privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்கூட்டணி ப்ளாக்மெயிலுக்கு பயன்படும் ஸ்பெக்ட்ரம் ஊழல்!!

கூட்டணி ப்ளாக்மெயிலுக்கு பயன்படும் ஸ்பெக்ட்ரம் ஊழல்!!

-

ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஊடகங்களால் அதிகம் வில்லனாக்கப்பட்டவர் முன்னாள் மத்திய அமைச்சர் ராசாதான். இந்தியாவில் அறியப்பட்ட எல்லா ஊழல்களிலும் அரசியல்வாதிகள், ஓரளவுக்கு அதிகாரிகள் மட்டுமே தொடர்புடையவர்களாக காட்டப்பட்டிருக்கின்றனர். இதில் மறைக்கப்படும் விசயம் என்னவென்றால் இந்த ஊழல்களுக்கு அச்சாரமான முதலாளிகளின் தொடர்புகள் மட்டும் எப்போதும் தெரிவதில்லை.

ஸ்பெக்ட்ரம் ஊழல், ராடியா டேப் போன்றவற்றின் மூலம் சில முதலாளிகளது பெயர்கள் கசிந்திருக்கின்றன. ஆனால் என்ன பயன்? நேற்று புதிய தொலைத்தொடர்பு அமைச்சர் கபில் சிபில் தொலைத்தொடர்பு சேவை முதலாளிகளான ரத்தன் டாடா, அனில் அம்பானி, சுனில் மிட்டல் ஆகியோரை சந்தித்து பேசியிருக்கிறார். என்ன பேசியிருப்பார்? கவலைப்படாமல் தொழிலைத் தொடருமாறும், செய்திகளில் அவர்களது பெயர்கள் அடிபட்டாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவேண்டாமென்றும்தான் பேசியிருப்பார். இதை நாம் ஊகமாகச் சொல்லவில்லை, ஊடகங்களும் அப்படித்தான் செய்தி வெளியிடுகின்றன.

ரத்தன் டாடாவின் தொழில் விருப்பங்களுக்கேற்ப ராசாவை அமைச்சாராக்க நீரா ராடியா லாபி வேலை செய்தது ஆதாரப்பூர்வமாகவே நிரூபிக்கப்பட்டிருக்கும் நிலையில் புதிய அமைச்சர் அதே டாடாவை சந்தித்து ” மாப்புள, நீ ஒன்னியும் கவலப்படாத, எதையும் கண்டுக்காம தொழிலப் பாரு”ன்னு பேசினால் அதன் மறைபொருள் என்ன? ஊழல் செய்த முதலாளிகளின் தகிடுதத்தங்கள் மறைக்கப்பட்டு எல்லாவற்றையும் ராசா தலையில் கட்டுவதுதான் நோக்கம்.

ஊடகங்கள், அரசியல் கட்சிகள், புரோக்கர்கள் எல்லாரும் இந்த வேலையைத்தான் செய்து வருகின்றனர். அமெரிக்க மாமா சுப்ரமணிய சாமி நேற்று நெல்லையில் அ.தி.மு.க பினாமி கூட்டம் ஒன்றில் பேசும்போதும் இதையே கூறியிருக்கிறார். அதாவது பிரதமர் மன்மோகன் சிங் நல்லவராம், அவருக்கு ஊழலில் தொடர்பே இல்லையாம், எல்லாம் ராசாதான் செய்திருக்கிறாராம். இப்படி கல்லூளி மங்கனைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் என்ன?

சு.சாமி கூட ஒரு அரசியல் புரோக்கர்தான். அமெரிக்காவிற்கும், காங் எதிர்ப்பு, பா.ஜ.க ஆதரவு முதலாளிகளுக்கும் தரகு வேலை பார்க்கும் இந்த மாமா ஸ்பெக்ட்ரம் ஊழலில் பெரிய புடுங்கி போல பேசுவதற்கு காரணம் என்ன? வரும் சட்டமன்றத் தேர்தலலில் தி.மு.க – காங் கூட்டணியை கலைப்பதன் மூலம் அ.தி.மு.கவிற்கும், மறைமுகமாக பா.ஜ.கவிற்கும் உதவுவதுதான் நோக்கம். அதனால்தான் இவர் ராசாவை மட்டும் குறிவைத்து தாக்குவதோடு ஒவ்வொரு முறையும் கல்லுளி மங்கன் மன்மோகன் சிங்கிற்கும் வக்காலத்து வாங்குகிறார்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் பா.ஜ.க ஆட்சிக்காலத்திலேயே தொடங்கிவிட்டது குறித்தெல்லாம் மாமா சு.சாமிக்கு கவலை இல்லை. அவரது ஒரே அஜண்டா தி.மு.க எதிர்ப்புதான். அதுவும் கூட அவரது பார்ப்பனிய சிந்தனையில் ஆழப்பதிந்துவிட்ட விசயம்தான். ஆக ஒரு அரசு, அரசியல் அமைப்பு சம்பந்தப்பட்டிருக்கும் ஊழலை ஒரு தனி மனித, கட்சி விவகாரமாக மாற்றுவதையே சு.சாமி குறிக்கோளாக கொண்டிருக்கிறார்.

ஸ்பெக்ட்ரல் ஊழல் வெடித்துக் கிளம்பியதற்கு தான்தான் காரணமென்று பிதற்றித் திரியும் ஜெயலலிதாவின் கணக்கும் அதேதான். வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவின் பணபலத்தையும், அழகிரி ஃபார்முலா தேர்தல் முறையையும் (உண்மையில் இந்த தேர்தல் ஃபார்முலாவைக் கண்டுபிடித்தவர் ஜெயலலிதாதான்) எதிர் கொள்ள முடியாபடி, சொந்தக் கட்சி கரைந்து கழுதையாகிவிட்ட நிலையில் ஜெயலலிதாவுக்கு கிடைத்த வரப்பிரசாதம்தான் ஸ்பெக்ட்ரம் ஊழல்.

முழுத் தமிழகத்தையும் கொள்ளையடித்து மொட்டை போட்ட இந்த ஊழல் நாயகி இப்போது ஊழல் எதிர்ப்பு வீராங்கனையாக பேசுவதை என்னவென்று சொல்ல? ராசாவை நீக்கினால் காங்.கிற்கு அ.தி.மு.க ஆதரவளிக்கும் என்று தொடங்கியவர் இன்னும் நிறுத்தவில்லை. போதாக்குறைக்கு ஊடகங்களும் இந்த கூட்டணி மாற்றத்தை ஏற்றிவிடுகின்றன. அந்த வகையில் தமிழக ஊடகங்களில் ஸ்பெக்ட்ரம் ஊழல் என்பது கூட்டணி மாற்றம் குறித்த பரபரப்பு செய்தியாக மாற்றப்பட்டுவிட்டன.

நேற்று கோபியில் பேட்டியளித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் “அ.தி.முகவுடன் கூட்டணி ஏற்படலாம், தி.மு.க வுடன் கூட்டணி முறியலாம்” என்றே கருத்து தெரிவித்திருக்கிறார். ஆரம்பத்தில் ராசா குற்றமற்றவர் என்று நல்லபிள்ளை போல பேசிய இளங்கோவின் பிறகு சூழ்நிலை மாறியதும் தனது பழைய அஜெண்டாவை கையிலெடுத்துக் கொண்டார். சோனியா பெயரைக் கேட்டாலே சிறுநீர் கழிக்கும் இந்த ஈரோட்டு அடிமை ஏதோ தன்மானமுள்ள வீரன் போல சித்தரித்துக் கொள்ளும் கொடுமையை என்னவென்று சொல்ல?

தமிழகத்திற்கு இருநாள் சுற்றுப்பிராயாணமாக வரும் ராகுல் காந்தி, காசுக்கு அழைத்து வரப்படும் 63,000 செட்டப் இளைஞர் காங். நிர்வாகிகளை சந்திக்கிறாராம். ஆனால் கருணாநிதியை சந்திக்கவில்லையாம். இதனால் கூட்டணி முறிந்து விடும் என்று ஊடகங்கள் வதந்திகளைக் கிளப்புகின்றன. ராகுல் காந்தி வரும் நேரம் பார்த்து அவரது அடிமை இளங்கோவனும் அதே போல பேச போயஸ் தோட்டத்தில் உற்சாகம் பொங்கி வழிகிறது.

பா.ஜ.க காலத்திலிருந்து நிறுவன ஊழலாக நிலைபெற்றிருக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழலில் காங்கிரசு கட்சிக்கு மிகப்பெரிய பங்குண்டு. 2008 இல் ராசா ஒதுக்கியது குறித்து 2010இல் அதுவும் எதிர்க்கட்சிகள் பேச ஆரம்பித்த பிறகே காங்கிரசும் ஏதோ நடவடிக்கை எடுப்பது போல பாவ்லா காட்டுகிறது. அந்தப் படிக்கு இந்த ஊழலை காங்கிரசு சந்தர்ப்பவாதமாக கையாள்கிறது. விசாரணை, சி.பி.ஜ ரெய்டு, என்றெல்லாம் சீன் போடுபவர்கள் ஏன் அதை இரு வருடங்களுக்கு முன்னரே செய்யவில்லை?

