privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திதண்ணிப்பானை! ஜாக்கிரதை!!

தண்ணிப்பானை! ஜாக்கிரதை!!

-

ரு கிலோமீட்டர் தூரத்துக்கு தோரணமும், கொடியுமாக தெருவே பளபளவென்று மின்னியது. “உன்னை எங்கெங்கு தொட்டாலும் இளமை” என்று இசைத்தட்டு வழியாக எம்.ஜி.ஆர் தெருவில் பாடிக்கொண்டிருந்தார். குரல் வந்த திசையை நெருங்கிப் போகப்போக தெருவோரத்தில் ஆங்காங்கே கரைவேட்டியுடன் அ.தி.மு.க. கட்சிக்காரர்கள் பளிச்சிட்டனர். சூழ்நிலையின் பரபரப்பும், தெருவின் புதுப்பொலிவும் அங்கு என்னதான் நடக்கிறது என்ற ஆவலைத் தூண்டியது.

திடீரென புதுப்புது ஸ்கார்பியோ, இன்னோவா கார்கள் ஒரு ஐந்தும் சுமோ, மாருதி ஆம்னிகளும் சர்சர்ரென்று சீறிப்பாய்ந்து வர, ஹாரன் சத்தம் கிலியூட்ட, போகிற வருகிறவர்கள் சடாரென விலகி நின்று வேடிக்கைப் பார்த்தனர். நாலைந்து கார்கள் அஞ்சு நிமிசத்துக்கு முன்னால்தான் புதுசாக தரைக்கு இறக்கியது போல இருந்தது. கார்தான் புதுப்பொலிவு என்றில்லை. காரிலிருந்து இறங்கிய கரைவேட்டிப் பேர்வழிகளோ, இப்பொழுதுதான் கஞ்சிபோட்டு இஸ்திரி பண்ணியவர்கள் போல புதுமிடுக்குடன் தென்பட்டனர். ஆளோடு சேர்ந்து அயர்ன் பண்ணியிருப்பார்களோ?! என் பாட்டுக்குப் போனவனை சூழ்நிலை சுண்டியிழுத்தது. தொலைவிலிருந்து பார்க்கக் காட்சிகள் துல்லியம் பத்தாததால் பந்தலை நெருங்கினேன்.

“சூளைமேடு நாலாவது வட்டம் சார்பாக அண்ணனுக்கு இந்த பொன்னாடையை….” முழு வார்த்தையை முடிப்பதற்குள் “சூளைமேடு இளைஞர், இளம்பெண் பாசறை சார்பாக, புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பொற்பாதங்களை வணங்கி இந்த பொன்னாடையை”… வரிசையாக வந்த எந்த பொன்னாடையும் முழு வாக்கியமாக முடியவில்லை. “பகுதிக் கழகக் செயலாளரும், சங்கு ரியல் எஸ்டேட் தொழிலதிபருமான அண்ணன் சங்கு பாஸ்கரை தலைமையேற்று நடத்தும்படி இதய தெய்வம் அம்மா அவர்களின் பாதம் பணிந்து வேண்டுகிறேன்..! பேசி முடிப்பதற்குள் கிடுகிடுவென விழுந்த பொன்னாடைகள், அப்புறம் தோரணம், கொடிகள்,மைக்செட்டு என எல்லாவற்றுக்கும் என் மனம் செலவுக்கணக்கை போட்டுக் கொண்டிருக்கும்போதே, “அம்மா வாழ்க! புரட்சித் தலைவி அம்மா வாழ்க!” என்று ஒருவர் சாமி வந்தது போல கத்த, சுத்தியிருந்த கரைவேட்டிகள் தோளில் கிடந்த துண்டு எகிற கத்தினர். மின்னல் வேகத்தில் பந்தலுக்குப் பக்கத்தில் கூட்டத்தை பிளந்து கொண்டு ஒரு பளப்பள இன்னோவா வர, யாரும் எதிர்பார்க்காதபடிக்கு சரவெடி ஏரியாவையே பிளந்து கட்டியது.

மார்க்கெட் மாடு தெருவில் வெருண்டு ஓடி பந்தல்பக்கம் வர.. “தங்கத் தாரகை அம்மா வாழ்க!” என்ற காட்டுக் கத்தல் ஒலிபெருக்கியில் காற்றைக் கிழிக்க மாடு திக்கு திசை புரியாமல் வேறுபக்கம் ஓடியது. சத்தியமாக ஒரு அய்ம்பதாயிரம் வரை செலவாகி இருக்கும் என மனசுக்குப் பட்டது.

மைக்கை இரண்டு முறை பிடித்து பிடித்து விட்ட சங்குபாஸ்கர் கருணாநிதியை ஒரு பிடிபிடித்தார். “புரட்சித் தலைவி இதயதெய்வம் அம்மாவைப் பார்த்து கேள்வி கேட்க இந்த கருணாநிதிக்கு அருகதை உண்டா? யார் இந்த அழகிரி? யார் இந்த கனிமொழி?… பேச்சு சூடேறி ஒரு கட்டத்தில் “நான் சவால் விடுகிறேன்! எச்சரிக்கிறேன்! ஏ! ஸ்டாலினே புரட்சித் தலைவி, ஏழைகள் வீட்டுத் தங்கம், திராவிடச்சிங்கம் அம்மா அவர்களைப் போல உன்னால் நாலுவார்த்தை இங்கிலீஷ் பேச தெரியுமா? வருங்கால முதல்வர் அம்மா என்பதை வரலாறு சொல்கிறது! கோபாலபுரத்து கொள்ளைக்காரர்களே… இதோ பொன்மனச்செல்வி அம்மா அவர்களின் ஆணைப்படி மக்கள் உங்கள் கதையை முடிக்க காத்திருக்கிறார்கள்…! பேச்சு நீளமும், ஆங்காங்கே பஞ்ச் டயலாக்கும், சொல்லி வைத்தார் போல விசில் சத்தமும் எதற்குத்தான் இத்தனை களேபரம் என்று ஆவல் மிகுந்து இன்னும் பந்தல் பக்கம் நெருங்கினேன்.

“இப்போது அம்மாவின் போர்ப்படைத் தளபதி… இதயதெய்வம் அம்மாவின் உண்மை விசுவாசி.. காவல் தெய்வம் அம்மாவின் கழக முழக்கம்…” மேற்கொண்டு அடுக்கிக் கொண்டே போவதைக் கேட்க விரும்பினாலும், கேட்க முடியாமல், திடீரென்று மேலிடத்தை நினைவுக்கு வந்தவர் போல சடக்கென எழுந்து மைக்குக்கு முன் நயினார் நாகேந்திரன் எழுந்தருளினார். குரலைக் கனைத்துப் பேசத் தொடங்குவது போல பாவனைகள் காட்ட… வரிசையாக பொன்னாடை வந்து விழுந்தது. முகம் பாலிஷ் போட்ட கிரானைட் போல வழு, வழு என பளிச்சிட்டது. ஆளை நிற்க வைத்து நெசவு செய்ததுபோல சட்டையும், வேட்டியும் சன்னமாக மின்னியது.

வெயிலை எப்போதாவது பார்க்கும் நெற்றியில் வியர்வை அரும்ப புத்தம்புது வெள்ளைக் கைக்குட்டையை ஒற்றி எடுத்தபோது இரட்டை இலை தங்க மோதிரம் நயினாரின் கைவிரல்களை அடைத்து தகதகவென மின்னியதை முப்பது அடி தூரத்திலிருந்து பார்க்க முடிந்தது. அங்கே எல்லாம் புதுசு, பிரமுகர்கள் வந்த கார்கள் புதுசு, பேசியவர்கள் பாதாதி கேசம் வரை பார்க்குமிடமெல்லாம் புதுசோ புதுசு, சுற்றுவட்ட தெருக்காட்சிகளும் புதுசு, பந்தலின் ஓரத்தில் நின்ற – மன்னிக்கவும் கொண்டு வந்து நிறுத்தப்பட்டிருந்த – கொஞ்சம் மக்கள் மட்டும் கந்தலான பழசாக தனியே தெரிந்தனர்.

“என்னதான் நடக்கும் நடக்கட்டுமே” என்ற எம்.ஜி.ஆர். பாட்டை நினைத்தபடி இன்னும் கூட்டத்தை விலக்கி முன்வரிசைக்கே போனேன்.. விசயம் விளங்கியது.. அங்கே பந்தலுக்கு கீழே குவிக்கப்பட்ட மணலில் அ.தி.மு.க கொடியின் நிறத்தை பெயிண்டில் வரைந்து மூன்று பெரிய தண்ணிப் பானைகள் இடைவெளிவிட்டு குந்தியிருந்தன. முப்பெரும் பானைகளின் தாய் பானையாய் அவைகளுக்குப் பின்னால் டிஜிட்டலில் அச்சிடப்பட்ட ஜெயலலிதாவின் முகம் தொங்கியது. ஒரு கோணத்தில் முதுமக்கள் தாழிபோலவும் ஜெயலலிதாவின் உருவம் தெரிந்தது. மறக்காமல் பானைகளில் இரட்டை இலை சின்னம் கண்ணைப் பறிக்கும்படி பளிச்-சிட்டது.

தண்ணீர் பந்தலை திறக்கும் நிகழ்ச்சியாக.. பானைக்குள் டம்ளரில் மொந்து நயினார் குடிக்க.. மீத தண்ணியை காசி தீர்த்தம் போல கரை வேட்டிகள் தள்ளுமுள்ளோடு பகிர்ந்து கொண்டன. “த்தூ இதுக்குத்தான் இவ்வளவு படாடோபம், ஆர்ப்பாட்டமா” என்று நான் மனம் நொந்த வேளையில், நயினாரின் குரல் வெடித்தது.

“மக்களின் தாகம் தீர்க்க, தாயுள்ளத்தோடு அம்மா தமிழகமெங்கும் தண்ணீர் பந்தல் திறக்கச் சொல்லி ஆணையிட்டதற்கிணங்க.. இந்தப் பகுதியில் தண்ணீர் பந்தல் திறந்த கழகக் கண்மணிகளே.. இதே சுறுசுறுப்போடு பணியாற்றி கருணாநிதி ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும்வரை இரத்தத்தின் இரத்தங்கள் தாகம் தணியாது.. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களின் தாகம் தணிக்கும் மக்கள் தெய்வம் அம்மாவின் ஆட்சி அரங்கேறும் நாள் வெகுதொலைவில் இல்லை… இது சத்தியவாக்கு…” நைனார் நீட்டிக்கொண்டே போனார். சங்கு பாஸ்கரும் கொஞ்சம் நம்பிக்கை வந்தது போல சுற்றியிருப்பவர்களை திரும்பிப்பார்க்க, கைதட்டல் இன்னும் பலமானது.

பக்கத்து பக்கத்து தெருக்களில் திரும்பியபோது விஜயகாந்த் பானை, கலைஞர் பானையும் கண்ணில்பட்டது. ‘அறுபதாண்டு சுதந்திரத்தில்’ தண்ணீர் பானை வைப்பதே ஒரு மாபெரும் அரசியல் நடவடிக்கையாகவும், மக்கள் தொண்டாகவும் வளர்ந்திருக்கிறது. இந்த மானக்கேட்டிற்கு ஒரு திறப்பு விழா, அதை ஒலிபரப்ப மைக்செட்டு!

ஏரியும், ஆறும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு. ஏமாளி மக்களுக்கு தண்ணிப்பானை!

தொடர்புடைய பாடல்

Adimai_Sasanam_04_Kanji

______________________________________________
– புதிய கலாச்சாரம், ஜூலை – 2010
______________________________________________