privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திபோபால்: நீதி வேண்டுமா, புரட்சி ஒன்றுதான் பாதை !!

போபால்: நீதி வேண்டுமா, புரட்சி ஒன்றுதான் பாதை !!

-

___________________________________________________________________
போபால்: நீதி வேண்டுமா, புரட்சி ஒன்றுதான் பாதை ம.க.இ.கவும் அதன் தோழமை அமைப்புக்களும் வெளியிட்டிருக்கும் இரண்டு ரூபாய் சிறு வெளியீடு. வாசகர்கள் இயன்ற அளவிற்கு இவ்வெளியீட்டை வாங்கி உறவினர்/நண்பர்களுக்கு விநியோகிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். வெளியீடு தேவைப்படுவோர் வினவு அலைபேசியில் – (91) 97100 82506 தொடர்பு கொள்க!
இந்த சிறு வெளியீட்டை மின்நூல் (PDF) வடிவில் பெற செய்ய இங்கே சொடுக்கவும்
___________________________________________________________________

அநீதி!

போபால் நச்சுவாயுப் படுகொலைநடந்து26ஆண்டுகள் முடிந்துவிட்டன.1984,டிசம்பர்2ஆம்தேதியன்று நள்ளிரவில் அமெரிக்க யூனியன் கார்பைடு தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய நச்சுவாயு 23,000 மக்களைக் காவு கொண்டது. தூக்கத்தில் மூச்சுத்திணறி விழித்தவுடன் விழிபிதுங்கி செத்தவர்கள், திக்குதிசை தெரியாமல் தப்பியோட முயன்று மிதிபட்டுச் செத்தவர்கள், பிணத்தோடு பிணமாக குற்றுயிராய்க் கிடந்து, நாய்களாலும் கழுகுகளாலும் கொத்தப்பட்டு மெல்லத் துடித்துச் செத்தவர்கள், மருத்துவமின்றி மக்கி மடிந்தவர்கள் என்று மிகக் கோரமாக அரங்கேறியது  அந்தப் படுகொலை. உயிர் பிழைத்தவர்களில் ஊனமானவர்கள் மட்டும் சுமார் 5 இலட்சம் பேர். அந்த நச்சுவாயு மரபணுவையே தாக்கிச் சிதைத்திருப்பதால், அதனை நுகர்ந்தவர்களுக்கு இன்று பிறக்கின்ற குழந்தைகள் கூட கண்கள் இல்லாமலும், கை கால்கள் வளைந்தும், தலைகள் பருத்தும், மூளை வளர்ச்சி இன்றியும் பிறக்கின்றன. இக்குழந்தைகளைக் கொஞ்சவும் முடியாமல் வெறுக்கவும் முடியாமல், வளர்க்கவும் முடியாமல் கொல்லவும் முடியாமல் தவிக்கிறார்கள் தாய்மார்கள். அன்று தங்கள் கண் முன்னே மூச்சுத் திணறிச் செத்த பிள்ளைகளைப் பார்த்த பெற்றோர் பலர் இன்னமும் மனநோயிலிருந்து மீளமுடியவில்லை. பல குழந்தைகள் அநாதைகளாகச் சீரழிகின்றனர்.

ஹிரோசிமாவில் அமெரிக்கா நடத்திய அணுகுண்டுத் தாக்குதலையும் ஜெர்மனியில் இட்லர் நடத்திய விசவாயுப் படுகொலையையும் உலகமே நினைவு கூர்கிறது. ஆனால் நம்முடைய நாட்டில் நடந்த போபால் படுகொலையைப் பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

விபத்தா?

இந்தப் படுகொலை வழக்கை விசாரித்துத் தீர்ப்பு சொல்வதற்கே 26 ஆண்டுகள் எடுத்துக் கொண்டிருக்கிறது இந்திய நீதித்துறை. சென்ற ஜூன் மாதம் வெளிவந்த நீதிமன்றத் தீர்ப்பைப் பார்த்தீர்களா? யூனியன் கார்பைடு நிறுவனத்தின் பங்குதாரரான கேசவ் மகிந்திரா என்ற இந்தியத் தரகு முதலாளிக்கும், அந்த நிறுவனத்தின் அதிகாரிகளுக்கும் இரண்டாண்டுகள் மட்டும் சிறைத்தண்டனை விதித்த போபால் நீதிமன்றம், அவர்களை ஒரு நாள்கூட சிறைக்கு அனுப்பாமல், அன்று மாலையே பிணையில் விடுவித்திருக்கிறது. “இது யூனியன் கார்பைடு நிறுவனமோ அதன் அதிகாரிகளோ தெரிந்தே அனுமதித்த விபரீதம் அல்ல, எதிர்பாராமல் நடந்துவிட்ட சாலை விபத்துக்கு ஒப்பான இன்னொரு விபத்து” என்பதுதான் நீதிமன்றத்தின் தீர்ப்பு. பத்திரிகைகளும் கூட ‘போபால் விபத்து’, ‘போபால் துயரம்’ என்றே இதனைச் சித்தரிக்கின்றன. அமெரிக்கக் கம்பெனிக்கும், இந்திய அரசுக்கும், அதிகாரிகளுக்கும் இப்படி ஒரு விபரீதம் நடக்கும் என்று முன்னமே தெரிந்திருக்கவில்லையா?  இது யாரும் எதிர்பாராமல் நேர்ந்த விபத்தா, அல்லது தெரிந்தே நடத்தப்பட்ட படுகொலையா?

விபத்து என்பது நாம் நம்மையும் மீறிய சூழ்நிலையின் காரணமாகவோ நமது தற்செயலான கவனக்குறைவின் காரணமாகவோ நடப்பது. போபால் படுகொலை அப்படிப்பட்டதல்ல. மெதில் ஐசோ சயனைடு என்ற நச்சுவாயுவிலிருந்து பூச்சி கொல்லி மருந்தைத் தயாரிக்கும் யூனியன் கார்பைடின் அபாயகரமான தொழில்நுட்பம் ஐரோப்பிய நாடுகளில் ஏற்கெனவே தடை செய்யப்பட்டிருந்தது. யூனியன் கார்பைடின் ஆலைகளில் நடந்த பல விபத்துகளுக்குத்  தரவேண்டிய இழப்பீட்டுத் தொகையும் அமெரிக்காவில் அதிகமாக இருந்தது. ஏழை நாடான இந்தியாவில் உயிரின் விலை மலிவு, அரசாங்கத்தை ஊழல்படுத்துவதும் எளிது என்பதால் காலாவதியான இந்த தொழில்நுட்பத்தை, நவீன தொழில்நுட்பம் என்று புளுகி அபாயகரமான இந்த உற்பத்தியை அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு மாற்றியது யூனியன் கார்பைடு.

தொற்றுநோய்களுக்கான மருத்துவமனைகள், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஆலைகள், அபாயகரமான ஆலைகள் போன்றவற்றை ஊருக்குத் தொலைவில்தான் அமைக்கவேண்டும் என்பது உலகெங்கும் உள்ள விதி. ஆனால் போபால் நகரின் மையமான பகுதியில் ஆலையை அமைத்தது யூனியன் கார்பைடு. நச்சுவாயுக்கள் இரசாயனப் பொருட்களைக் கையாளும் ஆலைகளில் விபத்து நேர்ந்தால் செய்துகொள்ள வேண்டிய தற்காப்பு ஏற்பாடுகள் என்ன என்பதையாவது ஆலைத் தொழிலாளர்களுக்கும், சுற்றுவட்டார மக்களுக்கும் விளக்கியிருக்க  வேண்டும். ஆனால் இத்தகையதொரு நச்சுவாயுவைக் கையாள்கிறோம் என்ற உண்மையை அந்த ஆலையின் தொழிலாளிகளுக்கே தெரியாமல் மறைத்திருந்தது யூனியன் கார்பைடு.

1981 முதல் அந்த ஆலைக்குள் 7 முறை நச்சுவாயுக்கசிவு ஏற்பட்டு, தொழிலாளிகள் தீக்காயம் அடைந்திருக்கிறார்கள், இறந்திருக்கிறார்கள். இந்த உண்மைகளை மறைத்தது மட்டுமல்ல, இலாபத்தை அதிகரிப்பதற்காக சயனைட் வாயுக் கிடங்கைக் கண்காணிக்கும் வல்லுநர்களையும் தொழிலாளர்களையும் ஆட்குறைப்பு செய்தது நிர்வாகம். குளிரூட்டப்பட்ட  நிலையில் வைக்கப்படாவிட்டால் சயனைட் கிடங்கு வெடித்து வாயு வெளியேறும் என்று தெரிந்தும் மின்சாரச் செலவை மிச்சப்படுத்துவதற்காக குளிரூட்டும் எந்திரத்தையும் நிறுத்தியது. மே, 1982இல் ஆலையைப் பார்வையிட்ட அமெரிக்க வல்லுநர்கள் குழு, 30 அபாயங்களைப் பட்டியலிட்டு, அவற்றை உடனே சரிசெய்யாவிட்டால் ஆலையில் பேரழிவு நடக்கும் என்று நிர்வாகத்தை எச்சரித்திருந்தது. போபாலைச் சேர்ந்த பத்திரிகையாளர் கேஸ்வானி ‘எரிமலையின் உச்சியில் போபால்’ என்று தொடர்ந்து பல கட்டுரைகளை நாளேடுகளில் வெளியிட்டார். இது தெரிந்தே நடந்த படுகொலைதான் என்பதற்கு இன்னும் ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. எனினும், எதிர்பாராத சாலைவிபத்துக்கு ஒரு ஓட்டுனருக்கு என்ன தண்டனை விதிக்கப்படுமோ, அதே தண்டனையைத்தான் ஆலைமுதலாளிகளுக்கும் அதிகாரிகளுக்கும் வழங்கியிருக்கிறது போபால் நீதிமன்றம்.
யார் குற்றவாளி?

23,000 மக்களைக் காவு வாங்கிய இந்த நச்சுவாயுவினால், ஆலைக்குள் இருந்தவர்கள் யாரும் சாகவில்லை. காரணம், கனமான ஈரத்துணியால் அவர்கள் முகத்தை மூடிக் கொண்டார்கள். சயனைட் வாயு தண்ணீரில் கரையக்கூடியது என்ற விவரம் அறிந்த அதிகாரிகள் சொல்லிக் கொடுத்த இந்தத் தற்காப்பு ஏற்பாட்டினால் உள்ளேயிருந்தவர்கள் தப்பிவிட்டார்கள். நச்சுவாயு ஆலையிலிருந்து வெளியே பரவுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகியிருக்கிறது. நச்சுவாயுக் கிடங்கு வெடித்துவிட்டது என்ற உண்மையை உடனே மக்களுக்குத் தெரிவித்து, ஈரத்துணியால் முகத்தை மூடிக்கொள்ளுமாறு அறிவுறுத்தியிருந்தால் பல்லாயிரம் உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும். ஆனால், மக்கள் மூச்சுத் திணறி துடித்துக்கொண்டிருந்த நிலையிலும் “இது எங்கள் ஆலையிலிருந்து கசிந்த வாயுவே அல்ல” என்று சாதித்தான் ஆலையின் ஒர்க்ஸ் மேனேஜர் முகுந்த். “மெதில் ஐசோ சயனைட் என்பது நஞ்சல்ல, கண்ணீர்ப்புகை போல கண்ணெரிச்சல் தருமே தவிர, உயிருக்கு ஆபத்தே இல்லை” என்று நவபாரத் டைம்ஸ் பத்திரிகைக்கு பேட்டி அளித்தான் போபால் ஆலையின் மருத்துவ அதிகாரி டாக்டர் லோயா. இரண்டு நாட்களுக்குப் பின் அமெரிக்காவிலிருந்து வந்திறங்கிய கார்பைடு நிறுவனத்தின் அதிகாரியோ, “கசிந்தது சயனைட் வாயுவே அல்ல” என்று புளுகினான்.

தாக்கியது சயனைட் வாயுவாக இருக்கக்கூடும் என்று ஊகித்து, மக்களைக் காப்பாற்ற சோடியம் தயோ சல்பேட் என்ற முறிவு மருந்தைக் கொடுக்கத் தொடங்கினார்கள் அரசு மருத்துவர்கள். இந்திய மருத்துவ ஆய்வுக்கழகமும் இதே மருந்தை சிபாரிசு செய்தது. இதனைத் தொடர்ந்து 10,000 குப்பிகள் ஊசிமருந்து ஜெர்மெனியிலிருந்து வந்திறங்கியது. சோடியம் தயோ சல்பேட்டைக் கொடுத்து மக்கள் பிழைத்துக் கொண்டால், ஆலையிலிருந்து வெளியேறியது சயனைட் வாயுதான் என்ற உண்மை உலகுக்கே அம்பலமாகிவிடும் என்பதால், அந்த மருந்தையே கொடுக்கவிடாமல் தடுத்தது கார்பைடு நிர்வாகம். இந்த மருந்து சப்ளையை நிறுத்தியது மட்டுமின்றி, இம்மருந்தைக் கொடுக்கக்கூடாது என்றும் ஆணையும் பிறப்பித்தது அரசின் சுகாதாரத்துறை.

“விபத்துக்குக் காரணம் சீக்கிய தீவிரவாதிகளின் சதிவேலை” என்பதுதான் கார்பைடு நிர்வாகம் முதலில் அவிழ்த்து விட்ட புளுகு. மறுநாள், “இது நிர்வாகத்தைப் பழிவாங்க ஒரு தொழிலாளி செய்த சதி” என்று வேறொரு பொய்யை பரப்பி விட்டது. “ஊட்டச்சத்துக் குறைவினால் ஏழைக் குழந்தைகளின் நுரையீரல் பலவீனமாக இருந்ததுதான் அவர்கள் சாகக் காரணம்” என்றும் “மக்கள் தாறுமாறாக ஓடியதனால்தான் பலர் மிதிபட்டுச் சாக நேர்ந்தது” என்றும் மிகவும் வக்கிரமாக பாதிக்கப்பட்ட மக்கள் மீதே பழியைப் போட்டது கார்பைடு நிர்வாகம். இவையெல்லாம் அன்று போபால் நாளேடுகளில் வெளிவந்த ஆதாரபூர்வமான செய்திகள். அனைவரும் அறிந்த உண்மைகள்.

ராஜீவ்

நாடறிந்த இவ்வுண்மைகள் எதுவும் தனக்குத் தெரியாதது போலவும், நேற்றுதான் செவ்வாய் கிரகத்திலிருந்து வந்து இறங்கியவர் போலவும் நடிக்கின்றார் மன்மோகன் சிங். போபால் வழக்கில் நடந்தது என்ன என்று பத்து நாட்களில் அறிக்கை தருமாறு அமைச்சர் குழுவுக்கு உத்தரவிடுகிறார். ப.சிதம்பரமோ ‘அரசாங்கம் கூடுதல் நிவாரணம் வழங்கும்’ என்று கூறி, பாதிக்கப்பட்ட மக்களின் வாயை பணத்தால் அடைக்க முயற்சிக்கிறார். ‘யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவரான ஆண்டர்சனை விடுவித்தது யார், அவனை ஏன் தண்டிக்கவில்லை’ என்று கேட்டால், எனக்குத் தெரியாது என்று அர்ஜூன்சிங்கும், ராஜீவுக்கு தெரியாது என்று சிதம்பரமும் புளுகுகின்றனர். ஏனென்றால் இந்தப் படுகொலையின் குற்றவாளி கார்பைடு கம்பெனி மட்டுமல்ல, காங்கிரசு அரசும்தான்.

தொழில் அமைச்சகத்தின் ஆட்சேபத்தை மீறி, 1975 அவசரநிலைக் காலத்தில் இந்த ஆலைக்கு உரிமம் வழங்கியது மட்டுமின்றி, ஆராய்ச்சி என்ற பெயரில் ஆலைக்குள் இரகசியமாக இரசாயனப் பரிசோதனைகள் நடத்துவதற்கும் அனுமதி அளித்தது இந்திராவின் அரசு. “இந்த ஆலையை நகருக்கு வெளியே மாற்றவேண்டும்” என்று கூறிய போபால் நகராட்சி அதிகாரியை அங்கிருந்து தூக்கியடித்தவர் அன்றைய ம.பி முதல்வர் அர்ஜூன்சிங்.  அமெரிக்காவிலிருந்து வந்து இறங்கிய ஆண்டர்சனை போலீசு கைது செய்தவுடனே தலையிட்டு பிணையில் விடுவித்ததுடன், அரசின் தனி விமானத்தில் டெல்லிக்கு வரவழைத்து, ஆண்டர்சனிடம் மன்னிப்பும் கேட்டு, அமெரிக்காவுக்கு வழியனுப்பி வைத்தவர் ராஜீவ் காந்தி. “ஆலையைப் பார்வையிட ஆண்டர்சன் வருகிறார். அவரைப் பாதுகாப்பாக திருப்பி அனுப்ப வேண்டும் என்று அமெரிக்க அரசு கூறியது. நாம் உத்திரவாதம் கொடுத்தோம்” என்று கூறியிருக்கிறார் அன்றைய வெளியுறவுத்துறைச் செயலர் ரஸ்கோத்ரா. “வெளியுறவுத்துறையின் நிர்ப்பந்தத்தினால்தான் ஆண்டர்சனை விடுவித்தோம்” என்று பேட்டி கொடுத்திருக்கிறார் இவ்வழக்கைக் கையாண்ட சி.பி.ஐ அதிகாரி லால். ஆனால் “1984இல் ஆண்டர்சன் இந்தியாவுக்கு வந்துபோனதற்கு எவ்வித ஆவணச்சான்றும் இல்லை” என்று கூறுகிறார் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். “ராஜீவுக்கு இதுபற்றியெல்லாம் எதுவுமே தெரியாது” என்று சாதிக்கிறது காங்கிரசு கட்சி. கொட்டை போட்ட கிரிமினல்களைத் தவிர வேறு யாரேனும் இப்படிப் புளுக முடியுமா? இப்படிக்கூட ஒரு அரசாங்கம் பேசமுடியும் என்பதை உங்களால் நம்பமுடிகிறதா?

துரோகம்

நம்பவே முடியாத அளவுக்கு நயவஞ்சகமான முறையில் இந்திய அரசும், உச்சநீதிமன்றமும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடுக்கடுக்காகத் துரோகம் இழைத்திருக்கின்றன. பாதிக்கப்பட்ட மக்கள் யூனியன் கார்பைடுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் தான் முதலில் வழக்கு தொடுத்தனர். உடனே, போபால் மக்களுடைய வழக்காடும் உரிமையைப் பறிப்பதற்காவே ஒரு சட்டம் இயற்றி,  பாதிக்கப்பட்டோர் அனைவரின் சார்பாகவும் தான் மட்டுமே வழக்காட முடியும் என்றது ராஜீவ் அரசு. அமெரிக்காவில் வழக்கு நடந்தால் பல நூறு கோடி டாலர் நிவாரணமாகத் தரவேண்டிவரும் என்பதால் வழக்கை இந்திய நீதிமன்றத்துக்கு மாற்றியது யூனியன் கார்பைடு.

வழக்கை நடத்தித் தீர்ப்பு வழங்காமல், நீதிமன்றத்துக்கு வெளியே பேசி முடித்துக் கொள்ளுமாறு கட்டைப் பஞ்சாயத்து செய்தது உச்ச நீதிமன்றம். 300 கோடி டாலர் இழப்பீடு கேட்டு வழக்கு போட்டிருந்த இந்திய அரசு, 47 கோடி டாலரை வாங்கிக்கொண்டு 1989இல் வழக்கை முடித்துக் கொண்டது. இதன்படி கொல்லப்பட்ட ஒரு உயிருக்கு யூனியன் கார்பைடு நிர்ணயித்த விலை 500 டாலர். “ஒரு அமெரிக்கனின் உயிருக்கு 5 இலட்சம் டாலர் வரையில் இழப்பீடு கொடுக்கப்படும்போது, இந்தியனின் உயிர் என்றால் இளக்காரமா?” என்று நிருபர்கள் கேட்டதற்கு, “இந்தியர்களுக்கு இது கணிசமான தொகைதான்” என்று பதிலளித்தான் அமெரிக்க நிறுவனத்தின் அதிகாரி.

உச்சநீதிமன்றத்தின் அமெரிக்க அடிவருடித்தனம் இத்துடன் முடியவில்லை. தன்னுடைய நிறுவனத்தின் பங்குகளை சந்தையில் விற்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கினால்தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவமனை கட்டுவதற்கு செலவு செய்ய முடியும் என்றது கார்பைடு கம்பெனி. உடனே தடையை நீக்கினார் நீதிபதி அகமதி. நச்சுவாயு கசிந்து பேரழிவு ஏற்படும் என்று தெரிந்தே இந்தக் குற்றத்தை செய்திருப்பதனால், ‘கொலைக்குற்றம் ஆகாத மரணம் விளைவிக்கும் குற்றம்’ என்ற பிரிவின் கீழ் தொடரப்பட்டிருந்த வழக்கை வெறும் விபத்து வழக்காகக் குறைத்தவரும் நீதிபதி அகமதிதான். இந்தியத் தரகு முதலாளியும் யூனியன் கார்பைடின் கூட்டாளியுமான கேசவ் மகிந்திரா உள்ளிட்டோர் மீதான வழக்கை இப்படி நீர்த்துப் போகவைத்ததற்காக, அகமதிக்கு கிடைத்த வெகுமதி, 600 கோடி ரூபாய் மதிப்புள்ள யூனியன் கார்பைடு அறக்கட்டளையின் தலைவர் பதவி.

அநீதியான இத்தீர்ப்பை எதிர்த்து வழக்கை நடத்திய சி.பி.ஐ மேல்முறையீடு செய்யவில்லை. மாறாக, ஆண்டர்சன் மீதான குற்றத்தையும் விபத்துக் குற்றமாகக் குறைக்கும்படி நீதிமன்றத்தில் மனுச்செய்தது சி.பி.ஐ. இந்த வழக்கிற்காக யூனியன் கார்பைடு நிறுவனம், பல்கிவாலா, நாரிமன் உள்ளிட்ட ஒரு பெரிய வக்கீல் பட்டாளத்தையே களத்தில் இறக்கியிருந்த சூழ்நிலையில், ஒரே ஒரு உள்ளூர் வக்கீலை வைத்துத்தான் இந்த வழக்கை நடத்தியது சி.பி.ஐ. ‘ஊழல் இல்லாதது, திறைமையானது, கண்டிப்பானது’ என்றெல்லாம் புகழப்படும் சி.பி.ஐ யின் யோக்கியதை இதுதான். இவ்வாறு மத்திய அரசு, மாநில அரசு, சி.பி.ஐ, உச்ச நீதிமன்றம், பிரபல வழக்குரைஞர்கள், ஊடகங்கள் என்று ஒரு பட்டாளமே அமெரிக்கக் கம்பெனியுடன் கைகோர்த்து நின்று பாதிக்கப்பட்ட போபால் மக்களுக்குத் துரோகம் இழைத்திருக்கின்றனர். அந்தத் துரோகத்தின் இறுதிக் காட்சிதான் தற்போது போபால் நீதிமன்றம் வழங்கியிருக்கும் இந்தத் தீர்ப்பு.

ஆண்டர்சன்

ஆண்டர்சன் அமெரிக்க யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவர் மட்டுமல்ல, போபால் ஆலையில் நடைபெற்ற விதிமீறல்கள், ஊழல்கள், முறைகேடுகள், இரசாயன ஆயுதத் தயாரிப்புக்கான சோதனைகள் ஆகிய அனைத்தையும் தனது நேரடியான கட்டுப்பாட்டில் வைத்து இயக்கிய முதல் குற்றவாளி. இந்தக் கொலைக்குற்றவாளியைத் திட்டமிட்டே தப்பவைத்த காங்கிரசு, இன்று ‘ஆண்டர்சனைக் கொண்டு வர மீண்டும் முயற்சிப்போம்’ என்று கதையளக்கிறது.

ஆண்டர்சன் மீதான வழக்கை சாதாரண விபத்து வழக்காக மாற்றச் சொல்லி சி.பி.ஐ மூலம் நீதிமன்றத்தில் மனுச்செய்தது வாஜ்பாயின் அரசு. “ஆண்டர்சனை அனுப்ப முடியாது” என்று அமெரிக்கா சொன்னவுடன் மறு பேச்சில்லாமல் வாயை மூடிக்கொண்டதும் வாஜ்பாயி அரசுதான். யூனியன் கார்பைடின் கூட்டாளியும் போபால் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருமான தரகு முதலாளி கேசவ் மகிந்திராவுக்கு பத்மபூஷண் விருது வழங்கவும் வாஜ்பாய் அரசுதான் சிபாரிசு செய்தது. பாஜக அமைச்சர் அருண் ஜெட்லி யூனியன் கார்பைடின் வழக்குரைஞராக இருந்தவர். கார்பைடின் கையாட்கள் எங்கும் நிறைந்திருக்கிறார்கள். அதனால்தான் “எங்கோ அமெரிக்காவில் இருக்கும் ஆண்டர்சனை இங்கே நடந்த விபத்துக்கு எப்படிப் பொறுப்பாக்க முடியும்?” என்று நியாயம் பேசுகிறார்கள் கார்பைடின் கைக்கூலிகள். 91 வயதை எட்டிவிட்ட ஆண்டர்சன் நியூயார்க்கில் உள்ள தனது பண்ணை வீட்டில் சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

டௌ கெமிக்கல்ஸ்

2001இல் இன்னொரு அமெரிக்க இரசாயனக் கம்பெனியான ‘டௌ கெமிக்கல்ஸ்’, கார்பைடு கம்பெனியை வாங்கிவிட்டது. வியத்நாமில் மக்களை எரித்துக் கொல்வதற்கான நாஃபாம் என்ற பாஸ்பரஸ் குண்டுகளையும், காடுகளை எரித்துப் பொட்டலாக்குவதற்கான ஏஜென்ட் ஆரஞ்சு என்ற நச்சு இரசாயனத்தையும் அமெரிக்காவுக்குத் தயாரித்துக் கொடுத்ததும், சதாம் உசேனுக்கு பேரழிவு இரசாயன ஆயுதங்களைத் தயாரித்துக் கொடுத்ததும் டௌ கெமிக்கல்ஸ் என்ற இந்தக் கொலைகார நிறுவனம்தான். போபால் ஆலையில் யூனியன் கார்பைடு விட்டுச் சென்றிருக்கும் கொடிய இரசாயனக் கழிவுகளை அரசாங்கம்தான் சுத்தம் செய்யவேண்டும் என்று கூறுகிறது டௌ கெமிக்கல்ஸ். இரசாயனக் கழிவுகள் நிலத்தடி நீரில் இறங்கி, ஏற்கெனவே பாதிக்கப்பட்ட மக்களை இன்னும் பலபுதிய நோய்களுக்கு 26 ஆண்டுகளாகப் பலியாக்கிக் கொண்டிருக்கின்றன. அதுமட்டுமல்ல, யூனியன் கார்பைடு நடத்தி வந்த மருத்துவமனைக்கும் தான் செலவு செய்ய முடியாது என்று கூறுகிறது டௌ.

ஒரு நிறுவனம் கைமாறும்போது, சொத்தும் கடனும் சேர்ந்துதான் கைமாறுகின்றன. வீட்டை வாங்கியவன் பழைய வீட்டுவரி பாக்கிக்கு நான் பொறுப்பில்லை என்று கூற முடியாது. ஆனால் டௌ கெமிக்கல்ஸ் கூறுவதை ஏற்று, ஆலையை சுத்தம் செய்வதற்கும், மருத்துவமனையை நடத்துவதற்கும் மன்மோகன் அரசு பொறுப்பேற்றுக் கொண்டுவிட்டது. இதற்கான செலவு சில நூறு கோடி ரூபாய்கள்.  அதுமட்டுமல்ல, “போபால் தொடர்பான வழக்குகளையெல்லாம் வாபஸ் பெற்றுக் கொண்டால், இந்தியாவில் 100 கோடி டாலர் முதலீடு செய்யத் தயார்” என்றும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னமே டௌ கெமிக்கல்ஸ் பேரம் பேசியிருக்கிறது. இதற்கு புரோக்கர் வேலை பார்த்திருக்கிறார் காங்கிரசின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி. இவர்தான் இன்று டௌ கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் வழக்குரைஞர். வழக்கையெல்லாம் மூட்டை கட்டி விடலாம் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே அரசுக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறார்கள் ப.சிதம்பரம், கமல்நாத் ஆகிய அமைச்சர்கள். சென்ற ஆண்டு போபாலுக்குச் சென்ற மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், ஆலையின் மண்ணை கையில் அள்ளி எடுத்து, “என்ன நடந்து விட்டது, நான் செத்தா போய்விட்டேன்?” என்று பாதிக்கப்பட்ட மக்களை நக்கலடித்திருக்கிறார். “போபால்கள் நடக்கலாம். அதற்காக நாடு முன்னேறாமல் இருக்க முடியாது” என்று தன்னை சந்திக்க வந்த போபால் மக்களின் பிரதிநிதிகளிடம் கூறியிருக்கிறார் மன்மோகன்சிங்.

இறந்துபோன போபால் மக்களின் உடல்களில் சயனைட் உள்ளிட்ட 21 நச்சு இரசாயனப் பொருட்கள் இருந்ததாக சவப்பரிசோதனை அறிக்கை கூறுகிறது. அந்த ஆலைக்குள் நடந்த இரகசிய சோதனை என்ன, என்பது இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐக்கே இன்று வரை தெரியாது. நடு ஊரில் நச்சு ஆலையை அமைக்க அனுமதி கொடுத்த இந்திராவின் அரசு முதல், ஆலையின் பதுகாப்பு ஏற்பாடுகள் நன்றாக இருப்பதாக சான்றிதழ் அளித்த தொழிற்சாலை இன்ஸ்பெக்டர்கள், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வரை யார் மீதும் வழக்கும் இல்லை, விசாரணையும் இல்லை. மீண்டும் ஒரு போபால் படுகொலை நடைபெறாமல் தடுக்கவும், மக்களைக் காப்பாற்றவும் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் மன்மோகன் அரசு கவலைப்படவில்லை.

மாறாக மீண்டும் ஒரு போபால் நடந்தால் ‘நிவாரணம் கொடுக்காமல், குற்ற வழக்குகளில் சிக்காமல் அமெரிக்க முதலாளிகளைக் காப்பாற்றுவது எப்படி’ என்பதுதான் இந்த அரசின் கவலையாக இருக்கிறது. இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்க கம்பெனிகளிடம் இந்திய அரசு வாங்கவிருக்கும் அணு உலைகளில் எந்திரக் கோளாறு காரணமாக விபத்து  நடந்தாலும், அதற்கு அமெரிக்கக் கம்பெனிகளிடம் நட்ட ஈடு கேட்கவோ, வழக்கு தொடரவோ முடியாது என்று கூறும் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றத் தயாராக வைத்திருக்கிறார் மன்மோகன்சிங்.

நீதி!

போபால் தீர்ப்பு 26 ஆண்டுகளுக்குப் பின்னர் இழைக்கப்பட்ட அநீதி என்று நாம் குமுறுகிறோம்.  அந்த அநீதிதான் இனி நீதி என்று ஆகிவிட்டது. போபாலில் எதையெல்லாம் சட்டமீறல் என்று கூறுகிறோமோ அவையே இப்போது சட்டங்களாகி வருகின்றன. ‘பன்னாட்டு முதலாளிகள் சொல்வதுதான் சட்டம், ஏழை நாட்டு மக்களைக் கொல்வது அவர்கள் உரிமை, முதலாளிகள் கொழுப்பதே தொழில் வளர்ச்சி’ என்று கூறும் கார்ப்பரேட் பயங்கரவாதத்தைத்தான் காங்கிரசு, பா.ஜ.க, திமுக உள்ளிட்ட எல்லா ஓட்டுக் கட்சிகளும் முன்மொழிகின்றன.

26 ஆண்டுகளுக்கு முன் போபாலைப் பிணக்காடாக்கிய நச்சுக்காற்று இன்று நாடெங்கும் சுழன்றடிக்கிறது. விவசாயத்தை நாசமாக்கி விவசாயிகளைத் தற்கொலைக்குத் தள்ளுகிறது. காடுகளைப் பிடுங்கிக் கொண்டு பழங்குடி மக்களை வேட்டையாடுகிறது. மீனவர்களை கடலை விட்டும், பழங்குடி மக்களைக் காட்டை விட்டும், சிறுவணிகர்களை சில்லறை வணிகத்திலிருந்தும் துரத்துகிறது. தொழிலாளிகளின் உரிமைகளை வெட்டியெறிந்து அவர்களுடைய உழைப்பைப் பிழிந்து சக்கையாக்கி துப்புகிறது. எல்லாத்தரப்பு மக்களின் மூச்சையும் நிறுத்துகின்ற இந்த நச்சுக்காற்று சயனைட் வாயு அல்ல, இதன் பெயர் மறுகாலனியாக்கம்.

அன்று நச்சுப்புகையிலிருந்து தப்புவதற்காக திக்குத்தெரியாமல் ஓடி, மூச்சிறைத்து, நெஞ்சு முழுவதும் நஞ்சு நிரம்பி உயிர்விட்டார்கள் போபால் மக்கள். இன்று நாட்டைச் சூழ்ந்திருக்கும் மறுகாலனியாக்கம் என்ற நச்சுக்காற்றிலிருந்தும் நாம் ஓடித் தப்பமுடியாது. எதிர்த்து நின்று போராடித்தான் முறியடிக்க வேண்டும். இந்திய அரசு, நீதிமன்றம், கட்சிகள், அதிகாரவர்க்கம், போலீசு அனைத்துமே ஏகாதிபத்திய நிறுவனங்களின் எடுபிடிகள் என்பதையும், இவர்கள் மூலம் ஒருக்காலும் நமக்கு நியாயம் கிடைக்காது என்பதையும் போபால் அனுபவம் பளிச்சென்று காட்டுகிறது.

நீதி வேண்டுமா, புரட்சி ஒன்றுதான் பாதை  இது நாங்கள் கூறும் கருத்து மட்டுமல்ல, இதுதான் போபால் வழங்கும் தீர்ப்பு.

___________________________________________________________________
போபால்: நீதி வேண்டுமா, புரட்சி ஒன்றுதான் பாதை ம.க.இ.கவும் அதன் தோழமை அமைப்புக்களும் வெளியிட்டிருக்கும் இரண்டு ரூபாய் சிறு வெளியீடு. வாசகர்கள் இயன்ற அளவிற்கு இவ்வெளியீட்டை வாங்கி உறவினர்/நண்பர்களுக்கு விநியோகிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். வெளியீடு தேவைப்படுவோர் வினவு அலைபேசியில்  – (91) 97100 82506 தொடர்பு கொள்க!
இந்த சிறு வெளியீட்டை மின்நூல் (PDF) வடிவில் பெற செய்ய இங்கே சொடுக்கவும்
_______________________________________________________________