Friday, August 19, 2022
முகப்பு வாழ்க்கை அனுபவம் அவள் அப்படி ஒன்றும் அழகில்லை!

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை!

-

அண்ணாச்சி கடையில் வைத்துத்தான் கலா, அவளது அம்மா சாந்தி இருவரும் பழக்கம். தினசரி ஒரு ஆண் மளிகை, காய்கறிகளை வாங்குவது குறித்து அவர்களுக்கு வியப்பு. “அம்மா ஊருல இருக்காங்களா, எப்ப வருவாங்க” என்று சமாதானம் கொள்வதும், கூடவே இத்தகைய ஆண்கள் குறித்த பரிதாபமும் கலந்து என்னிடம் பேசுவார்கள். அந்த பரிதாபம் தவறு என்று விளக்க முனையும் போதெல்லாம் சிரித்தவாறு அதை முடித்து விடுவார்கள்.

கலாவுக்கு 25 வயதளவிலும் அம்மாவுக்கு 50க்கு மேலும் இருக்கும். சாந்தி பாசக்கார மதுரையிலிருந்து சென்னைக்கு பிழைக்க வந்தவர். ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கும் மேல் இங்கு வசிக்கிறார். சுற்று வட்டாரங்களில் நிலையாக வசிக்கும் குடும்பங்கள் அனைத்திலும் அவரது பெயர் பிரபலம். அவரது பேச்சில் மதுரையின் மண்வாடை இன்னமும் மணம் வீசுகிறது. வயது தரும் சுகவீனங்கள் அவ்வப்போது வந்து செல்லும். சில நாட்கள் ஓய்வு எடுக்கலாமே என்றால்,” உழைச்சாத்தானே வாழ முடியும், நம்மளுக்கெல்லாம் லீவும் கிடையாது, ஒழிச்சலும் கிடையாது” என்பார்.

வீட்டு வேலைதான் சாந்தியின் அலுவலக வேலை. இந்த வயதிலும் கூட அவர் நான்கைந்து வீடுகளில் வேலை பார்க்கிறார். ஒரு சில வீடுகளில் இருபது ஆண்டுகளாகவும் பணி செய்கிறார். சுற்று வட்டாரத்தின் நல்லது கெட்டதுகளில் எல்லாம் அக்கறையுடன் கலந்து கொள்வார். வெள்ளேந்தியான அவரது பேச்சு இன்னமும் நகரத்தின் மர்மங்களை கற்றுக்கொள்வதாகவோ, புரிந்து கொள்வதாகவோ இல்லை. ” இந்த வீட்டுக்காரங்க எல்லாம் ஊருக்கு போகும் போது சாவியை சாந்தியம்மா கிட்ட கொடுத்துட்டு போவாங்க! அந்த அம்மா மேல அவ்வளவு நம்பிக்கை” என்று அண்ணாச்சி சொல்வார்.

கலா ஒரு எவர்சில்வர் பாத்திரக் கம்பெனியில் வேலை செய்கிறாள். எப்போதும் களைப்பிருந்தாலும் உண்மையில் களையாக மலர்ந்திருக்கும் முகம். அவளுடன் பேச ஆரம்பிக்கும் போது கண்களில் தோன்றும் மலர்ச்சியை கவனித்திருக்கிறேன். நட்புக்காக அந்த கண்கள் எப்போதும் காத்துக் கொண்டிருப்பது போலத் தோன்றும். வேலையைப் பற்றி கேட்டாள் விரிவாக சொல்வாள். பாத்திரங்களுக்கு பவுடர் போட்டு பாலீஷ் செய்து ஸ்டிக்கர் ஒட்டும் வேலை. தினமும் நூறு ரூபாய் சம்பளம். எப்படியும் வாரத்திற்கு 500 கிடைக்கும். விடுமுறை, விடுப்பு என்றால் சம்பளம் கிடையாது. சீசன் குறைவான நேரங்களில் விடுமுறை அதிகம்.

ஆனால் இதுமட்டுமே கலாவின் வேலை அல்ல. காலையில் கம்பெனி வேலைக்கு போகும் முன்பு அம்மாவுடன் ஒரு வீட்டிற்கு சென்று துணிகளை துவைத்துக் காயப்போடுவாள். அந்நேரத்தில் தெருவில் நடந்து  கொண்டிருந்தால், “என்னண்ணே இன்னைக்கு என்ன குழம்பு” என்று சிரிப்பாள். காலை வேலைக்கு பிறகு வீடு சென்று குளித்துவிட்டு கம்பெனிக்கு செல்வாள். இந்த நேரக்குறைவிலும் அவளது உடை அலங்காரங்கள் எளிமையுடன் கொஞ்சம் நேர்த்தியாகவே இருக்கும். தினமும் தலை நிறைய பூச்சூடியே செல்வதை பார்த்திருக்கிறேன். பூக்களின் மீது அவளுக்கு நேசம் அதிகம்தான்.

மதிய உணவுக்காக வீடு வந்து இருப்பதை சாப்பிட்டு விட்டு இருக்கும் அரைமணி நேரத்தில் மற்றுமொரு வீட்டிற்கு சென்று பெருக்கி துடைப்பாள். மாலை வந்ததும் இன்னுமொரு வீடு. ஆக மூன்று வீடுகளில் வேலை, பகல் முழுவதும் கம்பெனி வேலை…. ஆனால் இந்த நெருக்கடியான பணிச்சூழல் குறித்து எப்போதும் அவளிடம் சலிப்போ, களைப்போ, விரக்தியோ, புகாரோ காண முடிந்ததில்லை. தற்செயலாக சந்திக்க நேர்ந்தால் ஒரு சிரிப்பு, ஒரு விசாரிப்பு… மலர்ந்து விரியும் அந்தக் கண்களில் இருக்கும் கனிவு என்னை எப்போதும் உற்சாகப்படுத்துகிறது.

சங்கிலித் தொடர் போன்ற இந்த வேலை உலகத்திற்கு அப்பால் என்ன நடக்கிறது என்பதை அவளால் தெரிந்து கொள்ள முடியாது. இந்தியா – பாக் கிரிக்கெட் போட்டியின் போது அவளை அண்ணாச்சி கடையில் சந்தித்தேன். இன்று கம்பெனிக்கு போகவில்லையா என்று கேட்டதற்கு, ” அதாண்ணே கிரிக்கெட்டுல இந்தியா ஜெயிச்சுருச்சுன்னு கம்பெனியில அரை நாள் லீவு விட்டாங்க” என்றாள். உண்மையில் அது போட்டியை பார்ப்பதற்காக இந்தியா முழுவதும் அரசு, தனியார் அனைவராலும் அளிக்கப்பட்ட விடுமுறை. அதில்  பத்து பேர்கள் வேலை செய்யும் கலாவின் சிறு கம்பெனியும் அடக்கம் என்பது கொஞ்சம் ஆச்சரியம்தான். ஆனாலும் இந்த போட்டியை பார்க்க முனைப்பில்லாத வேறு ஒரு இந்தியாவைச் சேர்ந்தவளான கலாவுக்கு அன்று கொஞ்சம் ஓய்வு கிடைத்திருக்குமோ?

சாந்தி தனது சம்பாத்தியத்தில் இரு மகள்களை கட்டிக் கொடுத்திருக்கிறார். அவர்களையெல்லாம் கோடை விடுமுறைக்கு அழைத்து வந்து கவனிக்க வேண்டும் என்பதை கடமையாகவும், பாசத்தோடும், நிறைவோடும் சொல்வார். சாந்திக்கு ஒரு வயதான அண்ணனும் உண்டு. அவருக்கென்று குடும்பம் ஏதுமில்லை என நினைக்கிறேன். காலை வேலைகளில் இவரும் சாந்தியம்மாவோடு வேலைக்கு போவார். சிறு உதவிகள் செய்வார். மாலை வேளைகளில் தெருவில் இருக்கும் தண்ணீர் தொட்டியின் நீர்விடும் நேரத்தை கவனித்துக் கொள்வார். இதில் வருமானம் ஏதுமில்லை.

இவர்கள் மூவரும் 1000ரூபாய் வாடகையுள்ள குடிசையில் வாழ்கிறார்கள். வீட்டில் சமையல் என்பது கிடைக்கும் நேரத்தை பொறுத்தது. சனி, ஞாயிறு கூட இதே நிலைமைதான். சில வேளைகளில் அருகாமை வீட்டில் இட்டலி விற்கும் பெண்ணிடமிருந்து வாங்குவார்கள். சில நாட்கள் நானும் அங்கு செல்லும் போது, ” என்னண்ணே இன்னைக்கு சமையல் லீவா” கலா கேட்பாள். சாந்தியம்மா கிண்டல் செய்யும் மகளை கடிந்து கொள்வார். இலவச டி.வீ, அடுப்பு எல்லாம் சாந்திக்கும் கிடைத்திருக்கிறது. அது குறித்து பேசும் போது ” எல்லாம் நம்ம பணம்தான். நம்மகிட்ட வசூலித்து நமக்கே தாராங்க” என்றார். தேவை காரணமாக டி.வியை விற்று விட்டார்கள்.

வேலை செய்யும் ஒரு வீட்டில் ஏதோ பழைய பெரிய டி.வியைக் கொடுத்திருக்கிறார்கள். அது அடிக்கடி மக்கர் செய்கிறது. அதை எப்படி சரி செய்வது என்று என்னிடம் ஆலோசனை கேட்பார் சாந்தி. இடையில் தேர்தல் வந்தது. யாருக்கு ஓட்டு போட்டீர்கள் என்றேன். இரட்டை இலை என்றார். காரணம் உள்ளூர் அ.தி.மு.க பிரமுகர்தான் சாந்திக்கும் தமிழக அரசுக்குமான பாலமாக திகழ்பவர். டி.வி, அடுப்பு கூட அவர் மூலம்தான் கிடைத்ததாம். ஆதலால் தி.மு.க அரசின் நலத் திட்டங்களை வாங்கிக் கொடுத்தபடியால் அ.தி.மு.கவுக்கு ஓட்டு. அவர்களைப் பொறுத்தவரை அந்த அ.தி.மு.க காரர்தான் தமிழக அரசு.

சமீபத்தில் ஒரு நாள் முதன் முறையாக கலாவின் முகத்தில் இருக்க கூடாத ஒரு சோகத்தை கவனித்தேன். விசாரித்த போது வேலை செய்யும் ஒரு வீட்டில் ஏதோ ஸ்டூலில் ஏறி பரணில் இருக்கும் பொருளை எடுக்க முனைந்த போது சாந்தியம்மா தவறி விழுந்து விட்டார். எலும்பு முறிவு எதுவும் இல்லையென்றாலும் கடுமையான வலி. நான்கு நாட்கள் நகர முடியாமல் படுக்கையில் இருந்திருக்கிறார். இதிலிருந்து மீண்டு வந்த போது அடுத்த இடி தயாராக காத்துக் கொண்டிருந்தது.

சில நாட்களாகவே அவருக்கு கடும் தலைவலி. மருத்துவரைப் பார்த்ததில் கண்ணில் பிரச்சினை, அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்று சொல்லிவிட்டார்கள். ஓரிரு வருடங்களுக்கு முன்பாகவே கண் பரிசோதனை செய்து கண்ணாடியும் வாங்கி வைத்திருந்தார் சாந்தி. ஆனால் அலுவலக வேலை போல வீட்டு வேலை செய்பவர்கள் அதுவும் சாந்தி அப்படி எந்நேரமும் கண்ணாடி அணிந்திருப்பது சாத்தியமல்ல. அதற்கு அவர் பழகிக் கொள்ளவும் இல்லை.

அறுவை சிகிச்சைக்கு பத்தோ, இருபதோ ஆயிரம் ஆகுமாம். எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் இலவசமாக செய்யலாம், தனியார் மருத்துவமனைகள் போல நன்றாகவும் கவனிப்பார்கள் என்று பேசிப்பார்த்தேன். அவர்களுக்கு அது தெரியாமல் இல்லை. எனினும் அவர்கள் வேலை செய்யும் வீட்டுக்காரர்களில் நெருக்கமானவர்கள் சிலர் தனியாரிடமே செய்து கொள்ளச் சொல்லியிருப்பதோடு கொஞ்சம் பண உதவி செய்வதாகவும் வாக்களித்திருக்கிறார்களாம். வேறு பிரச்சினைகள் என்றால் பரவாயில்லை, கண் இருந்தால்தானே வேலை செய்ய முடியும் என்று சாந்தி யோசிக்கிறார்.

தற்காலிகமாக புதுக்கண்ணாடி ஒன்று வாங்கியிருக்கிறார். அதில் பார்த்தால் கீழே எதுவும் தெரியவில்லையாம். கண்ணிலிருந்தும் நீர் அதிகம் வடிகிறதாம். போகப் போக சரியாகிவிடும் என்று சொல்லியிருக்கிறார்களாம். இதில் சரியாகவில்லை என்றால் அறுவை சிகிச்சையாம். இப்போது முன்பு போல எல்லா வீடுகளுக்கும் சாந்தி செல்வதில்லை. கலாதான் அவற்றை செய்து ஈடு கொடுக்கிறாள். இதனால் பலநாட்கள் கம்பெனி வேலைக்கு போகவில்லை. பெயரில் கம்பெனி இருந்தாலும் அது ஒரு தினக்கூலி கடைதான். என்று வேண்டுமானாலும் போய்க் கொள்ளலாம்.

கம்பெனி வேலைக்கு போகாத நாட்களில் கலாவின் அலங்காரத்தை பார்க்க முடியாது. சமயத்தில் நைட்டி, துப்பாட்டாவோடு கூட மாமவுடன் அவள் அருகாமை வீடுகளுக்கு செல்வாள். சமயத்தில் சாந்தியும் செல்கிறார். என்ன நோவு வந்தாலும் அவர்களால் வேலை செய்ய முடியாமல் இருக்க முடியாதோ என்னமோ?

சாந்திக்கு இப்போது இருக்கும் ஒரே கடமை மகளை திருமணம் செய்து கொடுப்பதுதான். அதற்காக அவர் கொஞ்சம் சேமித்தும் வைத்திருக்கிறார். கண் ஆப்பரேஷனது செலவு குறித்தும் பயம் இருக்கிறது. கலா மணமாகி போய்விட்டால் சாந்தியம்மாவும் அவரது அண்ணனும் என்ன செய்வார்கள்? ஏதாவது படுத்த படுக்கையாகி விட்டால் யார் பார்ப்பார்கள்? வீடுகளுக்கு செய்யும் வேலை நின்று போனால் வருமானத்திற்கு என்ன செய்வார்கள்? இதையெல்லாம் கணக்கிலெடுத்துதான் கலா திருமணம் செய்வாளா? கேள்விகள்…. நெருடுகின்றன.

அவர்களைப் பொறுத்தவரை அத்தகைய தொலை நோக்கு திட்டம், பாதுகாப்பு எதுவும் கிடையாது. அவர்களது உலகத்திற்கு வெளியே இருந்து பார்ப்பதால் மட்டுமே நமக்கு இந்த கேள்விகள் தோன்றுகின்றன. ஏழைகள் வாழ்க்கையை இயல்பாக எதிர்கொண்டு யதார்த்தமாக செல்கிறார்கள். இழப்பின் வலி அவர்களையும் துன்புறுத்தும் என்றாலும் அதன் காலம் குறுகியதுதான்.

இதே மீண்டும் கலாவின் எளிமையான அலங்கார உடையோடு கூடிய பழைய உற்சாகத்தை பார்க்கிறேன். ” என்னண்ணே ஞாயிற்றுக்கிழமைக்கு கறி ஏதும் எடுக்கலியா? ஒரு நா உங்க சமையலை சாப்பிடணும்னே, நீங்க கூப்பிடலேன்னாலும் நான் கண்டிப்பா வருவேன்”.

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 1. ”ஆனால் இந்த நெருக்கடியான பணிச்சூழல் குறித்து எப்போதும் அவளிடம் சலிப்போ, களைப்போ, விரக்தியோ, புகாரோ காண முடிந்ததில்லை.”

  ஆயிரம் ஆயிரமாய் சம்பாதித்தாலும் அது போதவில்லை என வேலையில் சலிப்புக் காட்டும் பலரை அலுவலகங்களில் காண முடியும். உழைப்பாளிகள் அதுவும் குறைந்த வருவாய் பெறும் பலரை நான் பார்த்திருக்கிறேன். ஊதியம் குறைவு என்பதற்காக இவர்கள் வேலையில் சலிப்புக் காட்டுவதில்லை. ‘புரோ ஆக்டிவ்’ (proactive) பற்றியெல்லாம் இவர்களுக்குத் தெரியாது. ஆனாலும் வேலைகளை நிறைவேற்றும் இவர்களது பண்பு கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

 2. இவர்கள் மூவரும் 1000ரூபாய் வாடகையுள்ள குடிசையில் வாழ்கிறார்கள்//

  குடிசைக்கே ஆயிரமா?..!!!!!! ஆஆஆஆ:((

  கலா , சாந்தி மாதிரி நிறைய பெண்கள் கடந்தே வந்துள்ளோம் நம் வாசலிலேயே..துன்பங்கள் பழகிப்போகின்றன..

  இதைபோல நடுத்தர வர்க்கத்தினர் சிலர் வீட்டில் மகன், மருமகள் எல்லாரும் வேலைக்கு போய்விட கவனிப்பாரற்று இருக்கும் முதியோர் நிலைமை..யாரை குறை சொல்ல?.

  கலா மாதிரி என் வீட்டருகில் ஒரு பெண்.. இரு அக்கா. அவர்களுக்கே கஷ்டப்பட்டு திருமணம் செய்தார்கள்.. இவளுக்கோ வயதாகிக்கொண்டே இருந்தது..

  வெள்ளந்தியாக தெரு முழுக்க சொல்லுவாள் தனக்கு மாப்பிள்ளை பார்த்துவிட்டதாகவும், நகைகள் செய்துள்ளதாகவும்.. அதை பலர் கேலி செய்வதுமுண்டு அவள் உள்மன போராட்டம் புரியாமல்..

  அவள் அன்னை கான்சர் நோயில் தவறிவிட, இப்ப அண்ணா, அப்பா மட்டும்..30 வயதில் இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்டாள்.. அதுவும் ஒத்துவராமல் வீடு திரும்பினாள்.. எல்லா வேலையும் செய்வாள். யாருக்கும் உதவுவாள்.. ஆனால் அவளுக்கு உதவத்தான் யாருமில்லை..அல்லது முடியவில்லை.. முக்கியமா சாதி பிரச்னை..

  மீண்டும் ஒரு திருமணம் முடித்து சென்றுள்ளாள்..

  எப்ப பார்த்தாலும் கலகலப்புதான் அவள் முகத்தில்..அடுத்தவருக்காகவே சிரிக்க பழகிக்கொண்டவர்கள் இவர்கள்..

 3. யதார்த்தத்தில் ஏழைகளின் எதிகாலம் பாதுகாப்பானதாகவோ பிரகாசமானதாகவோ இல்லை என்பதுதான் நிஜம். நிஜம் உரைத்தாலும், வாசிக்கையிலும், நினைக்கையிலும் கண்கள் கலங்கினாலும் நிவர்த்திக்க என்னவழி என்பதை யோசிக்க யொசிக்க ஆயாசமே மிஞ்சுகிறது.
  இவ்வாரான பதிவுகள் எழுதுவோர் கூடவே தன்னாலான தீர்வுகளையும் சொல்லிச்சென்றால்
  முயற்சிப்பதற்கு வசதியாக இருக்கும் என்பது என்(ஆசை)ஆதங்கம்.

 4. கலாவின் கதை தொடர்கிறது :

  அதோ
  அவள்தான்..
  அதே கலாதான்…
  பெட்ரோல் பங்கில்
  பெற்ரோல் போடுகிறாள்.
  சிம்மாடு கோலி
  சிமெண்டுக் கலவை தூக்குகிறாள்.
  மனித எச்சங்களை
  கூட்டிக் கழித்து
  பெருக்கி
  சுத்தம் செய்கிறாள்.
  காலில் கோணி சுற்றி
  தார்ச் சாலை திருத்துகிறாள்.
  ஊசியோடும் பாதையிலிருந்து
  பார்வையை எடுக்காமல்
  துணி தைத்து வீசுகிறாள்.

  ஆழ் மனதில்
  உழைப்பின் வலிகள்.
  ‘நாளைக்கும்கூட
  எனக்கு
  இந்த வேலை கிடைக்கும்’
  என்கிற குதூகலம்தான்
  அவள் முகத்தில்
  களை பூத்துக் குலுங்குகிறது.

  இன்னொருமுறை,
  அந்தக் ‘கோணிக் பூட்சு’ பெண்
  தார் சிக்கத் தடுமாறி,
  புருவத்தின் மீது
  கை கவிழ்த்து
  உன்னைப் பார்த்து
  புன்னகைத்து
  ‘குட்மானிங் சார்’ என்று
  குரல் கொடுத்தாலோ;

  அல்லது

  இன்னொரு முறை
  அவசர கதியில்
  நீங்கள் பெட்ரோல்
  நிறப்பும்போது
  ‘நல்லாயிருக்கியாண்ணே’
  என்று
  உன் சம்மதமில்லாமலோ
  உன் பதிலை எதிர்பார்க்காமலோ
  ஒரு குரலை
  உங்கள் காதுகள் கேட்க நேர்ந்தால்
  அவள்தான்
  கலா.

 5. எளிய மனிதர்களின் கடுமையான வாழ்க்கை சூழல் சென்னையில் பல வசதியான மக்களுக்கு தெரியாது தான். இப்படி அறிமுகப்படுத்துவது மிக அவசியம் என கருதுகிறேன். தொடர்ந்து எழுதுங்கள்.

 6. “அடுத்தவருக்காகவே சிரிக்க பழகிக்கொண்டவர்கள் இவர்கள்.”.

 7. இப்படிப் பட்ட வெள்ளேந்தியான உள்ளங்கள் இருப்பதினால் உலகம் இனிமையாக உள்ளது, ஆனால் அவர்கள் கதி….

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க