privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காதேர்தலில் மூழ்கிய தமிழகமே, இந்தியா விலைபோன கதையைக் கேள் !

தேர்தலில் மூழ்கிய தமிழகமே, இந்தியா விலைபோன கதையைக் கேள் !

-

ந்திய வரலாற்றின் முக்கியமான தினங்களில் ஒன்று 2008-ஆம் ஆண்டு ஜூலை 22-ஆம் தேதி. அன்றைய நாளில் தான் இந்திய ஜனநாயகத்தின் மாண்பு சுடர்விட்டுப் பிரகாசித்தது. உலகிலேயே முதலாம் பெரிய ஜனநாயகம் என்று போற்றப்படும் இந்திய ஜனநாயகத்தின் கருவறையான தில்லி பாராளுமன்றத்தில் அன்று நடந்த ஆபாச நடனங்கள் தான் அந்த நாளை இன்றும் நாம் மறக்காமல் நினைத்துப் பார்க்கக் காரணம்.

காஞ்சிக் கருவறையில் காம நர்த்தனம் புரிந்த தேவதாதனே கூச்சப்படுமளவிற்கு மேற்படித் தேதியில் ஓட்டுக் கட்சிகள் நடத்திய ஜனநாயக ரிக்கார்டு டான்சை ஒரு முறை நாம் திரும்பிப் பார்ப்போம். “இப்ப ஏன் சார் கொசுவர்த்திய சுத்தரீங்க” என்று நீங்கள் கேட்பது புரிகிறது – கொஞ்சம் பொறுத்தீர்களானால் விடையை நீங்களே இறுதியில் கண்டடைவீர்கள். 2008-ஆம் ஆண்டின் மத்தியில் முதலாம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்காளி பங்காளியாக இருந்த இடது வலது போலிக் கம்யூனிஸ்ட்டுகள் கூட்டணி அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டதால் ஆளும் கூட்டணி நம்பிக்கை வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியது.

போலிகள் அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றார்கள் என்றதும் உடனே இது ஏதோ கொள்கையின் அடிப்படையில் தேச நலனை முன்னிட்டு எடுக்கப்பட்ட முடிவு என்பதாக நீங்கள் யாரும் குழப்பிக் கொள்ளக் கூடாது. எனவே வினவு வாசகர்கள் பாராளுமன்றத்தில் நடந்த ஜனநாயகக் குத்தாட்டத்தைப் பற்றி அறிந்து கொள்ளும் முன், இந்தப் போலிகளின் ‘ஆதரவு வாபஸ்’ நாடகத்தைப் பற்றிய ஒரு சுருக்கமான பின்னணியை அறிந்து கொள்வது அவசியம்.

_________________________________________________________

சென்ற நூற்றாண்டியின் இறுதியில் இருந்தே அமெரிக்காவுக்குத் தெற்காசியப் பிராந்தியத்தில் வலுவான பேட்டை ரவுடி ஒன்றின் தேவை இருந்தது. தனது எண்ணைப் பசிக்காக மத்திய கிழக்கு நாடுகளை எந்தவித இடையூறும் இன்றி உறிஞ்சிக் கொள்வதற்கு எதிராக ஒரு சின்ன முணுமுணுப்பு கூட ஆசிய பிராந்தியத்தில் இருந்து எழுந்து விடக்கூடாது என்பதில் அமெரிக்கா தீவிர கவனம் செலுத்தியது.  ஏற்கனவே முதலாளித்துவப் பாதைக்குத் திரும்பிய சீனத்தின் அசுர வளர்ச்சி அமெரிக்காவுக்கு உறுத்தலாய் இருந்தது.

