புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் ஜமாத்தாருக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் மணமகன் அலாவுதீன், மணமகள் ஷபனா ஆஸ்மி ஆகியோருக்கிடையில் நடைபெற்ற சீர்திருத்த திருமணம் குறித்த செய்தியை புதிய ஜனநாயகம் இதழ் வெளியிட்டிருந்தது. அதனை வினவு தளத்தில் பிரசுரித்திருந்தோம். அச்செய்தியில் மணமகளின் தந்தை தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலத் துணைத் தலைவர் என்று தவறுதலாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த விவரப்பிழை குறித்து புதிய ஜனநாயகம் இதழுக்கும் தெரிவித்து விட்டோம்.
அப்பகுதியின் ஜமாத்தை சேர்ந்தவர்களும், ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்ட அப்பகுதி முஸ்லிம் மக்களும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர் என்றும் மேற்கூறிய செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. “கிடையவே கிடையாது” என்று இதற்கும் சில பேர் மூச்சைக் கொடுத்து வாதாடினார்கள்.
கடைசியாக, தன்னுடைய திருமணம் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியிருப்பதைக் கேள்விப்பட்ட மணமகன் அலாவுதீன், வினவு தளத்தில் தனது விளக்கத்தை அளித்தார். அது அவரது விளக்கமல்ல, வினவு செட்டப் செய்து போட்டது என்று அவதூறு புலனாய்வு செய்து கண்டுபிடித்து சில இசுலாமிய தளங்களில் கட்டுரைகள் எழுதினார்கள்.
விவகாரம் அதோடும் முடியவில்லை என்று தெரிகிறது. நேரில் வந்து ஆஜராகி விளக்கமளிக்குமாறு மணமேல்குடி ஜமாத்திலிருந்து தனக்கு தாக்கீது வந்திருப்பதாக அலாவுதீன் எங்களிடம் தெரிவித்தார். வளைகுடாவில் இருக்கும் ஷபனா ஆஸ்மியின் தந்தை அப்பாஸ் தவ்ஹீத் ஜமாத்தில் உறுப்பினர். நான் உறுப்பினர் இல்லை என்று அறிக்கை விடும்படி அவரையும் நிர்ப்பந்திக்கிறார்களாம். இந்த திருமணத்துக்கு சென்று கலந்து கொண்ட தவ்ஹீத் ஜமாத்தின் பொறுப்பாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. இவை குறித்தெல்லாம் நாங்கள் புலனாய்வு செய்து கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு சில நாட்களில் எல்லாவற்றுக்கும் முடிவு தெரியத்தான் போகிறது.
இவர்களுடைய அணுகுமுறையைக் கண்டு ஒருபுறம் கோபம் வருகிறது. இன்னொரு புறம் இசுலாமிய மக்களின் நிலைமையை நினைக்கும்போது வருத்தமாகவும் இருக்கிறது. தவ்ஹீத் ஜமாத்தோ, த.மு.மு.கவோ அல்லது பிற இசுலாமிய அமைப்புகளோ திமுக, அதிமுக யாரோடு வேண்டுமானாலும் கூட்டு சேருவார்கள். அவர்களுக்கு ஓட்டுப் போடச்சொல்லி இசுலாமிய மக்களை பத்தி விடுவார்கள். அவர்களோடு ரம்ஜான் கஞ்சி குடிப்பார்கள். அதிலெல்லாம் இவர்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. அவர்கள் நேரடி இந்துமதவெறிக் கட்சியான பாஜகவுடனும், மறைமுக இந்துமதவாதக் கட்சியான காங்கிரசுடனும் கூட்டு சேர்ந்தவர்கள் என்பதும் இவர்களுக்கு பிரச்சினை இல்லை.
அவ்வளவு ஏன், தற்போதைய அலகாபாத் தீர்ப்பை கண்டித்து எந்தக் கட்சியும் பேசவில்லையே அதுபற்றி கேட்பதற்கும் இவர்களுக்குத் துப்பில்லை. யாராவது ஒரு அலாவுதீன் கம்யூனிச அடையாளத்தோடு திருமணம் செய்து கொண்டால் அதுதான் இவர்களுக்கு பிரச்சினை. உடனே விசாரணை, ஒழுங்கு நடவடிக்கை எல்லாம் தூள் பறக்கிறது.
வரதட்சிணை வாங்கிய இசுலாமியர்கள், வட்டிக்கு விடும் இசுலாமியர்கள், லாட்டரி சீட்டு விற்றே ஜனாப் ஆன ஹாருண்கள், ஏழை முஸ்லிம்களை வளைகுடாவுக்கு மலிவு விலையில் விற்பனை செய்யும் ஏஜென்சி நடத்தும் முஸ்லீம் பெருமக்கள், ரஜினி கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்யும் கலீல்ஜி போன்ற தலைவர்கள்… இவர்களையெல்லாம் தவ்ஹீத் ஜமாத் அட்ஜஸ்ட் செய்து கொள்ளும். “நான் ஒரு கம்யூனிஸ்டு” என்று வெளிப்படையாக அறிவித்துக் கொள்ளும் அலாவுதீன்தான் இவர்களுக்குப் பிரச்சினை.
இந்தப் பிரச்சினையும், இன்று இந்த விவாதம் நடைபெறும் சூழலும் எங்களுக்கு 1980களை நினைவு படுத்துகிறது. அன்று குற்றவியல் நடைமுறைச்சட்டப்படி ஜீவனாம்சம் கோரிய ஷாபானு என்ற அப்பாவி வயோதிக முஸ்லிம் பெண்ணுக்கு எதிராக நாடு முழுவதும் கிளர்ச்சி செய்தார்கள் இசுலாமிய அடிப்படைவாதிகள். உடனே பல்டியடித்த ராஜீவ் காந்தி ஷரியத் கோர்ட்டை கொண்டு வந்தார். அதனை சரிக்கட்டும் விதத்தில் இந்து அடிப்படைவாதிகளை தாஜா செய்வதற்காக 1986 இல் பாபர் மசூதியில் வைக்கப்பட்ட ராமன் சிலையை வழிபாட்டுக்குத் திறந்து விட்டார். விளைவு – நாடு முழுவதும் நாம் கண்டு வரும் இந்து வெறியின் கோரதாண்டவம்.
இன்று, அலகாபாத் நீதிமன்றம் அப்பட்டமான ஒரு கட்டைப்பஞ்சாயத்து தீர்ப்பை கொடுத்திருக்கிறது. அதனை எதிர்த்துக் கண்டிப்பதற்கு, இப்தார் விருந்து வைத்த எந்த ஓட்டுக் கட்சிக்கும் துப்பில்லை. அந்தக் கட்சிகளில் இருக்கும் இசுலாமியர்கள் எல்லாம் வெளியேறவேண்டும் என்று தவ்ஹீத் ஜமாத் அறிவிக்குமா? அவர்களையெல்லாம் எந்த ஜமாத்தாவது விசாரிக்குமா? அலாவுதீன் மீது விசாரணை நடத்தப்போகிறார்களாம். இந்தக் கேலிக்கூத்தை என்னவென்பது?
இந்து மதவெறிக்கு எதிராக சமரசமின்றி குரல் கொடுக்கும் ம.க.இ.க வும் வினவு தளமும்தான் இவர்களுக்கு எதிரிகள். கேட்டால் “இந்து மதவெறியையெல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இசுலாமிய மக்கள் உங்களை நம்பி இல்லை” என்று ஜம்பமாக பதில் சொல்வார்கள். தங்களுடைய உரிமையைப் பாதுகாப்பது இசுலாமிய அமைப்புகளா, மதச்சார்பற்ற அமைப்புகளா என்று குஜராத் முஸ்லிம் மக்களிடம் அல்லவா கேட்கவேண்டும்? பெஸ்ட் பேக்கரி வழக்கு உள்ளிட்ட குஜராத் படுகொலை வழக்குளை உலகறியச் செய்த தீஸ்தா சேதல்வாத், ஒரு இறை நம்பிக்கையற்ற காஃபிர். மோடியை எதிர்த்து நிற்கும் பல மனித உரிமை ஆர்வலர்களும் கூட இறைநம்பிக்கையற்ற காஃபிர்கள்தான்.
இசுலாத்தை ஏற்றுக் கொள்ளாத, ஆனால் இசுலாமிய மக்களின் மீது பரிவும், அக்கறையும் கொண்ட எங்களைப் போன்ற காஃபிர்களுடன் ஒரு முஸ்லிம் என்ன விதமான உறவைப் பேண வேண்டும்? “இத்தகைய காஃபிர்களை நம்முடைய காரியத்துக்குப் பயன்படுத்திக் கொள்வது ஹராம் இல்லை. ஆனால் அந்த நச்சுப் பாம்புகளோடு நெருக்கமான சகவாசம் வைத்துக் கொள்ளக் கூடாது” என்பதுதான் தவ்ஹீத் ஜமாத் போன்றோரின் கருத்து.
