privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்வெத்துவேட்டு விஜயகாந்தின் அதார் உதார் அரசியல்!

வெத்துவேட்டு விஜயகாந்தின் அதார் உதார் அரசியல்!

-

வெத்துவேட்டு விஜயகாந்தின் அதார் உதார் அரசியல் !

வெத்துவேட்டு விஜயகாந்தின் அதார் உதார் அரசியல் !இந்த உலகில் பைசாவுக்கு அருகதை இல்லாத விசயங்களுக்கெல்லாம் தமிழ் மக்கள் உணர்ச்சிவசப்படுகிறார்கள் என்று சிலர் கூறுவது உண்மைதானோ? தமிழக அரசியலின் திசையை தீர்மானிப்பவர்களாக திரையுலக மாந்தர்கள் இருக்கும் அவலத்தினை பார்க்கும் போது அது பொய்யில்லை என்றே தோன்றுகிறது. பின்னே ஒரு தி.மு.க, அ.தி.மு.க தொண்டனுக்கு இருக்கும் அடிப்படை அரசியல் அறிவு கூட இல்லாத விஜயகாந்த் போன்ற அட்டைக்கத்திகள் அரசியல் உலகில் சுழற்றும் வாள் சண்டையைப் போய் ஆகா, ஓகோ என்று உளமாற உருகி ரசிப்பதற்கும் இங்கு ஒரு பரிதாபத்திற்குரிய கூட்டம் இருக்கிறதே?

1952இல் இது குழந்தையாக பிறந்த போது பின்னொரு நாளில் வருங்கால முதலமைச்சர் என்ற முழக்கத்தினைக் கேட்கும் பேறு வருமென்பதை அதனது பெற்றோர்களே அப்போது நம்பியிருக்கமாட்டார்கள். பணக்கார விவசாய குடும்பத்தை சேர்ந்த இந்த குழந்தையின் சுற்றமெல்லாம் பண்ணையார் உலகின் மதிப்பீடுகளோடுதான் புழங்கி வந்தன. அது என்ன பண்ணையார் உலக மதிப்பீடுகள் என்று கேட்போர், கருப்பு வெள்ளை பீம்சிங் படங்களையோ இல்லை கண்ணீர் விட்டுக் கதறும் சிவாஜி கணேசனின் அந்தக்கால படங்களையோ பார்க்க வேண்டும்.

1947க்குப் பிந்தைய தமிழக அரசியல் காலகட்டத்தில் காங்கிரசுக் கட்சியினை நிரப்பிய இந்தப் பண்ணையார்கள், மிட்டாமிராசுதார்களின் சூழலுக்கு மாற்றாக திராவிட இயக்கம் கொஞ்சம் நடுத்தரமான மனிதர்களை கொண்டு வந்தது. இதைக்கூட சகிக்க முடியாமல் அந்த மிட்டாமிராசுகள் “காலம் கெட்டுப்போச்சு, தி.மு.க காரன் அரசியல் தரத்தை கெடுத்துவிட்டான்” என்று புலம்புவது வழக்கம். அதன் இன்றைய தொடர்ச்சிதான் துக்ளக் சோ மற்றும் காங்கிரசு பெருச்சாளிகள் ஊளையிடும் காமராசரின் ஆட்சி பொற்காலம் வகையறா தொகையறாக்கள்.

ஆக 50களில் அதிகாரத்தை இழந்த காங்கிரசு பெரிசுகளின் ஆண்ட பரம்பரை திமிர்தான் தி.மு.க எதிர்ப்பாக அன்று இருந்தது. இன்று தி.மு.கவும் ஆண்ட பரம்பரை பட்டியிலில் சேர்ந்து விட்டது வேறு விசயம். இரண்டு ஆண்டான்களும் கூட்டணி வைத்து இருந்தாலும் காங்கிரசு முதலைகளின் பேச்சையோ எழுத்தையோ கவனித்து பார்த்தீர்களானால் அந்த பண்ணையார் மேட்டிமைத்தனத்தை போகிற போக்கிலேயே கேட்கலாம்.

வெத்துவேட்டு விஜயகாந்தின் அதார் உதார் அரசியல் !விஜயகாந்த் பேசும் தி.மு.க எதிர்ப்பில் இந்த ஆண்ட பரம்பரை தொனிதான் மையமாக இருக்கிறது. மக்கள் அதை அப்படி எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும், தி.மு.க ஊழலை யார் எதிர்த்தாலும், அதை வரவேற்கும் மனநிலையில் மக்கள் இருப்பதாலும் இதை யாரும் கவனிப்பதில்லை. மேலும் விஜயகாந்த், கொள்கை என்று பேசும் எல்லா வெத்துவேட்டுகளுக்கும், ஒழுக்கவாத நீதிகளுக்கும் இதுவே அடிப்படை என்று கூட சொல்லலாம்.

1978இல் “இனிக்கும் இளமை” திரைப்படத்தின் மூலம் தனது திரையுல வாழ்வை துவங்கிய விஜயகாந்த் 80 களில் கோபம் கொண்ட சிவப்பு இளைஞனாகவும், 90களில் அந்த கோபம் தணிந்து கொஞ்சம் பக்குவம் முதிர்ச்சி வந்து நேர்மையான போலீஸ் அதிகாரியாகவும், 2000த்தில் அந்த நேர்மை கொஞ்சம் எக்ஸ்ட்ரா லார்ஜ்ஜாக விரிந்து பாகிஸ்தான் தீவிரவாதிகளை பந்தாடும் இராணுவ கேப்டனாகவும் பிரமோஷன் ஆனார். இறுதியில் விருதகிரி எனும் சூப்பர் கோமாளியாக அவரது திரையுலக வாழ்வு ஏறக்குறைய முடிந்து விட்டது எனலாம்.

விஜயகாந்தின் திரைப்படங்களில் நடந்த இந்த மாற்றம் அவரது இன்றைய அரசியல் பிரவேசத்திற்கு பொருத்தமாகத்தான் இருக்கிறது. பி, சி சென்டர்களின் உள்ள சாதாரண மக்கள் அவரது நேர்மையான போலீசு வசனங்களில் உள்ளத்தை பறிகொடுத்தார்கள் என்பது எம்.ஜி.ஆரின் ஃபார்முலா இன்னமும் மவுசை இழக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. எனினும் இனி இந்த ஃபார்முலாவுக்கு தேவையிருக்காது. உலகமயமாக்கத்தின் காலத்தில் இப்போது ‘உழைத்து’ முன்னேறிய முதலாளிகள்தான் நாயகர்களாக கொண்டாடப்படுகிறார்கள். இதன் சாட்சியமாக பிற்கால ரஜினியின் கதைகளைக் கூறலாம்.

எம்.ஜி.ஆர் ஃபார்முலாவின் இறுதிக் காலத்தில் இதை விட்டால் இனி கதியில்லை எனும் நேரத்தில்தான் விஜயகாந்த் அரசியலுக்கு வந்தார். ரஜினி எனும் கோமாளி அரசியலுக்கு வரமாட்டார் என்ற தைரியம்கூட இதற்குக் காரணமாக இருக்கலாம். குறிப்பிட்ட வரலாற்றுக் காலத்தில் சில கோமாளிகளின் யூகித்தறிய முடியாத மனப்போக்கு காரணமாக கூட வரலாற்றின் சில அத்தியாயங்கள் எழுதப்படுவதுண்டு. எனினும் எம்.ஜி.ஆர் கூட திராவிட இயக்கத்தின் செயல்பாட்டுப் பின்னணியோடு அரசியலுக்கு வந்தார் என்றால் விஜயகாந்திற்கு அவரது படத்திற்கு வசனமெழுதிய ஏதோ அலிகான் புண்ணியவானின் தயவில் சுலபமாக, எதையும் புடுங்காமல் குதித்து விட்டார்.

வெத்துவேட்டு விஜயகாந்தின் அதார் உதார் அரசியல் !2005 செப்டம்பர் 14 அன்று தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற எந்த பொருளுமற்ற அவியல் வார்த்தைகளை, அதுவும் சீட்டுக்குலுக்கி தெரிவு செய்து, ராகுகாலம் எமகண்டம் பார்த்து இந்த கோமாளி கட்சி ஆரம்பிக்கப்பட்டது. ஆக இந்த கட்சியின் பெயரையும், ஆரம்பித்த நேரத்தையும் ஜோசியர்கள்தான் தீர்மானித்தார்கள் என்பதிலிருந்தே கேப்படனின் வீரத்தை புரிந்து கொள்ளலாம். அந்த வகையில் சனீஸ்வரனுக்கு மிளகாய் யாகமும், ஊட்டியில் கஜமுக யாகமும் செய்த புரட்சித் தலைவிக்கு போட்டியாக இந்த புரட்சிக் கலைஞரும் அவதரித்து விட்டார். இனி இவர்களது கூட்டணியில் ஜோசியக்காரர்களது காலம்பொற்காலமாக இருக்கும் என்பது பதிவுலக ஜோசியக்காரர் அதியமானுக்கு இனிக்கும் செய்தியாகும்.

கட்சி ஆரம்பித்த காலத்தில் அதற்கு தோதாக ஐயாவின் கல்யாண மண்டபம் இடிக்கப்பட்டதும் காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாக கட்சி ஆரம்பிக்கப்பட்டது. ” என் மண்டபத்தையா இடிக்கிறாய், என்ன செய்கிறேன் பார்” என்று கருணாநிதியை எதிர்க்க ஆரம்பித்தார். தனது சொந்த பகையைக் கூட பொதுப்பகையாக மாற்றுகிறார் என்பது கூட தெரியாத மக்கள், கேப்டனின் போர்ப்பரணியை ரசித்தார்கள்.

2006ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வந்தது. ஜெயா எதிர்ப்பு அலையில் தி.மு.க கரையேறிது போல கேப்டனும் ஏதோ ஏழு, ஏட்டு சதவீத வாக்குகளைப் பெற்றார். விட்ட சவுண்டுக்கு இது பெரிய வெற்றி இல்லையென்றாலும் ஊடகங்களும், துக்ளக் சோ போன்ற கருணாநிதியை கட்டோடு வெறுக்கும் பார்ப்பன தரகர்களும் இதை மாபெரும் வெற்றியாக கொண்டாடி ஐயாவை உசுப்பி விட்டனர்.

பத்திரிகைகளைப் பொறுத்தவரை விஜயகாந்தை வைத்து வெளியிடப்படும் செய்திகள், அரசியல் கிசுகிசுக்கள், கூட்டணி பேரங்கள் அனைத்தும் பரபரப்பு தேவையை பூர்த்தி செய்வதால் அந்த நோக்கத்திற்காக நன்கு பயன்படுத்திக் கொண்டனர். துக்ளக் சோவைப் பொறுத்தவரை கேப்டனை கொஞ்சம் சரிக்கட்டி போயஸ் தோட்டத்தில் சேர்த்து விட்டால் அ.தி.மு.க அமோக வெற்றி பெறும் என்று படாதபாடு பட்டார். ஆனாலும் ஒரு உறைக்குள் இரண்டு கத்திகள் இருக்கமுடியாது போலவே இரண்டு ஈகோ ஃபேக்டரிகளும் அப்போது அப்படி சேர்வதற்கான சாத்தியத்தில் இல்லை. இரண்டு தான்தோன்றி தன்னகங்காகர ஆளுமைகள் அவ்வளவு சீக்கிரத்தில் ஒன்றுபடாது என்பதையும் வரலாறு குறித்து வைத்திருக்கிறது.

வெத்துவேட்டு விஜயகாந்தின் அதார் உதார் அரசியல் !இது போக கேப்டன் சரக்கடித்துவிட்டு பேசுகிறார் என்ற உண்மையை அம்மா சொல்ல, கேப்டனும் “நீதான் கூட இருந்து ஊற்றி கொடுத்தாயா?” என்ற ஜாலி ஜம்பர் சண்டையை நீங்களும் மறந்திருக்க மாட்டீர்கள். மேலாக கருணாநிதியின் துரதிர்ஷடத்தை பாருங்கள், அரசியலில் தெற்கு வடக்கு தெரியாத விஜயகாந்தையெல்லாம் மதித்து பேச வேண்டியிருந்தது.

தனக்கு கூடிய கூட்டம், தேர்தலில் வாங்கிய எட்டு சதவீத வாக்குகள் எல்லாம் சேர்ந்து கேப்டனுக்கு முழு போதையை குடிக்காமலேயே அளிக்கத் தவறவில்லை. அடுத்த தேர்தலில் தான்தான் கோட்டையில் கொடியேற்றுவோம் என்று அவர் உண்மையிலேயே நம்பினார். இடையில் தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளில் வாழமுடியாத பண்ருட்டி போன்ற பழம்பெருச்சாளிகள் கேப்டன் கட்சியில் குவிய ஆரம்பித்தனர். கேப்டனும் தனது கட்சியில் ஏழை இரசிகன் செலவழிக்க முடியாது என்று தெளிந்து அந்த பணக்கார பெருச்சாளிகளை மானாவாரியாக சேர்க்க ஆரம்பித்தார். அந்த தேர்தலில் வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணலில் எவ்வளவு செலவழிப்பீர்கள் என்பதுதான் கேப்டனின் முக்கியக் கேள்வியாக இருந்தது.

மற்ற கட்சிகளிலிருந்து வந்த பெருச்சாளிகளுக்கு இந்த கட்சி தனியாக ஒன்றும் பிடுங்கமுடியாது என்பது தெரிந்திருந்தாலும் காலப்போக்கில் சில பத்து தொகுதிகளையாவது கூட்டணி பலத்தில் வென்று செட்டிலாகலாம் என்று தெளிவாக கணக்கு போட்டுத்தான் வந்தனர். ஆரம்பத்தில் இது குறித்து அவர்கள் பேசும்போதெல்லாம் அதாவது கூட்டணி  குறித்து ஆலோசனை வழங்கிய போதெல்லாம் கேப்டன் அதை சட்டை செய்யவில்லை. என்ன இருந்தாலும் தனியாக ஆட்சியைப் பிடித்து நாற்காலியில் அமரப்போகும் கனவை அவர் விடமுடியாது அல்லவா. இவ்வளவிற்கும் 2006 தேர்தலில் அவர் மட்டுமே விருத்தாசலத்தில் வென்றிருந்தார். பா.ம.க, வன்னியர் பகுதியில் சாதி பலம் இன்றி அவர் வெற்றி பெற்றதற்கான பாராட்டை நாம் அந்த தொகுதி மக்களுக்குத்தான் வழங்க வேண்டும்.

இந்நிலையில் வந்த இடைத்தேர்தல்களிலெல்லாம் தி.மு.கவின் அழகிரி ஃபார்முலாவை எதிர்கொள்ள முடியாமல் புரட்சித்தலைவியே சிங்கியடித்த போது கேப்டனின் கட்சி ததிங்கிணத்தோம் போட ஆரம்பித்தது. அப்புறம் 2009இல் வந்த பாராளுமன்ற தேர்தல். இதில் கூட்டணி குறித்து கேப்டன் இருமனதாக இருந்தார். கட்சியில் உள்ள பெருச்சாளிகளெல்லாம் தாங்கள் செலவழித்த கணக்கை காட்டி நெருக்க ஆரம்பித்தனர். தொடர்ந்து இப்படி செலவழிக்க முடியாது என்று லேசாக மிரட்டவும் செய்தனர். ஆனாலும் ஏதோ சில கணக்குகள் படியாததால் அப்போது கூட்டணி சாத்தியமாகவில்லை. சில தற்செயலான காரணங்களால் கூட வரலாற்றின் திசை இப்படித்தான் மாறிச் செல்லும் போலும்.

இந்தத் தேர்தலில் தே.மு.தி.க போட்டியிட்டு ஒரு தொகுதிக்கு தலா ஜம்பதாயிரம் வாக்குகளை வீதம் பெற்றது. இதுதான் இவரின் அதிகபட்ச சாதனை என்பதும் முடிவாயிற்று. இனி கூட்டணி இல்லாமல் குப்பை கொட்ட முடியாது என்பதை வேறு வழியின்றி கேப்டனும் உணரத் துவங்கியிருக்க வேண்டும்.

தற்போது தி.மு.க எதிர்ப்பு ஊடகங்கள் ஸ்பெக்டரம் ஊழலை வைத்து தி.மு.க கூட்டணியை கலைப்பதற்கும், அ.தி.மு.க கூட்டணியை பலப்படுத்துவதற்கும் பெரும் பிரயத்தனங்கள் செய்து வருகின்றன. அதிலும் தனக்கு வயிற்று போக்கு என்றால் கூட ஒரு நாளைக்கு எத்தனை முறை கழிப்பறை செல்ல வேண்டும் என்று அன்னை சோனியாவின் ஆணைக்கிணங்க கால்கழுவும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போன்ற வீராதிவீரசிகாமணிகளெல்லாம்  கேப்டனின் பிறந்த நாளைக்கு அவரது வீடு சென்று கேக்கை ஊட்டி, காங்கிரசு தலைமையில் கேப்டனின் தயவில் மூன்றாவது கூட்டணி என்ற காமெடி பீசுகளெல்லாம் ஊடகங்களில் நிரம்பி வழிந்தன.

வெத்துவேட்டு விஜயகாந்தின் அதார் உதார் அரசியல் !அந்த வகையில் கேப்டன் மீண்டும் செய்திகளில் அடிபடுகிறார். அந்த நம்பிக்கையில் அவரது கட்சியில் உள்ள பெருச்சாளிகளும் சமீபத்தில் நடந்து முடிந்த சேலத்து மாநாட்டிற்காக நிறைய செலவழித்திருக்கின்றனர். சேலத்தை சுற்றி ஆயிரம் கிலோ மீட்டருக்கு வரவேற்பு தோரணங்களோ, பேனர்களோ கட்டியதிலிருந்தே அவர்களது நம்பிக்கையை புரிந்து கொள்ள முடிகிறது. போட்டதை எப்படியும் எடுத்துவிடலாம் என்று அவர்கள் துணிந்து முதலீடு செய்கிறார்கள்.

இது தெரியாத கேப்டன், சேலம் மாநாட்டில் இலட்சக்கணக்கில் திரண்ட கூட்டத்தை அதாவது முதலீடு போட்டு திரட்டப்பட்ட கூட்டத்தைப் பார்த்து தனது இமேஜை யானைக்கு வந்த டயனோசர் கால் நோயாக ஊதிப்பெருக்கி சுயதிருப்தி அடைகிறார். வரலாறு இத்தகைய விசித்திரங்களை எப்போதும் கண்டிருக்கிறது என்பது வரலாற்றுக்கு விதிக்கப்பட்ட சாபமா என்று தெரியவில்லை. எனினும் இனி அம்மா காலில் விழுந்து சில பல தொகுதிகளை தேற்றித்தான் தனது கட்அவுட் மகாமித்யத்தை காட்ட முடியுமென்பது அவருக்கும் தெரியாத ஒன்றல்ல.

சேலம் மாநாட்டில் அவர் கூட்டணி வேண்டுமா என்று கேட்ட போது தொண்டர்கள் அனைவரும் வேண்டுமென்று கை தூக்கினார்களாம். வேண்டாமென்று யாரும் சொல்லவில்லையாம். இதையே கேப்டனது கட்சியினர் கொண்டிருக்கும் சமரச பிழைப்பு வாதத்திற்கு அடையாளமாக சுட்டிக்காட்டலாம். அதாவது வறுமை ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு, மானாட மயிலாட ஒழிப்பு,  முதலான அன்லிமிட்டட் ஒழிப்புகளை யாருமே பேசாத அளவில் மாபெரும் கொள்கையாக பினாத்தும் ஒரு கட்சி அதை சாத்தியப்படுத்துவதற்காக ஊழல் நாயகியோடு அணிசேருமாம். என்ன ஒரு கொள்கை பிடிப்பு!

கூட்டணி தயவில்தான் இனி மிச்சமிருக்கும் காலத்தை ஓட்ட முடியும் என்பதை அறிந்ததினால்தான் கேப்டன் சமீப காலமாக, கூட இருந்து ஊற்றிக் கொடுத்தாயா என்று எகத்தாளம் பேசிய தலைவி குறித்து எதுவும் பேசுவதில்லை. அதுவும் மாலை பத்திரிகை ஒன்றில் அ.தி.மு.கவுக்கு எதிர்ப்பு காட்டும் விளம்பரம் ஒன்று தே.மு.தி.க சார்பில் வந்ததும் கேப்டன் படாதபாடு பட்டு அதை மறுத்தார். இது கூட்டணியை பிளப்பதற்கு கருணாநிதியின் சதி என்று சாடினார். காரியம் கை கூடும் நேரத்தில் காலை வாரிவிடும் வஞ்சகம் என்றும் அதை பார்த்தார்.

சரி, கேப்டன் போயஸ் தோட்டத்திலே போய் ஊழல் எதிர்ப்பு வசனம் பேசட்டும். ஆனால் இந்த யோக்கிய சிகாமணிக்கு ஊழலை எதிர்க்க என்ன அருகதை இருக்கிறது? ஆண்டாள் அழகர் பொறியியல் வெத்துவேட்டு விஜயகாந்தின் அதார் உதார் அரசியல் !கல்லூரியில் அரசு நிர்ணயித்திற்கும் மேலாகவும், சொந்த ஒதுக்கீட்டில் இலட்சம் இலட்சமாகவும் பணம் பெறுவதில் என்ன எழவு நேர்மை இருக்கிறது? அந்த கல்லூரி என்ன தர்ம சத்திரமாகவா இயங்குகிறது? கேப்டன் இதுவரை நடித்த படங்களில் கருப்பாகவும், வெள்ளையாகவும் வாங்கிய ஊதியத்தை வெளியிடுவாரா? இல்லை அவர் உச்சத்தில் இருந்தபோது அவரது படங்களுக்கான டிக்கெட்டுகள் பிளாக்கில் விற்றதைத்தான் திரும்பத் தருவாரா?

ஊரைக் கொள்ளையடித்து ஆளாகி, பிறந்த நாள் வந்தால் ஐந்து பேருக்கு தையல் மிஷன், நாலு மாற்றுத் திறனாளிகளுக்கு இரண்டு சைக்கிள்கள், பத்து பேருக்கு அன்னதானம் வழங்கிவிட்டு கொடை வள்ளல் என்று போஸ்டர் அடித்து விட்டு நானும் ஊழலை எதிர்க்கிறேன் என்றால் என்ன சொல்ல? ஊழலை எதிர்ப்பது இத்தனை சுலபமா என்று கையில் பேகான்ஸ்பிரேவுடன் நாளைக்கு வடிவேலுவும், சந்தானமும் இறங்கிவிட்டால் தமிழகத்தின் கதி, மோட்சமா இல்லை நரகமா?

கருணாநிதியின் குடும்ப ஆதிக்கத்தை எதிர்க்கும் கேப்டனின் யோக்கியதை என்ன? சாம்பார் எப்படி வைக்க வேண்டுமென்பது கூட தெரியாத, தெரிந்து கொள்ள தேவையில்லாத பண்ணையாரம்மா பிரேமலாதாவை மகளிர் அணி தலைவியாக்கி எல்லா கூட்டத்திலும் அமரவைத்து அந்த அம்மாவும் தே.மு.தி.கவை தனது பிறந்த வீட்டு சீதனம்போல உரிமை கொண்டாடி செய்யும் அளப்பறைகள் ஆபாசமாக இல்லையா? கேப்டனின் மச்சான் சதீஷ் இளைஞர் அணித் தலைவர். இந்த குடும்ப கிச்சன் கேபினட்தான் கூட்டணி பேரங்களுக்கான வரவு சேமிப்பு குறித்து முடிவெடுக்கிறது. இப்படி கட்சியையே முழு குடும்பத்தின் வருமானம் ஈட்டும் தொழிலாக்கி தமிழகத்தை வலம் வருபவர், கருணாநிதியை குடும்ப ஆட்சி என்று சாடினால் சொறிநாய் கூட காறித்துப்பாதா?

வெத்துவேட்டு விஜயகாந்தின் அதார் உதார் அரசியல் !பண்ணையாரம்மா பிரமேலதா சேலம் மாநாட்டில் பேசும் போது, ” இதுவரை நாம் நம் தலைவரை கேப்டன் என்று அழைத்தோம், இனி இந்த மேடையில் அவரை நாம் டாக்டர் என்று அழைக்கப் போகிறோம்” என்று உச்சிமோந்திருக்கிறார். இதையெல்லாம் எழுதித் தொலைப்பதற்கு குமட்டிக் கொண்டு வருகிறது. தமிழகத்தில் ஜேப்பியாருக்கோ, இல்லை பச்சமுத்து முதலியாருக்கோ ஒரு போனை போட்டு ஒரு மாலை கல்லூரி விழாவுக்கு கால்ஷீட் கொடுத்தால் டாக்டர் பட்டம் கலை ஞானி கமலுக்கோ, இளைய தளபதி விஜயிக்கோ வீடுதேடி வரப்போகிறது. இந்த எழவை ஏதோ அமெரிக்க அல்லேலூயா பார்ட்டிகளிடம் வாங்கி அதையும் கூச்சநாச்சமில்லாமல் இதயம் வெட்கப்படுமளவு கூவித்திரிவதை பார்த்தால் மீண்டும் கண்ணகி உயிர்பெற்று முழு தமிகத்தையே எரித்து விட்டால் தேவலை.

சேலம் மாநாட்டில் அந்த அம்மா பிரேமலதா, ” நாங்க எங்க கைக்காசைப் போட்டுத்தான் மாநாடு நடத்துகிறோம்” என்று வேறு பீற்றியிருக்கிறார். அதே மாநாட்டில் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் அருண்குமார் 51 இலட்சம் ரூபாய் நிதியை கட்சிக்கு வழங்கியிருக்கிறார். மற்ற மாவட்டத்து கணக்குகள் நமக்கு தெரியவில்லை. ஆனால் இந்த காமா சோமா கட்சிக்கெல்லாம் இவ்வளவு நிதி எங்கிருந்து வரும்? யார் கொடுப்பார்கள்? இதை திரட்டுமளவு யாருக்கு சாமர்த்தியம் இருக்கும்? எல்லாம் முதலீடு போட்டு திரும்ப எடுக்கும் அந்த ஏனைய கட்சிகளிலிருந்து வந்த பெருச்சாளிகள்தான் காரணம். கூட்டணி தயவில் அம்மாவின் பிச்சையில் நாளைக்கு இவர்களிடமும் காரியம் சாதிக்க வேண்டியிருக்கலாம் என்று கூடவா திருவள்ளூர் மாவட்ட முதலாளிகளுக்குத் தெரியாது?

இப்போதே எல்லாவற்றையும் எழுதிவிட்டால் வரும் தேர்தலுக்கு சுவாரசியங்கள் மிஞ்சாது என்பதால் இத்துடன் முடித்துக் கொள்கிறோம். முக்கியமாக தே.மு.தி.கவின் கொள்கை, இலட்சிய முழக்கங்களை படித்தால் அதை நாள் முழுவதும் கம்பராமாயணம் போல பொழிப்புரையுடன் கலந்து கட்டி அடிக்கலாம். வாய்ப்பு இல்லாமலா போய்விடும்?

ஆனால் தமிகத்தின் ஆக்டோபஸ்ஸாக உருவெடுத்துவிட்ட கருணாநிதியின் குடும்ப ஆதிக்கத்தை எதிர்த்து வீழ்த்த, கேப்டனது குடும்பத்தால்தான் முடியுமென்று யாராவது நம்பினால் அவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள கடமைப் பட்டுள்ளோம். அந்த கொடுமைக்கு நாம் கருணாநிதியையே சகித்துக் கொள்ளலாம்.

_________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்