காங்கிரசின் நோக்கம் முதலாளிகளுக்கு உதவுதுதான். அதை செய்துவிட்டார்கள். தற்போது ஊழல் என்று பேசப்படும் நிலையில் அதை வைத்து தமிழக கூட்டணியில் தமது பங்கை அதிகப்படுத்தும் வேலையைச் செய்கிறார்கள். அதனால்தான் ராசாவை மட்டும் இந்த ஊழலில் தனிமைப்படுத்திவிட்டு பழம்பெரும் காங்கிரசு பெருச்சாளிகள் ரொம்ப நல்லவர்கள் போல நடிக்கிறார்கள். ஸ்பெக்ட்ரம் ஊழலை வைத்து தி.மு.கவிடம் அதிக தொகுதிகளை வரும் தேர்தலில் கேட்கலாம். அதை தி.மு.கவும் தவிர்க்க முடியாது. இரண்டாவது சந்தர்ப்ப சூழலைப் பொறுத்து தி.மு.க கூட்டணியை வெட்டியும் விடலாம். அதனால் ஜெயா நிச்சயம் அதிக தொகுதிகளை தருவது உறுதி. மேலும் ஸ்பெக்ட்ரம் ஊழலை தி.மு.க ஊழலாக அல்லது ராசா ஊழலாக மாற்றி தேர்தலில் ஆதாயமும் அடையலாம்.

ஆக ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பொறுத்தவரை காங்கிரசு ஒரே கல்லில் இரு மாங்காய்களை அடித்திருக்கிறது. முதலாளிகளுக்கு மலிவான விலையில் அலைக்கற்றையை ஒதுக்கியது, அப்படி ஒதுக்கியதில் ஊழல் என்ற பெயரில் தமிழக கூட்டணி பலத்தில் தனது பங்கை அதிகப்படுத்தியது; அதன்படி தமிழகத்தில் சுவரொட்டி ஒட்டுவதற்கு கூட தொண்டர்கள் இல்லாத மிட்டா மிராசுதாரர்களைக் கொண்ட கட்சி, தலைவர்களும், கோஷ்டிகளும், வேட்டிக் கிழிப்புகளுமே கொண்ட கட்சி இப்போது ஜாமென்று பல்லக்கில் பவனி வருகிறது. இதற்காகத்தான் இவர்கள் காத்திருந்தார்கள் போலும்.

ஸ்பெக்டரம் ஊழலுக்காக நாடு முழுவதும் எதிர்ப்பு இயக்கம் எடுக்கப் போவதாக சி.பி.எம் அறிவித்திருக்கிறது. இணையத்திலும் நமது மாற்று தோழர்கள் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து தினம் இரண்டு பதிவுகள் போட்டுத் தாக்குகிறார்கள். தோழர்களது கணக்கு இதை வைத்து தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசு, தி.மு.க இல்லாத அ.தி.மு.க அணியை பலப்படுத்துவது. ஆனால் அம்மா அங்கே தோட்டத்தில் காங்கிரசு பெருச்சாளிகளுக்குக்காக பொக்கேயை வைத்துக் கொண்டு காத்துக்கிடக்கிறாரே? பார்ப்பனிய ஊடகங்களும் அதையே இலக்கு வைத்து பிரச்சாரம் செய்கின்றன. இந்நிலையில் தோழர்கள் என்ன செய்வார்கள்? காங், அ.தி.மு.க கூட்டணி அமையக்கூடாது என்று ஆண்டவனிடம் வேண்டுவதைத் தவிர அவர்களுக்கு கதிமோட்சம் ஏதுமில்லை.

மேலும் ஊழல் நாயகி ஜெயலலிதா தலைமையில் ஸ்பெக்ட்ரம் ஊழலை எதிர்க்க முடியுமா என்ற கூச்சம் கூட சி.பி.எம்மிடம் இல்லை. அந்த அளவுக்கு அம்மா விசுவாசம் கொடிகட்டிப்பறக்கிறது. சுயமரியாதையும், தனது கொள்கையை வைத்து மக்களைத் திரட்ட முடியுமென்ற நம்பிக்கையும் இல்லாத இந்த செங்கொடிக் கோமாளிகளின் அரசியல் எதிர்காலம் அதாவது தமிழகத்தில் கிடைக்கும் நாலைந்து சீட்டுக்கள் போயஸ் தோட்டத்து புரட்சித் தலைவியிடம்தான் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

ஒருவேளை காங், அ.தி.மு.க கூட்டணி ஏற்பட்டால் சி.பி.எம் தோழர்கள் வேறுவழியின்றி தி.மு.க கூட்டணிக்கும் செல்வதற்கு தயங்க மாட்டார்கள். என்ன, “ஸ்பெக்ட்ரம் ஊழல் ராசா மட்டும் செய்தது, அதற்கும் தி.மு.கவிற்கும் தொடர்பில்லை” என்று ஒரு விளக்கம் கொடுத்தால் போயிற்று. அந்த வகையில் சாயம் போன இந்த செங்கொடியின் எதிர்காலம் கோபாலபுரத்திலும் சிக்குண்டிருக்கிறது என்று சொல்லலாம்.

எனினும் நிறுவன மயமான ஸ்பெக்ட்ரம் ஊழலில் தி.மு.க மட்டும்தான் சம்பந்தப்பட்டிருக்கிறது என்று காங்கிரசு அத்தனை சுலபத்தில் கழட்டி விட முடியாது. அதனால்தான் தற்போது விசாரணைகள், ரெய்டுகள் எல்லாம் ராசா, சில அதிகாரிகள் என்று தனிநபர்களை மையமாக வைத்து செய்யப்படுகின்றன. அதன்படி இதில் ராசாவை மட்டும் பலிகொடுத்து தி.மு.க, காங்கிரசு கூட்டணி நீடிக்கவும் வாய்ப்பிருக்கின்றன. இதில் காங்கிரசு மேல் நிலையிலிருக்கும் என்பதைத் தவிர வேறு ஒன்றும் புதிதல்ல.

இந்த உள்குத்து நிர்ப்பந்தத்தை தி.மு.க பெருச்சாளிகள் அறியாமலில்லை. அதனால்தான் மாறன் சகோதரர்கள், ஸ்டாலின், அழகிரி கோஷ்டிகள் எல்லாம் ஒன்றிணைந்து சி.ஜ.டி காலனி கோஷ்டியை தனிமைப்படுத்தும் வேலையைச் செய்கின்றன. இதற்காக மாறன்கள் தற்காலிகமாக அழகிரி கும்பலுடன் சமாதானமாக இணைந்திருக்கிறார்கள். தற்போது ராஜாத்தி அம்மாள் கோஷ்டியின் எதிர்காலம் கருணாநிதியின் தர்மசங்கடம் என்ற வகையில்தான் ஊசாலாடுகின்றதே அன்றி வேறுவகையில் அல்ல.

தமிழக ஊடகங்கள் அனைத்தும் இதையே பரபரப்புச் செய்தியாக்கி விற்று வருகின்றன. கருணாநிதியைப் பொறுத்தவரை அவரைப் பாராட்டி ஏதாவது ஒரு விழா எடுத்து நேரு உள்விளையாட்டு அரங்கில் ஒரு குத்தாட்ட நிகழ்ச்சி நடத்திவிட்டால் போதுமானது. அத்தகைய காக்காய் முதுகு சொறிதலைத் தவிர அவருக்கு வேறு நோக்கங்கள் இல்லை. எனவே ராசாவை மட்டும் பலிகொடுத்து விட்டு தி.மு.க பழையபடியே ஒன்றுமில்லாதது போல இயங்குவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

ஆக கூட்டி கழித்துப் பார்த்தால் ஸ்பெக்ட்ரம் ஊழல் இத்தகைய கூட்டணி பேரங்களுக்கான கச்சாப்பொருளாக மாற்றப்பட்டுவிட்டது. ஒன்னே முக்கால் இலட்சம் கோடி ரூபாய் ஊழல் என்பது ஏதோ வானத்திலிருந்தோ இல்லை நாசிக்கில் அச்சடிக்கப்பட்டு வரும் பணம் என்பதாகத்தான் மக்கள் புரிந்திருக்கின்றனர். இல்லை அது அவர்களிடமிருந்துதான் பறிக்கப்பட்டிருக்கிறது என்பது இங்கே சுத்தமாக மறைக்கப்பட்டிருக்கிறது.

இனி இந்த விவகாரங்கள் ஓய்ந்து கூட்டணி பேரங்கள் பேசி முடிக்கப்பட்டு அமல்படுத்தும் வேளையில் டெல்லியில் ஏதாவது ஒரு பண்ணை வீட்டில் விருந்து நடக்கும். எல்லா முதலாளிகளும், அரசியல் பெருந்தலைகளும் அங்கே வருவார்கள். “சியர்ஸ்” சொல்லிக் கொண்டு சீமைச்சாராயத்தை உள்ளே தள்ளும் வேளையில் நாட்டுமக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஊழல் அங்கே கேலிக்குரிய இறந்த காலமாகிவிடும். தேசத்தின் அடுத்த வளத்தை எப்படி சுருட்டலாம் என்று அங்கே விவாதம் சூடுபிடிக்கும். நமட்டுச் சிரிப்புடன் முதலாளிகள் தத்தமது மாளிகைக்குத் திரும்புவார்கள்.

இதை ஏற்கப் போகிறோமா, இல்லை இந்த ஊழலின் உறைவிடமாய் நாறும் இந்த சமூக அமைப்பை தகர்க்கப் போகிறோமா?

__________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: