privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காவாரன் பப்பெட் வாரான்! சொம்ப எடுத்து உள்ளார வை!!

வாரன் பப்பெட் வாரான்! சொம்ப எடுத்து உள்ளார வை!!

-

லகப் பணக்காரன், அமெரிக்க கோடீஸ்வரன் வாரன் பப்பெட்டின் இந்திய விஜயம் களைகட்டத் தொடங்கியிருக்கிறது. இந்து, எக்ஸ்பிரஸ் போன்ற அவாளின் மேல் லோகங்கள் மட்டுமல்ல, தினகரன் பத்திரிகை வரை எஜமான் காலடி மண்ணெடுத்து எழுத ஆரம்பித்து விட்டன.

“பாவம்! பப்பெட் கஷ்டப்பட்டு பாட்டில் கழுவி பங்குச் சந்தை வரை முன்னேறி, ஜெயலலிதா நான் ஏழு வயசுல இளநி வித்தவ என்று பாடியது போல பப்பெட் பதினேழு வயசுலயே பங்குச் சந்தையை வித்தவன்னு தினகரன் பலூன் ஊதுகிறது. தமிழ்நாட்டு சனீஸ்வரன் கோயிலுக்கும் திருச்செந்தூருக்கும் சட்டையில்லாமல் பக்திப் பழமாகும் கர்நாடக -எடியூரப்பா பெங்களூருவில் குண்டு குண்டுன்னு போய் அமெரிக்க குலதெய்வம்   பப்பெட்டை கோட்டு சூட்டோடு ஈர்த்து வரவேற்றிருக்கிறார்.

திரைக்கு வந்து சில மாதங்களே ஆன உத்தமபுத்திரன் படத்தில் அமெரிக்க கோடீஸ்வரனுக்கு பொண்ணைக் கொடுத்து தானும் கோடீஸ்வர சம்பந்தியாக கொண்டைய அறுத்துக் கொள்ளும் அந்தப் படத்தின் அற்ப கதாபாத்திரங்களை நிஜத்தில் தோற்கடித்து விட்ட்டார் எடியூரப்பா. வெளிநாட்டு மூலதனத்தை ஈர்ப்பதில் கருணாநிதி கறுப்புக் கண்ணாடியை துடைத்து மாட்டுவதற்குள் எடியூரப்பா முந்திக் கொண்டாலும், வந்தாரை வாழவைக்கும் தமிழனின் பண்பாட்டுப்படி பப்பெட்டை சென்னைக்கு அழைத்து வந்து ஒருவாய் சோறுபோடாமலா அனுப்பி விடுவார் தளபதி… உலகப் பணக்காரனோடு சம்பந்தம் வைத்துக் கொள்வதன் மூலம் அப்படடியே நாமும் ஒரு ஓரத்தில் உள்ளூர் பணக்காரனாக சுவிஸ் வங்கியில் ஒரு குடிசையைப் போட்டுக் கொள்ளலாம் என்ற இந்த அடிமைகளின் ஆசை தனிக்கதை..

விருந்து சாப்பிட வர்றேன்னு வீட்டு அட்ரச வாங்கிட்டு, இலை போடுற நேரத்துல எங்க உன் பொண்டாட்டிய தர்றியேன்னு  கேட்ட கதையாய், இந்தியாவுக்கு வருவதற்கு முன்பே “என் விருந்துக்கு உபசாரமாய் இந்தியாவின் இன்சூரன்ஸை தூக்கி தரவேண்டும் என்கிறான் பப்பெட். எம்பெருமான் மனம் நோகாதிருக்க இயற்பகை நாயனார்கள் எதை வேண்டுமானாலும் கொடுக்கலாம். மூலதன அடியார்கள் முற்றும் துறந்தவர்கள். நாட்டின் மீது பற்று கொண்டவர்கள் பப்பெட்டை லெப்ட் ரைட் வாங்க வேண்டாமா?

அமெரிக்காவில் பணம் கட்டி படிக்கப் போன இந்திய மாணவர்களையே சந்தேகக் கேசு என்று காலில் கேமராவைப் பொருத்தி இழிவுபடுத்துகிறான். அங்கு போய் நாம் வாழ்வதற்கான உரிமைக்கே போராட வேண்டியிருக்கிறது.  இங்கு வரும் அமெரிக்க பணக்காரனோ ஒரு விருந்துக்கே இட்லி வடையைக் கேட்பது போல் இன்சூரன்ஸை கேட்பதும் சில்லறை வணிகத்தை திறந்து விடச் சொல்வதும் இந்திய சந்தையை தடையில்லாமல் மேய்ந்து கொள்ள கனிம வளங்கள் வரை கையை வைப்பதும் இந்தியாவின் கேட்பாரற்ற நிலைமையையும், அமெரிக்க ஆதிக்கத்தின் கொக்கரிப்பையும் நம் கண்முன்னே நிறுத்துகிறது.

