Tuesday, October 15, 2024
முகப்புகலைகவிதைமே நாள் சிலிர்க்கும்!

மே நாள் சிலிர்க்கும்!

-

வர்க்கமாய் உணர்தலே
உயர்திணை…
ஏதோ, வாழ்ந்தோம் என்பது
அஃறிணை.

சங்கமாய் திரள்வதே சரிநிலை
வெறும் சந்ததிப்பெருக்குதல் உயிர்ப்பிழை.
பலரும் போராடி பெற்றதுன் பயன்நிலை
போராடும் வர்க்கத்துடன் சேராதிருப்பது இழிநிலை

ஈழமோ, காசுமீரோ
இந்திய மேலாதிக்கக் கொடுங்கொலை…
சிக்காகோவோ, சிங்கூரோ
உரிமைக் கேட்டால் படுகொலை…

நமைச்சுற்றி பகை வர்க்கம்
உலகெங்கும் ஓர் இழை,
அரசியல் வேண்டாமென்பது சதி வலை,
அறுத்தெறிந்து! அமைப்பாகு தொழிலாளியே,
மே நாள் அழைக்கிறது!
வர்க்கப் போராட்டமே உன் வாழ்நிலை.
பாட்டாளி வர்க்கமாய் ஒன்று சேர் பயமில்லை!

எதற்கெடுத்தாலும், “எனக்கு நேரமில்லை
இந்தப் புரட்சி… இயக்கமெல்லாம் பழக்கமில்லை
கொடி பிடித்தல்… கோஷமிடுதல் ஒத்து வராது…
கூட்டமாய் சேர்ந்து நின்றால் உடம்புக்கு ஆகாது”
என ஒதுங்கிக் கொள்பவன் முகத்தைப் பார்த்து
மேலும் சிவக்குது மே நாள்!

கடித்து அழிக்க வரும் கட்டெறும்பை
எதிர்கொண்டு வேர்விடும், விதை.
அரித்துத்தின்ன வரும் கரையானை
முறியடித்து தலைநிமிரும் வேர்,
ஆடு, மாடுகள் மிதித்தும் அடங்காமல்
வேலியோரம் மெல்ல முன்கை உயர்த்தும் செடி,
பசையற்ற வேலி முள்ளை அப்படியே பற்றிக் கொண்டு
குடிசையின் உச்சியில் போய்
சொந்தமாய் பூக்கும் பறங்கிப் பூவின் அழகு!
உனக்கும் வேண்டுமா?
போராடிப் பார்!

உணவுக் கூடத்திலும்
உளவுபார்க்கும் கேமரா,
வார்த்தையை பிடுங்கி
உனது வர்க்க உணர்வை சோதிக்கும் சூப்பர்வைசர்,
கட்டளைக்கு எதிராக இமைத்தாலே
பணிநீக்கும் அதிகாரம்,
புரையேறினாலும்
சக தொழிலாளியிடம் தண்ணீர் கேட்க கை நீட்டாமல்
தானே தலையில் அடித்துக் கொண்டு
தனியே ஒதுங்கும் பயம்கொண்ட தொழிலாளி

இத்தனைக்கும் மத்தியில்
ஆங்கே… ஒரு சங்கத்தை உருவாக்கி
கொடியேற்றி தலைநிமிரும் தொழிலாளர்..
அவர் போராட்ட அழகில்
மே நாள் சிலிர்க்கும்!

உயிரைக்கொடுத்துப் போராடி
மேநாள் தியாகிகள் பெற்றுக்கொடுத்த உரிமைகளை
ஒவ்வொன்றாய் இழப்பது
நம் வாழ்நாளின் கேவலம்.

உழைப்பை கூலிக்கு விற்பதையே
எதிர்த்தவர்கள் அவர்கள் – இன்றோ
உணர்ச்சியையும் கூலிக்கு விற்கத் தயார்,
உலகமயச் சுரண்டலுக்கும் இணங்கத் தயார்.
இருப்பவர்களின் காட்சிகளைப் பார்த்து
இறந்தவர் கனவு அஞ்சுகிறது!

மேநாளின் இலக்கு,
எட்டுமணிநேர வேலை மட்டுமல்ல,
முதலாளித்துவத்தையே எடுத்தெறியும் வேலை.

மேநாளின் சிறப்பு,
நம்மை முதலாளித்துவ சிந்தனையிலிருந்து
விடுவித்துக் கொள்வதுதான்…

செய்! மேநாள் சிலிர்க்கும்…

_______________________________________________

– துரை.சண்முகம்.
_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. நல்ல கவிதைக்கு வாழ்த்துகள்..

    மே தினம்.:
    ——————–

    அல்லோகலமாய் மேதின கொண்டாட்டம்
    அடுப்படியில் இடுப்பொடிய திண்டாட்டம்

    உழைக்கும் வர்க்கத்திற்கே ஓய்வின்றாம்
    உனக்கில்லை பெண்ணே ஒதுங்கிக்கொள்

    தொழிலாளிக்கு மட்டுமிங்கே அங்கீகாரம்
    தொய்வில்லாது சுமப்பாய் குடும்ப பாரம்..

    குழந்தைவளர்ப்பு , வீட்டுவேலை தொழிலல்ல
    குற்றம் குறை சொல்வதுனக்கு அழகல்ல…

    பெண்ணே உனக்கும் அனைத்து தொழிலாளிகளுக்கும் மேதின வாழ்த்துகள்..

  2. செங்கொடியும் சிவப்புக் கம்பளமும் :

    சிவப்புக் கம்பளத்தின் மேலே தான் நடப்பார்கள்.
    இவர்கள் ஒரு ரகம்.

    சிவப்புக் கம்பளத்தில் நடப்பவர்களுக்கு
    சிவப்புக் கம்பளம் விரிப்பது ஒன்றையே
    சேவகமாகச் செய்வார்கள்.
    இன்னொரு ரகம்.

    சிவப்புக் கம்பளத்தை
    நாகரிகத் தேவையாகக் கருதி
    சிவப்புக் கம்பளத்தை மட்டுமே,
    தனது ஆலையில்
    சொற்ப சம்பளம் கொடுத்து,
    தயாரிக்கும் முதலாளி.
    இவன் ஒரு ரகம்.

    சிவப்பு கம்பளம் ஒன்றை மட்டுமே
    கருப்பொருளாகக் கொண்டு
    இயல், இசை, நாடகமிருக்கும்.
    சில கவி பாடும்.
    இவை ஒரு ரகம்.

    சிவப்புக் கம்பளம்
    அவர்கள் பரம்பரையோடு ஒட்டிப் பிறந்தது
    என்றும் கூட சிலாகிப்பது
    இன்னொரு ரகம்.

    சிவப்புக் கம்பளம்
    கடவுள் கொடுத்தது.
    போன ஜன்மத்துப் புண்ணியம் என்று
    கடவுளைத் துணைக்கழைப்பது
    இன்னொரு ரகம்.

    சிவப்புக் கம்பளம்
    அவன் திறமைக்கான பரிசு.
    உனக்கேன் பொறாமை எனக் கேட்பது
    ஒரு ரகம்.

    சிவப்புக் கம்பளத்து உரிமையில்
    நாலு லட்ச்சத்தில் ஒரு பங்குகூட
    எனக்குக் கிடைக்க வில்லையே;
    நான் நாயாய் உழைத்தும் என்பது
    ஒரு ரகம்.

    உழைத்து வியர்வை சிந்தியும்
    என் உடம்பில் உடுத்திக் கொள்ள
    சொக்காயில்லாதபோது,
    அவர்கள் பாதங்கள்
    நோகமல் நடப்பதற்கு மட்டும்
    ஏன் அந்தச் சிவப்புக் கம்பளம் என்று
    சிந்திப்பது ஒரு ரகம்.

    இத்தனை ரகத்தில்
    இந்த மே நாளின் சிறப்பு
    யாருக்குப் பொருந்துமென
    சற்று சிந்தித்துப் பாருங்கள்.
    சிவப்புக் கம்பளத்துக்கும்
    செங் குருதிக்கும்
    வித்தியாசம் காணுங்கள்.
    ஏனென்றால்,
    உரிமை கோரிய மே நாளுக்காக
    செங்குருதிதான் சிந்தப்பட்டது;
    சிவப்புக் கம்பளம் விரிக்கப்படவில்லை.

  3. சென்னை பூவிருந்தவல்லியில் கொளுத்தும் வெயிலிலும் மெய்சிலிர்க்க வைத்த மேநாள் பேரணியில் பங்கேற்றுவிட்டு வீட்டிற்கு வந்து வினவைத் திறந்தால் இங்கேயும் மெய்சிலிர்க்கும் மேநாள் கவிதை.

    தோழர் துரை.சண்முகத்திற்கு எனது வாழ்த்துகள்!

  4. உலகெங்கும் வாழும் உழைக்கும் வர்க்கத்திற்கு என் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.
    விடியும் என்ற நம்பிக்கையோடு.

  5. மே தினத்திற்கு தங்கள் குருதியைச் சிந்தி வர்க்க கொடியை செங்கொடியாகச் செய்த

    சிக்காகோ தொழிலாளர்களுக்கு வீரவணக்கத்தை செலுத்துவோம்.அவர்களின்

    போராட்டபாதையில் முன்னேறுவோம்.தோழர் துரைசண்முகம் அவர்களின் மே தின கவிதை

    அத்தகைய போராட்டத்திற்கு ஓர் அறைகூவல் என்றால் மிகையில்லை.போர்களத்திற்கு

    புறப்படும் படைவீரனுக்கு வழங்க வேண்டிய வாழ்த்துக்கள் இந்த மேதின கவிதையாகும்.

    மேலும்,”வினவு”தலைப்பில் மே தின “வாழ்த்துகள்” வாழ்த்துக்கள் என

    இருக்கவேண்டும்.திருத்தம் அவசியம்.

  6. சிலிர்க்கும் கவிதை தந்த துரை. சண்முகதுக்கும் மறுமொழியாய் இரு கவிதை தந்த ஊரானுக்கும் நன்றி.

  7. சென்னை OMR ரோட்டில் ஒரு புதிய NRI பள்ளி திறந்திருக்கிறார்கள். அதில் படிக்கும் பையன்கள் வரும் கார்களின் மதிப்பே 5 லட்சத்திற்கு மேல். எத்தனை கார்கள்…….. என்னால் அவற்றை எண்ணவே முடியவில்லை ….. சென்னை பெங்களுர் போன்ற இந்திய நகரங்களில் கார்களின் பெருக்கம் அதிகமாகி வருவதாக சொல்லபப்டுகிறது .. ஒரு காலத்தில் BA BSC படித்தால் நோ நோ வெகன்சி என்று கத்திக் கொண்டருந்த காலம் மலையேறிப் போய் இன்று ஒரு டிகிரி மற்றும் கம்யூட்டர் அறிவு இருந்தால் மாதம் 30000ரூ சம்பாதிக்க முடிகிறது.. இருந்தும் குடிசைகள் ஏழைகள் இருக்கத்தான் செய்கிறார்கள்..
    சரி.. பிரச்சனைக்கு வருகிறேன்….. நீங்கள் தற்போது முதலாளிகளை மட்டும் எதிர்த்து போராட முடியாது. அவர்களுடன் சேர்த்து மேல் சொன்ன வர்க்கத்தினரையும் எதிர்த்து போராட வேண்டும்… அதனால் உங்கள் எதிர் கட்சியில் மேலும் மேலும் பலர் சேர்ந்து கொண்டு பெரும் கும்பலாக ஆகப் போகிறார்கள்… உங்கள் பணி சிரமம்தான்….

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க