சின்னக்குத்தூசி எனும் புனைபெயரில் தமிழக அரசியல் – பத்திரிகை உலகில் பிரபலமாக அறியப்பட்ட இரா.தியாகராஜன் 22.05.2011 அன்று காலை சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 77.
1934ஆம் ஆண்டு திருவாரில் பிறந்த சின்னக்குத்தூசி மாணவப் பருவத்தில் திராவிட இயக்கத்தின் வீச்சில் கவரப்படுகிறார். பின்னர் பள்ளி ஆசிரியராகவும், அதன் பின்னர் பல பத்திரிகைகளிலும் பணியாற்றிருக்கிறார். பல ஆண்டுகள் முரசொலியிலும் தொடர்ச்சியாக எழுதி வந்திருக்கிறார். ஜூனியர் விகடனிலும், நக்கீரனிலும் தொடர்களை எழுதியிருக்கிறார். கடந்த ஓராண்டாக பில்ராத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக இருந்த காலங்களிலும் எழுத்துப் பணியையோ நண்பர்களோடு உரையாடுவதையோ அவர் நிறுத்தவில்லை.
2000ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் திருவல்லிக்கேணி மேன்ஷனில் அவர் தங்கியிருந்த போது அடிக்கடி அவரைச் சந்தித்திருக்கிறேன். அப்போது பல அரசியல் கட்சியைச் சேர்ந்தோர், முன்னாள் இந்நாள் பத்திரிகையாளர்கள், அனவரும் நாள், கிழமை, நேரம் முறை வைத்து அவரை சந்திக்க வருவார்கள்.
பகல், மாலை, இரவு என எந்நேரமும் பலரோடு அவர் விவாதங்களில் ஈடுபடுவதைக் கண்ட நான் அவர் எப்போது படிக்கிறார், எழுதுகிறார் என்பதை ஆர்வத்துடன் கேட்டிருக்கிறேன். காலை நான்கு மணிக்கு எழுபவர் ஒன்பது மணிக்குள் படிப்பு, எழுத்து வேலைகளை முடித்து விடுவார். அவர் அறை முழுவதும் பத்திரிகைகளும், நூல்களும், கோப்புகளும் நிறைந்து இருக்கும். தினசரியில் வரும் செய்திகளை தலைப்புக்கேற்றவாறு கிழித்து அந்தந்த உறையில் போட்டு விடுவார். அதில் சர்வதேச அரசியல் முதல் மணிப்பூர், அசாம் என வடகிழக்கு மாநில அரசியல் வரை அனைத்தும் இருக்கும்.
இதுபோக அவர் நினைவாற்றலே ஒரு பெரும் நூலகம்தான். தமிழகத்தின் அறுபது ஆண்டுகால அரசியல் விவரங்களை எப்போது கேட்டாலும் சரளமாகச் சொல்வார். தனது செய்திக் கோப்புகளையும், மிகுந்த விட்ட நூல்களையும் பரமாரிப்பதற்கு அவர் என்றுமே அலுத்துக் கொண்டதில்லை. எழுத்துப்பணி, பொதுவாழ்க்கைக்காக திருமணமே செய்யாமல் வாழ்ந்த அவரது இறுதிக் காலத்தை நக்கீரன் கோபால் சிறப்பாகவே பார்த்துக் கொண்டார். இப்போது இறந்த பிறகும் கூட அவருக்கென்று உறவினர்கள் யாருமில்லை. அவரது உடல் கூட நக்கீரன் அலுவலகத்தில்தான் வைக்கப்பட்டு இறுதி ஊர்வலத்திற்கு சென்றது.
நான் அவரைப் பார்த்த காலத்தில் தி.மு.கதான் ஆளும் கட்சி. முற்பகலில் முரசொலி அலுவலகத்துக்கு சென்றுவிட்டு பிற்பகலில்தான் அறைக்குத் திரும்புவார். கருணாநிதியை அடிக்கடி சந்திக்க கூடியவர். எனினும் அந்த செல்வாக்கை தனது சொந்த நலனுக்கென்று பயன்படுத்திக் கொள்ளாதவர்.
90களின் துவக்கத்தில் ம.க.இ.க நடத்திய திருவரங்கம் கருவறை நுழைவுப் போராட்டம் குறித்து தொடர்ச்சியான அக்கறையை அவர் வெளிப்படுத்தினார். அப்போது தமிழகத்தில் ஜெயா ஆட்சி. பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து பார்ப்பன இந்து மதவெறி தலைவிரித்தாடிய காலம். அரங்கநாதன் கருவறைக்குள் பெரியார், அம்பேத்கரின் படங்களுடன் தோழர்கள் நிற்கும் புகைப்படத்தை சுவரொட்டியாக அச்சிடுவதற்கு அச்சக உரிமையாளர்கள் அஞ்சினர். இதைச் சொன்னவுடன், தானாக முன்வந்து உதவினார். அவர் காட்டிய ஈடுபாட்டின் காரணமாக, கருவறை நுழைவுப் போராட்டம் பற்றி முரசொலியில் தொடர்ந்து கட்டுரைகள், தலையங்கங்கள் வந்தன. ஓராண்டுக்குப் பின் அந்த போராட்டத்தை நினைவு கூர்ந்து முரசொலியில் எழுதினார். பின்னர் பல ஆண்டுகள் கழித்து கருவறை நுழைவுப் போராட்ட வழக்கில் தீர்ப்பு வந்தபோது அதையும் முரசொலியில் பதிவு செய்தார். அதே போல ம.க.இ.க வின் தமிழ் மக்கள் இசைவிழாவை ஒட்டி, தமிழிசை மரபு பற்றியும் நக்கீரனில் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.
இவை எதுவும் “எழுதுங்கள்” என்று கேட்டுக் கொண்டதற்காக எழுதப்பட்டவை அல்ல, அவர் தானாகவே சொந்த ஈடுபாட்டின் பேரில் எழுதியவை. பார்ப்பனிய எதிர்ப்பை தி.மு.கவே கைவிட்ட நிலையில், ஒரு நக்சல் இயக்கம் அதனை மக்கள் திரள் இயக்கமாக கொண்டு செல்வது குறித்து அவருக்கு உண்மையிலேயே மகிழ்ச்சிதான். புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம் இதழ்களையும் தொகுப்பாக்கி வைத்திருந்தார். ம.க.இ.கவின் பாடல் ஒலிப்பேழைகளை பலமுறை அவருக்கு அளித்திருக்கிறேன். அதை வாங்கி பலருக்கும் உற்சாகத்துடன் அறிமுகம் செய்தார். ஒவ்வொரு முறையும் அதற்கான பணத்தை வேண்டாமென்றாலும் “இலவசமாவா கட்சி நடத்துரீங்க” என்று வற்புறுத்தி அளிப்பார். பத்திரிகைகளையும் சில பிரதிகள் வாங்கிக் கொண்டு மறவாமல் காசு கொடுப்பார்.
அவரைப் பார்க்க பிரபலங்கள் வரும் போது, நான் சற்றுத் தயக்கத்துடன் விடைபெறுவதாக சொன்னாலும், “பரவாயில்லை இருங்கள்” என்று அமர்த்துவார், அறிமுகப் படுத்துவார். ம.க.இ.க என்று சொன்னவுடன், கொஞ்சம் கோபமாகவும், கொஞ்சம் அசட்டுத்தனமாகவும் அவர்கள் ஏதாவது பேசினால், உடனே முன்னெச்செரிக்கையாக தலையிட்டு நிறுத்துவார். பொதுவுடமை கொள்கையில் தீவிரம் கொண்ட அதே நேரம் துடுக்காகப் பேசுகின்ற அவசரக்கார இளைஞனாகவே என்னை அவர் கருதியிருந்தார்.
சிலநேரம் அவர் பேசும் விசயங்கள் மூலம் நான் வாழ்ந்திராத திராவிட இயக்கத்தின் நாட்களை அனுபவித்திருக்கிறேன். அவற்றையெல்லாம் குறிப்புகளாகக் கூட எழுதி வைக்கவில்லையே என்று இப்போது வருந்துகிறேன். அந்தக்கால பாய்ஸ் கம்பெனி நாடகங்களின் திரைச்சீலைக்காக இந்து மத தெய்வங்கள் உருவங்களாக வரையப்பட்டு பின்னர் அவை சிவகாசி காலெண்டராக மாறி, பின்னர் நாம் காணும் இந்து மத தெய்வங்களாக கண்ணாடி பிரேமுக்குள் நுழைந்த கதையை அவர் விவரித்தது நினைவுக்கு வருகிறது. அவர் பேச ஆரம்பித்தால் அப்படியே நாம் அவரது நினைவுகளைப் பின்தொடர்ந்து திராவிட இயக்கத்தின் வரலாற்றுக் காலத்துக்குள் சென்று விடுவோம்.
பிறப்பால் அவர் ஒரு பார்ப்பனர் என்பது கூட பலருக்கு அதிர்ச்சியாக இருக்கும். ஆனால் அதன் சுவடு கூட தெரியாமல் உண்மையாக வாழ்ந்த சுயமரியாதை இயக்கத்தின் அறிவாளி அவர். அவரது எழுத்துக்களை நக்கீரன் பதிப்பகம் பல நூல்களாக வெளியிட்டிருக்கிறது. அவரது தொடர் நக்கீரனில் வாரம் இருமுறை வருவது நின்று போய் ஒரு முறை என்று ஆனது. ஏனென்று கேட்ட போது படிப்பவர்களின் வரவேற்பு இன்மை என்று அவர் மிகவும் எதார்த்தமாக குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது.
சின்னக்குத்தூசியை பார்க்க வருபவர்கள் அனைவரும் “முன்னொரு காலத்தில் நல்ல அரசியல் இருந்தது” என்பன போன்ற மலரும் நினைவுகளையே பகிர்ந்து கொண்டார்கள். ஆனால் நான் அவருடன் தீவிரமாக விவாதம் செய்திருக்கிறேன். பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்தது வரையிலான பல விசயங்களில் தி.மு.க சந்தர்ப்பவாத, பிழைப்புவாதக் கட்சியாக சீரழிந்ததை அவருடன் பேசியிருக்கிறேன். பேசி பலனில்லை என்றபோது நிறுத்தியிருக்கிறேன்.
அந்த விவாதங்களில் சின்னக்குத்தூசி தெரிவித்த இறுதிக் கருத்து என்னவென்றால், ” தி.மு.க போன்ற கட்சிகள் மக்கள் திரள் அரசியலில்(தேர்தல்) இருப்பதால் எந்த விசயத்தையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அவசரம் கருதியோ, தூய கொள்கை காரணமாகவோ பேசிவிட முடியாது. மக்களுக்கு பொறுப்பான கட்சி என்பதால் சில விசயங்களில் நீக்கு போக்காகத்தான் இருக்க முடியும். அதே நேரம் ம.க.இ.க போன்ற இயக்கங்கள் மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களா, இல்லையா என்று கவலைப்படுவதில்லை (தேர்தல் புறக்கணிப்பு). எனவே சமரசமில்லாமல் தங்களது கொள்கைகளை பேசிக் கொண்டிருக்கிறார்கள். மாஸ் பொலிட்டிக்ஸ் என்று போனால் தி.மு.க மாதிரி தான் இயங்க முடியும்.” இதுதான் அவர் கருத்து.
இந்தக் கருத்து சின்னக்குத்தூசியின் கருத்து மட்டுமல்ல, போலிக் கம்யூனிஸ்டுகள், தலித் இயக்கத் தலைவர்கள் பலரும் தெரிவிக்கும் ஒன்றுதான். முக்கியமாக சந்தர்ப்பவாத அரசியல் அனைத்தும் இத்தகைய ‘கொள்கை’ விளக்கத்தில் முடிவதை பலமுறை பார்த்திருக்கிறேன்.
சின்னக்குத்தூசியிடம் இந்த கருத்தை குறிப்பாகவே விவாதித்திருக்கிறேன். “இந்துமதவெறி என்ற பதத்தைக்கூட தி.மு.க பயன்படுத்தாதற்கு காரணம் தேர்தலில் ‘இந்துக்கள்’ ஓட்டு போய்விடும் என்பது மட்டுமல்ல, இந்து வெறி தேவர் வெறி என்று மதம் சாதியின் பெயர் குறிப்பிட்டு பேசினால் திமுகவுக்கு உள்ளேயே பிரச்சினை ஏற்படும். மக்கள் மத்தியில் பிரச்சினையாகும் என்பது அடுத்த விசயம்தான். இந்துமதவெறி பாசிசம் குறித்த ம.க.இ.க வின் பிரச்சாரம் ‘இந்துக்களிடம்’ தான் செய்யப்படுகிறது. அதற்கு ‘இந்துக்கள்’ தான் ஆதரவும் நிதியும் அளிக்கின்றனர். மாஸ் பாலிடிக்ஸ் என்ற பெயரில் தமது சொந்த சந்தர்ப்பவாதத்துக்கு மக்களைப் பொறுப்பாக்க கூடாது” என்று விவாதித்திருக்கிறேன்.
சின்னக்குத்தூசி இதையெல்லாம் புரிந்து கொள்ள முடியாதவரல்ல. ஆனால் அப்படிப் புரிந்து கொள்ள விடாமல் திமுக பாசத்தையும் விஞ்சிய ஒரு கலைஞர் பாசம் அவர் கண்ணை மறைத்தது. தி.மு.கவின் சந்தர்ப்பவாதங்களுக்கெல்லாம் தான் சப்பைக்கட்டுவது, நடுநிலையாளர்களிடம் கூட வெறுப்புணர்வை தோற்றுவிக்கிறது என்று தெரிந்த போதிலும், அவரால் அதிலிருந்து விடுபட முடியவில்லை.
திராவிட இயக்கத்திலும் சரி கம்யூனிஸ்டு இயக்கத்திலும் சரி, இலட்சியத்தின் பால் மதிப்பு கொண்ட முதியவர்கள் சிலர் இருக்கின்றார்கள். தம்மளவில் நேர்மையாக வாழக்கூடிய அவர்கள், “கல்லானாலும் புல்லானாலும் இந்தக் கட்சிதான்” என்று ஒரு வகை கற்பு நிலையைப் பேணுகிறார்கள். தமது இலட்சியத்தில் கொண்டிருக்கும் பற்றுறுதி குறித்த மனநிறைவு மட்டுமே இவர்களது வாழ்க்கைக்கு ஒரு வகையில் அர்த்தம் தருகிறது. தனது கட்சியும் அதன் தலைவரும் கண் முன்னே சீரழியும் காட்சி அந்த அர்த்தத்தை அரித்துத் தின்கிறது.
திமுக வின் சமீபத்திய தேர்தல் தோல்வி கருணாநிதிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மட்டுமல்ல, சின்னக்குத்தூசிக்கும் அது ஒரு தனிப்பட்ட துயரமாகவே இருந்திருக்கும். கருணாநிதி குடும்பத்தினரின் துயரத்திற்கு “பொருளாயத” அடிப்படை உண்டு. சின்னக்குத்தூசியின் துயரத்துக்கு கருத்தியலைத் தவிர வேறு எந்த அடிப்படையும் கிடையாது.
சின்னக்குத்தூசியின் மறைவு நம்மிடம் ஏற்படுத்தும் துயரமும் அத்தகையதுதான். பார்ப்பனிய எதிர்ப்பு, சுயமரியாதை உணர்வு, பகுத்தறிவு என்பன போன்ற நேர்மறை அம்சங்கள் திராவிட இயக்கத்திடமிருந்து ஏற்கெனவே விடைபெற்று விட்ட நிலையில், சின்னக்குத்தூசியும் விடைபெற்றுக் கொண்டுவிட்டார்.
அவரை இழந்ததால் வாடுவதற்கு அவருக்கு ஒரு குடும்பம் இல்லை. அவரது இழப்புக்காக வாடும் நிலையில் திமுகவும் இல்லை. நாம் வாடுகிறோம். அவ்வாறு உண்மையில் வாடுபவர்களுடன் நமது துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறோம்.
________________________________
வினவுக்கு நன்கொடை தாருங்கள்
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- இன்ட்லியில் வினவை தொடர
- கூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க
- உங்கள் கேள்விகள் இங்கே…
தொடர்புடைய பதிவுகள்:
கட்டுரையில் நான் நான் என்று வருகிறதே… கட்டுரையாளர் பெயர் இல்லையே….
நல்ல பதிவு.
திரு சின்னக்குத்தூசி மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
தி.க, தி.மு.க மற்றும் இடதுசாரி போன்ற முற்போக்கு இயக்கங்களிடம் ஈடுபட்ட பலரும் அறிந்தப் பிறப்பால் பார்ப்பனரானப் பலர் அவ் இயக்கங்களுக்கு உண்மையான விசுவாசத்துடன் இருந்ததும் கவனிக்கத்தக்கது. சின்னக்குத்தூசியாரை நானும் சிறிதளவு அறிவேன். நேரிலும் பலமுறை சந்தித்து பேசியிருக்கிறேன். கேள்விகள் பல கேட்டிருக்கிறேன். அவர் பிறருடன் விவாதிக்கும் போது கூர்ந்து கவனித்திருக்கிறேன். பல பழைய விவரங்களை அவர் தொகுத்து வெளியிட்டிருந்தால் மிகவும் பயன்பட்டிருக்கும்.
முக்கியமாக திரு.சம்பத் அவர்களுடன் தனிக் கட்சி கண்டிருந்த அந்த நாட்களை நூல் வடிவில் அவர் எழுதியிருந்தால் (எழுதினாரா எனத் தெரியவில்லை) இப்போது பயன்படக்கூடும். கொள்கை அரசியல் போய் கொள்ளை அரசியல் வந்தது காலத்தின் கட்டாயமா அல்லது தனி நபர் கட்டளையா என்பது ஏதோ திராவிட இயக்கங்களுக்கு மட்டுமின்றி காங்கிரஸ் பேரியக்கத்திற்கும் பொருந்தும். அவர் எம்.ஜி.ஆரை குறை கூறி (கொள்கை ரீதியாகத் தவிர) வந்தவரல்ல. அலை ஓசை இதழை எம்.ஜிஆரின் உதவினாலேயே சிக்கலிலிருந்து மீட்டெடுத்து விற்க முடிந்தது என்பதை அவர் சொல்லித்தான் நான் அறிந்தேன்.
திராவிட இயக்கத் தலைவர்களைப் பற்றியும் ஓர் கதை சொல்லுவார். மொந்தம் பழக்கதை. அதை அவர் எல்லோரிடமும் கூறியிருக்கலாம். திரு.சம்பத் சிறிது காலம் உயிரோடு இருந்திருந்தால் இவர் போன்றவர்கள் நல்ல நிலையிலிருந்திருக்கலாமோ? தெரியவில்லை. அது பற்றி அவரிடம் கேட்பதற்கு எனக்கு கூச்சமிருந்தது.
கருணாநிதியை ஆறாண்டுகள் சந்திக்காமலிருந்தார் என்பதும் நள்ளிரவு கைதிற்குப் பிறகே மீண்டும் சந்தித்தார் என்பதையும் அவர் நேரிடையாகவே சொல்லியிருக்கிறார். அதன் தொடர்ச்சிதான் நேரில் சென்று அஞ்சலி செலுத்த வைத்திருக்கிறது போலும்!
சின்னக்குத்தூசியார் போன்று பொருளீட்டுதலுக்கு முக்கியத்துவம் கொடுக்காத பலர் இன்றும் கொள்கைக்காக வாழ்ந்து வருவதே அவர்கள் சார்ந்துள்ள இயக்கங்களுக்கு அற வலிமை சேர்க்கிறதென்றால் மிகையில்லை. அவர் போன்று முழுமையாக இல்லாவிட்டாலும் காலத்திற்கேற்றபடி எளிமையாகவும் தன்னைச் சார்ந்தோரை வறுமையில் விடாமலும் சமன் செய்து வாழும் பலர் கொள்கைப் பிடிப்புடன் உள்ளனர் என்பதும் உண்மைதான்.
//பிறப்பால் அவர் ஒரு பார்ப்பனர் என்பது கூட பலருக்கு அதிர்ச்சியாக இருக்கும். ஆனால் அதன் சுவடு கூட தெரியாமல் உண்மையாக வாழ்ந்த சுயமரியாதை இயக்கத்தின் அறிவாளி அவர். அவரது எழுத்துக்களை நக்கீரன் பதிப்பகம் பல நூல்களாக வெளியிட்டிருக்கிறது. அவரது தொடர் நக்கீரனில் வாரம் இருமுறை வருவது நின்று போய் ஒரு முறை என்று ஆனத//. திராவிடத்தை ஏற்றுக்கொண்டவர்களின் பிராமணர்கள் இருக்க முடிகிறது. ஆனால் ஒரு சக்கிலியன் இருக்க முடிவதில்லை; ஏனெனனில் அவர்களுக்கு மேலே இருப்பதாகக்காட்டிக்கொள்ளும் பள்ளர்களும் பறையர்களும் அதை அனுமதிப்பதில்லை.அட்டவணை சாதியல் 76 எண்ணிக்கையில் இருந்தாலும் கூட மலம் அள்ளுவதற்காகப்பணிக்கப்பட்டவர்கள்போனற ஒரு பொதுப்பார்வை( பொதுப்புத்தி என்றும் சொல்லலாம்) இருக்கிறது என்பது தான் தமிழகத்தின் மிகப்பெரிய அவலம்
பார்ப்பனர்களைப் போன்று சக்கிலியர்கள் வந்தேறிகள் அவர்கள் இன்று தமிழர்கள் என்று கிளைம் பண்ணமுடியாது. தமிழர்களான பறையர்களும் பள்ளர்களும் அனுமதிப்பதில்லை என்று எந்த தரவின் அடிப்படையில் கூறுகிறீர்கள்? இவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு தருவது எந்த அடிப்படையில் நியாயம்?கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.பொது இட ஒதுக்கீட்டில் அவர்களுக்கும் இடம் உள்ள போது அவர்கள் முன்னேறாதற்கு பள்ளர்களும் பறையர்களும் என்ன செய்ய முடியும்? தமிழனின் பெருந்தன்மை எனும் இளிச்சவாயத்தனத்தை இனிமேலும் வந்தேறிகள் பயன்படுத்திக் கொண்டு தமிழர்களுக்கு எதிராக செயல்பட அனுமதிக்க முடியாது
எழில்,
இந்தியாவில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் அனைவருக்கும் போதுமானதாக இல்லை என்பதால் இருக்கும் இடங்களை நியாயப்படி பகிர்ந்து கொள்வதற்குத்தான் இட ஒதுக்கீடு அமுலில் உள்ளது.
தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு எப்படி உரிமையானதோ அதே போன்றுதான் அருந்ததியருக்கு வழங்கப்படும் உள் ஒதுக்கீடும் அவர்களுக்கு உரிமையானது.முன்னேறிய வகுப்பினருடன் போட்டியிட்டு வாய்ப்புகளை பெற முடியாது என்பதற்காக தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது நியாயம் எனும்போது தாழ்த்தப்பட்டோரில் ஒரு பிரிவினர் மற்ற பிரிவினருடன் போட்டியிட்டு வாய்ப்புகளை பெற முடியாதபோது அவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது மட்டும் எப்படி அநியாயமாகும்.
மற்றபடி அருந்ததியர்கள் வந்தேறிகள் அதனால் தமிழர்கள் அல்ல என்ற உங்கள் கூற்று ஏற்கத்தக்கதல்ல.அவர்கள் பன்னெடுங்காலம் இந்த மண்ணிற்காக உழைத்து வளம் சேர்த்தவர்கள்.பிறரை சுரண்டியும்,ஒடுக்கியும் அநீதி இழைத்தவர்கள் அல்லர்.இந்த மண்ணில் உங்களுக்கும் எனக்கும் என்ன உரிமை உள்ளதோ அதே உரிமை அருந்ததி இன மக்களுக்கும் உண்டு.
//தமது இலட்சியத்தில் கொண்டிருக்கும் பற்றுறுதி குறித்த மனநிறைவு மட்டுமே இவர்களது வாழ்க்கைக்கு ஒரு வகையில் அர்த்தம் தருகிறது. தனது கட்சியும் அதன் தலைவரும் கண் முன்னே சீரழியும் காட்சி அந்த அர்த்தத்தை அரித்துத் தின்கிறது.//
//கருணாநிதி குடும்பத்தினரின் துயரத்திற்கு “பொருளாயத” அடிப்படை உண்டு. சின்னக்குத்தூசியின் துயரத்துக்கு கருத்தியலைத் தவிர வேறு எந்த அடிப்படையும் கிடையாது.//
ஆழ்ந்த வரிகள்! இவரின் வாழ்க்கையின் மூலம் ‘நாம் என்ன செய்ய வேண்டும்; என்ன செய்யக் கூடாது’ என்பதை தெளிவாக எடுத்தியம்புகிறது.
குத்தூசியின் மறைவு திராவிட இயக்கத்திற்கு ஒரு பின்ன்டைவு !
சேற்றில் முளைத்த செந்தாமரைப் போல கருனாவின் திமுகவில் அவர் வாழ்ந்தார்.
ஆதவன்
//தி.மு.க விற்குத் தேவைப்படாத சுயமரியாதை மறைந்தது!//
உண்மையான வரிகள்!
//அவரை இழந்ததால் வாடுவதற்கு அவருக்கு ஒரு குடும்பம் இல்லை. அவரது இழப்புக்காக வாடும் நிலையில் திமுகவும் இல்லை. நாம் வாடுகிறோம். அவ்வாறு உண்மையில் வாடுபவர்களுடன் நமது துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறோம்.//
சின்னக்குத்தூசி அவர்களின் மறைவு அறிந்தவுடன் மனதில் ஒருவித கணத்தை உணருகிறேன்.
சென்னையில் பத்திரிகையாளனாக வாழவந்தபோது திருவல்லிக்கேணியில் குடியேறினேன்.
என் அறைக்கு அருகிலிருந்த ஒரு கடையில் சின்னக்குத்தூசி அவர்களை பலமுறை பார்த்திருக்கிறேன்.
ஏனோ எனக்கு அவரிடம் பேச வேண்டும் என்று தோன்றியதே இல்லை…!
ஆனால் வினவுப் பதிவை படித்தவுடன் பேசியிருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது..!
வருந்தத்தக்க செய்தி தோழர். தங்கள் பதிவின் வாயிலாக, சின்னக் குத்தூசியை நெருக்கமாக அறிமுகம் செய்து கொள்ளவும், அவரைப் போன்ற ‘விசுவாசிகளை’ புரிந்து கொள்ளவும் முடிகிறது. அழுத்தமான பதிவு.
சின்னக்குத்தூசி அவர்கள் உண்மையை மனதில் பட்டதை நேரடியாகவும் எளிமையாகும் எழுதிவந்த நேர்மையான எழுத்தாளர்.கருணாநிதியிலிருந்து நக்கீரன் கோபால் வரை அவரை அவருடைய எழுத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திகொண்டார்கள்.ஜெயகாந்தனை கவுரவித்த கருணாநிதி, இவரை அந்த அளவிற்கு கவுரவிக்காதது அரசியலே.
நேற்று அவருடைய இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டேன். தி.க., தி.மு.க., பொதுவுடைமை கட்சிகாரர்கள் பலரையும், பல பத்திரிக்கைகாரர்களையும் பார்க்க முடிந்தது.
அவர் தனது உடலை அரசு மருத்துவமனைக்கு ஒப்படைக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார். ஒரு வருட அளவில் மருத்துவமனையில் இருந்ததால், உடல் மோசமான நிலையில் ஒப்படைக்க முடியாத நிலை. ஆகையால், எரியூட்டப்பட்டார்.
2000ல் பத்திரிக்கையில் வேலை தேடி அலைந்து கொண்டிருந்த காலத்தில், சில நாட்கள் அவர் அறைக்கு போயிருக்கிறேன். பல பத்திரிக்கையாளர்களும், பதிப்பாசிரியர்களும் நீங்கள் சொன்னது போல வரிசையாக வந்து அந்த சின்ன அறையில் வந்து பேசிக்கொண்டிருப்பார்கள்.
அவருடைய பேச்சில் பல வரலாற்று செய்திகளும் வந்து போகும். பல சம்பவங்கள் புதிதாகவும், ஆர்வமூட்டுபவையாக இருக்கும்.
அப்பொழுதெல்லாம், மண்டையில் ஓடிக்கொண்டிருக்கும் விசயம். கொள்கையளவில் தி.மு.க இவ்வளவு சீரழிந்த பிறகும், இவரை போன்றவர்களால் எப்படி திமுகவையும், கருணாநிதியையும் ஆதரிக்க முடிகிறது என!
நல்ல பதிவு. நல்ல தலைப்பு.
//அவரை இழந்ததால் வாடுவதற்கு அவருக்கு ஒரு குடும்பம் இல்லை. அவரது இழப்புக்காக வாடும் நிலையில் திமுகவும் இல்லை. நாம் வாடுகிறோம். அவ்வாறு உண்மையில் வாடுபவர்களுடன் நமது துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறோம்.//
அஞ்சலி செலுத்திகிறோம்.
தலைப்பை தவிர்த்து பார்த்தால் ஒரு அருமையான கட்டுரை. வினவு குழுமத்துக்கு என் பாராட்டுகள். அவரிடம் நான் பலமுறை நான் கேட்ட வாசகம் ” எழுது, ஆனால் விரயமாக எழுததே! யாரைவாவது திருப்திப்படுத்தட்டும்”:-(
சிறந்த பதிவு. சின்னக்குத்தூசிசை நான் பார்த்ததில்லை என்றாலும் அவரோடு ஏதோ நானே உறவாடியதைப் போன்ற மனநிலையை இக்கட்டுரை தோற்றுவிக்கிறது. கருத்தால் ஒன்றுபட்டுள்ள போது ஒருவரை சந்தித்திருக்கவில்லை என்றாலும் அவரது மறைவு ஒருவித சோகத்தைத் தானானகவே கொண்டு வந்துவிடுகிறது. சின்னக்குத்தூசி அவர்களின் மரணம் என்னுள் ஏற்படுத்திய உணர்வு இதுதான்.
பிறப்பால் யாராக இருந்தாலும் நடப்பால் ஒருவர் நடந்து கொள்வதைப் பொருத்தே அவர் மீதான மதிப்பை ஏற்படுத்துகிறது. பார்ப்பனியம் பிறவிக் குணம் அல்ல என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் சின்னக்குத்தூசி அவர்கள். அவரது மரணம் ஈடு செய்ய முடியாத இழப்புதான். ஈடு செய்ய வேண்டிய கடமையும் பொருப்பும் இப்போது நம்மீது சுமத்தப்பட்டிருக்கிறது.
ஆருமையான பதிவு.
திரு சின்னக்குத்தூசி மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது எழுத்துக்களை ரசித்தவன்.
Dear vinavu,
I am deeply saddened by the demise of the great rationalist. By Vinavu only I came to know about the news.
Regards
Ramesh.S
/அவரை இழந்ததால் வாடுவதற்கு அவருக்கு ஒரு குடும்பம் இல்லை. அவரது இழப்புக்காக வாடும் நிலையில் திமுகவும் இல்லை. நாம் வாடுகிறோம். அவ்வாறு உண்மையில் வாடுபவர்களுடன் நமது துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறோம்…/ சின்னக்குத்தூசி மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
________________________________
Chinna kuththusi and myself were close friends during 1968 to 1975.we were lived in Thiruvarur at that time. He was Congres minded and myself a Communist.Every day we used to discuss on so many burning issues.He followed E.V.K.S.Sampath and have a close contact with him. But he never bothered about Sampath”s Thamizh Nationalism.Without heving any faith in idiolegy, he strongly advocated the parties, Congress and D.M.K. However, his life was gentle ,his behavier with his friends were admireble and his conversetional abilities were laudable.He was a ferocious reader and his memary power was wonderfull.Very very kind man.No body questioned his personal life. It is great.The authour of this article is perfectly assessed Chinna Kuththhsi and I agree with it.
நானும் வினவுடன் சேர்நது அவரின் மறைவுக்கு என் துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறன்.
சின்னக்குத்தூசியின் கட்டுரைகளை இளமைப்பருவம் முதலே விரும்பி படித்திருக்கிறேன்.வாதங்களை அழகுற ஒரு ஆய்வுக்கட்டுரைக்குரிய நேர்த்தியுடன் அவர் எடுத்து வைக்கும் பாங்கு மறக்க முடியாதது.அவரது மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது.
\\ கருணாநிதியை அடிக்கடி சந்திக்க கூடியவர். எனினும் அந்த செல்வாக்கை தனது சொந்த நலனுக்கென்று பயன்படுத்திக் கொள்ளாதவர்.//
இந்த வரிகளை படிக்கும்போது இப்படிப்பட்ட சேற்றில் பூத்துநின்ற செந்தாமரை உதிர்ந்து விட்டதே என மேலும் வருத்தமளிக்கிறது.
சின்ன குத்தூசி அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது கட்டுரைகளை நக்கீரனில் படித்து உள்ளேன். பொது உடைமை சமுதாயம் காண விளைபவர்கள் அவரை போற்றுவோம்
வினவு,
தன்னிலை ஒருமையில் எழுதப்பட்ட இக்கட்டுரையின் ஆசிரியரின் பெயரினை நாங்கள் அறிந்து கொள்ளலாமா?
நன்றி
Thanks Vinavu… for giving nice article about nice person.
திராவிட இயக்கத்திற்கு பெரிதும் பயன்பட்ட சின்னக்குத்தூசியின் மறைவு குறித்த செய்தி போதிய முக்கியத்துவம் அளிக்கப்படாமல் சன் டி.வி.யில் ஒளிபரப்பானது. கருணாநிதி ஒரு முறை இந்தியா டுடே பேட்டியில் தனது நெருங்கிய நண்பன் யார் ? என்ற கேள்விக்கு ‘சோ’ என்று பதிலளித்தார். கருணாநிதியின் அனைத்து குடும்ப நிகழ்ச்சிகளிலும் இந்த பார்ப்பன பண்டாரம் ஒரு முக்கிய விருந்தினரும் கூட. திராவிட இயக்கத்தின் தேவையை தொடர்ந்து பத்திரிகைகளில் எழுதி வந்த சின்னக்குத்தூசியார் குறித்து கருணாநிதி ஏதேனும் பேசியுள்ளாரா ? என்று தெரியவில்லை. ஜெயலலிதா தான் பதவியேற்றவுடன் அளித்த virunthil ஜெ.வின் வலது பக்கத்தில் அமர்ந்து விருந்து உண்டார் ‘சோ’. கருணாநிதியோ சின்னக்குத்தூசியை பொருட்படுத்தியதில்லை. விடுதலை சிறுத்தை ரவிக்குமார் பெரியார் மீது அவதூறு பரப்பி வந்த போது அதற்கு மறுப்பு தெரிவித்து எழுதியவர் சின்னக்குத்தூசி. கருணாநிதி இதை அறிந்திருக்க வாய்ப்பில்லை. சின்னக்குத்தூசியாரின் பணியை நாம் உணரும் அளவிற்கு கூட, அவை யாருக்காக உழைத்தாரோ அவர்கள் அறியாதிருப்பது என்பது எவ்வளவு துயரம்.
நாத்திகம் இராமசாமி, சின்னக்குத்தூசி போன்ற உண்மையான திராவிட இயக்க கொள்கையாளர்கள் மீது மதிப்பு கொண்டு வினவு கட்டுரை வெளியிடுவது சிறப்பு.
இவர் மறைவிற்கு வருந்துகிறேன். இவர் கடைசி வரை நடுநிலையாக இருந்தார் என்று சொல்ல முடியவில்லை. தி.மு.க பா ச க வுடன் கூட்டணி சேர்ந்ததை கூட நியாயப் படுத்தி நக்கீரனில் எழுதியவர் தி மு க என்ற கொள்ளைக் கூட்டத்தின் ஒரு முகமூடி. உங்களது போராட்டங்களுக்கு அவர் துணையாக இருந்தார் என்பதற்கு காட்டும் ஒரு நன்றிக் கடன் என்று தான் இந்த கட்டுரையை கருதலாம். வேறு சிறப்பு எதுவும் இல்லை.வினவு கோட்பாட்டு ரீதியாக தி.மு.க வுடன் கூட சமரசம் செய்திருக்கிறது என்பதாகக் கொள்ளலாம்
நல்ல பதிவு.
திரு சின்னக்குத்தூசி மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
சின்ன வயதில் திராவிட இயக்க நூல்களை விரும்பி படித்துக் கொண்டிருந்த காலத்தில் சின்னக்குத்தூசியாரின் கட்டுரைகளை படித்திருக்கிறேன், சொல்லப்போனால் அவருடைய கட்டுரைகளின் ரசிகனாகவே இருந்தேன், சின்னக்குத்தூசியின் பெயரை ஆராயும்போதுதான் குத்தூசியாரைக் கண்டேன்,குத்தூசி குருசாமி அவர்களின் மீதான ஈர்ப்பின் காரணமாக தனது பெயரை சின்னக்குத்தூசி என்று வைத்துக்கொண்டார், ஒரு கட்டத்தில் அவர் பிறப்பால் பார்ப்பனர் என தெரியவந்தபோது அவர் மீதான் மரியாதை கூடியது,சுரண்டல் சாதியாக பிறந்த பார்ப்பனராகிய ஒருவர் அந்த போலி உணர்வுகளையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு உண்மையை நாடி தன் வாழ்க்கையை சிறப்பாக மாற்றிக்கொண்டார் என்பது மிக மதிப்புக்குரியதாகும். இயற்கை விதி இந்த உலகின் மனித குலத்தை, உண்மையை நேசித்த எத்தனையோ அற்புதமான மனிதர்களை இழந்து விடுவது தவிர்க்க இயலாதது.
ஆனாலும் அவர்கள் விட்டு சென்ற பணியை நாம் தொடரவேண்டும். தொடருவோம் !
சின்னக்குத்தூசி: தி.மு.க விற்குத் தேவைப்படாத சுயமரியாதை மறைந்தது!
இப்போது உள்ள கட்சிகளில் சிறிதேனும் கொள்கை இருபதாக எனக்கு தெரிவது தி மு க.மட்டுமே. சமுக அளவில் செயல் படும்போது நடைமுறை சமரசம் தேவையே. அடிப்படை திராவிட கொள்கைகள், உணர்வுகள் மாறாமல் இருந்தால் போதுமானது. அதிதீவிரமான கொள்கை பிடிப்புகள் வீட்டிற்குள்ளேயே நிராகரிக்கப்படும். பிறகு நாட்டிலே தூக்கி எறியப்படும். அகிம்சை பேசிக்கொண்டு இங்கு தேர்தல் போர்களத்தில் நிற்க முடியாது. தி மு க மட்டும் அப்படி இருக்க என்ன நியாயம். சின்னகுதுச்சியார் ஆழ்ந்து சிந்திந்து சரியான இடத்திலே தான் இருந்தார் என்பது என் எண்ணம்.
வேறு எங்கு சென்று இருக்க முடியும்?
(Reply to the comment No.28) A honest man in a dishonest party.A decent man in an indecent party.A moral man in an immoral party.A good man in a looters party.What does it mean? To whome he served?True, he was a prisioner of circumstences.Today,he is no more.We remember his deep kindness towards his friends.
“தீக்குளிப்பது தான் அடிப்படை திராவிட கொள்கையா ?????
“அண்ணா நூலகத்தை மருத்துவமனையாக்கினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி சூளுரை”
“தமிழர்களே தமிழர்களே- நீங்கள் என்னை கடலில் தூக்கிப் போட்டாலும் கட்டுமரமாக மிதப்பேன். அதில் நீங்கள் பயணம் செய்யலாம்” ஹிஹும்..ஹிஹும்..ஹிஹும்… 40,000 தமிழர் உயிரின் மதிப்பு less than (<) அண்ணா நூலகமா??????. நூலகம் செய்த புண்ணியம் கூட நாங்கள் செய்ய வில்லையா- தமிழ்க் கட்டுமரமே???
அம்மா தாயே, நீயாவது இந்த நாட்டுக்கு ஒரு நல்ல காரியம் செய்யக்கூடாதா?? ……..- By kakkoo ” 3/16/2012 8:01:00 AM.தினமணி
.
“ஊசி மூஞ்சு மூடா!!! எனக்கு கூடு கட்டத் தெரியாது- கூட்டை பிரிக்கத் தான் தெரியும். சிறுவர்களுக்கான இந்த நீதிக் கதையை பெரியவர்கள் படிக்காததாலும்/ அறியாததாலும் வந்த வினை??? ” அந்தோ தமிழகம்!!!
pl c link: http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Tamilnadu&artid=567503&SectionID=129&MainSectionID=
Indian Muslim and Christian are from hindu ancestors.
They were converted by “fear” or “poverty”or ‘currency”.
Because they could not have convered by seeing”god”.
Both two religion are ‘not indian origion’ and ‘imported
from foreign, with scope to divide india by spreading
religions.
No religion in the world, is scientifically proved and is
a myth only.