சீனம் தொடங்கி மத்திய கிழக்கு வரை அமெரிக்க நலனுக்கேற்ற சரியானதொரு அடியாளாக இந்தியா தெற்காசியப் பிராந்தியத்தில் அமைந்தது. இந்தியாவைத் தனது நீண்டகால அடிமையாக வைத்துக் கொள்ளும் நோக்கத்திற்காக நம் தலைமீது திணிக்கப்பட்டது தான் இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம். அந்த ஒப்பந்தம் பல்வேறு அம்சங்களில் இந்தியாவைக் கட்டுப்படுத்துவதோடு அமெரிக்காவின் ஒரு மறைமுகக் காலனி நாடாகவும் உறுதிப்படுத்துகிறது.

இந்த ஒப்பந்தத்தை வெறுமனே அணுசக்தியின் மூலம் மின்சாரம் தயாரிக்க அமெரிக்கா இந்தியாவுக்கு உதவுவதற்காகப் போடப்பட்டதாக மட்டும் புரிந்து கொள்ளக் கூடாது. ஜூலை 2005-ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஜார்ஜ் புஷ் – மன்மோகன் விடுத்த கூட்டறிக்கையில் இது இந்திய-அமெரிக்க இராணுவ ஒத்துழைப்புச் சட்டகத்தின் தொடர்ச்சியே என்று அறிவித்துள்ளனர்.

மேற்கத்திய நாடுகள் ஏற்கனவே ஏறக்கட்டிய தொழில் நுட்பத்தை இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவின் தலையில் கட்டுவதால், இதையே காரணமாகக் காட்டி இந்தியாவை ஈரானுடன் பெட்ரோல் வர்த்தகம் வைத்துக் கொள்வதை நிறுத்த முடியும். மேலும், சர்வதேச அரங்கில் அமெரிக்க நலன்களுக்கு ஏற்ப இந்தியாவை ஆட வைக்க முடியும். மூன்று லட்சம் கோடி மதிப்புள்ள அணு உலைகளை அமெரிக்க முதலாளிகள் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய வகை செய்யும் இந்த ஒப்பந்தம், பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அமெரிக்க முதலாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம். இப்படி இந்த ஒப்பந்தத்தின் பக்க விளைவுகள் நிறைய உள்ளன.

இதெல்லாம் போலி கம்யூனிஸ்டுகளுக்குத் தெரியும். இந்த ஒப்பந்தத்திற்கான ஏற்பாடுகள் முன்பே நடந்து வந்ததும் தெரியும்.  கூட்டு ஒப்பந்தம் பற்றியும் 2005-ஆம் ஆண்டு முதலே தெரியும். அவர்களை விடுங்கள்; செய்தித் தாள்களை வாசிக்கும் எவருக்கும் இதெல்லாம் தெரிந்தே தான் இருந்தது. ஒப்பந்தம் நிறைவேறுவதைத் தடுக்க வேண்டுமென்று அவர்கள் நினைத்திருந்தால், அரசுக்கான ஆதரவை முன்பே வாபஸ் பெற்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசைக் கவிழ்த்திருக்க முடியும். ஆனாலும் அவர்கள் வெற்றுச் சவடால்கள் அடித்துக் கொண்டும், செல்லமாகக் கோபித்துக் கொண்டும் ஜூலை  2008 வரை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள் – காரணம் அடுத்த பத்து மாதங்களில் வரவிருந்த பாராளுமன்ற பொதுத் தேர்தல்!

ஆதரவு விலக்கப்பட்டதற்காகக் காங்கிரசும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அவர்கள் பார்க்காத ஜனநாயகமா இல்லை அவர்கள் பார்க்காத பாராளுமன்ற வாக்கெடுப்பா. அது அவர்கள் வழக்கமாக சிக்ஸும் ஃபோருமாக விளாசும் சொந்த மைதானமல்லவா? காங்கிரசு தனது கட்சியின் ஜனநாயகக் காவலர்களை பன்றி பிடிக்க பெட்டியும் கையுமாக பாராளுமன்றக் மலக்குட்டையில் இறக்கி விட்டது. இந்தப் பின்னணியில் தான் ஜூலை 22-ஆம் தேதி 2008-ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்திய ஜனநாயகத்தின் புனிதத்தலமான தில்லி பாராளுமன்றத்தின் மையத்தில் பாரதிய ஜனதா எம்பிக்கள் சிலர் கத்தை கத்தையாக கரன்சி நோட்டுகளைக் கொட்டினர். இந்தப் பணம் தாங்கள் அரசுக்கு ஆதரவாக ஓட்டுப் போட கொடுக்கப்பட்ட லஞ்சம் என்கிற குட்டையும் உடைத்தனர்.

இதற்கிடையே, வாக்கெடுப்பிற்கு முன்பாகவே சி.என்.என்- ஐபிஎன் தொலைகாட்சி எம்பிக்களிடம் பணம் கொடுக்கப்பட்டதைப் பதிவு செய்திருந்தது. ஏற்கனவே தனது இந்துத்துவ அரசியலால் ஓட்டாண்டியாகி நடுத்தெருவில் நின்றுகொண்டிருந்த நிலையில், எதிர்வரும் தேர்தலைக் குறிவைத்து பாரதிய ஜனதா தனது எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுத்ததை இரகசியமாகப் பதிவு செய்து ஓட்டெடுப்புக்கு முன்பு தொலைக்காட்சியில் வெளியிட வேண்டும் என்று சி.என்.என்- ஐபிஎன் மூலம் அந்த ஏற்பாட்டைச் செய்திருந்தது. இப்படிச் செய்ததால் பாரதிய ஜனதாவுக்கு அணு ஒப்பந்தத்தைத் தீவிரமாக எதிர்க்க வேண்டும் என்கிற எண்ணமோ அமெரிக்க எதிர்ப்புணர்வோ  இருந்ததாக நினைத்துக் கொள்ள வேண்டாம் –  அமெரிக்க எதிர்ப்புணர்வென்பது அவர்கள் கனவில் கூட வந்ததில்லையென்கிற உண்மையை கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அத்வானியே  அமெரிக்க தூதரக அதிகாரியிடம் சொல்லியிருப்பது தற்போது அம்பலமாகியிருக்கிறது.

இது ஒருபக்கம் இருக்க, தாங்கள் பத்திரிகையாளர்கள் என்பதும், ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்பதும், ஜனநாயகப் பூந்தோட்டத்தைக் காவல் காக்கும் காவல் நாய்கள் என்பதுமான தீடீர் ஞானோதயம் சி.என்.என்னுக்கு ஏற்பட்டு விடுகிறது. எனவே, பாராளுமன்ற ஜனநாயகத்தின் மேல் மக்களுக்கு இருக்கும் ‘நம்பிக்கையைக்’ காப்பற்றப் போவதாகவும், அதற்காக பதிவு செய்யப்பட்ட மேற்படி கண்கொள்ளாக் காட்சிகளை வெளியிடுவதில்லை என்றும் சி.என்.என் முடிவு செய்து, அந்தப் பதிவுகளை இவ்விவகாரம் பற்றி விசாரிக்கப் போகும் கமிட்டியிடம் அளித்து விடப்போவதாக அறிவித்தது.

ஜூலை 22-ஆம் தேதி நடந்த ஆபாசக் கூத்துகளைத் தொடர்ந்து பாராளுமன்ற ஜனநாயகத்தின் முகத்தில் அப்பிக் கொண்டிருந்த நரகலைக் கழுவி பவுடர் பூசி பொட்டிட்டு மலர் சூடி சிங்காரிக்க வேண்டிய தேவை சர்வ கட்சிகளுக்கும் உண்டானது. ‘சுதந்திர’ இந்தியாவில் லஞ்ச ஊழல் முறைகேடுகளைக் கையாளும் பாரம்பரிய வழக்கத்தின் படி காங்கிரசு எம்பியான கே.சி. தியோவின் தலைமையில் ஏழு பேர் கொண்ட கமிட்டி ஒன்று  அமைக்கப்படுகிறது. மார்க்சிஸ்டு, பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்கள் கொண்ட அந்தக் குழுவிடம் தான் சி.என்.என் பதிவு செய்த டேப்புகளும் ஒப்படைக்கப்பட்டது.

அதே ஆண்டு டிசம்பர் மாதம் தனது அறிக்கையைச் சமர்பித்த மேற்படி கமிட்டி, அதில் குற்றச்சாட்டிற்கு உள்ளான அகமது பட்டேல் மற்றும் அமர்சிங் இருவரும் குற்றமற்றவர்கள் என்றும் தம்மிடம் ஒப்படைக்கப் பட்ட ஆதாரங்கள் போதுமானவைகள் அல்லவென்றும் குறிப்பிட்டது. மேலும், எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளான மற்ற மூவரின் மீதும் உரிய புலனாய்வு நிறுவனங்களைக் கொண்டு விசாரிக்கலாம் என்று சொல்லி மொத்தமாக விசயத்தை ஊத்தி மூடி விட்டது.

ஜூலை மாத நம்பிக்கை வாக்கெடுப்பைத் தொடர்ந்து நான்கு மாதங்களாக சாமியாடி வந்த பாரதிய ஜனதாவோ, நேர்மை எருமை கருமை என்று பெரிய நன்னூல் போல பேசிக் கொண்டிருந்த போலி கம்யூனிஸ்ட்டுகளோ இந்த விவகாரத்தை மேற்கொண்டு முன்னெடுத்துச் செல்லாமல் அப்படியே கமுக்கமாக இருந்து விட்டார்கள். மேற்கொண்டு வெளிப்படையான விசாரணை கோரியிருக்கலாம்; அல்லது நீதி மன்றத்தை நாடியிருக்கலாம்; அல்லது மக்கள் முன் எடுத்துச் சென்றிருக்கலாம் – ஆனால், இவர்கள் மொத்தமாக மவுனம் காத்தார்கள். அவர்களுக்கே தெரியும் – இதற்கு மேல் இந்த விவகாரத்தை நோண்டினால் ஜனநாயக செப்டிக் டேங்கின் மூடியைத் திறந்து முகர்ந்து பார்த்தது போலாகி விடுமென்று. எனவே தங்கள் கள்ள மவுனத்தின் மூலம் ஜனநாயகத்தின் மாண்பை காத்துக் கொண்டார்கள்.

நிற்க.

இப்போது என்ன சார் பழைய விவகாரத்தையெல்லாம் எடுக்கறீங்க என்கிறீர்களா? விஷயம் இருக்கிறது.

________________________________________________________

ம் கிராமத்து மக்களிடையே ஒரு சொலவடை உண்டு – “யாருக்கும் தெரியாம போகட்டுமின்னு அய்யரு கிணத்துல முங்கிக் குசு வுட்டாராம்” என்பார்கள். பாராளுமன்றத்தில் பிரிந்த ஜனநாயகக் குசுவின் நாற்றம் ஏழு பேர் கமிட்டியென்னும் கிணற்றைத் தாண்டி வெளியே வராது என்று இத்தனை நாட்களாக சர்வகட்சி ஜனநாயக அபிமானிகளும் நினைத்துக் கொண்டிருக்க, கடந்த மார்ச் பதினேழாம் தேதி விக்கிலீக்ஸ் வடிவத்தில் குமிழிகளாக வெளிப்பட்டிருக்கிறது.

