privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காவரலாறு: உலகில் தோன்றிய முதலாவது கறுப்பினக் குடியரசு!!

வரலாறு: உலகில் தோன்றிய முதலாவது கறுப்பினக் குடியரசு!!

-

இரத்தத்தால் வரையப்பட்ட லத்தீன் அமெரிக்கா – 5

  • அடிமைகளின் புரட்சி எந்த நாட்டில் வென்றது?
    அமெரிக்க கண்டங்களில் காலனியாதிக்கத்தில் இருந்து விடுதலையடைந்த இரண்டாவது நாடு எது?
    உலகில் தோன்றிய முதலாவது கறுப்பினக் குடியரசு எது? ‘

ஹைத்தி’ என்பதே இந்த மூன்று கேள்விகளுக்குமான விடை.

Haiti Map

அமெரிக்கப் புரட்சி குறித்து உலக நாடுகளின் பாடப்புத்தகங்கள் அனைத்தும் போதிக்கின்றன. ஆனால், அதற்குப் பிறகு வரலாற்றில் இடம்பெற்ற முக்கியமான புரட்சியை கண்டுகொள்ளாமல் மறைக்கப்பார்க்கின்றன. பாட நூல்கள் மட்டுமல்ல, எந்தவொரு சரித்திர ஆசிரியரும், ஊடகமும் அதை நினைவுப்படுத்துவதில்லை. ஹைத்தியில் வெற்றி பெற்ற அடிமைகளின் புரட்சி, பிற நாடுகளுக்கும் பரவிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள்.

ஹைத்தியின் சுதந்திரத்தை அடக்குவதற்காக படை அனுப்பிய நெப்போலியன் பின்வருமாறு கூறினான். ‘நான் ஹைத்தியின் செல்வத்தை பாதுகாப்பதற்காக படையனுப்பவில்லை. கறுப்பின அடிமைகளின் வெற்றி, உலக கறுப்பினத்தவர்களின் விடுதலைக்கு தூண்டுகோலாக இருக்கக் கூடாது. அதற்காகத்தான் படையனுப்புகிறேன்…’ ஹைத்தி விடுதலையடைந்த நேரத்தில் ஆங்கிலேயர்கள் இந்தியாவை காலனி அடிமையாக்கிக் கொண்டிருந்தார்கள். அன்று உலகம் முழுவதையும் ஆண்ட ஐரோப்பிய காலனியாதிக்க நாடுகள், ஹைத்தி புரட்சி பற்றி இருட்டடிப்புச் செய்தன. வேறு சில மத்திய – அமெரிக்க, கரீபியன் நாடுகளில் அடிமைகள் கிளர்ச்சி செய்தபோதும் அவற்றை முளையிலேயே அழித்தார்கள்.

இருநூறு வருடங்களுக்கு முன்னர், ஐரோப்பிய வல்லரசுகளுக்கு எதிராக கெரில்லாப் போராட்டம் நடத்தி ஹைத்தி விடுதலை பெற்றது. இதற்காக ஹைத்தி மக்கள் இன்று வரை விலை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ‘சுதந்திரம் சமத்துவம், சகோதரத்துவம்’ என்று முழங்கிய பிரெஞ்சு புரட்சியாளர்கள், கறுப்பர்களுக்கு அது பொருந்தாது என்றார்கள். வட அமெரிக்க புரட்சியாளர்கள், 50 வருடங்களுக்கு பின்னர்தான் ஹைத்தியின் சுதந்திரத்தை அங்கீகரித்தார்கள். நஷ்டஈடு வழங்க ஒப்புக் கொண்ட பின்னர்தான், ஹைத்தியின் இறையாண்மையை பிரான்ஸ் ஏற்றுக் கொண்டது. வரலாற்றில் இன்னொரு தடவை அடிமைகளின் புரட்சி நடக்கக் கூடாது, அப்படியே நடந்தாலும் அப்புரட்சி வெல்லக் கூடாது என்பதில் எல்லோரும் கவனமாக இருக்கிறார்கள். விதிகளை மீறுவோர் ஹைத்தி போன்று நிரந்தர வறுமைக்குள் வருந்துமாறு சபிக்கப்படுவார்கள் என அச்சுறுத்துகிறார்கள்.

ஐநூறு வருடங்களுக்கு முன்னர் கொலம்பஸ் ஹைத்தியை ‘கண்டுபிடித்தபோது’  அதனை ‘ஹிஸ்பானியோலா’ என்று பெயரிட்டார். அங்கே நிறுத்தப்பட்ட நாற்பது ஸ்பானிய வீரர்களும், ஒரு வருடத்துக்கு பின் கொலம்பஸ் திரும்பியபோது உயிருடன் இல்லை. அவர்கள் கட்டிய கோட்டையும் எரிந்து சாம்பலாகிக் கிடந்தது. உள்ளூர் செவ்விந்திய பெண்களை அந்த ஸ்பானிய வீரர்கள் கடத்திச் சென்று பாலியம் பலாத்காரம் செய்ததற்கான பழிவாங்கல் நடவடிக்கை அது. தன்மானம் சீண்டப்பட்டதாக உணர்ந்த ஸ்பானியர்கள், செவ்விந்தியர்களை கொன்று குவித்தார்கள், அல்லது சாகும் வரை வேலை வாங்கினார்கள். அத்துடன் தீவுகளில் வசிக்கும் பழங்குடியின மக்கள் அனைவரையும் அழித்தார்கள். ஐரோப்பியரின் இனவழிப்புக்கு பலியான Taino இன மக்கள், இருந்த இடம் தெரியாமல் மறைந்து போனதை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

இதற்குப் பிறகு ஸ்பானியர்கள், தீவின் கிழக்குப் பகுதியில் மட்டும் (இன்று டொமினிக் குடியரசு) குடியேற்றங்களை நிறுவினார்கள். பிரெஞ்சு, ஆங்கிலேய கடற்கொள்ளையரின் புகலிடமாக ஹைத்தி மாறியது. சில வருடங்களுக்கு பின்னர் பிரெஞ்சு முதலாளிகள் குடும்பத்தோடு வந்து குடியேறினார்கள். பெரும் முதலீட்டுடன் பெருந்தோட்ட பயிர்களை விளைவிக்க ஆரம்பித்தார்கள். கரும்பு, கோப்பி, பருத்தி… என அவர்கள் விளைவித்ததெல்லாம் பணமாக கொட்டியது. ‘சென் டொமிங்’ (Saint Domingue) என்றழைக்கப்பட்ட இந்த பெருந்தோட்டங்களில் வேலை செய்வதற்காக ஆப்பிரிக்க அடிமைகளை இறக்குமதி செய்ய ஆரம்பித்தார்கள். பிரெஞ்சுக் காலனிகளில் அதிக லாபம் கிடைக்கும் பகுதியாக ஹைத்தி மாறியது. அதாவது பிரான்சின் மூன்றில் ஒரு பங்கு அந்நிய இறக்குமதி இங்கிருந்தே வந்தது. ஒரே வார்த்தையில் சொல்வதென்றால், அன்று பொருளாதார வளர்ச்சிப்படியில் முன்னேறிக் கொண்டிருந்த பணக்கார காலனியாக ஹைத்தி திகழ்ந்தது. ஆனால், இங்கு குடியேறிய நாற்பதாயிரம் பிரெஞ்சு மக்கள் மட்டுமே செல்வத்தின் பெரும் பங்கை அனுபவித்தார்கள். ஆப்பிரிக்க அடிமைகளுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்பதுடன் லாபத்தை அதிகரிப்பதற்காக இன்னும் அதிகமாக சுரண்டப்பட்டார்கள்.

1791 ம் ஆண்டு, அதாவது புரட்சி வெடித்த காலத்தில், ஹைத்தியில் அரை மில்லியன் கறுப்பின அடிமைகள் இருந்தனர். அவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் ஆப்பிரிக்காவில் பிறந்தவர்கள். பெரும்பாலானவர்கள் பெருந்தோட்டங்களின் விரிவாக்கலுக்காக பிடித்து வரப்பட்டவர்கள். ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் இருந்தும் இப்படி ‘அழைத்து வரப்பட்ட’ பல மொழிகளைப் பேசும் மக்களை, அடிமை வாழ்வும், ஒன்றிணைந்த போராட்ட குணமும் ஒன்றிணைத்தன. சகோதரத்துவத்தை தோற்றுவித்தன.

ஹைத்தியின் மொத்த சனத்தொகையில் பத்து கறுப்பர்களுக்கு ஒரு வெள்ளையர் இருந்தார். இதனால் பெரும்பான்மையினரான அடிமைகள் விரைவிலேயே தமது பலத்தை அறிந்து கொண்டனர். அனைத்தையும்விட, அடிமைகளின் பூர்வீகமும் புரட்சிக்கு வழிகோலியது. புதிதாக வந்த ஆப்பிரிக்க அடிமைகள் தாயகத்தில் சுதந்திர மனிதர்களாக வாழ்ந்தவர்கள். பலர் அங்கோலா, கொங்கோ ராஜ்ஜியங்களில் மறவர் குலப் படைவீரர்களாக பணியாற்றியவர்கள். தமது மன்னனுக்கு மட்டுமே விசுவாசமானவர்கள். அப்படிப்பட்ட பின்னணியை கொண்டவர்கள் அடிமையாக வேலை செய்ய மறுத்ததில் வியப்பில்லை. பெருந்தோட்ட முதலாளிகளை எதிர்த்து கலகம் செய்தவர்கள் விரைவிலேயே கெரில்லாப் போராளிகளாக நிறுவனமயப்பட்டனர்.

துசா லூவேதியூர்
துசா லூவேதியூர்

அடிமைகளை இறக்குமதி செய்த காலத்திலிருந்தே, ஹைத்தியில் அடிமைகளின் கிளர்ச்சியும் இடம்பெற்று வந்துள்ளது. சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் தங்கள் காலில் கட்டிய சங்கிலிகளை உடைந்தெறிந்து விட்டு அடிமைகள் தப்பியோடினார்கள். யாரும் ஊடுருவ முடியாத மலைகளில் புகலிடம் தேடிக் கொண்டவர்கள் அங்கிருந்தபடியே உணவுக்காக பெருந்தோட்டங்களை கொள்ளையடித்தார்கள். அப்படி கொள்ளையடிக்க வரும் சந்தர்ப்பங்களில் பிற அடிமைகளை தப்பியோடுமாறு தூண்டி விட்டார்கள். ஆனால் இவையெல்லாம் ஒரு புரட்சிக்கு போதுமானதாக இருக்கவில்லை. கறுப்பின அடிமைகள் ஒரு தலைவனுக்காக காத்திருந்தார்கள். அந்தத் தலைவனாக ‘துசா லூவேதியூர்’ (Toussaint L’ouverture) உருவெடுத்தார். ஹைத்தியின் வடக்கேயுள்ள பிறேடா பெருந்தோட்டத்தில் அடிமையாகப் பிறந்த துசா, ஒரு பிரபுவின் வீட்டில் அடிமையாகும் பாக்கியம் பெற்றதால், எழுதப் படிக்க கற்றிருந்தார். அதனால் பிரான்சில் வெடித்த புரட்சி பற்றிய செய்திகளையும் அறிந்து வைத்திருந்தார்.

இதனால் கலகக்காரர்களுடன் துசா இணைந்ததும், விடுதலையடைந்த அடிமைகளைக் கொண்டு கெரில்லாக் குழுக்களை அமைத்தார். அவர்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கினார். யுத்த தந்திரங்களை கற்றுக் கொடுத்தார். இத்தனைக்கும் அவர் எந்தவொரு இராணுவக் கல்லூரியிலும் பயின்றவரில்லை. இருந்தாலும் சிறந்த தலைமைப் பண்புகளைக் கொண்டிருந்தார். இராணுவத் தளபதியாக செயல்பட்டபடியே புத்தி கூர்மை மிக்க ராஜதந்திரியாகவும் விளங்கி ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

ஹைத்தி முழுவதும் அடிமைகளின் கிளர்ச்சி பரவியதும், அதை அடக்குவதற்காக மூன்று ஐரோப்பிய நாடுகள் படைகளை அனுப்பின. பிரான்ஸ், ஸ்பெயின், பிரிட்டன் ஆகிய ஏகாதிபத்திய நாடுகள், தமக்கிடையிலான வல்லரசுப் போட்டியை இதற்காக தள்ளி வைத்தன. ஆயினும் வலிமை பொருந்திய ஆயுதங்களை வைத்திருந்த ஐரோப்பியப் படைகளால், துசாவின் தலைமையிலான சிறு கெரில்லாக் குழுவை வெல்ல முடியவில்லை. கெரில்லாப் போருக்கு சாதகமான மலைகளிலும், காடுகளிலும் மறைந்திருந்து கறுப்பினப் போராளிகள் தாக்கினார்கள். ஐரோப்பியருக்கு ஒத்துழைக்க இயற்கையும் மறுத்தது. வெப்ப வலைய நெருப்புக் காய்ச்சல் தாக்கி பல படைவீரர்கள் மடிந்தார்கள்.

ஒருகட்டத்தில் ஹைத்தியின் வடக்கேயுள்ள பகுதிகள் கறுப்பினப் படையணிகளால் விடுவிக்கப்பட்டன. தெற்கேயுள்ள பகுதிகளை கலப்பின முலாட்டோ படையினர் விடுதலை செய்தனர். பிரெஞ்சு பிரபுக்களுக்கும், கறுப்பின அடிமைப் பெண்களுக்கும் பிறந்த பிள்ளைகளே முலாட்டோ என அழைக்கப்படுகின்றனர். அவர்களின் தலைமைத் தளபதியான பெத்தியோன் (Alexander Petion) கூட தலைமைப் பண்புமிக்க புரட்சியாளர்தான். லத்தீன் அமெரிக்க நாடுகளை ஸ்பானிய காலனியாதிக்கத்தில் இருந்து விடுதலை செய்த பொலிவார், சுதந்திர ஹைத்தியில் தஞ்சம் கோரியிருந்தார். அப்போது அவருக்கு அடைக்கலம் கொடுத்த பெத்தியோன், பணமும், ஆயுதங்களும் கொடுத்து அவரை அனுப்பி வைத்தார். அந்த உதவிக்கு கைமாறாக என்ன செய்ய வேண்டுமென்று கேட்டார் பொலிவார். லத்தீன் அமெரிக்கா முழுவதும் அடிமைகளுக்கு சுதந்திரம் வழங்கினாலே போதும், என்று பதிலளித்தார் பெத்தியோன்!

கிளர்ச்சி வெடிக்க பெருந்தோட்ட முதலாளிகள் அடிமைகளை ஈவிரக்கமற்று கொடுமைப்படுத்தி வந்ததும் ஒரு காரணம். புரட்சியின்போது பெருந்தோட்டப் பயிர்கள் எரித்து நாசமாக்கப்பட்டன. சொந்த அடிமைகளே பெருந்தோட்ட முதலாளிகளுக்கு நஞ்சூட்டி, அல்லது வெட்டிக் கொன்றனர். கறுப்பின அடிமைகளின் தார்மீக ஆவேசம் அனைத்து வெள்ளையருக்கும் எதிராக திரும்பியது. கண்ணில் பட்ட வெள்ளையர்கள் அனைவரும் கொன்று குவிக்கப்பட்டனர். படுகொலையிலிருந்து தப்பியவர்கள் அகதிகளாக பிரான்சு நோக்கி கப்பலேறினார்கள். புரட்சி வெற்றிவாகை சூடியபோது ஹைத்தியில் ஒரு பிரெஞ்சுக்காரர் கூட இருக்கவில்லை. இருந்த வெள்ளையர்களும் போலந்து கூலிப்படையை சேர்ந்தவர்கள். பிரெஞ்சு இராணுவத்தால் அனுப்பபட்ட அவர்கள் தக்க தருணம் பார்த்து புரட்சிப்படைகளுடன் சேர்ந்து கொண்டார்கள். அதனால் அவர்கள் மட்டுமே சுதந்திர ஹைத்தியில் தங்க அனுமதிக்கப்பட்டார்கள்.

சுதந்திரமடைந்ததும் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை ஹைத்தி எதிர்கொண்டது. பெருந்தோட்டத்தில் வேலை செய்ய எந்த முன்னாள் அடிமையும் முன்வரவில்லை. இதனால் நிலம் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. அநேகமாக அனைத்து கறுப்பினத்தவர்களும் விவசாயத்தில் ஈடுபட்டார்கள். விவசாய உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் வர்த்தகத்தில் முலாட்டோக்கள் இறங்கினார்கள். இதனால் நாட்டுப்புறங்களில் ஏழை விவசாயிகளாக வாழும், கிரயோல் (ஆப்பிரிக்க கலப்பு) மொழி பேசும் கறுப்பினத்தவர்கள், நகர்ப்புறங்களில் பணக்கார மேட்டுக்குடிகளாக வாழும் பிரெஞ்சு மொழி பேசும் முலாட்டோக்கள் என சமூகத்தில் புதிய வர்க்க வேறுபாடுகள் தோன்றின. படித்த கறுப்பின மத்தியதர வர்க்கம் பிற்காலத்தில் உருவான போதிலும், இந்த சமூகப் பிரிவினை இன்று வரை தொடர்கிறது.

ஹைத்தி புரட்சி சர்வதேச மட்டங்களில் பல மாற்றங்களை உருவாக்கியது. ஹைத்தியை கைப்பற்ற முன்னாள் காலனிய எஜமானான பிரான்ஸ், பெரும் பிரயத்தனம் எடுத்தது. தன்னிடம் இருந்த அனைத்து வளங்களையும் பயன்படுத்தி போரைத் தொடர எண்ணியது. இதற்காக அமெரிக்காவில் இருந்த பிரெஞ்சுக் காலனியான லூசியானாவை 15 மில்லியன் டாலர்களுக்கு விற்றது. ஹைத்தியில் புரட்சி வெடிக்காதிருந்தால், இந்நேரம் வட அமெரிக்காவில் ஒரு பிரெஞ்சு – அமெரிக்க தேசம் இருந்திருக்கும்.

ஹைத்தி

சுதந்திர நாடானபோதும் சர்வதேச உறவுகளைப் பேணுவதில் ஹைத்திக்கு தடை ஏற்பட்டது. சர்வதேச வர்த்தகம் முழுவதும் ஐரோப்பிய வல்லரசுகளின் கைகளில் இருந்தன. இதனால் ஏற்றுமதிக்கு அந்நிய சந்தையை தேடுவதில் சிரமமேற்பட்டது. வேறு வழியின்றி பிரான்சின் நிபந்தனைகளை ஏற்கும் நிலைக்கு ஹைத்தி தள்ளப்பட்டது. காலனிய இழப்பீடுகளுக்காக, 150 மில்லியன் பிராங் நஷ்டஈட்டை பிரான்சுக்கு வழங்க ஹைத்தி ஒப்புக்கொண்டது. பதிலுக்கு ஹைத்தியின் சுதந்திரத்தை 1825ல் பிரான்ஸ் அங்கீகரித்தது. ஆனால், 1862ல்தான்  அமெரிக்கா அங்கீகாரம் வழங்கியது. அதற்கும் சுயநலம்தான் காரணம். ஹைத்தியின் பருத்தி, உள்நாட்டுப் போரில் சிக்கியிருந்த அமெரிக்காவுக்கு அத்தியாவசியமாக தேவைப்பட்டது.

முதலாம் உலகப்போரின்போது பனாமாக் கால்வாயை பாதுகாப்பதற்காக, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஹைத்தி மீது அமெரிக்க இராணுவம் படையெடுத்தது. அன்று தொடங்கிய அமெரிக்க ஆக்கிரமிப்பு 19 ஆண்டுகள் நீடித்தது. ‘ஹைத்தி மக்களின் நன்மை கருதி’ நடவடிக்கை எடுத்ததாக அறிவித்த அமெரிக்கா, இதன் பிறகு நினைத்தபோதெல்லாம் படையுடன் ஹைத்திக்குள் நுழைந்தது. ஜனநாயகத்தை மீட்பதற்கு, தேர்தலில் தெரிந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு, என்று பல காரணங்களை முன்னிறுத்தி ‘சும்மா, சுகம் விசாரித்து விட்டு’ செல்வதை வழக்கமாக்கிக் கொண்டது. 2009 ல் நிலநடுக்கம் ஏற்பட்டபோது கூட ‘நிவாரணப் பணிகளை ஒழுங்குப்படுத்த’ அமெரிக்கப் படை வந்தது.

ஹைத்தியில் அடிமை முறை ஒழிக்கப்பட்ட போதிலும், உற்பத்தி உறவுகளில் மாற்றம் ஏற்படவில்லை. வெள்ளையின பெருந்தோட்ட முதலாளிகளை விரட்டி விட்டு, அந்த இடத்தில் கறுப்பின/கலப்பின மேட்டுக்குடி வர்க்கம் அமர்ந்து கொண்டது. அவர்கள் உழைக்கும் மக்களை கட்டாய வேலை வாங்கியதன் மூலம் தமது செல்வந்த வாழ்வை நிச்சயப்படுத்திக் கொண்டனர். முன்னாள் அடிமைகள், ஏழை தொழிலாளர்களானார்கள். வெள்ளையின எஜமானர்களின் இடத்தில் கறுப்பின எஜமானர்கள் அமர்ந்து கொண்டார்கள். இன்று வரை இந்த நிலைமை தொடர்கிறது. இந்த அதிகார வர்க்கத்திற்கு எதிராகவும் மக்கள் எழுச்சிகள் ஏற்பட்டன. ஆனால், மக்கள் தமது இயலாமையை அறிந்து வைத்திருப்பதால் அவை வலுவாகவில்லை. அமெரிக்க ஆக்கிரமிப்பின்போது ஏற்பட்ட விவசாயிகளின் எழுச்சி ஒன்று அடக்கப்பட்டது. 1919ல் அவர்களை ஒழுங்குபடுத்தி போராடிய முன்னாள் இராணுவ அதிகாரி, பின்னர் காட்டிக் கொடுக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். அதன் பிறகு நீண்ட காலமாக யாரும் புரட்சியை நினைத்தும் பார்க்கவில்லை. ஆக்கிரமிப்பாளர்களான அமெரிக்க கடற்படையினர், ஹைத்தி இராணுவத்தை கலைத்து விட்டு, அந்த இடத்தில் உள்நாட்டுக் கலகங்களை அடக்கும் சிறப்புப் போலிஸ் பிரிவினரை உருவாக்கினர். பிற்காலத்தில் இடம்பெற்ற மோசமான மனித உரிமை மீறல்களுக்கு அமெரிக்காவில் பயிற்சி பெற்ற இந்த போலிஸ் பிரிவினரே காரணமாக அமைந்தனர்.

டுவாலியர்
ழீன் கிளாட் டுவாலியர்

அமெரிக்க படையினர் வெளியேறிய பிறகு, டுவாலியர் என்ற சர்வாதிகாரியின் கொடுங்கோல் ஆட்சியின் கீழ் ஹைத்தி அல்லலுற்றது. 1986 வரை பல தசாப்தங்களாக தொடர்ந்த டுவாலியர் குடும்ப ஆட்சியின் கீழ் ஹைத்தி மக்கள் சொல்லொணா துயரங்களுக்கு ஆளாகினர். எதிர்க்கட்சிகள் தடை செய்யப்பட்டன. கருத்துச் சுதந்திரம் இறுதி மூச்சை விட்டது. சர்வாதிகாரத்தை எதிர்த்தவர்கள் இரவோடு இரவாக காணாமல் போனார்கள். கொலைபாதகச் செயல்களுக்கு அஞ்சாத குண்டர் படைகள், அப்பாவிகளை கண்ட இடத்தில் சுட்டுக் கொன்றனர். சந்தேக நபர்களால் சிறைச்சாலைகள் நிரம்பின. சித்திரவதை, கொட்டடிக் கொலைகள் சாதாரண நிகழ்வுகளாகின.

ஆரம்பத்தில் மக்கள் ஆதரவுடன் பொதுத்தேர்தலில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் இந்த டுவாலியர். ஏழைக் குடும்பத்தில் பிறந்து வைத்தியரான இவரை பதவி சுகமும், சி.ஐ.ஏ. ஆதரவும் ஒரு சர்வாதிகாரியாக மாற்றிவிட்டது. தேசநலனை மறந்து தனது செல்வத்தை பெருக்கிக் கொள்வதிலேயே முனைப்புக் காட்டினார். இவரது ஆட்சிக்காலத்தில் ஏழைகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியது. 90 சதவிகித ஹைத்தி மக்கள், படிப்பறிவற்றவர்களாக வறுமையில் வாடும்போது ஜனாதிபதியின் குடும்பம் சுவிஸ் வங்கிகளில் பணத்தை பதுக்கிக் கொண்டிருந்தது. 1986ல் ஏற்பட்ட மக்கள் எழுச்சி, டுவாலியர் குடும்ப கொடுங்கோன்மைக்கு முடிவு கட்டியது. இருந்தாலும் அப்போது பதவியில் இருந்த டுவாலியரின் மகன் அரச கருவூலத்தை கொள்ளையடித்துக் கொண்டு பிரான்சுக்கு தப்பியோடினான்.

டுவாலியர் காலத்தில் ஹைத்தியில் வாழ்ந்த மக்களுக்கு இரண்டு தெரிவுகளே இருந்தன. ஒன்று, கூலிப்படையின் கொலைக் கரங்களுக்குள் அகப்பட்டு சித்திரவதை அனுபவித்து இறப்பது. இரண்டு, நாட்டையும் உறவுகளையும் விட்டுவிட்டு அயல் நாடுகளுக்கு தப்பியோடுவது. இரண்டாவதை தெரிவு செய்த மக்கள், தினமும் ஆயிரக்கணக்கில் அகதிகளாக படகுகள் மூலம் நான்கு திசைகளிலும் ஓடினார்கள். ஆனால், சுற்றியிருந்த எந்த நாடும் அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. புளோரிடா கரையில் பெருமளவு ஹைத்தியர்கள் இறங்கி தஞ்சம் கோரினார்கள். அந்த அகதிகளுக்கு தற்காலிக புகலிடம் அளிப்பதற்கு கூட அமெரிக்க அரசு மறுத்தது. ஆனால், இதேநேரத்தில்தான் அமெரிக்க கம்பெனிகள் ஹைத்தியில் சுரண்டிய உழைப்பை, டாலர் டாலராக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருந்தன.

‘நாளொன்றுக்கு ஒரு டாலர் சம்பாதிக்கும் ஹைத்தியர்கள், எதற்காக 500 டாலர் கட்டி ஆபத்தான கடற்பயணத்தை மேற்கொண்டு அமெரிக்கா வரவேண்டும்?’ என்ற கேள்வியை எழுப்பி அடைக்கலம் கேட்டு வந்தவர்களை திருப்பி அனுப்பினார்கள். கொடுங்கோல் ஆட்சி நடத்திய சர்வாதிகாரியின் கைகளில் நேரில் சென்று ஒப்படைத்தார்கள். விமான நிலையத்தில் காத்திருந்த கொலைஞர்கள், திரும்பி வந்த அகதிகளை கதறக் கதற தரையில் இழுத்து சென்றனர். இதையெல்லாம் தனி மனித சுதந்திரத்தை உயிரென மதிக்கும் அமெரிக்கா பொறுத்துக் கொள்கிறதா… என்ற கேள்வியை யாரும் கேட்கவில்லை. கியூபாவின் மனித உரிமைகளைக் கண்காணிக்கவே அவர்களுக்கு நேரம் போதவில்லை. படகுகளில் வந்த ஹைத்தியர்களை ‘நீங்கள் அகதிகள் இல்லை’ என்று கூறிய திருப்பி அனுப்பிய அதே அமெரிக்கா, ஏக காலத்தில் படகுகளில் வந்த கியூபர்களை, அகதிகள் என்று அடையாளப்படுத்தி தஞ்சம் வழங்கியது. ‘கியூபர்கள் மட்டுமே உண்மையான அரசியல் அகதிகள்’ என்று ஊடகங்கள் தலையில் வைத்து கூத்தாடின. இதிலிருந்து கற்றுக் கொள்ளப்பட வேண்டிய பாடம், ‘அமெரிக்காவில் அகதித் தஞ்சம் கோர விரும்பும் ஒருவர், கம்யூனிச நாட்டில் இருந்து வந்த கம்யூனிச எதிர்ப்பாளராக இருக்க வேண்டும்’ என்பதுதான்.

டுவாலியரின் ஆட்சி இரண்டு வலிமை பொருந்திய அரசியல் சக்திகளின் ஆதரவால் மட்டுமே நீடிக்க முடிந்தது. ஒன்று, அமெரிக்க அரசு. இரண்டு, பாதுகாப்புப் படைகள். சர்வாதிகாரிக்கு முகஸ்துதி செய்து பதவியில் அமர்ந்திருந்த ஒரு சிறு கும்பலை தவிர, பெரும்பான்மை மக்கள் வெறுப்புடன் இருந்தனர். எதிர்க்கட்சிகள் அனைத்தும் தடைசெய்யப்பட்ட சூழலில், கத்தோலிக்க தேவாலயம் மட்டுமே மிச்சமிருந்தது. அன்று தென் அமெரிக்காவில் பிரபலமடைந்த ‘விடுதலை இறையியல்’ தத்துவத்தின் பால் பல பாதிரிகள் ஈர்க்கப்பட்டனர். தேவாலயங்களை அடக்கப்பட்ட மக்களின் புரட்சிக்கான பயில்நிலங்களாக அவர்கள் மாற்றினார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் அரிஸ்தீத். தலைநகர் போர்ட் ஒ பிரின்சில் உள்ள பிரபல தேவாலயத்தில் அவரது அரசியல் உரையைக் கேட்க பல்லாயிரம் மக்கள் கூடினார்கள். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பூஜைக்கு பின்னர் ஆரம்பிக்கும் மதப் பிரசங்கம், அரசியல் பிரச்சாரமாக மாறும். டுவாலியரின் கொடுங்கோலாட்சிக்கு எதிராக, சமூகவிரோத கூலிப்படைகளின் வன்செயல்களுக்கு எதிராக, கடுமையான எதிர்ப்பை தன் பிரசங்கத்தில் அவர் தெரிவிப்பார்.

இதனால் கூலிப்படையினர் அவரை கொலை செய்ய பலமுறை முயற்சித்தனர். ஆனால், பாதுகாப்புச் சுவராக நின்ற மக்களின் ஆதரவால் அரிஸ்தீத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. எண்பது சதவிகித ஹைத்தி மக்கள் பாதிரியார் அரிஸ்தீத்தை ஆதரவளித்தபோதிலும், வத்திகான் அவரை பிஷப் பதவியில் இருந்து நீக்கியது. அதற்கு சொல்லப்பட்ட காரணம், அரிஸ்தீத் ஒரு மார்க்சிஸ்ட்! ‘சோஷலிசம் மட்டுமே ஏழைகளுக்கு விடிவைத் தேடித் தரும் மார்க்கம்’ என்று போதித்தது மட்டுமே அவர் செய்த குற்றம். ‘ஆறு மில்லியன் ஏழை ஹைத்தியர்களுக்கு உணவளிக்க, உறைவிடம் வழங்க, வளமான வாழ்வு வழங்க சோஷலிசம் மட்டுமே தீர்வு’ என்று பேசி கத்தோலிக்க அதிகார பீடத்தை பாட்டாளிகளின் தோழனான அரிஸ்தீத் எரிச்சலடைய வைத்தார். ஆனால், ‘ஏழைகளின் அன்னை’ தெரேசாவோ, ஹைத்தி ஏழைகளிடம் இருந்து சுரண்டிய டுவாலியரின் நிதியை ஏற்றுக் கொண்டார். ஹைத்தி ஏழைகளின் இரத்தக்கறை படிந்த டுவாலியரின் மனைவியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அக்கிரமக்காரருடன் கைகோர்த்த அன்னை தெரேசாவின் செயல், வத்திகானில் அதிர்வலைகளை ஏற்படுத்தவில்லை. பதிலாக, ‘தெரேசா புனிதர், அரிஸ்தீத் துரோகி’ என்றே அறிவித்தது. இதுதான் வத்திகானின் (அ)நீதி.

அடுத்து வந்த பொதுத்தேர்தல்களில், அரிஸ்தீத் மக்கள் ஆதரவுடன் வென்றதால் அமெரிக்கா வேறு வழியின்றி ஆதரவளிக்க வேண்டியிருந்தது. எண்பது சதவிகித மக்கள் அரிஸ்தீத் பக்கம் நின்றனர். ஆயினும் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், அவரால் சோஷலிசத்தை கொண்டு வர முடியவில்லை. அதனால் மக்களிடம் ஏற்பட்ட அதிருப்தியை பயன்படுத்தி அடிக்கடி ஆட்சிக் கவிழ்ப்புகள் இடம்பெற்றன. இதன் பின்னணியில் அமெரிக்க் அரசு இருந்தது. சில வருடங்களுக்கு முன்னர் கூட ஹைத்தியை ஆக்கிரமித்த அமெரிக்க படைகள், இனிமேல் திரும்பி வராதபடிக்கு அரிஸ்தீத்தை தென் ஆப்பிரிக்காவுக்கு நாடு கடத்தியது. அரிஸ்தீத் ஆட்சி செய்த காலத்திலும், அமெரிக்கா, ஐ.எம்.எஃப்., உலகவங்கி போன்றவை ஹைத்தியின் கழுத்தை நெருக்கின. தமது நிபந்தனைகளுக்கு உடன்படாவிட்டால் கடன் தர மாட்டோம் என பயமுறுத்தின.

கடன் வழங்கும் நிறுவனங்களின் பொருளாதார சீர்திருத்தங்கள், சில நேரம் சிறுபிள்ளைத்தனமாக இருக்கும். உதாரணமாக தேசிய தொலைத்தொடர்பு சேவையை தனியார்மயப்படுத்துமாறு கூறினார்கள். ஹைத்தியில் சில ஆயிரம் பேர்கள் மட்டுமே தொலைபேசி வசதியை பயன்படுத்துபவர்கள். எனவே லாபம் தராத தொழிற்துறையை தனியாரிடம் ஒப்படைத்ததால் யாருக்கும் பயனில்லாமல் போனது. அதேபோலத்தான் பொதுக்கல்வியும். ஏற்கனவே 90௦ சதவிகித ஹைத்தியர்கள் கல்வியறிவற்றவர்கள் என்ற நிலையில், கல்விக்கு மிக மிகக் குறைந்த நிதியை மட்டுமே அரசு ஒதுக்க வேண்டுமென்று ஐ.எம்.எப். உத்தரவு பிறப்பித்தது. இதனால் பள்ளிகள் எல்லாம் தனியார்மயமாகி பணம் படைத்தவர்களின் பிள்ளைகள் மட்டுமே இப்போது பள்ளிக்கு செல்லும் சூழ்நிலை உருவாகிவிட்டது. படிப்புச் செலவை ஏற்க முடியாமல் ஏழைகளின் பிள்ளைகள் வேலைக்கு செல்ல ஆரம்பித்துவிட்டனர்.

இன்னொரு கொடுமையும் அங்கு அரங்கேறியிருக்கிறது. ஐநூறு வருடங்களுக்கு முன்னர் காலனிய ஐரோப்பியர் கொண்டு வந்த பன்றிகள், ஹைத்தி சூழலுக்கு ஏற்ப தங்களை பழக்கப்படுத்திக் கொண்டன. இதனால் நமது கிராமங்களில் வீட்டுக்கு வீடு ஆடு வளர்க்கப்படுவது போல, ஹைத்தியில் பன்றிகளை வளர்க்க ஆரம்பித்தார்கள். கஷ்டப்படும் ஏழைகளுக்கு இந்தப் பன்றிகளும் உணவளித்து வந்தன. இந்த வழக்கத்தையும் அமெரிக்கா ஒழித்துவிட்டது. சமீபத்தில் பன்றிக் காய்ச்சல் தொற்றுநோய் பரவியபோது, ஐ.எம்.எப். உத்தரவுப்படி ஹைத்தி பன்றிகள் எல்லாம் அழிக்கப்பட்டன. இதற்கு மாற்றாக அமெரிக்கா பன்றிகளை வழங்கியது. ஆனால், இந்த அமெரிக்க பன்றிகளால் ஹைத்தியின் தட்பவெப்ப காலநிலையை தாக்குப் பிடிக்க முடியவில்லை. எனவே அடுத்தடுத்து அவைகள் இறந்தன. இதனால் பன்றிகள் இன்றி ஏழை ஹைத்திகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

ஒவ்வொருமுறை  ஹைத்தியில் புதிய அரசாங்கம் பதவி ஏற்கும்போதும், அவர்களுடன் அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ளும். ஹைத்தியின் வறுமையை பயன்படுத்தி அமெரிக்க நிறுவனங்களுக்கு சாதகமாக சட்டங்கள் மாற்றப்படும். ஹைத்தியில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனங்களுக்கு வரிச்சலுகை கிடைப்பது மட்டுமல்ல, நிகர லாபத்தை அப்படியே அமெரிக்காவுக்கு கொண்டு செல்லவும் வழிவகை செய்யப்படும். Raynolds என்ற நிறுவனம் அலுமினியத்தின் மூலப்பொருளான பாக்ஸ்சைட்டை  அகழ்ந்து கொண்டிருந்தது. இப்போது அதுவும் மூட்டை கட்டி விட்டது. காரணம், எண்பதுகளிலேயே ஹைத்தியின் கனிம வளங்கள் அனைத்தும் ஓட்ட ஓட்ட உறிஞ்சப்பட்டு விட்டன. இப்போது வீடு கட்ட கல்லும், மண்ணும் மட்டுமே மிச்சமிருக்கின்றன.

உலகமயமாக்கல் காலத்தில் ஆடை ஏற்றுமதி தொழில் வந்தது. அமெரிக்காவில் பேஸ்பால் விளையாட்டுக்கு பயன்படுத்தப்படும் பந்து ஹைத்தியில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. ஹைத்தியின் ‘ஒரு டாலர் தொழிலாளரின்’ உழைப்பை பயன்படுத்தி தயாரான பொருட்களை அமெரிக்காவில் வால் மார்ட் போன்ற அங்காடிகள் விற்பனை செய்தன. வால்ட் டிஸ்னி, க்மார்ட் போன்றன ஹைத்தியின் உழைப்பை உறிஞ்சும் பிரபல நிறுவனங்கள். தொழிலாளர்களின் நாள் கூலியை இரண்டு டாலராக உயர்த்துவதற்கு அரிஸ்தீத் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. தொழிற்சங்க உரிமை மறுக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க இடதுசாரி அமைப்புகள் மட்டுமே அவர்களின் உரிமைக்காக போராடின.

இப்படி ஹைத்தியின் பொருளாதார பின்னடைவுக்கு, வெளிநாட்டு உதவியை எதிர்பார்த்து அந்நாடு இருப்பதும் முக்கிய காரணம். ஹைத்தி எப்போதும் ஒன்று இயற்கை அழிவால் பாதிக்கப்படும் அல்லது சர்வாதிகாரிகளின் செயற்கை அழிவால் அல்லல்படும். இதனால் மில்லியன் கணக்கான மக்கள், வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் வழங்கும் உணவுப் பொருட்களை எதிர்பார்த்து வாழ்ந்து வருகின்றனர். தொண்டு நிறுவனங்கள் மலிவான அமெரிக்க கோதுமையை உதவி என்ற பெயரில் கொண்டு வந்து ஹைத்தியில் கொட்டுகின்றன. இதனால் உள்ளூர் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். அதுபோலவே ஹைத்திக்கு அமெரிக்கா வழங்கும் கடனால் அமெரிக்கர்களே நன்மையடைகின்றனர். ஆனால் முழு கடன் தொகையையும் வட்டியுடன் ஹைத்தி அரசு கறாராக திருப்பிச் செலுத்த வேண்டும் என நிபந்தனை விதிக்கின்றன. அமெரிக்க அரசு ஒரு டாலர் கொடுத்தால், அதில் ௦0.85 டாலர்சதம் தொண்டு நிறுவன ஊழியர்களின் ஊதியமாகவோ, அல்லது வேறு செலவினமாகவோ அமெரிக்காவுக்கே திரும்பி வருகின்றது. இந்த தகவலை தெரிவித்தது வேறு யாருமல்ல. அமெரிக்க அரச சார்பு தொண்டு நிறுவனமான USAIDதான் !

–    தொடரும்

_______________________________
கலையரசன்
_______________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: