privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கபனமரத்துல வவ்வாலு ; டாஸ்மாக் இல்லேன்னா திவாலு !!

பனமரத்துல வவ்வாலு ; டாஸ்மாக் இல்லேன்னா திவாலு !!

-

ஜே.கிருஷ்ணமூர்த்தி ஒளியில் டாஸ்மாக்கின் மகத்துவங்கள்!

வாழ்க்கையில் வரும் எந்த ஒரு நிகழ்வையோ, விசயத்தையோ முன்முடிவுகளோடு, கருத்து சார்புகளோடு பார்ப்பதுதான் ஆடம்பரம் என்றும், அப்படி எந்த சாய்வுகளும் இல்லாமல் ஒரு விசயத்தை அணுகுவதுதான் எளிமை என்றும் பெருந்தலைவர், சிந்தனையாளர் ஜே.கிருஷ்ணமூர்த்தி கூறியிருக்கிறார்.

இதை ஸ்பெக்ட்ரம் ஊழலோடு தொடர்புபடுத்திப் பாருங்கள், ஸ்பெக்ட்ரம் என்றாலே தி.மு.க ஏதோ ஒன்றே முக்கால் இலட்சம் கோடி ரூபாய்களை ஊழல் செய்திருப்பதாகவும், அதற்கு காரணம் கருணாநிதியின் குடும்ப ஆதிக்கம் என்றுதானே பார்க்கிறீர்கள்? இதுதான் முன்முடிவுகளோடு வாழ்வை எதிர்கொள்ளும் ஆடம்பரமான மேட்டிமைத்தனம்.

அத்தகைய ஆடம்பரமான பார்வை தமிழகத்தில் சக்கைபோடு போடும் டாஸ்மாக் விற்பனை குறித்தும் அநேகரிடத்தில் இருக்கிறது. ஏதோ தமிழகம் முழுவதும் தினமும் குடித்து விட்டு கெட்டுப் போகிறது என்று சிலர் பெரும் ஒழுக்கவாதிகளாக பேசுகிறார்கள். இதை முன்முடிவுகள் இல்லாமல் எளிமையான பார்வை மூலம் பார்க்கலாம்.

நலத்திட்டங்களுக்கு அள்ளி வழங்கும் அமுதசுரபி எது?

தமிழகத்தில்தான் வேறு மாநிலங்களில் இல்லாத அளவு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஒரு ரூபாய் அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள், இலவச தொலைக்காட்சி, இலவச கேஸ் இணைப்பு – அடுப்பு, மழை வந்தால் இரண்டாயிரம் ரூபாய் பணம், மாணவர்களுக்கு சத்துணவு, தினமும் முட்டை, பள்ளியிறுதி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கட்டணமில்லாத உயர் கல்வி, ஒரு இலட்ச ரூபாய் காப்பீடு திட்டம், பெண்களுக்கு திருமண உதவித் தொகை, விதவைகளுக்கு மறுவாழ்வு திட்டம், முதியோர்களுக்கு ஓய்வூதியம், ஏழைகளுக்கு இலவச வீடுகள், சமத்துவபுரம், உழவர் சந்தை, கலைஞர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள்…….

எத்தனை எத்தனை திட்டங்கள்….சிலர் நினைக்கலாம், இந்த திட்டங்களின் பலன் முழுவதும் மக்களுக்கு போய்ச் சேரவில்லை என்று. அதை மறுக்க வில்லை. ரேசன் அரிசியும், இலவச தொலைக்காட்சியும் கேரளத்தில் அமோகமாய் விற்பனை செய்யப்படுவது உண்மைதான். மக்களுக்கு அளிக்கப்படும் உதவித் தொகைகளில் ஆயிரமோ, இரண்டாயிரமோ கட்சிக் காரர்களுக்கும், அதிகாரிகளுக்கும் செல்வதும் கூட உண்மைதான். இவையெல்லாம் ஒழுக்கவாதிகளின் கவலையாகத்தான் இருக்கிறதே அன்றி மக்கள் இவை குறித்து கவலைப்படுவதில்லை. தனக்கு இரண்டாயிரம் ரூபாய் சும்மா கிடைக்கும்போது அதில் கால்வாசி கழிவுத் தொகையாக எடுத்துக் கொள்ளப்படுவது குறித்து அவர்களுக்கு ஏமாற்றமில்லை.

ஏனெனில் இந்த நலத்திட்டங்களெல்லாம் தமது உரிமைகள் என்று மக்கள் நினைப்பதில்லை. அப்படி முன்முடிவோடு நினைத்தால்தான் அது ஆடம்பர பகட்டு என்று அழைக்கப்படும். கருணாநிதி தனது சட்டைப் பாக்கெட்டிலிருந்துதான் இவ்வளவு திட்டங்களுக்கும் செலவு செய்கிறார் என்று யதார்த்தமாக மக்கள் நினைக்கிறார்களே அதுதான் எளிமையான பார்வை. அந்த வகையில் இந்த திட்டங்கள் மூலம் கட்சிக்காரர்களோடு மக்களும் பயனடைகிறார்கள் என்பதே உண்மை.

இத்தகைய நலத்திட்டங்களுக்கான பணம் கருணாநிதியின் குடும்பச் சொத்திலிருந்து வரவில்லை, அது அரசு பணம் என்றாலும் அப்படி செலவழிப்பதற்கு அரசிடம் பணம் ஏது? தி.மு.கவையும் கருணாநிதியையும் கட்டோடு வெறுத்து விமரிசனம் செய்யும் எவரும் இது குறித்து கவலைப்படுவதில்லை. இங்கேதான் டாஸ்மாக் விற்பனை வருகிறது. ஆம். டாஸ்மாக் விற்பனை வருவாய் மூலம்தான் தமிழக அரசு தனது நலத்திட்டங்களுக்கான நிதி ஆதாரத்தை திரட்டுகிறது. இது உண்மையெனில் டாஸ்மாக் விற்பனையை ஏன் எதிர்க்க வேண்டும்?

புரட்சித் தலைவியின் தொலைநோக்கில் டாஸ்மாக் ஆரம்பம்!

