privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கசமச்சீர் கல்வி: 'மார்க்சிஸ்டு' களின் இரட்டைவேடம்!

சமச்சீர் கல்வி: ‘மார்க்சிஸ்டு’ களின் இரட்டைவேடம்!

-

மார்க்சிஸ்ட்டுகளின் இரட்டை வேடம்
அதான் 'ஏற்கனவே' சொல்லியாச்சே

மார்க்சிஸ்டு’கள் மக்களை ஏமாற்றுவதென்பது பழைய விசயம். தொழிலாளி வர்க்கத்துக்கு அது பழகிப்போன விசயம். ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து இன்று அம்மாவையே கடிக்கத் துணிந்து விட்டார்கள் மார்க்சிஸ்டுகள் என்பதுதான் புது விசயம்.

சென்ற 8.6.2011 தினமணியை எடுத்துப் பாருங்கள்.

சமச்சீர் கல்வி சட்டத்திருத்தம் என்ற பெயரில் அதனை ஒழிப்பதற்கு அம்மா கொண்டு வந்த மசோதாவை ஆதரித்து சட்டமன்றத்தில் பேசிய மார்க்சிஸ்டு கட்சி உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், “சமச்சீர் கல்வி குறித்து ஆராய்ந்த முத்துக்குமரன் குழு 110 க்கும் மேற்பட்ட பரிந்துரைகளை அளித்த்து. ஆனால் அதில 3,4 திருத்தங்களை ஏற்றுக்கொண்டு அரைகுறைக் கல்வியாக சமச்சீர் கல்வித்திட்டத்தை நிறைவேற்றினார்கள்… இந்தச் சூழ்நிலையில் சமச்சீர் கல்வித்திட்டத்துக்கான திருத்த மசோதாவை பேரவையில் கொண்டு வந்திருப்பது வரவேற்கத்தக்கது” என்று கூறி மசோதாவை ஆதரிக்கிறார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ ஆறுமுகம், “இந்த சட்டமுன்வடிவு சமூகநீதிக்கான சட்ட முன்வடிவாகும்” என்று கூறி மசோதாவை ஆதரிக்கிறார். (தினமணி, 8.6.2011 பக்கம் 9)

அதே 8 ஆம் தேதியன்று மார்க்சிஸ்டு கட்சியைச் சார்ந்த இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகிய அமைப்புகளின் சார்பில் “சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்த வலியுறுத்தி” சென்னை மெமோரியல் ஹால் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். (தினமணி பக்கம் 6)

அதன் பின் 10 ஆம் தேதியன்று மசோதாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்தது.

உடனே 11 ஆம் தேதியன்று மார்க்சிஸ்டு கட்சி செயலர் இராமகிருஷ்ணன் ஒரு அறிக்கை விடுகிறார்.

“சமச்சீர் கல்வியின் ஒரு அம்சமான பொதுப்பாடத்திட்டத்தை செயல்படுத்திக் கொண்டே கல்வித்தரத்தை உயர்த்துவதற்கும், பாடப்புத்தகத்தில் உள்ள குறைபாடுகளை சரி செய்வதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று மார்க்சிஸ்டு கட்சியும் ஏற்கனவே தமிழக அரசை வலியுறுத்தியிருந்தது. இதையே கல்வியாளர்களும் பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்துகின்றனர். எனவே, உயர்நீதிமன்ற தீர்ப்பை கருத்தில் கொண்டு இந்த கல்வியாண்டிலேயே சமச்சீர் கல்வி பொதுப்பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்டு கட்சி மாநில செயற்குழு வலியுறுத்துகிறது”

இது எப்படி இருக்கு? அதாவது பொதுப்பாடத்திட்டத்தை நிறுத்துவதற்கும், அச்சிட்ட நூல்களை முடக்குவதற்கும் எதிராக உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ள கருத்தைத்தான் மார்க்சிஸ்டு கட்சி ஏற்கெனவே வலியுறுத்தியிருந்ததாம். மார்க்சிஸ்டு கட்சி ஏற்கெனவே வலியுறுத்தி வரும் இந்தக் கருத்தைத்தான் பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்துகிறார்களாம்.

ஏற்கெனவே என்றால் எந்த ஏற்கெனவே? 11 ஆம் தேதிக்கு முன்னால் உள்ள “ஏற்கெனவே” என்பது 7 ஆம் தேதி. அதற்கும் முந்தைய “ஏற்கெனவே” என்பது திமுக ஆட்சிக்காலம்.

ஏற்கெனவே திமுக ஆட்சியின் போது சமச்சீர் கல்வி சட்டத்தை மார்க்சிஸ்டு கட்சி ஆதரித்தது உண்மை. இதுதான் “முதலாவது ஏற்கெனவே”.

இந்த மாதம் 7 ஆம் தேதியன்று சட்டமன்றத்தில் சமச்சீர் கல்வி ஒழிப்பு மசோதாவை “சமூக நீதிக்கான சட்டமுன்வடிவு” என்று கூறி ஆதரித்ததும் உண்மை. இது “இரண்டாவது ஏற்கெனவே”.