ஆனால் அது அப்படி இருப்பதில்லை. பேய் என்றும் பிசாசென்றும் சாத்தானென்றும் கம்யூனிஸ்டுகளைப் பற்றிய சித்திரத்தை தவ்ஹீத் ஜமாத்தார் உருவாக்கினாலும், எங்களுடன் நேரடியாகப் பழகும் சாதாரண முஸ்லிம் மக்கள் கம்யூனிஸ்டுகளின் நேர்மை, ஒழுக்கம், அர்ப்பணிப்பு ஆகியவற்றால் கவரப்படுகிறார்கள். கல்வி வள்ளல்களின் நன்கொடைக் கொள்ளைக்கு எதிராக மாணவர்களைத் திரட்டி நாங்கள் போராடும்போது அதில் முஸ்லிம் மாணவர்களும் இருக்கிறார்கள்; தொழிற்சங்கத்தில் முஸ்லிம் தொழிலாளர்களும் இருக்கிறார்கள்; இவர்களுடைய பிரச்சினைகளுக்கெல்லாம் தவ்ஹீத் ஜமாத்திடம் விடை இல்லை.
இவற்றுக்கு நியாயமான, அறிவுக்கு உகந்த தீர்வுகளைச் சொல்லும் கம்யூனிசக் கொள்கைகளின் பால் ஒரு இசுலாமியர் ஈர்க்கப்படுவதில் என்ன தவறு? அப்படி ஈர்க்கப்பட்ட பல முஸ்லிம் இளைஞர்களில் ஒருவர் தான் அலாவுதீன். நேற்று இந்துவாக, கிறித்தவனாக, ஆதிக்க சாதியாக, திமுக காரனாக, அதிமுக காரனாக, ஆர்.எஸ்.எஸ் காரனாக இருந்தவர்களெல்லாம்தான் கம்யூனிஸ்டுகளாக மாறியிருக்கிறார்கள். யாரும் காஃபிராகவே வானத்திலிருந்து குதித்துவிடவில்லை. பிறப்பால் இந்து உண்டு, முஸ்லிம் உண்டு, கிறித்தவன் உண்டு. ஆனால் பிறப்பால் யாரும் கம்யூனிஸ்டு இல்லை. கம்யூனிஸ்டுக்கு மகனாகப் பிறந்தாலும், அவனுக்கு கம்யூனிசத்தின் மீது பற்று இருந்தால் மட்டும்தான் கம்யூனிஸ்டாக வளர்வதற்கு முயற்சிக்கிறான்.
அலாவுதீனையே எடுத்துக் கொள்வோமே. அவர் குடிகாரரோ, பெண் பித்தரோ, சூதாடியோ, வட்டிக்கு விடுபவரோ இல்லை. வரதட்சிணையும் வாங்கவில்லை. அவர் செய்த ஒரே குற்றம் இசுலாமிய முறைப்படி திருமணம் செய்யாததுதான். “இசுலாமுக்கு எதிராக எதையாவது செய்தே தீருவது” என்று முடிவு செய்து அதற்காக தனது திருமணத்தை அவர் இப்படி நடத்தவில்லை. இதுதான் அறிவுக்கு உகந்தது, நாகரிகமானது என்று கருதுவதனால் சுயமரியாதை திருமணம் செய்திருக்கிறார்.
உருவ வழிபாட்டை எதிர்க்கும் இசுலாமை கொச்சைப்படுத்த வேண்டும் என்பதற்காக பகத்சிங், மார்க்ஸ், லெனின் போன்றோரின் படத்தை அவர் மேடையில் வைக்கவில்லை. அவர்கள் மனித குலத்தின் விடுதலைக்காகப் போராடியவர்கள் என்பதனால் மேடையில் வைத்தார். இன்னும் திப்பு சுல்தான், ஹசரத் மகல், இஷ்பகுல்லா கான் போன்றோரின் படங்களைக் கூட வைப்போம். அவர்கள் இசுலாமியர்கள் என்பதற்காக அல்ல, விடுதலைப்போரின் முன்னோடிகள் என்பதனால். பிறப்பால் இந்துக்களான எங்களது தோழர்கள் பலர் தங்கள் பிள்ளைகளுக்கு ஹசரத் என்றும் திப்பு என்றும் பெயர் சூட்டியிருக்கிறார்கள். ஒருவேளை இப்படிப்பட்ட இசுலாமியப் பெயர்களை வைப்பதற்கு நாங்கள் தவ்ஹீத் ஜமாத்திடம் அனுமதி பெற்றிருக்க வேண்டுமோ?
அவ்வளவு ஏன், 1920களில் தென்னிந்தியாவுக்கு கம்யூனிசத்தை அறிமுகப்படுத்தியவரே பிறப்பால் முஸ்லீமான தோழர் அமீர் ஹைதர் கான் என்பவர்தான். அவர் போட்ட விதையில் முளைத்த சாத்தான்கள்தான் நாங்களெல்லாம். ஒருவேளை அன்று தவ்ஹீத் ஜமாத் இருந்திருந்தால், அவருடைய கதி என்ன, நினைத்தாலே நெஞ்சு நடுங்குகிறது!
புத்தனோ, கிறிஸ்துவோ, நபிகள் நாயகமோ அவரவர் காலத்தில் மனிதகுலம் எதிர்கொண்ட கேள்விகளுக்கு அவர்கள் சிந்தித்து விடையளித்தார்கள். அதற்குப் பின்னர் உலகில் தோன்றிய சிந்தனையாளர்கள் ஏராளம். இந்த மரபுகளின் நேர்மறையான அம்சங்கள் அனைத்தையும் வரித்துக் கொண்டு இன்றைய உலகத்தின் கேள்விகளுக்கு விடையளிப்பதுதான் கம்யூனிசம். ஏசுவிடமும், நபிகள் நாயகத்திடமும், புத்தனிடமும் அக்காலத்து மக்கள் பல கேள்விகளை எழுப்புகிறார்கள். அவற்றுக்கெல்லாம் அவர்கள் சளைக்காமல் விடையளித்தார்கள். அதன் காரணமாகத்தான் அவர்கள் முன்னோடிகளாகவும், ஞானிகளாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டார்கள். சொல்வதைச் செய். கேள்வி கேட்காதே என்பது அவர்கள் கொள்கையாக இருந்திருந்தால் நமக்கு பைபிளோ, குர் ஆனோ கிடைத்திருக்காது. குண்டாந்தடி மட்டும்தான் கிடைத்திருக்கும். கேள்வி கேட்டு விடை தேடியவர்களின் வாரிசுகள் கம்யூனிஸ்டுகள். குண்டாந்தடிகளின் வாரிசுகள் மதவாதிகள்.
“எக்கேடு கெட்டும் போ. கண்ணுக்கு மறைவாக, ஊரை விட்டு ஓடிப்போய் எங்கேயாவது திருமணம் செய்து கொள்” என்பதுதான் தவ்ஹீத் ஜமாத்தாரின் கோரிக்கை. அலாவுதீன் அப்படி ஓடி, ஒளிந்து செய்யவில்லை. தனது சொந்த ஊரில் முஸ்லிம் மக்கள் மத்தியில், அவர்கள் அங்கீகாரத்துடன் செய்திருக்கிறார். “இசுலாத்துக்கு விரோதமான காஃபிர்கள் ஒன்றுகூடி சிவப்புக் கொடி ஏற்றி ஒரு திருமணத்தை நடத்த, நம்மாளுக அதை தட்டிக் கேட்க துப்பில்லைன்னாலும், கலந்து கொண்டு, வாழ்த்தி, பிரியாணியும் சாப்பிட்டு விட்டு வந்திருக்கிறார்களே, இப்படியே போனால் இசுலாத்தின் எதிர்காலம் என்ன?” என்பதுதான் தவ்ஹீத் ஜமாத் காரர்களின் கவலை.
தங்களுடைய கொள்கையின் மீது தவ்ஹீத் ஜமாத்தினருக்கு ஆழ்ந்த நம்பிக்கை இருக்கும் பட்சத்தில், “சுயமரியாதை திருமணம் ஏன் தவறு, இசுலாமிய திருமணம் எப்படி சரியானது” என்று மணமேல்குடியில் கூட்டம் போட்டு முஸ்லிம் மக்களுக்கு அவர்கள் விளக்கியிருக்க வேண்டும். “ஐந்து வேளை தொழுது, ரம்ஜானுக்கு நோன்பிருக்கும் உண்மையான முஸ்லிம்களாகிய நீங்கள் காஃபிர்கள் நடத்திய இந்த திருமணத்திற்கு எப்படி போனீர்கள்?” என்று அந்த மக்களிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். அந்த மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் கூறியிருக்க வேண்டும். தனது கொள்கையில் நம்பிக்கை உள்ளவர்கள், “ஊர்விலக்கம், ஜமாத் விசாரணை” என்று கோழைத்தனமாக எதற்கு குண்டாந்தடி எடுக்க வேண்டும்?
இசுலாமியர்களின் எதிர்காலத்தைப் பற்றி நாங்கள் கவலைப்படுகிறோம். இசுலாத்தின் எதிர்காலத்தைப் பற்றி தவ்ஹீத்துக்கு கவலை. சுயமரியாதை உள்ளவனை சும்மா விட்டால், தங்களுடைய கோட்டையில் விரிசல் விழுந்து விடும் என்பது அவர்கள் பிரச்சினை. திமுகவுக்கும், அதிமுகவுக்கும், காங்கிரசுக்கும் முஸ்லிம் மக்களின் சுயமரியாதையை பேரம் பேசலாம். அதில் தவ்ஹீத்துக்கு ஆட்சேபம் இல்லை. யாருடன் கூட்டணி வைக்கலாம், வைக்கக் கூடாது என்று குர் ஆனிலோ, ஹதீஸிலோ எதுவும் சொல்லப்படவில்லையே. எப்படி திருமணம் செய்யவேண்டும் என்பது பற்றித்தானே இசுலாமில் வழிகாட்டுதல் இருக்கிறது!
வீடு பற்றி எரியும்போது பீடிக்கு நெருப்பு கேட்டவன் கதையை கேள்விப்பட்டிருக்கிறோம். இப்போது பார்க்கிறோம். முஸ்லிம்களை இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தும் ஒரு பாசிசத் தீர்ப்பு வந்திருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் மீண்டும் உயிர்ப்பிக்கப் பட்டிருக்கிறது. “இதனை எதிர்த்துப் போராடும் ஒரு அமைப்பில் அலாவுதீன் என்ற நம் பையன் இருக்கிறானே” என்பது பற்றி ஒரு முஸ்லிம் மகிழ்ச்சி கொள்ளவேண்டுமா, அல்லது அவனை ஜமாத்தில் நிறுத்தி ஊர்விலக்கம் செய்யவேண்டுமா?
சாதிப்பஞ்சாயத்துகள், மதப்பஞ்சாயத்துகள் பலவற்றை நாங்கள் பார்த்திருக்கிறோம். தவ்ஹீத் ஜமாத்தின் நடவடிக்கைகளால் பாதிக்கப்படுபவர்கள் நாங்கள் அல்ல. முஸ்லிம் மக்கள்தான். இசுலாம் என்றாலே தலிபான்தான் என்ற முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சாரத்துக்கு, தங்களது நடவடிக்கை மூலம் வலு சேர்க்கிறது தவ்ஹீத் ஜமாத்.
இந்துக்கள் எல்லோருக்கும் நான்தான் அத்தாரிட்டி என்று ஆர்.எஸ்.எஸ் கூறுவதற்கும், முஸ்லிம்கள் எல்லோருக்கும் நாங்கள்தான் அத்தாரிட்டி என்று தவ்கீத் ஜமாத் கூறுவதற்கும் ஒரே ஒரு வேறுபாடுதான் இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் என்பது பெரும்பான்மை மதம் சார்ந்த மதவெறி அமைப்பு. ஒருவேளை தவ்ஹீத் ஜமாத் இங்கே ஆட்சியில் இருந்தால், அலாவுதீனை கல்லால் அடித்துக் கொல்வதா, தூக்கில் தொங்கவிடுவதா என்பது குறித்துதான் ஆன்லைன் பிஜே யில் விவாதம் நடந்து கொண்டிருக்கும்.
அந்த வகையில் தவ்ஹீத் ஜமாத்தை இசுலாமிய மக்களுக்கு அடையாளம் காட்டிய அலாவுதீன் – ஒரு அற்புத விளக்குதான்!
__________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- இன்ட்லியில் வினவை தொடர
- கூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க
தொடர்புடைய பதிவுகள்
- இசுலாமிய சமூகத்தில் ஒரு சீர்திருத்தத் திருமணம்!
- கடப்பாறையேவ ஜெயதே – அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பு !!
- குண்டு வைக்கும் இந்து தீவிரவாதிகள் !!
- சௌதி எனும் நரகத்தீயில் பெண் தொழிலாளர்கள்!!
- பின்லேடன்: அப்பா இசுலாமியவாதி! மகன் அமெரிக்கவாதி!!
- நீதித்துறையை ஆள்கிறது இந்து மனச்சாட்சி!
- பெரியார்தாசன் மதம் மாறியது, சத்தியமா அவுருக்கே தெரியாதாம்பா !! – ஒலிப்பதிவு !
- 2010-ல் இசுலாமியப் பெண்கள்: மதமும் வாழ்க்கையும் !!
- “லவ் ஜிகாத்” ஆர்.எஸ்.எஸ்.- இன் அண்டப்புளுகும் அல்லக்கையான நீதிமன்றமும் !!
- வந்தே மாதரமும் – தேசபக்தி வெங்காயமும் !!
- பார்ப்பனியம் – ஒரு விவாதம்! (அல்லது) ஆர்வியும் ஜெனோடைப்பும் !!
- பார்ப்பனியத்திடம் சரணடைந்த இஸ்லாம் !!
- முசுலீம் பிணந்திண்ணும் மோடி அரசு!
- அஹமதியா: பிணத்தைக் கூட சகிக்காத இசுலாமிய வெறியர்கள்!
- அயோத்தி: முஸ்லீம்கள் பராமரித்த இராமன், துரோகம் செய்த பா.ஜ.க – தலைமை பூசாரி பேட்டி
- அமெரிக்கா ஊற்றி வளர்த்த ஜிகாதிப் பயங்கரவாதம் !
- ஷகீலா – கவர்ச்சி சுதந்திரமா ? பர்தா கண்ணியமா ??
- கடப்பாறையேவ ஜெயதே – அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பு !!
- இராமன் தேசிய நாயகனா, தேசிய வில்லனா?
- உலகின் அழகிய மணமக்கள் ! – சந்தனமுல்லை
அலாவுதீன் – ஒரு அற்புத விளக்கு !…
தவ்ஹீத் ஜமாத் இங்கே ஆட்சியில் இருந்தால், அலாவுதீனை கல்லால் அடித்துக் கொல்வதா, தூக்கில் தொங்கவிடுவதா என்பது குறித்துதான் ஆன்லைன் பிஜே யில் விவாதம் நடந்து கொண்டிருக்கும்….
இஸ்லாமிய அமைப்புகளைப் பற்றிய சரியான மதிப்பீட்டில் வந்துள்ள பதிவு. தோழர்களுக்கு நன்றி.
தவ்ஹீத் அமைப்பைச் சேர்ந்த பீஜே. என்பவர் தவ்ஹீதைச் சேராத மற்ற முஸ்லீம்களை நரகத்தாளிகள் என்று குறிப்பிட்டுள்ளார். இது இவரின் தலிபானுக்குரிய மனோநிலையையேக் காட்டுகிறது.
உங்களிடம் ஒரு கேள்வி.. கம்யூனிசத்தை நீங்கள் நம்புகிறீர்கள். கம்யூனிசத்தை நம்பாதவர்களை என்னவென்று கூறுவீர்கள்? இல்லை அவர்களும் கம்யூனிஸ்ட்கள் தான் என்று கூற மாட்டீர்கள் தானே? அதே போல தான் நாங்கள் இஸ்லாத்தை நம்புகிறோம். ஏக இறைவனை (தௌஹீத்) நம்புகிறோம். எங்களுடைய நம்பிக்கையின் படி ஏக இறைவனை மட்டுமே நம்புகிறவர், வழிபடுகிறவர் சொர்க்கவாசி.. ஏக இறைவனை நம்பாதவர், வழிபடாதவர் நரகவாசி.. இதனை தௌஹீத் ஜமாஅத் சொன்னால் என்ன? சாதாரண நான் சொன்னால் என்ன? கம்யூனிசத்தில் நம்பிக்கை கொள்ளாத மக்களை நீங்கள் எப்படி கம்யூனிஸ்ட்களாக ஏற்றுக் கொள்வதில்லையோ அதே போல ஏக இறைவனை ஏற்றுக்கொள்ளாதவர்களை சொர்க்கவாசிகளாக ஏற்றுக்கொள்வதில்லை.. இதில் என்ன தவறு இருக்கிறது?
ரபீக்,
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் என்ன.. இங்கே இருக்கும் சமூகச் சூழல் என்ன… மனித சமூகம் எதிர்கொண்டு
போராடி வீழ்த்த வேண்டிய எத்தனையோ அபாயங்கள் கண் முன்னே இருக்கும் போது.. இப்படி அம்புலிமாமாத்தனமாக
“சொர்க்கவாசி… நரகவாசி….” என்னாங்க இது? இதெல்லாம் இப்ப ரொம்ப முக்கியமாங்க?
எல்லாருக்கும் ஒரு வழின்னா இடும்பனுக்கு ஒரு வழின்னு சொல்வாங்க எங்க ஊர்பக்கம். இப்ப இசுலாமிய சமுதாயம்
உலகளவிலும் இந்தியளவிலும் திட்டமிட்ட விசப்பிரச்சாரங்கள் காரணமாக தனிமைப்படுத்தப்படும் ஒரு சூழல் இருக்கும்
போது, நீங்கள் பாசிஸ்ட்டுகளுக்கு வலுச்சேர்க்கும் விதமாக இப்படி செய்வது இசுலாமியர்களுக்கே எதிரானது என்பதையாவது
புரிந்து கொள்வீர்களா?
சாதாரண உழைக்கும் இசுலாமியர்களின் பிரச்சினைகளும் உங்கள் பீ.ஜேவின் பிரச்சினையும் முற்றிலுமாக வேறு வேறானது.
இன்னும் சொல்வதானால், முரண்பாட்டுக் கொள்வது. பாருங்களேன்… எதார்த்த வாழ்க்கையில் ஒரு முசுலீம் சந்திக்கும்
பிரச்சினையை விட்டுவிட்டு எவருமே காணாத சொர்கம் யாருக்குன்னு ஒருத்தன் பேசுவது லூசுத்தனமா உங்களுக்கே தெரியலை?
அந்த வகையில் பார்த்தால் சாதாரண உழைக்கும் முசுலீம்களுக்கு அணுக்கமானவர்கள் கம்யூனிஸ்டுகள் தான்.
ஒரு வர்க்கமாகப் பார்க்கும் போது எங்கள் பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும் ஒன்றாக இருக்கிறது. இதை உணர்ந்துள்ள
முசுலீம்கள் எங்களை நெருங்கி வருவதை பார்க்க பீ.ஜேவுக்கு சகிக்கவில்லை.
ஒட்டு மொத்த இசுலாமியர்களுக்கெல்லாம் தானே கேள்வி முறையற்ற தண்டல்காரன் என்பது போன்ற தவ்ஹீத் ஜமாத்தாரின்
போக்குகளுக்கும் ஆர்.எஸ்.எஸ் இந்துக்களின் பிரதிநிதி என்று சொல்லிக் கொள்வதற்கும் சாராம்சத்தில் என்ன வேறுபாடு இருக்கிறது?
இப்படி ஒரு துருவத்தைத் தான் காக்கி டவுசர்கள் எதிர்பார்க்கிறார்கள் – டி.என்.டி.ஜேவின் செயல்கள் காக்கி டவுசரை எதிர்ப்பது
போல ஆதரிப்பதாய் இருக்கிறது.
பதிவை நிதானமான சிந்தனையில் இருக்கும் போது மீண்டும் ஒருமுறை வாசிக்கவும்.
அன்பின் சகோதரர் கார்கி,
நான் பதிவிட்டது சகோதரர் கலை கூறியதன் பதில் மட்டுமே.. நான் நம்புகின்ற ஒன்றில் தெளிவாக இருப்பது என்னவிதத்தில் தவறு என்று தெரியவில்லை. நீங்கள் கம்யூனிஸ்ட் என்றால் அதன் அடிப்படையை பற்றி பிடித்திருக்க வேண்டும். அதனை விடுத்து அவர் சொன்னாலும் சரி இவர் சொன்னாலும் சரி, அது என்றாலும் சரி இது என்றாலும் சரி, பணக்காரன் என்றாலும் சரி, ஏழை என்றாலும் சரி, ஆனால் நான் கம்யூனிஸ்ட் என்று சொல்லி கொண்டீர்கள் என்றால் எவ்வாறு நகைப்புக்குரியதாக இருக்குமோ அதேபோல தான் நான் சொர்க்க நரகத்தை நம்புகிறேன்.. அதிலே உறுதியாக இருக்கிறேன்.. இதில் என்ன மடமை இருக்கிறது? எந்த விஷயத்தை பற்றி பேசுகிறோமோ அந்த விஷயத்தை மட்டும் விவாதியுங்கள்.
உழைக்கும் இஸ்லாமியர்கள், உழைக்கத இஸ்லாமியர்கள், உழைக்கும் இந்துக்கள், உழைக்காத இந்துக்கள் என்று பேதம் பிரிக்க நான் வரவில்லை.. நீங்கள் கூறும் கம்யூனிசத்தை விட, நீங்கள் எதிர்க்கும் சுரண்டலை விட அதிகமாக இஸ்லாம் உழைக்கும் வர்க்கத்தினருக்கு கண்ணியம் அளிக்கின்றது, அவர்களின் மீதான சுரண்டலை எதிர்க்கிறது. “உழைப்பவனுக்குரிய கூலியை அவனுடைய வியர்வை காயும் முன்னரே கொடுத்து விடுங்கள் என்று கூறும் கண்ணியமான மார்க்கம் இஸ்லாம்.. உனக்கு எத்தனை விரும்புகிறாயோ அதனையே உன் சகோதரனுக்கும் விரும்பாதவரை உண்மையான இறை நம்பிக்கையாளராக முடியாது என்று எச்சரிக்கும் மார்க்கம் இஸ்லாம்.” நீங்கள் கூறும் கம்யூனிசம் என்ன கூறி இருக்கின்றது என்பதை கொஞ்சம் இங்கு விளக்குங்களேன்…
சொர்க்கவாசிகளாக சொல்லத்தேவையில்லை, அது உங்கள் வேலையும் இல்லை. அதே சமயம் நரகவாசிகள் என்று சொல்லச் சொன்னது யாருங்க?
தமாசு பண்றீங்க.
ர ஃபீக்,
ஏக இறைவனை நம்பாதவர் நரகவாசி என்று அவர்களுக்கு பெரிய மனதோடு தண்டனை கொடுக்கிறீர்கள். ஆனால் கம்யூனிஸ்டுகள் கம்யூனிசத்தை ஏற்காதவர்களுக்காகவும் சேர்த்துத்தான் போராடுகிறார்கள். இதில் எது சரியானது?
சகோதரர் வினவு,
சகோதரர் கலை அவர்களின் கருத்திற்கு எனது நம்பிக்கைப் படி நான் பதிலளித்தேன். மேலும் அநியாயமிழைக்கப்பட்ட எந்த ஒரு மனிதருக்காகவும் போராடும் எவருமே பாராட்டப்படக்கூடியவர்கள் தாம்.. அதனை நீங்கள் செய்தாலும் சரி.. இன்னும் தௌஹீத் ஜமாஅத் செய்தாலும், ஏனைய மாற்று கொள்கைச் சகோதரர்கள் செய்தாலும் ஏன் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரே செய்தாலும் அது பாராட்டுக்குரியது தான். அதற்காக மேற்குறிப்பிட்ட அனைவரும் (நீங்களும் நானும் உட்பட) எது செய்தாலும் அதனை ஆதரிக்க, பாராட்ட வேண்டும் என்பது நற்சிந்தனையாளர்களின், நன்மக்களின் செயல் அல்ல..
மேலும் சகோதரர் வினவு,
நீங்கள் கம்யூனிஸ்ட் அல்லாதவருக்கும் அநியாயதிற்கேதிராக போராடுகிறீர்கள். நல்ல விஷயமே.. நீங்கள் இங்கு வசைபாடி இருக்கும் தௌஹீத் ஜமாஅத் உட்பட இஸ்லாமிய இயக்கங்கள் போராடி பெற்றனவே “சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு”.. அது அவர்கள் சார்ந்த இயக்கத்தினருக்கு மட்டுமான போராட்டம் என்று நினைத்தீர்களா? இன்னும் ஒருபடி மேலே சொல்ல வேண்டுமானால், வீரியமாக களத்தில் இறங்கி போரடியவை இஸ்லாமிய இயக்கங்கள்.. ஆனால் அதன் பலன் என்னுடைய கிறித்தவ சகோதரர்களுக்கும் கிடைத்ததே.. இதனை நீங்கள் பாராட்டுவீர்கள? இல்லை மதம் சார்ந்த இயக்கங்கள் செய்ததனால் பயங்கரவாதம் என்று புறம்தள்ளுவீர்களா?
சிறுபான்மை மக்களின் வாக்குகளை வாங்குவதற்காக கொடுக்கப்பட்ட ஏமாற்று சலுகைதான் இட ஒதுக்கீடு, அதையெல்லாம் பெரிய சாதனையாக நாங்கள் கருதவில்லை. மாறாக தொழிலாளர் பிரச்சினை, மாணவர் பிரச்சினை, பாலியல் பிரச்சினை போன்ற சமுக விசயங்களுக்கு எந்த மத அமைப்புகளும் போராடுவதில்லை. போராடவும் இயலாது. ஆக எல்லா மக்களை பாதிக்க கூடிய முக்கியமான பிரச்சினைகளுக்கு யார் போராடுகின்றார்களோ அதைபொறுத்துத்தான் அவர்களை எடை போடமுடியும். மற்றபடி நல்லது செய்தால் ஆர்.எஸ்.எஸ் ஐ கூட பாராட்டுவேன் என்ற உங்களது அப்பாவித்தனம் எங்களுக்கில்லை.
சகோதரர் வினவு,
நீங்கள் குறிப்பிட்ட பிரச்சினைகளை விட சக மனிதனை சகோதரனானாக, தனக்கு விரும்புவதை அவனுக்கும் விரும்பக்கூடிய மன நிலையை எற்படுதுதலே முக்கியமான போராட்டம் என்பது என்னுடைய எண்ணம்.. சக மனிதனை தன்னைவிட கீழாக நினைக்க கூடிய எண்ணமே எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம்..
மேலும் ” நல்லது செய்தால் ஆர்.எஸ்.எஸ் ஐ கூட அப்பாவித்தனமாக பாராட்டுவேன்,, பிறருக்கு தீங்கு செய்தால் படுபயங்கரமாக கண்டிப்பேன் எதிர்ப்பேன்”
//வினவு
ர ஃபீக்,
ஏக இறைவனை நம்பாதவர் நரகவாசி என்று அவர்களுக்கு பெரிய மனதோடு தண்டனை கொடுக்கிறீர்கள். ஆனால் கம்யூனிஸ்டுகள் கம்யூனிசத்தை ஏற்காதவர்களுக்காகவும் சேர்த்துத்தான் போராடுகிறார்கள். இதில் எது சரியானது//
சகோதரர் வினவு
நம்மை படைத்தவன் ஒருவன். வணக்கத்துக்கு உரியவன் அவனைத் தவிர வேறு யாருமில்லை. இதை நம்பாதவர்கள் , நிராகரித்தவர்கள் நரகவாசிகள். இதை நாங்கள் நம்புகிறோம். நம்மிடம் வேலை செய்பவர்கள் நமக்கு விசுவாசமாக இருக்க வேண்டுமே தவிர எல்லாருக்கும் விசுவாசமாக இருந்தால் அதை என்னவென்று சொல்வது. நாமே இவ்வாறு என்னும் போது நம்மை படைத்த இறைவன் தன்னை நம்பாத நிராகரிப்பாளர்களுக்கு நரகம் என்பதில் தவறில்லை தானே. தவ்ஹீத் ஜமாஅத், த மு மு க, இ த ஜ போன்ற முஸ்லீம் அமைப்புகள் ரத்த தானம், இலவச ஆம்புலன்ஸ் போன்ற உதவிகளை முஸ்லீம்கள் என பார்த்து செய்வதில்லை. முஸ்லீம் அல்லாதவர்களுக்கும் சேர்த்து தான் செய்கிறார்கள்.
அன்புள்ள ரபீக் முன்பு வினவில் நடந்த ஒரு விவாதத்தில் நான் எழுதிய பின்னூட்டங்களில் இரண்டை சமர்பிக்கிறேன்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நாங்கள் கம்யூனிஸ்டுகள், எங்கள் பிள்ளைகளை நாங்கள் கம்யூனிஸ்டு என்று அழைப்தில்லை. அவர்கள் கம்யூனிஸ்டாய் இருப்பதும் இல்லாமலிருப்பதும் அவர்கள் முடிவு.
நீங்கள் அப்படியா?
உங்கள் பிள்ளைகள் பிறந்து வளர்ந்து இசுலாமை கற்று தெரிந்த்து ்புரிந்து அதை வாழ்க்கை நெரியாக ஏற்க முடிவு செய்யும் வரை உங்களின் பிள்ளைகளை முசுலிமென அழைக்காமலிருக்கும் நேர்மையும் துணிவும் உங்களுக்கு வருமா?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
பிறக்கும் போது எவனும் கம்யூனிச்டு இல்லை! அது அவன் வளர்ந்த பின்னர் அறிந்து புரிந்து தேர்ந்தெடுக்கும் அரசியல் பாதை.
இசுலாம் அப்படியா?
எருமைக்கு பிறந்தது எருமை என்பது போல முசுலிமுக்கு பிறந்தால் முசுலிம் என்பதுதானே உங்கள் விதி. இதற்கும் கவுண்டனுக்கு பிறந்தவன் கவுண்டன் என்பதற்கும் என்ன வித்தியாசம் சுயமோகம்மது அவர்களே?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மேலும் பல சுவாரசியமான விவாதங்கள் படிக்க
https://www.vinavu.com/2009/11/11/casteism-in-islam/
தவ்ஹீது சாராத பிற முஸ்லீம்கள் ஏக இறைவனை ஏற்றுக்கொண்டவர்கள் தானே. அப்படியிருக்க அவர்களையும் நரகத்தாளிகள் என்று தவ்ஹீது கூறுகிறதே ரபீக்.
நண்பர் ரஃபீக் ஏன் இந்த அவசரக்கோலம்? நான் கூறியதை சரியாகப் படிக்கவும். “தவ்ஹீதைச் சேராத மற்ற முஸ்லீம்களை நரகத்தாளிகள்” என்று பீஜே கூறியிருக்கிறார். என்பதற்கு விளக்கம் தரவும்.
சகோதரர் கலை,
நான் அவசரப்படவில்லை என்பது எனது புரிதல்.
“தவ்ஹீதைச் சேராத மற்ற முஸ்லீம்களை நரகத்தாளிகள்” என்று பீஜே கூறியிருக்கிறார்.” என்று தானே உங்களின் வாதம். இதற்கு விளக்கம் நான் ஏற்கனவே கூறி விட்டேனே.. பெரியவர், இஸ்லாமிய அறிஞர் பீஜே அவர்களின் நம்பிக்கைப்படி, எனது நம்பிக்கைபடி நிச்சயமாக “தவ்ஹீதைச் சேராத மற்ற முஸ்லீம்கள் மட்டுமல்ல எவருமே நரகத்தாளிகள்” தான்.. தௌஹீத் என்பதன் அர்த்தம் ஓரிறைக்கொள்கை என்பது மட்டுமே. ஒருவேளை நீங்கள் கூற விரும்புவது தௌஹீத் ஜமாத்தில் உறுப்பினராக இல்லாத மற்ற முஸ்லிம்கள் நரகவாசிகள் என்று அவர் கூறி இருந்தால் அது நிச்சயம் தவறானதே..
சிறு திருத்தம்,தவ்ஹீதை சார்ந்தவர்களை அல்ல ,ததஜவை சாராதவர்களை ‘முஸ்லிம்கள் இல்லை என்கிறார்.இந்த அதிகாரத்தை யார் கொடுத்ததென்று தெரிய வில்லை ,இறைவன் வரம்பு மீறுபவர்களுக்கு கொடுக்கும் தண்டனையை சற்று படிக்கவும்
தரேக் துபாய்
கலை நண்பர் வினவு என்னை தோழர் என்று அழைத்ததற்காக உங்களுடைய தோழர்கள் மத்தியில் வந்த பரபரப்பை கொஞ்சம் விரிவாக சொல்ல முடியுமா? என்னமோ பள்ளபயல எப்புடிடா தேவருன்னு கூப்பிட போச்சுங்கிற ரேஞ்சுக்கு பேசியிருக்கிறார்கள் இது எந்த வகையான மதவேறி கலை
தோழர் ஹைதர் அலி, மற்ற தோழர்களைப்பற்றி நீங்கள் அவதூறு செய்கிறீர்கள். யாரும் நீங்கள் கூறும் பொருளில் மனதளவில் கூட அப்படி பேசமாட்டார்கள். குதர்க்கமாக பேசுவது என்று எதையும் வீசாதீர்கள்.
ஹைதரை எப்படி தோழர் என்று அழைக்க போச்சு என்று சாகித் கலையிடம் கேட்டிருக்கிறார் கலை என்னிடம் போனில் சொன்னது
நீங்க தோழரா இல்லையா என்றவிசயம் உங்களோடு பேசும் எனக்கு மட்டுமே தெரியும். இதை மற்ற தோழர்கள் அறியாமல் விளக்கம் கேட்பதில் என்ன தவறு?
ஹைதர்,
மன்னிக்கவும் ஹைதர். சாகித் என்று தவறுதலாக குறிப்பிட்டுவிட்டேன். என்னிடம் வினவியது தோழர். சாகித் அல்ல மைதீன் என்ற தோழர்.
வினவுத் தோழர் உங்களைத் தோழர் என வினவியதன் மூலம் மற்றத் தோழர்கள் “ ஹைதரை எப்படி தோழர் என்றழைக்கலாம்” என்று வினவை நெருக்கியதாக வினவுத் தோழர் கூறியதாக நீங்கள்தான் என்னிடம் முதலில் தெரிவித்தீர்கள். மேலும் தோழர் என்பது சாதி அடையாளத்தைப் போன்றதா என்றும் முஸ்லீம்களில் காபிர் என்றழைப்பது போன்றதா என்றும் கேட்டிருந்தீர்கள். அதற்கு, தோழர் என்றழைப்பது தவறாக எனக்குப்படவில்லை என்றும் நீங்கள் வினவுத் தளத்தில் பின்னூட்டமிடுவதால் தோழர் என்று அடையாளப்படுத்தப்பட்டால் உங்களுடைய கருத்துக்களால் மற்றவர்களுக்கு குழப்பமுண்டாகலாம் என்பதற்காக தோழர்கள் அவ்வாறு கூறியிருக்கலாம் என்றும் கூறினேன். அதன் பிறகே நான் சாகிதை தொடர்புகொண்டேன். அவரிடம்,நமது பொதுக்கூட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும், பத்திரிக்கைகள் விற்பனையின்போதும், பொதுமக்களுடனான சந்திப்பின் போதும் தோழர் என்றுதானே அழைக்கின்றோம் அது போன்று ஹைதரை தோழர் என்றழைப்பதில் என்ன தவறு என்று கேட்டதற்கு அவரும் அதனை ஆமோதிக்கவே செய்தார். தோழர் என்றழைப்பதிலெல்லாம் என்ன தவறிருக்கிறது என்றுதான் கூறினார். மற்றபடி நீங்கள் கூறியுள்ளது போல ”பள்ளபயல எப்புடிடா தேவருன்னு கூப்பிட போச்சுங்கிற ரேஞ்சுக்கு” யாரும் பேசவில்லை, யாரும் பரப்புரையும் செய்யவில்லை. உங்களுடைய கூற்று உள்நோக்கம் கொண்டது. இது வினவைக் கட்டம் கட்ட நினைக்கும் பலரின் செயலையே நினைவூட்டுகிறது.. வினவைக் கட்டம் கட்ட நினைத்தவர்களெல்லாம் அவர்களாகவே அம்பலப்பட்டுக்கொண்டனர் என்பதைத் தவிர அவர்கள் பெற்றது ஒன்றுமில்லை.
ஹைதர் நாம் நட்பாகவே இருப்போமே
தோழரை கலை,
தோழர் என்று நாம் அழைப்பது பொதுச்சொல் அல்ல. அது அரசியல் ரீதியானது. அதாவது புரட்சிகரக் கட்சியை ஏற்றுக் கொண்டு புரட்சியின் கடமையை நிறைவேற்றும் மனிதர்களுக்கிடையே நிலவும் உறவுதான் தோழமை. நாம் அந்த வித்தஃதில்தான் பயன்படுத்துகிறோம். தமிழ்ச்சூழலில் பொதுவில் தோழர் என்ற பயன்பாடு இருக்கிறது. அது வேறு. ஹைதர் அலியோடு நாங்கள் விவாதித்த வகையில் அவர் ஒரு போதும் மதவாதியாக பேசியதில்லை. சமூக, அரசியல் விடுதலைக்கு கம்யூனிசமே தீர்வு என்பதை அவர் ஏற்றுக் கொள்கிறார். உரிய நேரத்தில் அதை அமல்படுத்துவதாகவும் கூறியிருக்கிறார். ஆனாலும் அவரிடையே கொஞ்சம் இழுபறி இருப்பதும் உண்மைதான். இந்த போராட்டத்தில் அவர் ஒரு நல்ல தோழராக பரிணமிப்பார் என்ற நம்பிக்கையில்தான் அவரோடு தொடர்ந்து உரையாடுகிறோம். எனவே பின்னூட்டங்களை வைத்து மட்டும் ஹைதரை எடை போடாமல் இருப்பது நல்லது.
[…] This post was mentioned on Twitter by வினவு and sandanamullai, ஏழர. ஏழர said: அலாவுதீன் – ஒரு அற்புத விளக்கு ! http://bit.ly/d67oYh #VinavuRocks #MustRead #Retweet இஸ்லாமிய மதவெறியர்களை அம்பலப்படுத்தியிருப்பது அருமை […]
இது மதம் சார்த்த பிரச்னை கவனமாக கையாளவும் – முதலில் நம் மனிதன் பின் இந்து முஸ்லிம்
R .S .S இஸ்லாமியர்களை பற்றி சொல்வதை தான் வினவு கொஞ்சம் மாற்றி சொல்லி இருக்கின்றது. கம்யுனிசம் மக்களால் புறம்தள்ளப்பட்ட ஒரு வெத்து கொள்கை 1 நூற்றாண்டில் ஓங்கி வளர்ந்து கம்யுனிசம் பேசிய நாடுகளாலே ஓரம் கட்டப்பட்ட கொள்கை. சீர்திருத்த திருமணம் பற்றி வாய்கிழிய பேசும் வினவு இஸ்லாம் தான் சீர்திருத்த திருமணத்தை இந்த உலகுக்கு 1400 வருடத்திற்கு முன்பே அறிமுகபடுத்தியது என்பதை மறக்க வேண்டாம், நீங்கள் நடுநிலையாளர்கள் என்று தான் எது நாள் வரையில் நினைத்து வந்தோம் இப்போது தான் தெரிகிறது நீங்களும், மதவெறி சாதிவெறியர்கள் போல் இயக்கவெறி பிடித்தவர்கள் என்று. ஒரு ம.க. இ.க. தோழர் இஸ்லாமிய முறைபடியோ அல்லது ஹிந்து முறைபடியோ திருமணம் செய்தல் நீங்கள் ஒழுங்குநடவடிக்கை எடுப்பீர்கள மாடீர்களா? அலாதீன் நான் முஸ்லிம் இல்லை நான் கமயுனிசிட் என்று பகிரங்கபடுதி திருமணம் செய்தல் அவர்களை யாரும் கண்டுகொள்ள போவது இல்லை அது அவர் கொள்கை என்று விட்டு விடுவோம் இஸ்லாமிய சாயம் பூசிக்கொண்டு இரட்டை வேடம் போடும்போதுதான் பிரச்சனைகள் வருகின்றன. பிறப்பால் இஸ்லாமியனாக இருந்தாலும் அவர் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே உண்மையான முஸ்லிமாக ஆகமுடியும், இஸ்லாத்திற்கு மாறாக யார் செல்பட்டலும் அவர் ஹாரூனக இருந்தாலும் அவரைவிட கொம்பனாக இருந்தாலும் நாங்கள் விமர்சிக்கத்தான் செய்கின்றோம், தி. மு. க. ஆ. தி. மு.க, விற்கு ஒட்டுபோடுவதும் அலாதீன் செய்ததும் ஒன்றகமுடியது இது கொள்கை சார்ந்த பிரச்சனை, ஊருநீக்கம் என்பது எல்லாம் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு உடன்பாடில்லை இஸ்லாமிய கொள்கையை பிடிக்கவில்லை என்றால் அவரை யாரும் கட்டாயபடுத்த முடியாது. அனால் இஸ்லாத்தில் இருந்துகொண்டே அதற்குமாற்றமாக செயல்பட்டால் அதை கண்டிப்பாக தவ்ஹீத் ஜமாஅத் சுட்டிகாட்டும், அப்படி செய்வது மதவாதம் என்றால் நீங்கள் செய்வது இயக்கவதம்தானே.
@irshad
அதென்ன //இஸ்லாத்தில் இருந்துகொண்டே அதற்குமாற்றமாக செயல்பட்டால்// என்பது. புரியவில்லை. ஒருவன் முஸ்லிம் ஆக இருந்தால் முற்போக்கு எண்ணங்களுடன் இருக்கக்கூடாதா? இது ஒரு violence of exclusion. நீங்கள் செய்வது அப்பட்டமான மனித உரிமை மீறல். ஒரு மனிதனுக்கு எந்த கடவுள் மீதும் நம்பிக்கை வைப்பதற்கும் அவன் சார்ந்துள்ள மதத்தை கேள்வி கேட்பதற்கும் உரிமை உள்ளது.
அன்பு சகோதரி சித்ரலேகா,
“இஸ்லாத்தில் இருந்து கொண்டே அதற்கு மாற்றமாக செயல்பட்டால்” என்று சகோதரர் கூறி இருப்பதை இவ்வாறு எடுத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் ஒரு அலுவலகத்தில் வேலை செய்கிறீர்கள்; அங்கு அவர்கள் வகுத்து வைத்துள்ள விதிமுறைகளை பற்றி கேள்வி எழுப்புகிறீர்கள்.. அதற்குரிய உரிமை நிச்சயமாக உண்டு.. ஆனால் அந்த விதிமுறைகள் உங்களுக்கு பிடிக்கவில்லை.. நீங்கள் என்ன செய்ய வேண்டும்? அந்த அலுவலகத்தில் வேலை செய்வதை விட்டு நின்று விட வேண்டும்..
இல்லை நான் இந்த அலுவலகத்தின் ஒரு தொழிலாளியாக தான் நீடிப்பேன், ஆனால் அடுத்த அலுவலகத்தின் விதிமுறைகள் எனக்கு பிடித்திருப்பதால் நான் அவர்களுக்கு வேலை செய்வேன் என்று கூறுவீர்களாயின் அந்த அலுவலகத்தினருக்கு எந்த அளவுக்கு கோபம் வரும்? அதேபோல் தான், அந்த சகோதரருக்கு இஸ்லாத்தில் நம்பிக்கை இல்லை என்றல் நான் இஸ்லாமியன் அல்ல என்று வெளிப்படையாக அறிவித்து விட்டால் யாருக்கும் எந்தவொரு குழப்பமும் வரப்போவதில்லை.. கோபமும் ஏற்பட அவசியம் இல்லை.. நான் இஸ்லாமியனாக தான் அடையாளப்படுதுவேன் ஆனால் அதற்கு எதிராக செயல்படுவேன் என்பதில் எப்படி உடன்பாடு காண முடியும்??
மதங்களை ஒரு அலுவலகம் என்று வைத்துக்கொண்டால் நிர்வாகங்களுக்கெதிரான கொடுமைகளை களைய நிச்சயம் தொழிற்சங்கம் தேவை. அந்த தொழிற்சங்கங்கள் நிர்வாகத்தால் கட்டப்படுவதில்லை. அதை தொழிலாளர்கள்தாதன் கட்டுகிறார்கள். அதான் கம்யூனிசம்.
இந்துப் பாசிஸ்டுகள் கம்யூனிஸ்டுகளை விட பெட்டர் என்பீர்கள் போலிருக்கிறதே?
முகமது இர்ஷாத்,
ஆர்.எஸ்.எஸ் ஐ ம்ட்டும் விமரிசத்தால் நாங்கள் நல்லவர்கள், இசுலாமிய மதவாதிகளை விமரிசித்தால் நாங்கள் கெட்டவர்களா? நல்லாருக்கு உங்க ஞாயம்
இசுலாமியர்கள் பிறப்பால்தான் தீர்மானிக்கப்படுகிறார்கள். மாறாக வயது வந்து இசுலாமிய புனித நூல்களை கற்றுத் தேர்ந்து அவர்களுடைய சுயவிருப்பத்திலா இசுலாமியராக இருக்கிறார்கள? இது எல்லா மதங்களுக்கும் பொருந்தும்.
மற்றபடி லாட்டரிச் சீட்டு விற்ற ஹாருணை நீங்கள் இசுலாத்திலிருந்து நீக்கியதையோ, விசாரணை செய்த்தையோ கேள்விப்பட்டத்தில்லை. விவரத்தை அறியத் தரவும். கட்டுரையில் குறிப்பிட்டது போல ஜெயல்லிதா, கருணாநிதி கட்சிகளில் இருந்தால் பிரச்சினை இல்லை. ஆனால் ம.க.இ.கவில் இருந்தால் மட்டும்தான் பிரச்சினை என்பதற்கு என்ன காரணம்?
இசுலாத்தில் இருந்து கொண்டே இசுலாமிற்கு விரோதமாக இருப்பவர்களை தவ்கீத் ஜமாஅத் சுட்டிக்காட்டும் என்றால் நீங்கள்தான் உலக இசுலாமியர்களுக்கு அத்தாரிட்டி என்றாகிறது. உண்மையானல் முதலில் நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் அரபு ஷேக்குகள்தான். அலாவுதீன் அல்ல.
சகோதரர் வினவு,
முதலில் இஸ்லாம் என்றால் அரபுலக ஷேய்க்குகள் என்ற மாயையிலிருந்து விடுபடுங்கள். நான் அரபி கிடையாது.. நான் இஸ்லாமியனாக இருக்க கூடாதா? சக இஸ்லாமியன் தவறான பாதையில் செல்கிரானேன்றால் நான் அவனை நேர்வழிப்படுத்த கூடாதா?
நீங்கள் கூட லெனினின் வம்சத்தில், கார்ல் மார்க்சின் வம்சத்தில் பரம்பரையில் பிறக்கவில்லை.. நீங்கள் கம்யூனிசம் பேசுவது தவறென்று சொல்லலாமோ? ஏதேனும் ஒரு கம்யூனிஸ்ட் உங்கள் கொள்கைக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுகிராறேன்றால் அதனை ரஷ்யர்கள் தான் வந்து தடுக்க வேண்டும், கண்டிக்கவேண்டும் என்று கூற முனைவீர்களோ?
நான் கேட்க விரும்புவது. இந்த அரபு ஷேக்குகளை இசுலாத்தில் இருந்து யாரும் ஏன் நீக்க மாட்டேன் என்கிறார்கள்? அலாவூதீன் போன்ற ஏழைகள் மீது இருக்கும் சீற்றம் இந்த சுரண்டல் பேர்வழிகளிடம் ஏன் இல்லை?
தோழர் வினவு,
இதப்படிங்க முதல்ல சவுதி இளவரசருக்கு மரண தண்டனை வழங்கப்படுமா? http://www.tamilcatholican.com/2010/10/blog-post.html
சகோதரர் கேள்விக்குறி,
சவுதி இளவரசர் அல்ல எவர் செய்தலும் குற்றம் குற்றம் தான்.. இறைவனுடைய கட்டளையும் அதுவேதான்.. எவர் அணு அளவு குற்றம் செய்திருந்தாலும் அதற்குரிய தண்டனையை சுவைக்காமல் செல்ல மாட்டார் என்று இறைவன் கூறுகின்றான்.. உங்களுக்கு இந்த உலகத்திலே எல்லாம் கிடைத்து விட வேண்டும் இல்லை என்றால் அது தர்மம் அல்ல என்று நம்புகிறீர்கள். எவர் இங்கு தப்பினாலும் இறைவன் முன்னர் மறுமை நாளிலே நிற்கும் போது எந்த விதத்திலும் தப்பிக்க இயலாது என்பதில் ஆணித்தரமாக நம்பிக்கை கொண்டுள்ளவர் நாங்கள். சட்டத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி தப்பினாலும் அங்கு தப்ப முடியாது எண்டு நம்புகிறோம்… சவுதி இளவரசர் என்பதால் அவர் தவறு செய்தாலும் அதனை மூடி மறைக்க வேண்டிய அவசியம் இல்லை.. ஆண்டியும் அரசனும் ஒன்றுதான்.. நீதி வழங்கப்படுவதில், வழங்க வேண்டியதில் செல்வதாலோ, இனத்தாலோ, நிறத்தாலோ ஒருவருக்கொருவர் தாழ்ந்தவரும் இல்லை உயர்ந்தவரும் இல்லை.. இங்கு தப்பினாலும் அங்கு தண்டனை நிச்சயம்.
எனக்குத் தெரிந்தவரை கம்யூனிஸ்ட்டுகள் அந்தந்த மதத்தவரை அவரவர் மதத்தின் வழி வாழ்வதை மறித்துத் தடுப்பதில்லை. மாறாக அந்த மதங்களின் பிற்போக்கான, மற்றவர்களை பாதிக்கக் கூடிய மூடப் பழக்கங்களை கைக்கொள்ள வேண்டாம் என்று மட்டுமே குரலெழுப்புவார்கள். ஒரு மதத்தைச் சார்ந்தவர் மனத்தளவில் முற்றிலும் கம்யூனிஸ்ட்டாக மாறும் போது மதம் என்பது ஏன், எதற்காகத் தோன்றியது. அதன் சமூகப் பயன்பாடு என்ன என்று புரியும் போது அவர் மதத்தின் தீவிரத் தன்மையிலிருந்து தானாகவே விடுபடுகிறார். மற்றபடி கம்யூனிஸ்ட் கட்சியின் இந்துக்கள் பெரும்பாலோனோர் தாலி கட்டித்தான் கலியாணம் செய்கிறார்கள். அதற்கு கம்யூனிஸ்ட் தலைவர்களே வந்து தாலி எடுத்துக் கொடுக்கிறார்கள். இஸ்லாமியர் கம்யூனிஸ்ட்டாக இருந்தால் அவர் திருமணத்தில் வந்து ஒப்பந்தப் புத்தகத்தில் சாட்சியாக கையெழுத்திடுகிறார்கள். இதுதான் நடைமுறையாக இருக்கிறது. கம்யூனிஸ்ட்டுகள் எல்லா மதங்களையும் மதிக்கிறார்கள். மதத்திலிருப்பவர்கள் தான் கம்யூனிஸ்ட்டுகளை எதிரிகளாகவே பார்க்கிறார்கள்.
எனக்குத் தெரிந்த கம்யூனிஸ்ட் நண்பர் தன் குடும்பத்தினரை திருப்பதி அழைத்துச் சென்று தன் பையனுக்கு மொட்டை போட்டுக் கொண்டு வந்தார். அவருக்கு கடவுள் மேல் நம்பிக்கையில்லை. ஆனால் குடும்பத்தினரின் மேல் தன் கொள்கையைத் திணிக்கவும் இல்லை. அதற்காக அவரும் போய் ஏழுமலையானை தரிசிக்கவில்லை. குடும்பத்தினரின் மத விருப்பத்தையும் மதித்தார், அது மற்றவர்க்கு தீங்கிழைக்காத வழக்கம் என்பதால்.
நந்தினிக்கு பட்டுபுடவை எடுத்துக்கொடுத்து கோவில்பட்டிக்கு கூட்டிக்கொண்டுபோய்…… மன்மத பிரச்சாரகர் பாக்கரை ஒளித்துவைத்து காப்பாற்றியது தானே தவ்ஹீதும் அதன் தலைவர்களும் நிறுவனர்களும். அப்படியிருக்க வீண் ஜம்பம் எதற்கு இர்ஷாத்?
நந்து அப்படி மன்மத ராசா பாக்கர் போனதால தான் எவிடன்ஸ் கிடைச்ச பிறகு அவரை தவ்ஹித் ஜமாத்ல இருந்து நீகுனாங்க செல்லம். இது தெரியாதா? நீ ரொம்ப வெகுளியா இருக்கேமா நந்து.
நந்தினி விவகாரத்தில மூடிமறைச்சி காப்பாற்ற பிஜே முயற்சித்தாலும் மனமதன் …… சும்மா இருக்கமுடியுமா? கோவை சக்கிலாவோ… ஆமினாவோ விவகாரம் வர இதற்குமேலும் பொறுக்கமுடியாத ஹாமீம் போன்ற சில நல்ல உள்ளங்கள் மன்மதன் மீது நடவடிக்கை எடுக்காட்டா அம்பலப்படுத்துவோம் என்று மிரட்டினாலும் அஞ்சாத சிங்கம் பிஜே தலைப்பாகைக்கு வந்த ஆபத்து தலைக்கே வரும்போல என்று பிரச்சனை முற்றியதால்தான் பொதுக்குழுவை கூட்டி பாக்கரை வேறு வழியில்லைன்னு நீக்கினார்கள்.
நீர் உண்மை அல்ல ”பொய்யே நீதான்”
இஸ்லாம் தான் முக்கியம், அரசியல் எனக்கு தேவையில்லை என் பிரகடனம் செய்துவிட்டு பாக்கரும் வெளியேறிய நேரம் பிரபலமானது. உள் மனதை அல்லாஹ்வை தவிர எவரும் அறிய மாட்டார்கள் என்பதை “பெண்பித்தன் பாக்கர்” நிரூபித்ததால் வெளியேற்றினார்கள். இஸ்லாம்தான் முக்கியம் என்ற நிலையில் பேராசையாரை, “கிக்” செய்து விட்டு வந்த பாக்கர், தனி கட்சி தொடங்கி மீண்டும் பேராசையாருடன், சேர்ந்து அரசியல் ரகளை நடக்கிறது. இவர்தான் இஸ்லாத்தை காக்க வந்த செம்மல்.
எல்லா மத அமைப்புகளுமே மனிதனை பின்தள்ளி மதத்தினைத்தான் முன் வைக்கின்றன. இதில் ஆர்.எஸ்.எஸ், ஜமாத், சில கிருஸ்தவ அமைப்புகள் என யாரும் வித்தியாசமானவர்கள் இல்லை.
இவர்கள் எப்போது மனிதன், மதத்தினை விட முக்கியமானவன் என புரிந்து கொள்கிறார்களோ அப்போதுதான் மதம் தொடர்பான பிரச்சினைகள் தீரும்..
/////எல்லா மத அமைப்புகளுமே மனிதனை பின்தள்ளி மதத்தினைத்தான் முன் வைக்கின்றன/// ஆம் சரியாக சொன்னீர்கள் ம.க.இ.க என்ற மர்க்ஸிய மத அமைப்பும் அப்படியே செயல்படுகிறது முசுலிம் காபிர் என்று முசுலிம்கள் பிரித்து பேசுவது போல் நம்ம சொங்கொடியும் எப்படி பிரித்து பேசுகிறார் பருங்கள், ///வணக்கம் தோழர்களே, நண்பர்களே,
இந்த நூலகம் பகுதியில்
நல்ல நூல்களை, செங்கொடி தளத்தில் பதிவிடும் நூல்களை, இயக்க வெளியீடுகளை, புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் இதழ்களை, ஆசான்களின் ஆக்கங்களை
மின்னூல் (pdf) பதிப்பாக வெளியிட எண்ணியுள்ளேன்.
தோழர்களுக்கு விரிவாக எடுத்துச்செல்ல வாய்ப்பாகவும், நண்பர்களுக்கு சிறந்ததொரு அறிமுகமாகவும், வழிகாட்டியாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.//// இதில் தோழர்களுக்கும் நண்பர்களுக்கும் என்ன வித்தியாசம் தோழமையில் கூட பிரிவா?
அன்பின் வினவு சகோதரர்களுக்கு,
ஷாபானு விவகாரத்தை போகிற போக்கில் தொட்டுச் செல்கிறீர்கள். இருவருக்கிடையில் கணவன் மனைவி உறவு (உரிமை) என்பது இல்லை என்று ஆகிவிட்டதென்றால் பெண்ணுக்கோ இல்லை ஆணுக்கோ எந்த அடிப்படையில் ஒருவருக்கொருவர் உதவி (ஜீவனாம்சமும் ஒருவகை உதவி தான்) செய்ய முடியும். கணவன் இல்லை என்றாகி விட்ட பின்பு அந்த மனிதரிடம் உதவி வேண்டுவது எந்த வகையில் நியாயம்? கணவன் என்ற உறவே இல்லை என்ற நிலையில் அவரிடம் உதவியை எதிர்பார்ப்பது ஏன்? திருமண பந்தம் முறிந்த பின்னர் கணவனாக இருந்தவரும் ஒரு அன்னியர் தான் என்பது சொல்லித்தான் தெரிய வேண்டுமா? இல்லை முன்னாள் கணவர் என்ற உரிமை இருக்கிறது என்று சொல்ல வருகிறீர்களா? இதை தான் உங்கள் கம்யூனிசம் சொல்லிக் கொடுக்கிறதா? எந்த உறவும் இல்லாத நிலையில் நானோ நீங்களோ ஒரு பெண்ணுக்கு சென்று மாதா மாதம் நான் உனக்கு பணம் தருகிறேன் பெற்றுக்கொள் என்று சொன்னால் நமக்கு என்ன மரியாதையை பெற்றுத்தரும் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை..
ஆனால் நீங்கள் கூறுகிற இஸ்லாமிய அடிப்படைவாதம் இதற்க்கு கூறுகிற தீர்வு என்ன என்று அறிந்திருக்கிறீர்கள? இல்லை நீங்கள் கூறுகின்ற புரட்சிகர திருமணங்களிலே அதனை நடைமுறைப்படுத்தி இருக்கிறீர்களா? “எந்த ஒரு ஆணும் பெண்ணுக்கு மணக்கொடை கொடுத்து மணமுடிக்க வேண்டும்” என்று இஸ்லாமிய அடிப்படைவாதம் சொல்வது உங்கள் கண்ணில் பட்டிருக்கின்றதா? நீங்கள் திட்டுகின்ற தௌஹீத் ஜமாஅத் இதனை ஆதரிக்கின்றதா? அதனை செயல்படுத்துவதில் முதன்மைப் படுத்துகிறதா? இல்லை நீங்களா?
(இதனை எத்தனை இஸ்லாமியர்கள் பின்பற்றுகிறார்கள் என்று பதில் கேள்வி கேட்க வேண்டாம்.. பின்பற்றாதவர்களைப் பற்றி திட்டுவதென்றால் உங்களோடு சேர்ந்து நானும் திட்டுகிறேன் மிக மோசமாக…)
அய்யா ரபீக்கு,
“…..பின்பற்றாதவர்களைப் பற்றி திட்டுவதென்றால் உங்களோடு சேர்ந்து நானும் திட்டுகிறேன் மிக மோசமாக…)” .
ஏன் உங்களுக்குத் தெரியாதா யார் பின்பற்றாதவர்கள் என்று? இதுவரை எத்தனை பேரைத்திட்டியிருக்கிறீர்கள்? கொஞ்சம் பட்டியலிடுங்களேன்.
ஊரான்.
சகோதரர் ஊரான்,
திட்டுவது தான் உங்களின் நோக்கம் என்றால், தாரளமாக திட்டுவோம் வாருங்கள்.
ஆனால் உங்களைப் போன்ற கம்யூனிஸ்ட்கள் வரதட்சணை இல்லாமல் செய்துள்ள திருமணங்களை விட நீங்கள் விமர்சிக்கின்ற தௌஹீத் ஜமாஅத் இஸ்லாமிய இளைஞர்களிடையே இஸ்லாமிய திருமணம் எப்படி இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தி செய்துள்ள வரதட்சணை இல்லா திருமணங்கள் எத்தனையோ மடங்கு. முதலில் அவர்களை பாராட்டி விட்டு பின்னர் செய்யாதவர்களை திட்டுவோமே தாரளமாக..
{{கணவன் இல்லை என்றாகி விட்ட பின்பு அந்த மனிதரிடம் உதவி வேண்டுவது எந்த வகையில் நியாயம்? கணவன் என்ற உறவே இல்லை என்ற நிலையில் அவரிடம் உதவியை எதிர்பார்ப்பது ஏன்?}}
ஏங்க இதெல்லாம் சப்ப மேட்டர், இதக் கூடவா வெளக்கி சொல்லணும்?
உலகத்தின் பெரும்பாலான நாடுகளில் alimony (‘ஜீவனாம்சம்’) சார்ந்த சட்ட விதிமுறைகளின் அடிப்படை இதுதான்:
ஒரு பெண்ணோ ஆணோ திருமண உறவில் நுழையும்பொழுது, வெவ்வேறு கடமைகளை ஏற்கிறார்கள். உதாரணம்: பிள்ளை பெற்று குடும்பம் வளர்க்க வேண்டும் என்று அந்த ஆண் நினைத்தால் அதற்க்கு அந்தப் பெண்ணும் இசையும் பட்சத்தில், அவள் குறைந்தது ஒரு ஆண்டு காலத்தை அந்த பிள்ளையை பெறுவதிலும் வளர்பதிலும் செலவிட வேண்டும். ஒரு ஆண்டிற்குப் பிறகும் அந்தக் குழந்தையை தாயே உடன் இருந்து வளர்க்க வேண்டும் என்று அந்த ஆண் நிர்பந்தித்தால் அந்தப்பெண் மேற்கொண்டு தன் நேரத்தை செலவிட வேண்டும்.
ஆக, (உதாரணம்) பத்தாண்டு காலம் தான் வேலையோ தொழிலோ (படிப்பிலோ) ஈட்யிருக்கக் கூடிய பொருளையும்/வளர்ச்சியையும் நேரத்தையும் அவள் குடும்பத்தை வளர்ப்பதில் செலவிட்டாயிற்று. கணவன் தன் மனைவியின் உணவு இருப்பிடத்திற்கு செலவு செய்தது போக மிச்சத்தை ஈடுகட்டத்தான் வேண்டும்.
பிள்ளையே இல்லாத “குடும்பஸ்திரி” கூட தன் கணவனை ‘திருப்தி’ செய்யும் பொருட்டு வீட்டில் அடைந்து கிடந்தால் இன்னும் நட்டம். கணவனிற்கு சமைப்பது, பணிவிடை செய்வது என்று தன் எல்லா நேரமும் உழைப்பும் ஒரு ஆணிற்கே செலவிடப்படுகிறது. இதற்கான நட்டத்தை யார் ஈடு செய்வது?
உதாரணம் (மேலும்): பொறியியல் படித்த, ‘நல்ல’ வேலையில் இருந்த பெண் ஒருத்தி கணவனிர்க்காக இரண்டாண்டுகள் ‘வீட்டில் இருந்து’ பின் விவாகரத்துப் பெற்றால், அவள் ஈட்யிருக்கூடிய பத்து லட்சம் ருபாய், எட்டியிருக்கக் கூடிய பனி உயர்வு என்று அனைத்திற்கும் கணவன் பதில் சொல்லி ஆக வேண்டும்.
நீங்கள் “இதெல்லாம் தெரிந்து தானே பெண் இல்லறத்தில் நுழைந்தால்?” என்று விதண்டாவாதம் பேச முடியாது. இது ஒரு ஆணாதிக்க சமுதாயம், இதில் பெண்ணின் குரல் என்றுமே ஒடுக்கபட்டதுதான் என்பதை நினைவில் வைத்தே சட்டங்கள் இயற்றப்/மாற்றியமைக்கப் பட்டுள்ளன.
காம்யுநிசமும், முதலீட்டியமும் (சமீப காலங்களில்) ஒன்றாக இணையம் சில புள்ளிகளுள் இதுவும் ஒன்று.
மேலும் படிக்க: