Saturday, April 1, 2023
முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்நாகப்பட்டினம் மீனவர் வாழ்க்கை ! சிறப்பு நேரடி ரிப்போர்ட் !!

நாகப்பட்டினம் மீனவர் வாழ்க்கை ! சிறப்பு நேரடி ரிப்போர்ட் !!

-

இலங்கை கடற்படையால் தாக்கப்படும் மீனவர்கள் என்றுதான் இவர்கள் நமக்கு அறிமுகம். அதன் பின்னே இவர்கள் யார், இவர்களது வாழ்க்கை என்ன, என்று நாம் அறிந்திருக்க மாட்டோம். பரபரப்பு செய்திகளைத் தாண்டி நாகை மீனவர்களது முழு வாழ்க்கை குறித்தும் இந்த நேரடி ரிப்போர்ட் ஒரு சித்திரத்தை வழங்குகிறது.

மனித குலத்தின் நாகரிகத் தொட்டில்களெல்லாம் மீனவர்களோடு தொடர்புடையவை. அந்த வகையில் நமது ஆதிகாலத்தின் அடிப்படை வேர் இந்த மீனவர்களது கடற்கரையில்தான் இருக்கிறது. இன்று காலம் மாறியிருந்தாலும் இந்த மனித குல முன்னோடிகளின் வாழ்க்கை பெரிதும் மாறிவிடவில்லை. இவர்களது உழைப்பை உறிஞ்சும் இந்த சமூக அமைப்பு இவர்களுக்கு விதித்திருக்கும் தடைகள் ஏராளம். அத்தனையையும் ஏற்றுக் கொண்டு இவர்கள் இன்றும் எல்லா அபாயங்களோடும் கடலுக்கு சென்று வருகிறார்கள். அந்த வாழ்க்கையை உங்களுக்கும் சிறிது காட்டுகிறோம். வந்து பாருங்கள்…….

வினவு

நாகப்பட்டினம் மீனவர் வாழ்க்கை ! சிறப்பு நேரடி ரிப்போர்ட் !!

ன்னும் விடிந்திருக்கவில்லை. ஆனால், நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகம் மும்முரமாக இயங்கிக் கொண்டிருந்தது. ஆங்காங்கே எரிந்துக் கொண்டிருந்த குண்டு விளக்குகளும், குழல் விளக்குகளும் சிந்திய ஒளி, புதிதாக அந்தப் பகுதிக்கு வருபவர்களுக்குத்தான் வழிகாட்டியாக இருக்கிறது. மற்றபடி மீனவர்கள், அந்த ஒளிச்சிதறலை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. இருட்டும் ஒளிதான் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தவர்கள் போல்  சுழன்றுக் கொண்டிருந்தார்கள். சமவெளியின் வெளிச்சத்திற்கு வராத அவர்களது வாழ்வு குறித்து, இந்த இருட்டு மர்மமாக புன்னகைத்து கொண்டிருந்தது. அந்த போதிய வெளிச்சமற்ற அந்த மீன்பிடித் துறைமுகத்தின் நீள, அகலங்களும், குறுக்கு வெட்டு பகுதிகளும் அவர்கள் கால்களுக்கும், கைகளுக்கும் பழக்கப்பட்டிருந்ததை உணர முடிந்தது

முந்தைய நாள் இரவுதான் தமிழக முதல்வர் கருணாநிதி, காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி உடன்பாட்டில் சிக்கல் எழுந்திருப்பதாகவும், அதிக இடங்களை அவர்கள் கேட்பதால் மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக வெளியேறும் என்றும் அறிக்கைவிட்டிருந்தார். நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் அதிகாலை 3.30 மணிக்கு வந்திறங்கிய நாளிதழ்கள், இந்த அறிக்கையையே முதல் பக்கத்தில் அச்சிட்டிருந்தன.

புதிய பேருந்து நிலையத்திலிருந்து, நாகப்பட்டினம் இரயில் நிலையத்துக்கு பேருந்தில் வந்தால் அதிகபட்சம் பத்து நிமிடங்களும், ஆட்டோவில் வந்தால் அதிகபட்சம் ஐந்து நிமிடங்களும் ஆகின்றன. இரயில் நிலையத்தை தாண்டி நடந்தால் வேளாங்கண்ணிக்கு செல்லும் பாதை வலப்பக்கமாக திரும்புகிறது. அந்தச் சாலையில் நுழைந்ததுமே எதிர்படும் இரயில்வே கேட்டை கடந்தால், இடப்பக்கம் சுமாராக நூறடி தொலைவில் மீன்பிடித் துறைமுகம்.

ஆனால், எந்த மீனவரும் கருணாநிதியின் அந்த அறிக்கை குறித்து கடந்த ஞாயிறன்று (06.03.11) பேசவும் இல்லை. அக்கறை காட்டவும் இல்லை. கோடிகளை ஊழலாகவும், சுயநலத்தை கூட்டணியாகவும் வைத்திருக்கும் கோமகன்கள் குறித்து இந்த பாமரர்கள் கவலைப்படவில்லை. படகிலிருந்து மீன்களை இறக்குவதும், ஏலம் விடுவதற்காக வணிகர்களிடம் ஒப்படைப்பதுமாக இருந்தார்கள். அலுமினிய பேசினை இடுப்பில் வைத்தபடி, சிறிய மீன்களை வாங்குவதற்காக காத்திருந்த பெண்களின் எண்ணங்களும் அன்றைய வருமானம், தர வேண்டிய வட்டி, அடகுக் கடையில் இருந்த ‘குந்துமணி’ தங்கம் ஆகியவற்றைக் குறித்தே இருந்ததை தங்களுக்குள் அவர்கள் பேசிக் கொண்டிருந்ததில் இருந்து உணர முடிந்தது. அது உழைப்பவர்களின் உலகம்.

புதியதாக யார் வந்தாலும், என்ன கேள்வி கேட்டாலும் தயங்காமல் பதில் சொல்கிறார்கள். அதேநேரம் அவர்களது கண்களும், கைகளும் நொடிப்பொழுதைக் கூட வீணாக்காமல் பணிகளை செய்து கொண்டேயிருக்கின்றன.

மீன்பிடித் துறைமுகம் என பொதுவாக அப்பகுதியை அழைக்கவோ, அடையாளம் காட்டவோ முடியாதபடி மீனவர்கள் தங்கள் வசதிக்காகவும், பணிக்காகவும் பகுதிப் பகுதியாக அத்துறைமுகத்தை பிரித்திருக்கிறார்கள். ஓய்வுக்காக நிறுத்தப்பட்ட விசைப்படகுகள் ஒரு பக்கம் மிதக்க, மறுபக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகுகளில் பராமரிப்புப் பணிகள் நடந்துக் கொண்டிருந்தன. அந்தப் பக்கத்தில் பிடித்து வந்த மீன்கள் ஏலத்தில் கேட்கப்பட்ட தொகைக்கு ஏற்ப உயர்ந்தும், தாழ்ந்தும் கொண்டிருந்தன என்றால், இந்தப் பக்கத்தில் கடலிலிருந்து கரைக்கும், கரையிலிருந்து கடலுக்கும் படகை இழுத்தபடி இருந்தார்கள். மொத்தத்தில் எல்லா பக்கத்திலும் மனித நடமாட்டம் இருந்தது. வேலைகள் நடந்துக் கொண்டிருந்தது.

அந்த உழைப்பின் உற்சாகத்தை பார்த்தது போல படிமங்களில் வடிப்பது கடினம். கடல் அன்னை எனும் பிரம்மாண்டமான இயற்கைத் தாயோடு துணிவை மட்டுமே மூலதனமாக கொண்டு நித்தம் சமர் புரியும் அந்த மனிதர்களின் சுவாசமும், இதற்கு இணையாக மணம் வீசும் மீன்களும் அந்த அழகான வெளியை உழைப்பின் கம்பீரத்தோடு நிரப்பியிருந்தன.

அதேபோல் அங்கிருந்த அனைவரையும் மீனவர்கள் என ஒரே அடையாளத்தோடு அழைக்கப்படுவதையும் அவர்கள் விரும்பவில்லை. கடலுக்கு சென்று மீன் பிடிப்பவர்கள் மட்டுமே மீனவர்களாக சுட்டிக்காட்டப் படுகிறார்கள். மற்றவர்கள் மீனவர்களை சார்ந்து இயங்கும் தொழிலாளர்கள். ஒருவர் மற்றவரின் வேலையில் தலையிடுவதும் இல்லை; குறுக்கிடுவதும் இல்லை. சரியாகச் சொல்வதாக இருந்தால் மீனவர்களின் தலைமையில் அது ஒரு விறுவிறுப்பான உழைப்பாளிகளது குடும்பம்.

நாகப்பட்டினம் மீனவர் வாழ்க்கை ! சிறப்பு நேரடி ரிப்போர்ட் !!
விசைப்படகுகள் பழுது பார்க்கப்படுகின்றன

விசைப்படகுகளை பழுது பார்ப்பதற்கு மட்டும் சுமாராக இருநூறு தொழிலாளர்கள் வரை இருக்கிறார்கள். வேலை நடக்கும் நாட்களில் தினக் கூலியாக அவர்களுக்கு நாளொன்றுக்கு ரூபாய் முந்நூறு முதல் ஐந்நூறு வரை ஊதியமாக கிடைக்கிறது. எல்லா நாட்களும் வேலை இருக்கும் என்று சொல்ல முடியாது. இரும்பாலான விசைப்படகு என்றால், துருவை சுரண்டுவது, வெல்டிங் செய்வது, என்ஜினை சர்வீஸ் பார்ப்பது, பெயிண்ட் அடிப்பது, அளவுக்கு அதிகமாக சேர்ந்த பாசிகளை அப்புறப்படுத்துவது ஆகியவை அடங்கும். மரத்தாலான விசைப்படகு என்றாலும் ஏறக்குறைய வேலைகள் இரும்பாலான விசைப்படகை பழுது பார்ப்பது போன்றதுதான். ஆனால், வெல்டிங்குக்கு பதில், மரச்சட்டங்களை பிணைப்பதில் கவனம் செலுத்துகிறார்கள்.

நாகப்பட்டினம் மீனவர் வாழ்க்கை ! சிறப்பு நேரடி ரிப்போர்ட் !!
விசைப்படகு பழுது பார்க்கும் பணியில்

அன்றைய தினம் கரைக்கு வந்த குமரி மீனவரின் விசைப்படகை பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த மீனவர் கடந்த ஆறு மாதங்களாக வீட்டுக்குச் செல்லாதவர். ஆந்திரா, மேற்கு வங்கம், நாகப்பட்டினம்… என கடலோட்டத்துக்கு ஏற்ப பயணம் செய்துக் கொண்டிருப்பவர். கடல் பயண நாட்களில், கடலில் சிக்னல் கிடைத்தால் கடலிலும் இல்லாவிட்டால் கரைக்குத் திரும்பியதும் முதல்வேலையாக வீட்டை தொடர்புக் கொண்டு தான் உயிருடன் இருக்கும் விஷயத்தை தெரிவிப்பவர். ‘இன்னமும் ஆயிரம் ரூபா கூட சம்பாதிக்கல. எந்த மூஞ்சியை வச்சுகிட்டு வீட்டுக்கு போக..? பசங்களுக்கு வேற ஸ்கூல் பீஸ் கட்டணும். பயமா இருக்கு…’ என குரல் நடுங்க தன் வேதனையை பகிர்ந்துக் கொண்டார்.

இந்த குமரி மீனவர் போல மற்ற ஊர்களைச் சேர்ந்த எண்ணற்றவர்கள் நாகை மீன்பிடித் துறைமுகத்துக்கு விசைப்படகை பழுது பார்க்கவும், பிடித்த மீன்களை விற்கவும் வருவார்கள் என அங்கிருந்தவர்கள் அவர் நகர்ந்ததும் குறிப்பிட்டார்கள். மற்ற ஊர்களிலிருந்து மீன்பிடிக்க வரும் மீனவர்களை உள்ளூர் மீனவர்கள் போட்டியாளராக கருதுவதில்லை. தேவையான உதவிகளை செய்கிறார்கள். அது போல இவர்களும் கடலின் போக்கிற்கேற்ப மற்ற ஊர்களுக்கு செல்வார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்களைப் பொறுத்தவரை கடல் என்பது யாருடைய தனிச்சொத்துமல்ல. அது விரிந்து கிடக்கும் ஒரு பொக்கிஷம். அங்கு திறமையுடன் மீன்பிடித்து செல்வது அவரவர் பொறுப்பு. அதில் பாத்தியதை ஏதுமில்லை. இதனால் மீன்பிடிப்பு காரணமாக மீனவர்களுக்குள் சண்டை வராது என்பதல்ல. மாறாக கடலை ஒரு தனிச்சொத்தாக பார்க்கும் முதலாளித்துவ கண்ணோட்டம் அந்த வெள்ளேந்தி மனிதர்களிடத்தில் இல்லை. அந்த வகையில் மீனவர்களது சிந்தனை சோசலிசத்திற்கு நெருக்கமானது.

நாகப்பட்டினம் மீனவர் வாழ்க்கை ! சிறப்பு நேரடி ரிப்போர்ட் !!
விசைப்படகு தொழிற்சாலை

ரையை ஓட்டி, விசைப்படகுகளை தயாரிக்கும் நிறுவனங்கள் சின்னச் சின்னதாக இயங்குகின்றன. இரும்பாலான பெரிய விசைப்படகுகளை தயாரிக்க ரூபாய் 15 முதல் 20 லட்சம் வரை செலவாகிறது. 6 எம்.எம். அல்லது 8 எம்.எம். இரும்புத் தகடுகளை இதற்கு பயன்படுத்துகிறார்கள். இந்தவகையான விசைப்படகுகளை செய்து முடிக்க 3 மாதங்கள் வரை ஆகுமாம். 5 தொழிலாளர்கள் தினமும் 12 மணிநேரங்கள் வரை இதற்காக உழைக்கிறார்கள். இவர்களுக்கு நாளொன்றுக்கு கூலியாக ரூபாய் 175 கிடைக்கிறது. இத்தொழிலில் பெரும்பாலும் கேரளாவை சேர்ந்தவர்களே ஈடுபடுத்தப்படுகிறார்கள். காரணம், மலிவான கூலிக்கு அவர்களே வருகிறார்களாம். இப்படி தயாரிக்கப்படும் இரும்பாலான விசைப்படகு 5 ஆண்டுகள் வரை உழைக்கும் என்கிறார்கள். அதன்பிறகு வேறு விசைப்படகைத்தான் உருவாக்க வேண்டும்.

பதினைந்து ஆண்டுகள் வரை உழைக்கக் கூடிய மரத்தாலான பெரிய விசைப்படகை தயாரிக்க ரூபாய் முப்பது லட்சம் வரை செலவாகிறது. வாகை மரத்தையே இதற்கு பயன்படுத்துகிறார்கள். டீ, சாப்பாடு உட்பட நாளொன்றுக்கு ரூபாய் ஐநூறை கூலியாக பெற்றுக் கொண்டு ஆறு தொழிலாளர்கள், தினமும் 12 மணிநேரங்கள் இதற்காக உழைக்கிறார்கள். அப்போதுதான் நான்கு மாதத்தில் ஒரு விசைப்படகை உருவாக்க முடியும் என்கிறார்கள்.

இவை தவிர சின்னதான விசைப்படகுகளும் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், இரும்பாலான விசைப்படகோ அல்லது மரத்தாலான விசைப்படகோ; பெரியதோ, சிறியதோ, நாள், நட்சத்திரம் பார்த்து, பூஜை செய்த பிறகே தயாரிக்க ஆரம்பிக்கிறார்கள்.

நாகப்பட்டினம் மீனவர் வாழ்க்கை ! சிறப்பு நேரடி ரிப்போர்ட் !!
இறுதிக்கட்ட தயாரிப்பில்….

இந்த தயாரிப்பு நிறுவனங்களை ஓட்டி சின்னச் சின்ன லேத் பட்டறைகள் இயங்குகின்றன. தேவையான பொருட்களை சப்ளை செய்கின்றன. ஆர்டர் வராத நாட்களில் விசைப்படகை தயாரிக்கும் பணியிலுள்ள தொழிலாளர்கள் சும்மாதான் இருக்கிறார்கள் அல்லது வேறு ஊர் அல்லது மாநிலங்களுக்கு தச்சுப் பணிக்கோ அல்லது வெல்டிங் பணிக்கோ செல்கிறார்கள். அதுபோன்ற நேரங்களில் கிடைத்த கூலிகளை பெற்றுக் கொள்வார்களாம்.

இப்படி பணிபுரியும் தொழிலாளர்களில் 96%க்கும் அதிகமானவர்கள் தொழில் முறை கல்வியை கற்றவர்கள் அல்ல. அனுபவம் மற்றும் பயிற்சியின் வழியாகவே தொழிலை கற்றவர்கள். அதிகபட்சம் பன்னிரெண்டாம் வகுப்பும், குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பும் படித்தவர்களாக இந்தத் தலைமுறையை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால், நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களில் பலரும் மூன்றாம் வகுப்பை தாண்டாதவர்கள்.

என்றாலும் கல்வி கற்காதது அவர்களது தொழில் திறமையை எந்தவகையிலும் பாதிக்கவில்லை. தங்கள் அனுபவத்தின் வழியாக சுயமாக பல கருவிகளை கண்டுபிடித்திருக்கிறார்கள். உழைப்பை முடிந்தவரை எளிமையாக்கியிருக்கிறார்கள்.

உதாரணமாக விசைப்படகுகளை கரைக்கு இழுத்து, மீண்டும் கடலுக்கு விடும் பணியில் இருநூறு தொழிலாளர்கள் வரை ஈடுபட்டிருக்கிறார்கள். சராசரியாக இவர்களுக்கான நாள் கூலி ரூபாய் இருநூறு வரை இருக்கிறது. பெரிய விசைப்படகை கரைக்கு இழுக்கவும், கரையிலிருந்து அப்படகை கடலுக்கு விடவும் ஒரு கருவியை தயாரித்திருக்கிறார்கள். உருளை வடிவில் காணப்படும் அக்கருவியின் மேல் பாகம் வட்டமாக, மரப்பிடிகளுடன் இருக்கிறது. அப்பிடியை பிடித்தபடி தொழிலாளர்கள் நடந்தபடியே உருளையை சுற்றுகிறார்கள். இந்த உருளையுடன் பிணைக்கப்பட்ட இரும்புக் கம்பியின் மறுமுனை கரை அல்லது கடலில் இருக்கும் விசைப்படகுடன் தொடர்பு கொண்டிருக்கிறது. எனவே தொழிலாளர்கள் உருளையை சுற்றச் சுற்ற கரை அல்லது கடலுக்கு விசைப்படகு வருகிறது அல்லது செல்கிறது.

ஆனால், இப்பணியை முடிப்பதற்குள் அந்தத் தொழிலாளர்கள் பெருமளவு உதிரத்தை வியர்வையாக வெளியேற்றி விடுகிறார்கள். கால்களை வலுவாக ஊன்றி உருளையை சுற்றுவதால், கால் நரம்புகளும், கை நரம்புகளும் சுருள் சுருளாக அவர்கள் உடம்புக்குள் சுற்றிக் கொண்டு, தோலுக்கு வெளியே கோலி குண்டு அளவுக்கு கொப்பளம் போல் காட்சியளிக்கிறது. இந்தவகை உருளையை அவர்கள் உருவாக்குவதற்கு முன்பு வெறும் கைகளால்தான் கயிறு கட்டி விசைப்படகை இழுப்பார்களாம். ஆதிகாலத்தின் அடிப்படையான அறிவியல் கண்டுபிடிப்புகளெல்லாம் இத்தகைய உழைப்பாளிகளது படைப்புகளே என்பதற்கு இந்த தொழிலாளிகளே சாட்சி.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் இருக்கின்றன. அதிகபட்சம் நான்கு தெருக்களை கொண்டது ஒரு கிராமம். மொத்தமாக 50 ஆயிரம் மக்கள் இக்கிராமங்களில் வசிப்பதாக சொல்கிறார்கள். 2001-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் கணக்கெடுப்பின்படி, நாகை மாவட்டத்தில் 92,525 மக்கள் வசிப்பதாக அரசாங்கம் தெரிவிப்பதால் http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 கூட, குறைய இருந்தாலும் இந்தத் தொகையை ஓட்டித்தான் மக்கள் அங்கு வாழ்வதாக கொள்ளலாம்.

நாகப்பட்டினம் மீனவர் வாழ்க்கை ! சிறப்பு நேரடி ரிப்போர்ட் !!
சுனாமிக்கு பின்னர் அரசு கட்டித்தந்த கான்கிரீட் வீடுகள்

கடற்கரையையொட்டி குடிசை வீடுகளும், சற்றே தள்ளி ஓட்டு வீடுகளும் இருக்கின்றன. ஆங்காங்கே காங்கிரீட் வீடுகளையும் பார்க்க முடிந்தது. வேளாங்கண்ணிக்கு செல்லும் சாலைக்கு மறுபுறம் சுனாமிக்கு பிறகு மீனவர்களுக்காக அரசு கட்டிக் கொடுத்த வீடுகள் இருக்கின்றன. ஆனால், பல வீடுகளில் கதவு உடைந்திருக்கிறது. சுவற்றில் விரிசல்கள் காணப்படுகின்றன. தவிர, மீனவர்கள் என்னும் பெயரில் அங்கு வசிப்பவர்களில் பலர் மீன்பிடி வேலைகளில் ஈடுபடுபவர்கள் அல்ல என்கிறார்கள்.

எனவே கடற்கரையை ஓட்டிய பகுதிகளிலேயே இன்றும் பெரும்பாலான மீனவர்கள் வசிக்கிறார்கள். ஒரு தெருவுக்கு மூன்று பெட்டிக் கடைகள் வரை இருக்கின்றன. உண்மையில் அவை ‘பொட்டிக்’ கடைகள். ‘லேஸ்’ சிப்சில் ஆரம்பித்து கோக், பெப்சி வரை அக்கடைகளில் கிடைக்கின்றன.

ரேஷன் கடைகளில் பொருட்கள் விற்கப்பட்டாலும் பெரும்பாலானவர்கள் – அவர்கள் விசைப்படகு உரிமையாளராக இருந்தாலும் சரி, உரிமையற்ற படகில் மீன் பிடிக்க செல்பவர்களாக இருந்தாலும் சரி – ரேஷன் அரிசியில் உணவு சமைப்பதில்லை. தங்கள் கார்டுக்கான அரிசியை வாங்கி வெளியில் விற்றுவிட்டு கிலோ 30 ரூபாய்க்கு விற்கப்படும் அரிசியையே வாங்குகிறார்கள். அதைப் பொங்கி கால் வயிற்றுக்கே உண்கிறார்கள். ‘வெயில்லயும், கடல்லயும் உழைச்சுட்டு வர்றோம். கால் வயித்துக்கு கஞ்சி குடிச்சாலும் நல்ல அரிசில குடிச்சாதாங்க எங்களால உசுரோட வாழ முடியும்…’

அனைத்து கிராமங்களையும் இணைக்கும் பிரதான சாலையில் ஷேர் ஆட்டோக்கள், ‘சர் சர்’ என விரைகின்றன. எந்த ஷேர் ஆட்டோவும் நிறுத்தத்தில் இரண்டு நிமிடங்களுக்கு மேல் நிற்பதில்லை. குறைந்தது 4 பேராவது ஏறிவிடுகிறார்கள். வேலை நேரங்களில், ஷேர் ஆட்டோக்களின் பின்புறம் பெண்களின் அலுமினிய பேசின்கள், மீன்களின் மணத்துடன் பயணம் செய்கின்றன.

கிராமங்களில் இந்து, முசுலீம், கிறித்தவ என்று மும்மத தெய்வங்களும் கொலு வீற்றிருக்கிறார்கள். திருவிழா காலங்களில் அவர்களுக்கு ஒருகுறையும் இல்லாமல் படையலிடப்படுகிறது. அந்தச் செலவை அப்பகுதி மக்களே ஏற்கிறார்கள்.

அரசு மருத்துவர் ஒருவர், அங்கு தனியாக க்ளினிக் வைத்திருக்கிறார். மாலை 5 மணி முதல் 8 மணி வரை ‘பார்வை நேரம்’. பொதுவாக அங்கு வசிக்கும் மீனவர்களுக்கு நோய் வந்தால், முதலில் ‘அய்யரை’ சந்திப்பார்களாம். விபூதியை மந்தரித்து அல்லது மந்திரம் சொல்லி தாயத்தை அவர் கொடுப்பாராம். அதை பூசிய பிறகும் அல்லது கட்டிக் கொண்ட பிறகும் நோய் குணமாகாவிட்டால் மட்டுமே அரசு மருத்துவமனைக்கு செல்வார்களாம்.

ஆனால், அரசு மருத்துவமனையில் குறை சொல்லும்படி எதுவும் இல்லை என்கிறார்கள். ‘ஐநூறு ரூபா வரை கேட்பாங்க. கொடுத்துட்டா நல்லா கவனிப்பாங்க…’ தவறாமல் பிரசவத்துக்கும் அங்குதான் செல்கிறார்கள். ‘ஆயிரம் ரூபா கொடுத்தா போதும்…’

நாகப்பட்டினம் மீனவர் வாழ்க்கை ! சிறப்பு நேரடி ரிப்போர்ட் !!
உப்பில் பதப்படுத்தப்படும் மீன்கள்

மீன்பிடித் தொழிலில் ஈடுப்பட்டிருக்கும் மீனவர்களில் ஐநூறு பேர்கள் மட்டுமே விசைப்படகு உரிமையாளர்களாக இருப்பதாக சொல்கிறார்கள். 750 பெரிய விசைப்படகுகளும், 300 சிறிய விசைப்படகுகளும் இவர்களுக்கு சொந்தமாக இருக்கின்றன. இரண்டு அல்லது 3 படகுகளுக்கு உரிமையாளராக இருப்பவர்களும் உண்டு. இவர்கள், கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும்போது தன் குடும்ப உறுப்பினர்களில் ஒருவரை அந்த விசைப்படகுடன் அனுப்புகிறார். மொத்த மீனவர்களில் படகு எனும் உடமையற்ற மீனவர்கள்தான் ஆகப்பெரும்பான்மையினர்.

சிறிய விசைப்படகு என்றால், அதில் மூன்று அல்லது நான்கு மீனவர்கள் கடலுக்கு செல்கிறார்கள். இப்படி செல்பவர்களில் ஒருவர் படகின் உரிமையாளர். இந்த மீனவர்கள் கடலுக்குள் வெகுதூரம் செல்வதில்லை. குறிப்பிட்ட கி.மீ.க்குள்ளேயே சுற்றி,  அதிகபட்சம் 2 நாட்கள் வரை கடலில் இருந்து மீன்பிடிக்கிறார்கள். இப்படி மீன் பிடிக்கச் செல்ல ஆகும் செலவை தன்னுடன் தன் படகில் வரும் மற்ற மீனவர்களுடன் உரிமையாளரும் சமமாக பகிர்ந்துக் கொள்கிறார்.

ஆனால், மீன்களை பிடித்து வந்து கரையிலுள்ள வணிகர்களிடம் ஏலத்துக்கு விற்றதும் கிடைக்கும் பணத்தில் சரி பாதியை – அதாவது ஐம்பது சதவிகிதத்தை – படகின் உரிமையாளர் மட்டுமே எடுத்துக் கொள்கிறார். மீதமுள்ள ஐம்பது சதவிகிதத்தையே அப்படகில் சென்ற மற்ற மீனவர்கள் தங்களுக்குள் பகிர்ந்துக் கொள்கிறார்கள். எனவே எவ்வளவுக்கு எவ்வளவு மீன் பிடிக்கிறார்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு உரிமையற்ற படகில் கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு வருமானம். அந்தவகையில் படகு வைத்திருப்பவரும், வைத்திராதவரும் இங்கே மீன்பிடி எனும் தொழிலை வைத்துத்தான் பிழைக்க முடியும். படகு இருந்து விட்டதனாலேயே ஒருவர் அன்றாடம் இலாபம் ஈட்ட முடியாது.

பணப் பரிமாற்றத்தை பொருத்தவரை சிறிய விசைப்படகுகளுக்கு சொல்லப்பட்டதேதான் பெரிய விசைப்படகுகளுக்கும் பொருந்தும். ஆனால், பெரிய விசைப்படகுகளில் 6 முதல் 8 வரையிலான மீனவர்கள் கடலுக்கு செல்கிறார்கள். இவர்களில் ஒருவர், விசைப்படகின் உரிமையாளர். இவர்கள் ஆறு நாட்கள் வரை கடலில் இருக்கிறார்கள். வெகுதூரம் வரை பயணம் செய்கிறார்கள். கடலின் நீரோட்டத்தை பொருத்தே அவர்களது பயணம், கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என அமைகிறது. இவர்கள் அதிகம் ஆழ்கடலில்தான் மீன்பிடிக்கிறார்கள். சமயத்தில் இவர்கள் மேற்கு வங்கம் வரைக்கும் கூட செல்வதுண்டு.

சிறிய விசைப்படகோ அல்லது பெரிய விசைப்படகோ, மீன் பிடிக்கச் செல்வது என்பது சாதாரண விஷயமாக இருப்பதில்லை. இதற்கான முன் தயாரிப்பே பல ஆயிரங்களை விழுங்குகிறது. ஒவ்வொருமுறை மீன் பிடிக்கச் செல்லும்போதும் சிறிய விசைப்படகு என்றால் ரூபாய் 5 ஆயிரம் முதல் ரூபாய் 10 ஆயிரம் வரையிலும், பெரிய விசைப்படகாக இருந்தால் ரூபாய் 20 ஆயிரம் முதல் ரூபாய் 30 ஆயிரம் வரையிலும் முதலீடு செய்யவேண்டும். இதில், டீசலே பெரும் தொகையை விழுங்கும் அரக்கனாக இருக்கிறது. சிறிய விசைப்படகோ அல்லது பெரிய விசைப்படகோ ஒரு மணிநேர பயணத்துக்கு 10 லிட்டர் டீசல் தேவைப்படுகிறது. எனவே கையிருப்பில் தேவையான டீசலை சேகரிக்க வேண்டும்.

லிட்டருக்கு 10 ரூபாய் டீசல் விற்ற காலத்தில், ஒரு கிலோ இறால், ரூபாய் 700 முதல் ரூபாய் 800 வரை விலைபோனதாம். ஆனால், இன்று டீசல் விற்கும் விலையில், அதே இறால் மீன்கள் கிலோ 400 ரூபாய் முதல் ஐநூறு ரூபாய் வரையே விலைபோகிறதாம். எனவே டீசல் விலை ஏறும்போதெல்லாம் தங்கள் கழுத்து இன்னொரு பிடி அழுத்தத்துடன் நெறிக்கப்படுவதாக மீனவர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்தியாவில் மீன்களுக்கென்று மிகப்பெரும் உள்நாட்டு சந்தை இருந்தாலும், அதற்கென்று போதிய மீன்வளம் இருந்தாலும் மீன்கள் விலை எப்போதும் அதிகம் இருப்பதற்கு ஒரு காரணம் இந்த டீசல் விலை உயர்வுதான். நமது அன்றாட காய்கறிகளின் விலை உயர்வுக்கு காரணமான டீசல்தான் மீனின் விலையை உயர்த்துவதற்கும் காரணமாகிறது. எனினும் மீனின் உயர்ந்த விலைக்கான ஆதாயம் மீனவர்களை சென்றடைவதில்லை. அது விவசாயிகளுக்கும் பொருந்துவது போலத்தான்.

நாகப்பட்டினம் மீனவர் வாழ்க்கை ! சிறப்பு நேரடி ரிப்போர்ட் !!
ஐஸ் கட்டி தயாரிக்கும் தொழிற்சாலை

என்றாலும் டீசல் இல்லாமல் விசைப்படகை இயக்க முடியாது. எனவே என்ன விலை கொடுத்தாவது அதை வாங்கியாக வேண்டும். இதற்கு அடுத்து பெரிய விசைப்படகுகளில் செல்பவர்கள் கடலிலேயே சமைத்துச் சாப்பிட உணவுப் பொருட்களையும், மண்ணெண்ணெய்யையும் வாங்கியாக வேண்டும். பிறகு ஐஸ் கட்டிகள். சிறியதோ, பெரியதோ அனைத்து மீன்பிடி விசைப்படகுகளுக்கும் ஐஸ் கட்டிகள் அவசியம்.

இந்த ஐஸ் கட்டிகளை தயாரிப்பதற்கென்றே நாகப்பட்டின கடற்கரையை ஒட்டி 30க்கும் மேற்பட்ட ‘கம்பெனி’கள் இயங்குகின்றன. ஒரு கட்டி 50 கி. எடையில், ரூபாய் 60க்கு விற்கப்படுகிறது. சீசன் சமயத்தில் ஒவ்வொரு கம்பெனியும் முந்நூறு கட்டிகள் வரையும், சாதாரண நாட்களில் 50 கட்டிகள் வரையிலும் விற்கின்றன. ஒவ்வொரு கம்பெனியிலும் 10க்கும் மேற்பட்டவர்கள் 2 ஷிப்டுகளில் வேலை பார்க்கிறார்கள். தினமும் இரண்டு மணிநேரங்கள் மின்வெட்டு இருக்கிறது. என்றாலும் மின் கட்டணமாக குறைந்தது ஒவ்வொரு கம்பெனியும் ஒவ்வொரு முறையும் ஒரு லட்சம் ரூபாய் வரை செலுத்துகின்றன. ஒரு பணியாளர் மாதம் ஒன்றுக்கு 15 ஷிப்டுகள் வரையே பணிபுரிய அனுமதிக்கப்படுகிறார். இதற்கு ஊதியமாக ரூபாய் மூவாயிரம் ரூபாய் முதல் நான்காயிரம் வரை பெற்றுக் கொள்கிறார்.

நாகப்பட்டினம் மீனவர் வாழ்க்கை ! சிறப்பு நேரடி ரிப்போர்ட் !!

ஒவ்வொரு விசைப்படகு உரிமையாளரும், ஒவ்வொரு ஐஸ்கட்டி கம்பெனியுடன் தொடர்பில் இருக்கிறார். எனவே மீன் பிடிக்கச் செல்லும்போது தேவையான ஐஸ் கட்டிகளை கடனுக்கு வாங்கிச் செல்கிறார்கள். கரைக்கு வந்ததும் – மீன் பிடித்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி; லாபம் வந்தாலும் சரி, நஷ்டமடைந்தாலும் சரி – உரிய பணத்தை கொடுத்துவிட வேண்டும்.

இப்படி டீசலில் ஆரம்பித்து, ஐஸ் கட்டிகள் வரை அனைத்துப் பொருட்களையும் வாங்கிக் கொண்டுதான் ஒவ்வொருமுறையும் கடலுக்கு மீன்பிடிக்க செல்கிறார்கள்.

அதாவது முன் பணமாக ஒவ்வொருமுறையும் ஒரு தொகையை ஒரு மீனவர் செலவழித்தாக வேண்டும். அப்போதுதான் அவரால் மீன்பிடிக்கவே கடலுக்கு செல்ல முடியும். இப்படி செலவழித்த பணத்துக்கு மேல் அவர் சம்பாதிக்க வேண்டுமானால் அவர் ஏராளமான மீன்களை ஒவ்வொருமுறையும் பிடித்தாக வேண்டும். அப்படி பிடித்தால்தான் அந்தமுறை அவர் கடலில் எத்தனை நாட்கள் இருந்தாரோ அத்தனை நாட்களுக்கான ஊதியம் கிடைக்கும் என்பது மட்டுமல்ல, அடுத்தமுறை அவர் கடலுக்குச் செல்ல முன் பணமும் கொடுக்க முடியும்.

ஆனால், ஒவ்வொருமுறையும் ஏராளமான மீன்கள் வலையில் சிக்கும் என்று சொல்ல முடியாது. பலமுறை பல மீனவர்கள் குறைந்த எண்ணிக்கையிலான மீன்களுடன் கரைக்குத் திரும்பியிருக்கிறார்கள்.

நாகப்பட்டினம் மீனவர் வாழ்க்கை ! சிறப்பு நேரடி ரிப்போர்ட் !!
படகு கரைக்கு வந்தவுடன்  மீன்களை உடனடியாக ஐஸ் கொண்டு பாதுகாக்கும் பணியில்

ஒருவேளை கடலுக்கு செல்லும் மீனவர்களின் விசைப்படகுகள் நடுவழியில் பழுதாகி நின்றுவிட்டால், ஓயர்லெஸ் கருவி மூலம் தங்களுக்கு அருகில் இருக்கும் விசைப்படகுக்கு தகவல் தெரிவிக்கிறார்கள். அப்படி தகவல் தெரிவிக்க முடியாவிட்டால், வேறு யாராவது வந்து காப்பாற்றும் வரை நடுக்கடலிலேயே, எத்தனை நாட்களானாலும் இருக்கிறார்கள். பொதுவாக ஒவ்வொரு விசைப்படகும் எந்த திசையை நோக்கிச் செல்கிறது என்பதை கரையில் இருக்கும் மற்ற மீனவர்களுக்கு தெரிவித்துவிட்டே பயணப்படுவதால், குறிப்பிட்ட நாட்களுக்குள் அந்த விசைப்படகு திரும்பாவிட்டால், அப்படகு சென்ற திசை நோக்கி உதவும் படகு விரைகிறது. பழுதாகி நிற்கும் படகை கயிறு கட்டி கரைக்கு இழுத்து வருகிறது. அதுபோன்ற நேரங்களில் பழுதான படகில் இருக்கும் மீனவர்கள்தான், அந்த உதவும் படகுக்கான டீசல் செலவு முதற்கொண்டு உணவு செலவு வரை அனைத்தையும் ஏற்க வேண்டும்.

அதேபோல் பெரிய விசைப்படகில் செல்லும் மீனவர்கள் என்னதான் போதிய மருந்து, மாத்திரைகளுடன் சென்றாலும் பாதி வழியில் அப்படகில் இருக்கும் மீனவர்களில் ஒருவர் இனம்புரியாத நோயால் பாதிக்கப்பட்டால், உடனடியாக குறிப்பிட்ட நாட்களுக்கு முன்பாகவே கரைக்கு திரும்பி விடுகிறார்கள். இதுபோன்ற தருணங்களில் ஏற்படும் நஷ்டங்களை நோயால் பாதிக்கப்பட்ட மீனவரே ஏற்கிறார்.

தப்பித் தவறி நடுக்கடலில் மீன் பிடிக்கச் செல்லும்போது படகில் ஓட்டை விழுந்துவிட்டால், கடலில் மூழ்கி இறப்பதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார்கள்.

இப்படி அடுக்கடுக்காக இயற்கையாலும், மனிதர்களாலும் நஷ்டங்கள் ஏற்படுவதால், வேறு வழியின்றி வட்டிக்கு பணம் வாங்குகிறார்கள் அல்லது நகையை அடகு வைக்கிறார்கள்.

அதனாலேயே திருமணம் செய்து கொள்ளும் எந்த ஆண் மீனவரும் 10 சவரன் முதல் 25 சவரன் வரை நகை போடும்படி பெண் வீட்டாரை வற்புறுத்துகிறார். இந்த நகைகளை எந்த மீனவப் பெண்ணும் அணிவதில்லை. அவை பெரும்பாலும் அடகுக் கடையிலும், வணிகர்களின் வீடுகளிலும், விசைப்படகு உரிமையாளரின் வீட்டு பீரோவிலுமே உறங்குகின்றன.

நகையை அடகு வைப்பது தவிர, விசைப்படகு உரிமையாளர் அல்லது மீன்களை ஏலத்தில் எடுக்கும் வணிகர் ஆகியோரிடம் வட்டிக்கு பணம் வாங்குகிறார்கள். கந்து வட்டி, மீட்டர் வட்டி என்ற சொற்கள் அவர்களுக்குத் தெரியவில்லை. பதிலாக ரூபாய்க்கு ஒரு பைசா, இரண்டு பைசா, மூன்று பைசா என வட்டியை குறிப்பிடுகிறார்கள். இது மீன் விற்கும் பெண்களுக்கு நாள் கணக்கிலும், கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கு வாரக் கணக்கிலுமாக அமைகிறது.

பலரது நகைகள் அடமானத்தில் மூழ்கியிருக்கின்றன. ஆனால், வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாத எந்த மீனவரும் இல்லை என நெஞ்சை நிமிர்த்தி சொல்கிறார்கள். கடல் இருக்கும் வரை தங்களால் உழைக்க முடியும். கடனை அடைக்க முடியும் என்ற நம்பிக்கை அவர்களிடம் வேரூன்றி இருக்கிறது. ஆயினும் இந்த நம்பிக்கையை கந்துவட்டிக்காரர்கள்தான் அறுவடை செய்கிறார்கள். அரசு வங்கிகளோ இந்த பாமர மனிதர்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.

எந்த அரசு வங்கியும் இவர்களுக்கு கடன் தருவதில்லை என்பதால், வெளியிலேயே பணம் வாங்குகிறார்கள். விசைப்படகு உரிமையாளர் தனது படகில் உடன் வரும் குறிப்பிட்ட மீனவருக்கு கடன் தருகிறார் என்றால் மீன் பிடித்து வரும் லாபத்தில் அதை கழித்துக் கொள்வார் என்று பொருள். மீன்களை ஏலம் எடுக்கும் வணிகர், மீனவருக்கு கடன் தருகிறார் என்றால், அந்த மீனவர் பிடித்து வரும் மீன்கள் அந்த வணிகருக்கு மட்டுமே சொந்தம் என்று பொருள்.

இதுதவிர, மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை ஏலம் எடுப்பதற்காகவே குறிப்பிட்ட சில வணிகர்கள் இருக்கிறார்கள். அவர்களைத் தவிர வேறு யாரும் ஏலம் எடுக்க முடியாது. எனவே அவர்கள் சொல்வதுதான் விலை. மீனவர்களுக்கு அந்தவிலை கட்டுப்படியாகவில்லை என்றாலும் வேறு வழியில்லை. அவர்களுக்குத்தான் விற்றாக வேண்டும்.

ஆறு மாதங்களாக தன் வீட்டுக்குச் செல்லாத அந்த குமரி மீனவரின் முகமே பெரும்பாலான நாகை மீனவர்களின் முகங்களாகவும் இருக்கின்றன.

நாகப்பட்டினம் மீனவர் வாழ்க்கை ! சிறப்பு நேரடி ரிப்போர்ட் !!
வலை பின்னும் வேலையில்….

டலில்  எந்தளவுக்கு மீனவருக்கு வேலை இருக்கிறதோ அதே அளவுக்கு கரையிலும் வேலை இருக்கிறது. வலையை பிரிப்பது, காய வைப்பது, கிழிந்த வலையை தைப்பது, புதிய வலையை பின்னுவது, படகை கழுவுவது என அடுக்கடுக்கான வேலைகள் அவர்களுக்காக காத்திருக்கின்றன. அதனாலேயே கரையைத் தொட்டதும் அவர்கள் தங்கள் வீட்டுக்குச் செல்வதில்லை.

எந்தப் படகுக்கு எந்த வகையான அச்சில் வலை வேண்டும் என மீனவர்களுடன் கலந்தாலோசித்தே மீன் வளத்துறை வலைகளை தயாரிக்கிறது. ஆனால், அதில் உள்ளடி வேலைகள் நிறைய இருப்பதாக சொல்கிறார்கள். அதன் காரணமாக தனியாரிடம் வலை வாங்குவது தொடர்கிறது.

ஒவ்வொரு விசைப்படகுக்கும் அரசாங்க லைசன்ஸ் வாங்க வேண்டும். அப்படி வாங்கும் லைசன்ஸ் அப்படகு கடலில் மிதக்கும் வரைதான் செல்லுபடியாகும். பழுதாகி, வேறு புதிய படகை வாங்க நேர்ந்தால், திரும்பவும் லைசன்ஸ் வாங்க வேண்டும். அதேபோல், பெரிய விசைப்படகில் பயணிக்கும் ஒவ்வொரு மீனவரும் தங்களுக்கான அத்தாட்சிப் பத்திரத்தை கையில் வைத்திருக்க வேண்டும். இவற்றுக்கெல்லாம் லஞ்சம் கொடுத்தே ஆக வேண்டும்.

சுமாராக ஒரு பெரிய விசைப்படகுக்கு லைசென்ஸ் வாங்க வேண்டுமென்றால், ரூபாய் 25 ஆயிரம் வரை லஞ்சம் கொடுக்க வேண்டுமாம். அதேபோல் மீனவர்கள் தங்களுக்கான அத்தாட்சிப் பத்திரத்தை வாங்க வேண்டுமென்றால், ரூபாய் 10 ஆயிரம் வரை அழ வேண்டுமாம்.

சுருக்கமாக சொல்வதென்றால், தாங்கள் சுவாசிக்கக் கூட கப்பம் கட்ட வேண்டும் என்கிறார்கள் மீனவர்கள்.

நாகப்பட்டினம் மீனவர் வாழ்க்கை ! சிறப்பு நேரடி ரிப்போர்ட் !!
அழுகும் நிலையில் உள்ள மீன்கள் உடனடியாக கருவாட்டுத் தயாரிப்புக்குச் செல்கிறது

ரைக்கு வந்திறங்கும் மீன்களில், அழுகும் நிலையில் இருக்கும் மீன்களை உடனடியாக குறைந்த விலைக்கு கருவாட்டுக்காக விற்கிறார்கள். சின்னச் சின்ன குடிசைகளில் இப்படி வரும் மீன்களின் மீது உப்பைத் தடவி தண்ணீரில் ஊற வைத்து காய வைக்கும் பணியில் பலரும் ஈடுபட்டிருக்கிறார்கள். விடுமுறை நாட்களில், பள்ளியில் படிக்கும் சிறுவர், சிறுமியர் கூட இப்பணிகளில் தங்கள் பெற்றோருக்கு உதவியாக இருக்கிறார்கள்.

அதேபோல் தன் தாத்தாவுடன் சேர்ந்து துடுப்புத் துழாவும் சிறுவனையும் பார்க்க முடிந்தது. கரைக்குத் திரும்பிய சிறிய விசைப்படகிலிருந்து ஐஸ் பாக்ஸை சேகரித்து, ஐஸ் கம்பெனியில் ஒப்படைக்கும் பணி அவர்களுடையதாம். அருகிலிருக்கும் மெட்ரிக்குலேசன் பள்ளியில் ஆறாவது படிக்கும் அச்சிறுவன், விடுமுறை நாட்களில் இப்படி உழைத்து சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டே ‘டேம் பீஸ்’ கட்டுவதாக சொன்னான்.

நாகப்பட்டினம் மீனவர் வாழ்க்கை ! சிறப்பு நேரடி ரிப்போர்ட் !!
கரைக்குத் திரும்பிய சிறிய படகிலிருந்து ஐஸ் பாக்ஸ் சேகரிக்கும் சிறுவன்

பெரும்பாலான ஆண்கள் சம்பாதிக்கும் பணத்தை குடித்தே அழிப்பதாகவும், சீட்டு விளையாடியே குடும்பத்தை கவனிக்காமல் விடுவதாகவும் பெண்கள் குமுறுகிறார்கள். உடலில் தெம்புள்ள பெண்கள்தான் பெரும்பாலும் மீன் விற்று குடும்பத்தை காப்பாற்றுகிறார்கள். பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள்.

வயதான பெண்களில் கணிசமானோர் வெயிலில் மீன்களை காய வைத்து விற்கும் வேலையை செய்கிறார்கள். இவர்களில் பலர், வெறும் பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் அல்லது ஆண் பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டவர்கள். இந்தத் தகவலை சொல்லியபடியே கொளுத்தும் வெயிலில் அருவாள்மனையில் மீன்களை நறுக்கிக் கொண்டிருந்த மூதாட்டிக்கு வயது  72.

‘நாலு பொண்ணுங்களை பெத்தேன். மீன் பிடிக்கப் போன எம் புருஷன், படகு மூழ்கி செத்துட்டாரு. மூலைல உக்காந்து அழவா முடியும்? நாலு பொண்ணுங்களையும் உழைச்சு 12வது வரைக்கும் படிக்க வெச்சேன். வேலைக்கு போகணும்னு ஆசைப்பட்டதுங்க. ஆனா, எங்க வேலை கெடைக்குது..? அதான் நல்ல இடம்னு நம்பி நாலையும் கட்டிக் கொடுத்தேன். எம் போறாத வேளை… நாலும் நிம்மதியா இல்லை. பொழுதன்னைக்கும் அடியும், உதையும் வாங்கிட்டு இருக்குங்க. அப்பப்ப பணம் கேட்டு எம் மருமவனுங்க பொண்ணுங்களை அனுப்புவாங்க. அதுக்காகவே ஒருநாளைக்கு கால் வயித்து கஞ்சிய மட்டும் குடிச்சு பணத்தை சேத்துட்டு இருக்கேன். நடுவுல சம்மந்திங்க வேற அப்பப்ப செத்துட்டு இருக்காங்க. ஒவ்வொருமுறையும் சம்மந்தி சீரா 20 ஆயிரம் ரூபா வரைக்கும் செலவழிக்க வேண்டியிருக்கு. நான் ஓத்தக் கிழவி. என்ன பண்ணுவேன் சொல்லு…’

உதட்டிலிருந்து வார்தைதைகள் வெடித்தாலும் மூதாட்டியின் கைகள் மட்டும் பரபரவென மீன்களை அடுத்தடுத்து நறுக்கிக் கொண்டிருந்தன. இந்த மூதாட்டிக்கு அருகிலிருந்த ஐம்பது வயது பெண்மணி சொன்னார்:

‘பாவம், இதுக்கு சின்ன வயசுலேந்தே கண்ணு தெரியாது…’

நாகப்பட்டினம் மீனவர் வாழ்க்கை ! சிறப்பு நேரடி ரிப்போர்ட் !!
சிங்கள் கடற்படையினரால் தாக்கப்படும் பெரிய விசைப்படகுகள்

பெரிய விசைப்படகுகளில் மீன் பிடிக்கச் செல்பவர்கள்தான் இப்போது செய்திகளில் அதிகம் அடிபடும் மீனவர்கள். இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாகுபவர்கள் இவர்கள்தான்.

உயிருக்கு உத்திரவாதமில்லாத நிலையில்தான் ஒவ்வொருமுறையும் இவர்கள் கடலுக்கு செல்கிறார்கள். எப்போது வேண்டுமானாலும் தங்கள் மீது துப்பாக்கி குண்டு பாயலாம் என்ற நிலையிலேயேதான் மீன் பிடிக்கிறார்கள். நாகப்பட்டினத்துக்கும் இலங்கைக்குமான தூரம் குறைவாக இருப்பதும், சர்வதேச கடல் எல்லை கரையிலிருந்து புறப்பட்ட சில மணித்துளிகளில் வருவதும் இவர்களது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கின்றன.

கடலில் எல்லை என்று எதுவுமில்லை என்பதே அனைத்து மீனவர்களின் ஒருமித்த குரலாக இருக்கிறது. ஒரு வேளை அப்படி ஒரு எல்லை போட்டாலும் அதை அமல்படுத்துவது சாத்தியமே இல்லை. எல்லை தாண்டி பிடிக்கிறார்கள் என்று சொல்லும் கொழுப்பெடுத்தவர்களை ஒரு படகில் ஏற்றி எல்லையை காட்ட சொன்னால் எந்த காலத்திலும் காட்ட முடியாது.

ஆனால், இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுடுவது மட்டுமே தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்னையல்ல என்பதை திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறார்கள். கடலில் இவர்களை வளைத்துக் கொள்ளும் இலங்கை கடற்படையினர், எப்போதாவதுதான் சுடுவார்களாம். ஆனால், எப்போதும் பிடித்த மீன்களை அபகரிப்பது, வலை, டீசல், ஐஸ் பாக்ஸ், மீன் இருப்பதைக் காட்டும் கருவி, எக்கோ கருவி, திசை காட்டும் ஜி.பி.எஸ். ஆகியவற்றை பிடுங்கிக் கொள்வது, சமையல் பொருட்களை கைப்பற்றுவது, அடுப்பையும் மருந்து மாத்திரைகளையும் எடுத்து கடலில் வீசுவது, உடுத்திய துணிகளை கழற்றச் சொல்லியும் மாற்று உடைகளை எடுத்துக் கொண்டும் செல்வது, நிர்வாணமாகவே கரைக்கு அனுப்புவது, ஒருபால் உடலுறவுக்கு கட்டாயப்படுத்துவது, பிளாஸ்டிக் பைப்பால் அடிப்பது ஆகியவற்றை மேற்கொள்வார்களாம்.

அந்தவகையில் பெரிய விசைப்படகில் மீன் பிடிக்கச் செல்லும் பெரும்பாலான மீனவர்களின் உடலில் பிளாஸ்டிக் பைப்பால் வாங்கிய அடியின் தழும்புகள் இருக்கின்றன. ஒருமாதத்துக்கு சராசரியாக நான்குமுறை பெரிய விசைப்படகுகளில் மீன் பிடிக்கச் செல்கிறார்கள். அதில், இரண்டு முறையாவது இப்படி நிகழும் என்றும், ஒருமுறையாவது பிடித்த மீன்களை இலங்கை கடற்படையினரிடம் பறிகொடுத்துவிட்டு வெறுங்கையுடன் திரும்ப நேரிடும் என்றும் விரக்தியுடன் மீனவர்கள் சொல்கிறார்கள்.

இவைதவிர, நடுக்கடலில் எதிர்பாராத நேரங்களில் பெட்ரோல் குண்டை வீசி, விசைப்படகிலிருக்கும் மீனவர்களை எரிய வைப்பார்களாம். வெந்து தணிந்த உடலுடன் கரைக்கு திரும்பும் மீனவர்கள் அதன்பிறகு மீன் பிடிக்க கடலுக்கும் செல்ல முடியாது. போதிய வசதி இல்லாததால் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறவும் முடியாது. வாழ்க்கையை நினைத்து நினைந்து கண்ணீர் சிந்தியபடியே தன் எஞ்சிய நாட்களை கழிப்பதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை.

முள்ளிவாய்க்கால் போருக்கு பிறகு இப்போது சிங்கள மீனவர்கள் அதிகம் வருகிறார்களாம். இவ்வளவு நாட்கள் புலி பயத்தில் இருந்தவர்கள் இப்போது அடிக்கடி வருகிறார்கள். ” இவ்வளவு நாட்கள் நீங்க சம்பாதிச்சிட்டீங்க, இனி நாங்க சம்பாதிக்கிறோம், இங்கு வராதே” என்றுதான் அவர்கள் சொல்வார்களாம். இலங்கையை சேர்ந்த தமிழ் மீனவர்கள் எப்போதாவதுதான் வருவதாக நாகை மீனவர்கள் சொல்கிறார்கள்.

இலங்கை கடற்படையின் முக்கிய நோக்கம் தமிழ் மீனவர்களை தொடர்ந்து அச்சுறுத்தி, மிரட்டி பாக் நீரிணை மீன்வளத்தை சிங்கள மீனவருக்காக பாதுகாப்பதுதான் என்று நாகை மீனவர்கள் கூறுகிறார்கள். இதற்கு மேல் இதன் அரசியல் பரிமாணத்தை அவர்கள் உணர்ந்திருக்கவில்லை அல்லது கவலைப்படவில்லை. எப்படியும் சிங்கள கடற்ப்படையினருக்கு பயந்து கொண்டுதான் மீன்பிடிக்க முடியும் என்பது தவிர்க்க முடியாத யதார்த்தமாக அவர்களுக்கு இருக்கிறது.

இவ்வளவு அவமானங்களையும், துயரங்களையும் தாங்கிக் கொண்டும், உயிருக்கு உத்திரவாதமில்லாத நிலையிலும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல காரணம், வேறெந்தத் தொழிலும் அவர்களுக்குத் தெரியாது என்பதுதான். வேறு எந்த தொழிற்சாலையும் சுற்றுவட்டாரத்தில் இல்லை என்பதுதான். அதனாலேயே கல்லூரிக்குச் சென்று படிக்கும் மீனவர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக் கூடியதாக இருக்கிறது. அப்படியே பட்டப்படிப்பை முடித்தாலும் அரசாங்க வேலையை மட்டுமே நம்பியிருக்கும் நிலை. தொழில் வாய்ப்பு குறித்த அறியாமை.

இந்திய கடலோர காவல்படையினர் பெயரளவுக்கு அங்கிருந்தாலும், தினமும் குறிப்பிட்ட கி.மீ. அல்லது குறிப்பிட்ட டீசலை செலவு செய்துதான் ரோந்துப் பணியை மேற்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு அவர்களுக்கு இருப்பதால், இலங்கை கடற்படையினரின் எந்த அட்டூழியத்தையும் அவர்கள் கண்டுகொள்வதில்லை. நடுக்கடலில் படகு பழுதாகி நிற்கும் மீனவர்களின் நிலை குறித்தும் பதறுவதில்லை. தவிர, கூடுதலாக இந்திய கடலோர காவல்படையினர் செலவழிக்கும் ஒவ்வொரு லிட்டர் டீசலுக்கும் மேலிடத்திலிருந்து எழுத்துப்பூர்வமாக அனுமதி வாங்க வேண்டும் என்பதால் மீனவர்களின் பிரச்னைகளை அவர்கள் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை, காதுகொடுத்தும் கேட்பதில்லை. ஆனால் அதிகாரிகளது பிக்னிக் போட்டிங்குக்கு மட்டும் அழகாக கள்ளக்கணக்கு எழுதுவார்கள். அநேக இந்திய கடற்படையினருக்கு தமிழ் தெரியாது என்பதால் நாகை மீனவர்களது எந்த பிரச்சினை பற்றியும் அவர்களுக்கு குறிப்பாக தெரியாது.

மேலதிகமாக இராணுவம் என்பது பாமர மக்களுக்கு உதவுவது அல்ல என்பது இங்கே பலமுறை நிருபீக்கப்பட்டுள்ளது. அதனால் இந்திய கடலோரக்காவல் படை குறித்த மயக்கங்களெல்லாம் நாகை மீனவரிடத்தில் இல்லை. அவர்களைப் பொறுத்த வரை பல தொந்தரவுகளில் இதுவும் ஒன்று.

_______________________________________________________________

ன்னும் விடிந்திருக்கவில்லை. ஆனால், நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகம் மும்முரமாக இயங்கிக் கொண்டிருந்தது. ஆங்காங்கே எரிந்துக் கொண்டிருந்த குண்டு விளக்குகளும், குழல் விளக்குகளும் சிந்திய ஒளி, புதிதாக அந்தப் பகுதிக்கு வருபவர்களுக்குத்தான் வழிகாட்டியாக இருக்கிறது. மற்றபடி மீனவர்கள், அந்த ஒளிச்சிதறலை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. இருட்டும் ஒளிதான் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தவர்கள் போல்  சுழன்றுக் கொண்டிருந்தார்கள். அந்த மீன்பிடித் துறைமுகத்தின் நீள, அகலங்களும், குறுக்கு வெட்டு பகுதிகளும் அவர்கள் கால்களுக்கும், கைகளுக்கும் பழக்கப்பட்டிருந்ததை உணர முடிந்தது. எல்லா  இன்னல்களை ஏற்றுக் கொண்டு தொடர்ந்து அவர்களால் அங்கே  பணி செய்ய முடிகிறது. இல்லை செய்தாக வேண்டும். உழைப்பின்றி அந்த உழைப்பாளிகளால் ஒருபோதும் ஓய்ந்திருக்க இயலாது. நமக்கு மீன் தருவதற்காக எல்லா இன்னல்களையும் அந்த மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். தேவையென்றால் உயிரையும் தருகிறார்கள்.

நாகப்பட்டினம் மீனவர் வாழ்க்கை ! சிறப்பு நேரடி ரிப்போர்ட் !!

______________________________________________________________

வினவு செய்தியாளர்கள், நாகப்பட்டினத்திலிருந்து.

புகைப்படங்கள்: பார்த்திபன்

______________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 

 

 1. நாகப்பட்டினம் மீனவர் வாழ்க்கை ! நேரடி ரிப்போர்ட் !! | வினவு!…

  இலங்கை கடற்படையால் தாக்கப்படும் மீனவர்கள் என்ற பரபரப்பு செய்திகளைத் தாண்டி நாகை மீனவர்களது வாழ்க்கை குறித்து இந்த நேரடி ரிப்போர்ட் முழுமையான ஒரு சித்திரத்தை வழங்குகிறது….

 2. நல்ல விரிவான விபரங்கள் நிறைந்த படங்களுடன் கூடிய நன்கு உழைத்து எழுதப்பட்ட அருமையான பதிவு.
  படித்தவுடன் மனசு மிகவும் வேதனைப்படுகிறது.
  நன்றி.

 3. “கடலில் எல்லை என்று எதுவுமில்லை என்பதே அனைத்து மீனவர்களின் ஒருமித்த குரலாக இருக்கிறது. ஒரு வேளை அப்படி ஒரு எல்லை போட்டாலும் அதை அமல்படுத்துவது சாத்தியமே இல்லை. எல்லை தாண்டி பிடிக்கிறார்கள் என்று சொல்லும் கொழுப்பெடுத்தவர்களை ஒரு படகில் ஏற்றி எல்லையை காட்ட சொன்னால் எந்த காலத்திலும் காட்ட முடியாது.” அருமையான வாசகம். உள் நாட்டில் சில அறிவாளிகள் இப்படி உளரிக் கொண்டு அலைகிறார்கள். அவர்களைப் பிடித்து படகில் ஏற்றி சர்வதேச எல்லையைக் காண அனுப்பவேண்டும்.

 4. அட,ஒரு விசிலடிச்சிருந்தா ஓடி வந்திருப்பேனே!வினவு செய்தியாளர்களுக்கு ஏதாச்சும் உதவி பண்ணியிருப்பனே!நமக்கு நாகை ரொம்பப்பக்கம்தானுங்களே!

  • //அட,ஒரு விசிலடிச்சிருந்தா ஓடி வந்திருப்பேனே!வினவு செய்தியாளர்களுக்கு ஏதாச்சும் உதவி பண்ணியிருப்பனே!நமக்கு நாகை ரொம்பப்பக்கம்தானுங்களே!//

   தோழரே, உங்களின் இந்தப் பின்னூட்டம் எமக்கு பெரும் தூண்டுதலை உருவாக்குகிறது.

 5. மீனவர் வாழ்க்கையை உள்ளது உள்ளபடி அறிமுகம் செய்த தோழர்களுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும். இது இணையத்தோடு மட்டுமில்லாமல் சிறு பிரசுரமாக தமிழக மக்கள் மத்தியில் சென்றால் மேலும் பயனுள்ளதாக இருக்கும்.

 6. சிறப்பான பதிவு. வினவு செய்தியாளர்களுக்கு நன்றி. இது போல தொடர்ந்து களச்செய்திகளையும் மக்கள் வாழ்வையும் பதிவு செய்யுங்கள்.

 7. மீனவர்களின் வாழ்க்கையை மிக நெருக்கமாகவும் , இதுவரை தெரியாத பல விஷயங்களையும் பதிவு செய்கிறது இக்கட்டுரை. ஒவ்வொருமுறையும் கடலுக்குச் செல்லும்போதும் பொருளையும் அடகு வைப்பதோடு, உயிரையும் பணயம் வைத்துதான் செல்ல வேண்டியிருக்கிறது என்பது தாங்கமுடியாததாய் இருக்கிறது.

  வினவு செய்தியாளர்களுக்கு நன்றி.

 8. Indha blog padicha piragu computerla okandhu enaaku velai jastinu solrathuke koochama irukku. Fisherman Life pathi ethuvumae theriyama #tnfisherman tweet panninen, ippo therijidichi. Thanks Vinavu

 9. மிகச் சிறப்பான பதிவு. உண்மையில் வினவு செய்தியாளர் வாசகர்களை மீன்பிடித் துறைக்கே அழைத்துப் போய் நேரடியாகவே காட்சிகளைக் காட்டி விவரிப்பது போல் இருக்கிறது. ஒவ்வொரு முறை கடலில் இறங்கும் முன்னும் அவர்கள் செய்யும் முதலீடு மலைக்க வைக்கிறது… முன்பெல்லாம் தெருவில் மீன் கொண்டு வரும் வயதான பெண்மணியிடம் “என்ன ஆயா இது, சால மீனுக்கு இந்த விலை சொல்றீங்களே… சீலாவுக்கு அந்த விலை சொல்றீங்களே” என்றெல்லாம் நொன்னாட்டியம் பேசியதை நினைத்தால் இப்போது கூசுகிறது.

  என்னவொரு வாழ்க்கை? சமவெளி மக்களின் சமூகத்துக்கு வெளியே இருந்து கொண்டு; அவர்களின் புறக்கணிப்புகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டு, சமவெளி மக்களின் உணவுத் தேவைக்காக தமது உயிரையே பணயம் வைத்து கடலாடும் இந்த எளிய மனிதர்கள் பற்றிய இந்தக் கட்டுரை உண்மையில் அவர்கள் மேல் புதிதாய் ஒரு மரியாதையை ஏற்படுத்துகிறது.

  கட்டுரையை எழுதிய வினவு செய்தியாளருக்கு வாழ்த்துக்கள்…!

  • //முன்பெல்லாம் தெருவில் மீன் கொண்டு வரும் வயதான பெண்மணியிடம் “என்ன ஆயா இது, சால மீனுக்கு இந்த விலை சொல்றீங்களே… சீலாவுக்கு அந்த விலை சொல்றீங்களே” என்றெல்லாம் நொன்னாட்டியம் பேசியதை நினைத்தால் இப்போது கூசுகிறது.//

   உண்மைதான் நண்பரே

   ஈய ஓட்ட வாளியில் மீனை நெரப்பி தலையில சுமந்துக்கிட்டு வரும்போது வாளி ஓட்ட வழியாக வழியிற மீன் தன்னி அவுங்க செலையே நளச்சுக்கிட்டே வரும் ஏங்க ஏரியா இராமேஸ்வரம் பக்கம் என்பதால் (கரை வல மீனு) நாட்டு படகில் பிடிப்பதை மீனவர்களின் குடும்பத்தைச் சார்ந்த பெண்கள் விற்பதற்கு கொண்டு வருவார்கள் அவுங்கள எங்க வீட்டு பொம்பளைங்க படுத்துற பாடு இருக்கே
   கண்களில் கண்ணீரை வர வைத்து விடும்

 10. எம் மக்களின் வாழ்க்கையைப் பற்றிய மிகச்சரியான சித்தரிப்பு. நன்றி

 11. மீனைப்பற்றி அறியவில்லை.உழைக்கும்மீனவர்களைப்பற்றி அறியமுடிந்தது்.புரட்சியாளர்களால்தான் இப்பணியை சிறப்பாக செய்யமுடியும்.என்பதை மீண்டும் நிருபிக்கப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள்

 12. “கடலில் எல்லை என்று எதுவுமில்லை என்பதே அனைத்து மீனவர்களின் ஒருமித்த குரலாக இருக்கிறது. ஒரு வேளை அப்படி ஒரு எல்லை போட்டாலும் அதை அமல்படுத்துவது சாத்தியமே இல்லை. எல்லை தாண்டி பிடிக்கிறார்கள் என்று சொல்லும் கொழுப்பெடுத்தவர்களை ஒரு படகில் ஏற்றி எல்லையை காட்ட சொன்னால் எந்த காலத்திலும் காட்ட முடியாது.” அருமையான வாசகம். உள் நாட்டில் சில அறிவாளிகள் இப்படி உளரிக் கொண்டு அலைகிறார்கள். அவர்களைப் பிடித்து படகில் ஏற்றி சர்வதேச எல்லையைக் காண அனுப்பவேண்டும்.

 13. the fisherman problem is not simple problem. it is a dangerous problem for India and particularly for Tamil Nadu. In its southern parts of Land , it have no land border with other country particularly with Ceylon. whenever the Tamil fisherman killed , the Ceylonese always claims , it have not connected with it. That means some armed- speedboat persons
  are jointly operating in the region and killing Indian fisherman whenever i thinks. . The states Tamil Nadu, Andhra, Kerala, Karnataka and Orissa are defenseless against this powerful armed gang. Particularly Tamil Nadu have two Atomic power station in its sea cost line. if some bad thing happen it completely eliminate the Tamil people in Tamil Nadu.
  it is the time India must open its eyes and built up strong naval force , in this region and post Tamil known naval officer in this region. we must use force to stop other countries enter this region. we must retake our Katcha Island and built up Naval station there
  the party politics is not use here , if we fail at this time to take strong action India may face very dangerous position.
  even the god cannot save us.

 14. அருமையான கட்டுரை,இதை தமிழர்கள் மனதில் கொண்டு,காங்கிரஸ் நிற்கும் அனைத்து தொகுதிகளிலும் அதற்கு எதிராக வாக்களித்து தோல்வியுற செய்யவேண்டும்,
  தி.மு,காவை ஆதரிக்கும் தி,மு,க தொண்டர்களும்,தி,மு,க நிற்கும் தொகுதிகளில் தி,மு,காவை ஆதரித்து ஒட்டுப்போட்டாலும்,அதன் கூட்டணியான காங்கிரச் நிற்கும் தொகுதியில் மட்டும் அதை எதிர்த்து ஆ,தி,மு,காவுக்கு ஓட்டளிக்க வேண்டும்,இதை அந்த தொகுதியில் உள்ள தி,மு,க தொண்டர்கள்,பொது மக்கள் செய்ய வேண்டும்,
  நம் உண்மையான் எதிரி காங்கிரச் தான்,அது தமிழகத்தில் தலையெடுக்க கூடாது,

 15. மீனவ பிரட்சினையை பொது மக்களை புரிந்துகொள்ள வைப்பதற்கு இது போன்ற கட்டுரைகள் பேருதவி.
  இந்த கட்டுரையாளரின் சமூகப் பணிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

 16. அருமையான கட்டுரை!

  //இந்த குமரி மீனவர் போல மற்ற ஊர்களைச் சேர்ந்த எண்ணற்றவர்கள் நாகை மீன்பிடித் துறைமுகத்துக்கு விசைப்படகை பழுது பார்க்கவும், பிடித்த மீன்களை விற்கவும் வருவார்கள் என அங்கிருந்தவர்கள் அவர் நகர்ந்ததும் குறிப்பிட்டார்கள். மற்ற ஊர்களிலிருந்து மீன்பிடிக்க வரும் மீனவர்களை உள்ளூர் மீனவர்கள் போட்டியாளராக கருதுவதில்லை. தேவையான உதவிகளை செய்கிறார்கள். அது போல இவர்களும் கடலின் போக்கிற்கேற்ப மற்ற ஊர்களுக்கு செல்வார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்களைப் பொறுத்தவரை கடல் என்பது யாருடைய தனிச்சொத்துமல்ல. அது விரிந்து கிடக்கும் ஒரு பொக்கிஷம். அங்கு திறமையுடன் மீன்பிடித்து செல்வது அவரவர் பொறுப்பு. அதில் பாத்தியதை ஏதுமில்லை. இதனால் மீன்பிடிப்பு காரணமாக மீனவர்களுக்குள் சண்டை வராது என்பதல்ல. மாறாக கடலை ஒரு தனிச்சொத்தாக பார்க்கும் முதலாளித்துவ கண்ணோட்டம் அந்த வெள்ளேந்தி மனிதர்களிடத்தில் இல்லை. அந்த வகையில் மீனவர்களது சிந்தனை சோசலிசத்திற்கு நெருக்கமானது.//

  மற்றும்

  //ஆனால், மீன்களை பிடித்து வந்து கரையிலுள்ள வணிகர்களிடம் ஏலத்துக்கு விற்றதும் கிடைக்கும் பணத்தில் சரி பாதியை – அதாவது ஐம்பது சதவிகிதத்தை – படகின் உரிமையாளர் மட்டுமே எடுத்துக் கொள்கிறார். மீதமுள்ள ஐம்பது சதவிகிதத்தையே அப்படகில் சென்ற மற்ற மீனவர்கள் தங்களுக்குள் பகிர்ந்துக் கொள்கிறார்கள். எனவே எவ்வளவுக்கு எவ்வளவு மீன் பிடிக்கிறார்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு உரிமையற்ற படகில் கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு வருமானம். அந்தவகையில் படகு வைத்திருப்பவரும், வைத்திராதவரும் இங்கே மீன்பிடி எனும் தொழிலை வைத்துத்தான் பிழைக்க முடியும். படகு இருந்து விட்டதனாலேயே ஒருவர் அன்றாடம் இலாபம் ஈட்ட முடியாது.//

  இந்த இரண்டு பத்திகளும் என் கவனத்தை மிகவும் ஈர்த்தன. பாராட்டுக்கள், அவர்களின் சோஷியலிசத்திற்கும், அறியச் செய்த உமது குழுவுக்கும்.

 17. நல்ல கட்டுரை. நன்றி.

  மீனவர்கள் சமுதாயத்தில் பெண்களின் நிலை கொடுமையாக தான் இருக்கிறது ! குடி, சீட்டாட்டம், வரதட்சணை போன்ற பிரச்சனைகள். விதவதைகள், மற்றும் ஆதரவற்ற பெண்மணிகளின் நிலை…

  ஒரு சில தகவல்கள் விட்டு போய் இருக்கின்றன :

  படகு சொந்தமாக இல்லாத ஒரு சராசரி மீனவருக்கு, தினமும் எத்தனை ரூபாய் வருமானம் வரும் ? படகு சொந்தக்காரகளுக்கு எத்தனை ரூ கிடைக்கிறது ?

  வங்கி கடன்கள் மீனவ தொழிலாளர்களுக்கு கிடைக்கதற்க்கு பல சிக்கலான காரணங்கள் உள்ளன. வளர்ந்த நாடுகளை போல் வங்கி மற்றும் நிதி துறை இங்கு ‘தாரளமயமாக்கப்’ படவில்லை. சிறு மற்றும் குறு வங்கிகள் நடத்த பெரும் தடைகள். debt recovery acts, bankruptcy acts, individual bankruptcy acts, allowing all kind of micro finance and credit agenices, etc : இவை இல்லாததால், கருப்பில் கந்து வட்டிக்குதான் வாங்க வேண்டிய நிலை. மேலும்..

 18. மேலும், டீசல் மான்யம் பற்றி கேட்க மறந்துவிட்டேன். மீனவர்களுக்கு மானியம் மூலம் குறைந்த விலைக்குதான் டீசல் விற்க்க்படுவதாக தகவல். அதை பற்றி விவரங்கள் ?

  டீசல் விலையேற்றம், காரணிகள் ஒரு சிக்கலான, பெரிய சப்ஜெக்ட்.

 19. முள்ளிவாய்க்கால் போருக்கு பிறகு இப்போது சிங்கள மீனவர்கள் அதிகம் வருகிறார்களாம். இவ்வளவு நாட்கள் புலி பயத்தில் இருந்தவர்கள் இப்போது அடிக்கடி வருகிறார்கள். ” இவ்வளவு நாட்கள் நீங்க சம்பாதிச்சிட்டீங்க, இனி நாங்க சம்பாதிக்கிறோம், இங்கு வராதே” என்றுதான் அவர்கள் சொல்வார்களாம். இலங்கையை சேர்ந்த தமிழ் மீனவர்கள் எப்போதாவதுதான் வருவதாக நாகை மீனவர்கள் சொல்கிறார்கள்.

  இலங்கை கடற்படையின் முக்கிய நோக்கம் தமிழ் மீனவர்களை தொடர்ந்து அச்சுறுத்தி, மிரட்டி பாக் நீரிணை மீன்வளத்தை சிங்கள மீனவருக்காக பாதுகாப்பதுதான் என்று நாகை மீனவர்கள் கூறுகிறார்கள்
  ******

  இத எதுக்கு கொழும்புவில் இருந்து சிங்களத்தனுக்கு வக்காலத்து வாங்கற பதிவருங்க மறைக்கராங்க
  ஈழதமிழ்மீனவருங்க பேருல பழிய போடரானுங்க

 20. இப்படி ஒரு அற்புதமான பதிவை சமீபத்துல எங்கேயுமே படிச்சதில்ல. பத்திரிக்கைகாரன்னு சொல்லிகிட்டு வம்பு மட்டும் வளர்த்துகிட்டு சில கேசுகள் திரியுது, என்னிக்காவது இந்த மாதிரி மக்கள் வாழ்க்கைய பத்தி உருப்படியா எழுதியிருப்பாங்களா? நீங்களாச்சும் செஞ்சீங்களே.