Friday, March 24, 2023
முகப்புவாழ்க்கைஅனுபவம்“தொடைகளுக்கு நடுவே ஒளிந்திருக்கும் நரகம்” !

“தொடைகளுக்கு நடுவே ஒளிந்திருக்கும் நரகம்” !

-

தொடைகளுக்கு நடுவே ஒளிந்திருக்கும் நரகம்

3000 ஆண்டுகால கருப்பின அடிமை வரலாறு!

‘நான் கீழ குனிந்து என் கால்களுக்கு நடுவில் பார்த்தேன். மருத்துவச்சி உக்கார்ந்து கொண்டிருந்தாள். பிளேடின் ஓரங்கள் காய்ந்துபோய், ரத்தக்கறை படிந்திருந்தன.

‘த்துப்..’

பிளேடின் மீது எச்சில் துப்பினாள் மருத்துவச்சி.

அடுத்த நொடி, ‘சர்ர்க்’ என்று ஒரு சத்தம்.

படக்கூடாத இடத்துல பிளேடு பட்டு, என் பிறப்புறுப்பு கிழிவது நன்றாகத் தெரிந்தது. நரநரவென்று முன்னும் பின்னுமாக இழுத்தாள்.  அந்தக் கிழவியின் அருகில் அக்கேசியா மரத்தின் முட்கள், குவியல் குவியலாகக் கிடந்தன.  அவள் கைகள் முழுக்க ரத்தம்.

ஒரு கோழியை வெட்டி, மீதியை விட்டிருந்தால் எப்படி இருக்குமோ அப்படி ரத்தச் சகதியோடு இருந்தது பாறை. என் பிறப்புறுப்பின் உணர்ச்சிமிக்க பாகங்கள் வெயிலில் காய்ந்துகொண்டிருந்தன.’’

வாரிஸ் இப்படிச் சொன்னபோது, லாராவால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தேம்பித், தேம்பி அழ ஆரம்பித்தார்.

வாரிஸின் நெருங்கிய நண்பர்கள்கூட அறிந்திராத அந்த உண்மையை, அன்றுதான் உலகம் தெரிந்து கொண்டது.

வாரிஸ் டைரி! உலகின் முன்னணி ஆஃப்ரிக்க மாடல் அழகி. லாரா ஸிவ், உலகின் முன்னணி ஃபேஷன் பத்திரிகையான ‘மேரி க்ளேய்ர்’ நிருபர்.

வாரிஸ், தன் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறார்.

‘‘சோமாலியாவில், கரடுமுரடான ஒரு பாலைவனக் கிராமத்தில்தான் நான் பிறந்தேன். எங்களது நாடோடிக் குடும்பம். இங்குள்ள பாத்ரூமைவிட மிகச் சிறியது எங்கள் குடிசை. பசுமையே பார்த்திராத கண்கள் என்றாலும், எல்லா குழந்தைகளையும்போல நானும் சந்தோஷமாகத்தான் இருந்தேன். ஆடு மாடுகளை மேய்ப்பேன். வரிக்குதிரைகளோடு ஓடுவேன். ஒட்டகச்சிவிங்கிகளை துரத்துவேன். பாட்டுப் பாடுவேன்.

ம்ஹ்ம்… இந்த சந்தோஷமெல்லாம் கொஞ்ச நாட்களுக்குத்தான். எனக்கு மட்டுமில்லை. சோமாலியாவில் பிறந்த எல்லா பெண்களுக்குமே இப்படித்தான்.

ஆஃப்ரிக்காவைப் பொறுத்தவரை பெண்கள்தான் எல்லாமே. ஆண்களைவிட அவகள் கடினமாக உழைக்கிறார்கள். வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொள்கிறார்கள். ஆனால், என்ன செய்து என்ன? எந்த உரிமையும் அவர்களுக்கு கிடைப்பதில்லை. காலம் முழுக்க ஆண்களுக்கு அடிமையாக இருந்தே சாகவேண்டும்.

என் வாழ்க்கை ஐந்தோடு முடிந்தது.

எங்களது நாடோடிக் குடும்பமில்லையா? அங்கே, ‘கல்யாணமாகாதவள்’ என்கிற பேச்சுக்கே இடமில்லை. பாடையோ, பரதேசியோ! எவன் கையிலாவது எங்களை பிடித்துக் கொடுத்துவிடவேண்டும். அதுவும் கன்னித் தன்மையோடு. அதுதான் அவர்களின் வாழ்க்கை லட்சியம்.

பெண்களைப் பொறுத்தவரை, சோமாலியர்களின் ஞானம் ரொம்பவே வித்தியாசமானது. எல்லா கெட்ட விஷயங்களும் பெண்களின் தொடைகளுக்கு நடுவில் ஒளிந்து கிடப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள்.

இதற்காக அவர்கள் செய்கிற அக்கிரமம் இருக்கிறதே…

அப்போது, எனக்கு ஐந்து வயது இருக்கும். ஒரு சாயங்கால நேரம்.

அம்மா என்னிடம் வந்து, ‘‘உங்கப்பா, மருத்துவச்சியை பாக்கப் போயிருக்கார். அந்தப் பொம்பள எப்ப வேணாலும் வீட்டுக்கு வரலாம்’’ என்றார்.

அன்றைக்கு, என்றும் இல்லாத கவனிப்பு எனக்கு. போதுமான அளவுக்கு சாப்பிடக் கொடுத்தார்கள்.

‘‘பாலையும் தண்ணியையும் அதிகம் குடிச்சிறாதடி’’ -அம்மா அறிவுரை சொன்னாள்.

சாப்பிட்டு முடித்து, போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு சந்தோஷமாக படுத்தேன். முழிப்பு வந்தப்போது, வானம் இருட்டாக இருந்தது. மீண்டும் படுத்துவிட்டேன்.

‘‘வாரிஸ்’’

அம்மா திடீரென்று எழுப்பினாள்.

நாங்கள், தூரத்துல் தெரிந்த குன்றை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.

‘‘இப்படி உக்காருவோம். அவ வருவா.’’ என்றார் அம்மா.

வானம் நன்கு விடிந்திருந்தபோது, ‘சர்க், சர்க்’ என்று செருப்பு சத்தம் கேட்டது. மருத்துவச்சி வந்துவிட்டிருந்தாள்.

படுக்கை மாதிரி இருந்த ஒரு பாறையைக் காட்டி, ‘‘அங்க போய் உக்காரு’ என்றாள். அம்மாதான் என்னை பாறை மேல் படுக்க வைத்தார்கள். அங்கே, பேச்சுக்கே இடமில்லை. என்னை படுக்க வைத்துவிட்டு.. அம்மா, என் தலைக்குப் பின்னால் உக்கார்ந்துகொண்டாள். என் தலையை இழுத்து அவள் மடியில் வைத்துக்கொண்டு, தன் கால்களை எடுத்து என் கைகள் மீது போட்டாள். நான் அம்மாவின் தொடைகளை இறுக்கிப் பிடித்துக்கொண்டேன்.

பிறகு ஒரு மரத்துண்டை எடுத்து என் வாயில் வைத்தாள்.

‘‘இறுக்கமா கடிச்சுக்க. அம்மாவ பாரு. எவ்ளோ தைரியமா இருக்கேன். அதுபோல நீயும் இருந்தா, சட்டுனு முடிஞ்சிடும்.’’

நான் கீழ குனிந்து என் கால்களுக்கு நடுவில் பார்த்தேன். பழைய கைப்பை ஒன்றை வைத்துக்கொண்டு அந்த மருத்துவச்சி உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவள் கண்ணில் அப்படியொரு பேய்த்தனம்.

பைக்குள், தன் விரல்களைவிட்டு அரக்கப் பரக்க எதையோ தேடினாள். இறுதியாக ஒரு ரேசர் பிளேடு வந்தது. ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்பது மட்டும் புரிந்தது.

பிளேடின் ஓரங்கள் காய்ந்துபோய், ரத்தக்கறை படிந்திருந்தன.

‘த்துப்..’

பிளேடின் மீது எச்சில் துப்பினாள் மருத்துவச்சி. அதை, தன் துணியில் துடைத்தாள். அவள் துடைத்துக்கொண்டிருக்கும்போதே, அம்மா தன் கைகளை எடுத்து என் கண்களை மூடினாள்.

நான், உலகமே இருண்டதுபோல் உணர்ந்தேன்.

அடுத்த நொடி…

‘பர்ர்க்’ என்று ஒரு சத்தம்.

படக்கூடாத இடத்தில் பிளேடு பட்டு, என் சதை கிழிவது நன்றாகத் தெரிந்தது. எந்த காலத்து பிளேடோ? துருபிடித்து, பற்களோடு இருந்திருக்கவேண்டும். நரநரவென்று மேற்கொண்டு முன்னும் பின்னுமாக இழுத்தாள் அந்தக் கிழவி.

‘அய்யோ…!’ -நரக வேதனை.

அசையக்கூடாது. அசைந்தால், வலி இன்னும் கொடூரமாகும். பற்களைக் கடித்துக்கொண்டு படுத்துக்கிடந்தேன். என் தொடைகள் நடுங்கின.

‘கடவுளே! இந்த நரகத்திலிருந்து என்னைக் காப்பாற்ற மாட்டாயா?’

ஒரு வழியாக அம்மா என் கண்களை விடுவித்தாள். வெளிச்சத்துக்கு பழகியதும் பார்க்கிறேன். அந்த கிழவியின் அருகில் அக்கேசியா மரத்தின் முட்கள். குவியல் குவியலாகக் கிடந்தன. அவள் கைகள் முழுக்க ரத்தம். அக்கேசியா முட்களைத்தான் ஒவ்வொன்றாக என் பிறப்புறுப்பில் குத்தியிருக்கிறாள். பிறகு கடினமாக வெள்ளை நூல் கொண்டு உறுப்பை தைத்திருக்கிறாள்.

சிறுநீர் கழிக்க ஒரே ஒரு துவாரம் வைத்துவிட்டு மீதி உறுப்பு மூடப்பட்டுவிட்டது. என் கன்னித் தன்மையும், ஒரு இனத்தில் கவுரவமும் காப்பாற்றப்பட்டுவிட்டது. இதற்கு, நான் செத்துப்போய் இருக்கலாம்.

தையல் முடிந்ததும் கிழவி போய்விட்டாள். நான் எழுந்திருக்க முயன்றேன். என்னால் அசையக்கூட முடியவில்லை. என் இரண்டு கால்களும் துணிப்பட்டையால சுற்றப்பட்டிருந்தன. அம்மா என்னை நகர்த்தியதும் பாறையைத் திரும்பிப் பார்த்தேன்.

ஒரு கோழியை வெட்டி, மீதியை விட்டிருந்தால் எப்படி இருக்குமோ அப்படி ரத்தச் சகதியோடு இருந்தது பாறை. என் பிறப்புறுப்பின் உணர்ச்சிமிக்க பாகங்கள் வெயிலில் காய்ந்துகொண்டிருந்தன.

காற்று, நெருப்பு மாதிரி வீசிக்கொண்டிருந்தது. என்னால் சித்திரவதையைத் தாங்க முடியவில்லை. ஒருவழியாக அம்மாவும் அக்காவும் சேர்ந்து பக்கத்தில் இருந்த மர நிழலுக்கு என்னை இழுத்துக்கொண்டு போனார்கள். அங்கே, சிறிய குடிசை ஒன்று வேயப்பட்டிருந்தது. காயம் குணமாகிறவரை அங்கேதான் இருந்தாகவேண்டும்.

முதன் முதலாக எனக்கு சிறுநீர் வெளியேறியது நன்றாக நினைவிருக்கிறது. அந்த இடத்தில் அமிலத்தை ஊற்றினால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது. உயிரே போய்விடும்படி எரிச்சல்… திகுதிகுவென தீப்பற்றி எரிந்தது பிறப்புறுப்பு. தையல் போடப்பட்டிருந்த பொத்தல்களின் வழியே தீக்குச்சி இறைத்தார்போல் சிறுநீர் வெளியேறியது.

மரண வேதனை.

இதனால், சிறுநீர் வந்துவிடுமோ என்கிற பயத்தில், தண்ணீர் குடிக்கவே பயந்தேன். பல நாட்கள் இப்படித்தான் வாழ்ந்தேன். திடீரென்று ஒருநாள் கிருமித்தொற்று ஏற்பட்டு கடுமையான காய்ச்சல் அடிக்க ஆரம்பித்தது. அம்மாதான் பார்த்துக்கொண்டாள். அந்த வயதில், எனக்கு செக்ஸ் என்றால் என்னவென்றே தெரியாது. ஆனால், ஒன்று மட்டும் தெரியும். ஒவ்வொரு தாயின் ஆசீர்வாதத்தோடுதான் இந்த சடங்கு நடைபெறுகிறது.

என் பெண்மை சிதைக்கப்பட்டது கொடூரமான விஷயம்தான். ஆனால், மற்ற பெண்களைக் காட்டிலும் நான் அதிர்ஷ்டசாலி என்றே சொல்லவேண்டும். பல சிறுமிகள் அதிர்ச்சியினாலும், ரத்தப்போக்கு, நோய்த்தொற்று காரணமாவும் இறந்து போய்விட, நான் மட்டும் உயிரோடு பிழைத்துக்கொண்டேன்.

நாட்கள் ஓடின.

நான் பதிமூன்று வயதை நெருங்கிக்கொண்டிருந்தேன். ஒரு நாள், மாலை நேரம்… ஆடுகளை அதன் பட்டியில் அடைத்துவிட்டு, வீட்டிற்குள் நுழைந்தேன்.

‘‘வாரிஸ்! இங்க வாம்மா’’ -அப்பா அன்போடு அழைத்தார்.

தன் மடிமேல் என்னை உட்காரவைத்துக்கொண்டார். வழக்கமாக அவர் குரலில் கடுமை இருக்கும்.

‘‘ஒண்ணு தெரியுமா? நீ ரொம்ப நல்ல பொண்ணு. ஆம்பளைங்களைவிட அதிகமா உழைக்கிற. மந்தையை ஒழுங்கா கவனிச்சுக்கிற. ஆனா… உன்னை பிரியப்போறதை நெனச்சா எனக்கு வருத்தமா இருக்கு’’

அப்பா, சம்பந்தமே இல்லாத வார்த்தைகளைப் பேசினார்.

‘அடடா! அக்கா மாதிரி நானும் ஒடிடப்போறேன்னு பயப்படுறாரோ!’

நான் அவரை கட்டிப்பிடித்துக்கொண்டு,

‘‘அப்பா. நீங்க நினைக்கிற மாதிரி நான் எங்கேயும் ஓடிப்போக மாட்டேன்’’ என்றேன்.

அவர் என் முகத்தை திருப்பி,

‘‘எனக்கு தெரியும். நீ என் பொண்ணு. அப்பா உனக்கு ஒரு மாப்பிள்ளை பாத்திருக்கேன்!’’ என்றார்.

எனக்கு தூக்கிவாரிப் போட்டது.

‘‘அப்பா. எனக்கு கல்யாணத்துல விருப்பமில்லை.’’

நான் கொஞ்சம் தைரியமாக வளர்ந்தவள். இப்போது பலவீனமாக உனர்ந்தேன்.

அடுத்த நாள் காலை. நான், பால் கறந்துகொண்டிருந்தேன்.

‘‘வாரிஸ்.. இங்க வா. இது நான் நீ…’’ அப்பா அழைத்தார்.

அவரோடு அவரைவிட மூத்த ஒருவன் உட்கார்ந்துகொண்டிருந்தான்.

அப்பா சொன்னதை நான் காதிலேயே வாங்கவில்லை. அவனும் அவன் மூஞ்சியும்! ஆட்டுக்கெடா மாதிரி தாடியை தொங்கப் போட்டுக்கொண்டு… 60 வயதிருக்கும் அவனுக்கு.

‘‘வாரிஸ்! வந்திருக்கிறவங்களுக்கு முதல்ல வணக்கம் சொல்லு.’’

‘‘வணக்கம்.’’

நான் எவ்வளோ முடியுமோ அவ்வளவு குழைந்து சொன்னேன். அந்தக் கிழட்டு ஓநாய், என்னைப் பார்த்து பல் இளித்துக்கொண்டே உட்கார்ந்திருந்தது. அவனை கொலைவெறியோடு முறைத்துவிட்டு, என் ஆப்பாவைப் பார்த்தேன். அப்பாவுக்கு புரிந்துவிட்டது.

சிரித்தவாறே… ‘‘சரி, சரி, போய் வேலையைப் பாரு’’ என்று சமாளித்தார்.

நான் மீண்டும் பால் கறக்க போய்விட்டேன்.

மறுநாள் காலையில் அப்பா கூப்பிட்டார்.

‘‘வாரிஸ். அவர்தான் நீ கட்டிக்கப்போற புருஷன்.’’

‘‘அப்பா! அந்தாள் ரொம்பக் கிழவனா இருக்கான்’’

‘‘அதுதாம்மா உனக்கு நல்லது. வயசான மனுஷன் இல்லையா! உன்னை விட்டு எங்கேயும் போகமாட்டார். உன்னை நல்லா பாத்துக்குவார். ஒண்ணு தெரியுமா? மாப்ள நமக்கு… அஞ்சு ஒட்டகம் குடுத்திருக்காரு’’ அப்பா, வாயை பிளந்துகொண்டு பெருமை பேசினார்.

அன்று முழுக்க நான் ஆட்டு மந்தையையே வெறித்துக்கொண்டிருந்தேன். மனதில் ஆயிரம் சிந்தனைகள். பாழும் பாலைவனத்தில் ஒரு கிழவனிடம் வாழ்க்கைப்படுவதை நினைத்துப் பார்த்தேன்.

‘த்தூ..

இந்த வாழ்க்கைக்கு, நாண்டுகிட்டு சாகலாம்.’ -ஒரு முடிவுக்கு வந்தேன்.

அன்று இரவு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது வீடு.

நான் அம்மாவை நெருங்கி,

‘‘எனக்கு இங்கிருக்கப் பிடிக்கல. நான் ஓடப்போறேன்.’’ என்றேன்.

‘‘அடிப்பாவி. எங்க ஓடுவ?’’

‘‘மொகாதிஷு. அக்கா வீட்டுக்கு.’’

‘‘முதல்ல போய் படு’’ -பல்லைக் கடித்தவாறு அம்மா சொன்னாள்.

நான் கையை தலைக்கு வைத்துக்கொண்டு தூங்கப் போய்விட்டேன். திடீரென்று கை முட்டியில் யாரோ தட்டினார்கள்.

அம்மாதான்.

‘‘அந்தாள் முழிச்சிக்கிறதுக்குள்ள எழுந்து ஓடு’’ -கிசுகிசுத்தாள்.

நான் சுற்றி முற்றி பார்க்கிறேன். எடுத்துச் செல்ல உணவோ, தண்ணீரோ, ஒட்டகப் பாலோ எதுவுமே இல்லை. நான் எழுந்து அவளை அணைத்துக்கொண்டேன். அந்த இருட்டிலும், அவள் முகத்தைப் பார்க்க முயற்சித்தேன். முடியவில்லை. தாரை தாரையாக கண்ணீர் மட்டுமே வழிந்தது.

‘‘எதுக்கும் கவலைப்படாத. நீ எங்க இருந்தாலும் நல்லா இருப்பே. அம்மாவை மட்டும் மறந்துடாதே’’ என்றாள்.

‘‘சத்தியமா’’

சொல்லிவிட்டு ஓட ஆரம்பித்தேன்.

பாலைவனம் முழுக்க ஒரே கும்மிருட்டு.

எவ்வளவு தூரம் ஓடினேன் என்பது தெரியவில்லை. ஆனால், கொஞ்சமும் ஈவிரக்கமில்லாத கரடு முரடான பாலைவனம் அது.

அந்தப் பயணம், முடிவில்லாத ஒன்றாக எல்லையற்று நீண்டிருந்தது. பசியும் தாகமும் என்னை சோர்வடையச் செய்தன. பொழுது விடிந்தபோது, என்னுடைய ஓட்டம் முற்றிலும் தளர்ந்துபோய் இருந்தது.

‘’வாரிஸ், வாரிஸ்’’

திடீரென்று என் தந்தையின் குரல் கேட்பதை உணர்ந்தேன். பயத்தில் என் உடல் நடுங்க ஆரம்பித்துவிட்டது. என்னை அவர் பிடித்துவிட்டால்?

இப்போது மீண்டும் ஆரம்பத்திலிருந்தே தொடங்கவேண்டும்.

நான் ஓடத் துவங்கினேன். பயம், என் ஓட்டத்தை வேகப்படுத்தியது. அதி பயங்கரமாக ஒரு துரத்தல் காட்சி அது. பல மணி நேரங்களுக்கு இது தொடர்ந்தது. சூரியன் மறையும்வரை நான் ஓடிக்கொண்டிருந்தேன். என் அட்ரினல் சுரப்பிகள் ஒழுங்காக வேலை செய்திருக்கவேண்டும்.

அப்பா தோற்றுவிட்டார்.

சூரியன் வேகமாக மறையத் தொடங்கியது.

ஆனால், இது நேற்றைய இரவைப்போல் இல்லை. பசி, வயிற்றை எரிக்க ஆரம்பித்தது. சோர்வும் மயக்கமும் ஒருசேர, அங்கிருந்த மரத்தடி ஒன்றில் அமர்ந்தேன். மெல்ல என் கால்களை எடுத்துப் பார்க்கிறேன்…

‘உஃஃப், உஃஃப்…’

வெப்பத்தில் கொப்பளித்து, பாறைகளில் மோதி, ரத்தச் சகதியாய் காட்சியளித்துக் கொண்டிருந்தது கால்கள்.

அப்படியே தூங்கிவிட்டேன்.

சூரியன் கண் திறந்திருக்கவேண்டும். என் கண்கள் கூச ஆரம்பித்தன. சுற்றி முற்றிப் பார்க்கிறேன். யாரும் இல்லை. இந்த இடம் பாதுகாப்பானதல்ல.

நடக்க ஆரம்பித்தேன். எத்தனை நாட்கள் நடந்தேன், எவ்வளவு தூரம் நடந்தேன் என்பதெல்லாம் தெரியாது. பசி, தாகம், பயம், வலி எல்லாம் சேர்ந்து என்னை வாட்டியது. எப்போதெல்லாம் இருள் சூழ்கிறதோ, அப்போதெல்லாம் பயணத்தை நிறுத்திவிடுவேன். வெயில் கடுமையாக இருந்தால், மரத்தின் கீழ் ஓய்வெடுப்பேன்.

அப்படித்தான் ஒருநாள் மரத்தடியில் படுத்துக்கிடந்தேன். அருகில் யாரோ குரட்டைவிடுவதுபோல் இருந்தது.

‘அப்பாவாக இருக்குமோ?!’

பதறியடித்து எழும்பினால், ‘கடவுளே..! அது ஒரு சிங்கம்.’

என்னை முறைத்தபடி இருந்தது. நான் எழுந்து ஓட முயற்சித்தேன். ஆனால், கொலை பட்டினி  என் கால்களை பலவீனமாக்கி இருந்தது. கொடூரமான ஆஃப்பிரிக்கச் சூரியனிடமிருந்ந்து எந்த மரம் எனக்கு அடைக்கலம் கொடுத்ததோ, அதன் கீழ் தலைக்குப்புற விழுந்தேன்.

நீண்ட நெடிய என் பாலைவனப் பயணம் முடிவுக்கு வரப்போகிறது.

இப்போது எனக்கு துளிகூட பயமில்லை. நான் சாகத் தயாராக இருக்கிறேன்.

‘‘வா! வந்து என்னைச் சாப்பிடு.’’ -சுரத்தில்லாத குரலில், நான் சிங்கத்தை அழைத்தேன்.

எச்சி ஊறும் நாக்கால் தன் உதடுகளை தடவியபடி, என்னை முன்னும் பின்னும் அது சுற்றி வந்தது. இதோ! ஒரே நொடியில் என்னைக் கவ்விக் கடித்து விழுங்கப்போகிறது. நான் கண்களை மூடிக் காத்திருந்தேன்.

‘ஹ.. ஹ…’ என்ன நினைத்ததோ, சிங்கம் பின்வாங்கிவிட்டது.

சந்தேகமே இல்லை. என்னிடம் சாப்பிடத் தகுந்த அளவுக்கு சதை இல்லை. நான் எதற்கும் பயனில்லாதவள்.

அப்படியானால்?

கடவுளின் திட்டம் வேறாக இருந்திருக்கவேண்டும். எதற்காகவோ என்னை விட்டு வைத்திருக்கிறார்.

‘அது என்னவாக இருக்கும்?’

நம்பிக்கையுடன் மீண்டும் நடக்க ஆரம்பித்தேன்.

வீட்டை விட்டு ஓடி வரும் முன்பு, குடும்பம் ஒன்றுதான் எனக்கு வாழ்க்கை. எங்கள் தினசரி வாழ்க்கை, ஒட்டகத்தின் கையில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அங்கே தண்ணீர் கிடையாது. காலை எழுந்தாலும் சரி, இரவு படுத்தாலும் சரி, ஒட்டகப்பால்தான் நாங்கள் உயிரோடு இருக்கக் காரணம். நான் தூங்கி எழுந்ததும் சுமார் 60, 70 செம்மறி ஆடுகளை ஓட்டிக்கொண்டு பாலைவனத்தை நோக்கிக் கிளம்பிவிடுவேன். வழி நெடுக பாடிக்கொண்டே செல்வேன். ஆடுகளை வழிநடத்த ஒரே ஒரு குச்சி வைத்திருப்பேன். ஆடுகள் மேய்ச்சலில் இருக்கும்போது ஏராளமான வேட்டை விலங்குகளைப் பார்த்திருக்கிறேன். வழி தெரியாமல் சிதறும் ஆட்டுக்குட்டிகள் மீது ஹெய்னாக்கள் பதுங்கிச் சென்று பாயும். சிங்கங்கள் வந்து போகும்.

வீடு வந்ததும், இரவில் நட்சத்திரங்களுக்கு கீழ் குழந்தைகளெல்லாம் ஒன்றாகப் படுப்போம். எங்களுக்கு பாதுகாப்பாக அப்பா இருப்பார்.

அப்பா, ஆறடி உயரத்தில் அம்மாவைவிட கொஞ்சம் வெள்ளையாக, ரொம்பவும் அழகாக இருப்பார். அம்மாவும் அழகில் குறைந்தவள் இல்லை. கருப்பாக இருந்தாலும் கரும் பளிங்கு சிற்பம்போல் இருப்பார். தோல் மிருதுவாகவும் மினுமினுப்பாகவும் இருக்கும். ஆனால், ரொம்ப அமைதி. பேச ஆரம்பித்தால், குலுங்கக் குலுங்க சிரிக்க வைத்துவிடுவாள்.

மொகாதிஷுவில் செல்வாக்குமிக்க வசதியான குடும்பத்தில் பிறந்தவள் அம்மா. மாறாக, எப்போதும் பாலைவனத்தில் அலைந்து திரியக்கூடிய நாடோடி, என் அப்பா. அம்மாவை கல்யாணம் செய்துகொள்ள அவர் விருப்பம் தெரிவித்தபோது, ‘வாய்ப்பே இல்லை’ என்று என் பாட்டி விரட்டிவிட்டாராம். எப்படி இருந்தால் என்ன? அம்மாவுக்கு 16 வயதாகும்போது, அவரும் வீட்டைவிட்டு ஓடி வந்துதான் அப்பாவை கல்யாணம் செய்திருக்கிறார்.

அம்மா எப்போதும் என்னை ‘அவ்டஹொல்’ என்றுதான் கூப்பிடுவார். அவ்டஹொல் என்றால், ‘சின்ன வாய்’ என்று அர்த்தம். ஆனால், ‘வாரிஸ்’ என்பதுதான் என் உண்மையான பெயர். வாரிஸ் என்றால் ‘பாலைவனப் பூ’ என்று அர்த்தம்.

நான் ஓடி வந்த கதையை விட்டுவிட்டேனே! சுமார் 300 மைகள் கடந்து, புண்ணாகிப்போன கால்களுடன் ஒரு வழியாக நான் மொகாதிஷுவுக்கு வந்து சேர்ந்திருந்தேன். அது, இந்தியப் பெருங்கடலில் ஒரு அழகான நகரம். அந்த நகரத்தை சுற்றி நிறைய பனைமரங்களும் கலர் கலரான பூச்செடிகளும் இருந்தன. அங்கிருந்த வீடுகளும் கொள்ளை அழகு. அவற்றில் பெரும்பாலானவை இத்தாலியர்களால் கட்டப்பட்டிருந்தன. மொகாதிஷு ஒரு காலத்தில் இத்தாலியர்களின் தலைநகரமாக இருந்ததே இதற்குக் காரணம். ஒரு கொக்கு மாதிரி கட்டடங்களை எட்டி, எட்டி பார்த்துக்கொண்டு நடந்தேன்.

ஒரு மார்கெட் வந்தது. அங்கிருந்த பெண்களிடன் ‘எங்க அக்கா அமென் தெரியுமா?’ என்று விசாரித்தேன்.

‘‘உன்னை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே!’’ -யோசித்த ஒரு பெண்மணி, தன் மகனை அழைத்து,

‘‘இவளைக் கொண்டுபோய் அமென் வீட்டில் விடு’’ என்றாள்.

நான் அக்கா வீட்டுக்குள் நுழைந்தபோது, அவள் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தாள்.

நல்லவேளையாக அவளுக்கு நல்லதொரு கணவன் கிடைத்திருந்தான். அவர்கள் தமது முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருந்தார்கள். நான் வீட்டு வேலைகள் முழுவதையும் பார்த்துக்கொண்டேன். கொஞ்ச நாள் கழித்து அக்காவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. நான்தான் அவளையும் பார்த்துக்கொண்டேன். அதன் பிறகு அக்காவுக்கும் எனக்கும் ஒத்துப்போகவில்லை. ஒரு முதலாளிபோல் என்னிடம் நடந்துகொண்டாள்.

மொகாதிஷுவில் எனக்கு வேறு சில சொந்தங்களும் இருந்தன.

நான் என் சித்தி வீட்டுக்குப் போய், ‘‘கொஞ்ச நாள் இங்கேயே தங்கிக்கவா?’’ என்றேன்.

எதிர்பார்த்ததைவிட அவர்கள் அன்பானவர்களாக இருந்தார்கள்.

‘தாராளமா தங்கிக்கோ. உனக்கு இங்க ஒரு பிரண்டுகூட இருக்கா.’ என்றார்கள்.

வழக்கம்போல், அங்கேயும் நான்தான் வீட்டு வேலைகளை கவனித்துக்கொண்டேன்.

அம்மாவை தனியாக விட்டுவிட்டு வந்தது எனக்கு வருத்தமாக இருந்தது. பாவம்! எல்லா வேலைகளையும் அவள் ஒருத்திதான் செய்தாக வேண்டும்.

‘நான் ஏதாவது செய்தாகவேண்டும். பணம் சம்பாதித்து அவளுக்கு அனுப்பவேண்டும்.’ என்று தீர்மானித்தேன்.

பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால், வேலைக்குப் போகவேண்டுமே. தேடினேன். ஒரு இடத்தில் சித்தாள் வேலை கிடைத்தது. ரொம்பவும் கடினமான வேலை.  எல்லோரும் நான், ஓடிப்போய்விடுவேன் என்றுதான் நினைத்தார்கள். ஆனால், கடுமையாக உழைத்தேன். 60 டாலர்கள் கிடைத்தது.

நாட்கள் ஓடியது…

ஒரு நாள் சித்தி வீட்டில், வீட்டு வேலைகளை செய்துகொண்டிருந்தேன். ஊரிலிருந்து முகம்மது சித்தப்பா வந்திருந்தார். என் இன்னொரு சித்தியின் வீட்டுக்காரர்.

‘‘அடுத்த நாலு வருஷமும் லண்டன்லதான் இருக்கப்போறேன். வீட்டு வேலைக்கு ஆள் வேணும். யாராவது நல்ல பொண்ணா இருந்தா சொல்லு’’ -முகம்மது சித்தப்பா, சித்தியிடம் பேசிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது. அவர், லண்டனில் சோமாலியத் தூதரகத்தில் வேலை பார்ப்பவர்.

நான், மெல்ல என் சித்தியை கூப்பிட்டு,

‘‘நான் வேணும்னா, அவர் வீட்டுக்கு போறேனே.. ப்ளீஸ்’’ என்று கெஞ்சினேன்.

