காஷ்மீர் மாநிலத்தில் கடந்த நான்கைந்து மாதங்களுக்குள் 108 பேரைச் சுட்டுக் கொன்ற பிறகு, நூற்றுக்கும் மேற்பட்டோரை – இவர்களுள் மாணவர்களும் சிறுவர்களும் அடக்கம் – பொது அமைதிச் சட்டம் என்ற கருப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறைக்குள் தள்ளிய பிறகு, தனது ஜனநாயக முகமூடியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எட்டு அம்சங்கள் அடங்கிய சலுகைத் திட்டமொன்றை அறிவித்திருக்கிறது, மைய அரசு.
இத்திட்டத்தின் அடிப்படையில் பல்வேறு தரப்பு காஷ்மீர் மக்களின் கருத்தை அறிவதற்காக மூன்று நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அம்மாநிலத்தில் கடந்த நான்கைந்து மாதங்களுக்கு மேலாக நடந்துவரும் போராட்டங்களின்பொழுது சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு 5 இலட்ச ரூபாய் நட்ட ஈடு வழங்குவது; கல்லெறிதலில் ஈடுபட்டுக் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்வது; பள்ளி மற்றும் கல்லூரிகளை மீண்டும் திறப்பது உள்ளிட்ட சில சில்லறை சலுகைகளும் இத்திட்டத்தின் அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தை காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த ஒட்டுக்கட்சிகள் அனைத்தும் வரவேற்றுள்ள போதிலும், அம்மாநிலத்தைச் சேர்ந்த பெரும்பான்மையான மக்களும் ஹுரியத் மாநாட்டுக் கட்சியும் முற்றிலுமாக நிராகரித்துவிட்டனர். அவர்கள் இத்திட்டத்தை ஒதுக்கித் தள்ளியதற்குப் பின்னே பாகிஸ்தான் சதி எதுவும் இல்லை என்பதையும், இதற்கு இந்திய அரசின், ஓட்டுக்கட்சிகளின் பித்தாலட்டம்தான் காரணம் என்பதையும் காஷ்மீருக்கு வெளியேயுள்ள ‘இந்தியர்கள்’ புரிந்து கொள்ள வேண்டும்.
மைய அரசு இச்சலுகைத் திட்டத்தை அறிவிப்பதற்கு முன்பாக, மைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் காங்கிரசு, பா.ஜ.க., சி.பி.எம்., சி.பி.ஐ., தேசிய மாநாட்டுக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 39 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவை, காஷ்மீருக்கு அனுப்பி வைத்தது. இக்குழு காஷ்மீர் மக்களைச் சந்தித்து, அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து, இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மைய அரசிற்கு ஆலோசனை வழங்கும் என டாம்பீக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்தக் குழுவின் பயணம் மிகவும் அப்பட்டமான மோசடி நாடகமாக முடிந்தது.
இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த ‘தேசிய’க் கட்சிகள் மட்டுமின்றி, காஷ்மீரைச் சேர்ந்த தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவையும் தற்பொழுது காஷ்மீர் மக்களால் புறக்கணிக்கப்பட்டுத் தனிமைப்பட்டுக் கிடக்கின்றன என்பதை இங்கு நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எனினும், இந்தக் குழு காஷ்மீருக்கு வந்தபொழுது, அதன் உறுப்பினர்கள் மக்களைச் சந்தித்துக் கருத்துக் கேட்பதற்கு வசதியாக அங்கு நடந்துவந்த போராட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. ஆனால், அம்மாநிலத்தை ஆளும் காங்கிரசு – தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியோ எம்.பி.க்கள் குழு காஷ்மீரில் தங்கியிருந்த மூன்று நாட்களிலும், பள்ளத்தாக்கு முழுவதும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்து, மக்கள் இக்குழுவினரைச் சந்திக்கவிடாமல் செய்தது.
இக்குழு நியாயமிக்கதாக இருந்திருந்தால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, இப்பயணத்தை ரத்து செய்திருக்க வேண்டும். ஆனால் இதற்கு மாறாக, இக்குழு மாநில அரசு ஏற்பாடு செய்திருந்த குளுகுளு அறையில் உட்கார்ந்துகொண்டு கருத்துக் கேட்பு நாடகத்தை நடத்தியது. காங்கிரசு, பா.ஜ.க., சி.பி.எம்., தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாகயக் கட்சி ஆகியவற்றின் உள்ளூர் தலைவர்கள்தான் இக்குழு சந்தித்த மக்கள். இச்சந்திப்பு பற்றி உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர், “அவர்கள் ஆட்களை அவர்களே சந்தித்துக் கொண்டதாக” நக்கலாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்த நாடகம் முற்றிலும் அம்பலமாகிவிடாதபடிக் காப்பதற்காக சி.பி.ஐ., சி.பி.எம்., உள்ளிட்ட சில கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஹுரியத் மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்த மிர்வாயிஸ் உமர் பாரூக், கீலானி மற்றும் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின்மாலிக் ஆகியோரைச் சந்தித்தனர்.
இச்சந்திப்பின்பொழுது, யாசின் மாலிக்கும் மிர்வாயிஸ் உமர் பாரூக்கும் இணைந்து, “காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்தியா மற்றும் காஷ்மீரைச் சேர்ந்த கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும்” எனக் கோரினர். கீலானி, பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கு அடிப்படையாக, “காஷ்மீர் பிரச்சினையை சர்வதேசப் பிரச்சினையாக இந்தியா ஏற்றுக் கொள்ள வேண்டும்; மனித உரிமை மீறலில் ஈடுபட்ட இராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்பது உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை முன் வைத்தார்.
மைய அரசு அறிவித்துள்ள எட்டு அம்சத் திட்டத்தில் இக்கோரிக்கைகளுள் ஒன்றுகூட இடம் பெறவில்லை. ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம், கலவரப் பகுதிச் சட்டம், பொது அமைதிச் சட்டம் ஆகிய கருப்புச் சட்டங்களை விலக்கிக் கொள்வது பற்றி அத்திட்டத்தில் வாயளவு உத்திரவாதம்கூட வழங்கப்படவில்லை.
கல்லெறிதல் போராட்டங்களின்பொழுது சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஐந்து இலட்ச ரூபாய் நட்ட ஈடு வழங்கும் அறிவிப்பை காஷ்மீர் மக்கள் சீந்தக்கூடத் தயாராக இல்லை. இராணுவத்தின் அத்துமீறல்கள் குறித்து ‘குடியரசு’த் தலைவர் பிரதீபா பாட்டீலைச் சந்தித்த காஷ்மீரத்தைச் சேர்ந்த பெண்கள், “எங்கள் மக்கள் சிந்திய இரத்தத்தை விலைபேச நாங்கள் தயாராக இல்லை” என அவரிடமே மூக்கை உடைத்தாற்போலக் கூறிவிட்டனர்.
கல்லெறிந்த ‘குற்றத்திற்காக’க் கைது செய்யப்பட்ட 1,984 பேரில் 1,719 பேர் ஏற்கெனவே பிணையில் வெளியே வந்துவிட்டனர். எனவே, மைய அரசு அறிவித்துள்ள சலுகைத் திட்டம் அவர்களின் விடுதலையைப் பற்றிப் பேசுவது வெறும் பம்மாத்துதான். இவர்களை மட்டுமின்றி, பொது அமைதிச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்களையும், அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் காஷ்மீர் மக்களின் கோரிக்கை. இதனை மைய அரசு கண்டு கொள்ளவில்லை; மாநில அரசோ அக்கோரிக்கையை ஏற்றுக்கொள்ள அடியோடு மறுத்துவிட்டது.
“காஷ்மீர் மக்களின் கோரிக்கை என்ன?” என்பது உலகமே அறிந்த ஒன்று. அதனை இனிமேல்தான் கண்டறியப் போவதாகக் கூறிக் கொண்டு, ஒரு மூவர் குழுவை மைய அரசு அமைத்திருப்பது கடைந்தெடுத்த மோசடித்தனம் தவிர, இதில் நல்லெண்ணம் எதுவும் கிடையாது.
குறிப்பாக, காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்துக்கு ஆதரவாகப் பேசிய எழுத்தாளர் அருந்ததிராய் மற்றும் ஹுரியத் மாநாடு கட்சித் தலைவர்களுள் ஒருவரான சையத் ஷா கீலானி ஆகியோர் மீது பிரிவினையைத் தூண்டியதாக வழக்கு போட உள்துறை அமைச்சகம் எத்தணிப்பது, மைய அரசின் கருத்துக் கேட்பு நாடகத்தின் கபடத்தனத்தைப் புட்டு வைத்துவிட்டது.
காஷ்மீர் மாநிலம் அரசியல் ஆர்ப்பாட்டங்களால் கொந்தளிக்கும் பொழுதெல்லாம், மைய அரசு இது போன்ற மோசடிகளை நடத்தி வந்திருக்கிறது. காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக கடந்த இருபதாண்டுகளில் மட்டும் 150 முறை பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் இருந்தபொழுது, தற்பொழுது மைய அரசு அமைத்துள்ள குழு போன்றே, முன்னாள் இராணுவ அமைச்சர் கே.சி.பந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, காஷ்மீர் மக்களிடம் கருத்துக் கேட்கும் நாடகம் நடத்தப்பட்டது. 2005-இல் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் அதிபராக இருந்த பர்வேஸ் முஷாரப்புக்கும் இடையே நடந்த மறைமுகமான பேச்சுவாரத்தைகள் காஷ்மீர் பிரச்சினையைத் தீர்த்துவிடும் என்ற பரபரப்பு ஏற்படுத்தப்பட்டது.
இவையனைத்தும் தொடங்கிய சுவடே தெரியாமல் தோல்வியில் முடிந்து போனதற்கு, காஷ்மீர் பிரச்சினையை தேசிய இனப் பிரச்சினையாக இந்தியா ஒரு போதும் அங்கீகரித்ததில்லை என்பது ஒரு முக்கியமான காரணமாகும். இப்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள எட்டு அம்சத் திட்டமும் இந்த உண்மையை அங்கீகரிக்க மறுக்கிறது; அது மட்டுமல்ல, அம்மக்களின் குறைந்தபட்ச ஜனநாயக கோரிக்கைகளைக்கூட – காஷ்மீரிலிருந்து இராணுவத்தையும், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தையும் திரும்பப் பெறுவது, அரசியல் கைதிகளை விடுதலை செய்வது போன்றவை – அங்கீகரிக்க மறுக்கிறது, மைய அரசு. பிறகு எப்படி காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த முடியும்? காஷ்மீர் மக்களின் மனதை வென்று ‘தேசிய ஒருமைப்பாட்டை’க் காக்க முடியும்?
________________________________
– புதிய ஜனநாயகம், நவம்பர், 2010
________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- இன்ட்லியில் வினவை தொடர
- கூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க
தொடர்புடைய பதிவுகள்:
- காஷ்மீர்: இந்திய இராணுவமே வெளியேறு!
- காசுமீரிகள் ஏன் கல்லெறிகின்றார்கள் ?
- காஷ்மீர் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் தினமணி!
- “காஷ்மீரில் சுயமரியாதை உள்ளவனைக் கண்டதும் சுடு!”
- பற்றி எரிகிறது காஷ்மீர் !!
- இந்திய இராணுவத்தால் கற்பழிக்கப்படும் காஷ்மீர்!!
- வந்தே மாதரமும் – தேசபக்தி வெங்காயமும் !!
- காஷ்மீர், அப்சல் குரு…. இந்திய அரசின் பயங்கரவாதம் !
- காஷ்மீர், ஈழம் : பிணங்கள் பேசுகின்றன !
- அமெரிக்கா ஊற்றி வளர்த்த ஜிகாதிப் பயங்கரவாதம் !
- சசியின் டைரி : காஷ்மீர் : சுயநிர்ணயத்தில் இருந்து ஜிகாத் வரை
- அசுரன் – காஷ்மீர் விடுதலைப் போராட்டம் வெல்க!!!
காஷ்மீர் சலுகைத் திட்டம் : மீண்டுமொரு மோசடி நாடகம்…
காஷ்மீர் மக்களின் கோரிக்கை என்னவென்பது உலகமே அறிந்த ஒன்று. அதனை கண்டறியப் போவதாகக் கூறிக் கொண்டு, ஒரு குழுவை அமைத்திருப்பது கடைந்தெடுத்த மோசடித்தனம் தவிர வேறென்ன…
[…] This post was mentioned on Twitter by வினவு and sandanamullai, ஏழர. ஏழர said: RT @vinavu: காஷ்மீர் சலுகைத் திட்டம் : மீண்டுமொரு மோசடி நாடகம் https://www.vinavu.com/2010/11/23/kashmir-plan/ […]
நாட்டாமை சீக்கிரம் சொம்பை எடுத்து வந்து குந்திகிட்டு உங்க தீர்ப்ப கூறுங்க, அப்பத்தான் இந்த புத்திகெட்ட இந்திய பசங்க கட்டுப்படுவாங்க. உங்களால தான் பாகிஸ்தானுக்கு ஒரு நீதி கிடைக்கும். அப்படியே பஞ்சாயத்துக்கு வரும்போது உங்க அல்லக்கை படையையும் மறக்காம கூட்டிகிட்டு வாங்க. அவிங்க பேகிரவுண்டுல லாலி பாடிகிட்டு இருந்தா தான் பஞ்சாயத்து களை கட்டும்.
பொரட்சி ஓங்குக. தென்கொரியாவை தாக்கும் வடகொரியா வாழ்க. சீனா வாழ்க வாழ்க.
உங்கள் விளக்கத்தில் புலம்பல் மட்டுமே வெளிப்படுகிறது.
//குறிப்பாக, காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்துக்கு ஆதரவாகப் பேசிய எழுத்தாளர் அருந்ததிராய் மற்றும் ஹுரியத் மாநாடு கட்சித் தலைவர்களுள் ஒருவரான சையத் ஷா கீலானி ஆகியோர் மீது பிரிவினையைத் தூண்டியதாக வழக்கு போட உள்துறை அமைச்சகம் எத்தணிப்பது, மைய அரசின் கருத்துக் கேட்பு நாடகத்தின் கபடத்தனத்தைப் புட்டு வைத்துவிட்டது//
நல்ல பதிவு! காஷ்மீர் மக்களின் உரிமைப்போராட்டத்தினை ஆதரிப்போம்!
அப்படியே சீனாவில் குறைந்தபட்ச அடிப்படை உரிமை கேட்டு லேசாக முனுமுனுப்பவரை கூட ஜெயிலில் போட்டு ஏறி மிதிப்போம். வாழ்க செம்பொரட்சி. வாழ்க அகிம்சாவாதிகள் மாவோ மற்றும் ஸ்டாலின்
அப்படியே காஷ்மீரத்து ஹிந்து பண்டித்துகளும் காஷ்மீரிகள்தான் என்பதையும், அவர்களுக்கும் காஷ்மீரில் வாழ உரிமை உள்ளது என்பதையும் அருந்ததி ராய் போன்றவர்கள் பேசினால் நன்றாக இருக்கும்.
எடிசன் என்ற பெயரில் வரும் இந்த ……………..எப்போதும் விஷத்தையே கக்குகிறது.கொண்டு பொய் காஸ்மீரில் விட்டால் தெரியும் இந்த ……….. அவர்களின் கஷ்டங்கள்.
“யோவ்” மற்றும் எடிசனுக்கு..
என்னவோ வினவு சீனாவின் செல்போன்களை விற்கும் ஏஜென்ட் கம்பெனி ரேஞ்சில் பேசுறீங்க… வினவில் வந்திருக்கும் இந்தக் கட்டுரையெல்லாம் பாத்தீங்களா இல்லையா ?
https://www.vinavu.com/2010/01/27/chinese-mafia/
yov ambadhen, cheenakku yenda indha jaalra adikareenga!
தோழர் அம்பேதகன், நான் கட்டுரை நல்ல இருக்கு என்றுதானே சொல்லியிருக்கிறேன். ஆச்சரிய குறி இருப்பதால் வஞ்ச புகழ்ச்சி என்று கருதிவிட்டீர்களா?தமிழில் வியங்கோள் வினைமுற்றுக்கு பிறகு அது வரும் (உ .ம். வாழ்க!). நீங்கள் சொன்ன கட்டுரையையும் படித்தேன். சிலருக்கு அது பதிலளிப்பதாய் இருக்கிறது. நண்பா ராம் காமேஸ்வரன் உங்கள் கருத்தும் சரியானதுதான். புரிந்துகொள்தலில் ஏற்படுகிற தவறுகள் என்று நினைக்கிறேன். மற்ற வர்க்க எதிரிகளின் கருத்துகளுக்கு நான்தான் பதிலளிக்க வேண்டும் என்ற அவசியம் ஏற்படவில்லை. http://yoh-kavithaigal.blogspot.com என்பது என் வலைப்பதிவு தோழர் அம்பேதகன் விரும்பினால் கம்யூனிச, தலித்திய என் கவிதைகளை அதில் படிக்கலாம். நன்றி!
http://yoh-kavithaigal.blogspot.com/2010/10/blog-post_8724.html
சீனாவில் குறைந்தபட்ச அடிப்படை உரிமை கேட்டு லேசாக முனுமுனுப்பவரை கூட ஜெயிலில் போட்டு ஏறி மிதிப்போம்>
Ippadi sonnal vishamam. ha ha… arumai arumai!