privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்பழங்குடியின வேட்டையே காட்டு வேட்டை!

பழங்குடியின வேட்டையே காட்டு வேட்டை!

-

போலீசாரால் கைது செய்து சித்திரவதை செய்யப்பட்ட சுனிதா துலாவி (19)
போலீசாரால் சித்திரவதை செய்யப்பட்ட சுனிதா துலாவி (19) – படம் thehindu.com

மாவோயிஸ்டுகள் சட்டீஸ்கர் மாநிலத்திலுள்ள காங்கேர் மாவட்டத்தில் ஆகஸ்டு 29, 2010 அன்று நடத்திய திடீர்த் தாக்குதலில் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று சிப்பாய்களும் இரண்டு போலீசாரும் கொல்லப்பட்டனர்.  இத்தாக்குதல் நடந்து ஏறத்தாழ ஒரு வாரம் கழித்து, இத்தாக்குதலை நடத்திய 17 மாவோயிஸ்டுகளைப் பிடித்துவிட்டதாக காங்கேர் மாவட்ட போலீசார் அறிவித்தனர்.  காங்கேர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள வனப் பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தியபொழுது, இம்மாவோயிஸ்டுகளைக் கைது செய்ததாகவும் போலீசார் அறிவித்தனர்.

போலீசாரின் இந்த அறிவிப்பு வெளியான மறுநாளே, கைது செய்யப்பட்டுள்ள 17 பேரில் 15 பேர் காங்கேர் மாவட்டத்திலுள்ள ஆலூர் மற்றும் பசங்கி கிராமங்களைச் சேர்ந்த அப்பாவி பழங்குடியினர் என்பதும் அவர்களுள் ஆறு பேர் பெண்கள் என்பதும் அந்தப் பெண்களுள் இரண்டு பேர் பதினாறே வயதான சிறுமிகள் என்பதும் அம்பலமாகிவிட்டது.

மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலுக்குப் பழிதீர்த்துக்கொள்ளும் வெறியோடு ஆலூர் மற்றும் பசங்கி கிராமங்களில் நுழைந்து தேடுதல் வேட்டை நடத்திய எல்லைப் பாதுகாப்புப் படையும் காங்கேர் மாவட்ட போலீசும் அக்கிராமங்களைச் சேர்ந்த நாற்பதுக்கும் மேற்பட்ட ஆண்களை நிர்வாணப்படுத்தி மிருகத்தனமாகத் தாக்கியது.   நர்சிங் கும்ரா, சுக்ராம் நேதம், பிரேம்சிங் போதாயி, ராஜு ராம், பிட்டி போதாயி ஆகிய ஐவரின் ஆசனவாய்க்குள் குச்சிகளைச் செலுத்திச் சித்திரவதை செய்தது.  ஒரு இளம் பெண்ணும், ஒரு சிறுமியும் அரை நிர்வாணமாக்கப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்டனர்.  அக்கிராமங்களின் மீதான இந்த அரச பயங்கரவாதத் தாக்குதல் செப்டம்பர் 5 மற்றும் 6 ஆகிய இரு நாட்களிலும் நடந்துள்ளது.  இறுதியாக அக்கிராமங்களைச் சேர்ந்த 17 பேரை விசாரணை செய்யப் போவதாகக் கூறித் தனது சித்திரவதை கூடத்துக்கு இழுத்துச் சென்றது, எல்லைப் பாதுகாப்புப் படை.

எல்லைப் பாதுகாப்புப் படையால் இழுத்துச் செல்லப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்ட 19 வயதான சுனிதா துலாவி “தாங்கள் அனைவருமே கண்களும் கைகளும் கட்டப்பட்ட நிலையில் எல்லைப் பாதுகாப்புப் படையால் கடத்திச் செல்லப்பட்டதாக”ப் பத்திரிகைகளுக்கு பேட்டியளித்துள்ளார்.  எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சிப்பாய்கள் இவரின் உடலெங்கும் மின்சார வயர்களைச் செருகி மின்சார அதிர்ச்சி கொடுத்துச் சித்திரவதை செய்ததற்கான அடையாளங்கள் உள்ளன.

சுனிதா துலாவியின் தந்தை புன்னிம் குமார் துலாவி, “எல்லைப் பாதுகாப்புப் படையால் கிராமத்தில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட அனைவரும் இருவேறு முகாம்களில் அடைக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டதாகவும், தாங்கள் மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என ஒப்புக்கொள்ளக் கூறி, அனைவருக்கும் மின்சார அதிர்ச்சி கொடுக்கப்பட்டதாகவும்” கூறுகிறார்.

புன்னிம் குமார் துலாவி அரசு ஊழியர் என்பதாலும், அவரின் மகள் சுனிதா துலாவி சித்திரவதைக்குப் பின் நோய்வாய்ப்பட்டதாலும் அவர்கள் மீது வழக்கு ஏதும் பதிவு செய்யப்படாமல் விடுவிக்கப்பட்டனர்.  அவரின் இன்னொரு மகளான 16 வயதான சிறுமி சரிதா துலாவி உள்ளிட்டு மீதி 15 பேரும் தாக்குதலை நடத்திய குற்றச்சாட்டின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த அட்டூழியங்கள் அம்பலமானவுடன், அதனை மாவோயிஸ்டுகள் நடத்தும் அவதூறு பிரச்சாரம் எனக் கூறி மறுத்து வந்த எல்லைப் பாதுகாப்புப் படை, இப்பொழுது இது குறித்து விசாரணை நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறது.  இந்த விசாரணையின் முடிவு எப்படியிருந்தாலும், அரசு நடத்தும் காட்டு வேட்டை என்பது பழங்குடியின வேட்டைதான் என்பதற்கு இத்தாக்குதல் இன்னொரு சாட்சியமாக அமைந்துவிட்டது.

________________________________

– புதிய ஜனநாயகம், நவம்பர், 2010
________________________________

  1. பழங்குடியின வேட்டையே காட்டு வேட்டை! | வினவு!…

    போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள 17 பேரில் 15 பேர் அப்பாவி பழங்குடியினர் என்பதும் அவர்களுள் பதினாறே வயதான சிறுமிகள் இருவர் உட்பட ஆறு பேர் பெண்கள் என்பதும் என்பதும் அம்பலமாகிவிட்டது….

  2. திரும்ப திரும்ப தவறு செய்துகொன்டிருக்கிரார்கள் .பழங்குடியினரின் ஆதரவின்றி மாவோயிஸ்டுகளை ஒடுக்க முடியாது.பழங்குடியினரின் வாழ்கை தரம் உயர்த்துவதற்கு வழி வகை செய்யாமல் அவர்களை அழிக்க நினைப்பது சொந்த காசிலே சூனியம் வைத்து கொள்வதுபோலகும் .உயர் சாதி மக்களை தவிர மற்றவைகளை கிள்ளு கீரையாக நினைக்கும் அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வருவதை தடுத்து நிறுத்தவேண்டும் .கட்சி தலைவரை பார்த்து ஓட்டு போடும் வழக்கத்தை மக்கள் மாற்றிக்கொள்ளவேண்டும் .அப்பொழுதுதான் அந்த பகுதியிலுள்ள உண்மையான மக்கள் பிரதிநிதி தேர்ந்தெடுக்கப்பட்டு பிரச்சினை தீரும் .

  3. அரசு இயற்கை வளங்களை பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு தாரைவார்த்துக்கொடுப்பதற்காக, காட்டு வேட்டை என்ற பெயரில் மாவோயிஸ்டுகளை ஒழித்துக்கட்டுவதாகச் சொல்லிக்கொண்டு பழங்குடியின மக்களை வேட்டையாடுவதே இந்த காட்டு வேட்டை என்பது மறுக்க முடியாத உண்மைதான். கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் எல்லைப் பாதுகாப்புப் படையின் காட்டுமிராண்டித்தனமே இதற்கு சாட்சியம்தான். அப்படியென்றால் அரசுக்கு மாவோயிஸ்ட்டுகளின் மீதான இலக்கு என்பது இரண்டாம்பட்சமானதா?
    அடுத்து பழங்குடியின மக்களைப் பொறுத்தவரைக்கும் அவர்களின் முதல் எதிரி அரசுதான். மாவோயிஸ்ட்டுகளை ஆதரிக்கிறார்கள். ஆனால் எல்லைப் பாதுகாப்புப் படையினர் மாவோயிஸ்ட்டுகளால் கொல்லப்படும்போது இதற்கு பழி தீர்க்கும் வன்மத்தோடு பழங்குடியின மக்கள் பக்கம் திரும்புகிறார்க்ளே இதற்கு மாவோயிஸ்ட்டுகளும் பொறுப்பு ஏற்றுத்தானே ஆகவேண்டும்.

    • பாதுகாப்புப் படையினருக்குப் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் என்ன வேலை? யாருடைய நன்மைக்காக அவர்கள் அங்கே நிற்கிறார்கள்?

      இலங்கையில் புலிகள் படையினரைத் தாக்கிவிட்டு ஓடினால் இலங்கைப் படையினர் அப்பாவி மக்களைப் பலி எடுத்தனர். மக்கள் என்றுமே படையினரை நம்பவில்லை.

      அங்கும் இங்கும் இந்தியப் படையினருடைய கதையும் அதுவே.

  4. இது போன்ற செயல்களை பார்க்கும் போது இந்திய பாதுகாப்பு படையினருக்கும், இல‌ங்கை இராணுவத்திற்கும் பெரியதாக எந்த வித்தியாசமும் இல்லை என்றே தோன்றுகிறது.

  5. அப்பாவிகள் பாதிக்கப்டும்போது குரல் கொடுக்கும் நீங்கள், தவறான ஆட்கள் , சட்டத்துக்கு விரோதமாக கொல்லப்படும்போதும் கண்டிக்கிறீர்கள்.. இது தேவையில்லை என்றாலும், அது உங்கள் பாணி என விட்டுவிடலாம்..
    .
    ஆனால், அப்பாவிகள் பாதிக்கப்படும்போதோ, சகோதரி அம்பிகா போன்றோர் பாதிக்கப்படும்போதோ குரல் கொடுக்காத தமிழக அறிவு ஜீவிகள் , சமூக விரோதிகள் பாதிகப்டும்போது மட்டும் குரல் கொடுப்பதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்..

  6. அப்பாவி பழங்குடியின மக்களைத்தான் மாவோயிஸ்ட்டுகள் என இந்த அரசாங்கம் குறிப்பிடுகிறது எனபது நன்றாக புரிகிறது, இத்தனை ஆண்டுகாலம் அந்த மக்களை கண்டுகொள்ளாத இந்த அரசாங்கம் கடந்த சில ஆண்டுகளாக மட்டும் ஏன் இப்படி செயல் படுகின்றது எனபது அனைவரருக்கும் தெரிந்த உண்மை. ஆனால் இதை கண்டு கொள்ளாத மற்ற ஒட்டு பொருக்கி கட்சிகள் தேர்தல் சமயத்தில் மட்டும் அவர்களை கண்டுகொல்கிரார்கள், இந்த முறை நடந்த தேர்தலில் மக்கள் சுமார் 50 சதவிகிதம் பேர் புறக்கணித்துள்ளனர், அடுத்த முறை இவர்கள் ஓட்டுவாங்க அங்கே சென்றால் அவர்களுக்கு பழங்குடியின மக்கள் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்.

    இன்னும் சில நாட்களில் இது போன்ற பிரச்சனைகள் தமிழ் நாட்டிலும் பல பகுதிகளில் நிகழும் வாய்ப்புகள் உள்ளன, காஞ்சிபுரம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் பல பகுதிகளில் பிளாட்டினம் மற்றும் பல விலை உயர்ந்த படிவங்கள் பூமிக்கு அடியில் இருப்பதாக மோப்பம் பிடித்து விட்டனர், விரைவில் அப்பகுதியில் வாழும் மக்கள் மாற்று இடங்களுக்கு விரட்டியடிக்கப் படுவார்கள் என்பது வரும் காலங்களில் நமக்கு தெரிய வரும், அப்போதாவது இங்குள்ள மக்கள் தங்களின் உணர்வை வெளிபடுத்துவார்களா என்பதை பார்ப்போம்.( இதற்கான பணிகள் பல இடங்களில் துவங்கிவிட்டன).

Leave a Reply to Indli.com பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க