சித்தி, ஒரு நிமிஷம் யோசித்துவிட்டு, ‘‘ஏன் நீங்க வாரிஸை கூட்டிட்டுப் போகக்கூடாது. இவ ரொம்ப சுத்தமா வேலை செய்வா.’’ என்றார்.

சித்தப்பா என்னை உற்றுப் பார்த்தார்.

‘‘ஓகே. நாளைக்கு மதியம் ரெடியா இரு. நாம லண்டன் கிளம்பறோம்.’’

மறுநாள், என்னுடைய பாஸ்போர்ட் வந்தது. எனக்கு பயங்கர ஆச்சர்யம்! முதன் முதலாக என்னுடைய பெயர் அச்சில் வார்க்கப்பட்டிருந்தது.

ஒரு வழியாக லண்டன் வந்தாகிவிட்டது. ஆடம்பரமான மாளிகைகள், வெள்ளை வெளேர் மனிதர்கள், விழுகின்ற வென் பனி என முற்றிலும் புதிதாக, முழுவதும் அந்நியமாக இருந்தது லண்டன். சித்தப்பாவுக்கும் அழகான ஒரு மாளிகை ஒதுக்கப்பட்டிருந்தது.

மரியம் சித்தி, என்னை முகம் மலர வரவேற்றார். அவரை ஓடிச் சென்று கட்டிப்பிடிக்க எண்ணினேன். ஆனால், அவரது நவநாகரீக உடை என்னை அச்சம் கொள்ளச் செய்தது. சித்தி எனக்கு பெட்ரூமை திறந்து காட்டினாள். ‘அம்மாடி!’ அவ்வளவு பெரிய படுக்கை அறையை நான் கனவிலும் கண்டதில்லை. என் வீட்டைவிட பெரியதாக இருந்தது. சொகுசான மெத்தை. அப்படியொரு சொகுசை என் வாழ்நாளில் அனுபவித்ததே இல்லை. அன்றிரவு சொர்க்கத்தில் உறங்கினேன்.

அடுத்த நாள்…

பெருக்குவது, துடைப்பது, துவைப்பது, கழுவுவது என்று வழக்கம்போல் என் வேலைகள் தொடர்ந்தன. எப்படி சமைக்கவேண்டும் என்பதை சித்தி எனக்கு கற்றுக்கொடுத்தாள்.

எனக்கு 16 வயது இருக்கும்போது, முகம்மது சித்தப்பாவின் சகோதரி இறந்துபோய்விட, அவளது மகள் எங்களோடு வந்துவிட்டாள். நான்தான் அவளை கான்வென்ட்டுக்கு அழைத்துச் செல்வேன். ஒருநாள் ஸ்கூல் வாசலில் வைத்து ஒரு ஆள், என்னை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார். அவருக்கு சுமார் 40 வயசு இருக்கும். இப்படி முறைத்துப் பார்ப்பது குறித்து அவர் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளவில்லை.

நான், குழந்தையை ஸ்கூலில் விட்டுட்டு திரும்புகிறேன், திடீரென்று அந்த ஆள் என் பக்கத்தில் நிற்கிறார். எனக்கோ ஆங்கிலம் தெரியாது. அவர் என்ன பேசுகிறார் என்பதும் புரியவில்லை. நான் பயந்துகொண்டு வீட்டுக்கு வந்துட்டேன். அந்த ஆளின் மகளும் அதே ஸ்கூலில்தான் படித்தாள்.

பிறகு, எப்போதெல்லாம் என்னை பார்க்கிறாரோ, அப்போதெல்லாம் சிரித்து வைப்பார். ஒரு நாள், தன் விசிட்டிங் கார்டை என்னிடம் நீட்டினார். நான் வேண்டா வெறுப்பாக வாங்கிக்கொண்டேன்.

வீட்டுக்கு வந்ததும், என் சித்திப் பெண்ணிடம் காட்டி, ‘‘என்னதிது?’’ என்றேன்.

‘‘இதுவா? இந்த ஆள் ஒரு போட்டோகிராபராம்’’

‘போட்டோகிராபருக்கு நம்மகிட்ட என்ன வேலை?’

ம்ம்… நான் அதை மறந்துவிட்டேன்.

இதற்கிடையே சோமாலியாவில் உள்நாட்டுக் கலவரம் தீவிரமடைந்திருந்தது. பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சோமாலிய அரசாங்கம் சொல்லிவிட்டது. சித்தப்பா, குடும்பத்துடன் மறுநாளே ஊருக்குத் திரும்பியாகவேண்டும். இதை நினைக்கும்போதே, எனக்கு அடி வயிறு கலங்கியது.

‘‘சித்தப்பா! என் பாஸ்போர்ட்டை எங்கேயோ தொலைச்சிட்டேன்’’ -நான் வேண்டுமென்றே பொய் சொன்னேன்.

பயணத்துக்கான எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு. திடீர்னு இப்படிச் சொன்னா என்ன அர்த்தம்?’’ சித்தப்பா கோபப்பட்டார்.

‘‘பரவாயில்லை சித்தப்பா. நீங்க கிளம்புங்க. நான் எப்படியாவது சமாளிச்சுக்கிறேன்’’

என்னால் நம்ப முடியவில்லை. அதிர்ஷ்டவசமாக சித்தப்பா என்னை விட்டுவிட்டுக் கிளம்பினார்.

‘யாருமற்ற அநாதையாய், லண்டனை எதிர்கொள்ளவேண்டும்’

எனக்குள் பயம் பரவத் தொடங்கியது.

அடுத்த நாள் கடை வீதி ஒன்றில் ‘ஹல்வு’வைச் சந்தித்தேன். உயரமாக, கவர்ச்சியாக இருந்தாள்.

‘‘என்ன பண்ற வாரிஸ். எப்படி இருக்கே?’’ என்றாள் சோமாலியில்.

நாங்கள் முன்பின் அறிமுகமானவர்கள் இல்லை.

‘‘என்னத்தைச் சொல்ல! என் சித்தப்பா தூதரக அதிகாரியா வேலை பார்த்தார். இத்தனை நாள் அவரோடுதான் இருந்தேன். இப்போ அவர் வேலை முடிஞ்சு சோமாலியா போய்ட்டார். எங்க தங்கறது, எப்படி சாப்பிடுறதுன்னு இப்பவரை தெரியலை’’

ஹல்வு, என்னை அமைதியாகப் பார்த்தாள்.

‘‘ஒய்.எம்.சி.ஏ-ல எனக்கு ஒரு ரூம் இருக்கு. இன்னிக்கு ராத்திரி அங்கேயே தங்கிக்கோ’’

இப்போது, நானும் ஹல்வுவும் நெருங்கிய நண்பர்கள் ஆகியிருந்தோம்.

‘‘மெக் டொனால்டில் வேலைக்குப் போறியா?’’ -ஹல்வு கேட்டாள்.

‘‘சான்ஸே இல்லை. எனக்கு இங்கிலிஷ் தெரியாது. என்கிட்ட வொர்க் பெர்மிட்டும் இல்லை’’

ஹல்வு என்னை விடவில்லை. என்னை மெக்டொனால்டில் வேலைக்குச் சேர்த்துவிட்டாள். பாத்திரங்களைக் கழுவுவது, தரையைத் துடைப்பது, குப்பைகளை அள்ளுவதுதான் என் வேலை.

வார இறுதியில், ஹல்வு என்னை டிஸ்கொதேவுக்கு அழைத்துச் சென்றாள். அதுதான், கட்டுப்பட்டியான ஆஃப்ரிக்க வளர்ப்பிலிருந்து நான் வெளியேற உதவியது. கருப்பு, வெள்ளை, ஆண், பெண் எல்லோரிடமும் பேசினேன். ஜஸ்ட் பேசினேன். அவ்வளவுதான். இந்தப் புதிய உலகில் எப்படி வாழ்வது என்பதை ஹல்வு மூலமாக கற்றுக்கொண்டேன்.

இனிதான், என் வாழ்க்கையின் இரண்டாவது அத்தியாயம் ஆரம்பம்.

‘‘இந்த ஆளுக்கு என்னதான் வேணுமாம்?’’ ஓய்வு நேரம் ஒன்றில், போட்டோகிராபரின் விசிட்டிங் கார்டை காட்டி ஹல்வுவிடம் கேட்டேன்.

‘‘அதை அவர்கிட்டயே கேளு. போனைப் போடு’’

‘‘நான் பேசுறது மொக்க இங்கிலீஷ். நீயே பேசு’’

‘‘‘மைக் கோஸ்.’ அவர்தான் அந்த அன்புக்குரிய போட்டோகிராபர். அன்று, மைக்கின் ஸ்டுடியோவுக்குள் நுழைந்தபோது, நான் வேறொரு உலகத்தில் விழுந்ததுபோல் உணர்ந்தேன். சுவர் முழுக்க அழகழகான பெண்கள் தொங்கிக்கொண்டிருந்தார்கள்.

மைக் என்னிடம், ‘‘யூ ஹேவ் தெ மோஸ்ட் பியூட்டிஃபுல் ப்ரொஃபைல். நான் உன்னை போட்டோ எடுக்க விரும்புகிறேன்’’ என்றார்.

‘‘இதைப் போலவா? இந்த பொண்களைப் போலவா?’’

‘‘ஆமாம்’’

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

‘‘எவ்ளோ பணம் தருவீங்க?’’

‘‘ஹ.. ஹ..! வா, இப்படி வந்து நில்லு’’ மைக், தன் காமிராவை கையில் எடுத்தார்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு… ஸ்பான்ச், பிரஷ், க்ரீம், பெயின்ட், பவுடர். எல்லாம் என் முகத்தில் விளையாட ஆரம்பித்தன. எனக்கு மேக்கப் போட்ட பெண், சற்று பின் நகர்ந்து சென்று என்னை பார்த்தாள்.

‘‘ஒகே. போய் கண்ணாடியைப் பார்’’

‘‘வாவ்…! நானா இது?’’ பட்டுப்போன்ற மேனி, பளபளக்கும் கன்னம்… அங்கிருந்த வெளிச்சத்தில் நான் தங்கம்போல மின்னினேன்.

‘‘ஓகே வாரிஸ். லிப்ஸை இப்படி வச்சிக்கோ, இங்க பார்… க்ளிக், க்ளீக், க்ளிக்…’’ -மைக்கின் விரல்கள் க்ளிக்கொண்டே இருந்தன.

வேலைக்கார வாரிஸ், இப்படியாகத்தான் ஒரு மாடல் அழகியாக மாறினாள்.

சில நாட்களுக்குப் பிறகு… ஒரு மாடலிங் ஏஜென்சி என்னை அழைத்திருந்தது. அழகழகான பெண்கள் அங்கே கூடியிருந்தனர்.

‘‘இங்கே என்ன நடக்குது?’’

‘‘பைரேலி காலண்டர்’’

‘‘ஓ… சூப்பர். அப்டினா, என்ன?’’

போட்டோகிராபர் ‘டெரன்ஸ் டொனோவன்’தான் கடந்த ஆண்டுக்கான பைரேலி காலண்டரை என் முன் எடுத்துப் போட்டார்.

‘ஸ்டன்னிங் பியூட்டிஃபுல்.’

ஒவ்வொரு பக்கத்திலும், துக்கிச் சாப்பிடக்கூடிய அழகிகள் ஆக்கிரமித்திருந்தார்கள்.

‘‘இந்த வருடம், வித்தியாசமா ஒரு ஆஃப்ரிக்கன் மாடலை வைத்துச் செய்யப்போகிறோம். நீதான் அந்த மாடல்’’ –டெரன்ஸ், ஒவ்வொன்றாக என்னிடம் விளக்க ஆரம்பித்தார்.

ஷூட்டிங் முடிந்தபோது என் படம் ‘அட்டை’க்குத் தேர்வாகி இருந்தது.

ஒரு மாடலாக, நான் வேகவேகமாக வளர்ந்தேன். பாரிஸ், மிலன், நியூயார்க் என்று பறந்தேன். பணம், மழைபோல் கொட்ட ஆரம்பித்தது. மிகப்பெரிய கமர்ஷியல் விளம்பரங்கள் தேடி வந்தன. ‘ரெவ்லான்’ விளம்பரத்தில் சின்டி கிராவ்ஃபோர்டு, கிளாடியா ஸ்கிஃபர், லாரன் ஹுட்டன் ஆகியோருடன் காட்சியளித்தேன். எல்லீ, கிளாமர், இத்தாலியன் வாக்ய் மற்றும் பிரிட்டிஷ், அமெரிக்கன் வாக்ய் போன்ற உலகின் முன்னணி ஃபேஷன் பத்திரிகைகளில் இடம் பிடித்தேன். ஜேம்ஸ்பான்ட் படத்தில்கூட நடித்தேன்.

ஆனால், வெற்றிகரமான இந்த வாழ்க்கைப் பயணத்தில், என் பழைய தழும்புகள் எதுவும் மறையவில்லை. எல்லாம் அப்படியே இருந்தன. அந்த சின்னஞ்சிறிய துவாரம் வழியே ஒரு சொட்டு யூரின் மட்டுமே வெளியேறியது. ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கும்போதும் எனக்கு பத்துப் பதினைத்து நிமிடங்கள் தேவைப்பட்டது. மாதவிடாய் நேரம் என்றால், இந்தக் கொடுமை பலமடங்கு வீரியத்தோடு இருக்கும். படுக்கைக்குச் செல்லும் ஒவ்வொரு இரவும், ‘தூக்கத்தின்போதே செத்துவிட்டால் தேவலாம்’ என்று நினைப்பேன்.

முன்பு ஒருநாள் சித்தப்பா வீட்டில் இருந்தபோதே, மாதவிடாய் நேரத்தில் மயங்கி விழுந்துவிட்டேன். சித்திதான் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள். ஆனால், உண்மைக் காரணம் என்னவென்பதை நான் டாக்டரிடம் சொல்லவில்லை.

‘‘உதிரப்போக்கை நிறுத்தணும்னா, கர்ப்பத்தடை மாத்திரை ஒண்ணுதான் தீர்வு. வேற வழியில்லை’’ என்றார் டாக்டர்.

எல்லா டாக்டர்களும் இதையேதான் சொன்னார்கள்.

இந்த மாத்திரைகள் எனக்குள் வேறு மாதிரியான விளைவுகளை உண்டு பண்ணியது. என் மார்பகங்கள் பெரிதாகத் தொடங்கின. உடல் எடை கூடியது.

‘இந்த வேதனைக்கு, உதிரப்போக்கையே தாங்கிக்கலாம்’ என்று தோன்றியதால், மாத்திரைகளை நிறுத்தினேன்.

மீண்டும் வலி.

‘‘சித்தி! ஸ்பெஷல் டாக்டரைப் பார்த்தா நல்லா இருக்கும்’’

‘‘பார்த்து? என்னன்னு அவர்கிட்ட சொல்வே?’’

சித்தியின் கேள்விக்கு என்ன அர்த்தம் என்பது தெரியும்.

‘ஆஃப்ரிக்க பழங்குடிப் பெண், தன் அந்தரங்கத்தைப் வெள்ளைக்காரனிடம் காட்டுவதா? எவ்வளவு பெரிய குற்றம்!’

காலங்கள் உருண்டோடின. இப்போது நான் சொந்தக் காலில் நிற்கிறேன். ஒய்.எம்.சி.ஏ தோழியை அழைத்துக்கொண்டு டாக்டர் ‘மேக்ரே’வை சந்தித்தேன்.

‘‘டாக்டர். நான் சோமாலியாவில் இருந்து வர்றேன். எனக்கு…’’ அடுத்த வாக்கியத்தை முடிக்கவில்லை.

‘‘இட்ஸ் ஓகே. சரி பண்ணிடலாம். போய் ட்ரெஸ்ஸை மாத்திட்டு வா’’ என்றார்.

நர்ஸை கூப்பிட்டு, ‘‘இங்க, சோமாலி தெரிஞ்ச லேடி இருக்காங்கல்ல. அவங்களையும் கூட்டிட்டு வாங்க.’’ என்றார்.

ஆனால், வந்தது லேடி இல்லை ஆம்பிளை.

அவன் முகத்தில் மகிழ்ச்சியே இல்லை.

‘‘உண்மையிலேயே உனக்கு விருப்பம்னா, இவங்க திறந்து விடுவாங்க. ஆனா, இது நம்ம பன்பாட்டுக்கே விரோதம். இது உங்க வீட்டுக்கு தெரியுமா?’’ என்றான்.

‘‘தெரியாது’’

‘‘முதல்ல அவங்ககிட்ட பேசு.’’ -அவன் ஒரு அக்மார்க் சோமாலியன். போய்விட்டான்.

கடந்த வருடமே நான் இந்த அறுவை சிகிச்சையை செய்திருக்கவேண்டும். ஆனால், அப்போது சில நடைமுறை சிக்கல்கள் இருந்தன. டாக்டர். மேக்ரே மிகவும் நல்லவர். அவருக்கு நான் எப்போதுமே கடமைப்பட்டிருக்கிறேன்.

‘‘நீ மட்டும் இல்லை வாரிஸ். குடும்பத்துக்குத் தெரியாமல் எகிப்திலிருந்தும், சூடானிலிருந்தும், சோமாலியாவிலிருந்து ஏராளமான பெண்கள் இங்கு வருகிறார்கள். பாவம், சில பெண்கள் கற்பமாகக்கூட இருப்பார்கள். என்னால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு சிறப்பாக செய்கிறேன். நீ கவலைப்பட வேண்டாம்’’ என்றார்.

சிகிச்சை முடிந்து மூன்று வாரங்கள் ஆகியிருக்கும்.

ஒருநாள், டாய்லெட்டில் உட்கார்ந்து நான் சிறுநீர் கழித்தபோது…

‘உஷ்ஷ்ஷ்ஷ்…’

ஆஹா! என்ன ஒரு அற்புதம். நான் அடைந்த மகிழ்ச்சியை, அந்த சுதந்திரத்தை… வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. இந்த உலகில் இதைவிட மகிழ்ச்சியான ஒரு அனுபவம் இருக்கவே முடியாது.

1995-ம் ஆண்டு. என்னுடைய வாழ்க்கையை ஆவணமாக்குவதென்று பி.பி.சி தீர்மானித்தது.

‘‘நல்லது. ஆனால், சோமாலியாவுக்குச் சென்றதும் என் அம்மாவைக் கண்டுபிடிக்க நீங்கள் உதவவேண்டும்’’ -டைரக்டர் கெரி பொமிராயிடம் கோரிக்கை வைத்தேன். அவர் ஒப்புக்கொண்டார்.

என் குடும்பம் நகர்ந்ததாக சந்தேகிக்கப்படும் பல்வேறு இடங்களில் பி.பி.சி குழுவினர் தேடத் துவங்கினர்.

சிலர், ‘நான்தான் உன் அம்மா’ என்று வந்தனர்.

‘‘உனக்கும் உன் குடும்பத்துக்கும் மட்டுமே தெரிந்த ரகசியங்கள்னு சிலது இருக்கும். அது என்னன்னு யோசி’’ என்றார் கெரி.

‘‘ஓ… ஆமால்ல! என்னை ‘அவ்டஹொல்’னு எங்க அம்மா கூப்பிடுவாங்க’’

‘‘இந்தப் பேரை அவங்களுக்கு ஞாபகம் இருக்குமா?’’

‘‘நிச்சயமா’’

இப்போது அவ்டஹொல் என்கிற வார்த்தை சீக்ரட் பாஸ்வேர்டாக கொண்டு செல்லப்பட்டது. ஒருநாள் பி.பி.சி ஊழியர்கள் என்னை அழைத்து, ‘‘அநேகமா உங்க அம்மாவை கண்டுபிடிச்சிட்டோம்னு நினைக்கிறோம். அந்தம்மாவுக்கு அவ்டஹோல் என்கிற வார்த்தை மறந்துபோச்சு. ஆனா, தனக்கு வாரிஸ்னு ஒரு பொண்ணு இருந்ததாகவும், அவ லண்டன் தூதரகத்துல வேலை பார்த்தாகவும் சொல்றாங்க’’ என்றனர்.

நாங்கள் உடனடியாக எத்தியோப்பியா பறந்தோம். அங்கிருந்து சிறியரக விமானம் ஒன்றில், ‘கலாடி’க்கு பயணம். எத்தியோப்பிய&சோமாலிய எல்லை கிராமமான அங்குதான், உள்நாட்டுப் போரிலிருந்து உயிர்காத்துக்கொள்ள அகதிகள் முகாம் அமைத்து இருந்தனர்.

கடைசியில் அது என் அம்மாவே இல்லை.

ஆனால், நாங்கள் முயற்சியை கைவிடவில்லை. அந்த கிராமத்தை அங்குலம் அங்குலமாக அலசினோம்.  அப்போதுதான் அந்த வயதான மனிதர் வந்தார்.

‘‘என்னை தெரியுதா? நான்தான் இஸ்மாயில். உங்க அப்பாவோட நெருங்கிய நண்பர். எனக்கு காஸ் வாங்க பணம் தந்தா, நான் உங்கம்மாவை கண்டுபிடிச்சித் தர்றேன்’’ என்றார்.

பி.பி.சி குழு ஒப்புக்கொண்டது.

மூன்று நாட்கள் ஆகிவிட்டது. என் அம்மா வருவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.

அடுத்த நாள் காலை, ஜெரி என்னிடம் வந்து,

‘‘நீ நம்பப்போறதில்லை. அந்த ஆள் வந்துட்டார். அது உங்க அம்மாதான்’’ என்றார்.  நான் அவள் முகத்தைக்கூட பார்க்கவில்லை. முக்காடு அணிந்தபடி ட்ரக்கில் இருந்து இறங்கும்போதே தெரிந்துவிட்டது.

‘‘அம்மா…’’

ஓடிச் சென்று அவளை அணைத்துக் கொண்டேன்.

ட்ரக் வந்தபோது அப்பா தண்ணீர் தேடச் சென்றுவிட்டாராம். ஆனால், என் சின்னத் தம்பி அலி வந்திருந்தான். நானும் அம்மாவும் பல விஷயங்களைப் பேசினோம்.

‘‘அப்பாவுக்கு ரொம்ப வயசாயிடுச்சி. கண் பார்வையும் சரியா தெரியல. அவருக்கு ஒரு கண்ணாடி வாங்கித் தந்தா நல்லா இருக்கும்’’ என்றார் அம்மா.

திடீரென்று, அலி என்னைப் பிடித்துக்கொண்டு அழ ஆரம்பித்துவிட்டான்.

‘‘டேய்! நான் சின்னக் குழந்தை இல்லை. எனக்கு கல்யாணம் ஆகப்போவுது. விட்றா!’’ என்றேன்.

‘‘என்னது கல்யாணமா? உனக்கு என்ன வயசு?’’

‘‘அதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனா, கல்யாணம் பண்ற வயசு’’

ஒரு வழியாக அலி, சமாதானம் ஆனான்.

‘‘எனக்கும் பேரப் பிள்ளையை பார்க்கனும்னு ஆசையா இருக்கு’’ என்றார் அம்மா.

அன்றிரவு நானும் அலியும் நட்சத்திரங்களைப் பார்த்தபடி குடிசைக்கு வெளியே தூங்கினோம். அவன் என்னிடம் நிறைய கேள்விகள் கேட்டான். எனக்கு பழைய ஞாபகங்கள் ஒவ்வொன்றாகத் திரும்பின. நான், மிகுந்த சந்தோஷமாகவும் மிக அமைதியாகவும் உணர்ந்தேன்.

மறுநாள் காலை… விமானம் புறப்படத் தயாராக இருந்தது.

‘‘அம்மா! போதுமான அளவுக்கு நீ உழைச்சிட்டே. இனிமே நீ ஓய்வெடுத்தாகணும். கிளம்பு என்கூட.’’ என்றேன்.

‘‘இல்லை. உங்க அப்பா இங்கதான் இருக்கார். அவரை நான்தான் பாத்துக்கணும். அவர் இருக்கிற இடம்தான் எனக்கு வீடு, நாடு எல்லாமே. முடிஞ்சா ஒண்ணு செய். சோமாலியாவுல எங்களுக்கு ஒரு வீடு வாங்கிக்கொடு. அது போதும்.’’

நான் அவளை இறுக அணைத்துக்கொண்டேன்.

‘‘அம்மா! நான் உன்னை உயிருக்கு உயிராக நேசிக்கிறேன். உன்னைப் பார்க்கத்தான் இங்கு வந்தேன். இதை மறந்துடாதே.’’

இப்போது நான் லண்டன் திரும்பிவிட்டேன். ஆனால், வாழ்க்கையில் நான் பட்ட துன்பங்கள் யாருக்கும் தெரியாமல் மறைந்தே இருந்தது. உலகத்தைப் பொறுத்த அளவில் நான், பிரபலமான ஒரு மாடல்.

மாதங்கள் உருண்டன. ஆண்டு, 1997. உலகின் முன்னணி ஃபேஷன் பத்திரிகையான ‘மேரி க்ளேய்ர்’ உலகின் முன்னணி மாடல் அழகியான வாரிஸை பேட்டி காண வந்தது.

‘‘சொல்லுங்கள். எப்போது உங்கள் போட்டோகிராபரை சந்தித்தீர்கள்? அதுதான் உங்கள் வாழ்க்கையில் திருப்புமுனை இல்லையா?’’

‘‘இல்லை’’

‘‘என்ன?’’

‘‘ஆமாம். நீங்கள் நினைப்பதல்ல என் வாழ்க்கை. என்னிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று தெரியவில்லை லாரா. ஆனால், மாடலிங் பற்றி ஏற்கெனவே நீங்கள் எழுதியிருப்பீர்கள். நான் சொல்ல நினைப்பது அதுவல்ல. எனக்கு சத்தியம் செய்து கொடுத்தால், நான் உங்களுக்கு உண்மைக் கதையைச் சொல்கிறேன்.’’

ரிப்போர்ட்டர் ‘லாரா ஸிவ்’வின் கண்கள் அகல விரிந்தன.

‘‘ஐ டூ மை பெஸ்ட்’’ சொல்லிக்கொண்டே டேப் ரெக்கார்டரை ஆன் செய்தார்.

நான் என் கதையைச் சொல்ல ஆரம்பித்தேன்.

லாராவால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இப்படி ஒரு கதையை கனவிலும் அவர் நினைத்திருக்க மாட்டார். தேம்பித், தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார். என் நெருங்கிய நண்பர்கள்கூட அறிந்திராத உண்மையை, இப்போது உலகமே தெரிந்துகொண்டுவிட்டது.

‘‘ஆனால், செக்ஸ் என்றால் என்ன? இன்றுவரை எனக்குத் தெரியாது. என் வாழ்நாளில் ஒருபோதும் நான் செக்ஸ் இன்பத்தை அனுபவித்ததில்லை. அனுபவிக்கவும் முடியாது. நாங்கள் ஆண்களுக்காக, அவர்களின் தேவைக்காக மட்டுமே படைக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு கன்னிப் பெண் வேண்டும் என்பதற்காக ஐந்து வயதுக்குள்ளாகவே எங்கள் உறுப்பை அறுத்து, க்ளிட்டோரியஸை வெட்டி எறிந்துவிடுகிறார்கள். மீண்டும் எப்போது அவர்களுக்குத் தேவையோ, அதாவது முதலிரவுக்கு முன்பு வெட்டித் திறந்துவிடுகிறார்கள்.

3,000 ஆண்டுகளாக வெட்டவெளியில், எந்தவித மருத்தவ உபகரணங்களும் இன்றி, மயக்கமருந்துகூட இல்லாமல் இந்த அறுவை நடக்கிறது. சிலருக்கு கத்தி, கத்தரிக்கோல்கூட கிடைக்காது. கூமையான பாறைக் கற்கள்தான்.

பெண் உறுப்பு சிதைப்பு - வாரிஸ் டேரியின் கதை
வாரிஸ் டேரி

நான் பிழைத்துவிட்டேன். ஆனால், லட்சக் கணக்கான என் சகோதரிகள்? அறுவையின்போது சிலர், அறுவைக்குப் பின் நோய்த் தொற்று ஏற்பட்டு சிலர், அப்படியே உயிர் பிழைத்தாலும் குழந்தைப் பேற்றின்போது சிலர் என அடுக்கடுக்காய் செத்துப் போகிறார்களே! அவர்களை யார் காப்பாற்றுவது?

மத அடிப்படைவாதிகளால், என் உயிருக்கு ஆபத்து என்று நண்பர்கள் அஞ்சுகிறார்கள். இருக்கட்டும் அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. பெண்களின் பிறப்றுப்பை சிதைக்கவேண்டும் என்று குரானில் எங்காவது கூறப்பட்டிருக்கிறதா? சொல்லுங்கள்!’’

-பேட்டி வெளியான பிறகு வந்த அழைப்புகளை அடுத்து, ஐ.நா. அரங்கில் இப்படித்தான் பேசினேன்.  இப்போது, பெண் உறுப்பு சிதைத்தலுக்கு எதிரான இயக்கத்தின் சிறப்புத் தூதுவராக ஐ.நா என்னை நியமித்திருக்கிறது.

அடிப்படைவாதிகளால், என் உயிருக்கு ஆபத்து இருப்பதும் தெரியும். முதலில், அந்தக் கிழவனிடமிருந்து கடவுள் என்னைக் காப்பாற்றினார். பிறகு சிங்கத்திடமிருந்து. அவர் என்னை உயிரோடு வைத்திருப்பதற்கான காரணம் இதுதான். ஒரு நாள், இந்தக் கொடுமையிலிருந்து அணைத்துப் பெண்களும் வெளியேறி சுதந்திரம் பெறுவார்கள்.

வாரிஸ், அதற்காகத்தான் உழைத்துக்கொண்டிருக்கிறாள்.

________________________________________________________

ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிகையில் வெளியான கட்டுரையின் அடிப்படையில் மொழிபெயர்க்கப்பட்டது.

குறிப்பு -1:

இந்தக் கட்டுரைக்குப் பிறகு, ‘டெஸர்ட் ஃப்ளவர்’ என்கிற வாரிஸ் டேரியின் டாகுமென்ட்டரி படத்தைப் பார்த்தேன். அதில் மூன்று வயதில் தனக்கு கந்து அகற்றம் செய்யப்பட்டதாக வாரிஸ் கூறுகிறார். வாரிஸ் டேரியின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் ஐந்து வயது என்றுதான் உள்ளது. அதேபோல், ஒய்.எம்.சி.ஏ.வில் சோமாலியப் பெண்ணுடன் தங்கியதாக ரீடர்ஸ் டைஜஸ்ட் குறிப்பிடுகிறது. ஆனால், படத்தில் வெள்ளைக்காரப் பெண் வருகிறார்.

ரீடர்ஸ் டைஜஸ்ட், பள்ளிக்கூட வாசலில் போட்டோகிராபர் Mike Goss-ஐ வாரிஸ் சந்தித்ததாக எழுதியிருக்கிறது. ஆனால், படத்தில் மெக்டொனால்டில் சந்திப்பதாக வருகிறது. வாரிஸின் அதிகாரப்பூர்வ இணையதளம் உள்ளிட்டவை போட்டோகிராபர் டெரன்ஸ்’தான் வாரிஸை கண்டெடுத்ததாக சொல்கின்றன. மைக் பற்றிய குறிப்புகள் காணப்படவில்லை.

படத்தில், மொகாதிஷுவுக்கு தப்பியோடும் வாரிஸ், வழியில் ஒரு நள்ளிரவில் லாரியில் பயணம் மேற்கொள்கிறார். அப்போது ஒருவன் அவளை கற்பழிக்க முயற்சிக்கிறான். இது ரீடர்ஸ் டைஜஸ்ட் கட்டுரையில் இடம்பெறவில்லை. அதேபோல, பாஸ்போர்ட் வேலிடிடிக்காக அங்கிருக்கும் வெள்ளைக்காரர் ஒருவருடன் கல்யாணம் ஆனதுபோல் நடித்து அதிகாரிகளை நம்ப வைக்கிறார் வாரிஸ்.

கணவனாக நடிப்பவர் வாரிஸை சின்ஸியராக காதலிக்கிறார். ஆனால், வாரிஸால் அதை ஏற்கமுடியவில்லை. இதனிடையே டிஸ்கொதேவில் சந்தித்த தனா என்கிற கருப்பு இளைஞனுடன் வாரிஸுக்கு காதல் பிறக்கிறது. அவள் கர்ப்பமாகிறாள். பிறகு முறைப்படி டைவர்ஸ் பெற்று தனாவுடன் இணைகிறாள். இதுவும் ரீடர்ஸ் டைஜஸ்ட்டில் இல்லை.

குறிப்பு -2

பெண் உறுப்பு சிதைப்பு என்பது பெண்ணின் நரம்புகள் குவிந்த கந்து முனையை வெட்டி அகற்றுவதாகும். இது சோமாலியா உள்ளிட்ட ஆப்பிரிக்கப் பழங்குடி மக்களிடையே சிறுமிகளுக்கு நடைபெறும் ஒரு சடங்கு. கந்து அகற்றம் நடத்தப்பட்ட ஒரு பெண், வாழ்வில் ஒருபோதும் கலவி இன்பத்தை அனுபவிக்க முடியாது. அவள் கலவிக்குத் தகுதியானவளாக இருந்தாலும் அப்பெண்ணால் கலவி உச்சநிலையை அடைய முடியாது.

ஆப்பிரிக்காவில் 28 நாடுகளில் இந்த வழக்கம் தற்போதும் பின்பற்றப்படுகிறது. 1999-&ம் ஆண்டின் கணக்குப்படி, 13 கோடி பெண்களுக்குக் கந்து அகற்றம் நடத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. மேலும், நாளொன்றுக்கு 6,000 பெண்கள் இதற்கு ஆட்படுவதாகவும் சொல்கிறது. பிளேடு, கத்தி, உடைந்த கண்ணாடிச் சில்லுகள் மூலம்தான் கந்து அகற்றப்படுகிறது.

இதில் மூன்று வகையான முறை கடைபிடிக்கப்படுகிறது.

1. பெண்ணின் கந்து முனையை மட்டும் வெட்டி விடுதல்.

2. கந்து முனை மற்றும் புழையின் இரு பக்கத்திலும் உள்ள இதழ்களை வெட்டு விடுதல்.

3. கந்து முனையை அறுத்து, இதழை அறுத்து, புழையின் மேல்பகுதியை நூலால் தைத்துவிடுதல்.

-நன்றி, விக்கிபீடியா.

____________________________________________________________

– திங்கள் சத்யா

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

  1. இஸ்லாத்தை ஏற்று இத்தனை வருடங்களாகியும் பழங்குடியினருக்கான இந்த கொடிய வழக்கத்தை விடாதிருப்பது துரதிர்ஷ்டவசமானது. ஆண்களுக்கு பிறப்புறுப்பின் நுனியை வெட்ட ஹதீதுகளில் ஆதாரம் உண்டு. பெண்கள் இது போன்று செய்வதை இஸ்லாம் தடை செய்கிறது. அந்த மக்களுக்கு இஸ்லாத்தின் உண்மையான போதனைகளை எடுத்துச் சொல்லி இந்த கொடுமையிலிருந்து விடுதலை பெற சமூக ஆர்வலர்கள் முயற்ச்சிக்க வேண்டும்.

    • Who told that Islam is against this cruel practice?

      If I provide proof from Hadis that Muhammad approved this cruel practice, will you accept Islam is wrong and leave the religion?

      Sunan Abu Dawood, Book 41, Number 5251:

      Narrated Umm Atiyyah al-Ansariyyah:

      A woman used to perform circumcision in Medina. The Prophet (peace_be_upon_him) said to her: Do not cut severely as that is better for a woman and more desirable for a husband.

      If your islam or your allah wants to stop this cruel practice, why your muhammad didn’t ask the woman not to cut at all?

      Your knee jerk reaction to this post is just to avoid anyone pointing that this practice is only found among muslim women.

      Even male circumcision is unnecessary and painful. It makes the man less sensitive. I know you will provide some links like “it is for cleanliness”, “it improves health” etc. But no modern medical study support your views. And another thing is that, USA practiced circumcision for nearly 50 years in all new born male babies. But the common medical conscience now had made the practice obsolete.

      If your allah is intelligent, why can’t he create man without fore-skin? Why the little boy have to undergo this painful and blood-shedding procedure to modify what nature has made in his body?

      as a proud atheist, I never made any change in my children’s body. My son is never pierced his ears. Even my daughter got her ear pierced when she wanted to wear ear-rings at the age of 10. It is their body. None of us have the right to modify/mutilate/pierce it without their consent.

      For example, Christian practice of Baptism is entirely symbolic and a child can become atheist in future if he wants. Similarly, a Hindu can remove his “poonool” or “viboothi” in later life. But can a muslim get back his skin in later life if he no longer wants to follow islam?

  2. //பெண் உறுப்பு சிதைப்பு என்பது பெண்ணின் நரம்புகள் குவிந்த கந்து முனையை வெட்டி அகற்றுவதாகும். //

    தமிழச்சி அவர்கள் இது பற்றி சில வருடங்களுக்கு முன்பு விரிவாக, படங்களுடன் எழுதியிருந்தார். இதற்காக கடும் எதிர்ப்பையும் சந்தித்தார். இதுவே அவர் தமிழ்மணத்திலிருந்து நீக்கப்படவும் காரணமானது. அவரது சீரியசான பதிவுகளை வைத்து பதில் பதிவுகளில் காமெடி செய்து இணையத்தை வக்கிரங்களால் நிறைத்த லக்கிலுக் (யோனியை கோணி என்று குறிப்பிட்டு எழுதினார்கள்) போன்றவர்கள் அப்போது லாவகமாக தப்பித்துக் கொண்டதுடன் இன்றும் தொடர்கிறார்கள்.

  3. பிறப்புருப்பை சிதைக்குமாறு குரானில் கூறப்பட்டுழ்ள்ளதா? என்ற கேள்வியின் மூலமும் 3000 ஆண்டுகளாக இக்கொடுஞ்செயல் வழக்கத்திலுள்ளது என்ற தகவல் மூலமும் இஸ்லாம் இதை ஆரம்பித்ததோ, ஆதரிக்கவோ இல்லை என்பது தெளிவாகிறது. இச்செயலை செய்யும் சில அறிவீனர் வேண்டுமென்றால் ஆதரிப்பார்களே தவிர இஸ்லாமிய அடிப்படைவாதிகள் நிச்சயம் எதிர்க்கவே செய்வார்கள்!

    • Sunan Abu Dawood, Book 41, Number 5251:

      Narrated Umm Atiyyah al-Ansariyyah:

      A woman used to perform circumcision in Medina. The Prophet (peace_be_upon_him) said to her: Do not cut severely as that is better for a woman and more desirable for a husband.

      Why your prophet didn’t ban the practice?

  4. முதலில் எனக்கு ஒன்றும் புரியவில்லை.குறிப்புகளை படித்தபின்தான் என்னவென்று புரிந்தது.ஆடு.மாடுகளைவிட வல்லா பெண்களும் வதைபடுவது கொடுமையாயிருக்குது.

  5. //Sunan Abu Dawood, Book 41, Number 5251:

    Narrated Umm Atiyyah al-Ansariyyah:

    A woman used to perform circumcision in Medina. The Prophet (peace_be_upon_him) said to her: Do not cut severely as that is better for a woman and more desirable for a husband.//

    1.இந்த ஹதீஸ் ஆதாரபூர்வமானதா?

    2.இஸ்லாம் கடமை என்று எங்காவது சொல்லியிருக்கிறதா?

    3.ஹதீஸின்(ஆதாரபூர்வமான் ஹதீஸா என்பது பற்றி தெரியாது) படி முன்னதாகவே பழக்கத்தில் இருந்த முறைக்கு ஒருவர் அனுமதி கோருகிறார்,நபியவர்கள் முழுமையாக எடுக்க வேண்டாம் என்று ஆலோசனை கூறுகிறார்,கேட்டு வந்தார் என்ற ஒரே காரணத்தால்.காரணம் அது அவளுக்கு பாதிப்பு என்பதால்.இதை மீறி எவராவது செய்தால் அது நபியின் கட்டளைக்கு எதிராகவே கணிக்கப்படும்

    உண்மையில் தமிழச்சியுடன் இது பற்றி நான் விவாதித்த முஸ்லிம் நண்பர்களை அவர் அப்போது தன் பக்கத்தில் இருந்து நீக்கினார்,இது தான் உண்மை

    • oho… ungalukku porunthaatha karuthu iruntha athu athigarapoorva hadhees illai. Unga logic sagikala!

      So, oru pen vanthu panni-kari thinnalaama-nu keta, athu avanga pazhakkam, so korachala thinnunu mohammadu solluvara?

      oru paiyan mathu aruntharatha patri keta, alava arunthunu unaga muhammadu solluvara?

      athaiyellam theliva sonna avarukku, ithulamattum enna prechannai?

      poosi molugaratha vittutu pillaigala padikka vainga boss…

      • அந்த ஹதீஸ் தரம் பற்றி நான் சொல்லவேயில்லை

        //oru paiyan mathu aruntharatha patri keta, alava arunthunu unaga muhammadu solluvara?

        athaiyellam theliva sonna avarukku, ithulamattum enna prechannai?//

        ஏற்கனவே புழக்கத்தில் இருந்த மதுவை இஸ்லாம் படிமுறை படிமுறையாக தான் தடை செய்தது ஒரேயடியாக இல்லை

        //poosi molugaratha vittutu pillaigala padikka vainga boss…//

        இது என்ன லொஜிக்கா கிண்டலா அல்லது துவேஷமா

    • aprom yen sir Christhava naadugalla intha pazhakkamey illa? unga islamiya naadugal mattumey ithai seikindrana. Ellathaiyum yudhargal melayum christhavargal melayum pazhi pottutu, neenga mattum thapichikillamnu nenaikaatheenga…

  6. அழுகைதான் மிச்சம். மிகவும் உணர்ச்சிகரமான பதிவு. பகிர்விற்கு நன்றி.

  7. வினவுக்கு நன்றி. இதை வாசிக்கும்போதே நெஞ்சு வலிக்கிறது, அனுபவிபவர்களுக்கு …………….

  8. நெஞ்சி பதைகின்றது இந்த கட்டுரை படிக்கும் போது. நாம் உண்மையில் 21 ஆம் நூற்றாண்டில் தான் வசிகின்றோமா?

  9. கேட்க கஷ்டமா தான் இருக்கு..ஆனா என்னா பண்றது?

    வினவு,

    ஆப்ரிக்கா வுல இருக்குறவன் எதையாவது அறுக்கறான், தைக்கிறான். நமக்கு என்னா வந்துச்சு.? அது அவன் பாரம்பரியம் பண்பாடு, அதுல நாம மூக்கை நுழைக்கிறது தப்பு இல்லையா?

    மதம் ஜாதி, பழக்க வழக்கம் எல்லாம் அவனவன் தனிப்பட்ட விருப்பம் . அதுல தலயிட யாருக்கும் உரிமை கிடையாது…

    மாக்ஸிமம்

    • //மதம் ஜாதி, பழக்க வழக்கம் எல்லாம் அவனவன் தனிப்பட்ட விருப்பம் . //
      அநதப் பெண்ணின் விருப்பம் கேட்டுத் தான் செய்தார்களா?

      அவன் அவனதை அவன் அவன் தானே அறுத்துக் கொள்ள வேண்டும்?
      அவனவன் விருப்பமின்றி அடுத்தவன் எப்படி அறுக்கலாம்?

    • உங்க மறுமொழி படிக்க கொடுமையா இருக்கு…ஆனா என்னா பண்றது?

      தமிழ்நாட்ல இருக்கற வினவு எதையாவது எழுதிட்டு போகட்டுமே… நமக்கு என்னா வந்துச்சு.? அது அவன் எழுத்து உரிமை, அதுல மாக்ஸிமம் மூக்கை நுழைக்கிறது தப்பு இல்லையா?

      மனிதனை சக மனிதனாக பார்க்காத, நடத்தாத மதம் மதமல்ல, ஜாதி ஜாதி அல்ல, மனிதன் மனிதனே அல்ல.

      உங்க லாஜிக் ரொம்ப அருமை மாக்ஸிமம்… உங்களை சார்ந்தவர்களுக்காக வருத்தப்படுகிறேன்.

      இது என்னோட எழுத்து உரிமை.

      பாமரன்

    • “ஆப்ரிக்கா வுல இருக்குறவன் எதையாவது அறுக்கறான், தைக்கிறான். நமக்கு என்னா வந்துச்சு.? அது அவன் பாரம்பரியம் பண்பாடு, அதுல நாம மூக்கை நுழைக்கிறது தப்பு இல்லையா?

      மதம் ஜாதி, பழக்க வழக்கம் எல்லாம் அவனவன் தனிப்பட்ட விருப்பம் . அதுல தலயிட யாருக்கும் உரிமை கிடையாது”
      மாக்சிமம் அவர்களே,பார்ப்பனியத்தின் பாரம்பரியத்தினை அப்படியே பெயர்த்து எடுத்து கருத்தாய் பதிவு செய்துள்ளீர், மேலும் தலையிட்டுக்கொண்டே மற்றவர்களை தடுக்கும் நோக்கோடு மூக்கை ஏன் நுழைக்கிறீர்.அவனவன் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு இங்கு இடமில்லை.

  10. Dear Sir,

    Its horrible. I wont be able to read the content after few lines. I dont understand how this barbaric activity comes under religious thought.. I believe all religion has this kind of stupid activity.. God bless them to get right education…

  11. எப்போதும் யாரையாவது திட்டி கட்டுரை போடுவீர்கள். ஆனால் இந்தக் கட்டுரை மிக நெகிழ்ச்சியாக இருந்தது. இன்னும் கட்டுரையிலிருந்து மனம் மீளவில்லை. உங்களுக்கும் வாரிஸுக்கும் வாழ்த்துக்கள்.

  12. இஸ்லாத்தில் கடமையாக்கப்படாத ஒன்றை கடமை போல் செய்வது மறுக்கப்பட்டதாகும்

    நபி அவர் கூறுகிறார்கள்:-

    எனக்குமுன் அல்லாஹ் அனுப்பி வைத்த நபிமார்களுக்கும் உதவியாளர்களூம், தோழர்களும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் அந்தந்த நபியுனுடைய சுன்னத்தை ஏற்று நடந்துள்ளார்கள். இவர்களுக்கு பின்னால் வரக்கூடிய சமூகம் அந்த தோழர்கள் செய்யாததை செய்தாகச் சொல்வார்கள்; அவர்களுக்கு ஏவப்படாததையெல்லாம் செய்வார்கள். எவனொருவன் தனது கையினால் இவர்களுடன் ஜிஹாது செய்கிறானோ, அவன் மூமினாவான். தனது நாவினால் எவன் ஜிஹாது செய்கிறானோ அவனும் மூமினாவான்.எவன் தனது உள்ளத்தால் ஜிஹாது செய்கிறானோ அவனும் மூமினாவான். இதன் பின்னர் ஒரு கடுகளவேனும் ஈமான் என்பது கிடையாது. என நபி அவர்கள் கூறினார்கள். (இப்னு மஸ்வூத் رَضِيَ اللَّهُ عَنْهُ முஸ்லிம்)

    எவர் மார்க்கத்தில் புதுமையை ஏற்படுத்துகிறாரோ அல்லது அவ்விதம் ஏற்படுத்துபவருக்கு இடமளிக்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வினதும், மலக்குகளினதும், மனிதர்களினதும் சாபம் உண்டாகிறது என நபி அவர்கள் நவின்றார்கள். (அலிرَضِيَ اللَّهُ عَنْهُ அபூதாவூது, நஸயீ.)

    ஒரு பள்ளியினுள்ளே அமர்ந்து கூட்டாக “திக்ரு” ஸலவாத்து, ஓதிக்கொண்டிருந்தவர்களை பார்த்து இப்னு மஸ்வூத்رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள், “நான் நபி அவர்களின் தோழர்களின் ஒருவனாக இருந்திருக்கிறேன். நபி அவர்களுடைய காலத்தில் யாரும் இவ்வாறு திக்ரு,ஸலவாத்து ஓதுவதை நான் பார்த்ததே இல்லை. எனவே, நீங்கள் நபி அவர்கள் காட்டித்தராத பித்அத்தைச் செய்கிறீர்கள்” என்று கூறி அவர்களை பள்ளிவாசலை விட்டும் வெளியேற்றி விட்டார்கள்.

  13. “ஆப்ரிக்கா வுல இருக்குறவன் எதையாவது அறுக்கறான், தைக்கிறான். நமக்கு என்னா

    வந்துச்சு.? அது அவன் பாரம்பரியம் பண்பாடு, அதுல நாம மூக்கை நுழைக்கிறது தப்பு

    இல்லையா?

    மதம் ஜாதி, பழக்க வழக்கம் எல்லாம் அவனவன் தனிப்பட்ட விருப்பம் . அதுல தலயிட

    யாருக்கும் உரிமை கிடையாது”

    மாக்சிமம் அவர்களே,

    பார்ப்பனியத்தின் பாரம்பரியத்தினை அப்படியே பெயர்த்து எடுத்து கருத்தாய் பதிவு

    செய்துள்ளீர், மேலும் தலையிட்டுக்கொண்டே மற்றவர்களை தடுக்கும் நோக்கோடு

    மூக்கை ஏன் நுழைக்கிறீர்.அவனவன் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு இங்கு

    இடமில்லை.

  14. தமிழ்நாட்டை விட அதிமாக முடநம்பிக்கை இன்னும் பல இடங்களில் உள்ளது என்பதை வெளச்சம் போட்டு காட்டி விட்டீர்கள்.

  15. அய்யோ! அய்யோ! இப்படியும் ஒரு கொடுமையை நிகழ்த்தலாம் என்ற முதல் சிந்தனை எந்த நாய்க்கு வந்ததோ எந்த நேரத்தில் வந்ததோ! அதை பின் பற்ற செய்த பண்ணி-களுக்கு இதயமே இல்லையா? அவள் பெயர் மருத்துவச்சியா? பிசாசா? 3000 வருசமாவா? நாய்களே பண்ணிகளே உங்கள் பெயர்களை பயன்படுத்தியதற்கு மன்னியுங்கள்! எங்கள் ஊரில் உள்ள சில அரசியல் வாதிகள் பெயரை பயன்படுத்தி திட்டலாம் ஆனால் வீட்டுக்கு ஆட்டோ வரும் என்பதால் மாட்டியது உங்கள் பெயர்தான்!

  16. படிக்கும்போதே இவ்வளவு கொடுமையாத் தெரியுது. அனுபவிக்குறவங்களுக்கு எப்படி இருக்கும்!! ஏனிந்த கொடுமையச் செய்யணும்!

  17. ஆண் துய்ப்பதற்கு, பெண்ணிடம் பெண்குறி மட்டுமில்லையென்றால், மதம் எனும் பெயரால், என்றோ பெண்ணினமே கருவறுக்கப்பட்டிருக்கும். மதத்தின் மட்டமான புத்தியில், இணைவதின் கிளர்ச்சிகூட ஆணுக்கு மட்டுமே சொந்தம்.

  18. அனைத்து இந்தியப் பெண்களின் நன்மைக்காகவும் சிலரை இந்த விஷயம் சென்றடையாமல் காக்க வேண்டும்!!

    ஏற்கனவே காதலர் தினத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரில் ஒரு சகோதரியை வண்டியில் ஏற்றிச் சென்ற சகோதரனையும், அந்த சகோதரியையும் இந்து முன்னணி கும்பல் தாக்கிய விஷயம் எல்லாரும் அறிந்ததே. இப்போ இந்த விஷயத்தை ராமகோபாலன் & இதர அரை டவுசர்கள், மற்ற இசுலாமிய அடிப்படை வாதிகள் பார்த்தால், உடனே இதை இந்தியாவில் அமல் படுத்த வேண்டும் என்று சொல்வார்கள்…ஜாக்கிரதை!! அமல் படுத்திட்டா பெண்கள் எல்லாரும் அடக்க ஒடுக்கமா இருப்பாங்கன்னு சொல்லி அதற்க்கு ஆதரவு திரட்டவும் கெளம்பிடுவாங்க…

    • //இசுலாமிய அடிப்படை வாதிகள் பார்த்தால், உடனே இதை இந்தியாவில் அமல் படுத்த வேண்டும் //
      இஸ்லாத்தில் கடமையாக்கப்படாத ஒன்றை கடமை போல் செய்வது மறுக்கப்பட்டதாகும்

      நபி அவர் கூறுகிறார்கள்:-

      எனக்குமுன் அல்லாஹ் அனுப்பி வைத்த நபிமார்களுக்கும் உதவியாளர்களூம், தோழர்களும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் அந்தந்த நபியுனுடைய சுன்னத்தை ஏற்று நடந்துள்ளார்கள். இவர்களுக்கு பின்னால் வரக்கூடிய சமூகம் அந்த தோழர்கள் செய்யாததை செய்தாகச் சொல்வார்கள்; அவர்களுக்கு ஏவப்படாததையெல்லாம் செய்வார்கள். எவனொருவன் தனது கையினால் இவர்களுடன் ஜிஹாது செய்கிறானோ, அவன் மூமினாவான். தனது நாவினால் எவன் ஜிஹாது செய்கிறானோ அவனும் மூமினாவான்.எவன் தனது உள்ளத்தால் ஜிஹாது செய்கிறானோ அவனும் மூமினாவான். இதன் பின்னர் ஒரு கடுகளவேனும் ஈமான் என்பது கிடையாது. என நபி அவர்கள் கூறினார்கள். (இப்னு மஸ்வூத் رَضِيَ اللَّهُ عَنْهُ முஸ்லிம்)

      அப்படி செய்தால் இஸ்லாத்தில் மறுக்கப்பட்டதாகும்

  19. ரொம்ப மோசமான பசங்கப்பா கண்டிப்பாநம்மூர்ல காட்டிராதிங்க