privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகதைசிறுகதை:மட்டப்பலகை!

சிறுகதை:மட்டப்பலகை!

-

“செந்தில், இன்னைக்கு முள்ளம்பன்றி ஓவர் சூடு. விஷ் பண்ணா வழக்கமான ஒரு பிளாஸ்டிக் ஸ்மைல் கூடக்காணோம். வேகமா ரூமுக்கு போயிருக்கு.. பாத்து இருந்துக்க.”

“என்னைக்குதாண்டா அவன் நார்மலா இருந்துருக்கான்? நேத்து கூட ரிசப்சனிஸ்ட குதறி எடுத்துட்டான். எந்தப்பக்கம் புடிச்சாலும் குத்திக் கொடையறாண்டா! சரியான பேரு… முள்ளம்பன்றின்னு யார்ரா வச்சது?’

“முன்னால உன் சீட்ல இருந்துட்டு விட்டா போரும்னு ஓடுனார்ல அந்த சம்பத் வெச்ச பேரு… சரி போய் சிஸ்டத்த ஆன் பண்ணு!’

“யோவ் எங்கய்யா ரமேஷ்?’ எக்சிகியூடிவ் சந்தானத்தின் குரல் அதட்டலாக விழ தூக்கிவாரிப் போட்ட மாதிரி கம்ப்யூட்டரில் மூழ்கியிருந்த ரகுபதி  “தோ, ஃபாக்ஸ் மெஷின்கிட்ட இருக்காரு!” என்று பதட்டத்துடன் எழுந்தான். இன்றைக்கு ரமேஷ் தொலைந்தான் என்று, மற்றவர்களின் கைகளும் கீபோர்டில் நடுங்கின.

“யெஸ் சார்!’ ரமேஷ் வணக்கத்துடன் வரவேற்க, ”என்னய்யா ஆளப் பாத்தவுடனே சீன் போடற.. நேத்து படிச்சுப்படிச்சு சொல்லிருக்கேன். அந்தக் கொட்டேசனை முடிச்சுட்டுப் போன்னு.. நீபாட்டும் மயிராட்டம் ஆறரைக்கெல்லாம் கிளம்பிட்ட.” வெடுக்கெனத் தலைக்கேறிய கோபத்துடன், மற்றவர்களையும் திரும்பிப் பார்த்துக் கொண்ட ரமேஷ், அவமானத்தால் மனம் குன்றி அதே வேகத்தில் மரத்துப் போனான்.

‘இல்ல சார்! ஒர்க்க முடிச்சுட்டேன் பைனலா பிரிண்ட் அவுட் எடுக்கறதுதான் பாக்கி” அவன் பேசி முடிப்பதற்குள், ”நோ எக்ஸ்பிளனேசன்.. டயத்துக்கு நீ எழுந்திருச்சுப் போக இது என்ன கவர்மெண்ட் ஆபீசா? அங்க கூட இப்ப ஆப்பு வெச்சுட்டான். பர்ஸ்ட் யூ ஸ்டிரிக்ட்லி பாலோ தி டிசிப்ளின்!” கட்டிவைத்து அடிப்பது போல இருந்தது குரல்.

“பாவி! தினம் எட்டுமணி வரைக்கும் உன் இழவ எடுத்துட்டுத் தான போறேன், நேத்து ஒரு ஒன்றரை மணிநேரம் முன்ன போனதுக்கு இவ்வளவு அவமரியாதையா! இது ஆபிசா இல்லை வதை முகாமா?’ எனப் பதிலுக்கு கத்த வேண்டும் போல இருந்தது. மனக்கண்ணில் தோன்றிய வீட்டு நிலைமைகளும், எட்டாயிரம் சம்பளமும் அவனது கோபத்தை இரத்தத்திலேயே வைத்துப் புதைத்தது.

அதோடு எக்சிகியூடிவ் விடுவதாயில்லை.. ரமேஷை சாக்கு வைத்து பொதுவாகப் பேச ஆரம்பித்து விட்டான், ‘திஸ் ஜாப் ஈஸ் நாட் கிரியேட்டட் பார் யூ! திஸ் ஆப்பர்ச்சுனிடி இஸ் கிவன் பார் அஸ், மைன்ட் இட் ஜென்டில்மேன்!’ கிரேக்க அடிமைகளிடம் அதன் எஜமானன் சாட்டையைச் சொடுக்கிப் பேசுவது போல இருந்தது அந்தச் சூழ்நிலை. எல்லோரும் ஒரு கணம் பீதியுடன் திரும்பிப் பார்த்தனர். எக்சிகியூடிவ் விரும்பியதும் அதைத்தான்.

‘ஜென்டில்மேன் எல்லோருக்குமே சொல்றேன்.. படாத பாடுபட்டு பத்துவருசத்துல கம்பெனியை வளர்த்திருக்கோம்.. கம்பெனியோட குரோத்துக்கு ஏத்த மாதிரி உங்க குவாலிட்டியும் இருக்கணும்.. தலைக்கு, உடம்புக்கு ஏத்தமாதிரி கைகளும் வளரணும் இல்லையா! கம்பெனி டார்கெட்டுக்கு ஏத்தமாதிரி உங்க வொர்க்கிங் கெபாசிட்டி இருக்கணும். உங்க சௌகரியத்துக்காக டோண்ட் டிஸ்டர்ப் அண்ட் டெஸ்ட்ராய் அவர் குரோத்.. புரிஞ்சுக்குங்க. சரியா அஞ்சு மணிக்கு மூட்டையக் கட்டிக்கிட்டு எழுந்திருச்சிரணும். தினம் லேட்டா வரணும்னு உங்க லேசி வொர்க்கிங் கல்ச்சருக்கு இங்க இடமில்லை! இதே மத்த ஆபீசா இருந்தா மூணுபேரை வச்சி வொர்க் லோடு தருவான்! இங்க பத்து பேரை வெச்சிருந்தும், யுவர் ஒர்க் ஈஸ் நாட் சேட்டிஸ்பாக்டரி! சும்மா கம்ப்யூட்டர், பிரிண்டர் மட்டும் புதுசா இருந்தா போதாது.. ப்ளீஸ் பில்டப் யுவர் பிரைன் நியூலி.. அண்டர்ஸ்டேண்ட்!’.

இமைப்பதைத் தவிர வேறு எந்த எதிர்வினையும் புரியாமல் எலக்ட்ரானிக் குருவிகளைப் போல அசையாமல் கேட்டுக் கொண்டனர் ஊழியர்கள்.

“சே! இப்படி ஒரு பிழைப்புத்தேவையா? என்று தனித்தனியாக மனதுக்குள் நொந்துகொண்டனர். ‘டூ யுவர்டு யூட்டி’ என்று போகும் போதும் ஓர் ஆணியைக் காதுக்குள் அறைந்து விட்டுசென்றான் எக்சிகியூடிவ்.

அவன் நகர்ந்து விட்டதை உறுதிசெய்து கொண்டு, மெல்ல முனக ஆரம்பித்தான் ரமேஷ். ‘என்ன மனுசன்யா இவன்! ரெண்டு நாளைக்கு முன்ன கூட எட்டு மணிக்கு வந்து ஒரு கொட்டேசனைக் கொடுத்து அடிக்கச் சொன்னான்.. மறுவார்த்தை இல்லாமல் செஞ்சு கொடுத்துட்டு, எட்டே முக்காலுக்குத்தான் கிளம்பினேன்.. வெரி  ஃபைன், வெரி ஃபைன்னு தட்டிக் கொடுத்துட்டு.. “ரமேஷ் ஏன் தெரியுமா உன்கிட்ட வந்து வேலையைக் கொடுக்கிறேன். நீ சின்சியரா செய்வ. ஒர்க்கும் நீட்டா இருக்கு வெரிகுட்னு’ சொல்லிட்டுப் போனாய்யா! இன்னிக்கு வந்து என்னமா பேசுறான் பாத்தியா.. ரொம்ப பயங்கரமான ஆளுப்பா!’

‘பின்ன, என்னதாம்பா நீ புரிஞ்சு வச்சிருக்க.. பெரிய்ய படிப்பெல்லாம் படிச்சுருக்கீங்க! இது கூடவா புரியல. எனக்குத் தெரியாது அந்த ஆளப் பத்தி…”பாவி! தினம் எட்டுமணி வரைக்கும் எத்தன வருஷமா இந்த ஆபிஸ்ல பியூனா குப்ப கொட்டறேன். எல்லாம் அப்படித்தாம்பா.. காரியம் ஆவணும்னா வயித்துப்புள்ள நழுவுற மாதிரி பேசுவான். காரியம் முடிஞ்சதுன்னு வெச்சுக்க, கொரங்குப் புடிதான்! நான்தான் நாலு எழுத்து படிக்காத ஆளு…இங்க வந்து மாட்டிக்கிட்டேன்னு பாத்தா! ஹூம்! படிச்சுவங்களுக்கும் இதே கதிதானா? நானாவது பத்து வார்த்தைக்கு ஒரு வார்த்தை எதுத்துப் பேசுவேன். எதுத்துக் கேட்டுக் கேட்டுதான், இப்ப நைட் லேட்டானா சாப்பாடு துட்டு தர்றானுவ.. இப்புடியே இருந்தா எதுவும் பேசாம தலைய குனிஞ்சுகினு கம்ப்யூட்டர் கேம்ஸ் ஆட வேண்டியது தான். அழுவுற புள்ளதான் பால் குடிக்கும். ஹூக்கும்!’ அலட்சியமாகச் சொல்லிவிட்டு நகர்ந்தார் பியூன்.

“பார்ரா! பியூனுக்குக் கூட நாம எளக்காரமாப் போயிட்டோம். என்னமா பேசிட்டுப் போறான் பாரு.. நாம கல்லுடைக்கிற மாதிரி கொத்தடிமை வேலையாட்டம் கீ போர்டை அடிக்கிறோம். அவன் என்னடான்னா கம்ப்யூட்டர் கேம்ஸ் ஆடறோம்னு நக்கல் பண்ணிட்டுபோறான், எல்லாம் நம்ம விதிடா’

“டோண்ட் வொர்ரி ரமேஷ், நாம வேற என்ன பண்ண முடியும்? எல்லார்கிட்டயும் போயி சொல்லிக்கிட்டு இருக்காத. எவனாவது போட்டு வேற குடுத்துருவான். மெல்ல வேற ஜாப் ஆப்பர்சுனிட்டிய தேடிக்கிட்டு இந்த நரகத்தவிட்டு ஓட வழி பாத்துக்க வேண்டியதுதான். பியூன் சொல்றதுலயும் தப்பில்ல! இப்படியே ஆத்திரத்த அடக்கி அடக்கி ஆறு வருஷம் வேலை பாத்தம்னு வெச்சுக்க! பி.பி. எகிறி மேலோகம் போக வேண்டியதுதான். நெட்ல வேற எடத்தப் பாப்போம்” அவர்களுக்குள் சமாதானம் தேடிக் கொண்டு, வேலையில் மூழ்கினார்கள்.

“என்னய்யா ஆபிசு இது, குறுக்குத்தடுப்பு வெய்யுன்னு வாயால சொல்லிட்டா போதுமா? சொன்ன சாமான்கள வாங்கித் தரல, எப்புடி வேலை செய்யறது? அதுக்குதான் கையில காச குடு நான் பாத்துக்குறேன்னேன்.. பாரு! கல்லு இருநூறு சொன்னா, நூத்தம்பதுதான் வந்துருக்கு என்ன! எம்பல்லை வச்சுப் பூசறதா? மணலும் பத்தல, கலவ எப்படி போடறது? அப்புறம் கொத்தனார் சரியா போடலன்னு எங்களக் குத்தம் சொல்ல வேண்டியது! ”எரிச்சலாய் பேசிக்கொண்டே கரணையில் எடுத்த சிமெண்ட் கலவையை செங்கல்லின் முகத்தில் கோபமாய் வீசினார் கொத்தனார்.

“அந்தாளு, யாரையும் நம்ப மாட்டாருப்பா! நம்ப என்னாத்த சொன்னாலும் அவுரா ஒரு எஸ்ட்டிமேட் போடுவாரு. நமக்கென்ன இருக்குறத வெச்சுபூசி வுடு.. ஆன வரைக்கும் வேலயப்பாரு!..” பியூன் கொத்தனாரை மெல்ல பதப்படுத்தினார்.

“எஸ்ட்டிமேட் போட அவரு என்ன கொத்தனாரா? தெரிஞ்ச வேலைய செய்யணும்.. இப்ப நான் போயி அது என்னசொன்ன… எச்சு கூட்டியா எதையோ கூட்டியா, அந்த வேலைய நான் போய் செஞ்சா ஒத்துக்குவியா? நான் கொத்தனாரு, தோதா பொருள் என்ன வேணும்னு எனக்குதான் தெரியும். அதப்போயி நீ மாத்திப் போட்டா எப்படி? நல்ல ஆளுய்யா அந்த ஆளு, இங்க கொண்டாந்து என்ன இழுத்துட்ட பாரு! உன் மூஞ்சிக்காக பாக்குறேன்.. எங்களுக்கென்ன இந்த மடம் இல்லன்னா எத்தனையோ சந்த மடம்.. இந்த சிமெண்ட் வேற… உன் ஆபிசரு மூஞ்சிய மாதிரியே… எங்கனாச்சும் ஒட்டுதா பாரு.. இது என்ன வாங்குனதா? எங்காவது அள்ளிக்கிட்டு வந்ததா?”

“யோவ்! நீ வேற. அவரு ஆபிசுக்கே எக்சிகியூட்டிவ்யா! நீ பாட்டுக்கும் மானாங்கானிக்குப் பேசுற.. அந்தாளு வந்துற கிந்துற போறான்.. ஏதேது என் வேலைக்கும் உல வெச்சுரவ போலருக்கே! பேசாம சும்மாங்கானிக்கும் செஞ்சுட்டுப் போயா!..’ பியூன் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்.

“நீயே சொல்லு.. சொன்னா சொன்னமாதிரி நடக்கணும். முட்ட வுடுற கோழிக்குதான் நோவு தெரியும்! வேண்டிய பொருள் இல்லாம வேல செய்யறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?.. மாணிக்கம், உனக்குத் தெரியாது. இவனுங்கெல்லாம் பேச்சுலயே வெண்ணை எடுக்குற பசங்க.. ச்சீப்பா முடிக்கணும், வேலையும் டாப்பா இருக்கணும்னா எப்படி?”

கலவையைக் கிளறுவதை விட பக்கத்தில் நின்று பேச்சு கொடுத்தால், கொத்தனார் வாயை கிளறிக்கொண்டே இருப்பார் என்ற பயத்தில், ஏதாவது விபரீதமாக நடந்து விடப் போகிறது என்ற பதட்டத்தில், “பாத்துக்கிட்டே இரு! இதோ வந்துர்றேன்” என்று நழுவிச்சென்றார் பியூன்.

மணி ஆறு ஆனது. “என்ன வொர்க்ஃ பினிஸ்சா’ என்று ஆவலுடன் வந்த எக்சிகியூடிவ், கொத்தனார் பொருட்களை ஓரங்கட்டுவதைப் பார்த்து அதிர்ச்சியானார், “”என்ன கொத்தனார் எல்லாத்தையும் ஏறக் கட்றீங்க?”
“பின்னே, மணி என்ன ஆகுது?”

கைக்கடிகாரத்தை ஸ்டைலாகத் திருப்பிய எக்சிகியூடிவ் “”என்ன ஜஸ்ட் சிக்ஸ், ஆறுதான் ஆகுது” என்றார்.

“ஆறாகுதல்ல அவ்வளவுதான்! வேல டைம் முடிஞ்சு போச்சு சார்! இனிமே நாளைக்குதான்.”

“எல்லாம் முடிஞ்சுருச்சு, ஜஸ்ட் கால்வாசி சுவர்தானே! இன்னிக்கே பூசிட்டா வேலயும் முடிஞ்சுரும். ஆபிசும் நாளைக்குப் பாக்க நீட்டா இருக்கும்… ”குரலைத் தாழ்த்தி எக்சிகியூடிவ் பேசினான். எப்பொழுதும் பிறரை அதட்டியே வேலை வாங்கிப் பழகிய எக்சிகியூடிவ் இப்படி தாழ்ந்து பேசியதை, ஆவலுடன் பார்த்தும் பார்க்காத மாதிரி ரசித்துக் கொண்டிருந்தனர் ஊழியர்கள்.

“சார்! இதோ பாருங்க! கோடி ரூபா கொட்டிக் கொடுத்தாலும் ஆறு மணிக்குமேல வேலை செய்யறதில்ல! மனுசன்னா ஒரு அளவுக்குதான்.. ஒரு டயத்துக்குதான் வேலை.. கல்லா மண்ணா ஒரே எடத்துல குந்திக் கெடக்க… நாளைக்கு ஆஃப் டேல வேல முடிஞ்சிரும், யோவ் மணி கரணைய கழுவு.. ‘பேசிக் கொண்டே தனது எண்ணத்தை அமல்படுத்திக் கொண்டிருந்தார் கொத்தனார்.

“ஏம்ப்பா! இதுக்குப் போயி இன்னொரு நாளா? வேண்ணா ஓவர்டைம் மாதிரி சேத்து துட்டு வாங்கிக்க. சாப்பாட்டுக் காசும் தர்றேன்.. ஒரேயடியா முடிச்சுடலாம்ல?” இதம்பதமாக கொத்தனாரை இணங்க வைக்க முயற்சியெடுத்தான் எக்சிகியூடிவ்.

“இப்படியெல்லாம் ஒரேயடியாவேல பாத்தா, ஒரேயடியா எங்க கதையும் முடிஞ்சுரும்! சும்மா நீ குடுக்குற துட்டுக்காக பொழுதுக்கும் நாங்க சாகமுடியாது சார். நாங்களும் மனுஷங்கதான். போய் மத்த வேலைய பாக்கணும். இங்கேர்ந்து நா இப்ப சிங்கபெருமாள் கோயில் போயாகணும்.. நாங்க என்ன சிட்டியிலியா குடியிருக்கோம்.. வேற என்ன சார். பேசிக்கிட்டே! நாளைக்கு வர்ட்டா? இல்ல கணக்க முடிச்சுக்கிட்டா?”

“என்னப்பா இப்படி ரஃபா பேசற? சரி வேலயத் தொடங்கியாச்சு..நாளைக்கு வா வா..” சலித்துக் கொண்டு எச்சரிக்கையாய் வார்த்தையை விட்டார் எக்சிகியூடிவ். மற்ற ஊழியர்கள் தன்னைப் பார்க்கிறார்களா என்பதைக் கவனித்துவிட்டு வேகமாக அறைக்குள் சென்று விட்டான் எக்சிகியூடிவ்.”

“அவங்களுக்கென்ன, வேல முடிஞ்சா போதும்.. மத்தவனும் மனுஷன் தானேன்னு நெனச்சாதானே.. இன்னிய பொழுதுக்கும் நாம வேலை செஞ்சாலும், எந்த மொதலாளியும் திருப்திப்பட மாட்டான். நீ வாடா மணி..” என்று சித்தாளைக் கூப்பிட்டவாறு மட்டப்பலகையை ஒரு ஓரமாக எறிந்தார் கொத்தனார். உணர்ச்சி பெற்றது போல அதுவும் துள்ளிப்போய் ஓரமாய் விழுந்தது.

கம்ப்யூட்டர் மவுஸை வெறுப்புடன் வருடியபடி, மட்டப் பலகையையே ஆசையுடனும், ஏக்கத்துடனும் பார்த்துக்கொண்டிருந்தன ஊழியர்களின் விழிகள்.

_______________________________________________

துரை. சண்முகம்
_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

  1. சிறுகதை சுமார் தான். மிகவும் தட்டையான கதைக் களம். கதை நன்கு பின்னப்படவில்லை. அதற்கு இன்னும் பல காட்சியமைப்புகள், பாத்திரங்களின் விவாதங்கள் எனக் கதை விரிந்திரிக்கவேண்டும். குமுதத்தில் வரும் இருபக்கக் கதை போல இருந்தது. அப்படியே இரு பக்கமாகவே இருந்தாலும் அதிலும் முடிவு கடைசி ஒரு பாராவில் நச்சென்று அடிக்கும். இக்கதையில் அந்த மாதிரி முயற்சியிருந்தாலும் எதிர்பார்த்த அளவு முடிவு நச்சென்று இல்லை.
    கதைக் களம் தொழிலாளர்களின் பிரச்சனையில் வெவ்வேறு வர்க்கங்களின் மனப்போக்கு என்று எடுத்துக் கொண்டால் அப்பிரச்சனை சுமாராக அலசப்பட்டிருக்கிறது.
    இருந்தாலும் காமம், காதல் என்று குமுதத்தில் உருகி வழியும் விஷயங்களை விடுத்து சமூக நோக்கில் முயன்றிருக்கும் எழுத்தாளரின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  2. எதயோ வித்தியாசமாக செய்து பார்க்கரீங்க.நடக்கட்டும் நடக்கட்டும்…

  3. எச்சக்கூட்டிவ் = ”நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திரமைசாலிகள்.”
    எம்ப்ளாயீ = ”நமக்கு வாய்த்த எச்சக்கூட்டிவ்கள் நாசமா போனவர்கள்!!!!!!!!

  4. அருமை,
    சாதாரண உழைக்கும்மக்களுக்கு இருக்கும் சுயமரியாதை,அதிக சம்பளம் வாங்கும் நடுத்தர மக்களுக்கு இருப்பது இலை என்பதை விளக்கியது அபாரம். இந்த கொத்தனார் எக்சிகுயுட்டிவ் ம‌ட்டுமல்ல, அம்பானி,முதல்வர் யாராக இருந்தாலும் இதைத்தான் சொல்லி இருப்பார்.
    இது ஏன்?. நம் நடுத்தர மக்களுக்கு இந்த வேலையை விட்டால் இன்னொரு வேலை கிடைக்குமா என்னும் சந்தேகம்,ஒருவேளை கிடைத்தாலும் அதுவும் இதுபோல்தான் இருக்கும் என்ற நிச்சயம்.முதலில் கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு(?) என்பார்கள் ஹா ஹா ஹா,இது தவறு ஆகி விட்டது.
    வாழ்த்துகள்

    • கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது உண்மைதான், இந்த கார்பரேட் கம்பனிகளில் வேலை செய்வதற்காகவே பிரத்தியேகமாக அளிக்கப்படும் படும் “பயிற்சி”யை கல்வி என்று கொள்ள முடியாது.

  5. கதை நல்லாயிருக்கு… இன்னும் கொஞ்சம் நீட்டி எழுதியிருக்க்லாம்

  6. இதை போல ஒரு அடிமை உத்தியோகத்தில் நான் இருந்தபொழுது “டார்ச்சர்” தாங்காமல், என் சீனியரிடம் முறையிட்டபொழுது அவர் சொன்னது ” டார்ச்சர் என்பது வேலையின் ஒரு பகுதி, வேறெங்கு சென்றாலும் இதைபோலவோ அல்லது இதைவிட அதிகமாகவோ டார்ச்சர் இருக்கும், எனவே டார்ச்சருடன் வாழ பழகுவதே சிறந்தது என்றார்” . இம்மாதிரி அடிமைத்தனத்தை எதிர்த்து போராடுவதற்கு பதிலாய், அடிமைத்தனத்தை சகித்து கொண்டு வாழவே சமூகத்தில் போதிக்கபடுகிறது. இந்த சிறுகதை சிறு சலனத்தையாவது இக்கதையை படிக்கும் அடிமைகளின் மனதில் உண்டாக்கும் என நினைக்கிறேன்.

  7. மட்டபலகை,சிறுகதை அல்ல சிறந்த உண்மை.
    முதல் அடி,வர்க்கத்துக்கு,இந்த வர்க்கம்(வெள்ளை காலர்)
    உணரனும்,உழைப்பு என்பது வாழ.
    நிம்மதியாக வாழ நிம்மதியில்லாமல் அலைவது.
    அழிவைதாண்தரும்.
    நன்றி.நட்புடன் சேகர்.

  8. சிரப்பான கதை….ஒரு குரும்படம் பார்ப்பது போல் இருந்தது…மெலும் பல கதைகைல் எலுத வல்யத்துக்கல்

  9. “இன்னிய பொழுதுக்கும் நாம வேலை செஞ்சாலும், எந்த மொதலாளியும் திருப்திப்பட மாட்டான்.”

    48 மணிநேரம் வேலை பார்தாலும் பத்தாது. ‘உன் கிட்ட இருந்து இன்னும் எதிர் பார்க்கிரேன்.’

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க