விக்கிலீக்ஸ் வசம் உள்ள அமெரிக்காவின் இரகசிய ஆவணங்களில் இந்தியா தொடர்பானவற்றை இந்து பத்திரிக்கை கடந்த வாரத்திலிருந்து வெளியிட்டு வருகிறது. இந்திய ஆளும் கும்பல் நேரடியாக அமெரிக்கப் பாதந்தாங்கிகளாக செயல்பட்டு வருவது பற்றிய விபரங்கள் தற்போது வெகு விமரிசையாக அம்பலமாகி வருகிறது. அமெரிக்கா தனது ஐந்தாம் படைகளை இந்திய அதிகார அடுக்குகளின் பல்வேறு மட்டங்களில் விதைத்து வைத்திருந்ததும், அவர்கள் நாய்களே நாணிக் கோணும் படிக்கு தமது அமெரிக்க எஜமானர்களின் கால்களை நக்கிக் கிடந்ததும் இந்தச் செய்திகளின் ஊடாக தெட்டத் தெளிவாக அம்பலமாகியுள்ளது.

மார்ச் 17-ஆம் தேதியிட்ட இந்து நாளிதழில் வெளியான – விக்கிலீக்ஸிடம் இருந்து பெறப்பட்ட – அமெரிக்கத் தூதரகத்தின் இரகசிய ஆவணமொன்றில், 2008-ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கொண்டுவந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்க்கட்சி எம்.பிக்களின் ஆதரவைப் பெற காங்கிரஸ் பிரமுகரும் நேரு குடும்ப விசுவாசியுமான சதீஷ் சர்மா, ஜூலை 22-ஆம் தேதி நடைபெறப் போகும் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்ல காங்கிரசு கடுமையாக முயற்சித்து வருவதாக தூதரக அதிகாரி ஸ்டீபன் வொய்ட்டிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் அவரின் நெருங்கிய கூட்டாளியான நச்சிகேத்த கபூர் என்பவர் இரண்டு பெட்டிகளில் திணிக்கப்பட்டிருந்த கரன்சி காகிதங்களைத் தூதரக அதிகாரியிடம் திறந்து காட்டி அது எம்.பிக்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய லஞ்சப் பணம் என்று தெரிவித்துள்ளார். அவரே மேலும், பிரதமரே நேரடியாக சந்த் சத்வால் என்பவர் மூலமாக அகாலி தளத்தின் எட்டு எம்பிக்களை வளைக்க முயன்றதாகவும் அது வெற்றி பெற வில்லையென்றும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தூதரக அதிகாரியிடம் ஏதோ மாமன் மச்சான் போல் அத்தனை உரிமையெடுத்துக் கொண்டு பேசும் நச்சிகேதா கபூர், “துட்டு குடுப்பது ஒன்னியும் பெரிய மேட்டரேயில்ல.. ஆனா இந்தப் பயலுக வாங்கிக்கினு ஒயுங்கா நமக்கு ஓட்டுப் போடுவானுங்களான்னு தான் சந்தேகமா கீது” என்று தனது சந்தேகத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.  இப்படி அணு சக்தி ஒப்பந்தம் நிறைவேறுவதை மிகக் கவனமாக கவனித்து வரும் அமெரிக்கத் தூதரக அதிகாரி ஓட்டெடுப்புக்கு முன்னரே தனது கணிப்பாக மன்மோகனின் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்பிப் பிழைக்குமென்றும் – அது இன்னின்ன எண்ணிக்கையில் வாக்குகள் வாங்கும் என்றும் ஒரு கணிப்பை அமெரிக்காவுக்கு அனுப்புகிறார். ஆச்சரியப்படத்தக்க வகையில், வாக்கெடுப்பில் மன்மோகன் அரசு வாங்கிய ஓட்டுக்களின் எண்ணிக்கை ஏறக்குறைய அந்த அதிகாரியின் கணிப்பை ஒட்டியே இருந்தது!

ஏற்கனவே நெருப்பின் மேல் வைக்கோலைப் போட்டு மறைத்து விட்டோம் என்று எல்லோரும் நிம்மதியாக இருந்த நிலையில் இப்போது வெளியாகியுள்ள அமெரிக்காவின் இரகசிய ஆவணங்கள் மீண்டும் ஒரு முறை பாராளுமன்றத்தில் கூச்சல் குழப்பத்தை உண்டாக்கியிருக்கிறது. 2008-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து வாயை மூடிக் கொண்டிருந்த பாரதிய ஜனதாவும், போலி கம்யூனிஸ்டு தவளைகளும் ஒரு பாட்டம் புலம்பித் தீர்த்திருக்கிறார்கள்.

2008-ஆல் விவகாரம் நாலு மாதங்கள் சூடாக இருந்தது என்றால் இப்போது விஷயம் நாலே நாளில் மீண்டும் ஆழமான குழிக்குள் போய் முடங்கிக் கொண்டு விட்டது. வழக்கம் போல் பிரதமர் மவுனமோகன் வரலாற்றில் நீங்காத இடம் பிடித்துக் கொண்டுள்ள தனது வழக்கமான விளக்கத்தை அளித்து விட்டார் – அதை இனி நாம் புதிதாகச் சொல்லித் தான் வினவு வாசகர்களுக்குத் தெரிய வேண்டும் என்பதில்லை. என்றாலும் ஒரு சம்பிரதாயத்துக்காக அந்த விளக்கத்தை இங்கே அறியத்தருகிறோம்; அது – “தெரியாது”

இதற்கு மேலும் இதில் நோண்டிக் கொண்டிருப்பது ஜனநாயகத்தின் மாண்புக்கே பேராபத்தாக முடிந்து விடும் என்பதை உணர்ந்து கொண்ட சி.பி. ஐ, சி.பி.எம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தமது நவதுவாரங்களையும் பொத்திக் கொண்டு அடுத்த இந்து இதழில் என்ன செய்தி வரும் என்று காத்துக் கிடக்கிறார்கள். சாவு வீடாகவே இருந்தாலும் சாப்பிட்டாக வேண்டுமே? இனி அடுத்தடுத்து வரப்போகும் இரகசிய ஆவணங்களையும், அது தெரிவிக்கப் போகும் உண்மைகளையும் இவர்கள் எதிர்கொள்ளப் போகும் செயல்தந்திரம் இது தான் – முதல் நாள் கூச்சல், ரெண்டாம் நாள் விளக்கம் கோரி சவடால், மூன்றாம் நாள் ஒன்னும் தெரியாத பிரதமரின் எல்லாவற்றையும் தெரியப்படுத்தும் ‘விளக்கம்’, நான்காம் நாள் இன்டர்வெல், அடுத்த நாள் அடுத்த பிரச்சினை.

ஒவ்வொரு முறை ஆளும் கட்சி அம்பலமாகும் போதும், பாராளுமன்ற ஜனநாயக கோவணம் கிழிந்து தொங்கும் போதும் இவர்கள் நடத்தும் இந்த ‘செத்து செத்து விளையாடும்’ விளையாட்டு நமக்குப் புதிதில்லை. ஆனால், இந்த விக்கிலீக்ஸின் ஆவணங்கள் வேறு சில கேள்விகளை நம்முன் வைக்கிறது. நீங்கள் மெய்யாகவே இந்நாட்டின் மீது அக்கறை கொண்டவராக இருந்தால் அந்தக் கேள்விகள் உங்கள் மனதில் ஒரு சின்ன உறுத்தலையாவது உண்டாக்கியே தீர வேண்டும்.

____________________________________________________________

லஞ்சம் கொடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்ற மன்மோகன் சிங் அரசு நிறைவேற்றிய அணு சக்தி ஒப்பந்தத்தை இரத்து செய்ய வேண்டும் என்று ஏன் எவருமே கோரவில்லை? லஞ்சம் கொடுத்தாவது அரசைக் காப்பாற்றி அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றியே தீருவோம்; அதனால் நமது தேச நலன்களனைத்தும் அமெரிக்காவுக்கு காவு கொடுக்கப்பட்டாலும் பரவாயில்லை என்று இத்தனை தீவிரமாக வெறியோடு மன்மோகன் கும்பல் இறங்கியிருக்கிறதே, இவர்கள் யாருடையா ஆட்கள்?

அமெரிக்கத் தூதரகத்தின் தகவல் தொடர்புகளின் உண்மைத் தன்மையை உறுதி செய்துள்ளார் முன்னால் அமெரிக்கத் தூதர் டேவிட் முல்ஃபோர்ட்; எனில் அதில் பிரதமரே நேரடியாக லஞ்ச விவகாரத்தில் தொடர்புடையதாக குறிக்கப்பட்டிருக்கும் தகவல் குறித்து நல்லவரான பிரதமரின் விளக்கம் என்ன? தனக்கு ஒன்றுமே தெரியாது என்று வழக்கமான பல்லவியைப் பாடும் மன்மோகன், அமெரிக்கர்கள் தமக்குள் பேசிக்கொண்டது தவறு என்று அடித்துச் சொல்ல முடியாமல் மென்று முழுங்குவது ஏன்? இவர் இத்தனை பச்சையாக அம்பலமாகி நின்ற பின்னும் முதலாளித்துவப் பத்திரிகைகள் இவரை ஒரு நல்லவர் போன்றும், ஒன்றும் தெரியாத அப்பாவி போன்றும் சித்தரிக்கும் அயோக்கியத்தனத்தை ஏன் தொடர்கிறார்கள்?

அணு ஒப்பந்தம் நிறைவேற வேண்டுமானால் காங்கிரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றாக வேண்டும்; இதை உறுதிப்படுத்திக் கொள்ள பிரதமர் தொடங்கி மந்திரிகள் தொட்டு எம்பிக்களின் கையாட்கள் வரை அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசியிருப்பது இப்போது அவர்கள் வாயாலேயே அம்பலமாகியிருக்கிறது –  அந்த ஒப்பந்தம் தெள்ளத் தெளிவாக இந்தியாவின் நலன்களுக்கு எதிரானது என்பது ஏற்கனவே தெளிவான நிலையில் இப்போதும் கூட அணு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பாராளுமன்றத்தில் சவடால் பேசும் பாரதிய ஜனதா கோராமல் இருப்பது ஏன்?

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக களத்தில் நின்ற அத்வானி, தூதரக அதிகாரியொருவரிடம் “அரசாங்கம் என்பது ஒரு தொடர்ச்சி தான்; சர்வதேச ஒப்பந்தங்களை நாங்கள் இரத்து செய்ய மாட்டோம்; அதை நாங்கள் மதிப்போம்” என்று சொல்லியிருக்கிறார். எனில், இன்று அவர்கள் போடும் கூச்சலின் பொருள் என்ன?

இந்தியா இப்படி அப்பட்டமான விற்பனையான கதை ஊடகங்கள், எதிர்க்கட்சிகளால் வெறுமனே சவுண்டு விடும் பரபரப்பு கதையாக மட்டும் வினியோகிக்கப்படுகிறது. ஜப்பானில் சுனாமி வந்தபிறகுதான் அணுவுலைகள் வெடித்திருக்கின்றன. இங்கோ அமெரிக்க அணுவுலைகள் வருவதற்கு முன்னாடியே அதன் கதிர் வீச்சு இந்தியாவின் இறையாண்மையில் வெடித்துப் பாய்கிறது. அமெரிக்க அடிமைத்தனம் என்பதில் காங்கிரசு, பா.ஜ.க கும்பல் இத்தனை பட்டவர்த்தனமாக செயல்படுகிறது என்றால் இந்தியாவின் எதிர்காலம் குறித்து விளக்கத் தேவையில்லை. நாடு மீண்டும் காலனியாகிறது என்று புரிந்தவர்கள் மீண்டுமொரு சுதந்திரப் போராட்டத்தை துவங்க வேண்டும். அடிமைத்தனத்தை ஏற்றுக் கொண்டவர்கள் ஆளும் வர்க்கங்கள்தான், நாமல்ல என்பதை அறிவிப்போம், போராடுவோம்.