Sunday, September 24, 2023
முகப்புஉலகம்அமெரிக்காலங்ஸ்ட்டன் ஹ்யூஸ்: அமெரிக்காவிலிருந்து ஒரு மக்கள் கவிஞன்!!

லங்ஸ்ட்டன் ஹ்யூஸ்: அமெரிக்காவிலிருந்து ஒரு மக்கள் கவிஞன்!!

-

இலக்கிய அறிமுகம் – 3 லங்ஸ்ட்டன் ஹ்யூஸ் (1902–67)

அமெரிக்க கருப்பின மக்களின் மகாகவி என கருதப்படுகிறவரான ஹ்யூஸின் கவிதைகள் ஆப்பிரிக்க அமெரிக்க மக்களின் பண்பாட்டின் செழுமையை அடையாளப்படுத்துவன. இலக்கியத்தின் சமூக அரசியல் பணியை பற்றிய உணர்வுடைய வாசகர்கள் சமூக அநீதிகட்கெதிரான மிக காத்திரமான அமெரிக்க இலக்கிய குரலாக கருதுவர். கவிதையின் உள்ளடக்கம் பற்றிய அக்கறையற்றவர்கள் கூட அவரது கவிதையின் அழகியல் பண்புகளை மெச்சுவோராக இருந்துள்ளனர்.

அதே வேளை கவிதை என்பதை சிக்கலானதும், சாதாரண மனிதரின் வாசிப்பிற்கு பிடிபடாததாயும் இருக்க வேண்டுவோருக்கு அவரது கவிதைகள் படு சராசரியானவையாகத் தோன்றின. முதலாளி வர்க்க நவீனத்துவ அளவுகோல்களைப் பற்றிய அக்கறை இல்லாது தனது சமூக அக்கறையை வெளிப்படுத்துகிற நோக்கில் மட்டுமே ஹ்யூஸ் தனது கவிதைகளைப் படைத்தார்.

பத்தொன்பதாவது வயதில் தனது முதல் கவிதையை பிரசுரித்த ஹ்யூஸ் படித்த நடுத்தர வர்க்க கருப்பின பின்னணியில் பிறந்து வளர்ந்தவர். தொடக்க காலத்திலிருந்தே கருப்பு அமெரிக்கர்கட்கு எதிரான கொடுமைகளையும் இனப் பாகுபாட்டையும் அவருடைய கவிதைகளில் பெரும்பாலானவை வெளிப்படுத்தின. அவருடைய கவிதைகளில் கருப்பின மக்களின் இசையின் செல்வாக்கு பலவாறாகவும் தன்னை வெளிப்படுத்தியது.

1930 க்குப் பின்பு அவர் தன்னை ஒரு இடதுசாரியாக அடையாளப்படுத்துகிறார். 1940 தொட்டு அமெரிக்காவின் FBI (மத்திய அரசின் போலிசு விசாரணை நிறுவனம்) அவர் கம்யூனிஸ்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டாரா என்று விசாரித்து வந்தது. அவர் என்றுமே கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினராக இருக்கவில்லை என்று கூறிவந்த போதும், 1944 முதல் “அமெரிக்கருக்குத் தகாத” (Un-American) செயற்பாடுகளில் ஈடுபட்டார் என்று அவர் மீது பல்வேறு மட்டங்களிலும் குற்றஞ்சாட்டப்பட்டு வந்தது.

வலதுசாரி அரசியல்வாதிகளாலும், ஊடகங்களாலும் இலக்கு வைக்கப்பட்ட ஹ்யூஸ் 1953 ஆம் ஆண்டு அமெரிக்க சனநாயக மறுப்பின் உச்சகட்டமாக விளங்கிய “மக்கார்த்தி” யுகத்தின்போது மக்கார்த்தி குழுவின் முன் சாட்சியமளிக்குமாறு சட்டப்படி பணிக்கப்படுகிறார். தான் இடதுசாரி கிளர்ச்சிப் போக்குடைய “தவறுகளைச்” செய்ததாக ஒப்புக்கொள்ளும் ஹ்யூஸ் தன் நண்பர்கள் எவரையும் காட்டிக் கொடுக்க மறுக்கிறார். அவரை மக்கார்த்தி குழு குற்றமற்றவர் என்று விடுவித்தாலும் அவருக்கெதிரான வலதுசாரி தாக்குதல்கள் தொடர்ந்தன.

அதன்பின்பு தன்னை வெளிவெளியாக ஒரு கம்யூனிஸ்டு அனுதாபியாகக் காட்டிக் கொள்வதை ஹ்யூஸ் தவிர்த்தாலும், கருப்பு இனத்தவரின் விடுதலை பற்றியும் ஏகாதிபத்திய எதிர்ப்பிலும் அவருடைய அக்கறை வலுவானதாகவே இருந்து வந்தது. அமெரிக்க கருப்பின மக்களின் சிவில் உரிமை இயக்கத்திற்கு ஆதரவு வழங்கிய ஹ்யூஸ் மிதவாத போக்கை ஆதரித்து வன்முறையை நிராகரிக்கிறார். ஹ்யூஸின் மிதவாத அணுகுமுறையின் விளைவாக அவரை அமெரிக்க அதிகார நிறுவனமும், இலக்கிய மேட்டுக்குடிகளும் ஏற்க முன்வருகின்றனர். எனவே நமக்கு அறிமுகமான ஹ்யூஸின் இடதுசாரி அடையாளம் அவரை தமிழுக்கு அறிமுகப்படுத்துவோரது அரசியல் நிலைப்பாடுகள் காரணமாகவும் மிகவும் மழுங்கடிக்கப்பட்டே வழங்கப்பட்டு வருகிறது.

25,000 வரிகளுக்கு மேல் விரியும் பலவாறான கவிதைகள் 10 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. ஐந்து புனைகதை தொகுப்புகள், ஒரு நாடகப் பிரதி, மூன்று கருப்பின வரலாற்று நூல்கள், சிறுவர் நூல்கள் என்பன உட்பட 36 நூல்கள் வெளியாகியுள்ள நிலையில் ஹ்யூஸை ஒரு சில ஆக்கங்களைக் கொண்டு அடையாளப்படுத்த இயலாது. கவிஞர் என்ற வகையிலும் அவருடைய ஆளுமையின் வீச்சு விசாலமானது. எனவே அவருடைய சமூக அக்கறைகளைச் சுட்டிக்காட்டும் கவிதைகட்கும் முக்கியமாக நம்மிடமிருந்து மறைக்கப்பட்டு வரும் வலுவான இடதுசாரி அடையாளத்தைப் புலப்படுத்தும் கவிதைகட்கும் என்னுடைய தெரிவில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

உருவத்திலும் உள்ளடக்கத்திலும் அவரது கவிதைகள் தொடுகிற விசாலமான பரப்பை இங்கு தரப்பட்டுள்ள சில கவிதைகளால் சரிவர அடையாளப்படுத்த இயலாது என்பதை வாசகர்கள் விளங்கிக் கொள்வார்கள் என நம்புகிறேன்.

_______________________________________________

மாஸ்கோ

விடியலின்
மின்னும் வெள்ளி மகோன்னதத்தில்
அலைகின்ற
செங்கொடிகள் இங்கே-
செத்தொழிந்த கடந்த காலத்திடம்
மன்னிப்புக் கோராத
செங்கொடிகள். (1938)

___________________

மாநகர் (சிறுவர்க்கான கவிதை)

காலையில் மாநகர்
பாடுகின்ற பாறையில்
பாடல் ஒன்று செய்து
தன் சிறகினை விரித்திடும்.

மாலையில் மாநகர்
தன் தலையைச் சூழ்ந்திட
விளக்குகளைத் தொங்க விட்டு
தூங்குவதற்குச் சென்றிடும்.

______________________

ஒடுக்குமுறை

இப்போது
கனவுகள் காண்போருக்கு
கனவுகள் கிடைப்பதில்லை
பாடுவோருக்கு
பாடல்கள் கிடைப்பதில்லை.

சில மண்களில்
இருண்ட இரவும்
குளிர்ந்த எஃகுமே
ஓங்கி நிற்கின்றன
எனினும்
கனவு திரும்ப வரும்
பாடலுந்தான்.
அதன் சிறையை
நொறுக்கி விட்டு. (1947)

_______________________________

சேரிக் கனவுகள்

தண்டுகள் இல்லாததால்
ஊட்டமளிக்க வேர்களின்றி
இளவேனிலின் சிறு கனவுகள்
காற்றினில் அரும்புகின்றன.
உறவின்றி
அப்பாவித்தனமாக
மிக இளையன் போல
காற்றில் மட்டுமே
அவை தொற்றிக் கிடக்கின்றன. (1964)

___________________________________

அகதித் தெருவின் பாடல்

அகதித் தெருவே ! அகதித் தெருவே !
இங்கிருந்து நான் எங்கே போவேன் ?
கால்கள் களைத்திட வீதி கனக்குது !
அச்சம் எந்தன் நெஞ்சை நிறைக்குது !
வெகு தொலைவின் நான் விட்டுப் பிரிந்தவை-
வீடு எங்குமில்லை !
தொல்லையின் இருண்ட காற்று மனத்தோடு முனகும்-
அக்கறை காட்ட எவருமே இல்லை !
கசப்பு மிகுந்ததென் கடந்த காலம் !
நாளை – என்ன இருக்கிறது ?

அகதித் தெருவே அகதித் தெருவே
அகதித் தெருவின் வழியே நடந்து
இங்கிருந்து நான் எங்கே போவேன் ?
பிச்சை கேட்பேனோ ? களவு செய்வேனோ ?
பொய்யுரைப்பேனோ ? மண்டியிடுவேனோ ? அல்லது
போராற் சோர்ந்த செவிட்டு ஆடென
நெடுஞ்சாலை வழி அலைந்து அழுவேனோ ?
உலகந்தான் என் மன்றாடலைக் கேட்குமோ ?

போரின் தேவுகள் முழங்கி உறுமும் சீனத்தினின்று.
சுதந்திரம் ஒழித்த இருண்ட மண்கள் அனைத்தினின்றும்.
ஒளியினதும் மகிழ்வினதும் மாநகரம் வியன்னா –
ஒருகால் வால்ற்ஸ்  நடனக் களிப்பு மிக்கது,
இப்போது சோகத்தின் தலை கவிழ்ந்துள்ளது.
தனது உல்லாசம் பறிக்கப்பட்டு இருண்ட எத்தியோப்பியா
எஃகின் விதைகளை வெடிகுண்டுகள் மண்ணுள் விதைக்கும் ஸ்பெயின்
நாளையை ஒளியூட்டும் சுதந்திரச் சிலையே
பார் ! என் துயரங்கட்காக மனமிரங்கு:
வீடு எங்குமில்லை, அக்கறை காட்ட எவருமில்லை !
கசப்பு மிக்கதென் கடந்த காலம் !
நாளை – என்ன இருக்கிறது ?
அகதித் தெருவே ! அகதித் தெருவே !
அகதித் தெருவின் வழியே நடந்து
இங்கிருந்து நான் எங்கே போவேன் ? (1940)

_______________________________________________

புரட்சியின் பாட்டு

புரட்சியின் பாட்டொன்றை எனக்காக
புரட்சியின் பாட்டொன்றை நீ பாடு

உலகம் முழுவதும் பெருந்தீ போல்
பரவிட விரியும் புரட்சியிது
மண்ணில் இருந்தொரு செங்கொடியை – மக்கள்
கைகளில் விரிந்திடச் செய்திடுமோர்

(புரட்சியின் பாட்டொன்றை .. .. )

முடிந்ததோர் காலம் அமிழ்ந்தழிய
இளமையுஞ் சிரிப்பும் வலிமை தர
ஐயத்தின் சாயல் அறவொழிய
இடியென ஒலி மிகக் கூவியெழும்

(புரட்சியின் பாட்டொன்றை .. .. )

பன்னூற்றாண்டின் போர் அழிவும்
மன்னர்கள் பொய்யர்கள் வஞ்சனையும்
புது நல வாழ்வின் தகையினிடை
முடிவுறப் பேரலையாய் உயரும்

(புரட்சியின் பாட்டொன்றை .. .. )

கரு நிற இனத்தவர் தளை அகல
பிணித்திடும் விலங்குகள் உடைந்து அற
மனிதரைப் பிரிக்கும் மதில்கள் விழ
கொடுமையின் தேவுகள் கதிகலங்க

(புரட்சியின் பாட்டொன்றை .. .. )

மானுடப் பிறவியின் சிறு வயதோர்
மகிழ்வுடன் முடிவினில் துயில் எழவும்
மருத்துவர் கரத்தினில் அலசினைப் போல்
பயங்களைத் துணிக்கும் தீச்சுடராம்

(புரட்சியின் பாட்டொன்றை .. .. )

________________________________________

–          சி.சிவசேகரம்

 1. அவருடைய dreams எனும் கவிதையும் மிகவும் நேர்த்தியான உள்ளடக்கங்களோடு இருக்கும். அவரை நினைவஊட்டியதற்கு நன்றி.

 2. “உருவத்திலும் உள்ளடக்கத்திலும் அவரது கவிதைகள் தொடுகிற விசாலமான பரப்பை இங்கு தரப்பட்டுள்ள சில கவிதைகளால் சரிவர அடையாளப்படுத்த இயலாது என்பதை வாசகர்கள் விளங்கிக் கொள்வார்கள் என நம்புகிறேன்”

  இல்லை கவிதைகளில்தான் வலி அதிகம் ._______________________________________________

 3. இந்த இலக்கிய அறிமுகத் தொடர் சிறந்த‌ முயற்சி. எனினும், இந்த அறிமுகம் போதுமானதாக‌ இல்லை. அறிமுகம் படைப்பாளிகளை பற்றிய‌ அழகியதொரு சித்திரத்திரத்தை கொடுப்பதாக இல்லை.மாறாக சிறு குறிப்பை போல கடமைக்கு எழுதப்படுகிறது. தோழர் சிவசேகரம் இதை பரிசீலிக்க வேண்டும்.மேற்கொண்டும் தொடர்ச்சியாக வரப் போகிற‌ இத்தொடர் விரிவான அறிமுகத்தை கொண்டிருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.

  • இணையத் தளக் கட்டுரைகள் மிக நீளும் போது வாசிப்பிற்கு வசதியாக அமைவதில்லை என்று கருதியே நீளத்தை மட்டுப் படுத்தி வந்தேன். ஹ்யூஸ் போன்றோர் பற்றிப் பக்கக் கணக்காக எழுதினும் போதாது. அவரைப் பற்றி அதிகம் பேசப் படாத ஒரு பக்கத்திற்கு சற்று அழுத்தம் கொடுத்து எழுதினேன்.
   மேற்கொண்டு சற்று விரிவு படுத்துகிறேன்.

 4. தோழர் சிவசேகரம் அவர்களே !
  நல்ல விஷயங்களை சொல்ல வரும் போது அதை முழுமையாய் சொல்லுவதே சரியானது. பதிவுலகில் வசைகளும் ,சேறடிப்பதும் நிரந்து கிடக்கிறது.
  இது போன்ற அரிய விடயங்களை அவை நீண்டதாக இருந்தாலும் எழுதியே தீர வேண்டும் .
  இப்படிப்பட்ட கலை வடிவங்களை / கலைஞர்களை பற்றி எல்லாம் அறிய ஆவலாக உள்ளோம் .
  தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க