முகப்புசமூகம்நூல் அறிமுகம்கீழைக்காற்று வெளியீட்டு விழா! அறிவுப்பசிக்கு விருந்து !!

கீழைக்காற்று வெளியீட்டு விழா! அறிவுப்பசிக்கு விருந்து !!

-

ஓவியர் மருது நூல் வெளியிட கவிஞர் தமிழேந்தி பெற்றுக்கொள்கிறார்
ஓவியர் மருது நூல் வெளியிட கவிஞர் தமிழேந்தி பெற்றுக்கொள்கிறார்

வெஜிட்டபிள் கட்லெட், மசால் தோசை, மசாலா இல்லாத தோசை, இஞ்சி டீ, சாதா டீ, சமோசா இதெல்லாம் புத்தக வெளியீட்டுக்கு முன்பு, முடிந்த பின் காக்டெயில், அப்சல்யூட் ஓட்கா, ரெமி மார்ட்டின். இந்தக் காட்சிகள் எல்லாம் சமீபத்தில் சென்னையில் நடக்கும் சில நூல் வெளியீட்டு விழாக் காட்சிகள். நுகரும் மூக்கின் வாசனை உணர்வுக்கும், நாக்கின் ருசிக்கும் எச்சிலை ஊற வைத்து கூவிக் கூவி அழைக்கிறார்கள், அந்த நூல் அறிமுக கூட்டங்களுக்கு. அப்படியும் அங்கே அரங்கு நிறைய சிரமப்படுகிறது.

மருத்துவர்-ருத்ரன்-நூல்-வெளியிட-பதிவர்-சந்தனமுல்லை-பெற்றுக்கொள்கிறார்
மருத்துவர் ருத்ரன் நூல் வெளியிட பதிவர் சந்தனமுல்லை பெற்றுக்கொள்கிறார்

கட் அவுட் இல்லை, கட்லெட் இல்லை, சமோசா இல்லை முக்கியமாக சொறிந்து விட அல்லக்கைகள் இல்லை, ஆனால் அந்த திறந்த வெளி அரங்கில் நூற்றுக் கணக்கில் போடப்பட்டிருந்த அத்தனை இருக்கைகளும் நிரம்பி பரந்த அந்த மைதானத்தில் நின்ற படியே கடைசி வரை கலையாமல் நின்றார்கள் மக்கள். 26-12-2010  அன்று ஞாயிற்றுக் கிழமை கீழைக்காற்று பதிப்பகத்தின் எட்டு நூல்கள் வெளியீட்டு விழாவில்தான் இந்த காட்சிகள்.  கூட்டம் துவங்குவதற்கு முன்னரே வந்திருந்த பார்வையாளர்கள் தள்ளுபடி விலையில் நூல்களை வாங்கிக் கொண்டனர்.

புரட்சிகர-மாணவர்-இளைஞர்-முண்ணனி-தோழர்களின்-பாடல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முண்ணனி தோழர்களின் பாடல்

முன்னர் எல்லாம் தோழர்களின் கூட்டம் என்றால் ஒரு சில உளவுத்துறையினரே வருவார்கள். சமீபகாலமாக பல பத்து பேர் வந்து சத்தமில்லாமல் வந்து அமர்ந்து குறிப்பெடுக்கிறார்கள். தோழர்கள் என்ன பேசுகிறார்கள் என்று பதிவு செய்கிறார்கள். நூல் வெளியீட்டுக் கூட்டத்தில் கூட புரட்சிகர கருத்துகள் வெளியிடப்படும் ‘அபாயம்’ குறித்து அரசுக்குத்தான் எத்தனை கவலை!

கீழைக்காற்று-வெளீயீட்டு-விழா- உரையாற்றிய மருத்துவர் ருத்ரன்
மருத்துவர் ருத்ரன்

ஓவியர் மருது, மருத்துவர் ருத்ரன், கவிஞர் தமிழேந்தி, பதிவர் சந்தனமுல்லை,தோழர் மருதையன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அனைவரையும் வரவேற்றுப் பேசிய கீழைக்காற்று பதிப்பக பொறுப்பாளர் தோழர் துரை. சண்முகம் பேசும் போது, தமிழகத்தில் படைப்புலகத்தை  நாசமாக்கி வருமானம் ஈட்டும் தொழிலாகப் பார்க்கும் பதிப்பக அரசியலை அம்பலப்படுத்திப் பேசினார். அரசு படிப்பகங்களுக்கு வாங்கும் நூல்களுக்காக பதிப்பகங்கள் எப்படி ஆளும் வர்க்கங்களுக்கு கால் கழுவி வாழ்கிறார்கள் என்பதைப் பேசிய துரை. சண்முகம் புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்று அரங்கிற்கு வாசகர்களிடம் கிடைத்திருக்கும் பெரும் வரவேற்பை குறிப்பிட்டார்.

துரை-சண்முகம்
உரையாற்றிய துரை சண்முகம் – கீழைக்காற்று

“எங்கள் கடையில் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய்க்குக் கூட நூல்களை விற்பனை செய்கிறோம். அப்படி வாங்குகிறவர்களை மரியாதையாகவும் கௌரவத்தோடும் நடத்துகிறோம். ஏனென்றால் அவர்கள் வாடிக்கையாளர்கள் என்பதால் அல்ல, நாங்கள் ஒரு உயரிய அரசியல் நோக்கத்திற்காக இதை நடத்துகிறோம் என்பதால். நாங்கள் வெளியிடும் புரட்சிகரத் தலைவர்களின் நூல்களைப் பார்த்து விட்டு இப்போது சிலர் லெனின், மாவோ நூல்களை வெளியிடத் துவங்கியுள்ளார்கள். முன்னர் தோழர் ஸ்டாலினை  பாசிஸ்ட் என்று சொன்னவர்கள் இவர்கள். நாளை எங்களைப் பார்த்து இந்தப் பதிப்பகங்கள் ஸ்டாலின் நூலைப் போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை”” என்று விற்பனை வெறியும், லாப வெறியும் கொண்டு இயங்கும் பதிப்பகங்களை விமர்சனம் செய்து பேசினார்  தோழர் துரை. சண்முகம்.

உரையாற்றிய கவிஞர்-தமிழேந்தி
கவிஞர் தமிழேந்தி

அடுத்துப் பேசிய கவிஞர் தமிழேந்தி கீழைக்காற்று நூலகத்தின் தேவை குறித்தும் அது புரட்சிகர இடதுசாரித் தோழர்களுக்கு மட்டுமல்லாது ஜனநாயகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரின் அறிவுத் தேடலுக்கான களமாக இருக்கிறது என்று குறிப்பிட்டார். வாழ்த்திப் பேசிய மருத்துவர் ருதரன் தனக்கும் தோழர்களுக்குமான நெருக்கம் குறித்து நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார். “தன் மீது சொல்லப்படும் விமரிசனங்கள் குறித்து கவலைப்படவில்லை. எங்கும் எப்போதும் என்னை நான் மறைத்துக் கொண்டதுமில்லை” என்று பேசினார்.

கீழைக்காற்று-வெளீயீட்டு-விழா-உரையாற்றிய-ஓவியர்-மருது
ஓவியர் மருது

தனது ஓவியங்கள் குறித்துப் பேசிய ஓவியர் மருது “எனது ஓவியங்கள் எப்படியான வடிவில் மக்களைச் சென்றடைய வேண்டும் என்று விரும்பினேனோ அப்படி அதை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தவர்கள் தோழர்கள். அந்த வகையில் எனக்கு இது மிகப்பெரிய மகிழ்ச்சியளிக்கிறது”” என்று பேசினார். பதிவரும் தோழருமான சந்தனமுல்லை ஒரு பெண்ணாக பதிவுலகிலும், சமூகத்திலும் எதிர்கொள்ளும் ஆணாதிக்கத்தை நடமுறை வாழ்வியல் அனுபவத்திலிருந்து பேசினார். மிக இயல்பாகவும் எளிமையாகவும் இருந்த சந்தனமுல்லையின் உரையை முழுமையாக வினவும் விரைவில் வெளியிட இருக்கிறது.

கீழைக்காற்று-வெளீயீட்டு-விழா-உரையாற்றிய-பதிவர்-சந்தனமுல்லை
பதிவர் சந்தனமுல்லை

இறுதியில் ””படித்து முடித்த பின்”” என்னும் தலைப்பில் மிகச் சிறந்த ஒன்றரை மணி நேர உரையை  நிகழ்த்தினார் தோழர் மருதையன். “அறிவுத்தேடல், ஏகாதிபத்திய அறிவுஜீவிகளை எப்படி எதிர்கொள்வது? வாசிப்பனுபவம், மூளையை ஊனமாக்கும் நவீன ஊடகச் செயல்பாடுகளை எப்படி எதிர்கொள்வது? எதை வாசிப்பது, எப்படி வாசிப்பது? எதிரிகளின் பிரச்சாரங்களை எப்படி எதிர்கொள்வது” என்று இன்றைய மறுகாலனியாக்க உலகில் நாம் எதிர்கொள்ளும் எல்லா சம காலப் பிரச்சனைகளையும் மிக அற்புதமாக படம் பிடித்துக் காட்டினார். விரைவில் தோழர் மருதையனின் முழு உரையும் வினவில் வெளிவரும்.

கீழைக்காற்று-வெளீயீட்டு-விழா-உரையாற்றிய-தோழர்-மருதையன்
தோழர் மருதையன்

மூன்று மணி நேரத்திற்கு மேலாக நடந்த கூட்டத்தில். கட்டுக்கோப்பாக இருந்து கடைசி வரை அமர்ந்திருந்து தோழர்களை உற்சாக மூட்டினார்கள் மக்கள்.  பசிதாங்க முடியாத நடுத்ததர வர்க்கத்தின் அறிவுப் பசிக்கும், நாக்கு ருசிக்கும், பந்தி வைத்து பரிமாறும் இலக்கிய மொக்கைகளின் கூட்டங்களுக்கு மத்தியில் மக்கள் விடுதலையை  நெஞ்சிலேந்தி அறிவை விசாலாமாக்கி அனைவருக்கும் உண்மையான விருந்தளித்த கூட்டம் இதுதான்.

கீழைக்காற்று-வெளீயீட்டு-விழா- மக்கள்-திரள்
மேடையில்

நிகழ்ச்சிக்கு பல பதிவர்களும், வாசகர்களும் வந்திருந்தார்கள். விழாவில் எட்டு நூல்களும் செட்டாக நூற்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் விற்பனை ஆனது. அனைவருக்கும் கீழைக்காற்று, வினவு சார்பாக நன்றிகள்.கீழைக்காற்று-வெளீயீட்டு-விழா-மக்கள்-திரள்

____________________

– வினவு செய்தியாளர்
____________________

 1. விழாவிற்கு வந்திருந்தேன்.
  பலருடைய உரையைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.
  முக்கியமாக ஓவியர் மருது மற்றும் திரு.மருதையன் பேச்சு மிக்க பயனுள்ளதாக அமைந்திருந்தது.
  சென்னையில் ம.க.இ.க. சம்பந்தப்பட்ட விழா அனுபவம் எனக்குப் புதியது.
  வாழ்த்துக்கள் மேன் மேலும் வளர..!

  • வினவின் மதிப்பிற்குரிய பார்வையாளர்களுக்கு
   கீழைக்காற்றின் மட்டற்ற மகிழ்ச்சியும்.. நன்றிகளும்

   கீழைக்காற்றின் நூல் வெளியீட்டு விழா நிச்சயம் ஒரு பயனுள்ள நிகழ்ச்சியாக தங்களுக்கு அமைந்திருக்கும் என்று நம்புகிறோம். மேலும் எங்கள் அழைப்பினை ஏற்று அன்றைய விழாவிற்கு வந்து ஒத்துழைப்பு நல்கிய உங்கள் அத்தனை பேருக்கும் தொடரும் நன்றிகள்..

   புத்தகங்களை வெளியிடுவது என்பதுடன் புதிய வாசகத்தளத்தை உருவாக்குவது என்ற எங்களின் இலட்சியத்தில் என்றென்றும் உங்களின் பங்கேற்பு தேவை. அந்த வகையில் அமைக்கப்பட்ட அன்றைய நிகழ்ச்சியில் தங்களின் வருகை எங்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டியது. விழா தொடர்பான தங்களுடைய பின்னூட்டங்களையும் கவனத்தில் கொண்டு தோழர் மருதையன் அவர்களின் உரை மற்றும் நிகழ்ச்சியின் மொத்தத் தொகுப்பும் ஒலிவட்டாக வெளிவரவுள்ளது. சனவரி 4-ல் தொடங்கும் சென்னைப் புத்தகக் காட்சி கீழைக்காற்று அரங்கில் தங்கள் கைகளுக்கு கிடைக்கும்.

   மகிழ்ந்தும் எங்களை ஊக்கப்படுத்தியும் எழுப்பிய கரவொலிகளுக்கு இடையே அம்மிக் குழவியால் சிலர் அடிவயிற்றில் இடித்துக் கொள்ளும் ஓசையும் கேட்டது. புரையேறி நிற்பவரை தலையில் தட்டி சகஜநிலைக்கு கொண்டு வர முடியும். மூளையே புரையோடிப் போனவர்களுக்கு தேவை ஆதரவும், சிகிச்சையும். அந்த வகையில் கீழைக்காற்றின் வெளியீடு, விலை, விற்பனை நிலவரங்கள் பற்றி தவறான கருத்து பரப்புகின்ற நண்பர்களையும் எரிச்சலாகப் பார்க்காமல் எப்போது வேண்டுமானாலும் அவர்கள் எமது விற்பனை நிலையத்திற்கு வந்து சரியான விவரங்களைப் பெற்றுக் கொள்ள அன்போடு அழைக்கிறோம்.

   மூடிக் கிடக்கும் அறிவுச் சாளரங்களை தேடித்திறக்கும் கீழைக்காற்று யாருக்கும் உரிய முறையில் விவாதித்து உதவி செய்யவும் காத்திருக்கிறது. தொடரும் எமது பயணத்தில் தொடர்ந்து தங்கள் ஒத்துழைப்பை வேண்டி நிற்கிறோம்.. நன்றி.

   கீழைக்காற்றுக்காக,
   தோழமை அன்புடன்..
   துரை.சண்முகம்.

 2. நூல்வெளியீட்டு விழாவிற்கு நான் வந்திருந்தேன்.மிகவும் பயனுள்ளதாக இருந்தது.ஒரு நூலை வாசிக்கும்போது அதிலும் குறிப்பாக சமூகமாற்றத்திற்கு உதவிடும் நூல்களை வாசிக்கும்போது படைப்பாளரின் அந்த உணர்வுமட்டத்திற்கே நாம் சென்றிடவேண்டும்.அப்போது நமக்கு நேரும் துன்பங்களை நாம் அனுபவிக்கவேண்டும்.அப்படி கற்க முன்வரவேண்டும்.இல்லையேல் பயனற்றது என்பது மட்டுமின்றி எதிரியின் நிறுவனமயமாக்கல் நோக்கத்திற்கு நாம் பலியாகி சீரழிந்துவிடுவோம்.என்கின்ற எச்சரிக்கை உணர்வை விழா போதித்தது.
  __ சுடலை

 3. கீழைக்காற்று வெளியீட்டு விழா ! அறிவுப்பசிக்கு விருந்து !!…

  கட் அவுட் இல்லை, சமோசா இல்லை சொறிந்து விட அல்லக்கைகள் இல்லை, ஆனால் அந்த திறந்த வெளி அரங்கில் இருக்கைகளும் நிரம்பி பரந்த நின்ற படியே கடைசி வரை கலையாமல் நின்றார்கள் மக்கள்….

 4. //பந்தி வைத்து பரிமாறும் இலக்கிய மொக்கைகளின் கூட்டங்களுக்கு மத்தியில்//

  இந்த வரிகள் மிகவும் மிகவும் மனச்சோர்வினை அளிக்கிறது.தமிழர்களின் விருந்தோம்பலை கிண்டல் செய்யும் வரிகள்.

  வினவு,

  உங்களிடமிருந்து இப்படியொரு கருத்தினை எதிர்பார்க்கவில்லை.

  • அரவிந்தன், நூல் வெளியீட்டு விழாக்களை ஒரு சடங்கு போல சினிமா, அரசியல் பிரபலங்களை வைத்து நடத்தி கூட்டம் கூட்டி விருந்து பறிமாறி நடத்தப்படும் “ஷோக்கள்” போல ஆகிவிட்டதையே கட்டுரை சுட்டுகிறது. இதில் தமிழர்களின் விருந்தோம்பலை கிண்டல் செய்யவில்லை. மேலும் விருந்தோம்பல் என்பது தமிழர்களுக்கு மட்டுமல்ல உலகெங்கும் உள்ள எல்லா மக்களும் கடைபிடிக்கிற பண்பாடுதானே?

   • வினவு
    முதலில் எடுத்த உடனே மற்றவர்களை குறை கூறுவதை நிறுத்துங்கள்
    முதலில் நிகழ்வில் என்ன நடந்தது என்பதை தெளிவாக எழுதிவிட்டு பின்பு “அது” “மற்றவற்றில்” இருந்து எவ்வாறு விடுபடுகிறது என்பதை விளக்குங்கள் அதை விட்டுவிட்டு எடுத்த எடுப்பில் மற்றவர்களை முழங்காலை மடக்கி உயிர்நிலையில் ஒரு தாக்கு தாக்கி விட்டு பின்பு நிகழ்வை விவரிக்காதீர்கள்.இது படிப்பவனுக்கு கடும் எரிச்சலை ஊட்டுகிறது. எழுதவே தெரியாதவர் எழுதியதைப் போல் உள்ளது

    அய்யங்கள் ஆயிரம்.

    உங்களின் தீவிர ஆதரவாளர் (தோழர்?) ருத்ரன் நெற்றியில் சிவப்பு நிறத்தில் தெரிவது என்ன?
    ஆணாதிக்கத்துக்கும் இந்த நூல் வெளியீடுகளுக்கும் என்ன தொடர்பு ? சாதி community க்கும் சாதிக்கும்,முற்போக்குக்கும் என்ன தொடர்பு ?

    மேலும் நீங்கள் எழுதிய விடுதலைப் போரின் விடுதலை மரபு என்பது உங்களால் போலி என்றழைக்கப்படும் ஸ்டாலின் குணசேகரனால் நீண்ட காலத்துக்கு முன்பே எழுதப் பட்ட விடுதலை வேள்வியில் தமிழகம் என்ற நூலின் தாக்கம் தானே ஏன் இவ்வாறு அட்டக் கோப்பி அடிக்கிறீர்கள்.

    மேலும் அது கரண் தபார் அல்ல கரண் தாப்பர் பெயர்களை தெளிவாக எழுதுங்கள்

    //“தன் மீது சொல்லப்படும் விமரிசனங்கள் குறித்து கவலைப்படவில்லை. எங்கும் எப்போதும் என்னை நான் மறைத்துக் கொண்டதுமில்லை” //
    கொஞ்சம் கருணாநிதி வாசம் அடிக்கவில்லை ? அப்படி என்றால் நீங்கள் வைக்கும் விமர்சனங்களைக் கூட யாரும் பொருட் படுத்துவதில்லை என்று தானே அர்த்தம் அய்யா? தன் மீது வைக்கப்படும் விமர்சனம் குறித்து தனக்கு கவலை என்றால் சமூகத்தை குறித்து நீங்கள் விமர்சனம் செய்ய தகுதி இருக்கிறதா ?

    //தள்ளுபடி விலையில் நூல்களை வாங்கிக் கொண்டனர். // ஏன் முழு விலையில் விற்றால் வாங்க மாட்டார்களா ? இதுவும் கட்லெட் ரெமி மார்டின் மாதிரி வாசகனை லஞ்சம் கொடுத்து வாங்க வைப்பது மாதிரி தானே ?
    கம்ம்யுநிசமும் இராக்கும் சினிமாவும் மட்டுமே அறிவாகிவிடுமா ? பன்முகத் தன்மையை மறுப்பது எந்த சித்தாந்தத்தில் சேர்த்தி ?

    // படைப்புலகத்தை நாசமாக்கி வருமானம் ஈட்டும் தொழிலாகப் பார்க்கும் பதிப்பக அரசியலை அம்பலப்படுத்திப் பேசினார் // ஏன் சண்முகம் லாபம் இல்லாமல் இலவசமாகத்தான் தருகிறாரா?
    அது முடியுமா ? அப்பறம் பதிப்பகத்தை எத்தனை நாளைக்கு நடத்த முடியும் ?

    // அந்த திறந்த வெளி அரங்கில் நூற்றுக் கணக்கில் போடப்பட்டிருந்த அத்தனை இருக்கைகளும் நிரம்பி பரந்த அந்த மைதானத்தில் //

    அப்படி என்றால் கடைசி படத்தில் தெரியும் காலி இருக்கைகளுக்கு என்ன பெயர் ?
    அதில் தெரியும் விடலைகளுக்கு நீங்கள் பேசுவது ஒன்றுமே புரியவில்லை என்பது மட்டும் புரிகிறது ???!!!!! 🙂 🙂

    அய்யங்கள் ஆயிரம் ஆயிரம்

    • எழில் அண்ணே,

     பன்முகத் தன்மை என்றால் என்ன அண்ணே? எங்களுக்கும் சொல்லிக்குடுத்தீங்கன்னா நாங்களும் தெரிஞ்சுகிட்டு, உங்களோட சேர்ந்து பன்முகதன்மையில குதிக்கலாம் பாருங்க…

    • ஏதாவது எழுதவேண்டும் என்பதற்காக திரு.எழில் எழுதித்தொலைத்திருக்கிறார். நானும் கடைசி இருக்கை-வரிசையில்தான் அமர்ந்திருந்தேன். அங்கே இருக்கைகள் போதாமையால் தான் சில விடலைகள்(அவர் பார்வையில்) நின்றுகொண்டிருந்தார்கள். தள்ளுபடி விற்பனையை வேறு இடத்தில் போய் கிண்டல் செய்யட்டும். ஆர்வம் உள்ள அனைவரிடமும் பண வசதி இருக்காது. எட்டு புத்தகங்களைச்சேர்த்து வாங்கும் போது கொஞ்சம் விலை குறைத்தால் நன்றாக இருக்குமே என்ற சாதாரண மக்களின் மனநிலை எழிலனுக்குப் புரியவில்லையா இல்லை உணர மறுக்கிறாரா? சாராயம் விற்பனையிலும் லாபம் ஒரு குறிக்கோள் தான், மருந்து விற்பனையிலும் லாபம் ஒரு குறிக்கோள் தான். மறுப்பதற்கில்லை. ஆனால் இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ள முடியவில்லையா? இருக்கைகளில் ஆட்கள் இல்லை என்று சொன்னதிலிருந்தே விமர்சனத்தின் நோக்கம் புரிந்துபோயிற்று…

    • அக்காகி அவர்களே
     ம.க.இ.க மாதிரியான வறட்டு இயக்க மார்ஸியர்களுக்கு எதிரான எல்லா நடவடிக்கைகளுமே பன்முகத்தன்மைதான்

  • விடுதலைப் போரின் வீர மரபு இப்படித்தானே இருக்க முடியும். சின்ன மருதுவின் சினங்கொண்ட எள்ளல்களைப் பார்த்தீரானால் நாம் காலத்தால் ஒப்பீட்டு நிலையில் வாழ்ந்தாலும் சிந்தனையால் இருநூறு ஆண்டுகள் பின் தங்கியிருப்பது புரியும்.

   வினவு, விழா நிகழ்வுகளை விரைவில் வெளியிட்டு வரவியலாதோர் ஏக்கத்தை நிறைவு செய்யுங்கள்.

 5. […] This post was mentioned on Twitter by வினவு. வினவு said: கீழைக்காற்று வெளியீட்டு விழா! அறிவுப்பசிக்கு விருந்து !! https://www.vinavu.com/2010/12/27/keezhaikaatru-book-release/ […]

 6. நேற்று நடந்த கூட்டம் நன்றாக நடந்தது.

  தோழர் கவிஞர் தமிழேந்தி, ” பெரியார் கட்சியைச் சார்ந்த என்னை விட, பெரியார் சிலை தாக்கப்பட்டபோது, போர்குணத்தோடு போராடியவர்கள் ம.க.இ.கவினர்” என்றார்.

  தோழர் மருது, இந்திய ஓவிய மரபு எப்படி உருவானது, அதனை ஒட்டி தமிழ் சினிமா எப்படி உருவானது, அவர்கள் தமிழ்,தமிழர்கள், தமிழ்நாடு பற்றிய காட்சியினை எந்த கண்ணோட்டத்தோடு அணுகுகின்றனர் என்று விரிவாக விளக்கினார்.

  தோழர் சந்தனமுல்லைக்கு இதுதான் முதல் பொதுக் கூட்டம் என்று நினைக்கின்றேன். நன்றாகவே பேசினார். ஆனாலும் சிறிது பயிற்சி எடுத்து இருக்கலாம். பரவாயில்லை. நோக்கமும் துணிவும் இருக்கின்றது – ஆதலால் நன்றாக வருவார். வாழ்த்துக்கள் சந்தனமுல்லை !

  அடுத்து தோழர் மருதையன் மிகவும் அருமையாகப் பேசினார். சிந்திக்காத ஒரு நுகரும் விலங்குகள் கூட்டம் எப்படி திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது என்று விளக்கினார். புத்தக துறையிலும் லாபவெறி எப்படி சுயசொரிதல், அரசியலற்ற முதலாளித்துவ சுரண்டலுக்கு எள்ளளவும் தீங்கினை விளைவிக்கும் நினைப்பு கூட இல்லாத எழுத்துக்கள் யாரால் எதற்காக எப்படி எழுதப்படுகின்றன என்று தெளிவாக விளக்கினார். மேலும் (சித்தாந்தம்) கற்பது பற்றிய அவர் உரை நிச்சயம் ஒரு தனி நூலாக வெளியிடப்பட வேண்டும்.

  ஆதவன்

 7. மறந்து போன ஒரு விடையம்

  தோழர் ருத்ரன் – கடவுள் நம்பிக்கை உள்ளவனாக இருந்தாலும் தான் ஏன் ம.க.இ.கவின் கூட்டங்களில் கலந்து கொள்கின்றேன் என்பதற்கு அவரே பதில் சொன்னார் – ஒரு பகுத்தறிவுள்ளவனாக, நியாயமானவனாக நடந்து கொள்பவர்கள் ம.க.இ.க.வினர், ஆதலால் கலந்து கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று பேசினார்.

  ஒரு பத்து போலிஸ் காரர்கள் மப்டியில் இருந்தனர். தேனீர் இடைவேளையின் போது வெளியே வந்த போது, அவர்கள் குரூப்பாக நின்று கொண்டு ஒருவர் எடுத்த குறிப்பினை காப்பி அடுத்துக் கொண்டோ சரிபார்த்துக் கொண்டோ இருந்தனர். ஒரு உயரமான போலீஸ் – இவர் சவுக்கின் பதிவில் எழுதப்பட்ட உளவு துறையில் பணியாற்றும் ஒட்டுக் கேட்கும் சப் இன்ஸ்பெக்டர் என்று நினைக்கின்றேன். அவரும் வந்து இருந்தார்.

 8. விழாவில்…தோழர் மருதையனின் உரை ஆழமான, அழுத்தமான, அருமையான உரை. புத்தக காட்சி தொடங்குவதற்குள் அவரின் உரையை வெளியிடுங்கள். நீங்கள் அவரின் உரையை என்ன எழுதினாலும், அவரின் குரலில் இருக்கும் உணர்ச்சியை எழுத்தில் கொண்டுவர முடியுமா என்பது சிரமம் தான். நேற்று கேட்டதிலிருந்து…அப்பொழுது உள்ளே நுழைந்த அவருடைய குரல்…இன்னும் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. எம்பி 3 பார்மட்டில் இணைத்தால்…வினவின் வாசகர்கள் பயன் உள்ளதாய் இருக்கும்.

 9. ஒரு வாராமாக உடற்சோர்விலிருந்த எனக்க உற்சாகம் தந்த விழா. நெஞ்சைத் தொட்ட சில சமயங்களில் நெகிழ்ந்து போனேன். என்னை மேலும் எழுதத் தூண்டும் ஒரு நிகழ்ச்சி. பார்வையாளனாக கலந்து கொண்டமைக்கு மிகவும் பெருமைப்படுகிறேன்.

 10. விழாவைப் பற்றிய அருமையான கவரேஜ். இன்னும் சிறப்புரைகளை வினவில் கட்டுரை வடிவில் வெளியாவதை ஆவலுடன்எதிர்பார்க்கும்,

  -கார்க்கி

 11. யோவ் வினவு!
  குறைந்த ப‌ட்ச‌ம் தோழர் மருதையன் உரை – audio file -ஐ வெளியிடு.

  • மருதையன் மட்டும் தோழர், வினவு “யோவ்”… “வெளியிடு”…
   ம்ம் இந்த ரசிக மனப்பான்மை இருக்கிறதே? இதை கொஞ்சம் விரட்டி விட வேண்டியிருக்கிறது…

   • ம‌ன்னிக்கவும் தோழ‌ரே,
    Green Hunt -ற்கு பிற‌கு வின‌வில் 3 அழைப்பிதழ் வந்துள்ள‌து. Dove, Babr majid, Book வெளியீட்டு விழா. நிக‌ழ்சிக‌ளுக்கு பிற‌கு படங்க‌ளும்,க‌ட்டுரைக‌ளும் வ‌ந்துள்ள‌து. ஆனால் Audio-Vedio இணையதளத்திள் வெளியிட‌வில்லை. வெளிநாட்டில் வ‌சிக்கும் எங்க‌ளுக்கு உரைகள் கேட்கும் வாய்ப்பு வேண்டாமா?

 12. நண்பர்கள் சொன்னமாதிரி ஒலி ஒளி (ஏற்கனவே சொன்ன மாதிரி) ஏற்பாடுகளை கவனிக்கவும். மகிழ்ச்சியாய் உள்ளது.

 13. ///“அறிவுத்தேடல், ஏகாதிபத்திய அறிவுஜீவிகளை எப்படி எதிர்கொள்வது////

  அதென்ன ’ஏகாதிபத்திய அறிவுஜீவி’ ? முதல்ல ஏகாதிபத்தியம் என்றால் என்ன ?
  கம்யூனிச பாணி ’ஏகாதிபத்தியத்தை’ ஆதரிக்கும் ஜீவிகள் எவ்வகை ? (அதாவது சோவியத் ரஸ்ஸியாவால் நசுக்கப்பட்ட கிழக்கு அய்ரோப்பிய நாடுகள், சோவியத் ஏகாதிபத்தியம் என்றே அதை கருதுகின்றன). எனக்கு தெரிந்த ‘அறிவுஜீவிகள்’ யாரும் ஏகாதிபத்தியத்தை ஆதரிக்கவில்லை. லிபரல் ஜனனாயகம், மனித உரிமைகள், கருத்து சுதந்திரம் – இவற்றை மறுக்கும் ’அறிவிஜீவ்கள்’ யார் ? சிரிப்பா இருக்கு இந்த உளரல்களை படிக்க.

  அது சரி தோழர், செம்புரட்சிக்கு பின் இந்த அறிவுஜீவிகளை எப்படி ’எதிர்கொள்ள’
  போகிறீர்கள் ? இன்று பேசும் டைலாக்குகள் எல்லாம் சரி. நடைமுறையில் ஆட்சி அதிகாரம் உங்க கையில் வந்தால், எப்படி அணுகிவீக ? என்ன செய்வீக ? பழைய வரலாறு காட்டும் அதே பாதையில் தான் செல்வீகளா ? அல்லது…. ?

 14. வினவு !

  தயவு செய்து மருதையன் உரையின் ஒலி வடிவு / எழுத்து வடிவங்களை வெளியிடவும்.

  • தோழர்களே, நண்பர்களே,

   தோழர் மருதையனது உரையின் எழுத்து வடிவம் நாளை வெளியிடுகிறோம். சற்று பொறுத்திருங்கள்.

   • ஒலி வடிவம் எப்போது? வெளியிடும் திட்டம் எதுவும் உள்ளதா? ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

 15. ”கீழைக்காற்று வெளியீட்டு விழா! அறிவுப்பசிக்கு விருந்து ”
  தலைப்பை மற்றுங்கள்.

  ”கீழைக்காற்று வெளியீட்டு விழா! புதிய ஜனநாயக புரட்சிக்கான வித்து”

 16. கட்லெட் இல்லை,சமோசா இல்லை,அப்சோலெட் வோட்கா இல்லை,ரெமி மார்ட்டின் இல்லை, இப்படியாக இல்லை இல்லை என்று நிறைய சொல்கிறீர்கள். சரி மேற்சொன்னவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு கூட்டம் நடத்துவது எனக்குத்தெரிந்து சாரு நிவேதிதா நூல் வெளியீட்டு நிகழ்ச்சித்தான். சாருவை இலக்கிய மொக்கை, லூசு, என்றெல்லாம் நீங்கள் பல இடங்களில் பதிவு செய்து இருக்கிறீர்கள். சாரு நிகழ்ச்சியோடு உங்கள் நீங்கள் ஒப்பிட்டு பார்ப்பது என்னவகை புரட்சிகர சிந்தனை. அல்லக்கைகள் இல்லை என்று சொல்கிறீர்கள். உங்கள் பதிவுகளில் பின்னூட்டமிடுபவர்களை எவ்வாறு வகைப்படுத்துவது.
  கீழைக்காற்று வெளியீட்டகத்தில் வெளிவரும் நூல்களின் விலை
  மற்ற பதிப்பகத்தை விட(விடியல்,அலைகள்,பாரதி புத்த்காலயம்,என்.சி.பி.எச) கூடுதலாகவே இருக்கிறது.
  ஆறு நூல்கள்,எட்டு நூல்கள் வெளியீட்டு விழா என்பது காலச்சுவடு,உயிர்மை, போன்ற முதலாலித்துவ பதிப்பகங்களின் யுக்தி அதை நீங்கள் கைப்பற்ற காரணம்.
  இவ்வளவு செலவு செய்து நூலகள் பதிப்பிக்கும் நீங்கள் கட்சி பத்திரிக்கையை தொடர்ந்து வெளிக்கொண்டு வராததற்க்கான காரணம். (புதிய ஜநனாயகம் கட்சி பதிரிக்கை இல்லை என்பது எனக்கு தெரியும்)

  • ஒன்றுக்கு எதிரான நடவடிக்கைதான் பன்முகத்தன்மை என்பது பன்முகத்தன்மையை நேசிக்கும் என் போன்றோரின் மனதை கூனிக் குறுக வைத்தது. தமிழ்ச்சூழலின் போலி அறிவாளிகளின் தலையெடுப்பால் நிகழ்ந்த் காயடித்தலின் துலக்கமான உதாரணமாக நீங்கள் இருப்பதற்கு யார் பொறுப்பேற்பது ?

  • 1.சாரு நிவிதேதிதா கூட்டமோ அல்லது எக்ஸ் ஆர் ஒய் கூட்டத்துடன் ஒப்பிட்டால் புரட்சிகரமானதில்லை என்ற வகுப்பறைவாத புரட்சிக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. என்ன செய்ய ரஜினி ரசிகனது பால் குடம் எடுத்தலை கூட விமர்சிப்பதுவும் புரட்சிகரமானது போல தெரியவில்லைதான். அதற்காக பேசாமலா இருக்க முடிகிறது.
   2. அல்லக்கைகள் என்பவர்கள் யார் என்பதை அவர்களுடன் நேரில் அல்லது பின்னூட்டத்தில் விவாதிக்கையில் புரிய முடிகிறது. ஊர்பக்கம் சொல்ற மாரி சொல் புத்தியும் சுயபுத்தியும் இல்லாத இவிங்கள என்னான்றது. அப்படி இங்கு பின்னூட்டமிடும் யாரையாவது ஆதாரத்துடன் சொல்வதுதானே முறையானது.
   3. கீழைக்காற்று போன்ற வாசகர்களை மாத்திரமே நம்பி நூலக ஆணைக்குழுக்களை சமரசத்துடன் அணுகமுடியாதவர்கள் பிரதிகளை குறைவாக அச்சிட வேண்டியுள்ளது ஆனால் அதே செலவுடன். மற்றவர்களை போல பணவசதி, இடவசதி, நூலகத்திற்குள் திணிக்கும் வசதியில்லாது வாசகர்களை அணுகி விற்பதுதான் இவர்களைப் போன்ற சிறு வெளியீட்டாளர்களால் முடிகிறது. பணம் அதிகரிப்பதற்கான காரணங்கள் சிறுபதிப்பாளர்கள் அரசுக்கு எதிரான அரசியலை முன்வைப்பவர்களுக்கு இதுதான் நிலைமை. அதிருக்க கருத்துக்களை பணத்தால் அளவிடும் புரட்சிகர சிந்தனை எங்கிருந்து கிடைத்தது என தெரிந்து கொள்ளலாமா
   4. நூல்களை வெளியிட்டது மட்டுமா முதலாளித்துவ பாணி. அச்சகம், அட்டை வடிவம் என நிறைய சொல்ல முடியும்தான். நூலை வெளியிட்டு எழுதுவோரை அங்கீகரியுங்கள் அங்கீகரியுங்கள் என யாரும் புலம்பவில்லை. ஏன் படிக்க வேண்டும் – தேவைக்காக படிப்பது – முதலாளித்துவம் விரும்பும் படிப்பு முறை எது – அதற்கும் தொலைக்காட்சிக்கும் என்ன உறவு என விரியும் உரையை கேட்டிருந்தால் இந்த அபத்த கேள்விகளை புரிந்து கொண்டிருக்க உங்களுக்கும் வாய்த்திருக்கும்.
   5. கட்சி பத்திரிக்கை பற்றி அது எப்போது வெளியிட வேண்டும் என்பது பற்றிய தேவையில் இருந்துதான் கட்சி வெளியிடும் என நம்புகிறேன். ஒருவேளை இவற்றுக்கு சுயவிமர்சனம் ஏற்க வேண்டி வரலாம் அது தனிப்பிரச்சினை. காசு செலவால்தான் கட்சி பத்திரிக்கை வரவில்லை என யாராவது சொன்னார்களா ? எல்லாவற்றையும் காசால் அளக்கிறீர்களே. புரட்சியை விடுங்கள் குடும்ப உறவுகளையும் அப்படித்தான் அளக்கிறீர்களா

   • ரஜினிக்கு பால்குடம் எடுப்பதை விமர்சிப்பது வேறு.
    சாரு நிகழ்ச்சியோடு உங்களை நீங்கள் ஒப்பிட்டு கொள்ள வேண்டும். என்பதுதான் என்னுடைய கேள்வி. உங்களுக்குள் இருக்கும் பொச்சரிப்பு தானே காரணம்.
    சாருவை சொரிந்து கொடுப்பவர்கள் அல்லக்கைகள் என்றால் உங்களை சொறிந்து கொடுப்பவர்களை என்னவென்று அழைப்பது
    குறைவான பிரதிகள் அச்சிடுவதாலேயா விலை அதிகம் இருப்பதாக கூறுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.
    நூலகங்கலுக்குள் எல்லோரும் நூல்களை திணிப்பது சாத்தியமில்லை. அவ்வாறு சாத்தியமில்லை என்பதை அவ்வப்போது நூலகங்களுக்கு சென்று பார்த்தாலே தெரியும். நீங்கள் அவ்வாறு செல்ல சாத்தியமில்லை என்பது உங்கள் வறட்டு வாதத்திலேயே தெரிகிறது.
    கட்சி பத்திரிக்கையை வெளிக்கொண்டு வராத்தர்க்கான காரணம் தான் என்ன.
    காசு இல்லாதது தான் காரணமாக இருக்ககூடும் என்பது என்னுடைய அவதானம். அப்படி இல்லை என்பது உங்கள் பதிலாக இருக்கிறது. அப்படி என்றால் கட்சி ஊழியருக்கும், உறுப்பினருக்கும் கட்சிபத்திரிக்கை இல்லாமல் எவ்வாறு கட்சியின்,அல்லது மார்க்ஸிய அரசியலை போதிக்கிறீர்கள்.
    ம.க.இ.க விற்க்கு எதிரான நடவடிக்கைகள் எல்லாமே பன்முகத்தன்மைதான் என்று நான் சொன்னதில் ஒரு சிறிய திருத்தம் இயக்கங்கள் எல்லாமே ஒற்றைத்தன்மை உடையதுதான்.
    இயக்கங்களுக்கு எதிரான எல்லாமே பன்முகத்தன்மையுடையதுதான்.

    • பொச்சரிப்புதான் காரணம் என்பது குற்றச்சாட்டு. சான்றுகளுடன் முன்வைப்பதுதானே குற்றச்சாட்டுக்கு அழகு. தர்க்கமற்ற பொச்சரிப்பை பொச்சரிப்பு என்றுதானே கொள்ள முடியும்.
     யாரும் யாரையும் சொறிந்து கொடுப்பதாக உதாரணத்துடனும், தர்க்கரீதியாகவும் குற்றம்சாட்டுவதுதானே முறையானது.
     குறைவான பிரதிகளுக்கு விலை அதிகரிக்கும் என்பதில் தர்க்கமின்மை புலப்படுகிறதா. அயோக்கியத்தனம் என்ற முடிவுகளை எப்படி வந்தடைய முடிந்த்து.
     புத்தக நூலக திணிப்புக்கு வறட்டுவாதம் உதவாது என்ற புரிதல் நன்கு தர்க்கரீதியில் உள்ளதாகவே எடுத்துக் கொள்வோம். பன்முகத்தன்மைக்கு நல்ல சான்றாகவும் எடுத்துக் கொள்வோம். சரியாகத்தானே உள்ளது.
     கட்சி பத்திரிக்கை யின் சமூக வரலாற்று பாத்திரத்தை ஆசான் லெனின் வழி அறிந்திருப்பீர்கள் என கருதுகிறேன். அதுதான் கட்சி ஊழியனை வளர்ப்பதில் முதன்மையானது என்ற புரிதல் இருப்பதற்கு நன்றிகள் (பன்முக புரிதல்)
     கட்சியின் அரசியலும் மார்க்சிய அரசியலும் வேறு வேறு என இருக்க முடியும் என நீங்கள் நம்புவது ம் புரிகிறது.
     அது எப்படிங்க இயக்கங்கள் ஒற்றைத்தன்மை உடையன என்பீர்கள். அதனை எதிர்ப்பது மாத்திரம் பன்முகத்தன்மை உடையதாக இருக்க முடியும்

    • பன்முகத் தன்மைக்கு விளக்கம் கேட்டேன்…
     உங்கள் அமைப்புகள் எல்லாம் ஒற்றை தன்மையுடையன என்று ஒற்றை வரியில் பதில் அளிக்கிறீர்கள்…

     சரி, ஒற்றை தன்மையுடையன என்றால், என்ன? ஆதாரத்துடன் விளக்குவது தானே நேர்மை? பன்முகத் தன்மையுடையோருக்கு நேர்மையெல்லாம் கிடையாதா?

     நூலகங்களுக்கு செல்ல சொல்கிறீர்கள்… நூலகங்களில் எப்படிப்பட்ட நூலகள் கிடைக்கப்பெறுகின்றன என்பது சாதாரண வாசிப்பனுவமுள்ளவர்கள் கூட புரிந்து கொண்டிருக்கும் போது, உங்களுக்கு தெரியாதது வியப்பளிக்கவில்லை….
     நூலகங்களில் ஒன்றுக்கும் உதவாத கழுதை விட்டை புத்தகங்கள், சமையல், ஜோதிடம், பணம் சம்பாதிப்பது எப்படி, இப்படி பற்பலவற்றை பன்முகத் தன்மையோடு அனுகுவதோடு, ஆர்.எஸ்.எஸ்-சின் விஜய பாரதத்தையும் அதே பன்முகத் தன்மையோடே அனுகுகிறார்கள்… வாழ்க பன்முக தன்மை..

     அட இது தான் பன்முக தன்மையா? நான் கூட “பல முக மன்னன்” கணக்கா ஏதோன்னு நினைச்சுட்டேன்..

 17. மருத்துவர் ருத்திரன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் :

  உங்கள் அபிமான எழுத்தாளரான ல.ச.ரா அவர்களில் படைப்புகளை பற்றி (முக்கியமாக அவரின் ‘அபிதா’ பற்றி) வினவு குழுவினர் ஒரு ‘literary criticism’ (அதாவது அவர்கள் பாணியில் ஒரு இலக்கிய விமர்சனம்) செய்து, அவற்றையும் சில பதிவுகளாகவும், பிறகு ஒரு சிறு நூலாக வெளியிட ஏற்பாடு செய்யும் படி வேண்டுகிறேன். அப்படி வெளியிடப்பட்டால், பல பிரதிகளை மகிழ்ச்சியுடன் வாங்கிக்கொள்வேன்.

  ல.ச.ரா ஒரு பூஸ்வா எழுத்தாளரா அல்லது பாட்டாளி வர்க எழுத்தாளரா என்றும் வினவு குழுவினரிடம் கேட்டு சொல்லுங்களேன். முக்கியமாக, இந்தியாவில் எதிர்காலத்தில் வினவு குழுவின் தலைமையில் செம்புரட்சி நடந்தால், பிறகு ல.ச.ராவின் படைப்புகள் தடை செய்யப்படுமா அல்லது இன்று போல தாரளமாக அனுமதிக்கப்படுமா என்றும் கேட்டு சொல்லுங்களேன்.

  • புரடசிக்குப் பிந்திய சமூகங்களில் முதலாளிய இலக்கியவாதிகளுக்குத் தடை என்பதே ஒரு புனைவு.

   பல ரஷய முதலாளியப் படைப்பாளிகளை ரஷயப் புரட்சிக்குப் பின்பு தான் நாம் அறிந்தோம்.
   சோஷலிஸ ரஷ்ய, சீன அயல் மொழி வெளியீட்டகங்களின் நூல் வெளியீட்டுப் பட்டியலைப் பார்த்து விட்டு எழுதுங்கள்.

   மாறிய சமூகச் சூழலில் முதலாளிய எழுத்துக்களுக்கு அவற்றின் பொருத்தமின்மையால் இடமில்லாமற் போவதும் இலக்கியங்களுக்குத் தடை விதிப்பதும் ஒன்றல்ல.

   களைகளை முளைக்க விட்டே களைய முடியும். மக்கள் அனைத்தையும் விவாதித்து முடிவெடுப்பது என்பது “நிபுணர்”களிடமே அனைத்தையும் விட்டுவிடும் ஒரு மரபுக்கு விளங்காதது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க