முகப்புகலைகவிதைமானம் வண்டியில் ஏறணுமா? மானத்தோடு வாழணுமா?

மானம் வண்டியில் ஏறணுமா? மானத்தோடு வாழணுமா?

-

பொருத்தமில்லாத மனிதர்களோடு
பொருந்திப்போக முடியாமல்
வருத்தத்தோடு நிற்கிறது
இருசக்கர வாகனம் ஒன்று.

மிச்சம் வைக்காமல்
மச்சான் மோதிரத்தை மாட்டிக்கொண்ட
புது மாப்பிள்ளையின்
சுரண்டல் விரல்கள் பட்டவுடனேயே
அவமானத்தால் ஆடிப்போகிறது அதன் கைப்பிடி!

மாமனார் கழுத்தறுத்து மாட்டிக்கொண்ட
மைனர் செயின், பிரேஸ்லெட்டின்
தங்கக் கவுச்சி தாங்காமல்
முகத்தைத் திருப்பிக் கொள்கிறது வண்டிச்சாவி.

ஓசியில் வாங்கியவன்
உட்கார்ந்து ஓட்டப்போவதை நினைத்து
கோபத்தில் பல்லைக் கடிக்கிறது டயர்.

சுயமரியாதை உணர்ச்சியில்லாதவன்
கால்பட்ட அருவருப்பில்
விலகித் துடிக்கிறது கியர்.

சூடு, சுரணையின்றி
வரதட்சணையாக வண்டியைக் கேட்டவனின்
மன வண்டையைத் தாங்காமல்- சூடேறி
குந்தியவனுக்கு எதிராக
குமுறுது என்ஜின்.

வரதட்சணை மாப்பிள்ளைக்கு
சூடுவைக்க முடியாமல்
கேடுகெட்டு போனதாய்
புலம்பும் கார்ப்பரேட்டுக்கு
போய் புத்திசொல்லி
ஆத்திரத்தைக் கிளப்பும் பெட்ரோல்.

அடுத்தவன் காசில்
அனைத்தையும் அடைய நினைப்பவனின்
குரூரம் பார்த்து
குலை நடுங்கி
தன்னை மறைத்துக் கொள்கிறது வண்டிச் செயின்.

இந்த வெட்கம் கெட்ட பயலுக்கு
“எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ்’ வேற – என்று
நான்கு கண்களால்
“இன்டிகேட்டர்’ ஜாடை காட்டுது.

அடுத்தவரிடமிருந்து பிடுங்குவதற்கு
ஒரு அளவே இல்லையா?

வரும் கோபத்தில்
அப்படியே! பிடுங்கிக் கொண்டு போய்விடலாமா – என
வால்டியூப்
காற்றோடு கலந்தாலோசிக்கிறது.

தட்டுமுட்டுச் சாமான்களோடு
பெண்ணையும்,
தள்ளிக் கொண்டு போகிறவனின்
தந்திரமறிந்து
நட்டும் போல்ட்டும் கூட
கெட்ட வார்த்தையால் திட்டுது.

உண்மையில்
இவன் வண்டியை மணக்கவே… அதாவது
என்னை மணக்கவே
பெண்ணை மணந்தான் – எனும்
உண்மை புரிந்துவிட,
சகமனிதனை உறிஞ்சி வாழும்..
சகல மனித மாண்பையும் உதிர்த்து வாழும்..
இயந்திர இதயத்தை,
சுமக்க முடியாமல்,
சகிக்க முடியாமல்,
சைலன்சர் வழியாக
காறித்துப்புகிறது வண்டி!

இப்படியொரு வண்டி
உங்களுக்குத் தேவையா?

_____________________________________

–    துரை. சண்முகம்
_____________________________________

 1. //அடுத்தவரிடமிருந்து பிடுங்குவதற்கு
  ஒரு அளவே இல்லையா?வரும் கோபத்தில்அப்படியே! பிடுங்கிக் கொண்டு போய்விடலாமா – எனவால்டியூப்காற்றோடு கலந்தாலோசிக்கிறது.//

  அருமையான எள்ளல்…

 2. இதெல்லாம் சூடும் சொரணையும் உள்ள ஆண்களுக்கு சரிதான். எதுவும் இலாத ஜென்மங்களுக்கு? 

 3. வரதட்சணை என்னும் மாபாதகத்தை கொடுங்கோன்மையை வன்மையாக உங்களோடு சேர்ந்து நானும் கண்டிக்கிறேன்.. 

  நண்பர் வினவுக்காக.. இது போன்ற நமக்குள்ளே கருத்து வேறுபாடு இல்லாத விஷயங்களில் நீங்கள் பதிலிடுவதும் நான் பதிலிடுவதும் ஒன்றே என்றேன்னியவாறே நான் பதிலிட முனைந்ததில்ல்லை.. அது உங்களுக்கு வருத்தம் தந்துள்ளதேன்றால் மன்னிக்க வேண்டுகிறேன்.. 

  சகோதர உணர்வுடன் 
  ரபீக்.

 4. நாலு சக்கர வாகனம் , நூறு ஏக்கர் பாசனம், ஏழு தலைமுறை சொத்தோடு நான் தருவேன் சீதனமாய்!. என்செய்வேன் எனக்கு ஒரு பெண் இல்லை!

 5. காலில் போடும் செருப்பு வரை வரதட்சனையாக வாங்கும் பண்பு, இந்த ஐடி கலாச்சாரத்தினால் குறைந்து விடவில்லை. மாறாக அதிகரிக்கவே செய்திருக்கிறது!

  ஐடி துறை கொடுத்திருக்கும் பொருளாதார சுதந்திரத்தை பயன் படுத்தாமல், இன்னும் பெண்ணடிமை மோகத்தில் திளைக்கும் செருப்பை கழற்றி அடிக்காத வரை இந்த இழிபிறவிகள், தொடர்ந்து சுரண்டிக்கொண்டுதாம் இருப்பார்கள்!!!

  சூடும் சொரணையும் உள்ள நம்மில் எத்தனை பேர் நமது நண்பர் வட்டத்தில், குடும்பத்தில், வரதட்சனை வாங்கிய காரணத்திற்க்காக வாங்கிய ஐந்து விடம் உறவை துண்டித்துக் கொண்டுள்ளோம் ??

  சொரணை நமக்கு இருந்தால் போதுமா? இல்லாதவனை அடிக்கவேண்டாமா? அதையும் துடத்து போட்டு விட்டு போனால், அவனிடம் உறவு தேவையா?

  • இப்படியெல்லாம் உறவை துண்டிச்சா… நீங்களும் நானும் மட்டும் தான் மிஞ்சுவோம்! சமூகம் சார்ந்த அக்கறை, சுயமரியாதை என பல நல்ல கலவைகள் சேர்ந்தால் தான் ஒரு தனிநபர் சரியாக நடந்து கொள்வார்! இது தொட்டு தொடரும் போராட்டத்தால் வளரும் பண்பு.

 6. நன்றாக உள்ளது பதிவு,
  ஓசில கிடைக்கிற சுகமே தனிதான்…வரதட்சனைய விடுங்க, இதுவரைக்கும் நான் ஓசில எதுவுமே அனுபவிகள-னு சொல்லுங்க…ஒசினாலே பிடிக்காதுனு யாராவது இருக்கீங்களா??? என்ன?சின்னதா கூட?

 7. குடும்பம் இருக்கும் வரை வரதட்சணையை ஒழிக்கமுடியாது .இதில் தனி மனிதனை குற்றம் சொல்லி ஒரு பயனும் இல்லை .
  பிறக்கிற ஒவ்வரு குழந்தையும் பொதுவுடைமை ஆக்கவேண்டும்.பிறக்கிற எல்லா ஆண்களும் பெண்களும் சமமானவர்கள் .ஒரு வயதிலிலே ஆணையும் ,பெண்ணையும் சேர்த்து வைத்து விடவேண்டும் .இவ்வாறு வளர்கிற உள்ளங்களுக்கு கருப்பு ,சிவப்பு ,குண்டு ,ஒல்லி ,சொட்டைத்தலை ,பல்லுஎதியிருக்கு ,குட்டை ,நெட்டை ,படிச்சவன் ,படிக்காதவன் என்ற பேதமெல்லாம் பார்க்கமாட்டார்கள் மனங்கள் இறுகிவிடும் .டைவர்ஸ் என்ற பேச்சுகே இடமில்லை .தற்போதைய திருமணங்கள் அனைத்தும் செக்ஸ் காக மட்டும் தான் நடை பெறுகிறது ..

   • கொடுமையா?
    நடைமுறையிலுள்ள பழக்கவழக்கம் தான் கொடுமையானது .

    கேள்விகுறி ,
    இப்ப உங்களுக்கு கல்யான வயசு ஆகுது (27) நு வட்சுகுவோம் .உங்க வீட்ல பொன்னு பாகுரங்க .எப்படி பார்பாங்க ?வீடு வீட போய் பார்பீங்க .நீங்க ஒரு கனவோட போவீங்க .அங்க போய் பார்த்த கருப்பா குண்டா ஒரு பொண்ணு ஒக்காந்துருக்கும் .நீங்க முகத்த சுளிட்சுட்டு அடுத்த பொண்ண தேடி போயிருவீங்க .நீங்கமட்டும் இல்ல பெரும்பால்லும் இப்படிதான் இருக்கு .இருபது பேரு அந்த பொண்ண பார்த்துட்டு போய் பிடிக்லைன்னு சொன்ன என்னாகும் அந்த பொண்ணோட நிலைமை .இதுக்கெலாம் யாரு காரணம் குண்டா கருப்பா பிறந்தா அது யார் தவறு ?

    • 30, நீங்க இப்ப பேசுற சமூக பிரச்சினை வேற, 1 வயசுல பொண்ணையும் பையனையும் ்சேத்துறதும், லேபுல கம்யூனிஸ்ட உருவாக்கறதா சொல்றதும் வேற.. நீங்க சொல்ற இந்த விசயமே கூட பாத்தீங்கன்னா, கருப்பா குண்டா இருக்குற பணக்கார பெண்களுக்கு பிரச்சனை இல்லை, அதே சமயமை ஒல்லியா அழகா இருக்குற ஏழை பெண்களுக்கு திருமணம் ஆவதும் சிரமாதான் இருக்கு… dialectics comrade… do not forget the basics

   • கேள்வி குறி ,
    நீங்க கல்யாணம் பனுவதற்கு முன் உங்களுடைய பெற்றோர்கள் உங்களுடைய ஆண்குறியை பத்தியோ  அல்லது விந்தணு பத்தியோ அல்லது பெண்ணுருப்பை  பத்தியோ ஏதேனும் வகுப்பு எடுதுருக்கன்களா ? 

 8. ஐடி பையன்களுக்கு கார் வேண்டும், பிளாட் வேண்டும், பெண் வேலைக்கு செல்ல வேண்டும்!
  ஐடி பெண்களுக்கோ, பையன் தன்னை விட அதிகமாக சம்பாதிக்க வேண்டும், ஒரு முறையாவது US சென்று வந்திருக்கவேண்டும், சிலருக்கோ இன்னும் மேலே US செட்டிலாக வாய்ப்பிருக்கவேண்டும்…

  ஒன்றுக்கு ஒன்று குறைச்சல் இல்லை!

  வர்க்கம் தான் இவர்களது சிந்தனையை தீர்மானிக்கிறது!

  பெண்கள் ஓரளவிற்கேனும் கிடைத்த பொருளாதார சுதந்திரத்தை பயன்படுத்தாமல், அடிமை மோகத்திலிருந்தால் இது தொடரவே செய்யும்!

  பெண்கள் தங்களது செருப்பை கழற்றி காட்டாவிட்டால்….. அவர்கள் மீதே ஏறி செல்லவும் செய்வார்கள், செய்கிறார்கள்!

  இணையத்தில் இந்த கூட்டம் தான் அதிகம் என்பதால் இவர்களுக்கு உறைப்பது போல எழுத வேண்டி உள்ளது!

  (பி.கு: இந்த ஐ.டி மொன்னைகள் பெரும்பாலும் இணையத்திலும் சினிமா, கிரிக்கெட், சேர் மார்கெட், கவர்ச்சி படங்கள் இவற்றை தான் இன்னமும் பார்த்து தொலைக்கிறார்கள்…. )

  • ///(பி.கு: இந்த ஐ.டி மொன்னைகள் பெரும்பாலும் இணையத்திலும் சினிமா, கிரிக்கெட், சேர் மார்கெட், கவர்ச்சி படங்கள் இவற்றை தான் இன்னமும் பார்த்து தொலைக்கிறார்கள்…. )///

   உண்மை

  • நண்பர் ளிமாகோ.. குருக்கிடுதலுக்கு மன்னிக்கவும்.. நீங்கள் குறிப்பிடும் அதே ஐ.டி துறையை சார்ந்தவன் தான் நானும்.. ஆனால் நீங்கள் கூறுவது போல வரதட்சணை வாங்கி திருமணம் பண்ணும் எண்ணத்தில் இருந்து முற்றிலும் வேருபடுபவன் நான்..  வரதட்சணை என்னும் கொடுமையை அழிக்க வேண்டும் என்று நினைக்கும் ஒரு சாதாரண மனிதன் அதனை என் மூலமாக நான் செய்து பார்க்க விழைபவன்.. சொந்தமாக கார் வேண்டும் எண்ணுவதில் தவறில்லை.. சொந்தமாக பிளாட் வாங்கும் எண்ணத்தில் பிழை இல்லை.. ஆனால் அதனை சுயமாக சம்பாதித்து வாங்க வேண்டும் என்று நினைக்கும் ஐ.டி துறையை சார்ந்த ஒருவன் தான் நானும்.. இதில் ஏதேனும் தவறு இருகிறதா? மொத்தமாக அத்துறையை சார்ந்த அனைவரையும் சாடுவதில் உங்களின் பொதுநலம் தெரியவில்லை.. மாற்றாக காழ்புனற்சியே தெரிகிறது.. 

   • எனது பார்வையில்,,
    பொதுவா IT people-ah சொல்லுறது தப்பு தான்…
    ஆனால், உங்களை போன்று ஒன்று இரண்டு பேர்களை வைத்துகொண்டு என்ன பண்ணறது…
    அந்த துறை உள்ளவர்கள் பெரும்பாலும் பொதுவாகவே அப்டித்தான் என்று ஒரு கருத்து இருக்கிறது அல்லவா???  
    உண்மையா? பொய்யா? என்பது வேறு… அனால் அப்படி பேச காழ்புணர்ச்சி மட்டுமே காரணம் இல்லை… அதில் உள்ள பெரும்பான்மை பேர் அப்படி நடந்து கொள்வதானால் தான் …

    • க வரதட்சணை தொடர்பான சட்டங்களை தங்களுக்குச் சாதகமாக எப்படிக் கையாள்வது என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டியிருக்கிறார்கள். இதை எத்தனை மருமகள்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அதனால் மருமகள்களின் நலன் கருதி இந்த செய்திகளின் தொகுப்பைப்பற்றி ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை உங்களுக்குத் தருகிறேன். பயன்படுத்திக்கொள்ளுங்கள்.http://marumagal.blogspot.com/2010/04/ipc498a.html

   • காழ்ப்புணர்ச்சியா??

    நானும் அதே எழவெடுத்த துறையில் வேலை செய்றதுனால தானே அவனுங்களோட மொன்னை தனம் புரியுது!

    இது வரை (எட்டு வருட , மூனு கம்பனி மாறிய அனுபவத்தில்) வரதட்சனை இல்லாத திருமணம் எண்ணி சொல்லிடலாம்!
    அந்த ஓரிரண்டு பேர் அப்படி செய்றதால வரதட்சனை இல்லாம போயிடுமா? ஐந்திலக்க சம்பளம் வாங்கினாலும் பிச்சை புத்தி போகலியே?
    ஆத்துல தண்ணி போனாலும், நாய் நக்கி தானே குடிக்கும்! இத சொன்னா காழ்ப்புனர்ச்சியா?

    ஒரு சில காதல் (அது காதலா இல்லியாங்றது வேற விசயம்) கல்யாணத்துல கூட வரதட்சணை இருந்ததை நான் அறிவேன்!
    நல்ல பொண்ணு நல்ல பையன்!

    நண்பர் ரபீக்,
    நீங்கள் ஐடி துறையில் வேலை செய்வதாலேயே, உங்களை சொன்னது போல எடுத்துக்கொள்ள வேண்டாமே!

    • நண்பர் ளிமாகோ. 
     பொதுவாக எல்லோரையும் குரிப்பிட்டதாலே நான் அவ்வாறு சொல்ல வேண்டியதாயிற்று… மன்னிக்கவும்.. 
     நீங்கள் கூறுவது போல வரதட்சணை எனும் வன்கொடுமை துறையில் மட்டுமல்ல.. மற்ற துறைகளில் உள்ள பெரும்பாலான மக்களிடத்திலே புரையோடி பொய் இருக்கின்ற ஒரு இழி பிறவி தனம்.. உங்களை போன்ற ஒரு சில மக்கள் அதனை மற்றவருக்கும் புரியும் வண்ணம் எடுத்து கூறுங்கள்.. கூறும்போது கிண்டல் தொனியில் இல்லாமல் மென்மையாக எடுத்து கூறுவோம்.. நிச்சயம் ஏற்று கொள்வார்கள்.. 

 9. /பிறக்கிற ஒவ்வரு குழந்தையும் பொதுவுடைமை ஆக்கவேண்டும்/
  /தற்போதைய திருமணங்கள் அனைத்தும் செக்ஸ் காக மட்டும் தான் நடை பெறுகிறது/
  எனவே க்ளோனிங் முறை சிறந்ததாக இருக்கும். ஆண் பெண்ண தேவை இல்லை . செக்ஸ் இருக்காது . எல்லோரும் எல்லா விதத்திலும் சமம். க்ளோனிங் செய்கிற ஒவ்வரு குழந்தையும் பொதுவுடைமை . வாழ்க மார்க்சிசம் . வளர்க கம்யூனிஸ்ட். செக்ஸ்சே ஒழிந்து விடும் . எலியை பிடிக்க மலையை இடிக்கலாம் .
  அது சரி இது வரை வரதட்சணையை கொடுத்ததாக ஒரு அப்பன் கூட ஏன் கைது செய்யப்படவில்லை?
  /ஒரு வயதிலிலே ஆணையும் ,பெண்ணையும் சேர்த்து வைத்து விடவேண்டும்/ 
  குழந்தை திருமணம் பார்பன ஆணாதிக்க செயல் இல்லையா ? 

 10. வரதட்சனை வாங்குவது இழிவானது என்ற பிரச்சாரத்தை திருமணம் செய்யப்போகிறவர்களிடம் செய்கிற அதே சமயத்தில் – வரதட்சனை ’வாங்கி திருமணம் முடித்தவர்களிடமும் ’வாங்கியதை’ திருப்பி கொடுத்துவிட்டு சுயமரியாதையோடு (எதிர்காலத்திலாவது) வாழவேண்டும் என்ற எண்னத்தை உருவாக்க வேண்டும்..

  வரதட்சனை கேட்கிறவனை திருமணம் செய்துக் கொள்ளமாட்டேன் என்ற – உறுதியான எண்ணத்தை பெண்களிடம் வளர்க்கவேண்டியது மிக மிக அவசியம்..

 11. இரண்டு.நான்கு சக்கர வாகனம், வீடு, 1௦௦ பவுன், இத்தியாதிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.  அதற்காக நாம் சும்மா இருக்கதான் முடியுமா? சாட்டையை சுழற்றி கொண்டுதான் இருக்க வேண்டும்,  அதுதான் சமூக அக்கறை, வாழ்த்துக்கள்.

 12. தோழரின் கவிதை நன்றாக உள்ளது, பல திராவிட கட்சிகளின் கொள்கையில் வரதட்சணை கூடாது என குறிபிடுகிறார்கள், ஆனால் அவர்களே இதனை மீறி ஏற்றுகொள்கிறார்கள், கேட்டல் அன்பளிப்பாக பெற்றுக்கொண்டதாக கூறுகிறார்கள், இவங்களுக்கு இந்த கவிதை மூலம் உரைக்கட்டும்.

 13. அஃறிணைப் பொருட்களின் கோர்ப்பால்
  இயக்கம் பெற்றவன் நான்
  உயர்திணைகளின் சேர்ப்பால்
  இயக்கம் பெற்றவன் நீ.
  எனக்கு சுயமாய் சிந்திக்க ஒரு உறுப்பில்லை
  உனக்கோ அது இருந்தும் பயனில்லை
  எனவே நீயும் நானும் சமம்.

  இல்லை.. இல்லை.
  நானோ 100 சதவீதம் கர்ண பரம்பரை
  நீயோ 100 சதவீதம் ஒட்டுண்ணிப் பரம்பரை
  ஆக, உனக்கு நான் மேல். … ஆனால்,

  என்மேல் குதிரையேறி மிதிக்கிறாயா?
  தடவித் தடவிக் கொடுத்தாலும்
  தருணம் வரும் கவனித்துக் கொள்கிறேன்.

  • விபரீத விபத்துக்கு வித்திடுவது நீ தானா?!. தருணங்களை தவிர்த்துவிடு – ‘ தனியாக’ கவனிப்பேன்!!. வரும் தட்சணையில் நாம் வாழ்வோம் வளமாக?!

 14. நல்ல கவிதை நான் கண்டிப்பாக வரதட்சணை வாங்க மாட்டேன் இதை அனைவருக்கும் எடுத்து சொல்வேன்.

 15. மதிப்புக்குரிய வினவு,
  புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் ஆகிய இதழ்களைத் தேடித் தேடி பல வருடங்களாக காசு கொடுத்து வாங்கி படித்து வருகிறேன். பல தகவல்களை அறிந்துகொள்கிறேன்.
  வினவு மட்டும் இலவசமாக ஏன்?
  குறைந்தபட்ச விலையேனும் வைக்கலாமே?

 16. நேற்று தான் புரட்சிகர திருமண்த்தை காண மதுரைக்கு சென்று இருந்தேன். மண மக்களும் மென் பொருள் துறை சார்ந்த்வர்களே. வரதட்சனை மட்டுமல்ல சாதி மதம் சடங்குகள் போன்றவற்றை தூக்கி எறி்தார்காள். மிகவும் பாரட்ட பட வேண்டிய ஒன்று. மண மக்களை வாழ்த்துகிறேன்.

  • அண்ணே அசோக், ஒணான்கள் ஊரில் கழுதைகளும் வித்வான்களாம். எப்புடின்னு கேக்கிறீங்காள கழுத என்ன பன்னுச்சாம் காக்கைகள் இருக்குற எடத்துல போயி நின்னுகிட்டு தன்னை பெரிய பாடகர் வித்வான் அப்புடியின்னு நேனச்சுக்கிட்டு கத்த அரம்பிச்சுச்சாம் அப்ப இந்த காக்கைகள் பொறுக்க முடியாம கொத்தி கழுதையே வேரட்டி விட்டுச்சாம் அப்ப இந்த கழுத என்ன பன்னுச்சாம் ஒணான்கள் இருக்குற வொலிகிட்ட போயி கத்த ஆரம்பிச்சுச்சாம் ஒணான்கள் இயல்பே தலையே தலையே ஆட்டுற பழக்கமுடையாது இத பாத்த கழுத ஆகா நம்ம பாடுறத என்னாம ரசிச்சு கேக்கிறய்ங்க அப்புடியின்னு நேனச்சுச்சாம். நீங்க சரியான புரட்சிகர திருமணத்தை பாக்கலையின்னு நேனைக்கிறேன் அங்கே பெண்னும் மப்பிள்ளையும் மாலை போட்டுருந்தாங்களா அது கூட நான் போடல என்னுடைய திருமணத்துக்கு வந்தவய்களுக்கு சொறு கூட போடல இரண்டு பிஸ்கட் ஒரு டீ அவ்வளவுதான் அப்புறம் புரோகிதம் பன்ன ஹஜ்ரத்தும் கேடயாது இரண்டு பேரும் ஆளுக்கு நான்கு சட்சிகளை வைத்து புஸ்தகத்துல கையேழுத்து போட்ட உடனையே எங்க திருமணம் முடிந்து விட்டது அப்புறம் வேளியூர் நன்பர்களுக்கு அழைப்பு கொடுக்கவில்லை உள்ளுர் நன்பர்கள் சொந்தகாரங்க போதும் என்கிற மனநிலை மதுர காரவுகளுக்கு வரலன்னு நேனைக்கிறேன் பாவம் ஒங்கள ரொம்ப தூர வர வச்சு கஷ்டப்படுத்தியிருக்கிறாக 

   • ஹைதர் அலி,

    அசோக் குறிப்பிட்ட திருமணத்தில் சாதி, மதம், சடங்கு இல்லையென கூறியிருக்கிறார். நீங்கள் செய்தது மதத்திற்குள்ளேதானே? மற்றபடி உங்கள் திருமணம் எளிமையாகவும், சடங்குகளின்றி நடந்த்தற்கும் வாழ்த்துக்கள்!

 17. நல்ல கவிதை, வாழ்த்துக்கள், இதெல்லாம் சூடும் சொரணையும் உள்ள ஆண்களுக்கு சரிதான். எதுவும் இலாத ஜென்மங்களுக்கு?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க