இதில் எந்த “ஏற்கெனவே” பற்றி குறிப்பிடுகிறது மார்க்சிஸ்டு கட்சி என்று நமக்குப் புரியவில்லை. ஆனால் வேறொரு விசயம் புரிகிறது. சமச்சீர் கல்வியை ஆதரிப்பவர்களும் சரி – எதிர்ப்பவர்களும் சரி, யாராயிருந்தாலும் மார்க்சிஸ்டு கட்சி “ஏற்கெனவே” வலியுறுத்திய கொள்கையைத்தான் பின்பற்றியாகவேண்டும்.

இராமகிருஷ்ணனின் கூற்றுப்படி, சமச்சீர் கல்வி சட்டத்தை கொண்டுவந்த கருணாநிதியாகட்டும், அதனை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்திருக்கும் புரட்சித்தலைவியாகட்டும், இரண்டு பேருமே மார்க்சிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு கொள்கை முடிவைத்தான் பின்பற்றியிருக்கிறார்கள்.

மாநில செயற்குழு தீர்மானம் நிறைவேற்றுவதற்கு ஓரிரு நாட்கள் முன்னதாக கருணாநிதியோ, ஜெயலலிதாவோ மேற்படி முடிவுகளை எடுத்திருக்கலாம். மார்க்சிஸ்டு கட்சியின் கொள்கை முடிவுகளை திருடி முன்தேதியிட்டு அறிவித்து விட்டார்கள் என்றுதான் இதனைப் புரிந்து கொள்ளவேண்டுமேயன்றி, நேற்று கருணாநிதிக்கும், இன்று ஜெயாவுக்கும் காவடி எடுப்பதாகப் புரிந்து கொள்ளக் கூடாது.

ஆகவே, “திமுக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்விச் சட்டதை ஆதரித்து அன்று மார்க்சிஸ்டு கட்சி எடுத்த முடிவும், பின்னர் 7 ஆம் தேதியன்று சமச்சீர் கல்வியை ஒழிக்க ஜெ அரசு கொண்டு வந்த மசோதாவை ஆதரித்து வாக்களித்த முடிவும், 10 ஆம் தேதி உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர் தற்போது எடுத்திருக்கும் முடிவும், நாளை உச்ச நீதிமன்றத்தீர்ப்புக்குப் பின் கட்சி எடுக்கவிருக்கும் முடிவும், மார்க்சிஸ்டு கட்சியின் மாநில செயற்குழுவில் நீண்ட நெடுங்காலத்துக்கு முன்னர் நிறைவேற்றப்பட்ட முடிவுகளே” என்பதை மார்க்சிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

இந்த முடிவுகள் எதையும் கருணாநிதி, ஜெயலலிதா அல்லது சிவபெருமான் உள்ளிட்ட யாரும் தோழர் இராமகிருஷ்ணனுக்கு மண்டபத்தில் வைத்து எழுதிக் கொடுக்கவில்லை என்பதையும் மாநில செயற்குழு அடிக்கோடிட்டு வலியுறுத்த விரும்புகிறது.

மேலும், “பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு” என்று கூறும் சிவபெருமானின் கவிதையும், “இல்லை” என்று கூறும் நக்கீரனின் தீர்ப்பும் இது தொடர்பாக மார்க்சிஸ்டு கட்சி ஏற்கெனவே நிறைவேற்றியிருக்கும் தீர்மானத்தையே வழிமொழிகின்றன என்பதையும் மார்க்சிஸ்டு கட்சியின் மாநில செயற்குழுவினர் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தித் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

டெய்ல் பீஸ்:

சட்டமன்றத்தில் மசோதாவை வரவேற்று விட்டு, வெளியே வந்து எதிர்ப்பதாகப் பேசும் மார்க்சிஸ்டுகளின் நாடகம் புரட்சித்தலைவிக்குப் புரியாமல் போனதெப்படி? இது பற்றி அம்மாவிடம் எடுத்துச்சொல்ல உளவுத்துறை தவறிவிட்டதா? கடமை தவறும் காவல்துறையை தினமணி கூட கவனிக்கவில்லையா?

புரட்சித்தலைவியின் ஆசி பெற்ற சுத்தி அரிவாள் சின்னத்தில் நின்று 9 சீட்டுகளை வென்று, இன்று அம்மாவின் முதுகிலேயே குத்தும் இந்த பச்சைத்துரோகத்தைப் பற்றி அன்பு சகோதரர் “தோழர் தா.பா புரட்சித்தலைவியிடம் உரிய முறையில் போட்டுக் கொடுத்தால், அடுத்த பொதுத்தேர்தலுக்கு அடுத்த தேர்தலில் மார்க்சிஸ்டுகளைக் காட்டிலும் ஒரு தொகுதியாவது அதிகம் வாங்கலாமே! தா.பா கவனிப்பாரா?

பின்குறிப்பு: சமச்சீர் கல்வி ஒழிப்பை சட்டசபையில் ஆதரித்து வாக்களித்திருக்கும் சி.பி.எம்மின் பச்சைத் துரோகம் குறித்து பதிவுலகில் இருக்கும்  சி.பி.எம் தோழர்கள் பதில் சொல்ல வேண்டும். தங்கள் கட்சியின் சந்தர்ப்பவாதத்தை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்.  செய்வார்களா?

_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்: