privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகவிதைமே நாள் சிலிர்க்கும்!

மே நாள் சிலிர்க்கும்!

-

வர்க்கமாய் உணர்தலே
உயர்திணை…
ஏதோ, வாழ்ந்தோம் என்பது
அஃறிணை.

சங்கமாய் திரள்வதே சரிநிலை
வெறும் சந்ததிப்பெருக்குதல் உயிர்ப்பிழை.
பலரும் போராடி பெற்றதுன் பயன்நிலை
போராடும் வர்க்கத்துடன் சேராதிருப்பது இழிநிலை

ஈழமோ, காசுமீரோ
இந்திய மேலாதிக்கக் கொடுங்கொலை…
சிக்காகோவோ, சிங்கூரோ
உரிமைக் கேட்டால் படுகொலை…

நமைச்சுற்றி பகை வர்க்கம்
உலகெங்கும் ஓர் இழை,
அரசியல் வேண்டாமென்பது சதி வலை,
அறுத்தெறிந்து! அமைப்பாகு தொழிலாளியே,
மே நாள் அழைக்கிறது!
வர்க்கப் போராட்டமே உன் வாழ்நிலை.
பாட்டாளி வர்க்கமாய் ஒன்று சேர் பயமில்லை!

எதற்கெடுத்தாலும், “எனக்கு நேரமில்லை
இந்தப் புரட்சி… இயக்கமெல்லாம் பழக்கமில்லை
கொடி பிடித்தல்… கோஷமிடுதல் ஒத்து வராது…
கூட்டமாய் சேர்ந்து நின்றால் உடம்புக்கு ஆகாது”
என ஒதுங்கிக் கொள்பவன் முகத்தைப் பார்த்து
மேலும் சிவக்குது மே நாள்!

கடித்து அழிக்க வரும் கட்டெறும்பை
எதிர்கொண்டு வேர்விடும், விதை.
அரித்துத்தின்ன வரும் கரையானை
முறியடித்து தலைநிமிரும் வேர்,
ஆடு, மாடுகள் மிதித்தும் அடங்காமல்
வேலியோரம் மெல்ல முன்கை உயர்த்தும் செடி,
பசையற்ற வேலி முள்ளை அப்படியே பற்றிக் கொண்டு
குடிசையின் உச்சியில் போய்
சொந்தமாய் பூக்கும் பறங்கிப் பூவின் அழகு!
உனக்கும் வேண்டுமா?
போராடிப் பார்!

உணவுக் கூடத்திலும்
உளவுபார்க்கும் கேமரா,
வார்த்தையை பிடுங்கி
உனது வர்க்க உணர்வை சோதிக்கும் சூப்பர்வைசர்,
கட்டளைக்கு எதிராக இமைத்தாலே
பணிநீக்கும் அதிகாரம்,
புரையேறினாலும்
சக தொழிலாளியிடம் தண்ணீர் கேட்க கை நீட்டாமல்
தானே தலையில் அடித்துக் கொண்டு
தனியே ஒதுங்கும் பயம்கொண்ட தொழிலாளி

இத்தனைக்கும் மத்தியில்
ஆங்கே… ஒரு சங்கத்தை உருவாக்கி
கொடியேற்றி தலைநிமிரும் தொழிலாளர்..
அவர் போராட்ட அழகில்
மே நாள் சிலிர்க்கும்!

உயிரைக்கொடுத்துப் போராடி
மேநாள் தியாகிகள் பெற்றுக்கொடுத்த உரிமைகளை
ஒவ்வொன்றாய் இழப்பது
நம் வாழ்நாளின் கேவலம்.

உழைப்பை கூலிக்கு விற்பதையே
எதிர்த்தவர்கள் அவர்கள் – இன்றோ
உணர்ச்சியையும் கூலிக்கு விற்கத் தயார்,
உலகமயச் சுரண்டலுக்கும் இணங்கத் தயார்.
இருப்பவர்களின் காட்சிகளைப் பார்த்து
இறந்தவர் கனவு அஞ்சுகிறது!

மேநாளின் இலக்கு,
எட்டுமணிநேர வேலை மட்டுமல்ல,
முதலாளித்துவத்தையே எடுத்தெறியும் வேலை.

மேநாளின் சிறப்பு,
நம்மை முதலாளித்துவ சிந்தனையிலிருந்து
விடுவித்துக் கொள்வதுதான்…

செய்! மேநாள் சிலிர்க்கும்…

_______________________________________________

– துரை.சண்முகம்.
_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்