privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகவிதைபகத்சிங்கை நினைவு கொள்ளச் சம்மதமா?

பகத்சிங்கை நினைவு கொள்ளச் சம்மதமா?

-

பகத் சிங் – சுகதேவ் – ராஜகுரு

தியாகத்தையும் ஆளும் வர்க்கம்
சுரண்டாமல் விடுவதில்லை.

பகத்சிங், சுகதேவ், ராஜகுரு…
ஏகாதிபத்திய எதிர்ப்புச் சுடர்களை
ஏகாதிபத்திய ஏவல்நாயின் நீலிக்கண்ணீர்
அணைத்துக் கொல்லப் பார்க்கிறது.
கள்ள அழுகையால் கொள்ளையிடுகிறான்,
தியாகிகளது விடுதலைக் கனவுகளின்
தீராத விழிகளை!

அவர்கள் உயிரோடு மட்டும் இருந்திருந்தால்
தியாகிகள் தினம் என்ற அரசு விளம்பரம்
மேற்கண்ட தீவிரவாதிகள் பற்றி
தகவல் தருபவர்களுக்கு தக்க சன்மானம் என்று
தகவல் ஒளிபரப்பு விளம்பரமாய் இருந்திருக்கும்.

நக்சல் தேடுதல் வேட்டையில் பகத்சிங்கை போட்டுத்தள்ள
ப.சிதம்பரத்தின் கூலிப்படை கிளம்பியிருக்கும்…
தேசத்தின் வளர்ச்சிக்கு சவாலாய் இருப்பதால்
தேடப்படும் ‘பயங்கரவாதிகள்’ ராஜகுரு, சுகதேவை
முதலாளிகளின் சாணக்கிய குரு மன்மோகன் விழி குறிபார்த்து சுட்டிருக்கும்

செத்ததனால் நினைவஞ்சலி
இருந்திருந்தால் என்கவுண்ட்டர்!

பகத்சிங் நினைவுகளின் நீட்சியைக்
கொலை செய்பவனே… நினைவஞ்சலி செலுத்துவதும்,
புரட்சியின் குரல்வளையை நெறிப்பவனே
மலர்வளையம் வைப்பதும்,
இறந்தவர்களுக்கல்ல,
இன்னும் புரட்சியை நிகழ்ச்சி நிரலாக்காமல்
உயிரோடிருக்கும் நம் இயலாமையின்
அவமானங்கள்!

வெறும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும்
சம்பவம் என்பதற்காக அவர்கள் தூக்கிலிடப்படவில்லை.
வர்க்க ‘ஒழுங்கை’ ஆதிக்கத்தை புரட்டிப்போடும்
அவர்களின் அரசியல் கண்டு ஆடிப்போனது
ஆங்கிலேய ஏகாதிபத்தியமும் ஆளும் வர்க்கமும்.

பகத்சிங்கின் அரசியலைப் பார்த்து மருண்டு போனது
பகைவர்கள் மட்டுமா?
ஏன்… இன்னும் புரட்சியின் தேவைகளுக்கு
செவிமடுக்காத நீயும் என்கிறது
அவர்களின் நினைவுகள்…

பசும்புல்லின் வேரிலும்
விசும்பின் நீரிலும்
கேட்பாரற்ற ஏகாதிபத்திய மேலாதிக்கம்.
தாய்ப்பாலும் கருப்பையும் கூட
தனியார்மயத்தின் விற்பனைச் சரக்காகும்
கார்ப்பரேட் பயங்கரவாதம்…
சூறைக்காற்றில் நடுங்கி நிற்கும்
மாடப்புறாக்களாய்…
திகைத்து நிற்கும் ஏழை மக்கள்…
உழைப்புச் சந்தையில்.. உறவுகள் யாருமற்று
அரசியல் அநாதைகளாய் நம் கண்முன்னே
பரிதவிக்கும் உழைக்கும் மக்கள்…

பகத்சிங் இருந்திருந்தால்
இதைப்பார்த்துக் கொண்டு சும்மாயிருப்பானா?

தன்வேலை பறிபோகும் என்ற அச்சத்தில்
கண்முன்னே போராடும் வர்க்கத்தை விட்டு ஒதுங்கி
சுகதேவ்தான் தானுண்டு வேலையுண்டு என நடப்பானா<?

புரட்சி கிளம்பும்போது
நாமும் படியில் ஏறிக்கொள்ளலாம் என
இராஜகுருதான் சாமர்த்தியம் நினைப்பானா?

எல்லாம் தெரிந்த உன்னால்
உழைக்கும் வர்க்கத்தோடு இணையத் தெரியாவிடில்
மூலதன ஆதிக்கத்திற்கெதிராக முழங்கத் தெரியாவிடில்…
பகத்சிங்கை நினைப்பதற்கும் உரிமையுண்டா?

பகத்சிங் தோழர்கள் தியாகம்
அவர்கள் சாவில் இல்லை,
பாட்டாளி வர்க்க இலட்சியத்திற்காக
சமரசமற்ற அவர்கள் வாழ்வில் உள்ளது.

வாழச் சம்மதமெனில் வா.. நண்பா!
பகத்சிங்கை நினைவு கொள்!

_____________________________________________

— துரை.சண்முகம்
_____________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: