privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஇந்தியா வல்லரசாகவில்லை, அமெரிக்காவின் அடியாளாகிறது!

இந்தியா வல்லரசாகவில்லை, அமெரிக்காவின் அடியாளாகிறது!

-

இந்தியா வல்லரசாகவில்லை, அமெரிக்காவின் அடியாளாகிறது!

மான ஈனமற்ற அமெரிக்க அடிமைத்தனத்திற்குப் புதிய இலக்கணம் படைத்து வருகிறது, மன்மோகன் சிங் அரசு. மறுகாலனியாக்கக் கொள்கைகளை விசுவாசமாகவும் வெறியோடும் நடைமுறைப்படுத்தி வருவதோடு, அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர்த்தந்திரத் திட்டத்தில் இந்தியாவை இறுகப் பிணைக்கும் நடவடிக்கைகளில் அப்பட்டமாக ஈடுபட்டு, இந்தியாவை அமெரிக்காவின் விசுவாச அடியாளாக வளர்த்தெடுப்பதிலும் புதிய ‘சாதனை’யைப் படைத்து வருகிறது.

அமெரிக்க அதிபர் ஒபாமா கடந்த ஆண்டு நவம்பரில் இந்தியாவுக்கு வந்து இந்தியஅமெரிக்க போர்த் தந்திர முக்கியத்துவமிக்க பேச்சுவார்த்தையைத் தொடங்கி வைத்தார். இப்போது அதன் தொடர்ச்சியாக, ஆண்டுக் கூட்டப் பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்க உயரதிகாரிகளுடன் கடந்த ஜூலை 19ஆம் தேதி டெல்லிக்கு வந்தார், அமெரிக்க வெளியுறவுச் செயலாளரான ஹிலாரி கிளிண்டன். அவரது வருகையையொட்டி, கோடிக்கணக்கான சிறு வியாபாரிகளின்உதிரித் தொழிலாளர்களின் வாழ்வைப் பறிக்கும் வகையில், சில்லறை வணிகத்தில் 51 சதவீதம் அந்நிய நிறுவனங்களை அனுமதிக்கலாம் என்று மைய அரசின் செயலர் குழு பரிந்துரைத்துள்ளது. இது தவிர வங்கி, காப்பீடு ஆகியவற்றிலும் பன்னாட்டு மூலதனத்தை அனுமதிக்கவும், இறக்குமதி தீர்வையைக் குறைத்து சந்தையைத் திறந்துவிட்டு இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இந்தியா வல்லரசாகவில்லை, அமெரிக்காவின் அடியாளாகிறது!

அமைச்சர்கள், அரசுச் செயலர்கள், அதிகாரிகள் மட்டத்தில் நடந்த இந்தப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், அமெரிக்காவும் இந்தியாவும் விடுத்துள்ள கூட்டறிக்கையில், அமெரிக்காவின் உலகு தழுவிய போர்த் தந்திரத் திட்டத்தின் ஓர் அங்கமாக இந்தியா மாறியுள்ளதை உறுதி செய்துள்ளதோடு, இக்கூட்டணியை விரிவாகவும் ஆழமாகவும் முன்னெடுத்துச் செல்ல கடமைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கான் விவகாரத்தில் பரஸ்பரம் இரு நாடுகளும் ஆலோசனை நடத்துவது, ஒத்துழைப்பது, உளவுத்துறை தகவல்களைப் பரிமாறிக் கொள்வது, ஒருங்கிணைந்து செயல்படுவது என்பதை இப்பேச்சுவார்த்தைகள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன. இரானின் எல்லையையொட்டி அமைந்திருப்பதாலும் மத்திய ஆசியப் பகுதியில் கிடைக்கும் எண்ணெய் வளத்தை அரபிக்கடல் பகுதிக்கு எடுத்துச் செல்வதற்கான தரைவழியாகவும் இருப்பதால் ஆப்கானைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே அமெரிக்கா விரும்புகிறது. ஒபாமா அறிவித்துள்ள படைவிலக்கம் பெயரளவில் நடக்கும் அதேசமயம், ஆப்கானில் தனது அடியாளான இந்தியப் படைகளை அதிகரித்துக் கொண்டு மேலாதிக்கம் செய்யவே அமெரிக்கா விரும்புகிறது. அதற்காகவே மத்திய ஆசியா குறித்த இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன.

இது மட்டுமின்றி, ஆப்பிரிக்காவிலும் உலகின் பிற பகுதிகளிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்பட முன்முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருதரப்பும் ஜூன் 2011இல் மத்திய ஆசியா குறித்து டெல்லியிலும், ஜூலை 2011இல் மேற்காசியா குறித்து வாஷிங்டனிலும், தென் அமெரிக்கக் கண்டத்து நாடுகள் மற்றும் கிழக்காசியா குறித்து செப்டம்பரிலும் பேச்சுவார்தைகள் நடத்தவுள்ளன. இனி ஆண்டுதோறும் இந்தியஅமெரிக்க போர்த்தந்திர முக்கியத்துவமிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்றும், அடுத்த பேச்சுவார்த்தைகள் வருமாண்டில் வாஷிங்டனில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் இந்திய இராணுவம், அமெரிக்காவின் அடியாளாக உலகெங்கும் போர்த் தாக்குதல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்திய அரசு உருவாக்கியுள்ள அணு விபத்து இழப்பீடு சட்டத்தை, அமெரிக்கவின் துணை இழப்பீடு உடன்படிக்கையின்படி (CSC) மாற்றியமைத்துக் கொள்ளுமாறும், இதற்காக சர்வதேச அணுசக்தி முகமையுடன் பேசி ஏற்பாடு செய்யுமாறும் இந்திய அரசை ஹிலாரி கேட்டுக் கொண்டுள்ளார். அணுஉலை விபத்து தொடர்பாக அமெரிக்கா உருவாக்கியுள்ள துணை இழப்பீடு உடன்படிக்கையானது, அணு விபத்து ஏற்பட்டால், அணுஉலைகளை விற்பனை  செய்த முதலாளிகளை விபத்துக்குப் பொறுப்பாக்குவதில்லை. அதிகபட்சம் ரூ.2000 கோடிக்கு மேல் நட்டஈடு கோருவதையும் தடைசெய்கிறது. இந்தியச் சட்டம்  வழங்கியுள்ள  அற்ப பாதுகாப்பையும் ஒழித்துக்கட்டி, அமெரிக்கா உருவாக்கியுள்ள ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு நிர்பந்திக்கவே ஹிலாரி இங்கு வந்துள்ளார். தீராத கடன் சுமையாலும் பொருளாதார நெருக்கடியாலும் அமெரிக்கா தத்தளிக்கும் நிலையில், காலாவதியான,பேரழிவை விளைவிக்கக் கூடிய அணுஉலைகளை வாங்கி,  அமெரிக்க அணுசக்தி முதலாளிகளுக்குச் சேவைசெய்ய காங்கிரசு அரசு துடிக்கிறது. ஜப்பானில் புகுஷிமா அணுஉலை விபத்து நடந்து பேரழிவு ஏற்பட்ட பின்னரும், தான் நிறைவேற்றியுள்ள சட்டத்தின் விதிகளை நாடாளுமன்றத்தில் இன்னமும் சமர்ப்பிக்காமல் மன்மோகன் அரசு இதற்காகவே இழுத்தடித்து வருகிறது.

இதுதவிர, உயர் கல்வித்துறையில் இரு நாடுகளும் பரஸ்பரம் கூட்டுறவு பெறும் வகையில் வரும் அக்டோபரில் உச்சி மாநாடு நடைபெறும் என்றும், பள்ளிக் கல்விக்கு அடுத்துள்ள உயர்கல்வி அனைத்திலும் இது மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, அந்நிய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை இந்தியாவில் தாராளமாக அனுமதித்து, அவை இலாபம் சம்பாதிக்கும் கூடாரங்களாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடக்கின்றன.

இவ்வாறு, அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர்த் தந்திரத் திட்டம் நிறைவேற்றப்படுவதை உறுதிப்படுத்தவும், தனது விசுவாச அடிமை நாடான இந்தியாவில் அதற்கான பணிகளை மேற்பார்வையிடவும்தான் அமெரிக்க வெளியுறவுச் செயலரான ஹிலாரி கிளிண்டன் இந்தியாவுக்கு வந்தார். இப்போர்த்தந்திர முக்கியத்துவமிக்க பேச்சுவார்த்தைகளின் ஓர் அங்கமாக சென்னையில் தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நிதிச் சந்தைக்கான மையமாக சென்னைசோழிங்கநல்லூரில் உருவாக்கப்படும் புதிய நிதி நகரத்தின் ஏற்பாடுகள் பற்றி அறிந்து கொள்ளவும், அப்படியே ஒரு சுற்றுலா போல சென்னையைப் பார்க்கவும்தான் அவர் வருகை தந்தார்.

இந்தியா வல்லரசாகவில்லை, அமெரிக்காவின் அடியாளாகிறது!ஆனால், இந்த உண்மைகளை மூடிமறைத்துவிட்டு ஹிலாரி சென்னைக்கு வந்ததற்கு முக்கியத்துவம் இருப்பதாகவும், அவர் ஜெயலிலிதாவைக் கோட்டையில் சந்தித்ததைப் பற்றியும், பின்னர் மாணவர்களுடன் உரையாடியதையும் அடிமை விசுவாசத்தோடு தமிழக கிசுகிசு பத்திரிகைகள் ஏற்றிப் போற்றிக் கொண்டிருக்கின்றன. இந்தியத் தரகுப் பெருமுதலாளிகள், உலகின் இதர ஏழை நாடுகளில் முக்கியத்துவமற்ற துறைகளில் தமது சந்தையை விரிவுபடுத்தி ஆதாயமடைய அமெரிக்காவின் போர்த்தந்திரத் திட்டம் சாதகமாக இருப்பதால், அமெரிக்க விசுவாசத்தோடு இதனை வரவேற்று ஆதரிக்கின்றனர். தரகுப் பெருமுதலாளிகளின் நலன் இங்கே தேசிய நலனாகச் சித்தரிக்கப்பட்டு நாடும் மக்களும் அமெரிக்க அடிமைகளாக்கப்படுகின்றனர். அப்பட்டமாகவும் மூர்க்கமாகவும் நடந்துவரும் இத்தாக்குதலை எதிர்த்துப் போராட எந்த ஓட்டுக்கட்சியும் முன்வரவில்லை.

அன்று, கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியை இந்தியாவில் நிலைநாட்டுவதற்கு வங்காளத்தின் தளபதி மீர்ஜாபர், ராபர்ட் கிளைவுக்கு விசுவாசமாச் சேவை செய்ததைப் போல, இன்று அமெரிக்காவின் மேலாதிக்கத்தை இந்தியாவில் திணிப்பதற்கு மன்மோகன்சோனியா கும்பல் விசுவாச அடியாளாகி நிற்கிறது. நாட்டு விரோத, மக்கள் விரோத, அபாயகரமான இந்தத் துரோகக் கும்பலை வீழ்த்தாவிட்டால், அமெரிக்காவின் போர்த் தேரின் பின்னே இழுத்துச் செல்லப்பட்டு நாடே பேரழிவுக்குள் தள்ளப்பட்டுவிடும்.

____________________________________________________________________

– புதிய ஜனநாயகம், ஆகஸ்டு – 2011

_____________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்: