privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஎம்.எல்.ஏ வுக்கு பொறுக்கித் தின்ன மட்டுமே அதிகாரம்! ஆள்வதற்கல்ல!!

எம்.எல்.ஏ வுக்கு பொறுக்கித் தின்ன மட்டுமே அதிகாரம்! ஆள்வதற்கல்ல!!

-

போலி ஜனநாயகத்தில் மக்களுக்கு உரிமை இல்லை!

“அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே… உங்களுக்காக உழைக்க உங்கள் வீட்டுப் பிள்ளை அண்ணன் ஆக்டோபஸ் அவர்கள் வாக்குகள் சேகரிக்க உங்கள் வீடுகளைத் தேடி வந்து கொண்டிருக்கிறார்… உங்கள் பொன்னான வாக்குகளை குப்பைத் தொட்டி  சின்னத்தில் போட்டு அண்ணன் ஆக்டோபஸ் அவர்களை வெற்றி பெறச் செய்யுமாறு வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறோம்…” இப்படியாக கடந்த சில வாரங்களாகவே மேற்கூரை திறக்கப்பட்ட ஸ்கார்ப்பியோக்களிலும், சபாரிகளிலும் ஸ்பீக்கர்களைக் கட்டிக் கொண்டு, வெள்ளையும் சொள்ளையுமான பண்ணையார்கள் நம் தெருக்களில் புழுதி கிளப்பிக் கொண்டிருக்கும் காட்சிகளை நாம் தவற விட்டிருக்க மாட்டோம்.

சுவரெழுத்துக் கூடாது, கொடி பிடிக்கக் கூடாது, கோஷம் போடக் கூடாது, கூட்டம் சேர்க்கக் கூடாது, ஊர்வலம் கூடாது என்று பல்வேறு ‘கூடாதுகளை’ தேர்தல் கமிஷன் ஒருபுறத்தில் போட்டுத் தாக்கிக் கொண்டிருந்தாலும், தமிழகத்தின் இண்டு இடுக்குகள் தொடங்கி சந்து பொந்துகள் வரை மக்களிடையே சினிமாவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, தேர்தல் சுவாரசியமான விவாதப் பொருளாக முன்னுக்கு வந்துள்ளது. கருணாநிதியின் ஊழலும், ஜெயலலிதாவின் திமிரும், விஜயகாந்தின் ரவுடித்தனமும் வடிவேலுவின் காமெடியின் முன் மண்டி போடுகின்றன.

யாருக்கு ஓட்டுப் போடுவது என்பது பற்றி வெவ்வேறு விதமான கருத்துக்களை நாம் அன்றாடம் சந்திக்கும் மக்களது விவாதங்களின் ஊடாக கவனிக்க முடிகிறது. “என்ன தான் கருணாநிதி அங்க இங்க கைய்ய வச்சிருந்தாலும், மக்களுக்கு எதாவது செய்யறாரே சார்…” என்று சிலரும், “அதெல்லாம் இல்ல சார்… அவரு குடும்பம் தான் நல்லா சாப்டறாங்க. இதே ஜெயலலிதாவுக்குப் பாருங்க, குடும்பமா குட்டியா? அதுமட்டுமில்லாம, அவங்க வந்தாலே நிர்வாகத்த நல்லா கண்டிப்பா நடத்துவாங்க சார்..” இப்படிச் சிலரும், “சார், கட்சி பாத்து ஓட்டுப் போடறது தான் சார் பிரச்சினையே. கட்சியெல்லாம் பாக்காமே அந்தந்த தொகுதில யார் நல்லவங்களோ அவங்களுக்கு ஓட்டுப் போடனும் சார்”  இப்படிச் சிலரும் சொல்வதைக் கேட்டிருக்கிறோம்.

இவர்கள் தவிர, ஓட்டுக்கட்சிகள் மேல் நம்பிக்கையிழந்து விட்ட வேறு சிலரும் இருக்கிறார்கள். அவர்கள் கட்சிகள் மேலான தங்கள் அவநம்பிக்கையைத் தெரிவித்து விட்டு, “படிச்சவன் வரனும் சார்.  இந்த அரசியல்வாதிகளே சுத்த மோசம்.எல்லாம் படிக்காத ரவுடிப் பயலுக. இவனுக பூரா பேரையும் தூக்கிக் கடாசிட்டு நல்ல நேர்மையான அதிகாரிகளை வச்சே கவர்மென்ட்டை நடத்தனும் சார். இல்லைன்னா பேசாம இராணுவ ஆட்சி கொண்டாந்திடனும்” என்பார்கள்.

இது போன்ற உரையாடல்களை நாம் நெரிசலான பேருந்துகளிலோ, இரயில் பயணங்களிலோ, தெருமுனைத் தேநீர்க் கடைகளிலோ சமீப நாட்களில் கேட்டிருப்போம். ஊடகங்களோ அரசியலையும் தேர்தலையும் தனிநபர்களுக்கு இடையிலான மோதல்களாகக் குறுக்கி, அதையே ஒரு பேய்க் கதையைப் போல திகிலூட்டி வருகின்றது. மக்களின் இந்த நம்பிக்கைகளும் விருப்பங்களும் அவர்களின் சொந்த அனுபவத்திற்கும் எதார்த்தத்திற்குமே நேர்முரணாக நிற்பது ஒருபுறம் இருந்தாலும், ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை வரும் தேர்தல் என்பது தம்மை ஆள்பவர்களை – அது யோக்கியனோ அயோக்கியனோ – தேர்ந்தெடுக்கும் உரிமையைத் தமக்கு வழங்கியிருப்பதாக சந்தேகத்திற்கிடமில்லாமல் நம்புகிறார்கள்.

