Friday, December 6, 2024
முகப்புசெய்தி//குறுக்கு வெட்டு – 26.08.2010// பௌத்த மனமும், இந்து மனமும் என்ன வேறுபாடு?

//குறுக்கு வெட்டு – 26.08.2010// பௌத்த மனமும், இந்து மனமும் என்ன வேறுபாடு?

-

பௌத்த மனமும், இந்து மனமும் என்ன வேறுபாடு?

இலங்கையில் உள்ள சிலாபம் முன்னேஸ்வரம் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பத்ரகாளியம்மன் கோவிலில் ஆடு கோழிகளை பலி கொடுத்து வழிபாடு நடத்துவது பக்தர்களின் நம்பிக்கை. மூட நம்பிக்கையானாலும் மத நம்பிக்கை. ஆனால் “சிலாபம் முன்னேஸ்வரம் கோவிலில் உயிர்ப்பலிக் கொடுப்பதை அனுமதிக்க மாட்டோம் இனி இந்த நாட்டில் ஒரு மிருகத்தைக் கூட பலி கொடுப்பதை நாங்கள் அனுமதிக்க முடியாது” என்று விலங்குகள் மீது பற்றும் பாசமும் கொண்ட பிக்குகள் கும்பலாகக் கிளம்பிவிட்டார்கள்.

கோவில் விழா நடக்குமா நடக்காதா? அப்படியே நடந்தாலும் பலி வழிபாடு உண்டா? கோவிலுக்கு ஆட்டை எடுத்துச் செல்லலாமா? என்றெல்லாம் பக்தர்கள் பயந்து போய் கிடக்கும் நிலையில், இலங்கை பிரதமர் டி.எம். ஜெயரட்ண அடுத்த குண்டை தமிழ் மக்கள் மீது வீசுகிறார் “2600வது சம்புத்த ஜெயந்தி தொடர்பான சமய நிகழ்வுகள் பிரதேச செயலர் மட்டத்தில் நாடு முழுவதும் நடத்தப்படவுள்ளன. ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவிலும் ஒரு விகாரையை அமைப்பது தான் எமது இலக்கு. தற்போது நாடு முழுவதும் 10,400 பௌத்த விகாரைகள் உள்ளது. ”

ஆக ஈழத்தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டபோது கொண்டாடிய பௌத்தத் துறவிகள் விலங்கள் பற்றி கவலைப்படுகிறார்கள். பெரும்பான்மை வாத நெருப்பின் போதையில் சிக்கியிருக்கும் சிங்கள இனவெறி பௌத்த பிக்குகள்தான் தமிழ் மக்களின் பலி வழிப்பாட்டை எதிர்க்கிறார்கள் என்று மட்டும் நினைக்காதீர்கள். இந்த மிருக பலி வாழிபாட்டுக்கு இன்னொரு கும்பலும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அது வேறு யாருமல்ல யாழ்பாணத்தில் வெள்ளாளர்களாகப் பிறந்த பச்சைத் தமிழர்கள்தான்.

ஆமாம் பௌத்த புக்குகளுக்கு முன்னரே அகில இலங்கை இந்துமாமன்றத்தின் தலைவர் கந்தையா நீலகண்டன் என்கிற வெள்ளாள சாதி வெறியர் தான் முதன் முதலாக இந்த பலி வாழிபாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர். அதன் பின்னர்தான் பௌத்த பிக்குகள் அதைப் பிடித்து கொண்டவர். மிருகங்களை பலியிட்டு வழிபாடு நடத்த நினைத்த பக்தர்களோ கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக இல்லாத தடை இப்போது வந்தது கண்டு திகைத்துப் போய் நிற்கிறார்கள். நானும் தமிழன் நீயும் தமிழன் நீயும் இந்து நானும் இந்து அப்புறம் ஏண்டா எங்க வழிப்பாட்டை தப்புங்கறே என்று கேட்கிற சிலாபம் முன்னேஸ்வரம் ஆலைய பக்தர்களுக்கு வெவ்வே காட்டி சிங்கள பிக்குகளோடு கைகோர்த்து நிற்கிறான் யாழ்பாணத்து வெள்ளாளர்கள்.

இந்தியாவில் மிருக பலி வழிபாட்டால் இந்துக்கள் மனது புண்படுகிறது என்கிற பார்ப்பன இந்துப் பாசிஸ்டுகளுக்கும், உயிர்பலியால் பௌத்தம் களங்கப்படுகிறது என்று கதறுகிற இலங்கை பௌத்த பிக்குகளும், சிலாபக் கோவில் பலி வழிபாடு இந்து தர்மத்துக்கு விரோதமானது என்று சொல்லும் அகில இலங்கை இந்து மாமன்றத்திற்கும் உள்ள ஒரே ஒற்றுமை ஒடுக்கப்பட்ட மக்களிடம் தமது ஆதிக்க பண்பாட்டை மதத்தின் பெயரால் திணிப்பதுதான்.

