Thursday, May 1, 2025
முகப்புசெய்திதுரை. முருகன் vs சீமான்: சிண்டு முடியும் இன்டு பேப்பர்!

துரை. முருகன் vs சீமான்: சிண்டு முடியும் இன்டு பேப்பர்!

-

சென்னையில் “விடுமுறை குடும்ப நீதிமன்றங்களின்” ஆரம்ப விழா உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இது குறித்து “தி ஹிந்து” நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது. அதில் தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராக பேசுபவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் துரை முருகன் பேசியதை வைத்து ஒரு செய்தியை இந்த நாளிதழ் உருவாக்கியிருக்கிறது.

பேச்சுரிமை என்ற பெயரில் மறைந்து கொள்ளும் இவர்கள் மீது சட்டம் பாயும் என்று அவர் பேசியதாக ஹிந்து சொல்கிறது. அடுத்து இந்த சொல்பொருளின் மறைபொருள் என்று இந்த நாளிதழ் சொல்வதென்ன?
தமிழக மீனவர்கள் கேட்பாரின்றி கொல்லப்படும் சூழ்நிலை உருவானால் தமிழகத்தில் ஒரு சிங்களவர் கூட நடமாட முடியாது என்று நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் பேசியதைத்தான் சட்ட அமைச்சர் குறிப்பிட்டுள்ளார் என்று போட்டுக் கொடுக்கிறது ஹிந்து பேப்பர். அதன் வாசகர்கள் இதன் உட்பொருளை விளங்கிக் கொள்ளாமல் போய்விடக்கூடுமோ என்று செய்தியை மட்டுமல்ல, தலைப்பிலும் இதையே சொல்கிறார் இந்த மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு.

முதலில் சீமான் பேசியது எந்த விதத்தில் தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது? அவர் பேசியது சிங்களவர்களைத்தான். அதைக்கூட பேச்சாகத்தான் வெளியிட்டுள்ளார். அதற்காக அவரைக் கைது செய்ய முயன்றால் கூட வன்முறையை தூண்டினார் என்றுதான் சொல்ல முடியும். அதுவும் கூட தமிழகத்தில் அப்படி சிங்களவர்கள் நூற்றுக்கணக்கில் இல்லாத நிலையில் அது வெறும் உதார் பேச்சுதான்.

ஆனால் இதை வைத்து சீமானை தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானவர் போலவும் அதற்காக துரை. முருகன் ஆவேசம் கொண்டவர் போலவும் ஏன் சித்தரிக்க வேண்டும்? முக்கியமாக சிங்களக் கடற்படையின் துப்பாக்கிச் சூட்டை விட இதுதான் அபயாமானது, விசமத்தனமானது, நயவஞ்சகமானது.

இப்படி ஹிந்து பேப்பர், இந்திய அரசு, தமிழக அரசு இவர்களது ஆதரவில்தான் இலங்கை அரசின் கடற்படை தமிழக மீனவர்களை அடிக்கடி கொல்வதைச் செய்கிறது. தமிழக மீனவர்களை இப்படி அடக்கி ஆண்டால்தான் ’தொப்புள்குடி’ உறவை வைத்து மீண்டும் இலங்கையில் புலிகள் போல வேறு ஒரு அமைப்பு தளிர் விடாது என்பதற்காகத்தான் இதைச் செய்கிறது. அதனால்தான் இந்திய அரசும் இதை கண்டு கொள்வதில்லை. கேட்டால் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி செல்கிறார்கள் என்று அலட்சிமயமாக பதில் சொல்கிறது.

ஆக சிங்கள கடற்படையின் பின்னே இப்படிப்பட்ட அரசியல் ஆதாயங்களும், அரசுகளும் இருக்கும் போது தமிழக மீனவர் பிரச்சினையை சிங்களவருக்கு எதிரான பிரச்சினையாக உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அறிவில்லாமல் பேசுகிறார் சீமான்.

சிங்களக் கடற்படைக்கு எதிராக போராடவேண்டுமென்றால் அது ஹிந்து பேப்பர், இந்தியக் கடற்படை, கடலோரக் காவல்படை, மத்திய, மாநில அரசுகள் இவர்களையல்லவா குறி வைக்க வேண்டும்? அதை விடுத்து சென்னையில் இருக்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் இருக்கும் அப்பாவி சிங்களவர்களையா எதிரியாக பார்க்க வேண்டும்?

இப்போது போலீசு சீமானை கைது செய்வதற்கு அலைகிறதாம். அநேகமாக கைதும் செய்யப்பட்டுவிடுவார் என்றுதான் தெரிகிறது. ஆனால் அந்தக் கைதுக்கான திரைக்கதை வசனத்தை தி.மு.க அரசின் கைகளின் துணை கொண்டு எழுதியது இந்து ராம்தான் என்று தெரிகிறது.

தேசிய ஒருமைப்பாட்டின் யோக்கியதையை அறிய வேண்டுமென்றால் இந்து ராம் ஒரு முறை காஷ்மீருக்கு நேரில் சென்று பார்க்க வேண்டும். அங்கே போய் துரை. முருகனது பேச்சை வைத்து மக்களிடம் மிரட்டினால் மவுண்ட்ரோடு மகாவிஷ்ணுவுக்கு சமாதி அங்கேயே நிச்சயம். அதை விடுத்து சீமான் போன்ற உணர்ச்சிவசப்படும் அப்பாவிகளை ஒழிப்பதால் இந்திய ஒருமைப்பாடு நிச்சயமாக காப்பாற்றப்படாது.