வாரன்பப்பெட்டுடன் யார் விருந்தில் கலந்து கொண்டாலும் அவனுக்கு 11 கோடி ரூபாய் தரவேண்டுமாம். அவனோடு விருந்து சாப்பிட தரப்படும் “மொய்” அவனது அறக்கட்டளைக்கு போய்ச் சேருமாம். இதற்குப் பெயர்தான் ஊரை அடித்து உலையில் போடுவது! இவனோடு உக்காந்து ஒருவாய் சோறுதிங்க 11கோடி கேட்கும் இந்த பங்குச் சந்தை தாதா இந்தியாவில் மட்டும் தன்னோடு விருந்து சாப்பிட இந்திய இன்சூரன்ஸ் துறையின் அதிகாரி நாராயணனை விரும்பி அழைப்பதாகவும், அவர் தனக்கு 11 கோடிக்குப் பதில் இன்சூரன்ஸ் துறையிலிருக்கும் வெளிநாட்டு மூலதனத்திற்கான வரம்பு  26 சதவீதம் என்பதை 49 சதவீதமாக உயர்த்த வேண்டும் என திருவாய் மலர்ந்திருக்கிறான் பப்பெட். உண்ட வீட்டுக்கு ரெண்டகம் என்பார்கள். இவனோ உண்ண வரும்போதே ரெண்டகம். ஊரான் வூட்டு நெய்ய, பப்பெட்டு கையேன்னு இந்தியாவையே வழிச்சு நக்க பாக்கறான்.

அதாவது மத்தவன மாதிரி நான் மட்டமான ஆள் கிடையாது. ஒரு வேள விருந்துக்கு உன் வீட்ட எழுதித் தர்றவேணாம்…. வயசுக்கு வந்த பொண்ண குடுங்குறான்… விலை மதிப்பில்லாத பொதுத்துறைகளை மட்டுமல்ல முன்பு இந்தியாவுக்கு வந்த ஒபாமா, ஜனாதிபதி வரவேற்பில் இடம்பெற்ற ஒட்டகத்தைக் கொடு  என்று ஆசைப்பட்டு கேட்க, ஒட்டகத்தோடு இந்திய அணுசக்தி உரிமையையும் ஒட்ட ஓட்டிவிட்டனர் அடிமைகள்.

பொதுவாக நம் ஊரில் விருந்துக்குப் போகிறவன்தான் மொய் வைத்துவிட்டு வருவது வழக்கம். அமெரிக்க, பன்னாட்டு முதலாளிகளோ இந்தியாவில் விருந்துக்கு வந்தாலே மின்சாரம், தண்ணீர், மருத்துவம் என்று எல்லாப் பொதுத்துறைகளையும் மொய்யாய் வை.. என அன்புக் கட்டளையிடுகிறான். எச்சிலை எடுக்கும் பாராளுமன்ற மாமாக்களோ பப்பெட் கடைக்கண் பார்வை காட்டிவிட்டால் மன்மோகன் சிங்குக்கு மாமலையும் ஓர் கடுகாம்..என ஆடை வரைக்கும் அவிழ்த்துப் போட தயாராகி விட்டார்கள்.  பொதுத் துறைகள் மட்டுமல்ல வெளிநாட்டுக் காரன் பிள்ளை பெற இந்தியாவின் கருப்பைகள் வரை உலகச் சந்தைக்கு திறந்துவிடப் பட்டுவிட்டது. வர்றவன் போறவன்லாம் இந்த நாட்டையே எச்சிலை ஆக்கும் இழிநிலையை உலகப் பணக்காரர்களையே இந்தியா ஈர்த்துவிட்டது என்பது போல பிரச்சாரம் செய்கின்றன மானங்கெட்ட ஊடகங்கள்.

தலையைக் கவிழ்ந்து கொண்டு தானுண்டு வேலையுண்டு என்று கைக்குட்டைகளால் மட்டும் இந்த அவமானத்தை துடைத்து விட முடியாது. அமெரிக்க மற்றும் பன்னாட்டு மூலதன ஆதிக்கத்திற்கெதிரான போராட்ட அணிகளில் கை கோர்ப்பதன் மூலமாகவே நாடும் நாமும் இனி தலைநிமிர்ந்து வாழமுடியும்.

________________________________________

– துரை.சண்முகம்
________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: