டு] தடபுடலான விருந்து உபசாரங்கள், சம்பிரதாயச் சொற்பொழிவுகள் எல்லாம் நடந்தேறின. கூடவே, ஆண்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. எதற்கு… சரிக்கட்டவா? தெரியவில்லை. விமர்சனங்கள் அற்ற இந்த விழாவே ஆணினத்துக்கு வழங்கிய இனிப்புதான் என்றாலும் பார்த்தறியத்தக்க பளபளப்புடன், வழங்கப்பட்ட சுவைத்தறியத்தக்க இனிப்பு ஒரு இலவச இணைப்பு.
எந்த ஆணுக்கும் உதட்டோரத்தில் வழிந்தோடிய எளக்காரச் சிரிப்பு தவிர்த்து இந்த விழா பற்றி வெளிப்படுத்த வேறு கருத்தில்லை. ஆனால், வாயைப் பிடுங்கியபோது, “உலக ஆண்கள் தினம் என்னைக்கி வச்சுக்கலாம்” என்று கேட்டவர்களும் உண்டு. என்ன இருந்தாலும் நான் ”மேல் சாவனிஸ்டு தாங்க, நீங்க என்ன சொல்றீங்க” என்றும் ஒருவர் கேட்டார். “நான் ஆணாதிக்கவாதி இல்லை, அட் லீஸ்ட், அப்படி இருக்க விரும்பவில்லை” என்றேன். “ஆங்.. என்று மடக்கிவிட்டது போல் சிரித்தார்”. இருக்க விரும்பாதவனிடத்தும் அனிச்சையாய் ஒட்டியிருக்கும் அளவுக்கு வேர்விட்டு இருக்கும் அம்சம் பற்றிய சுய விமர்சனம் அது என்று அவருக்குப் புரியவில்லை.
இந்த கொண்டாட்டத்துக்குப் பெயர் உலக மகளிர் தினம் என்கிறார்கள். ஆயி, அப்பனிக்கு திதி வருவதை அய்யிரு வந்து அறிவிப்பார், அல்லது அம்மாசி அன்னைகோ, வைகுண்ட ஏகாதசி அன்னைக்கோ மொத்தமாய் கொடுப்பாங்க.. இந்த உலக மகளிர் தினத்தை நாள்காட்டியே அறிவித்துவிடுகிறது.. வித்தியாசம் வேறென்ன? இதை கொண்டாடுவதும், கொண்டாடும் விதமும் கூட இங்கு ஒரு சடங்காகிப் போனது.
இந்த நாள் எதற்காக அனுஷ்டிக்கப்படுகிறது, தெரியுமா? இந்த செய்கைகளின் மூலம் யாரைக் கேவலப்படுத்துகிறீர்கள் என்று தெரிகிறதா? என்ற கேள்விகள் என்றைக்குமே அவர்களது மேக்கப்பைக் கலைத்ததில்லை. வேறு எப்படிக் கேட்பது என்று எனக்கும் புரியவில்லை. எனவே சென்றமுறை ”என்று மடியும் இந்த அடிமையின் மோகம்” என்று பெரிதாக டைப் செட் செய்து எனது இருக்கையின் பக்கத்தில் ஒட்டியிருந்தேன். அதைப் பார்ப்பதைத் தவிர்க்கவே முடியாத அருகிலுள்ள ஓரிருவர் தவிர யாரும் அதைச் சீண்டவில்லை. யாரையும் அது சீண்டவும் இல்லை.
அவர்களது சொந்த வாழ்க்கை என்ற மதில் சுவரைத் துளைக்கவும் என்னால் முடியவில்லை. பெருக்கியவர்களும், கோலம்போட்டவர்களும், எச்சில்தட்டு கழுவியவர்களும் அவர்களது சமூகத்தில் இல்லாததால், விரிந்த சமூக வாழ்க்கையில் பெண்களின் நிலை பற்றிய கருத்து அவர்களிடம் எடுபடவில்லை. ஆனால், அந்த உதாரணத்துக்கு மட்டும், ”அவர்களுக்கும் ஃப்ரீயாவே சாப்பாடு ஏற்பாடு பண்ணிட்டோம், பேமெண்டும் தனியா பண்ணிட்டோம்” என்று தர்மகர்த்தா பாணியிலான பதில் கிடைத்தது.
இதை எல்லாம் பார்க்கும்போது இது, உலக மகளிர் தினமா? உலக உழைக்கும் மகளிர் தினமா? தாழ்த்தப்பட்ட சாதியினர் என்றாலே உழைப்பாளி வர்க்கம் என்று கொள்ளத்தக்க வகையில், ஒப்பீட்டளவில் இன்றளவும் இருக்கிறதே.. அதுபோல் பெண்கள் என்றாலே, ஒடுக்கப்பட்ட மக்கள், உழைக்கும் பெண்கள் என்று கொள்ளமுடியுமா? இப்படிப்பட்ட கேள்விகள் என்னுள் மோதின. சாதகமானதும், பாதகமானதுமான பதில்கள் சமூகத்தில் விரவிக் கிடக்கின்றன. உங்களுக்கும் இப்படிப்பட்ட கேள்விகள் எழுந்தது உண்டுதானே? பெண்கள் என்று பொதுமையில் பார்க்கும்போது, சாதகமானதைக் கொள்வதே சரியானது; சமூகத் தட்டுகள் கடந்து ஒடுக்குமுறை பல கோணங்களில் பெண்கள்மேல் செலுத்தப்படுகிறது என்றே தொன்றுகிறது.
அதற்கு ஒரு உதாரணம் பொருத்தமாக உலக மகளிர் தினத்தன்றே ஹிண்டு பேப்பரில் வெளிவந்திருக்கிறது. அது, ஆணாதிக்கத் தந்தைவழி சமூகம் மற்றும் சாதிய அமைப்புமுறையின் மிருகத்தனமான தாக்குதலுக்கு இலக்கான சுஷ்மா [திவாரி] வின் போராட்டக் கதை.
________________________________________________________
உ.பி. மாநில பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்த சுஷ்மா தாழ்த்தப்பட்ட சாதியான கேரளத்து ஈழவ சாதியில் பிறந்த பிரபு நொச்சில் என்பவரைக் காதலித்து மணந்தார். இதனால் ஆத்திரமுற்ற அவளது மூத்த சகோதரன் திலீப் திவாரி ஆட்களுடன் வந்து மும்பை அருகில் வசித்த அவர்கள் வீட்டில் புகுந்து அவளது கணவர், மாமனார் மற்றும் வீட்டில் இருந்த இரண்டு சிறுவர்கள் உட்பட கிட்டத்தட்ட புகுந்தவீட்டார் அனைவரையும் படுகொலை செய்தனர், இருவரைப் படுகாயப்படுத்தினர். உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்ததால், கர்ப்பிணியான சுஷ்மா அதிஷ்டவசமாக உயிர்தப்பினார்.
மகாராட்டிர குற்றவியல் நீதிமன்றம் சுஷ்மாவின் சகோதரர் திலீப் திவாரிக்கும் அவர் கூட்டாளிகளுக்கும் மரணதண்டனை விதித்தது. பின்னர் மும்பை உயர் நீதிமன்றம் அத்தீர்ப்பை உறுதிசெய்தது. ஆனால், உச்ச நீதிமன்றமோ கடந்த டிசம்பர் 2009ல் அந்த மரண தண்டனையை 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையாகக் குறைத்துத் தீர்ப்பு வழங்கியுள்ளது.
உச்ச நீதிமன்றம் இப்படுபாதகச் செயலை செய்த கொலைகாரர்களின் மரண தண்டனையை ரத்து செய்த தனது தீர்ப்பை விளக்குகையில், ”இளைய சகோதரி வழக்கத்துக்கு மாறாக எதையும் செய்யும்போது, அச்செயலைத் தடுத்து நிறுத்தவேண்டிய பொறுப்பு நியாயப்படுத்தக்கூடிய வகையிலோ அல்லது மாறாகவோ சமூகத்தால் அவளது மூத்த சகோதரனின் தோள்களில் சுமத்தப்படுகிறது. சம்பந்தப்பட்ட வழக்கில், இது ஒரு ரகசியக் காதல் விவகாரத்தால் நிகழ்ந்துவிட்ட சாதி கடந்த, சமூகம் கடந்த திருமணமாக இருக்கிறது”.
மேலும், “அவன் தனது தவறான ஆனால் தூய்மையான சாதிய உணர்வுக்குப் பலியாகியிருப்பானானால், அச்செயல் அவனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நியாயப்படுத்தாது… சாதியம், சமூகம், மதம் எனும் நச்சுப்பிடி, முற்றிலும் நியாயப்படுத்தப்பட முடியாததாயினும், அதுதான் இன்றைய மூர்க்கமான எதார்த்தம்” என்று கூறியிருக்கிறது. அந்த மூர்க்கமான எதார்த்தத்துக்குத் தலைவணங்குகிறோம் என்று முடித்திருக்க வேண்டும். ஆனால் அந்த வரி மட்டும் அசரீரியாய் ஒலிக்கிறது. [Bold/ Italics என்னுடையது]
வழக்கத்துக்கு மாறாக, அதாவது, மரபு மீறிய அல்லது சாதிய நெறி மீறிய செயலுக்குப் பார்ப்பனீயம் மரண தண்டனை விதித்து அதை நிறைவேற்றியும் விட்டது. ஈழவக் குடும்பம் முழுவதும் எழவு விழுந்துவிட்டது. உயர் சாதி கவுரவம் காப்பாற்றப்பட்டுவிட்டது. பெருமை மிகு இச்செயலுக்கு மரண தண்டனை மூலம் களங்கம் ஏற்படுத்தலாமா?
இதில் அண்ணனாகிய ஒரு ஆண் தான் கட்டிக்காக்கக் கடமைப்பட்டுள்ள தர்மத்துக்காக, சாதிய, ஆணாதிக்க சமூகத்தால் தன் தோள்களில் சுமத்தப்பட்டுள்ள பொறுப்புக்காக ஒரு ’தவறு’ தானே செய்துள்ளான். அவனுக்கு மரண தண்டனை விதிப்பது நியாயமானதா?
இல்லை, கூடாது, கூடவே கூடாது என்கிறது உச்ச நீதிமன்றம். சாதிய ஒழுக்கத்துக்கு சப்பைக்கட்டு கட்டுவதற்கு, இது ஒரு ரகசியக் காதல் விவகாரத்தால் நிகழ்ந்துவிட்ட சாதி கடந்த, சமூகம் கடந்த திருமணமாக இருக்கிறது என்று கொச்சைப்படுத்துகிறது. அது என்ன ரகசியக் காதல் விவகாரம்? கனம் நீதிபதிகள் வெளிப்படையாக நீச பாஷையில் பேசமாட்டார்கள் என்றாலும், தினத்தந்திகளின் மொழியில் சொல்ல வேண்டுமானால், அது என்ன கள்ளக் காதல்? வயதுவந்த ஒரு ஆணும் பெண்ணும்தானே காதலித்து மணந்தனர். ஏனிப்படிக் கீழ்த்தரமாக நினைக்கிறார்கள்.
மேலும், சாதிமறுப்புத் திருமணம் என்ற கூர்மையை மழுக்க எதற்கு இங்கே சமூகத்தையும் சேர்த்து இழுக்கிறார்கள்? திவாரி வீட்டுப் பெண் த்ரிவேதி வீட்டு அல்லது சதுர்வேதி வீட்டு அல்லது முகர்ஜி, பேனர்ஜீ வீட்டுப் பையனைத் திருமணம் செய்திருந்தால் இப்படி ஒரு நிகழ்வு அல்லது எழவு விழுந்திருக்குமா?
அச்செயலைத் தடுத்து நிறுத்தவேண்டிய பொறுப்பு நியாயப்படுத்தக்கூடிய வகையிலோ அல்லது மாறாகவோ சமூகத்தால் அவளது மூத்த சகோதரனின் தோள்களில் சுமத்தப்படுகிறது என்று வியாக்கியானம் செய்கிறார்களே, இச்செயல் நியாயப்படுத்த முடியாதது என்று அறுதியிட்டுக் கூற சமூகம் நீதிபதிகளுக்கு ஏன் மனம் வரவில்லை? ’மாறாகவோ’ என்ற மழுப்பல் எதற்கு? நியாயப்படுத்த முடியாதாயினும் இதுதான் இன்றைய மூர்க்கமான எதார்த்தம் என்று அது கண்டு அஞ்சுகிறார்களா? அல்லது எதார்த்தத்தின் பின்னால் ஒளிகிறீர்களா, ஒத்துப்போகிறார்களா? கனம் நீதிபதிகள் சமூகத்துக்கு மேலும் ஒரு கேள்வி. நீங்கள் ’சமூகம்’ என்று சொல்வது எந்த சமூகத்தை? அல்லது உங்கள் நீதி பிரதிபலிப்பது எந்த சமூகத்தை?
இச்செயலுக்கு எதிர்வினையாக ஈழவ சமூக சகோதரர்கள், ஏன், சகோதரிகளும் கூட தங்கள் தோள்களில் சுமத்தப்பட்ட கடமையாகக் கருதி திலீப் திவாரியின் குடும்பத்தை ஒருக்கால், பூண்டோடு ஒழித்திருப்பார்களானால் அங்குதான் மரண தண்டனைக்கு மாறான மனிதாபிமானத்தைக் காட்டி தண்டனையைக் குறைக்க முடியும் என்று தோன்றுகிறது. இந்த நீதிபதிகளுக்கு மட்டும் ஏன் இதற்கு எதிராகத் தோன்றுகிறது?
மரபுக்கு மாறான ஒன்றைத் தடுத்து நிறுத்தவேண்டிய சமூக நிர்ப்பந்த்த்துக்கு மதிப்புக் கொடுப்பதானால், அந்த மரபுதான் ஐந்து வயதுப் பெண்குழந்தையை அறுபது வயதுக் கிழவன் மணமுடிக்க நெடுங்காலம் இந்நாட்டில் வழிவகை செய்தது. ஆறாவது வயதிலேயே அதன் தாலி அறுத்து மொட்டையும் போட்டது; வீட்டிலேயே பூட்டிவைத்தது; உடன்கட்டை ஏறச்செய்தது; தீட்டு, துடைப்பு, புனிதக் குறைவென்று இரண்டாம்தரமாய் அடக்கிவைத்தது. இன்னும் இந்த மரபு ஏரா..ளம் செய்தது. அவ்வப்போது கடுமுயற்சியால் அந்த நச்சுமரத்தின் கிளைகள் வெட்டப்பட்டன. ஆனால், சாதிமறுப்புத் திருமணம் என்ற பெயரில் அதன் ஆணிவேரை அசைத்துப் பார்க்கும் செயலை மட்டும் செய்யக்கூடாது, அதன் நச்சுப் பிடிதான் இன்றைய எதார்த்தம். அந்த எதார்த்தத்தைப் பற்றி ஒழுகுவதுதான் இன்றைய நீதி. இந்த எதார்த்தத்தை ‘நச்சுப் பிடி’ என்று சொல்ல வைத்துவிட்டது எங்களது இன்றைய துர்ப்பாக்கிய நிலை… இதுதானே உச்ச நீதி.
இப்படி இருக்க அம்பை [திலீப்கள்] தூக்கில் ஏற்றுவது இருக்கட்டும், எய்தவனை, அதான் சாதியத்தை, மனுநீதியைக் கூண்டிலேனும் ஏற்ற மனம் வருமா அவர்களுக்கு?
இந்த உச்ச ’நீதிக்கு’த் தலைவணங்கும் மரபையும் சேர்த்து முறிக்க ஒரு பெண் – அருந்ததிராய் – ஏற்கனவே வழிகாட்டியிருக்கிறார். அவர்கள் தலையில் ஒரு கொட்டு வைத்திருக்கிறார். இப்போது, இதோ, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த தேசிய இளம்பெண்கள் சிறப்புப் பேரவைக்கு வந்திருந்த இன்னொரு பெண், சுஷ்மா உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து வழக்காடுகிறார்.
“இத் தண்டனைக் குறைப்பு சாதிமறுப்புத் திருமணம் செய்ய விழையும் எல்லோருக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை போல் இல்லையா? சாதிய வெறுப்புணர்ச்சி என்பது தன்னிலையிலேயே கொடுங் குற்றமில்லையா?” என்று அவர் கேட்கிறார். ”என்னுடையதும், எனது ஐந்து வயது மகளுடையதுமான தனித்த பாதுகாப்புக்காக இல்லாவிடினும் மனிதப் பண்பைக் காப்பதற்கேனும் இந்த மரண தண்டனை உறுதிசெய்யப்பட வேண்டும்” என்று போராடுகிறார்.
இச் செய்தி மகளிர் தினத்தன்றே வெளிவந்திருப்பது குறைந்த பட்சம் மகளிர் கண்களையாவது திறவாதா? மகளிர் தினம் அதன் உண்மைப் பொருளில் உணரப்படாதா? என்று மடியும் இந்த அடிமையின் மோகம்?
____________________________________________________
– அனாமதேயன்
தொடர்புடைய பதிவுகள்
நடைமுறையில் இல்லாவிட்டாலும் சில கருத்துக்கள் தத்துவார்த்தமாகவது இருக்கின்றன என்ற அற்ப நம்பிக்கை கூட இப்படிப்பட்ட நீதிபதிகளின் பேச்சால் தொலைந்து போகிறது. சுஷ்மா போராடுவது பாராட்டுக்குரியது. நல்ல கேள்வி!
சிறப்பான பதிவு. இங்குள்ள அரசு மற்றும் அதிகார மையங்கள் அனைத்தும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராக தான் இயங்குகின்றன என பலமுறை நீருபிக்கப்பட்டிருக்கிறது. மீண்டும் ஒரு முறை நிரூபித்ததற்கு நன்றி அனாமதேயன். (ஒரு பெயர் வைத்து கொள்ளாலாமே!)
ந்ம்மில் பலருக்கு இன்னும் நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை உள்ளது. அவர்கள் இந்த தீர்ப்பை கொண்டு பரிசீலிக்க வேண்டும்.
உச்ச மனு நீதி மன்றம் கேவலம் ……..
நான் மணி
சுஷ்மாவின் கண்ணீரை அவளது பக்க நியாயத்தை புரிந்துகொள்ளாத நீதிமன்றத்தை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் தனது மௌனத்தின் மூலம் அதனை அங்கீகரித்துள்ள சமூகத்தின் மொன்னைத்தனத்தைத்தான் சகிக்க முடியவில்லை. சாதியின் பெயரால் நடக்கவுள்ள கண்ணியமிக்க கொலைகளுக்கு இனி தண்டனை இல்லை என உச்சநீதிமன்றம் வழிகாட்டி உள்ளது.
சமூக நிர்ப்பந்தம் என்ற சொல்லில்தானே நடுத்தர வர்க்கம் தனது சகல பிற்போக்குத்தனத்திற்கும் சப்பை கட்டு கட்டி வருகிறது. பெற்றோரின் நிர்ப்பந்த்த்தால் சமூக அழுத்த்த்தால் வரதட்சணை பெற்று வரும்படி மனைவியை கொலை செய்யப் போகும் கணவன்கள் இப்படித்தான ஃசொல்கிறார்கள். பெற்றோரின் நிர்ப்பந்த்த்தால் தாலியை மறுக்க முடியவில்லை, புரோகித மந்திரத்தை நிறுத்த முடியவில்லை. மனைவியின் நிர்ப்பந்த்த்தால் சமூக வேலைகளில் ஈடுபட முடியவில்லை. என தான் பொறுப்பேற்க வேண்டிய தான் தவறுகின்ற தருணங்களுக்கான காரணத்தை நுண்ணோக்கி மூலமாக சமூகம் பக்கம் நகர்த்தி விடுவதில் நடுத்தர வர்க்கத்தின் திறமைக்கு மத்தியில் மற்றதெல்லாம் தூசி.
சுஷ்மா சமூக நிர்ப்பந்தம் என்ற சொல்லில்தான் ஆண்கள் அனைவரும் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனை உச்சநீதிமன்றத்தின் மறு ஆய்விற்குள் நின்று மாத்திரம் சரிசெய்ய முடியாது என நினைக்கிறேன். உன் கணவனை கொன்றவனை கொல்வதை விடவும் முக்கியமானது சமூகம் ஆண்களுக்கு விதித்திருப்பதாக ஆண்கள் ஏமாற்றும் முகமூடிகளை கிழிக்க வேண்டியுள்ளது. தயவுசெய்து மறுமணம் செய்து கள் அம்மா.
one more example for supreme court’s “supremacy” :
http://www.satyamargam.com/1423
வலைப்பதிவுகளில் சி/பி.எம் தமிழ்ச்செல்வன்,மாதவராஜ் மற்றும் கார்த்திக் அலசி துவைத்து கிழித்துப் போட்ட செய்தி இது.அவர்கள் எழுதியுள்ளதிற்கு இணைப்பாவது கொடுங்கள். http://www.hindu.com/2010/03/08/stories/2010030856821400.htm
உச்சநீதிமன்றம் ஒரு உச்சிக்குடுமி மன்றம் என்பது பலவழிகளில் நிருபணம் ஆன ஒன்று. அதனைப் பல வகைகளில் பரந்துபட்ட மக்கள் முன்பு அம்பலப்படுத்தும் வேலையை சிதம்பரம் பிரச்சனை, அர்ச்சகர் உரிமை போன்ற விடயங்களில் மக இக போன்ற புரட்சிகர அமைப்புகள் முயன்று வருகின்றன.