தமது தொகுதிக்கு கட்சி சார்ந்தோ கட்சி சாராமலோ ஒரு நல்ல வேட்பாளரைத் தேர்ந்தெடுத்து விட முடியுமானால் தங்கள் தொகுதியில் இருக்கும் பிரச்சினைகளை ஓவர் நைட்டில் ஒருவழியாக்கி விடுவார் என்று ஓரளவுக்கு நம்புகிறார்கள். அதே போல், தமது வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற உறுப்பினர்களும் அவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் முதலமைச்சருக்கும் கேள்விக்கப்பாற்பட்ட அதிகாரம் இருப்பது போன்றும், அந்த பொறுப்புக்கு எப்படியாவது ஒரு நல்லவரைத் தேர்ந்தெடுத்து விட முடியுமானால் அவரால் மக்களைக் கடைத்தேற்ற முடியும் என்றும் நம்புகிறார்கள்.

சத்துணவில் முட்டை போட மட்டுமே அதிகாரம், சுயநிதிக் கல்லூரிகளை அரசுடமையாக்க அதிகாரமில்லை!

மாறி மாறி வரும் அரசுகளால் விலைவாசி ஏற்றத்தைக் கட்டுப்படுத்த முடிந்ததில்லை என்பதை நமது அனுபவமே நமக்குக் காட்டுகிறது. உள்ளூர் அளவிலான சிறு, நடுத்தர தொழில்களின் நசிவை அதிகாரத்தில் இருக்கும் எந்த கட்சியாலும் தடுத்து நிறுத்த முடிந்ததில்லை. விவசாயம் அழிந்து போய் நகரங்களை நோக்கி விரட்டப்படும் மக்களின் இடப்பெயர்வு என்பது தொண்ணூறுகளுக்குப் பின் தொடர்ந்து நடந்து வருகிறது. மத்தியிலும் மாநிலத்தில் ஆட்சியில் மாறி மாறி வந்தமர்ந்த எந்தக் கட்சிகளாலும் இவை எவற்றையும் தடுத்து நிறுத்த முடிந்ததில்லை. இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் மக்கள் தங்கள் நம்பிக்கையை இழக்கவில்லை; மனம் தளரவில்லை.

விவசாயிகள் வளம் பெற உழவர் சந்தைகள் அமைத்தோம் என்று கருணாநிதி தனது குடும்பத் தொலைக்காட்சிகளில் ஆரவாரமாக பிரஸ்தாபிக்கிறார். ஆனால், இங்கே விவசாயமே அழிந்து போயிருக்கிற நிலையில், விதைக்கும் உரத்துக்கும் ஏகபோக பன்னாட்டு நிறுவனங்கள் விதிக்கும் இமாலய விலையின் முன் விவசாய்கள் விழி பிதுங்கி நிற்கிறார்கள். விவசாயப் பொருட்களின் வினியோக சந்தை என்பது ரிலையன்ஸ், ஐ.டி.சி போன்ற உள்ளூர் தரகு முதலாளிகள் கையிலும் பன்னாட்டு ஊகபேர வர்த்தகச் சூதாடிகள் கையிலும் இருந்து கொண்டிருக்கும் போது கருணாநிதியோ விவசாய சந்தை திறந்தேன் என்கிறார். இதில் கருணாநிதியோ ஜெயலலிதாவோ விவசாய சந்தைகளை மட்டும் தான் திறந்து விட முடியும் – இவர்கள் எவராலுமே விவசாய இடுபொருட்களின் சந்தையையும், விளைபொருட்களின் வினியோகச் சங்கிலியையும் ஏகபோக முதலாளிகளின் பிடியிலிருந்து விடுவிப்போம் என்று அறிவிக்க முடியவில்லை – அது முடியவும் முடியாது. மாறாக சர்வகட்சிகளும் பன்னாட்டு முதலாளிகளின் காலை நக்கிக் கிடக்கிறார்கள்.

நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் தருவோம் என்று ஆரவாரமாக அறித்த கருணாநிதியால் அத்திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. நிலம் எங்கே போனது என்ற ஜெயலலிதாவின் கேள்விக்கு அவரால் பதிலளிக்க முடியவில்லை. ஆனால், அதே நேரம் பன்னாட்டுத் தொழிற்கழகங்களின் மனம் கோணாமல் அவர்கள் விரும்பும் இடத்தில் விரும்பும் அளவுக்கு நிலத்தைக் கையகப்படுத்திக் கொடுக்க முடிகிறது. நிலம் எங்கே போனது என்று கேட்கும் ஜெயலலிதாவுக்கு இங்கே ஏன் போகிறது என்று கேட்கும் துணிச்சல் இல்லை; விவசாயிகளுக்கு வழங்க நிலமில்லை என்று சால்ஜாப்பு சொல்லும் கருணாநிதியோ பன்னாட்டு முதலாளிகளுக்கு நிலத்தை தாராளமாய் வாரி வழங்க கூசவில்லை. கருணாநிதியும் ஜெயலலிதாவும் எதிரெதிர் துருவங்கள் போல பேசிக் கொண்டாலும் பன்னாட்டு முதலாளிகளுக்கான சேவை என்று வரும் போது ஒன்றுபடுகிறார்கள்.

யானையைப் பிடிப்பேன் பூனையைப் பிடிப்பேன் என்று அள்ளி விடும் இவர்களின் உண்மையான யோக்கியதை என்ன? வாய்க்கு வந்ததையெல்லாம் வாரிவிடும் இவர்களுக்கு உண்மையாகவே இருக்கும் அதிகாரம் என்ன? தமிழ்நாட்டில் நிலவும் கடுமையான மின்வெட்டை முன்வைத்து பிரச்சாரம் செய்யும் எதிர்கட்சிகளுக்கு, மின்சாரத்தைத் தடையின்றி சல்லிசான விலைக்கு உறிஞ்சிக் கொள்ளும் பன்னாட்டுக் கம்பெனிகளிடம் அதற்கான முறையான விலையை வசூலிப்போம் என்றோ, மக்களுக்கும் சிறு தொழில் நிறுவனங்களுக்கும் தான் மின்சார வழங்கலில் முன்னுரிமை கொடுக்கப்படும் என்றோ சொல்ல வாய் வருவதில்லை. அவ்வாறு அவர்களால் சொல்லவும் முடியாது.

கடலில் கொல்லப்படும் தமிழக மீனவர்கள் குறித்து இந்த கட்சிகள் ஒப்பாரி வைக்கின்றன. ஆனால் எவரும் தாம் ஆட்சிக்கு வந்தால் தனிப்படை அல்லது போலீசு மூலம் மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கவில்லை. அதற்கு அவர்களுக்குஅதிகாரம் கிடையாது.

மாணவர்களுக்கு இலவசமாய் முட்டை போடுவோம் என்றும் நோயாளிகள் தனியாருக்குச் சொந்தமான நட்சத்திர மருத்துவமனைகளில் சிகிச்சை பெற காசு கொடுப்போம் என்றும் சொல்லுகிற கட்சிகள், அரசுப் பள்ளிகளை நவீனமாக விரிவுபடுத்தி உலகத் தரமான கல்வியை அரசாங்கமே தரும் என்றோ அரசு மருத்துவமனைகளைத் தனியார் நட்சத்திர மருத்துவமனைகளை விட நவீனமான வசதிகள் கொண்டதாக பிரம்மாண்டமாக விரித்துக் கட்டுவோம் என்றோ சொல்ல முடியவில்லை. அவ்வாறு அவர்களால் சொல்லவும் முடியாது. மருத்துவத்தையும் கல்வியையும் கேள்விக்கிடமின்றி தனியாருக்குத் தூக்கிக் கொடுப்பதில் ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் ஒரே கட்சியாகிறார்கள்.

இலவசமாய் அரிசி கொடுப்பேன் என்று சொல்ல முடிந்த ஜெயலலிதாவால் அரிசியை காசு கொடுத்து வாங்கும் அளவுக்கு பொருளாதார வளர்ச்சியை பரவலாக்குவோம் என்றும்,  நசிந்து போன நிலையில் உள்ள உள்ளூர் சிறு தொழில்களையும், அழிந்து போய்க் கொண்டிருக்கும் விவசாயத்தையும் காப்பாற்றுவோம் என்றும், அப்படியான ஒரு பொருளாதார முன்னேற்றத்தை சாதித்துக் காட்டுவோம் என்றும் சொல்ல முடியவில்லை. அப்படிச் சொல்லவும் முடியாது; ஏனெனில் இவர்களுக்கு அந்த அதிகாரம் கிடையாது. உள்ளூர் தொழில் நசிவினாலும் விவசாயத்தின் அழிவினாலும் நகர்ப்புறங்களுக்கு விரட்டியடிக்கப்படும் மக்கள் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு அத்துக் கூலிகளாய்ப் போய்ச் சேருவதை ஆளும் வர்க்கக் கட்சிகளே உறுதிப் படுத்துகின்றன – அந்த அளவில் இவர்களின் அதிகாரவரம்பின் எல்லை தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனில் மெய்யாகவே இவர்களின் அதிகாரவரம்பு எங்கே முடிகிறது? உண்மையில் மக்களை ஆள்வது இவர்கள் தான் என்றால், மக்கள் நலன் சார்ந்த இப்பிரச்சினைகளில் இவர்கள் மக்களின் சார்பாக நில்லாமல் முதலாளிகள் சார்பாக நிற்பதேன்? மக்களின் நலனை முன்னிட்டு கொள்கை சார்ந்த முடிவுகளை எடுப்பதற்கோ நடைமுறையில் இருப்பவற்றை மாற்றியமைப்பதற்கான அதிகாரமோ இல்லாததன் பொருள் என்ன? இவற்றைக் குறித்து நாம் அறிந்து கொள்வதற்கு முன், பலவண்ணங்களில் பல்லிளிக்கும் இந்த ஆளும் வர்க்கக் கட்சிகளும் கருணாநிதி, ஜெயலலிதா, மன்மோகன்சிங், அத்வானி உள்ளிட்டவர்கள் அதிகார அடுக்கில் எந்த இடத்தில் வருகிறார்கள் என்பதைக் குறித்தும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

அரசு – அரசாங்கம் : இரட்டை ஆட்சியின் விளக்கம்!

ஆட்சியில் அமரப் போகும் கட்சி எதுவாயினும் அது என்ன திட்டங்களைப் போடலாம், அதை எவ்வாறு அமுல்படுத்தலாம் என்பதைத் தீர்மானிக்கும்  உரிமை அதற்கு இல்லை என்பது தான் உண்மை. மக்களை ஆளும் அரசு என்பது நிதி-நிர்வாகம், நீதிபரிபாலனை, சட்டம் ஒழுங்கு, சிவில் நிர்வாகம் என்று எப்போதும் மாறாமல் நிரந்தரமாய் தேங்கி விட்ட உறுப்புகளைக் கொண்டது. அதன் ஒரு அங்கமாக வருவது தான் மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கும் அரசாங்கம் என்பது. இந்த அரசாங்கம் என்பது குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து மாறிக் கொண்டிருப்பது. இதுவே எதார்த்தத்தில் மக்களை ஆளும் அரசின் பிற அலகுகளுக்கு ஒரு முகமூடியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

அரசு இயந்திரம் என்பது எப்போதும் இயங்கிக் கொண்டிருப்பது. ஒரு கிராம அளவில் இருக்கும் நிர்வாக அதிகாரியிடம் தான் அக்கிராமத்தின் நிலம் பற்றிய விவரங்கள், அதிலிருந்து கிடைக்கும் நேரடி மறைமுக வருவாய் தொடங்கி, அக்கிராமத்தில் நிகழும் பிறப்பு, இறப்பு, பற்றிய தகவல்கள் வரை இருக்கும். இதற்கு மேலே மாவட்ட அளவிலே வருவாய்த் துறை, வருமான வரித்துறை, சுங்கத்துறை, போன்ற பல்வேறு துறைகள் மற்றும் வருவாய் ஆய்வாளர், டெப்டி தாசில்தார், தாசில்தார், ஆர்.டி.ஓ, சப் கலெக்டர் கலெக்டர் போன்றவர்கள் உள்ளிட்ட அரசு இயந்திரத்தின் பல்வேறு அங்கங்கள் தான் சிவில் நிர்வாகத்தை நடத்திச் செல்கின்றன.

இவர்கள் தான் வரி வசூல், கல்வி, மருத்துவம், சுகாதாரம், குடிநீர் சப்ளை, ரேஷன் சப்ளை போன்ற அத்தியாவசியமான வேலைகளைச் செய்வது. அதாவது, மக்களை நேரிடையாக ஆள்வதும் இயக்குவதும் அதற்காகத் திட்டமிடுவதும் இந்த இயந்திரம் தான். இந்த இயந்திரத்தின் மிக முக்கியமான அங்கங்களான நீதி மன்றங்கள் நீதிபரிபாலனத்தையும் காவல்துறை இராணுவம் உள்ளிட்ட துறைகள் பாதுகாப்பு, குற்றத்தடுப்பு  உள்ளிட்ட விஷயங்களையும் கவனித்துக் கொள்கிறது.

இந்த இயந்திரத்தின் இயக்கத்திற்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களுக்கும் யாதொரு சம்பந்தமும் கிடையாது. தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் இடையீடு ஏதுமின்றியே இந்த இயந்திரம் இயங்கும். இதற்கு நமக்குப் பல்வேறு நடைமுறை உதாரணங்கள் உள்ளன. காஷ்மீரிலும், வடகிழக்கிலும், பஞ்சாபிலும் இன்னும் வேறு பல மாநிலங்களிலும் பல்வேறு சந்தர்பங்களில் வெவ்வேறு காரணங்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்கள் கலைக்கப்பட்ட போதும் அரசு நிர்வாகம் தொடர்ந்து நடைபெற்றுதான் வந்தது.

இதில் நமது கவனத்திற்குரிய அம்சம் என்னவென்றால், இந்த அரசு இயந்திரம் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதல்ல என்பதோடு, இது மக்களை அடக்கி ஒடுக்குவதற்கென்றே ஏற்படுத்தப்பட்டது. காலனிய ஆட்சிக் காலத்தில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அதிகாரத்தை மக்கள் மேல் ஏவிவிடுவதற்கான ஒரு கருவியாக உருவாக்கப்பட்டது தான் இன்று வரையில் மக்களை ஆண்டு வரும் அரசு இயந்திரம். ஆக, இது தன் பிறப்பிலேயே ஜனநாயகமற்ற தன்மையையும் ஏகாதிபத்திய நலனையும் அடிப்படையாகக்  கொண்டு கட்டப்பட்டதாகும். அன்றைக்குக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கும் பிரிடிஷ் ஏகாதிபத்தியத்திற்கும் ஒரு முகமூடியாகச் செயல்பட கருப்புத் தோல் வெள்ளையர்களைக் கொண்டு அமைக்கப்பட்டது தான் இன்று வரை தொடரும் சிவில் நிர்வாக அமைப்பு முறை.

அன்றைக்கு காலனிய ஆதிக்கத்திற்கு விசுவாசமாய் இருந்த அரசு நிர்வாக இயந்திரமும், அதன் உறுப்பான போலீசு இராணுவம் உள்ளிட்ட ஆயுதப் படைகளும் உரிமைக்காகப் போராடிய மக்களை எப்படி ஒடுக்கியதோ அப்படித்தான் இன்றும் பன்னாட்டுக் கம்பெனிகளில் தொழிற்சங்க உரிமைக்காகப் போராடும் தொழிலாளர்கள் மேல் பாய்ந்து குதறுகிறது. இன்று ‘சுதந்திர’ இந்தியாவின் மத்தியப் பகுதி மாநிலங்களில் பன்னாட்டுக் கம்பெனிகள் நம் நாட்டு வளங்களைச் சுரண்டிச் செல்வதை எதிர்த்துப் போராடும் மக்கள் மேல் இராணுவம் பாய்வதற்கும், காலனிய காலத்தில் ஏகாதிபத்தியச் சுரண்டலுக்கு எதிராகப் போராடிய மக்கள் மேல் வெள்ளை இராணுவம் பாய்ந்ததற்கும் சாராம்சத்தில் வித்தியாசங்கள் ஏதும் இல்லை. அன்றைய வைசிராய்க்கு வெள்ளைத் தோலும் பொன்னிற முடியும் இருந்தது என்பதும் இன்றைய பிரதமருக்கு பழுப்புத் தோலும் டர்பனும் இருக்கிறது என்பதும் தான் இவை இரண்டுக்கும் உள்ள பெரிய வேறுபாடுகள்.

நியமனத்தால் அதிகாரத்திற்கு வரும் அரசு இயந்திரத்தின் அங்கங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்கள் என்பதால் அவர்கள் மக்களுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டவர்களல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் தவறு செய்யும் பட்சத்தில் கூட அவரைத் திருப்பியழைக்கும் ஜனநாயக உரிமை மக்களுக்கு கிடையாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் நியமனங்களின் மூலம் அதிகாரம் வழங்கப்பட்டுள்ள இந்த அரசு இயந்திரத்தின் அங்கங்கள் முற்றிலுமாக மக்களிமிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கிறது.

தேசத்தின் தலைவிதியையே தீர்மானிக்கும் முக்கியமான முடிவுகள் பாராளுமன்றத்தில் வைத்து விவாதிக்கப்பட்டு மக்களால் ‘ஜனநாயக’ முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் ஒப்புதலோடு நிறைவேற்றப்படுவதல்ல. நாட்டின் பொருளாதாரத்தை அந்நிய நிறுவனங்களுக்குத் திறந்து விட வகைசெய்யும் காட் ஒப்பந்தம் நாட்டு மக்களுக்கும் பாராளுமன்றத்திற்கும் தெரியப்படுத்தாமல், கள்ளத்தனமாக மான்டேக்சிங் அலுவாலியா போன்ற மெத்தப் படித்த அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டு, மன்மோகன் சிங் என்ற முன்னாள் உலகவங்கி அதிகாரியால் தீர்மானிக்கப்பட்டு கையெழுத்தாகியது. அவர் காட்டிய விசுவாசத்தின் பலன் தான் தற்போது வெளியாகியிருக்கும் விக்கிலீக்ஸ் ஆவணங்களில் அமெரிக்கா அவர் மேல் காட்டும் அக்கறையாகப் பல்லிளிக்கிறது.

மக்களால் ‘தேர்ந்தெடுக்கப்பட்ட’ பிரதமரே, ஈரான் ஜனாதிபதியை எப்போது சந்திக்க வேண்டும், எப்படிச் சந்திக்க வேண்டும், சந்திக்கும் போது என்ன பேச வேண்டும் என்பதைக் கூட அமெரிக்காவே தீர்மானித்து, அதை வெளிவிவகார அமைச்சக அதிகாரிகள் மூலமும் பிரதமர் அலுவலக அதிகாரிகள் மூலமும் நடைமுறைப்படுத்துகிறார்கள். இதுவும் விக்கிலீக்ஸ் வெளியிட்டிருக்கும் அமெரிக்க தூதரகங்களின் இரகசிய கேபிள்கள் மூலம் அம்பலமாகியிருக்கிறது. ஆக, அன்றைக்கு பிரிட்டிஷ் ஏகாதிபத்திய சேவைக்கு உண்டாக்கப்பட்ட சிவில் நிர்வாக அமைப்பு முறை  இன்றும் அதே நோக்கத்திற்காக செயல்படுகிறது. வித்தியாசம் என்னவென்றால் அன்றைக்கு மாட்சிமை தாங்கிய பிரிடிஷ் மகாராணியின் காலை நக்கிக் கிடந்தார்களென்றால், இன்றைக்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கிரீடமாக வீற்றிருக்கும் பன்னாட்டுக் கம்பெனிகளின் காலை நக்கிக் கிடக்கிறார்கள்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமையும் அரசாங்கத்தின் பல்வேறு அமைச்சர்களும் தமது துறையின் செயலாளர் காட்டும் திசைவழியில் தான் முடிவுகள் எடுக்கிறார். அரசு இயக்கத்தின் சகல சந்து பொந்துகளிலும் தேர்ச்சிபெற்ற நன்கு ‘படித்த’ இந்த அதிகார வர்க்கத்தின் துணையின்றி தேர்ந்தெடுக்கப்படும் ‘படிக்காத’ அரசியல்வாதிகளால் ஊழல் செய்ய இயலாது. பங்குச் சந்தை ஊழலும், ஹவாலா ஊழலும், இஸ்ரோ-தேவாஸ் ஊழலும், ஆதர்ஷ் வீட்டுமனை ஊழலும், ஸ்பெக்ட்ரம் ஊழலும் படிக்காதவர்களின் மூளையில் தோன்றியதால் ஏற்பட்டதல்ல.

உதாரணமாக, தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டுக்கு அநேகமாக எல்லா பத்திரிகைகளும் காரணகர்த்தாவாகச் சுட்டிக் காட்டுவது மின்சாரத் துறையின் அமைச்சரான ஆற்காடு வீராசாமியை. எதார்த்தத்தில் அவருக்கு முன் உள்ள வாய்ப்புகள் என்ன? ஆற்காடு வீராசாமி நினைத்தால் தமிழகத்தின் அத்தனை வீடுகளுக்கும் சிறுதொழில் நிறுவனங்களுக்கும்  தடையற்ற மின்சாரத்தை வழங்கிவிட முடியுமா?

அரசின் தனியார்மய தாராளமய உலகமயப் பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக, ஒவ்வொரு மாநிலமும் பன்னாட்டுக் கம்பெனிகள் இங்கே தொழில் நடத்துவதற்கான அடிப்படையான வசதிகளைச் செய்து கொடுத்தாக வேண்டும். அது அவர்களுக்கு உலக வர்த்தகக் கழகத்தாலும், உலக வங்கியாலும் இடப்பட்டிருக்கும் உத்தரவு. இந்த உத்தரவை மீறி நடப்பதற்கான உரிமையோ அதிகாரமோ ஆற்காடு வீராசாமியாகட்டும் கருணாநிதியாகட்டும் எவருக்குமே கிடையாது. நாளை ஜெயலலிதா வந்தாலும் இது தான் நிலைமை. ஆக, அரசினால்  ஏற்றுக் கொள்ளப்பட்ட பொருளாதரக் கொள்கைகள் காட்டும் திசைவழி என்னவோ, அதில் பயணிப்பது மட்டும் தான் இவர்கள் முன் இருக்கும் வாய்ப்பு.

விவசாயத்தைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பலிகொடுப்பது என்று தீர்மானித்து விட்ட பின், காற்று வாங்கும் உழவர் சந்தைகளின் எண்ணிக்கையை அதிகரித்து என்ன பயன்? பன்னாட்டுக் கம்பெனிகளுக்குத் தேச எல்லைகளைத் திறந்து விட்டபின், எங்கே நிலம் தர வேண்டும் என்று மட்டும் தான் கேட்க முடியும்; ஏன் உனக்குத் தர வேண்டும் என்று எதிர்த்து நிற்கும் உரிமை அற்றுப் போகிறது. கல்வியையும், மருத்துவத்தையும் தனியாருக்குத் தாரைவார்ப்பது என்று ஒப்புக் கொண்டபின், சத்துணவு முட்டைகளின் எண்ணிக்கையைத் தான் கணக்குக் காட்ட முடியும்; பொன்முட்டைகளை அள்ளிச் செல்வதைத் தடுக்க முடியாது.

கடவுள் இல்லையென்பது  பூசாரிக்குத் தான் நன்றாகத் தெரியும் என்பது போலத் தங்களுக்கு அதிகாரம் இல்லையெனும் இந்த உண்மை வேறு யாரையும் விட ஆளும் வர்க்க அரசியல் கட்சிகளுக்குத் தான் தெளிவாகத் தெரியும். எனவே தான், அரசு இயந்திரத்தின் முகமூடியாக இவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் பாத்திரத்தை நிறைவேற்றிக் கொள்வதோடு தாமும் இதற்குள் எவ்வளவு முடியுமோ அவ்வளது பொறுக்கித் தின்பதை மட்டும் கணக்காக நிறைவேற்றிக் கொள்கின்றனர். சமூக நீதி பேசிய கருணாநிதி இன்றைக்கு கொள்கைகளைப் காற்றில் பறக்கவிட்டு விட்டு ஒரு தரகு முதலாளியாகச் சீரழிந்திருக்கிறார் என்பதை இதனூடாகத்தான் புரிந்து கொள்ள முடியும்.

இந்த ஆட்டத்தின் விதிகள் தீர்மானிக்கப்படுவது  ஏகாதிபத்தியங்களாலும் பன்னாட்டுக் கம்பெனிகளாலும் தான். ஆட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு ஆட முன்வரும் இந்தக் கட்சிகள், தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள முகமூடி எனும் பாத்திரத்தைத் திறம்பட ஏற்று நடிப்பதோடு தாமே பெரும் ஏகபோக முதலாளிகளாக வளர்ந்துள்ளனர். ஜெயா-சசி கும்பலின் சாராய சாம்ராஜ்ஜியமாகட்டும் கருணாநிதி குடும்பத்தின் தொழில் சாம்ராஜ்ஜியமாகட்டும் இந்த அடித்தளத்தின் மேல் தான் கட்டப்பட்டுள்ளது. அப்பாவி மக்கள் சிந்திப்பது போல் இவர்களில் எவர் தேர்தலில் தோற்றுப் போனாலும் அது அவர்களுக்கு தண்டனையாக இருப்பதில்லை. அதிகாரத்தைத் துணையாகக் கொண்டு கட்டப்பட்ட கருணாநிதியின் குடும்பத் தொழில் சாம்ராஜ்ஜியங்கள், அவரின் ஜென்மப் பகையாளியாக ஊடகங்களால் சித்தரிக்கப்படும் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் எந்த நெருக்குதலுக்கும் உள்ளாகப் போவதில்லை. கருணாநிதியின் ஆட்சிக்காலத்திலோ தமிழகத் தெருவெங்கும் டாஸ்மாக் மூலமாக சசிகலாவின் சாராய ஆறு ஓடுவதற்கு தடையெதுவும் விதிக்கப்படுவதில்லை.

உண்மையில் இவர்கள் இருவருமே நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல ஒன்றியிருக்கிறார்கள் என்பது தான் எதார்த்தமாக இருக்கிறது. நாளை ஒருவேளை இவர்கள் அல்லாமல் ஒரு ‘நல்லவர்’ அதிகாரத்திற்கு வந்தாலும் இதே தான் நிலை. அந்த நல்லவரின் ஆட்டத்தையும் தீர்மானிப்பது இந்த விதிகள் தான். இராணுவ ஆட்சியை விரும்பும் நடுத்தரவர்க்க அறிவாளிகளும் இருக்கிறார்கள்; ஆனால், இதே இராணுவமும் போலீசும் தமது பிறப்பிலிருந்து இன்றைய தேதி வரையில் ஆளும் வர்க்க நலனுக்குச் சாதகமாக செயல்பட்டு வந்துள்ளதை கவனிக்கத் தவறுகிறார்கள். இன்றும் உரிமைக்காகப் போராடும் மக்களை ஒடுக்கும் ஆயுதப் படைகள் ஆளும் வர்க்கம் யாருக்கு விசுவாசமாய் நிற்கிறார்களோ அவர்களுக்கே விசுவாசமாய் நிற்கிறார்கள்.

புதிய ஜனநாயகத்திற்கான போராட்டமே தீர்வு, அதற்கு தேர்தலை புறக்கணிப்பது முதல் அடி!

எனவே, மெய்யான சமூக மாற்றத்தை விரும்புபவர்களுக்கான தேர்வு என்பது இருக்கும் நடைமுறையில் இல்லை. இந்த அதிகார அமைப்புமுறையின் அழிவில் இருந்து தான் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் புதிய முறையை உண்டாக்க முடியும். அப்படியொன்றை உண்டாக்குவதற்கான வாய்ப்பு என்பது நடப்பில் இருக்கும் விதிகளைச் சுமந்து கொண்டு போராடுவதில் சாத்தியமில்லை; இந்த விதிகளுக்கும் களத்துக்கும் வெளியே நின்று நடப்பிலிருப்பதை ஒட்டுமொத்தமாகத் தகர்த்தெறிவதில் தான் உள்ளது.

தரகு முதலாளிகள், நிலப்பிரபுக்கள், ஏகாதிபத்தியங்களின் நலனுக்காக இருக்கும் அரசு என்ற ஒடுக்குமுறைக் கருவியின் ‘ஜனநாயக’ முகமூடிதான் தெரிவு செய்யப்படும் அதிகாரமற்ற இந்த அரசாங்கம். அரசாங்கத்திற்கு சட்டங்களை இயற்றத்தான் அதுவும் ஆளும் வர்க்கங்களின் நலனுக்கேற்ப மட்டுமே முடியும். அதை அமல்படுத்தும் அதிகாரம் அரசின் கையில். ஆயுதந்தாங்கிய இராணுவம், போலீசு இரண்டும் இந்த அரசின் ஒடுக்குமுறையை பாதுகாப்பதோடு மக்கள் ஆயுதந்தாங்குவதையும் தடை செய்கின்றன. தெரிவு செய்யப்படும் அரசாங்கத்தின் பிரதிநிதிகளை திருப்பி அழைக்கும் அதிகாரம் மக்களுக்கில்லை. அரசின் எந்த ஒரு உறுப்பிலும் அவர்களது பங்கேற்பில்லை. எனவேதான் இது போலி ஜனநாயகம் என்கிறோம். இந்த தேர்தலை புறக்கணிக்கவும்  கோருகிறோம். மக்களுக்கு உண்மையான ஜனநாயகத்தை வழங்கும் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள வேண்டுமென கேட்கிறோம். மக்கள் பங்கேற்கும் உண்மையான ஜனநாயகத்தை பற்றி அடுத்து விளக்குகிறோம்.

________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

தேர்தல் 2011

விக்கி லீக்ஸ்

  1. எம்.எல்.ஏ வுக்கு பொறுக்கித் தின்ன மட்டுமே அதிகாரம் ! ஆள்வதற்கல்ல !!…

    அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே… உங்களுக்காக உழைக்க உங்கள் வீட்டுப் பிள்ளை அண்ணன் ஆக்டோபஸ் அவர்கள் வாக்குகள் சேகரிக்க உங்கள் வீடுகளைத் தேடி வந்து கொண்டிருக்கிறார்… உங்கள் பொன்னான வாக்குகளை குப்பைத் தொட்டி சின்னத்தில் போட்டு…

  2. எம்.எல்.ஏ வுக்கு பொறுக்கித் தின்ன மட்டுமே அதிகாரம் ! ஆள்வதற்கல்ல !! | வினவு!…

    அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே… உங்களுக்காக உழைக்க உங்கள் வீட்டுப் பிள்ளை அண்ணன் ஆக்டோபஸ் அவர்கள் வாக்குகள் சேகரிக்க உங்கள் வீடுகளைத் தேடி வந்து கொண்டிருக்கிறார்… உங்கள் பொன்னான வாக்குகளை குப்பைத் தொட்டி சின்னத்தில் போட்டு…

  3. நி என்னாத காத்து கிழிய கத்துனாலும் மாமே, ஒருத்தவனும் கேட்க மாட்ட! எப்படியும் 60 to 70% வாக்கு விழும் ரெண்டு பொறிக்கில எதாச்சம் ஒரு பொருக்கி வந்து தமிழ் நாட்ட ஆல போறான் பாரு. மறுபடியும் அதே கொள்ளை ஊழல் எல்லாம் இருக்கும்

  4. ஊழல் ஆட்சிக்கு காரணம் அரசியல்வாதிகள்,ரவுடிகள் என்று சொல்லித்திரியும்,சுயநல அறிவு பெருச்சாளிகளுக்கு இந்த பதிவு நல்ல பதிலை கொடுத்து இருக்கிறது.

  5. “தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டுக்கு அநேகமாக எல்லா பத்திரிகைகளும் காரணகர்த்தாவாகச் சுட்டிக் காட்டுவது மின்சாரத் துறையின் அமைச்சரான ஆற்காடு வீராசாமியை. எதார்த்தத்தில் அவருக்கு முன் உள்ள வாய்ப்புகள் என்ன? ஆற்காடு வீராசாமி நினைத்தால் தமிழகத்தின் அத்தனை வீடுகளுக்கும் சிறுதொழில் நிறுவனங்களுக்கும் தடையற்ற மின்சாரத்தை வழங்கிவிட முடியுமா?”

    எனக்குத் தெரிந்து 1970 களிலிருந்தே விவசாயத்திற்கான மின்வெட்டு நிலவுகிறது. அப்பொழுதெல்லாம் “பகல் கரண்ட்”, “ராத்திரி கரண்ட்” என்பார்கள். பகலோ, இரவோ எதுவாக இருந்தாலும் ஒரு நாளைக்கு 6 மணி நேரம்தான் மின்சாரம் வரும். அந்த 6 மணி நேரத்திற்குள் எவ்வளவு பாய்ச்ச முடியுமோ அவ்வளவுதான் விவசாயம். இதெல்லாம் விவசாயிகளுக்குப் பழகிப் போய்விட்டது. அதனால் அது மின்வெட்டாகத் தெரியவில்லை.

    அது போலத்தான் அரசு மற்றும்அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் மக்களுக்கு எதிரானதாக இருந்தாலும் அதெல்லாம் பழகிப் போய்விட்டதால் தவறாகப் படுவதில்லை. இந்த பாழாய்ப் போன பழக்கத்திலிருந்து (made as a culture) மக்கள் விடுபடாதவரை தவறுகள் எதுவும் தவறாகத் தெரியப் போவதில்லை.

    இந்தப் பழக்கத்தை வழக்கத்திலிருந்து விரட்ட உணர்ந்தவர்கள் முன் வருக! நிச்சயமாக பிறர் பின்தொடர்வர்.

  6. நல்ல பதிவு!.ஊழல் எப்படியெல்லாம் செய்யப் படுகிறது என்பது பற்றி ஒரு விளக்கமான பதிவிட்டால் நல்லது.

  7. இது தேர்தல் காலம். நல்ல அருமையான கட்டுரை வாசகர்களுக்கு அரசியல் உணர்வைத் தருவதாக இருக்கிறது. இந்த எம்.பிக்கள் எப்படிப் பட்டவர்கள் அவர்களின் கிர்மினால் பின்னணிகள், நாடாளுமன்றத்தில் அவர்கள் செய்த கொள்கை விவாதங்கள் பற்றி இங்கே படிக்கலாம்.

    நீ தேவடியா!! நீ திருடன்!! நீ பொறுக்கி!! நீ மாமா!! நீ கொள்ளைக்காரன்!! நீ கள்ள நோட்டு!! நீ மொல்லை மாறி!! நீ தரகன்!!

    http://tamilmunnodi.posterous.com/-a

  8. “உங்களுக்கு நாங்க புள்ளதான் தரல மத்த எல்லாம் கொடுத்துட்டோம்” -பாண்டிச்சேரியைச் சேர்ந்த காங்கிரஸ் நடுவண் அமைச்சர் நாராயணசாமி பேச்சு.

    இச் செய்தி எனக்கு இப்பொழுதுதான் தெரியும். எனினும் எனது இடுகை ஒன்றில் அரசியல்வாதிகள் இவ்வாறு வாக்குறுதி கொடுப்பதாக எழுதி அது பெண்களைக் கேவலப்படுத்துவதாக இருக்கும் என்பதால் நீக்கி விட்டேன்.

    இலவசங்களை நோக்கி மக்கள் ஓடும் போது அது அங்கேதான் போய் நிற்கும் என நான் நினைத்தது உண்மையாகிவிட்டது.

    மேலும் படிக்க…
    ஒரு தரம்… ரெண்டு தரம்…!
    http://hooraan.blogspot.com/2011/04/blog-post_9929.html

  9. சென்னையில் உள்ள அன்பர்கள் இங்கே உள்ள தகவலை தயவு செய்து குறித்துகொள்ளுங்கள்.
    நாம் ஆகஸ்ட் 15 க்குள் இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றபபடவில்லை என்றால் மக்களை தொடர் போராட்டங்களுக்கு தயார் ஆக்குவோம்.

    தயவு செய்து இந்த ஒரு விசயத்தில் மட்டுமாவது நாம் ஒன்று படுவோம்.

    சாதி, மதம், இனம் என்று எல்லாம் பார்க்க வேண்டாம். உங்கள் கால்களில் விழுந்து மன்றாடவும் நான் தயார்.

    அனைத்து மக்களையும் ஒன்று இணைக்காத போராட்டம் வெற்றி பெறுவதில்லை.
    vn.krishnan@gmail.com
    krisdev@gmail.com
    chennai.iac@gmail.com
    http://www.IndiaAgainstCorruption.org

    Chennai people:

    Krish Dev – 9840852132
    GopalaKrishnan – 9884782686
    Annamalai – 9444183198

    நன்றி.

Leave a Reply to ஊரான் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க