Tuesday, December 10, 2024
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்2ஜி அலைக்கற்றை ஊழல்: தனியார்மயக் கொள்ளையின் புதிய சாதனை!

2ஜி அலைக்கற்றை ஊழல்: தனியார்மயக் கொள்ளையின் புதிய சாதனை!

-

ஸ்பெக்ட்ரம் ஊழல் : தனியார்மயக் கொள்ளையின் புதிய சாதனை!

நாட்டையே அதிரவைத்து எல்லோரையும் மிரள வைத்திருக்கிறது, இந்தியாவில் இதுவரை நடந்த ஊழல்களில் இதுவே மிகப் பெரியது என்று சித்தரிக்கப்படும் அலைக்கற்றை ஊழல். இந்த ஊழலால் அரசுக்கு ரூ. 1,76,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

கடந்த 2008-ஆம் ஆண்டிலிருந்து ஸ்பெக்ட்ரம் எனப்படும் அலைக்கற்றை ஊழல் பற்றி ஊடகங்களில் அவ்வப்போது வெளிவந்த போதிலும், இதில் மக்களின் கவனம் திரும்பிவிடாதபடி காங்கிரசும் தி.மு.க.வும் கவனித்துக் கொண்டன. கருணாநிதி குடும்பச் சண்டையில் இந்த ஊழல் மீண்டும் புகையத் தொடங்கிய போதிலும், பங்காளிகளுக்கிடையே ஏற்பட்ட தற்காலிக சமரசத்துக்குப் பின்னர் அது ஈரப் போர்வையால் மூடப்பட்டது. நீதிமன்றத்தின் கண்டங்கள், கணக்கு தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள், ஊடகங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்த தொலைபேசி உரையாடல்கள் முதலானவற்றைத் தொடர்ந்து இந்த ஊழல் மீண்டும் பரபரப்பாகி, தொலைத்தொடர்புத் துறையின் தி.மு.க. அமைச்சரான ராசா இப்போது பதவி விலகியுள்ளார்.

ஒயர்லெஸ் எனப்படும் கம்பியில்லா செல்போன்கள் இயங்க ஸ்பெக்ட்ரம் என்ற அலைக்கற்றைக் கதிர்கள் அவசியம். வான்வெளியில் உள்ள ரேடியோ ஃபிரீக்வன்சி ஸ்பெக்ட்ரம் எனும் அலைவரிசையைக் கொண்டு செல்போன்களை இயக்க முடியும். தனியார்மயமும் தாராளமயமும் திணிக்கப்பட்ட பிறகு, 2001 முதல் பொதுச்சொத்தான அலைக்கற்றைத் தனியாருக்கு ஒதுக்கித் தரப்பட்டதில் அரசுக்கு பல்லாயிரம் கோடி இழப்பை ஏற்படுத்தி, அனைத்து ஓட்டுக்கட்சிகளும் கோடிகளைக் குவித்துக் கொண்டன.

பின்னர், புகைப்படங்கள் – வீடியோக்கள் போன்றவற்றைப் பரிமாறிக் கொள்ளும் புதிய அம்சங்கள் கொண்ட இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை (2ஜி ஸ்பெக்ட்ரம்) அறிவியல் வளர்ச்சியில் வந்தது. இதற்கான ஒதுக்கீட்டில் தொலைத்தொடர்புத் துறையின் அமைச்சரான ராசா, தனியார் நிறுவனங்களுக்கு செய்த ஒதுக்கீட்டில் ரூ. 1,76,000  கோடி அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது குற்றச்சாட்டு. இவ்வளவு பெரிய இழப்பை ஏற்படுத்திய ராசாவோ, “நான் எந்தக் கையாடலும் செய்யவில்லை, சட்டபூர்வமாகத்தான் செய்துள்ளேன், பிரதமரிடம் தெரிவித்துவிட்டுத்தான் செய்தேன்” என்கிறார்.

ஆனால், 2ஜி அலைக்கற்றை விற்பனை குறித்து அரசின் தணிக்கைச் செயலாளரின் யோசனைகள், பிரதமரின் கடிதம், சட்டம் மற்றும் நிதி அமைச்சகங்களின் கருத்துக்கள், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் கருத்துக்கள் எனப் பலவற்றையும்  அமைச்சர் ராசா புறக்கணித்துள்ளார். 2001-இல் பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் தனியாருக்கு அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்ட அதே விலைக்கு எந்த மாற்றமும் இல்லாமல் 2008-இல் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றையைத் தனியாருக்குத் தாரை வார்த்துக் கொடுத்துள்ளார். வெளிப்படையான ஏல முறையைப் புறக்கணித்து முதலில் வருபவர்களுக்கு மட்டுமே உரிமம் என்ற அடிப்படையில் 122 பேருக்கு ஒரே நாளில் அதிரடியாக உரிமம் வழங்கினார்.  தொலைத் தொடர்புத் துறையில் எந்த அனுபவமும் இல்லாத பெயர் தெரியாத தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கும் வீட்டுமனை நிறுவனங்களுக்கும் ஒதுக்கீடு செய்து கொடுத்தார். அந்த நிறுவனங்கள் அடுத்த நிமிடமே அந்த ஒதுக்கீட்டை வேறு நிறுவனங்களுக்கு விற்றுக் கொள்ள தாராள அனுமதியும் அளித்தார். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ராசா இதுவரை பதிலளிக்கவில்லை. இதில் ராசாவும் ராசாவுக்குப் பின்னால் உள்ளவர்களும் ஆதாயமடைந்தது எத்தனை கோடிகள் என்பதும் இதுவரை தெரியவில்லை.

ராசாவின் ஒப்புதலுடன்தான் தொலைத்தொடர்புத் துறையில் எந்த அனுபவமும் இல்லாத ஸ்வான், யுனிடெக் முதலான வீட்டுமனை நிறுவனங்களுக்கு அலைக்கற்றைகள் ஒதுக்கப்பட்டன.  ஷாகித் பாவ்லா, வினோத் கோயங்கா ஆகியோருக்குச் சொந்தமான ஸ்வான் டெலிகாம், 1,537 கோடி கொடுத்து 13 தொலைத்தொடர்பு வட்டங்களைப் பெற்றது. மொரீஷியசைச் சேர்ந்த எடிசலாட் என்ற நிறுவனத்துக்கு ஸ்வான் டெலிகாம் நிறுவனம் தனது 44.73 சதவீதப் பங்குகளை ரூ.3,217 கோடிகளுக்கு விற்றது. இதன்படி பார்த்தால், ஸ்வான் நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட அலைக்கற்றையின் மதிப்பு ரூ.7,192 கோடிகளாகும். இப்படி யுனிடெக், எஸ் டெல், டாடா டெலிசர்வீஸ்  – எனப் பல்வேறு நிறுவனங்கள் தமது பங்குகளைப் பல்லாயிரம் கோடிகளுக்கு உடனடியாகவே விற்று ஏப்பம் விட்டன. இந்த உத்தேச மதிப்பை வைத்துத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை 1,76,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறுகிறது. ஆனால் அரசுக்குக் கிடைத்ததோ வெறும் ரூ.9,014 கோடிகள்தான்.

ஒரு முதலாளி இலஞ்சம் கொடுத்து உரிமம் அல்லது ஒப்பந்தத்தைப் பெறுவது தவறல்ல; அது அந்த முதலாளியின் தொழில் முனைப்பு; அந்த உரிமத்தை அந்த முதலாளி ஊக வணிகத்தில் விட்டு, கூடுதலாக மூலதனத்தைத் திரட்டிக் கொள்ளலாம், இலாபமடையலாம்; அது தவறில்லை என்பதுதான் தனியார்மய- தாராளமயக் கொள்கை. அதன்படியே 2ஜி அலைக்கற்றையை அடிமாட்டு விலைக்கு வாங்கி, அதை ஊக வணிகத்தின் மூலம் பல்லாயிரம் கோடிகளுக்குபப் பல முதலாளிகள் விற்றுக் கொழுத்த ஆதாயம் அடைந்திருப்பதை எப்படித் தவறானது, முறைகேடானதென்று குற்றம் சாட்டமுடியும் என்பதுதான் தனியார்மயத் தாசர்களும் கார்ப்பரேட் முதலாளிகளும் எழுப்பும் கேள்வி.

