Monday, November 4, 2024
முகப்புபுதிய ஜனநாயகம்இந்தியாபணமூட்டைகள் உருவாக்கும் செய்திகள் !!

பணமூட்டைகள் உருவாக்கும் செய்திகள் !!

-

பண மூட்டைகள் உருவாக்கும் செய்திகள்மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாகவும், இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் “நான்காவது தூணாக”ச் செயல்படுவதாகவும் செய்தி ஊடகங்களைப் பெருமையாகக் குறிப்பிடுகின்றனர். எனினும், இன்று அவற்றின் நிலைமையோ, அத்தகைய முதலாளித்துவ செய்தி ஊடகங்களில் பணியாற்றி வருபவர்களால் கூட சகிக்க முடியாத அளவிற்கு போய் விட்டது.

புரட்சிகர இயக்கங்கள் நடத்தும் மக்கள் திரள் போராட்டங்கள் ஒன்றைக்கூட வெளியிடாது இருட்டடிப்பு செய்யும் பத்திரிக்கைகள், சு.சாமி போன்ற அரசியல் தரகர்கள் உளறிக் கொட்டுவதையெல்லாம் நான்கு பத்தி செய்தியாக்குகின்றன. சினிமாக் கழிசடைகளிடமிருந்தும், சின்ன எம்.ஜி.ஆர். போன்ற திடீர்ப் பணக்காரர்களிடமிருந்தும் ‘கவர்’ வாங்கிக் கொண்டு செய்திகளை உற்பத்தி செய்கின்றன. இலங்கைத் தூதர் அம்சாவிடம் சீமைச் சாராயம் முதல் தங்கச் சங்கிலி வரை பெற்றுக்கொண்டு, சிங்களப் பேரினவாதத்தின் ஊதுகுழலாகச் சில தமிழ்ப் பத்திரிக்கைகள் செயல்பட்டன.

தமிழகம் மட்டுமல்ல; நாடெங்கும் முதலாளித்துவப் பத்திரிக்கைகள் இவ்வாறு செய்திகளைத் திட்டமிட்டுத் தயாரித்து மக்களிடையே பொதுக்கருத்தை உருவாக்குகின்றன. கடந்த ஆண்டு அக்டோபரில் மராட்டிய மாநில சட்டமன்றத் தேர்தலையொட்டி அங்குள்ள பத்திரிக்கைகளில் வெளிவந்த செய்திகளை அலசி ஆராய்ந்திருக்கும் பிரபல பத்திரிக்கையாளரான சாய்நாத், காங்கிரசுக் கட்சிக்கும் பத்திரிக்கைகளுக்கும் இடையில் நடந்த திரை மறைவு பேரங்களை அண்மையில் அம்பலப்படுத்தியுள்ளார்.

அந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரசு கட்சியின் அசோக் சவான், மீண்டும் முதலமைச்சரானார். தேர்தல் பிரச்சாரத்தின்போது அவருக்கு பெரிய அளவில் பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்யப்பட்டு வந்தது. “லோக்மத்” எனும் மராத்தி தினசரியில் சிறப்பு செய்தியாளர் பெயரில், தலைப்பு செய்தியாக ‘ஆற்றல்மிக்க இளம் தலைவர் அசோக்ராவ் சவான்’ என்ற செய்தி, மிகக் குறுகிய காலத்தில் ஏகப்பட்ட சாதனைகளைப் புரிந்துள்ள முதல்வரென சவானைப் பாராட்டி மகிழ்ந்தது. இதே செய்தி ஒருவரி கூட மாறாமல் “மகாராஷ்டிரா டைம்ஸ்’’-இலும் வந்தது. ஒரே மாதிரி இரண்டுபேர் சிந்திக்கக் கூடாதா என்ன? இதே செய்தி மூன்று நாட்களுக்கு முன்னர், தலைப்பை மட்டும் மாற்றிக்கொண்டு மராத்தி தினசரி “புதாரி’’யில் ஆசிரியர் பெயரில் வந்தது. ஆசிரியர் பெயரில்லாமல் வந்த மகாராஷ்டிரா டைம்சில் விளம்பரம் என்ற வார்த்தையே இல்லை. இவ்வாறு விளம்பரமே செய்தி எனும் பெயரில் அப்பட்டமாக வருவதை ‘கவரேஜ் இதழியல்’ (கவரில் பணம் கொடுத்து செய்தி வெளியிடுவது) என்று அழைக்கின்றனர்.

மராட்டிய தேர்தல் செய்திகளை “இந்து” நாளேடு ஆய்வு செய்தபோது, சவானைப் பற்றி 47 பக்க செய்திகள் லோக்மத் செய்தித்தாளின் வெவ்வேறு பதிப்புகளில் வந்துள்ள விவரம் தெரியவந்தது. செப்டம்பர் 10-ஆம் தேதியன்று ‘அசோக பர்வம்’ எனும் பெயரில் நான்கு பக்க இணைப்பு ஒன்றை லோக்மத் வழங்கியது. வாக்கு பதிவு நாளான அக்டோபர் 13-ஆம் தேதி வரை தினமும் வந்த இந்த இலவச இணைப்புக்கு ‘விகாஸ் பர்வம்’ (முன்னேற்றத்தின் காலகட்டம்) என்று தலைப்பிட்டு, மராட்டிய மாநிலம், காங்கிரஸ் ஆட்சியின் கீழ் அடைந்த முன்னேற்றத்தை தினமும் ‘செய்தி’யாக்கியது.

நந்தேடு மாவட்டத்தின் போகோர் சட்டமன்ற தொகுதியில் ஒரு இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சுயேச்சை வேட்பாளரை சவான் வென்றார். தனது தேர்தல் விளம்பரச் செலவாக மொத்தம் ரூ. 11,379 மட்டும்தான் செலவிடப்பட்டதாக அவர் தேர்தல் கமிசனில் கணக்குக் காட்டியிருக்கிறார். பத்திரிக்கையில் வெறும் ஆறு விளம்பரங்கள் மட்டுமே அவர் வெளியிட்டதாகவும், அதற்கான செலவு ரூ. 5,379 என்றும், கேபிள் டிவியில் விளம்பரம் தந்ததற்கு மீதித் தொகை செலவானதாகவும் அவரின் ‘கணக்கு’ சொல்கிறது. அந்த பத்திரிகை விளம்பரங்களும் நந்தேடில் இருந்து வரும் மிகச் சிறிய நாளேடான “சத்திய பிரபா’’வுக்கு மட்டும் தரப்பட்டதாகச் சொல்கிறது, கணக்கு. ஆனால், பெரிய பத்திரிக்கைகளில் ‘முக்கிய செய்தியாக’ வந்த விளம்பரங்களுக்கு உண்மையில் பல கோடி ரூபாய் செலவாகியிருக்கும். லோக்மத் பத்திரிக்கையின் 13 பதிப்புகளிலும் நான்கு பக்க வண்ண இலவச இணைப்பு தர வேண்டுமானால் சந்தை நிலவரப்படி 1.5 கோடியிலிருந்து 2 கோடி வரை செலவாகியிருக்கும் என பத்திரிக்கைத் துறையைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

சவானுக்காக இந்த இலவச ‘செய்தி’ச் சேவையை செய்ய உதவியவர், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திர தர்தா. ஏற்கெனவே, சவான் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த இவர், லோக்மத் பத்திரிக்கையின் பங்குதாரரும் கூட. பணத்தை வாங்கிக்கொண்டு ‘செய்தி’ வெளியிடுவதைப் பற்றி தேர்தலுக்கு பின்னர் விவாதங்கள் நடைபெற்றன. சில பத்திரிகையாளர்கள் அவ்வப்போது கவர் வாங்கி செய்து வந்த ஈனத்தனமான செயலானது, விளம்பரத்தைச் செய்தியாக வெளியிடுவதன் மூலம் பல கோடி ஊழலாக வளர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது.

பத்திரிக்கைகளில் விளம்பரக் கட்டணம் எவ்வளவென்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. ஆனால் ‘செய்திக் கட்டுரை’ எனும் பெயரில் வரும் செய்திக்கு கட்டணம் எவ்வளவு? ஒவ்வொரு செய்தியும் நம்பத்தக்கதா, அல்லது பணப் பரிவர்த்தனையால் உருவாக்கப்பட்டதா – என வாசகர்களிடையே சந்தேகங்கள் எழத் தொடங்கிவிட்டன. சவான் போன்றவர்கள் கொடுக்கும் தேர்தல் செலவுக் கணக்குகளின் நம்பகத்தன்மையும் தேர்தல் கமிசனுக்குத் தெளிவாகவே தெரியும். பல கோடி ரூபாய் மதிப்பிலான ‘செய்திக் கட்டுரை’யை உருவாக்கிய சவான், மொத்தமே ரூ. 7 லட்சத்துக்கும் குறைவாகத்தான் தேர்தலில் செலவு செய்திருக்கிறார் (!) என்பதையும் அந்தக் கமிசன் நம்பித்தான் ஆகவேண்டும். (சட்ட மன்ற தேர்தலில் ஒரு வேட்பாளரின் அதிகபட்ச செலவு பத்து லட்ச ரூபாய்க்குள் இருக்க வேண்டும் என்பது தேர்தல் கமிசனின் விதி.)

இந்தச் செய்தி விளம்பர மோசடி, அம்மாநிலத்தின் சி.பி.எம். அணியினர் தாக்கல் செய்த தகவல் பெறும் உரிமைச் சட்ட மனு மூலமும், இந்து பத்திரிக்கை நடத்திய ஆய்வின் மூலமும் வெளிவந்துள்ளது. இருப்பினும், விளம்பரம் எனும் வார்த்தை இடம் பெறாததால் ‘செய்தி விளம்பரமும்’ சட்டப்படி செய்திதான் என்பதால், இக்குற்றத்தை நிரூபிக்கவும் முடியாது.  இந்தியா முழுவதும் செய்திகளை இவ்வாறுதான் முதலாளித்துவ ஊடகங்கள் உருவாக்குகின்றன. தொலைக்காட்சி, பத்திரிக்கை என அனைத்தையும் மாறன் சகோதரர்கள், ஆந்திர ரெட்டிகள் போன்ற திடீர்ப் பணக்கார அரசியல் ரவுடிகள் கட்டுப்படுத்துகின்றனர். இவர்கள் உருவாக்குவதுதான் செய்தியாக மக்களிடம் திணிக்கப்படுகிறது.

அரியானா முதல்வரான பூபிந்தர்சிங் ஹூடா, “எனது மாநிலத்தின் பிரபல நாளேடு எதிர்த்தரப்பினரிடம் கவர் வாங்கிக் கொண்டு தொடர்ந்து எனக்கெதிராகப் பொய்ச் செய்திகளை வெளியிட்டு வந்தது. உங்களுக்கு வேண்டுமானால் பணம் தருகிறேன், தயவுசெய்து உண்மைகளை வெளியிடுங்கள் என்று நான் அப்பத்திரிகை அதிபரிடம் கூறிய பிறகே அதை நிறுத்தினர்” என்கிறார். மகாராஷ்டிர காங்கிரசு செய்தித் தொடர்பாளரான உசைன் தல்வாய், “நீங்கள் பணம் கொடுக்காவிட்டால் எந்தச் செய்தியும் வெளிவராது” என்று உண்மையைப் போட்டு உடைக்கிறார். ஆந்திராவின் நலகொண்டாவைச் சேர்ந்த வலது கம்யூனிஸ்டு பிரமுகரான சுதாகர் ரெட்டி, “செய்தி வெளியிட விளம்பரம் தருமாறு பத்திரிகைகள் பேரம் நடத்தின. எனது நண்பர்கள் சிலர் விளம்பரம் கொடுத்த பின்னரே சில செய்திகள் வந்தன” என்கிறார். வாராங்கல்லைச் சேர்ந்த லோக்சத்தா கட்சியின் பிரமுகரான கோதண்டராம ராவ், “நான் ரூ. 50,000 கொடுத்த பிறகே ஈநாடு நாளேட்டில் என்னைப் பற்றிய மூன்றரைப் பக்க செய்தி வெளியிடப்பட்டது” என்கிறார். கிழக்கு டெல்லியின் காங்கிரசு எம்.பி.யான சந்தீப் தீக்ஷித் “ஒரு பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தினர், ராகுல் காந்தி எனது தொகுதியில் நடத்தும் தேர்தல் பிரச்சாரத்தை ஒன்றரை மணி நேரம் நேரடி ஒளிபரப்பு செய்ய இரண்டரை லட்ச ரூபாய் கேட்டனர்” என்கிறார்.

பணமூட்டைகளால் உருவாக்கப்படும் செய்திகளைப் பற்றி சாய்நாத் அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து, பத்திரிகை ஆசிரியர்கள் சங்கத்தினர். இதுபோன்ற கவர் பண்ணும் செய்திகளை வெளியிடக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். 50 ஆண்டு காலம் பத்திரிக்கை துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற மராத்திய பத்திரிகையாளர் கோவிந்த் தல்வால்கர் “மையப் புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டிய மிகப் பெரிய ஊழல் இது. என்னுடைய நீண்ட பணிக்காலத்தில் இதழியல் இந்தளவுக்குத் தரம் தாழ்ந்து போனது கிடையாது” என மனம் நொந்து இந்து பத்திரிகையில் எழுதுகிறார். “இது, பத்திரிகையாளர்களின் யோக்கியதைக்கே பெரும் அச்சுறுத்தும் அபாயமாக மாறி விட்டது. பத்திரிகைகளில் வெளியாகும் ஒவ்வொரு வார்த்தையும் பணத்தால் ஏலம் விடப்படுகிறது” என்று பல பிரபல பத்திரிகையாளர்கள் குமுறுகின்றனர். உண்மைதான். இதுவரை பெயரளவில் நிலவி வந்த நேர்மையும் ஒழுக்கமும் கைகழுவப்பட்டு, எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என்ற ஏகாதிபத்திய – மறுகாலனியாதிக்கப் பிழைப்புவாதப் பண்பாடு சமுதாயத்தில் புரையோடிப்போக் கிடக்கிறது. இதற்கு முதலாளித்துவ பத்திரிகைகளும் அதன் செய்தியாளர்களும் விதிவிலக்கில்லை.

பணமூட்டைகளும் திடீர்ப்பணக்கார அரசியல் ரவுடிகளும் அரசு பயங்கரவாத போலீசும் உருவாக்கும் இத்தகைய பொய்ச்செய்திகளை அம்பலப்படுத்துவது மட்டுமல்ல; இதற்கு அடித்தளமாக உள்ள இன்றைய மறுகாலனியாதிக்க அரசியல்-சமூகக் கட்டமைவைத் தகர்ப்பதும்தான் இன்றைய உடனடித் தேவையாக உள்ளது.

________________________________________

– புதிய ஜனநாயகம், பிப்ரவரி – 2010
________________________________________

தொடர்புடைய பதிவுகள்:

  1. பணமூட்டைகள் உருவாக்கும் செய்திகள் !!…

    ஜனநாயகத்தின் நான்காவது தூணாகச் சொல்லப்படும் செய்தி ஊடகங்களைப் நிலை, அத்தகைய முதலாளித்துவ ஊடகங்களில் பணியாற்றி வருபவர்களால் கூட சகிக்க முடியாத அளவிற்கு போய் விட்டது….

  2. எனக்குத் தெரிந்து ஒரு சாதாரண சந்தைப் பத்திரிக்கைகள் முதல், முற்போக்கு பேசும் தி.க, தேசிய இன விடுதலையை முன் வைக்கும் இனவாதிகள் , புரட்சி பேசும் போலிகம்யூனிஸ்ட்டுகள் வரை, இவர்கள் வெளிடும் பத்திரிக்கைகளில் விளம்பரங்கள் இல்லாமல் பத்திரிக்கை நடத்துவதில்லை. புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் பத்திரிக்கைகள் மட்டுமே விளம்பரங்கள் ஏதும் இல்லாமல் இருபத்தைந்து ஆண்டுகளை கடந்து சாதனை புரிந்து வருகின்றன.
    அரசியல், பண்பாட்டு ரீதியான சமூக நிகழ்வுப் போக்குகளை பற்றி மக்களிடையே ஒரு பொதுக் கருத்தை உருவாக்குவதில் முதன்மை வகிக்கும் இந்த சந்தைப் பத்திரிக்கைகளின் தரம், ஆக மலிவான தாழ் நிலைக்கு சென்றுவிட்டதை இன்னும் பல உதாரண நிகழ்வுகளை பட்டியலிட்டு அம்பலப்படுத்த வேண்டும்.

  3. PAID NEWS – அருவருக்கத்தக்க, கண்டிக்கத்தக்க, ஒடுக்கப்பட வேண்டிய பத்திரிக்கா தர்மம்!

  4. மக்களைச் ‘சிந்திக்க’ வைப்பதற்காக முதலாளித்துவம் எப்போதும் கையாளும் வித்தைதானே இது??? இப்போதுதான் பூனைக்குட்டி வெளியே வரத் துவங்கியுள்ளது… the tip of the iceberg…!

  5. அறம் என்பது எல்லாத்துறைகளிலும் அழிந்துவிட்ட பிறகு ஊடகத்துறை மட்டும் தனித்தன்மையுடன் இருக்கும் என்பதை எப்படி எதிர்பார்க்க முடியும்?

    • வானம்,
      மற்ற எல்லாத் துறைகளையும்விட ஊடகத்துறை அடிப்படையிலேயே வேறுபட்டது. மற்ற துறைகளில் ஊழலோ, அதிகார முறைகேடோ அல்லது மக்கள் விரோத செயலோ நடக்கும் போது அதை அம்பலப்படுத்தும் பொறுப்பைக் கொண்ட ஊடகத்துறை, தனது துறையில் அதே தவறுகள் நடக்கும் அதை யார் சொல்வார்கள் என்ற மிதப்பில் இருந்துவிடுகின்றன. இந்த விசயத்தில் அந்தளவிற்கு சந்தைப் பத்திரிக்கைகளுக்குள் ஒரு பொது ஒற்றுமை நிலவுகிறது. பத்திரிக்கை சுதந்திரம், கருத்துரிமை என்ற பெயரில் இத்துறை திரைமறைவில் விலை போவதை வெளிஉலகிற்கும் தெரிவத்ல்லை. ஆகையால் இத்துறைகளிடம் நேர்மை, நாணயத்தை எதிர்பார்க்க முடியாதுதான். அதற்காக இதன் யோக்கியதையை மக்கள் முன் அம்பலப்படுத்திக் காட்டுவதை நாம் வரவேற்றுதான் ஆக வேண்டும்.

  6. நிச்சயம் PAID NEWS என்பதற்கும் கண்ணியமான பத்திர்க்கை செய்திகளுக்கும் ஒரு வேறுபாடு தான் . PAID NEWS என்பது விலைமதிப் போன்று காசு வாங்கி கொண்டு சுகத்தை விற்கின்றனர். கண்ணியமான பத்திர்க்கை என்பது மானமுள்ள மனையட்டியைப் போன்று. இப்போது சொல்லுங்கள் தினமலர், இந்து, போன்றவைகள் விலைமாதுகள் தானே. விபச்சாரத்தை தடை செய்த நம் நாட்டில் விபச்சார பத்திர்க்கைகளை தடை செய்யாதது ஏன்.

      • நான் பார்வை என்று சொன்னது, கட்டத்தில் உள்ள பார்வையை அல்ல தொலை நோக்கு பார்வையை.

        இதற்கும் ஏதாவது ஒய்ட் கிராஸ் தவறாக எழுதிவிட போறானுங்க……….

  7. ஒரு, சில கறுப்பு ஆடுகளால் நேர்மையான பத்திரிகையியல் தொழில்தர்மத்தோடு இதழியல் நடத்தும் நல்ல ஊடகங்களையும், மக்கள் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் நிலைக்கு தள்ளப்பகிறார்கள். இது சமூகத்துக்கும் ஜனநாயகத்தின் “நான்காவது தூணான” பத்திரிக்கைக்கும் அழகல்ல…

  8. இன்று எந்த செய்தி நிறுவனமும் உண்மையான செய்திகளை ஒளிபரப்புவதாகத் தெரியவில்லை. தமிழகத்தில் அந்தந்த கட்சிக்காரர்களே பத்திரிக்கை/ஊடகத்துறையைக் கையில் வைத்துக்கொண்டு தங்களுக்கு வேண்டிய செய்திகளை வெளியிடுவது நடந்துகொண்டுதானிருக்கிறது. மேலும், மற்ற பத்திரிக்கைகள் காலத்திற்கேற்ப யாருக்கு ஜால்ரா அடிக்கவேண்டுமோ அவர்களுக்கு அடித்துக்கொண்டு பிழைப்பை நடத்திக்கொண்டிருக்கின்றன.

    இவற்றை விடுத்து உண்மையிலேயே நடுநிலை செய்திகளை/உண்மைகளை வெளியிடும் பத்திரிக்கைகளும், இதழ்களும் பல பேருக்கு தெரிவதேயில்லை என்பது இன்னும் வேதனை.

  9. ஒரு சிலரைத்தவிர ஆகப் பெரும்பாலான நிருபர்கள் ‘கவரை’ எதிர்பார்க்கிறார்கள். கவர் கிடைத்தால் கழிசடைகளைக்கூட அச்சேற்றுகிறார்கள்.

    ஊடக முதலாளிகளோ சமூக அவலங்களில்கூட பரபரப்பை எதிர்பார்க்கிறார்கள். பரபரப்பு இல்லை என்றால் அவர்கள் கல்லா கட்டமுடியாது.

    ‘கவர்’ இல்லாமல் செய்திகள் ‘கவரா’வதில்லை.

    ஊரான்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க