இந்தியாவில் சிறுபான்மை இசுலாமிய மக்களை கூட்டம் கூட்டமாக கொன்றுவரும் இந்துமதவெறி பாசிஸ்டுகளும், இலங்கையில் தமிழ் மக்களை கொன்று வரும் பௌத்த பேரினவாதவெறியர்களும் ஆடு, கோழிகளை பலியிடுவதை எதிர்க்கிறார்கள். கொலைகாரர்களின் கருணை இப்படித்தான் வெளிப்படும் போலும்!
_____________________________________________________________

அணுவிபத்து இழப்பீடு மசோதா: பா.ஜ.க, காங்கிரசு கூட்டு!!

நேற்று பாராளுமன்றத்தில் இந்த மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி 1500 கோடிக்கு மேல் நிவாரணம் வழங்கப்படமாட்டது என்ற செய்தி முக்கியமானது. ஆரம்பத்தில் இது 500 கோடி என்று இருந்தது பின்னர் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டது. எனினும் இந்த வரம்பு என்பது பன்னாட்டு நிறுவனங்களுக்கு மிகவும் பாதுகாப்பு வழங்கும் ஒன்றாகும். அணுவுலை விபத்தின் பரிமாணத்தை ஒப்பிட்டால் அதன் அழிவு மிகவும் விரிந்த ஒன்றாகும். அதனால் இதன் நிவாரணம் என்பது மதிப்பிற்கு அப்பாற்பட்டது. இனி விபத்து நடந்தால் அதன் விளைவை புறக்கணித்துவிட்டு ஆஃப்டரால் 1500 கோடி என்று அமெரிக்க நிறுவனங்கள் கையை விரித்துக் கொள்ளும்.

ஆரம்பத்தில் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு என்பதாக சீன் போட்ட பாரதிய ஜனதா தற்போது ‘நாட்டில் நலனைக்’ கருத்தில் கொண்டு ஆதரித்திருக்கிறது. ஆக அமெரிக்க பஜனையில் காங்கிரசுக்கும், பா.ஜ.கவுக்கும் வேறுபாடு இல்லை என்பது நிரூபணமாயிருக்கிறது.
___________________________________________________________________________

ஏன் கொன்றாய்? ‘நடத்தை சரியில்லை’!!

மதுரையைச் சேர்ந்த 48 வயது ரங்கசாமி என்பவர் தனது நண்பர்கள் மூவருடன் சேர்ந்து மகள் மாரிச்செல்வியை கொன்றிருக்கிறார். அந்த 17வயது பெண்ணுக்கு மயக்க ஊசி போட்டு பின்னர் விசம் கொடுத்து கொன்றிருக்கிறார்கள். மருத்துவமனையில் அவளது உயிர் பிரிந்தது.

மாரிச்செல்வி அவளது தாய்மாமன் மோகனுக்கு திருமணம் செய்யப்பட்டிருந்தாள். கணவர் வெளிநாடு வேலைக்கு சென்ற பிறகு பெற்றோர் வீட்டில்  இருந்த மாரிச்செல்வியை தனது தங்கை மகனுக்கு கட்டிக் கொடுப்பது நடக்காததால் அவள் மீது ரங்கசாமி வெறுப்பு கொண்டிருந்தார்.

இந்தக் கொலை எதனால் நடந்திருக்கிறது? தினசரிகள் மற்றும் ரங்கசாமியின் கூற்றுப்படி மாரிச்செல்வி நடத்தை கெட்டவள், பகுதியில் பல இளைஞரோடு தொடர்பு உடையவள். இதற்கு ஆதாரம்? எதுவும் கிடையாது. அவள் யதார்த்தமாக தெரு இளைஞர்களோடு பேசியதே ரங்கசாமிக்கு பொறுக்கவில்லை. முக்கியமாக அவளது தாய் இந்தக் குற்றச்சாட்டை கூறவில்லை. பெற்றோர் வீட்டிலிருந்தபடியே ஒரு பெண் மற்றவர்களோடு உறவு வைத்துக் கொள்வது சாத்தியமே இல்லை. அப்படி இருந்திருந்தால் உரிய ஆதாரங்களோடு அவளை வீட்டிலிருந்து வெளியேற்றிருக்கலாமே? இப்படி கொலை செய்ய வேண்டிய வெறி எதற்கு?

ஒரு பெண்ணைத் தண்டிப்பதற்கு சமூகமும், முக்கியமாக ஆண்களும் கையிலெடுக்கும் ஒரே விசயம் அவள் நடத்தை கெட்டவள் என்பதுதான். இது மாரிச்செல்விக்கு மட்டுமல்ல நியாயமான காரணங்களோடு தனது கணவனை விவாகரத்து செய்யும் எல்லாப் பெண்களுக்கும் கிடைக்கும் அவப்பெயர்தான். ஆயினும் இந்த நடத்தை விவகாரத்தில் பெண்கள்தான் தண்டிக்கப்படுகிறார்கள். அவர்களோடு தொடர்புடைய ஆண்களை யாரும் தண்டிக்கப்படுவதில்லை. ஏனெனில் நடத்தையும், கௌரவமும் பெண்களுக்குரியதாக மட்டுமே இந்த ஆணாதிக்க சமூகத்தால் கருதப்படுகிறது.
__________________________________________________________________________

முன்னாள் சி.பி.எம்மின் எம்.எல்.ஏ கோவிந்தசாமி மட்டுமல்ல…….

திருப்பூர் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி தனது ஆதரவாளர்கள் 20,000 பேருடன் தி.மு.கவில் இணைந்தாதக தினசரிகள் குறிப்பிடுகின்றன. இந்த எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்டது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் திருப்பூரை ஒட்டிய பல ஊர் நிர்வாகிகள் இந்த எண்ணிக்கையில் இருக்கின்றனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் எம்.நாகராஜ், சி.ஐ.டி.யு. மோட்டார் சங்க மாநில பொதுச்செயலாளர் பி.எஸ்.மணி, டைஃபியின் மாநிலக்குழு உறுப்பினர் சேலூக்கண்ணா, மாநகர குழு உறுப்பினர் ஏ.பக்ரூதீன், ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.வேலூச்சாமி, ஆண்டிப்பாளயம் ஊராட்சி தலைவர் எஸ். மூர்த்தி, தொரவலூர் ஊராட்சி தலைவர் சுப்பிரமணியம், திருப்பூர் மாநகராட்சி மன்ற உறுப்பினர் எம். சுப்புலட்சுமி, திருப்பூர் நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் ஆர்.விஸ்வநாதன், பாரதி நகர் கிளைச் செயலாளர் கே.கண்ணன், புஷ்பா நகர் கிளை செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் கரோனா வெங்கடாசலம், கரோனா சாமிநாதன் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கை மார்க்சிஸ்ட் அணி கட்சி மாறியிருக்கிறது.

கோவிந்தசாமி முதலாளிகளுக்காக தொழிலாளிகளின் நேரத்தை பத்து மணிநேரமாக்க முயன்றபோது பெட்டி வாங்கினார் என்று இப்போது கூறும் சி.பி.எம் கட்சி அப்போது நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போது கருணாநிதிக்கு பாராட்டு விழா நடத்தினார் என்பதற்காக கட்சிநீக்கம் செய்திருக்கிறது. கோவிந்தசாமியும் மாளிகை, முதலாளிகள் நட்பு என்று செட்டிலாகிவிட்டவர். அவர் தி.மு.கவில் இணைந்தது புரிந்து கொள்ளக்கூடியதே. ஆனால் இத்தனை நிர்வாகிகள் இணைந்தது ஏன்?

இவர்கள் அனைவருக்கும் கட்சி கற்பித்த கொள்கை, வரலாறு, கடமை என்று எதுவுமே தெரியாதா? இல்லை அந்தக்கட்சியில் அப்படி ஒரு நடைமுறையே கிடையாதா? கம்யூனிசக் கொள்கையில் பயிலும் ஒருவன் இத்தனை இழிவாக நடப்பானா என்ன? ஆனால் சி.பி.எம்மில் நடக்கிறது. பாத்து தோழர்களே இப்ப போயஸ் தோட்டத்தோடு கூட்டணி வச்சிருக்கீங்க, சந்தடி சாக்கில் தோழர்கள் எல்லோரும் அம்மா கட்சியில் சங்கமம் ஆயிடப்போராங்க!
______________________________________________________________

அமெரிக்க தூதரகத்திற்கு நிழற்கூரை! நடைபாதைவாசிகளுக்கு கெட்அவுட்!! ‍

தமிழகம், ஆந்திரம், கேரளம் மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் அமெரிக்கா செல்வதற்காக விசா பெற சென்னை துணை தூதரகத்திற்கு வருகின்றனர். பொதுமக்கள் மழையிலும், வெயிலிலும் வெளியில் காத்திருக்க வேண்டியிருக்கிறது. நிழற்கூரைகள் அமைப்பது குறித்து அமெரிக்கக் துணைத் தூதரக அதிகாரிகளிடம் பேச்சு நடத்தப்பட்டது.

இதன்படி, நிழற்கூரையுடன் கூடிய இருக்கைகள் அமைப்பது தொடர்பாக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை குறித்து அப்போது அமெரிக்க  அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றதாக மேயர் மா.சுப்பிரமணியன் கூறியிருக்கிறார் ‍‍: தினமணி செய்தி

அதிவிரைவு மேம்பால நெடுஞ்சாலை உள்ளிட்ட திட்டங்களுக்காக அகற்றப்பட்ட  குடிசைவாழ் மக்கள் நடத்திய போராட்டமும் நேற்றுதான் நடந்தேறி இருக்கிறது. ஆனால் இந்த சம்பவம் மேயர் வழியாக துணை முதல்வருக்கு கொண்டு செல்லப்படாது. தூதரகத்தின் முன் வரிசையில் இருக்கும் நடுத்தர, மேல்தட்டு நடுத்தர மக்களின் ஓரிரு மணிநேரத் துன்பங்களை பொறுக்க முடியாமல் நடவடிக்கை எடுக்கும் அரசு குடிசை வாழ் மக்களது வாழ்வையே கேள்விக்குள்ளாக்கும் வண்ணம் அப்புறப்படுத்துவதை அலட்சியமாக செய்துவருகிறது.

அமெரிக்க தூதரகத்திற்கு நிழற்கூடை. அய்யோ பாவங்களுக்கு புல்டோசர்!

_______________________________________________

செய்தித் தொகுப்பு: வினவு செய்தியாளர் குழு.
________________________________________________

  1. குறுக்கு வெட்டு – 26.08.2010 – பௌத்த மனமும், இந்து மனமும் என்ன வேறுபாடு?…

    ஏன் கொன்றாய்? ‘நடத்தை சரியில்லை’! முன்னாள் சி.பி.எம்மின் எம்.எல்.ஏ கோவிந்தசாமி மட்டுமல்ல, அமெரிக்க தூதரகத்திற்கு நிழற்கூரை! நடைபாதைவாசிகளுக்கு கெட்அவுட்!! ‍…

  2. /// நானும் தமிழன் நீயும் தமிழன் நீயும் இந்து நானும் இந்து அப்புறம் ஏண்டா எங்க வழிப்பாட்டை தப்புங்கறே என்று கேட்கிற சிலாபம் முன்னேஸ்வரம் ஆலைய பக்தர்களுக்கு வெவ்வே காட்டி சிங்கள பிக்குகளோடு கைகோர்த்து நிற்கிறான் யாழ்பாணத்து வெள்ளாளர்கள்.இந்தியாவில் மிருக பலி வழிபாட்டால் இந்துக்கள் மனது புண்படுகிறது என்கிற பார்ப்பன இந்துப் பாசிஸ்டுகளுக்கும், உயிர்பலியால் பௌத்தம் களங்கப்படுகிறது என்று கதறுகிற இலங்கை பௌத்த பிக்குகளும், சிலாபக் கோவில் பலி வழிபாடு இந்து தர்மத்துக்கு விரோதமானது என்று சொல்லும் அகில இலங்கை இந்து மாமன்றத்திற்கும் உள்ள ஒரே ஒற்றுமை ஒடுக்கப்பட்ட மக்களிடம் தமது ஆதிக்க பண்பாட்டை மதத்தின் பெயரால் திணிப்பதுதான்.///

    இதில் என்ன தவறை கண்டுபிடித்து விட்டீர்கள்? எந்த உயிரும், எவ்வளவு சிறிய உயிரானாலும், உயிர் பலி இடக்கூடாது என்று சொல்வதில் தவறு ஒன்றும் இல்லையே? அது தானே தர்மம்? தர்மம்… தர்மம்…எந்த நல்ல காரியத்தைப் பண்ணினாலும் பார்ப்பனர்களையும் உயர் ஜாதி யாழ்பாணத்து வெள்ளாளர்கள் மற்றும் தமிழ் நாட்டு வெள்ளாளர்களையும் குறை கூறுகிரர்களே? அது ஏன்? தர்மம் செய்தால் அது தவறா?

    உடனே சில அறிவு ஜீவிகள் பட்டுப்புடவையை யாகத்தில்-யாக குண்டத்தில் – போடலாமா என்று கேட்பார்கள். முட்டாள்கள். அறிவிலிகள். தாராளமாகப் போடலாம். ஏனென்றால் பட்டும் பருத்தி மாதிரி செடியில் இருந்து தானே காய்க்கிறது அப்புறம் பருததியாக பட்டுவாக பூக்கிறது…அப்புறம் என்ன?

    வேதகாலத்தில் இருந்து பட்டுப்புடவையை யாகத்தில்-யாக குண்டத்தில – போட்டு இருக்கிறார்கள். வேதகாலத்தில் இருந்து பட்டும் பருத்தி மாதிரி செடியில் இருந்து தானே காய்க்கிறது அப்புறம் பருததியாக பட்டுவாக பூக்கிறது…அப்புறம் என்ன? ஆதலால் பட்டுப் புடவையை தாரளாமாக யாகத்தில்-யாக குண்டத்தில் போடலாம்.

    பட்டு நெய்வதை எந்த காலத்தில் கண்டுபிடித்தார்கள் என்று சொன்னால் அடுத்த பதிவை போட வசதியாக இருக்கும்.

    சொல்வீர்களா?

    • இந்துமதவெறி பாசிஸ்டுகளும் பௌத்த பேரினவாதவெறியர்களும் மக்களையே கொல்லுகிறார்கள். நாங்கள் குறைந்தது விலங்குகளையாவது கொல்வோம் என்னும் இந்தக் கூட்டத்தைக் என்னவென்று சொல்வது.

      பெளத்தம் சொல்வது எதுவானாலும் எதிர்ப்பது என்னும் கொள்கை எனக்கு ஐநா மன்றில் அமெரிக்கா ஆதரித்ததற்காக கியூபா இலங்கை இனப்படுகொலையை விசாரிப்பதை எதிர்த்ததை நினைவுபடுத்துகிறது. அன்றுவரை நான் சொந்தக் கொள்கையுடையவர் என மதிப்பளித்த ”காஸ்ரோ” பின்னர் வெறும் அன்ரி அமெரிக்க கொள்கையனாகத் தென்பட்டார். ஆகமொத்தத்தில் கொள்கை வகுப்பது அமெரிக்கா. வெறும் எதிர்ப்பு மட்டுமே இவர் கொள்கை.

      பிக்குகள் எதிர்ப்பதற்கு அருகதையுள்ளவர்கள் என்று நான் எண்ணவில்லை. ஆனால் நாமே எதிர்த்திருக்கவேண்டுமே ஏன் தவறிவிட்டோமெனக் கேட்கிறேன்?? பகுத்தறிவுவாதிகள் வேளாள/பார்ப்பன இந்துமதத்தை மட்டுமல்ல அடித்தட்டு மக்களின் மூட நம்பிக்கை செறிந்த இந்து மதத்தையும் எதிர்க்கத்தானே வேண்டும்? பார்ப்பனியத்தை மட்டும் எதிர்ப்பவர் பகுத்தறிவுவாதியாகிவிட முடியாது.

  3. ஆட்டையாம்பட்டி அம்பி

    //உடனே சில அறிவு ஜீவிகள் பட்டுப்புடவையை யாகத்தில்-யாக குண்டத்தில் – போடலாமா என்று கேட்பார்கள். முட்டாள்கள். அறிவிலிகள். தாராளமாகப் போடலாம். ஏனென்றால் பட்டும் பருத்தி மாதிரி செடியில் இருந்து தானே காய்க்கிறது அப்புறம் பருததியாக பட்டுவாக பூக்கிறது…அப்புறம் என்ன?//
    [ — ] (பட்டு என்பது பட்டுப்பூச்சிகளைக்கொன்று அதன் கூட்டிலிருந்து தயாரிக்கப்படுவது.)

    • //பட்டு என்பது பட்டுப்பூச்சிகளைக்கொன்று அதன் கூட்டிலிருந்து தயாரிக்கப்படுவது.///

      நீங்கள் என்ன புதுக் கதை விடுகிறீர்கள்…நான் எனது பள்ளி தமிழ் வாத்தியார் சங்கர சர்மா சொல்லிகொடுதததை தான் நம்புவேன். அவர் சொன்னது தான் உண்மை. பட்டு எனபது பருத்தி மாதிரி ஒரு செடியில் காய்த்து அப்புறம் பூக்கும் என்றார். அவர் தவறாக சொல்லி இருக்க மாட்டார்.

      மேலும 17 லட்சம் வருடங்களுக்கு முன்பு பட்டுப் புடவையை யாகத்தில் போட்டு இருக்கிறார்கள் என்று சொன்னார். அதற்க்கு அவர் ராமாயணத்தில் நடந்த யாகங்களை உதாரணமாக சொன்னார்.

      நான் எனது பள்ளி தமிழ் வாத்தியார் சங்கர சர்மா சொல்லிகொடுதததை தான் நம்புவேன். நீங்கள் பொய் சொல்லுகிறீர்கள்.

      • மன்னிச்சுக்கங்க அம்பி,என் நகைச்சுவை உணர்வு மங்கிவிட்டது.

    • வானம் அம்பி கலாக்கிறாருப்பா…நோ டென்சன் ரிலாக்ஸ்

  4. //இந்தியாவில் சிறுபான்மை இசுலாமிய மக்களை கூட்டம் கூட்டமாக கொன்றுவரும் இந்துமதவெறி பாசிஸ்டுகளும்//
    சந்தடி சாக்கில் செமையாக ரீல் விடுகிறீர்கள்.. கூட்டம் கூட்டமாக.. உங்களுக்கே இது ஓவராக தெரியவில்லை?

      • இந்த விஷயத்தில் கருணாநிதி மாதிரி பேசுகிறீர்கள். சொல்ல சரியான பதில் இல்லை என்றால் கேட்டவன் மேல் சந்தேகத்தை கிளப்பு!

        • ‘குண்டு வைக்கும் இந்து தீவிரவாதிகள்’ என்கிற பதிவில் ஏற்கனவே போட்ட பின்னூட்டம். போயி படிச்சிட்டு வாங்க.
          https://www.vinavu.com/2010/08/17/hindu-terrorist/#comment-28356

          மேலதிகமான புள்ளிவெவரத்துக்கு…

          B .ராஜேஸ்வரி, JNU IPCS research paper
          http://hridyapal-storyteller.blogspot.com/2010/08/communal-riots-in-india-1947-2003_11.html
          அதில் குறிப்பிடப்பட்டுள்ள சில நிகழ்வுகள் கீழே…
          1964 மேற்கு வங்கத்தில் நடந்த படுகொலைகளில் 2000 முஸ்லிம்களுக்கு மேல்
          1969 அகமதாபாத்தில் RSS , ஜனசங்கம், காங்கிரஸ் நடத்திய வேட்டையில் 500
          1980 மொரதாபாத்தில் (உ.பி) போலீசுடன் சேர்ந்து இந்து வெறியர்கள் நடத்தில் படுகொலைகள் 1500
          1985 இல் அகமதாபாத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக நடந்த போராட்டங்களில் கலந்து கொள்ளாததற்காக 300
          1990-1991 இல் அத்வானி ரதஊர்வலத்தின் போது குஜராத்தில் மட்டும் 200 முஸ்லிம்களுக்கு சாவு ஊர்வலம், டில்லியில் 100 , பீகாரில் 900 , ஹைதராபாத்தில் 300 ,
          1992 இல் சூரத்தில் 200
          1992 -93 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபிறகு மும்பையில் 1000 முஸ்லிம்கள்
          1992 இல் போபாலில் 143 முஸ்லீம்கள்
          2002 குஜராத்தில் 2000 -க்கும் மேல்.

          திரு. ‘வர்ஷா’ , இன்னும் நிறைய எதிர் பார்க்கிறீர்களானால், கர்ப்பிணி முஸ்லிம் பெண் திரிசூலத்தால் கருவறுக்கப்பட்ட செய்தியை படித்து பாரும்.

          இதற்கு மேலும் திருப்தி அடையாவிட்டால்…. மத்திய பிரதேசத்தில் கடலுக்கு (?) மேல் பாலம் கட்ட ஸ்ரீராமன் குரங்குகளை ரெக்ரூட் செய்கிறானாம். போயி அந்த பெருங்கூட்டத்தில் சேர்ந்துகொள்.

        • நண்பரின் பதிலுக்கு reply option இல்லாததால் இதில் கேட்கிறேன்..

          நீங்கள் கொடுத்த ‘research paper’ -ல் எந்த வித புள்ளி விவரங்களுக்கான ஆதாரங்களும் இல்லை. மேலும் எந்த ‘research paper’ -லும் கேள்விப்படாத more than 90% are muslim, almost all are muslim, போன்ற மேலோட்டமான புள்ளி விவரங்கள் நகைப்புக்குரியது. The ‘research paper’ is titled chronology of communal violence, but this is not a complete list of communal violence as for example, hyderabad does not figure in the list where the communal violence occurred many times. I am not justifying any communal violence. Only pointing out that if you plan to put the figures down, put all the figures down. Don’t list only those convenient to you! As for as the killing of the child in the womb by trisulam and other cooked up stories, i suggest you visit the http://www.gujaratriots.com/ which actually supports the myth busting with actual references!

        • அந்த வலைத்தளம் மே 2007 -இல் எழுதப்பட்ட ‘Gujarat Riots : A true story’ என்ற புத்தகத்தின் பகுதிகளை மேற்கோள் காட்டி ஆரம்பிக்கப்பட்டட்து. ஆறு மாதங்களுக்கு பிறகு நவம்பரில் வெளிவந்த தெஹெல்காவின் ஸ்டிங் வீடியோக்களில் நரவேட்டையாடியவர்களே நேரடி வாக்குமூலம் கொடுத்தார்கள்.
          http://www.tehelka.com/story_main35.asp?filename=Ne031107gujrat_sec.asp

          சுரேஷ் ரிச்சர்ட் என்கிற வெறிக்கூட்டத் தலைவன் தான் ஒரு பெண்ணை வன்புணர்ச்சி செய்ததை சொல்கிறான். http://www.tehelka.com/story_main35.asp?filename=Ne031107NarodaPatyaMassacre.asp&page=3
          “நான் பொய் சொல்லவில்லை. கடவுள் (பின்னால் தொங்கிக்கொண்டிருக்கும் பெண்கடவுள் படத்தைக் காட்டி) மீது சத்தியம். முஸ்லீம் பெண்கள் நிறைய பேர், எரித்துக் கொல்லப்பட்டனர். சில நண்பர்கள் அந்த பழங்களை சுவைத்தனர். எப்படியும் கசக்கி நசுக்கப்படப் போகின்றவை தானே? என் மனைவி இங்கே இருக்கிறாள், ஆனாலும் சொல்கிறேன், நானே ஒரு பெண்ணை… அந்த காய்லாங்கடைக்காரர் மகள் நசீமோவை பிழிந்து ஊறுகாயாக்கினேன். ”

          லோக்கல் பஜ்ரங்தள தலைவன் பாபு பஜ்ரங்கி சொல்கிறான்… http://www.tehelka.com/story_main35.asp?filename=Ne031107After_killing.asp
          ” அதான் எங்க FIR -ல பாத்திருப்பீங்களே… ஒரு நிறைமாசக்காரி.. நான் அவ வயித்த கிழிச்சேன் … அவங்களுக்கு நாங்க யாருன்னு காட்டினோம். அவளுங்க யாரும் பிள்ளையே பெத்துக்க கூடாது. ”

          காங்கிரஸ் எம். பி எஹ்சான் ஜாஃப்ரீயை அவரது வீட்டிலேயே துண்டு துண்டாக வெட்டி எரித்ததை மதன் சாவல் சொல்கிறான்:
          http://www.tehelka.com/story_main35.asp?filename=Ne031107They_hacked.asp
          “ஆறு பேர் அவர பிடிச்சுக்கிடாங்க. கைகள் கால்கள் எல்லாத்தையும் தனிதனியா வெட்டி, உயிரோட கொளுத்திட்டோம்.”

          இது கொஞ்சம் தான். இன்னும் நிறைய பயங்கரங்களை செய்தவர்களே சொல்கிறார்கள். ஒரு கவுசர் பானுவுக்கும் , ஒரு நசீமோவுக்கு நிகழ்ந்ததை நினைக்கும் போதே பதறுகிறதே… படம் பிடிக்கப்படாத கொடுமைகள் எத்தனை எத்தனையோ?

    • ஆம் தவருதான்க் கூட்டம் கூட்டமாக அல்ல ஊ ஊராக என்று அல்லது மாநிலம் மாநிலமாக கோலும் இந்து பாசிச்ட்டுகள் என்று சொனால்தன சரி!
      தோழர் தான் இப்படி அவர்களை பபக்கம் வக்காலத்து வாங்கினால் “இன்டிந்தியராக” அன்கிகிரிக்க படுவார் என்று நம்பும் அளவுக்கு முட்டாள் போலும்.

  5. உன் நண்பன் யாரென்று சொல்! நீ யாரென்று நான் சொல்கிறேன்!
    கோவிந்தசாமிக்கு தி.மு.க நண்பன். சிபிஎம் க்கோ அம்மா நண்பன். இப்பொழுது பிரச்சனையே நண்பர்கள் தான்! கொள்கைகள் அல்ல! என மிகவும் தெளிவாக விளக்கிய கோவிந்தசாமிக்கும், அவரது நண்பர்களுக்கும் நன்றி!
    ஆமா! சிபிஐ எம்பி ‘சுப்பு’ எப்படியிருக்கிறார். தனக்குரிய போட்டியாளர் தன் கட்சியிலும் இல்லை; ‘எதிர்’ கட்சியிலும் இல்லை! இனி தான் தான் எம்பி, எம்.எல்.ஏ; மேயர் என மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்திருப்பார் என நினைக்கின்றேன். இதைப் பற்றி கோவை மண்டல நண்பர்கள் தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

    எங்க ஊருக்கு பேருந்து வராது. ஏன் பேருந்து வர்ரதில்லைன்னு போக்குவரத்து அதிகாரிகளிடம் கேட்டோம். தரமான சாலை இல்லை. குண்டும் குழியுமாய் இருக்குன்னு சொன்னாங்க!
    எப்படி நோக்கியா அதிகாரிகள், அதனுடைய ஓனர்கள் எல்லாம் ஊருக்கு போவாங்க கேட்டோம். அதற்கு தானே விமான நிலையம் கெட்டுகிறோம் என்றார்கள்!
    அப்ப சர்க்கார் யாருக்குன்னு கேட்டோம்!
    அப்ப அந்த அதிகாரி கேட்டாரு நீங்க பஸ் கேட்டீங்கலே பஸ் வந்திருச்சானாரு!
    நாங்களும் இல்லையேன்னு சொன்னோம்!
    நோக்கியா ஓனரு போறதுக்கு விமான நிலையம் வருதே தெரியுமா சொன்னாரு!
    ஆமான்னு சொன்னோம்! இப்ப சொல்லுங்க சர்க்கார் யாருக்கு நண்பன்னு கேட்டாரு!
    ஏதோ ஒண்ணு புரிஞ்ச மாதிரியிருக்குன்னு வந்திட்டோம்!

  6. வினவு தோழர்களே!,

    அருமையான பதிவு. அதிலும் இலங்கையில் நிலவும் சாதிப்பிரச்னையை சொன்ன விதம் மற்றும் மதுரையில் 18 வயது பெண் கொன்றதன் பின்ணணியை பற்றி நம் ஊடகங்கள் எழுதும் விதம் :(.

    ஊடகங்கள் மேல் உள்ள நம்பிக்கையையே தகர்த்துவிட்டார்கள்.

    நிழல் கூறை நச்

    தொடருங்கள் உங்கள் பணியை.

  7. //நடுத்தர மக்களின் ஓரிரு மணிநேரத் துன்பங்களை பொறுக்க முடியாமல் நடவடிக்கை எடுக்கும் அரசு குடிசை வாழ் மக்களது வாழ்வையே கேள்விக்குள்ளாக்கும் வண்ணம் அப்புறப்படுத்துவதை அலட்சியமாக செய்துவருகிறது.//

    >:-(

  8. நடத்தை கெட்ட கோவிந்தசாமிக்கு கட்சியை விட்டு நீக்கும் மகா தண்டனையா? கண்டிக்கத்தக்கது

  9. ///பெற்றோர் வீட்டிலிருந்தபடியே ஒரு பெண் மற்றவர்களோடு உறவு வைத்துக் கொள்வது சாத்தியமே இல்லை.///
    யார் சொன்னா, அதெல்லாம் பண்ணலாம்.
    ///அப்படி இருந்திருந்தால் உரிய ஆதாரங்களோடு அவளை வீட்டிலிருந்து வெளியேற்றிருக்கலாமே?///
    எதுக்கு, இன்னும் நாலு பேர கெடுக்கவா?
    ///இப்படி கொலை செய்ய வேண்டிய வெறி எதற்கு?///
    சில விஷயங்களில் தண்டனை கடுமையாக இருந்தால்தான் தவறுகள் நடக்காவண்ணம் தடுக்க முடியும்

  10. திருப்பூரில் சிபிஎம் நீங்கள் சொல்லும் வரலாறு கடமை கோட்பாடை விட்டு பல பத்தாண்டுகள் ஆகிவிட்டது .

    கட்டபஞ்சாயத்தும் கமிசன் வேலையையும் அது
    செய்து வருகிறது .

    நீங்கள் வந்து உருப்படியான சங்கம் கட்டலாமே

    • ///திருப்பூர் – தியாகு///
      ///நீங்கள் வந்து உருப்படியான சங்கம் கட்டலாமே///

      யப்பா… உனக்கு என்ன தான் வேணும்?
      அசாதி அன் கம்பனிய அங்க ஆரம்பிக்க சொல்றதுக்கு பதிலா, இங்க வந்து சங்கம் கிங்கம்ன்னு எதுக்கு போடுறீங்க??

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க