அரசுத்துறை நிறுவனங்களின் பங்குகளை, அவற்றின் உண்மை மதிப்பைவிடக் குறைந்த விலைக்குத் தனியார் முதலாளிகளுக்கு விற்றதன் மூலம் தனியார்மயம்-தாராளமயம் தொடங்கப்பட்ட 1991-92 ஆம் ஆண்டிலேயே அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ,3442 கோடிகள். 2000 ஆண்டு முதல் 2002 -க்குள் பால்கோ, இந்துஸ்தான் துத்தநாக நிறுவனம், வி.எஸ்.என்.எல், ஐ.பி.சி.எல், உள்ளிட்ட 9 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்றபோது, அந்நிறுவனங்களின் உண்மை மதிப்பை வேண்டுமென்றே குறைத்துக் காட்டி அரசுக்குப் பல்லாயிரம் கோடி இழப்பையும் முதலாளிகளுக்குக் கொழுத்த ஆதாயத்தையும் ஏற்படுத்தியதாக அரசின் கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையே குற்றம் சாட்டியது.

நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில்  தொலைத்தொடர்புத் துறையில் பன்னாட்டு நிறுவனங்களும் தரகுப் பெருமுதலாளிகளும் நுழைந்து சூறையாடுவதற்கு வசதியாக தேசியத் தொலைத்தொடர்புக் கொள்கை கொண்டுவரப்பட்டது. அப்போது நடந்த ஏலத்தில் அடுத்த பத்தாண்டுகளில்  ரூ.9,45,000 கோடி வருமானம் தரத்தக்க இச்சேவைப் பிரிவுகள் டாடா, எஸ்ஸார், ரிலையன்சு, பார்தி ஏர்டெல் நிறுவனங்களுக்கு வெறும் 1,15,000 கோடி ரூபாய்க்கு அடிமாட்டு விலைக்கு தாரை வார்க்கப்பட்டன. மக்கள் வரிப்பணத்தில் உருவான தொலைத்தொடர்புத் துறையின் வலைப்பின்னலைப் பயன்படுத்திக் கொண்டு கொழுத்த ஆதாயமடைந்த இத்தகைய நிறுவனங்கள், அரசுக்குச் செலுத்த வேண்டிய உரிமத் தொகை நிலுவையான ஏறத்தாழ 8,000 கோடிகளைக்கூடத் தள்ளுபடி செய்ய வைத்து ஏப்பம் விட்டன. பின்னர் வந்த வாஜ்பாய் அரசு தனியார்மய-தாராளமயத்தைத் தீவிரப்படுத்தி புதிய தொலைத்தொடர்புக் கொள்கையை அறிவித்தது. இக்கொள்கையால் அடுத்த பத்தாண்டுகளில் அரசுகக்கு ரூ.50,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று குற்றச்சாட்டுகளும் புகார்களும் வந்த போதிலும் அவசரஅவசரமாக இதை அறிவித்து முதலாளிகளின் கொள்ளைக்குக் காவடி தூக்கியது, பா.ஜ.க.

இப்படி காங்கிரசு மற்றும் பா.ஜ.க.வின் கூட்டணி ஆட்சிகள் தொலைத் தொடர்புத் துறை மட்டுமின்றி, காடுகள், மலைகள், கனிம வளங்கள், ஆறுகள், குளங்கள், மணல், தண்ணீர் முதலான அனைத்தையும் தரகுப் பெருமுதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அற்ப விலைக்குத் தாரைவார்த்துக் கொடுத்தன. கிருஷ்ணா-கோதாவரி இயற்கை எரிவாயுப் படுகையை அம்பானிக்குத் தாரைவார்த்துக் கொடுத்ததோடு, வரிச் சலுகைகளையும் வாரியிறைத்தது அரசு. வெளிநாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளை உள்நாட்டு அழைப்புகளாகக் காட்டி  ரிலையன்சு நடத்திய மோசடியால் அரசுக்கு ஒரு லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்ட போதிலும், ரிலையன்சுக்கு வெறும் அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டது. போஸ்கோ நிறுவனம், ஒரிசாவில் ஆலையை நிறுவுவதற்கான வெகுமதியாக, ஓராண்டுக்கு ஏறத்தாழ 96,000 கோடி மதிப்புடைய இரும்புத் தாதுவை அள்ளிச் செல்ல ஒப்பந்தம் போடப்பட்டது.

அதேபோலத்தான் விண்வெளியில் உள்ள பொதுச் சொத்தான அலைக்கற்றையும் அற்ப விலைக்கு பெருமுதலாளிகளுக்குத் தாரைவார்க்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தொலைத் தொடர்பு அமைச்சர்களாக இருந்த சுக்ராம், பிரமோத் மகஜன், தயாநிதி மாறன் ஆகியோர் பெருமுதலாளிகளின் சூறையாடலுக்குத் துணைநின்று ஆதாயமடைந்துள்ளனர். பெருமுதலாளிகளுக்கிடையிலான நாய்ச்சண்டையாலும், பங்கு போடுவதில் ஏற்பட்ட தகராறினாலும் இப்போது அமைச்சர் ராசா சிக்கிக் கொண்டு பலிகிடாவாக்கப்பட்டுவிட்டார். பல்லாயிரம் கோடிகளை ஏப்பம் விட்ட பன்னாட்டுக் கம்பெனிகளும், தரகுப் பெருமுதலாளித்து கும்பல்களும், அதிகார வர்க்கமும், காங்கிரசும், ஊடகங்களும் இப்போது விவகாரம் அம்பலமானவுடன், பந்தி பரிமாறிய ராசாவை மட்டும் பலிகொடுத்துவிட்டு, மற்றவர்களைத் தப்புவிக்க முயற்சிக்கின்றன. ஊழல் மோசடியில் சிக்கியுள்ள அமைச்சர் ராசாவைத் தண்டிப்பதென்பது மொத்த விவகாரத்தின் ஒரு பகுதிதான். ஆனால், இத்தகைய தனியார்மயச் சூறையாடல்களைக்  கொள்கையாகக் கொண்டு அரசு நடைமுறைப்படுத்தி வருவதுதான் அதைவிட முக்கியமானது.

இத்தகைய கொள்ளைகள் அம்பலமாகி, விசாரணையின் போது நீதித்துறை கேள்விகள் எழுப்புவதை வைத்து ஏதோ கிடுக்கிப்பிடி போடுவதாகவும் குற்றவாளிகள் தப்பிக்கவே முடியாது என்பது போலவும் ஊடகங்கள் சூடேற்றுகின்றன. நீதித்துறையின் மீது நாட்டு மக்களுக்கு நம்பிக்கை வரவேண்டும் என்ற நோக்கத்துடன்தான் இவை ஊதிப் பெருக்கப்படுகின்றன. ஆனால்,விசாரணயின் முடிவில் வழங்கப்படும் தீர்ப்பு வேறு விதமாகவே உள்ளது. அரசுத்துறை நிறுவனங்கள், பொதுச் சொத்துக்களை அடிமாட்டு விலைக்கு விற்று காசாக்குவது என்பதுதான் அரசின் கொள்கை. அக்கொள்கை விசயத்தில் நாங்கள் தலையிட முடியாது என்பதுதான் ஏற்கெனவே பல்வேறு வழக்குகளில் நீதித்துறை தெரிவித்துள்ள கருத்து. தண்ணீரை உறிஞ்சிக் கொள்ளையிடுவது சட்டப்படி குற்றமல்ல, ஒரு முதலாளித்துவ நிறுவனத்தின் வர்த்தகச் சுதந்திரத்தில் நீதித்துறை தலையிட முடியாது என்று கோகோ கோலாவுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது, கேரள உயர்நீதிமன்றம்.

இப்போது நாடாளுமன்றத்தில் பெருங்கூச்சல் போடும் ஓட்டுக்கட்சிகள் எவையும் அலைக்கற்றை ஊழலால் ஏற்பட்டுள்ள இழப்பு ரூ.1.76 லட்சம் கோடிகளைக் கொள்ளையடித்த பெருமுதலாளிகளிடமிருந்து அதனைப் பறிமுதல் செய் என்று கோரவில்லை. தொடரும் இத்தகைய பகற்கொள்ளைக்கும் சூறையாடலுக்கும் காரணமான தனியார்மய -தாராளமயக் கொள்கையை எதிர்க்க முன்வரவுமில்லை. மாறாக, கூட்டுச் சேர்ந்து கும்மியடிக்க நாடாளுமன்ற கூட்டு விசாரணைக் குழுவை நிறுவக் கோருகின்றன. ஆனால், 1987-இல் போபர்ஸ் ஊழல் தொடங்கி இதுவரை அமைக்கப்பட்ட நான்கு நாடாளுமன்ற கூட்டு விசாரணைக் குழுக்களின் விசாரணையில் ஒருவர்கூடக் குற்றம் சாட்டப்பட்டு தண்டிக்கப்படவில்லை.

பெருகிவரும் இத்தகைய கொள்ளைகளுக்கும் ஊழல்களுக்கும் மோசடி முறைகேடுகளுக்கும் ஊற்றுக் கண்ணாக இருப்பது, தனியார்ம-தாராளமயக் கொள்கை. அதைச் சட்டபூர்வமாக்குவதுதான் இன்றைய முதலாளித்துவ நாடாளுமன்ற அரசியலமைப்பு முறை. இத்தகைய கொள்ளைக்கும் ஊழலுக்கு உரிமம் கோருவதுதான் ஓட்டுச்சீட்டு முறை. மோசடிகளை மூடிமறைக்கவும், ஊழலில் ஊறித்திளைக்கவும்தான் இன்றைய நாடாளுமன்ற அரசியல் அமைப்பு முறையும் அதன் சட்டம், நீதி, போலீசு, புலனாவு அமைப்புகளும் துணை நிற்கின்றன. இந்நிலையில், ஓட்டுப் பொறுக்கிகளைப் புறக்கணித்துவிட்டு, தனியார்மயம்-தாராளமயம் என்னும் மறுகாலனியாதிக்கக் கொள்கையையும் அதைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தும் இன்றைய அரசியலமைப்பு முறைக்கும் எதிராகப் போராடுவது ஒன்றுதான், தொடரும் இத்தகைய தனியார் பெருமுதலாளிகளின் கொள்ளையையும் சூறையாடல்களையும் தடுப்பதற்கான ஒரேவழி.

__________________________________

– புதிய ஜனநாயகம், டிசம்பர் – 2010
__________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 

 

  1. ஸ்பெக்ட்ரம் ஊழல் : தனியார்மயக் கொள்ளையின் புதிய சாதனை ! | வினவு!…

    இலஞ்சம் கொடுத்து உரிமம் பெறலாம், அதை ஊக வணிகத்தில் விட்டு, கொழுத்த லாபமடையலாம், இவை தவறில்லை தொழில் முனைப்பு; என்பதுதான் தனியார்மய- தாராளமயக் கொள்கை….

  2. […] This post was mentioned on Twitter by வினவு and Kirubakaran S, sandanamullai. sandanamullai said: 2ஜி அலைக்கற்றை ஊழல்: தனியார்மயக் கொள்ளையின் புதிய சாதனை! – https://www.vinavu.com/2010/12/08/spectrum-scandal/ […]

  3. //ஒரு முதலாளி இலஞ்சம் கொடுத்து உரிமம் அல்லது ஒப்பந்தத்தைப் பெறுவது தவறல்ல; அது அந்த முதலாளியின் தொழில் முனைப்பு; அந்த உரிமத்தை அந்த முதலாளி ஊக வணிகத்தில் விட்டு, கூடுதலாக மூலதனத்தைத் திரட்டிக் கொள்ளலாம், இலாபமடையலாம்; அது தவறில்லை என்பதுதான் தனியார்மய- தாராளமயக் கொள்கை////

    :))))) this shows your profound ‘understanding’ of LPG. You assume this definition yourself. the very purpose of LPG is to abolish the license, permit, quota raaj under which illegal and fraudalant methods of crony capitalism thrived. And the cumulative effects and remnants of that license raaj still exists in certain pockets in India.

    try this recent report which talks about the roots of these kind of corruption :

    India state “biggest culprit” for rampant corruption: leading think tank
    http://www.thehindu.com/news/international/article937947.ece

    the relevant report from Heritage Foundation :

    Corruption In India: People Or The State?
    http://blog.heritage.org/?p=47741

    • அதியமான் அண்ணே, எப்படி இருக்கீங்க? அதியமான் என்னும் பெயரை விட இது நல்லா இருக்கு… இன்னும் நெருங்கி வந்திட்டீங்க 🙂

  4. பெருகிவரும் இத்தகைய கொள்ளைகளுக்கும் ஊழல்களுக்கும் மோசடி முறைகேடுகளுக்கும் ஊற்றுக் கண்ணாக இருப்பது, தனியார்ம-தாராளமயக் கொள்கை. அதைச் சட்டபூர்வமாக்குவதுதான் இன்றைய முதலாளித்துவ நாடாளுமன்ற அரசியலமைப்பு முறை. இத்தகைய கொள்ளைக்கும் ஊழலுக்கு உரிமம் கோருவதுதான் ஓட்டுச்சீட்டு முறை. மோசடிகளை மூடிமறைக்கவும், ஊழலில் ஊறித்திளைக்கவும்தான் இன்றைய நாடாளுமன்ற அரசியல் அமைப்பு முறையும் அதன் சட்டம், நீதி, போலீசு, புலனாவு அமைப்புகளும் துணை நிற்கின்றன. இந்நிலையில், ஓட்டுப் பொறுக்கிகளைப் புறக்கணித்துவிட்டு, தனியார்மயம்-தாராளமயம் என்னும் மறுகாலனியாதிக்கக் கொள்கையையும் அதைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தும் இன்றைய அரசியலமைப்பு முறைக்கும் எதிராகப் போராடுவது ஒன்றுதான், தொடரும் இத்தகைய தனியார் பெருமுதலாளிகளின் கொள்ளையையும் சூறையாடல்களையும் தடுப்பதற்கான ஒரேவழி.

  5. /*2001-இல் பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் தனியாருக்கு அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்ட அதே விலைக்கு எந்த மாற்றமும் இல்லாமல் 2008-இல் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றையைத் தனியாருக்குத் தாரை வார்த்துக் கொடுத்துள்ளார். */
    /*பெருமுதலாளிகளுக்கிடையிலான நாய்ச்சண்டையாலும், பங்கு போடுவதில் ஏற்பட்ட தகராறினாலும் இப்போது அமைச்சர் ராசா சிக்கிக் கொண்டு பலிகிடாவாக்கப்பட்டுவிட்டார்.*/

    உண்மையிலேயே சிந்திக்க வேண்டிய அற்புதமான கருத்துக்கள்.
    தனியார்மயத்தை கைவிட்டால் என்ன…?

  6. /*2001-இல் பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் தனியாருக்கு அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்ட அதே விலைக்கு எந்த மாற்றமும் இல்லாமல் 2008-இல் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றையைத் தனியாருக்குத் தாரை வார்த்துக் கொடுத்துள்ளார். */
    /*பெருமுதலாளிகளுக்கிடையிலான நாய்ச்சண்டையாலும், பங்கு போடுவதில் ஏற்பட்ட தகராறினாலும் இப்போது அமைச்சர் ராசா சிக்கிக் கொண்டு பலிகிடாவாக்கப்பட்டுவிட்டார்.*/

    உண்மையிலேயே சிந்திக்க வேண்டிய அற்புதமான கருத்துக்கள்.
    தனியார்மயத்தை கைவிட்டால் என்ன…?

    • நண்பர் இசக்கிமுத்து,
      அடக்குமுறையாளர்கள் தமது கொள்கையை கைவிட்டதாக இது வரை வரலாறு இல்லை. அப்படியிருக்கும்போது அரசு தனது கொள்கையான தனியார்மயத்தை கைவிடும் என்று எதிர்பார்க்க முடியுமா? மக்களைத் திரட்டி முறியடிப்பது ஒன்றுதான் தீர்வு.

  7. http://www.bbc.co.uk/news/world-11954667

    According to this link, the countries where Globalization and Capitalism are practiced are having the least corruption. Countries where quazi-capitalism, islamic rule, communism, socialism etc are practiced remain in the top of corruption list. From this, it is clear that Capitalism, when practiced correctly is the solution to overcome corruption.

    • Hellooo Crazy Commies people …..watch this ..all Communist country are very high in Corruption ….

      After Singapore, Malaysia , Korea, Japan….india is still better than many other Asian countries…. India and china almost near………..

      Atleast in india due to free press everything coming out …..but in your commie countries everthing is hidden and people are like slaves …….. you dont have right to talk about commie policy which is a crap and proven every where…..

      see this link for Corruption Index 2010 and shut your mouth please !!

      http://www.transparency.org/policy_research/surveys_indices/cpi/2010/results

  8. எனது சந்தேகத்தை யாராவது தீர்த்து வைப்பீர்களா?

    2001-2008 காலக்கட்டத்தில் தொலைத் தொடர்பு துறையில் மட்டும் இவ்வளவு ஊழல் நடைபெற்றது என சென்டல் ஆடிட் ஜெனரல் அறிக்கை கூறுகிறது. அதாவது ஒட்டு மொத்தமாக கூறியுள்ளதா? அல்லது இந்த இந்த ஆண்டுகளில் இவ்வளவு இழப்பு என்று பிரித்துக் கூறியுள்ளதா?

    தொலைத் தொடர்புத் துறை தவிர்த்த (நிதி, விமானப் போக்குவரத்து, ரயில்வே போன்ற) பிற துறைகளில் இதுபோன்ற ஆடிட் நடைபெற்றதா? இல்லையா? அவ்வாறு நடைபெற்றிருந்தால் அங்கெல்லாம் ஊழல் நடைபெறவில்லையா? பிற அமைச்சகத்தின் அமைச்சர்கள் அனைவரும் உத்தமர்கள் என கூறியுள்ளாரா?

    கலைஞர் கூறியதைப்போல ராஜா தலித் என்பதால் தான் அவர் மீது மட்டுமே பலி போடப்படுகிறது என்பது உண்மையோ என எண்ணத் தோன்றுகிறதே?

    • நண்பர் இசக்கிமுத்து,
      ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு அ.ராசாவை மட்டும் பொறுப்பேற்க வைப்பதில் அநேகமாக அனைத்து ஊடகங்களும் ஓரணியில் நின்று எதை மூடி மறைக்க நினைத்தார்களோ, அதையேதான் கலைஞரும் வேறு வார்த்தைகளில் சொல்லி ஊழலின் ஊற்றுக்கண்னண் மூடி மறைக்க துனைபோகிறார்.. ராசாவை தலித் என்று அடையாளப்படுத்தி திசை திருப்புவதன் மூலம் ஊழ்லுக்கு பின்னுள்ள் மிகப் பெரிய வலை பின்னல் மோசடியை மூடி மறைக்க துணை போகிறார் என்பதை மறந்து விடக்கூடாது. ஆனால் இங்குதான் இவரின் அரசியல் சாணக்கியத்தனமே அடங்கியுள்ளது என்பது வேறு விசயம். ஆகவே கலைஞரின் கூற்றுக்குள் நின்று கொண்டு ராசாவை தேடுவதை விட ஊழலுக்கான தோற்றுவாயை வெளியில் தேடுங்கள். ஊழலை உற்பத்தி செய்வது, இந்திய அரசியல் அமைப்பு முறையே என்பது விளங்கும்.

  9. இன்று நான் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் “காங்கிரஸ், தி.மு.க., பி.ஜே.பி. கட்சிகளின் உழலை எதிர்த்து பிரச்சார இயக்கம்” என்று தலைப்பிட்ட துண்டு பிரசுரங்களை சி.பி.எம். கட்சியினர் விநியோகித்தனர். ஊழலின் ஊற்றுக்கண்ணான தனியார்மயம்- தாராளமயம்- உலகமயம் என்ற அரசின் கொள்கையை சட்டப்பூர்வமாக நடைமுறைப் படுத்த அங்கீகாரம் கோரும் இந்திய போலி ஜனநாயக தேர்தல் முறையில் சி.பி.எம். கட்சி பங்கெடுத்துக்கொண்டே ஊழலை மட்டும் எதிர்ப்பதாகச் சொல்வது யாரை ஏமாற்ற?

  10. ஸ்பெக்ட்ரம் ஊழல் : தனியார்மயக் கொள்ளையின் புதிய சாதனை !…

    இலஞ்சம் கொடுத்து உரிமம் பெறலாம், அதை ஊக வணிகத்தில் விட்டு, கொழுத்த லாபமடையலாம், இவை தவறில்லை தொழில் முனைப்பு; என்பதுதான் தனியார்மய- தாராளமயக் கொள்கை. விண்வெளியில் உள்ள பொதுச் சொத்தான அலைக்கற்றையும் அற்ப விலைக்கு பெருமுதலாளிகளுக்குத் தாரைவார்க்கப்பட்டுள…

  11. ஸ்பெக்ட்ரம் ஊழல் : தனியார்மயக் கொள்ளையின் புதிய சாதனை ! | வினவு!…

    இலஞ்சம் கொடுத்து உரிமம் பெறலாம், அதை ஊக வணிகத்தில் விட்டு, கொழுத்த லாபமடையலாம், இவை தவறில்லை தொழில் முனைப்பு; என்பதுதான் தனியார்மய- தாராளமயக் கொள்கை….

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க