நலத்திட்டத்தை விடுங்கள், அரசு ஊழியர்களுக்கே ஊதியத்தை அளிக்கமுடியாமல் தமிழக அரசு கஜானா கதி கலங்கிய வேளையிலே 2003ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல், புரட்சித் தலைவி தொலைநோக்கோடு அரசே விற்பனை செய்யும் டாஸ்மாக் கடைகளை ஆரம்பித்தார். அன்றிலிருந்து வருடத்திற்கு 2000 கோடி ரூபாய் மேனிக்கு விற்பனை அதிகரித்து வருகிறது. ஜெயலலிதா துவங்கிய அந்த மகத்தான திட்டம் இன்று கருணாநிதி காலத்தில் சாதனை படைத்து வருகிறது.

டாஸ்மாக் சாதனைகள் புள்ளிவிவரங்களாய்!

அன்று சில நூறு கடைகளை இருந்ததென்றால் இன்று பல்கிப் பெருகி 7,434 கடைகளாய் பெரும் ஆல விருட்சமாய் விரிந்திருக்கிறது. சென்னையில் மட்டும் ஐநூறுக்கும் மேற்பட்ட கடைகள். உலகெங்கும் பெப்சி கோக் கிடைப்பது போல தமிழகமெங்கும் டாஸ்மாக் கிடைக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. நுகர்வு பொருட்களை தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் பல்லாயிரம் கோடி ரூபாய் விளம்பரம் செய்து விற்பனையை அதிகரிக்கும் நவீன யுகத்தில் டாஸ்மாக் மட்டும் எந்தவிதமான விளம்பரமும் இல்லாமல் சக்கை போடு போடுகிறது.

தமிழகத்தில் எத்தனை கல்லூரிகள், பள்ளிகள், மருத்துவமனைகள், என்று எதை வேண்டுமானாலும் கணக்கெடுங்கள். நீங்கள் என்னதான் கணக்கெடுத்தாலும் அவை யாவும் டாஸ்மாக் சில்லறை அங்காடிகளின் எண்ணிக்கையை நெருங்க முடியாது. தமிழகத்தில் அரசுப் பேருந்துகளும், மத்திய இரயில்வேயும் ஒரு நாளில் ஏற்றிச் செல்லும் பயணிகளை விட டாஸ்மாக்கிற்கு ஒரு நாளில் வந்து போகும் குடிமக்கள் மிகவும் அதிகம். இந்தியாவின் பிளாக்பஸ்டர் என்று சாதனையாக காட்டப்படும் எந்திரன் படத்தின் வருவாயெல்லாம் டாஸ்மாக்கின் ஒரு நாள் வசூலோடு போட்டி போட முடியாது.

டாஸ்மாக் அங்காடிகள் மூலம் கடந்த 2010ஆம் ஆண்டு மட்டும் 16, 445 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்திருக்கிறது. இது சென்ற ஆண்டைக் காட்டிலும் 2,464 கோடி ரூபாய் அதிகமாகும். சராசரியாக கணக்கிட்டால் மாதம் ஒன்றுக்கு 200 கோடி, நாள் ஒன்றுக்கு ஏழு கோடி ரூபாய் சென்ற ஆண்டை விட அதிகம் வருகிறது. தற்போது தினந்தோறும் 1.26 லட்சம் இந்தியத் தயாரிப்பு அயல்நாட்டு மதுபானப் (IMFL)  பெட்டிகள் விற்பனையாகிறது. ஒரு கேஸ் 12 பாட்டில்கள் வீதம் 57,000 கேஸ் பீர் பாட்டில்கள் விற்பனையாகின்றன.

இன்னும் சாதனை படைக்கும் டாஸ்மாக்கின் புள்ளிவிவரங்களை பாருங்கள். அலுவலக நாட்களில் சராசரி விற்பனை 45 கோடி என்றால் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் அது 53 கோடியாக இருக்கிறது. 2006 ஆம் ஆண்டு வரை வருடத்திற்கு எட்டாயிரம் கோடி ரூபாயாக இருந்தது இன்று இரண்டு மடங்கு அதிகமாயிருக்கிறது என்றால் அது சாதனை அல்லவா?

மது விற்பனையில் முதலிடத்தை நோக்கி!

இந்தியாவில் குடிப்பதற்கு பெயர் போன கேரள மாநிலத்தில் கூட ஒணம் பண்டிகையின் போது முப்பது கோடி ரூபாய்க்குத்தான் மது விற்பனை ஆனதாம். ஆனால் நமது தமிழகத்தில் அன்றாட சராசரி இதைப்போன்று ஒன்றரை மடங்கு அதிகம். தீபாவளி, புத்தாண்டு முதலான திருவிழா நாட்களில் ஏறக்குறைய நூறு கோடி ரூபாய்க்கு மது வகைகள் விற்பனை ஆகின்றன.

தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் அதிகம் மது விற்பனையாகும் மாநிலமாக உத்திரப் பிரதேசம் இருக்கிறது. மக்கள் தொகை மிகவும் அதிகம் என்பதால்தான் இந்த முதலிடம். தற்போது இந்திய விற்பனையில் இரண்டாமிடத்தில் இருக்கும் தமிழகம் வெகு விரைவில் முதலிடம் பெறுவது உறுதி. அது அய்யா ஆட்சியிலா, இல்லை அம்மா ஆட்சியிலா என்பதை காலம்தான் தீர்மானிக்கும்.

டாஸ்மாக் விற்பனையால் தமிழகமே உயிர் வாழ்கிறது!

தமிழகத்தில் தற்போது பதினைந்திற்க்கும் மேற்பட்ட சீமைச்சாராய ஆலைகள் பல்லாயிரம் தொழிலாளிகளோடு மூன்று ஷிப்ட்டுகளிலும் மும்மூரமாய் உற்பத்தியில் ஈடுபடுகின்றது. இந்த ஆலைகளில் பாதி அ.தி.மு.க தலைமைக்கும், பாதி தி.மு.க தலைமைக்கும் நெருக்கமாகவோ இல்லை சொந்தமாகவோ இருப்பதை வைத்து சிலர் விமரிசனம் செய்கின்றனர். இதுவும் தொலைநோக்கோடு இல்லாமல் முன்முடிவுகளோடு செய்யப்படும் அவசரக் குடுக்கை விமரிசனமாகும். இந்த ஆலைகள் இப்படி இரு கட்சிகளோடு தொடர்புடையதாக இருப்பதால் மட்டுமே இங்கு அரசு விற்பனை சாத்தியமாகிறது என்பதை அந்த விமரிசன ஒழுக்கவாதிகள் உணரவேண்டும்.

மேலும் இந்த ஆலைகளுக்கு கிடைக்கும் வருமானத்தில் குறிப்பிடத்தக்க அளவு தேர்தல் காலத்தில் வாக்களர்களுக்கு கிடைக்கிறது என்பதையும் நாம்  நன்றியுடன் நினைத்துப் பார்க்க வேண்டும். தயாரிப்பு இலாபமும் மக்களுக்கு, விற்பனை இலாபமும் மக்களுக்கு என்றால் இதுதானே உண்மையான ஜனநாயகம்?

டாஸ்மாக்கில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களும் அதிகாரிகளும் பணியாற்றுகிறார்கள். இவர்களது குடும்ப உறுப்பினர்களையும் கணக்கிட்டால் இது சில இலட்சங்கள் வரும். இனி டாஸ்மாக்கினால் ஏற்பட்டிருக்கும் மறைமுக வேலைவாய்ப்புகள், செழிக்கும் தொழில்களைப் பற்றியும் பார்க்கலாம்.

கோடிக்கணக்கான பாட்டில்களை தயாரிக்கும் பாட்டில் தொழிற்சாலைகள், நல்ல நீரை ஆலைகளுக்கு அளிக்கும் தொழில், பாட்டிலில் இடம்பெறும் லேபிள் அச்சக தொழிற்சாலைகள், அட்டைப் பெட்டிகள் தயாரிப்பு, அதை அச்சிடல், கடைகளுக்கான ஸ்டீல் ரேக்குகள், மது ஆலைகளுக்கு தேவைப்படும் வேதிப்பொருட்களை அளிக்கும் தொழிற்சாலைகள், இவை அத்தனையையும் தமிழகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் லாரிப் போக்குவரத்து இவை எல்லாம் கூட்டினால் தமிழகத்தில் கால்வாசிப் பேர்கள் இதில் உயிர் பிழைப்பது தெரியும்.

மேலும் ஒரு டாஸ்மாக் கடையை வைத்து நகரமென்றால் பத்து சாக்கனாக் கடைகளும், கிராமம் என்றால் ஐந்து சாக்கனாக் கடைகளும் விறுவிறுப்பாக இயங்குகின்றன. இதிலும் இலட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இங்கு இருக்கும் காரமான நொறுக்குத் தீனிகள் டன் கணக்கில் விற்பனை ஆகின்றன. அதன்படி இதனை தயாரிக்கும் குடிசைத் தொழில்கள் பல்லாயிரக் கணக்கில் செழித்து வளருகின்றன.

முக்கியமாக முட்டையும், சிக்கனும் மெட்ரிக் டன் கணக்கில் தினமும் விழுங்கப்படுகின்றன. அந்த வகையில் நாமக்கல் கோழிப்பண்ணைகளின் அட்சயப் பாத்திரமாக டாஸ்மாக் விளங்குகிறது. இதில் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் மட்டுமல்ல கோழிகளுக்கு தீவனத்தை வழங்கும் வகையில் விவசாயிகளும் சம்பந்தப்பட்டிருக்கின்றனர். ஃபிரைடு ரைஸ் விற்பனையைப் பார்த்தால் பாசுமதி அரசி விளையும் பஞ்சாப் விவசாயிகள் தமிழக குடிமகன்களுக்கு வெகுவாக கடமைப்பட்டிருக்கின்றனர்.

ஆக டாஸமாக் என்ற சங்கிலியை பின்தொடர்ந்து பார்த்தால் அதில் முழு தமிகமும் ஏன் இந்தியாவும் கூட பிணைக்கப்பட்டிருப்பதோடு பல கோடி மக்கள் வீட்டில் அடுப்பெரியவும் இந்த மது விற்பனை பாரிய பங்காற்றி வருவது தெள்ளத் தெளிவாக விளங்கும். டாஸ்மாக்கின் மறைமுக வேலைவாய்ப்பு இத்தோடு முடியவில்லை.

குடியினால் வரும் நோய்கள் குறிப்பாக வயிற்று உபாதைகளுக்கான சிகிச்சைகள் என்ற வகையில் தமிழக மருத்துவமனைகளும் நன்றாக கல்லா கட்டுகின்றன. இந்த மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், போக மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் வரை பலர் வாழ டாஸ்மாக் கைகொடுக்கிறது. விஜய் மல்லையா போன்ற மது தொழிலதிபர்கள் ஐ.பி.எல் கிரிக்கெட்டிற்காக பல நூறு கோடி செலவழிப்பதற்கும் டாஸ்மாக்கே காரணம் என்பதால் கிரிக்கெட் இரசிகர்களும் இங்கே நன்றிகடன் செலுத்தும் பட்டியிலில் இருக்கின்றார்கள்.

தமிழகத்தை அமைதிப் பூங்காவாக மாற்றியிருக்கும் டாஸ்மாக்!

எந்த ஒரு விசயத்தையும் பொருளாதார விசயம் என்ற முன்முடிவோடு அணுகுவது கம்யூனிஸ்ட்டுகளிடம் இருக்கும் மேட்டிமைத்தனமாக பார்வையாகும். டாஸ்மாக் எனும் தமிழகத்திற்கு படியளக்கும் ஆண்டவனை வெறுமனே பொருளாதார விசயமாக பார்க்காமல் உளவியல் ரீதியாக பரிசீலித்தால் இன்று தமிகம் பெருங் கலவரங்கள் இன்றி அமைதியாக இருப்பதற்கு டாஸ்மாக் பேணும் குடி வழி அமைதி காரணம் என்பது விளங்கும்.

தமிகத்தில் கட்டிடம் கட்டுவது முதல், கருங்கல்லை அள்ளி போடுவது வரை பல்வேறு கடுமுழைப்பு தொழில்கள் இருக்கின்றன. இதில் ஈடுபடும் தொழிலாளிகள் தமது முதலாளிகளிடம் சண்டை போடாமல், ஊதிய உயர்வு கேட்காமல் இருப்பதற்கு டாஸ்மாக் வழங்கும் ஆனந்த அமைதியே காரணம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? தங்களை அடிமைகள் போல நடத்தும் மேலதிகாரிகளை தட்டிக்கேட்காமல் அடிபணிந்து அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் அமைதியாக வேலை பார்ப்பதற்கு மாலையில் உள்ள போகும் இந்த குவார்ட்டர்தான் காரணமென்பது எத்தனை பேருக்கு தெரியும்?

காலையில் பால்பாக்கெட் போடும் அண்ணாச்சியிலிருந்து, நள்ளிரவில் பாதுகாப்பிற்காக விசிலடிக்கும் நேபாளத்து கூர்க்கா முதல் தமிழகத்தின் அன்றாட வாழ்வில் இயங்கும் அத்தனைபேருக்கும் டாஸ்மாக்கே சரணாலயமாக இருக்கிறது. ஒருவேளை நாளை முதல் தமிழகத்தில் டாஸ்மாக் இல்லையென்றால் முழு தமிழ்நாடும் தடுக்கி விழுந்துவிடும். பூனை விழுந்தால் பிரச்சினை இல்லை. யானை விழுந்தால் படுத்துக் கொள்ளும். முழு தமிழ்நாடும் விழுந்தால்? இந்தியாவே தள்ளாடும்.

குடித்து விட்டு மனைவிகளை அடிக்கும் ஆண்கள் சிலர்தான். பெரும்பாலான ஆண்கள் குடிப்பதினாலேயே சண்டை போடுவதில்லை. அந்த வகையில் தமிழகத்தின் குடும்பங்கள் சண்டை சச்சரவின்றி அமைதியாக இருப்பதற்கு இந்த மதுக்கடைகளே காரணம். இல்லத்தரசிகள் அம்மா மற்றும் அய்யா குடும்பத்து தொலைக்காட்சி தொடர்களை பார்த்து இளைப்பாறுவது போன்று இல்லத்தரசர்கள் அரசு மதுக்கடைகள் மூலம் அமைதியாக இருக்கின்றனர். இவையெல்லாம் ஆய்வு படிப்புக்குரிய விசயங்கள் என்பதால் தமிகத்தின் அறிவார்ந்த கல்வி அமைப்புக்கும் கூட டாஸ்மாக் பாரிய பங்காற்றுகிறது.

பதிவுலகம், எழுத்தாளர்களை மொக்கையாக வைத்திருக்கும் டாஸ்மாக்!

பதிவுலகை எடுத்துக் கொள்வோம். இங்கே கூகிள் பஸ்ஸில் இலக்கியம் வடிக்கும் குருஜிக்கள் முதல் அதற்கு பொழிப்புரை போடும் அக்மார்க் மொக்கைகள் வரை அவர்களுடைய பதிவுலக அரட்டை வழக்கத்தை டாஸ்மாக்கே வடிவமைக்கிறது. டாஸ்மாக் மட்டும் இல்லையென்றால் பதிவுலகம் சீரியசான கொள்களைப் பேசி அடித்துக் கொண்டு கொலையுலகமாக மாறும். அந்த வகையில் இணையத்தின் நிம்மதி கூட டாஸ்மாக்கின் அமுதம் மூலமாகவே தொடர்கிறது என்பதால் இங்கே நாமும் அதாவது இணைய மக்கள் அதற்காக அரசுக்கு நன்றி செலுத்த வேண்டும்.

சாரு தொடங்கி, அநேக சிறுபத்திரிகையாளர்கள்  தங்களுக்குள் அடித்துக் கொண்டோ இல்லை மூக்குடைத்துக் கொண்டோ இருப்பதால் மற்றவர்கள் செவனே என்று தத்தமது வேலையை பார்க்கலாம். இவர்களது அதி முக்கியமான விசயங்களாக அற்ப பிரச்சினைகள் இருப்பதற்கு டாஸ்மாக்கே காரணம். அந்த வகையில் தமிழகத்தின் அறிவு ஜீவிகளின் இயக்கமும் அரசு மதுக்கடைகள் இன்றி இல்லை. இன்று ஆண்டு தோறும் சில நூறு திரைப்படங்களை வழங்கும்  கோடம்பாக்கமும் தனது படைப்புக் களைப்பை டாஸ்மாக்கின் மூலமே தணித்து வருகிறது. ஹாலிவுட்டுக்கே சவால் விடும் எந்திரன் போன்ற மகத்தான படைப்புகள் பல டாஸ்மாக்கை அடித்து விட்டு நடக்கும் உரையாடல்கள் மூலமே சாத்தியமாகியிருக்கின்றது.

டாஸ்மாக் வெறும் குடியல்ல, அது ஒரு ஜனநாயகம்!

இன்றைக்கு தமிழகத்தில் இருக்கும் பல்வேறு நலத்திட்டங்களுக்கு மக்களிடையே நிதி உதவி என்று கேட்டிருந்தால் அவை சில இலட்சங்களை தாண்டப் போவதில்லை. சுனாமிக்கு கூட சில கோடிகள்தானே வசூலானது? ஆகையால் இந்த மக்கள் நலத்திட்டங்கள் தொய்வின்றி நடக்க வேண்டுமென்றால் டாஸ்மாக் கடைகள் தொந்தரவின்றி இயங்க வேண்டும். மக்களிடமிருந்து, மக்கள் வழியாக, மக்களுக்கே என்ற உயர்ந்த ஜனநாயகத்தை உலகிலேயே தமிழகத்தில் மட்டும் சாத்தியமாக்கியிருக்கும் டாஸ்மாக்கை இனியேனும் குடி, கூத்து என்று இழிவாக பாராதிருப்பதோடு, உங்களால் முடிந்த ஆதரவுத் தொகையை ஒரு குவார்ட்டர் வாங்கியாவது உதவி செய்யுங்கள்!

_______________________________________________________________________

– பொது மக்கள் நலன் கருதி, தமிழக அரசுக்காக வினவு வெளியிடும் இலவச விளம்பரம்.

________________________________________________________________________

  1. பனமரத்துல வவ்வாலு ; டாஸ்மாக் இல்லேன்னா திவாலு !! | வினவு!…

    குவாட்டர் வாரியம் டாஸ்மாக்கின் மகத்துவங்கள் : பொது மக்கள் நலன் கருதி, தமிழக அரசுக்காக வினவு வெளியிடும் இலவச விளம்பரம்….

  2. அருமையான விளம்பரம். தேர்தல் சமயத்தில் எல்லா கட்சிகளுக்கும் மிகவும் உபயோகமாக இருக்கப் போகிறது.

  3. முதல்ல குழம்பிட்டேன்! டாஸ்மாக்கு ஆதரவா எதிர்ப்பான்னு. இப்போ தெளிவா தெளிஞ்சிடுச்சு.

  4. உயிர் தமிழுக்கு
    உடல் மண்ணுக்கு
    குடல் டாஸ்மாக் க்கு
    பணம் அரசுக்கு
    கவலை உங்களுக்கு

  5. panamarathula vavvalu tasmac illena divvalu. its very ulti mate energu drink on my mind. the two and my political porties is west in people life.this thougt comes up in your dictionary. i woud like thanking for your giving the panamarathula,katturai.

  6. குடிகாரனா பார்த்து திருந்தா விட்டால் குடியை ஒழிக்க முடியாது. மக்களா பாத்து குடிக்கறத நிறுத்தி, இந்த கட்டுரையை படிச்சு, அறிவ வளத்துகிட்டு, மேலும் கீழைக்காற்று வெளியிடும் மகத்தான புத்தகங்களை படித்து உருப்படுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.

    • அண்ணன் சிங்கம் சொன்னதை இந்த அன்புத் தம்பி கரடி அப்படியே வழி மொழிகிறேன். எதுவா இருந்தாலும் மக்களா பாத்து திருந்திக்கிட வேண்டியது தான். டாஸ்மாக்கும் இருக்கும் ஸ்பெக்ட்ரமும் இருக்கும். மக்கள் தான் ரோட்ல குழி பாத்து நடக்கிற மாதிரி டாஸ்மாக் பார்த்து ஒதுங்கிக்கிடனும் – ஊழலில் இருந்து விலகிக்கிடனும். அப்புறம், கருணா, ஜெயா, சோனியா, அத்வானி, சிதம்பரம் போன்றவர்கள் மக்கள் எனப்படும் ஹோமோ சேப்பியன்ஸ் சேப்பியன்ஸ் வகைப்பட்ட உயிரினப் பிரிவுக்குள் அடங்கமாட்டார்கள்.

      சிந்தனையாளர் சிங்கப்பூரானுக்கு வாழ்த்துக்களை கரடியூரானாகி நான் சொல்லிக்கொள்கிறேன்.

      • தலைவா

        ஸ்பெக்ட்ரம்-ல கூட ஊழல் நடக்காமல் இருக்கலாம், சென்னை சாலைகளில் குழி இல்லாத காலமும் வந்து விடலாம், ஏன் வினவு கூட திருந்திவிடலாம்…ஆனா, சினிமாவும் சரக்கும் இல்லாத தமிழ்நாடு, சரக்கடிக்காத தமிழ் மக்கள்…நோ சான்ஸ்!

        அப்படியே எல்லா கடையையும் மூடிட்டாலும் ஆந்திரா போயி குடிப்போம்ல..

        http://expressbuzz.com/states/tamilnadu/booze-lovers-spoilt-for-choice-at-this-town/234099.html

        அரசாங்கத்துக்கு ஒரே ஒரு வேண்டுகோள்: எங்க ஊர்ல கிடைக்கிற மாதிரி நல்ல நல்ல சரக்குகள் தமிழகமெங்கும் கிடைக்குமாறு செய்யுங்கள். கோடி புண்யம்!

        • ஸ்பெக்ட்ரமில் ஊழல் இல்லாத காலமும் – வினவு “திருந்தும்” காலமும் வரவே வராது என்று நினைக்கிறேன்.

          கெவருமென்டு ஆசுபத்திரில நல்ல மருந்தையே தராத அரசாங்கம், எங்க அண்ணன் சிங்கப்பூரானின் தவிப்பைப் புரிந்து கொண்டு அவரது ஊரில் நல்ல சரக்கு கிடைக்க ஆவன செய்ய வேண்டும். ஏன்னா அது அவ்வளவு முக்கியம்!

          கூரையில்லாத பள்ளிக்கூடத்தைப் பாத்துட்டு கோவிச்சுட்டு டவுனுக்குப் போயி படிக்க அவரது ஊரு பொடியனுகளுக்கு வசதியிருக்கோ இல்லையோ – அண்ணனுக்கு ஆந்திரத்துக்குப் போயி சரக்கடிக்க வசதியிருக்கு. என்ன இருந்தாலும் சிங்கப்பூரான் தமிழ்நாட்டுக்குத் தர விரும்பும் பிசினஸை ஆந்திராவுக்கு தாரை வார்த்து தமிழின துரோகியாகி விடாமல் இருக்க வேண்டும் கருணாநிதி.

          சரியாச் சொல்லிட்டனாண்ணே?

        • சிங்கப்பூரானும், கரடியூரானும் சரக்கட்டிச்சுட்டு பேசுற மாதிரியே பேசினாலும் சரக்கோட பேசுறாங்க…

  7. குடி குடிடா,குடி குடிடா, குடி குடிடா ….. குடி , குடி, குடித்துக்கொண்டே இரு .

  8. பதிவர்களின் சுண்டக்கஞ்சு வியாக்கியானத்திற்கும் டாஸ்மார்க்கே காரணம் என்பதை மறந்து விட்டீர்களே !

    ராஜாத்தி அம்மாளோடு மிடாஸ் சசிகலா நட்பைப் பெறுவதற்கும் டாஸ்மார்க் காரணம் என்பதை மறந்து விடாதீர்கள். ஆக திராவிட கட்சிகளின் ஒற்றுமைக்கும் டாஸ்மார்க்தான் காரணம் என்பதை மறவாதீர்கள்

    வாழ்க டாஸ்மார்க் வாழ்க வாழ்கவே

  9. இந்தக் கட்டுரை அதியமான் எழுதியது போலவே உள்ளது. இடையிடையே வினவின் எதிர்வாதங்கள் நையாண்டி தோனியில் இருந்திருக்கவில்லையென்றால், முதலாளி சுரண்டுவதே தொழிலாளியின் நலனுக்காகவும், மக்களுக்கு வேலை வாய்ப்புக் கொடுக்கவும்தான் என்று சொல்லும் அதியமானின் எழுத்தாகவே என்னால் புரிந்து கொள்ளப்பட்டிருக்கும்.

    அரசு மது விற்பதே மக்களுக்கு சோறு போடத்தான், எனவே சோறு சாப்பிடவிட்டாலும் பரவாயில்லை மது அருந்துவதன் மூலமாக அரசின் நல உதவிக்கு நிதி கொடுங்கள், முட்டை – சிக்கன் யாவாரிகளுக்கும், பாசுமதி அரிசி விவசாயிக்கும், மருத்துவமனை ஏழை முதலாளிகளுக்கும் இன்ன பிற கணக்கில் வராத பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளுக்கும் காரணம் இந்த டாஸ்மாக் எனவே குடித்து குடலை புண்ணாக்கி தியாகம் செய்து தமிழகத்தை வாழ வைப்பீர், அப்போதுதான் பெயர் பொருத்தம் சரியாக இருக்கும் ‘குடி’மகன்களே…

    நல்ல ஆக்கம்.

    • ////முதலாளி சுரண்டுவதே தொழிலாளியின் நலனுக்காகவும், மக்களுக்கு வேலை வாய்ப்புக் கொடுக்கவும்தான் என்று சொல்லும் அதியமானின் எழுத்தாகவே என்னால் புரிந்து கொள்ளப்பட்டிருக்கும்////

      அப்படி சொல்லவில்லை அசுரன். முதலாளிகள் (அல்லது தொழில்முனைவோர்கள் எனப்படும் entrepreneurs ; and i take pride in being an entrepreneur) தொழில்களை துவங்குவதின் நோக்கம் லாபம் தான். மற்ற சில காரணிகளும் (தனிச்சையாக, சுதந்திரமாக, இனொருவரிடம் வேலை செய்ய விரும்பாமல் வாழ) உள்ளன. ஆனால் லாப நோக்கம் தான் அடிப்படையானது. அது பாவம் அல்ல, குற்றம் அல்ல. மாறாக, மிக இயலபான மனித குணம் என்பதே யதார்த்தம். மக்களின் நலன் மற்றும் வேலை வாய்ப்பு அளிப்பது என்பதெல்லாம் side effects அல்லது இதர விளைவுகள் தாம்.

      ஆனால் ‘சுரண்டல்’ என்ற வாதத்தை தான் மறுக்கிறோம். அப்படி ஒன்றும் கிடையாது என்பதுதான் விஞ்ஞான பூர்வமான நிருபனம். மார்க்ஸ் முன்மொழிந்த labour theory of surplus value முற்றிலும் தவறான hypothesis என்று கடந்த 150 ஆண்டு கால வரலாறு நிருபிக்கிறது. உபரி மதிப்பு என்பது 100 % தொழிலாளர்களின் உழைப்பினால் ‘மட்டும்’ உருவாகிறது ; அதுவே லாபம் என்று வெளிப்பட்டு, பிறகு மூலதனமாக குவிகிறது என்ற மார்கிசிய பார்வை தவறு. அது சரி என்றால், மார்க்ஸ் அதை அடிப்படையாக கொண்டு முன்மொழிந்த eventual doom of capitalism through recurring business cycles, where each depression will be worse than the previous one, while the living conditions of the labour will keep deteriorating as the ‘total surplus value’ in the system will keep decreasing over time due to introduction of labour saving machineries நடந்திருக்க வேண்டும். ஆனால் கடந்த 150 ஆண்டுகளில், தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் (உலகெங்கும், முக்கியமாக மார்க்ஸ் கண்ட அய்ரோப்பியாவில்) மிக உயர்ந்திருக்கிறது. progressive worsening of business cycles நடக்கவில்லை.

      எனவே, உபரியை யாரும் சுரண்டவில்லை. சுரண்டல் என்று ஒன்றும் இல்லை. அது மிக தவறான மாயை. ஆனால் அதை விஞ்ஞானம் என்று நீங்கள் நம்புவதால், இந்த விவாதம் முடியாது. but proof of pudding is in eating…

  10. மாதம் மும்மாறி பொழியுதோ இல்லையோ , டாஸ்மாக் பொழிந்தால் சரிதான்..

    மக்கள் தேவையறிந்து அள்ளிதரும் மகேசன் வாழ்க… அவர்தம் குலம் வாழ்க…

    ( டாஸ்மாக் ல உயர்பதவி கொடுத்தால் வேண்டாம்னா சொல்பவர் எத்தனை பேர்..)

  11. தொடர் வண்டியில் ஒரு சம்பவம் சரக்கடித்த ஒருவர் தள்ளாடித் தள்ளாடி வண்டியில் ஏறுகிறார். சரக்கடித்திருந்தாலும் டிக்கெட் வாங்க மறக்கவில்லை. கூட்டம் நிரம்பி வழிகிறது. அவரால் நிற்க முடியவில்லை.

    “கவர்மெண்ட்டுக்கு அதிகமா வரி செலுத்தரவன் நான். எனக்கே உட்கார இடமில்லையா?”

    இதைக்கேட்ட பலரும் கொல்லென சிரித்துவிட்டார்கள்.

    குடிகாரர்கள் சரக்குக்கு செலுத்துவது கூடுதல் வரிதானே! அவர் வாதமும் சரிதானே!

    இதில் கூடுதலாக நம்மை சிரிக்கவும் வைக்கிறார்களே! அந்த வகையில் பலரின் மனக் கவலைளை போக்கும் மா மருந்தாகவும் அமைகிறதே டாஸ்மாக்.

  12. தமிழகத்தில் ஜாதி கலவரங்களே இல்லாமல் போனது டாஸ்மாக்கால் தான்.கிராமப்புறங்களில் சக்கனாங்கடைகளில் சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் தழைக்கிறது செழிக்கிறது. வெளியூர்காரன் வந்து டாஸ்மாக்கிற்கு வழி கேட்டால் தன் வீட்டு விருந்தாளி போல் அன்போடு வழிகாட்டுகிறார்கள்.இந்த ஒரு விஷயத்திற்காக வாழ்க டாஸ்மாக்.

  13. டாஸ்மாஸ்க்கு வினவு இலவசமாவிளம்பரம் தருவதை முன்முடி
    வின்படி குடிய எதிர்த்து பக்கிசனதா,தட்டு
    வானி கும்பலெல்லாம் கன்னியா குமரி யிலிருந்து ஊர்வலம் வர்ராகப்பா! குடிமக்க எல்லாரும் உஜாரா இரு் ”கப்பா!

  14. பனமரத்திலா வவ்வா இருக்கும் அட போங்கப்பா!ஆலமரத்தில தொங்கும்

  15. புல்லா ஒரு பாட்டில் ரம்மை ‘ரா’வா அடிச்ச மாதிரி ‘சுர்’ரென்று இருந்தது. ஆனால் நம் ‘குடி’மகன்களுக்கு சரக்கு உள்ளே போனால் மிளகாயும் உரைக்காதே. இது எப்படி உரைக்கும்?
    இருந்தாலும் சரியான பதிவு. இந்தவிதமாக பொருளாதார ரீதியாக ‘குடி’யைப் பார்க்க உதவியதற்கு நன்றி.

    ஒரு வேண்டுகோள். வினவின் பல கட்டுரைகளில் தேதிகளே குறிப்பிடப்படாமல் இருக்கிறது. இக்கட்டுரை சில பல வருஷங்களுக்குப் பொருந்துவதால் பிரச்சனையில்லை. இன்னொரு கட்டுரை மாலேகான் குண்டுவெடிப்பு பற்றியது. அது எழுதப்பட்ட காலம் அதில் குறிப்பிடப்படவில்லை.
    தயவு செய்து கட்டுரைகள் எழுதப்பட்ட அல்லது முன்பு வெளியிடப்பட்டிருந்தால் வெளியிடப்பட்டிருந்த காலம் தேதி குறிப்பிடுங்கள். பயனுள்ளாதாயிருக்கும்.

  16. //இன்றைக்கு தமிழகத்தில் இருக்கும் பல்வேறு நலத்திட்டங்களுக்கு மக்களிடையே நிதி உதவி என்று கேட்டிருந்தால் அவை சில இலட்சங்களை தாண்டப் போவதில்லை. சுனாமிக்கு கூட சில கோடிகள்தானே வசூலானது? ஆகையால் இந்த மக்கள் நலத்திட்டங்கள் தொய்வின்றி நடக்க வேண்டுமென்றால் டாஸ்மாக் கடைகள் தொந்தரவின்றி இயங்க வேண்டும். மக்களிடமிருந்து, மக்கள் வழியாக, மக்களுக்கே என்ற உயர்ந்த ஜனநாயகத்தை உலகிலேயே தமிழகத்தில் மட்டும் சாத்தியமாக்கியிருக்கும் டாஸ்மாக்கை இனியேனும் குடி, கூத்து என்று இழிவாக பாராதிருப்பதோடு, உங்களால் முடிந்த ஆதரவுத் தொகையை ஒரு குவார்ட்டர் வாங்கியாவது உதவி செய்யுங்கள்!

    _________________________________//

    நெத்தியடி கட்டுரை … நெத்தியடி வரிகள்…

    மக்கள் எதிரியான இந்த அரசின் டாஸ்மாக் கடையினை இன்னும் விட்டு வைக்காமல் அடித்து நொறுக்க வேண்டும்.

  17. சார் புரியவில்லை நீங்கள் டாஸ்மாஸ்க்கு ஆதரவா எதிர்ப்பா

    டாஸ்மாக் வேண்டுமா வேண்டாமா

    இந்த டாஸ்மாஸ்க் மாட்யூல் நன்றாக இருந்தால் ஏன் இதை மற்ற மாநிலங்களும் பின்பற்ற கூடாது

    சரி மற்ற கட்சிகள் ஆளும் அரசுகளை விடுவோம் ஏன் வினவு இதை கம்யூனிஸ்ட்கள் ஆலும் கேரளாவுக்கும் மேற்க்கு வங்கத்துக்கும் சிபாரிசு செய்ய கூடாது

  18. அரசு செய்தி :

    கள்ள சாராயம் காய்ச்சுபவர்களை அரசாங்கம் உடனடியாக கைது செய்யும். கள்ள சரக்கை தான் நாங்கள் டாஸ்மாகிலேயே விநியோகம் செய்கிறோமே ..

  19. இந்தக் கட்டுரையின் சில முக்கியமான கண்டுபிடிப்புகளை நாம் ஒளியூட்ட விரும்புகிறோம். //ஏதோ தமிழகம் முழுவதும் தினமும் குடித்து விட்டு கெட்டுப் போகிறது என்று சிலர் பெரும் ஒழுக்கவாதிகளாக பேசுகிறார்கள்// //தமிழகத்தில்தான் வேறு மாநிலங்களில் இல்லாத அளவு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஒரு ரூபாய் அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள், இலவச தொலைக்காட்சி, இலவச கேஸ் இணைப்பு – அடுப்பு, மழை வந்தால் இரண்டாயிரம் ரூபாய் பணம், மாணவர்களுக்கு சத்துணவு, தினமும் முட்டை, பள்ளியிறுதி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கட்டணமில்லாத உயர் கல்வி, ஒரு இலட்ச ரூபாய் காப்பீடு திட்டம், பெண்களுக்கு திருமண உதவித் தொகை, விதவைகளுக்கு மறுவாழ்வு திட்டம், முதியோர்களுக்கு ஓய்வூதியம், ஏழைகளுக்கு இலவச வீடுகள், சமத்துவபுரம், உழவர் சந்தை, கலைஞர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள்…….

    எத்தனை எத்தனை திட்டங்கள்….சிலர் நினைக்கலாம், இந்த திட்டங்களின் பலன் முழுவதும் மக்களுக்கு போய்ச் சேரவில்லை என்று. அதை மறுக்க வில்லை. ரேசன் அரிசியும், இலவச தொலைக்காட்சியும் கேரளத்தில் அமோகமாய் விற்பனை செய்யப்படுவது உண்மைதான். மக்களுக்கு அளிக்கப்படும் உதவித் தொகைகளில் ஆயிரமோ, இரண்டாயிரமோ கட்சிக் காரர்களுக்கும், அதிகாரிகளுக்கும் செல்வதும் கூட உண்மைதான். இவையெல்லாம் ஒழுக்கவாதிகளின் கவலையாகத்தான் இருக்கிறதே அன்றி மக்கள் இவை குறித்து கவலைப்படுவதில்லை. தனக்கு இரண்டாயிரம் ரூபாய் சும்மா கிடைக்கும்போது அதில் கால்வாசி கழிவுத் தொகையாக எடுத்துக் கொள்ளப்படுவது குறித்து அவர்களுக்கு ஏமாற்றமில்லை// //டாஸ்மாக் விற்பனை வருவாய் மூலம்தான் தமிழக அரசு தனது நலத்திட்டங்களுக்கான நிதி ஆதாரத்தை திரட்டுகிறது. இது உண்மையெனில் டாஸ்மாக் விற்பனையை ஏன் எதிர்க்க வேண்டும்? // // குடித்து விட்டு மனைவிகளை அடிக்கும் ஆண்கள் சிலர்தான். பெரும்பாலான ஆண்கள் குடிப்பதினாலேயே சண்டை போடுவதில்லை. அந்த வகையில் தமிழகத்தின் குடும்பங்கள் சண்டை சச்சரவின்றி அமைதியாக இருப்பதற்கு இந்த மதுக்கடைகளே காரணம். இல்லத்தரசிகள் அம்மா மற்றும் அய்யா குடும்பத்து தொலைக்காட்சி தொடர்களை பார்த்து இளைப்பாறுவது போன்று இல்லத்தரசர்கள் அரசு மதுக்கடைகள் மூலம் அமைதியாக இருக்கின்றனர். // // ஆக டாஸமாக் என்ற சங்கிலியை பின்தொடர்ந்து பார்த்தால் அதில் முழு தமிகமும் ஏன் இந்தியாவும் கூட பிணைக்கப்பட்டிருப்பதோடு பல கோடி மக்கள் வீட்டில் அடுப்பெரியவும் இந்த மது விற்பனை பாரிய பங்காற்றி வருவது தெள்ளத் தெளிவாக விளங்கும்.// மேற்கண்ட ஒளியூட்டங்கள் இந்தக்கட்டுரையின் நோக்கத்தை சந்தேகிக்க வைக்கின்றது. தேர்தல் நெருங்குகின்றது; தி.மு.கவிற்கு வினவு தரும் சிறப்பான விளம்பரம். இந்தக்கட்டுரை, டாஸ்மாக்கின் கோரத்தை மறைத்து நையாண்டி என்ற போர்வைக்குள் ஒழிந்துகொண்டு உண்மையாகவே டாஸ்மாக்கிற்கு விளம்பரம் செய்துள்ளார்கள். இது பார்ப்பன எழுதுகோள். மைக்கு பதிலாக மதுவல்ல நஞ்சூற்றி எழுதப்பட்டது. வினவுவே எச்சரிக்கை! இந்தக்கட்டுரை டாஸ்மாக் மீதான கடுமையான பார்வையை தளர்த்த உதவி செய்திருக்கின்றது. கழக உடன்பிறப்புகளுக்கு பிரச்சாரத்திற்கு பிட் எழுதிக்கொடுத்த சேவை. உங்கள் அரசியல் சாயம் வெளுக்கின்றது. உங்கள் அரசியலில் நேர்மையில்லை. மாற்றிக்கொள்ளுங்கள்.

    • கொஞ்சம் கஸ்டம்தான்… கேப் விடாம வரிசையா வற்றாங்க… இந்தியாவிலேயே அற்புதமான, திறமைமிக்க பல நகைச்சுவைக் கலைஞர்களை பெற்றெடுத்த பூமி தமிழகம் என்பார்களாம். இங்கோ அரசியல் நையாண்டி கட்டுரையை ரொம்ப சீரியசாக அகழ்வாராய்ச்சி செய்து வரிசை கட்டி வருகிறார்கள்… ஒருவர் இங்கு கரண்டு பற்றாக்குறை இருப்பது போல ஒளியூட்டு வேறு செய்கிறார்.

    • முரசுவின் ஒளியூட்டு சரியல்ல. ஆப்கானிஸ்தானில் வூட்டு வூடு கஞ்சாவும், ஒப்பியமும் பயிரிடுவதுதான் குடிசைத்தொழிலாம். இதை ‘ஒரு நாடே சோறு சாப்பிடுகிறது. அதனால் அது நல்லது’ என்கிற ரீதியில் யாராவது விளக்கம் சொன்னால் அதை நாம் எப்படி எடுத்துக் கொள்வோம் ?
      அப்படி அம்மக்களை இழிவு நிலைக்குத்தள்ளிய அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் நல்லவர்கள் என்று நாம் சொல்வோமா?
      மக்களின் வாழ்க்கைத் தரத்தை சீரழிக்கும் டாஸ்மாக்கின் கொழிக்கும் வருமானத்திலிருந்து கொஞ்சூண்டு பணம் இலவசமாகத் தந்தால் அது மக்களை எப்படி கையேந்தி நிற்கும் நிலைக்குத் தள்ளிவிட்டுள்ளது என்பதன் விளக்கமே இந்தக் கட்டுரை ஐயா.
      நீங்கள் சொல்வது போல பார்ப்பன எழுதுகோலும் அல்ல. பிட்டும் அல்ல. உடன் பிறப்புகள் இந்த பிட்டை வைத்து தேர்தல் பரிட்சை எழுதினால் கண்டிப்பா சைபர் மார்க்குதான்.
      உங்க காசையே உங்களுக்கு இனாமா தருகிறார்கள் என்கிற விழிப்புணர்வு எச்சரிக்கை இது.

  20. ஹ வணக்கம் அண்ணாத்தே, எங்க நாமளா பத்தி எழுதலியே நு கவலை பட்டுகுனு இருந்தோம். சரக்க பத்தி எழுதினாலும்
    சரக்குள்ள கட்டுரையா தான் எழுதி இருக்கீங்க .ஆனா இதுல சில முக்கியமான விஷயங்கள விட்டுட வினவ வன்மையாகண்டிகுறேன் . 1 . போலி சரக்குங்க , போலி label வொட்டி வருவது . இந்த பணம் எல்லாம் யாருக்கு போகுது? 2 . இந்த போதைல
    நம ஆண்கலும் சீரியல் போதைல நம்ப பொம்பளைகளும் இருகுரதனால தமிழ் நாடு எபடிஎல்லாம் கொள்ளை அடிக்கபடுது,நம்ம விவசாயம் எப்படி அழிந்சுது , ஏன் இலங்கைளையும் தமிழ்நாட்டு பார்டர்லயும் நம்ம ஆளுங்களை கொல்லுவதையும் கண்டுக்ககூட நமக்கு நேரம் இல்லாம போச்சு ( இல்ல போதைல கவனிகமா இருந்திட்டோம்). இதையும் எழுதி இருந்த நல்ல இருந்திருக்கும் .
    என்னவோ உலகிலேயே சாராயம் விற்று பிழைப்பு நடத்தும் ஒரே நாடான தமிழ் நாட்டில் பிறக்க நாம் எல்லாம் என்ன தவம் செய்தோமோ ?

Leave a Reply to sinamkondathamizan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க