privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்நீதிபதிக்கு ரேட்வைத்த ஜெயேந்திரனை தூக்கில்போட ஜன்லோக்பால் அம்பிகள் தயாரா?

நீதிபதிக்கு ரேட்வைத்த ஜெயேந்திரனை தூக்கில்போட ஜன்லோக்பால் அம்பிகள் தயாரா?

-

ங்கும், இங்கும், எங்கும், தூணிலும், துரும்பிலும், எப்.எம்மிலும், சானலிலும், தினசரியிலும், எஸ்.எம்.எஸ்சிலும், மீஸ்டு காலிலும் கூட எல்லாவற்றிலும் ஊழல் ஒழிப்பு போர் பொங்கி வழியும் நேரம். அந்த ‘போராட்ட நேரத்திற்கு’ பொருத்தமாக ஒரு ராகம் காஞ்சிபுரத்திலிருந்து ஊளையிடத் துவங்கியிருப்பது உங்கள் காதுகளுக்கு கேட்கவில்லையா?

நீதிபதிக்கு ரேட்வைத்த ஜெயேந்திரனை தூக்கில்போட ஊழல்ஒழிப்பு அம்பிகள் தயாரா?பண ஆதாயத்திற்காக நடக்கும் ஊழலை விட, கொலை செய்துவிட்டு நீதிபதியையே விலைக்கு வாங்கும் ஊழல் பஞ்சமா பாவங்களையும் விட மோசமில்லையா? அப்பேற்பட்ட விஸ்வரூப ஊழலை காஞ்சி மட ஜெயேந்திரன் செய்திருப்பது சமீப நாட்களாக ஊடகங்களில் யாரும் கவனிக்கப்படாமல் ஓரமாய் ஒதுங்கியிருக்கிறது. அதை ஊழல் எதிர்ப்பு போராளிகளின் கவன வெளிச்சத்திற்கு இழுத்துக் கொண்டு வருகிறோம்.

முதலில் சுருக்கமாக பிளாஷ் பேக்: காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் 3.9.2004 அன்று ‘ஆண்டவன்’ சன்னிதானமான அந்த கோவில் வளாகத்திலேயே கொல்லப்பட்டார். இந்த புண்ணிய ஷேத்திரத்தில் இப்படியான புண்ணிய செயலை செய்வர்  என்று சங்கர மட சங்கராசாரிகளான ஜெயேந்திரனும், விஜயேந்திரனும் கைது செய்யப்பட்டனர். மேலும் மட மேலாளர் சுந்தரேச அய்யர், ரகு, ரவி சுப்பிரமணியன், அப்பு என்று ரவுடிகள் முதல் அக்ரஹாரத்து பூணூல் மாஸ்டர்கள் வரை அனைவரும் கைது செய்யப்பட்டு மொத்தம் 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

முதலில் இந்த வழக்கு செங்கல்பட்டு விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. ஜெயா மாமியோடு ஏதோ பிசினஸ் பிரச்சினையால் சண்டை மூண்டு சங்கர்சாரிஸ் டூ விட்ட நேரமாதலால் வழக்கு ஜரூராக நடந்து வந்தது. எனவே இந்த வழக்கு தமிழ்நாட்டில் நடந்து வந்தால் நீதி கிடைக்காது என்று நரித்தனமாய் பொங்கிய ஜெயேந்திரன் வேறு மாநிலத்தில் விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவாள் அதிகாரம் டெல்லி வரை கொடி கட்டிப் பறப்பதால் நீதிபதிகளும் வழக்கு விசாரணையை புதுச்சேரி நீதிமன்றத்திற்கு மாற்றி உத்திரவிட்டனர்.

அதன்படி 2006-ஆம் ஆண்டு முதல் புதுவை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இதே ஆண்டில் கருணாநிதி அரசு தமிழகத்தில் பதவியேற்கிறது. அவாள்களின் உள்ளம் கவர்ந்த தளபதி ஜெயேந்திரனை காப்பாற்ற விரும்பிய தி.மு.க அரசு அதற்கு பக்க பலமாக துணை நின்றது. ஆரம்பத்தில் நீதிபதி சின்ன பாண்டியும், பின்னர் நீதிபதி கிருஷ்ணராஜூம் விசாரிக்க தற்போது நீதிபதி ராமசாமி விசாரித்து வருகிறார். இதுவரை 170 சாட்சிகளிடம் விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை நடந்து முடிந்துள்ளது.

அவாள்களின் அதிகார ஆதரவோடும் தி.மு.கவின் உறுதுணையோடும் 92 பேர் பல்டி சாட்சிகளாக மாற்றப்பட்டார்கள். இதில் அப்ரூவர் ரவி சுப்பிரமணியம், சங்கரராமன் மனைவி பத்மா உட்பட பெருந்தலைகளே உண்டு. இந்நிலையில் வரும் 5-ம் தேதி வழக்கறிஞர் வாதம் நடப்பதாக இருந்தது. இந்த நேரம் வழக்கறிஞர் சுந்தர்ராஜன் என்பவர் இந்த வழக்கு விசாரணைக்கு  தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில் நீதிபதி ராமசாமியுடன் ஜெயேந்திரன் மற்றும் சிலர் தொலைபேசியில் உரையாடும் ஆடியோ சி.டியை தாக்கல் செய்து அதில் மை லார்டுக்கு இந்த லார்டு லபக்தாஸ் ரேட் பேசும் விசயத்தை வெளியே கொண்டு வருகிறார். இதை விசாரிக்க வேண்டுமென்று இவரது வழக்குரைஞர் மணிகண்டன் வாதிட்டதை ஏற்றுக்கொண்ட நீதிபதி சுகுணா புதுச்சேரி கோர்ட்டில் நடைபெறும் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணைக்கு தடை விதித்தார். இந்த மனு பற்றி 8 வாரத்தில் பதில் அளிக்கும்படி உயர்நீதிமன்ற விஜிலென்ஸ் பதிவாளருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.

அந்த ஆடியோ மேட்டரில் கௌரி எனும் பாப்பாத்தியம்மாள் பார்ப்பன மொழியில் பார்ப்பன மேலாண்மையோடு உரையாடலை ஒருங்கிணைக்க கான்பிரன்ஸ் காலில் ஜெயேந்திரன் ‘அருள்’வாக்கு ஓதுகிறார். எல்லாம் ஒரு பத்து நாட்களுக்குள் அனுப்பி விடுவதாக மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். நீதிபதியோ நமஸ்காரத்தை சொல்லி, தனக்கு அவசர பணத் தேவை இருப்பதால்தான் இந்த அவசரம் என்று வழிய, ஜெயேந்திரன் அதெல்லாம் பிரச்சினை இல்லை கடன் வாங்கியாவது உடன் அனுப்புவதாக வலியுறுத்த, பின்னர் அந்த கௌரி பெரியவாளே சொல்லியாச்சு இனியாச்சும் நம்பி ஆகிற வேலையை பாருங்கோ என்பது போல முடித்து வைக்கிறார்.

இந்த உலகில் என்னன்ன நீதி, சாட்சியங்கள், சந்தர்ப்ப சூழ்நிலை என்று என்னென்ன இருக்கிறதோ அத்தனையின் படியும் ஜெயேந்திரன் ஒரு பச்சையான கொலைகாரன் என்பதை யாரும் மறுப்பே இன்றி ஏற்க முடியும். இருந்தும் அத்தனை வழிகள் மூலமும் இந்த வழக்கினை ஒன்றுமில்லாததாக்க ஜெயேந்திரன் முயன்று அதில் வெற்றியும் பெற்ற நிலையில்தான் இந்த கிளைமாக்ஸ் ஊழல். அந்த அளவு மோசடியில் கண்ணும் கருத்துமாய் இருக்கிறார் இந்த குற்றவாளி.

2ஜி ஊழலில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ராசா குற்றவாளி என்பதிலும், அவர் செய்த குற்றத்தை அங்கீகரித்து, ஆதரித்து, வழிகாட்டிய குற்றத்தினை மன்மோகன்சிங் முதல் ப.சிதம்பரம் வரை முழு அரசுமே காரணமென்பதெல்லாம் தற்போது ராசா, கனிமொழி தரப்பு வழக்கறிஞர்கள் ஆணித்தரமாக வைக்கும் வாதமென்பதை வாசகர்கள் அறிந்திருக்கலாம். அதிலும் மன்மோகன் சிங்கையே நீதிமன்றத்தில் வைத்து விசாரணை செய்தால் இதை கேசுவலாக நீருபிப்போம் என்று சவால் விட்டதெல்லாம் அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு மேளாவில் மூழ்கிவிட்ட துயரம். இருப்பினும் கடைசிக் குற்றவாளி ராசாவையே தூக்கில் போட வேண்டும் என்று கொக்கரித்தவர் ‘காந்தியவாதி’ அண்ணா ஹசாரே.

ராசாவாவது சில பல மில்லியன் கோடி ரூபாய் இழப்புக்கு காரணமானவர். அதுவும் அரசின் கொள்கையின் படி நடந்த கொள்ளை முடிவு என்றாலும் அதற்கே தூக்கு என்றால் ஜெயேந்திரனது குற்றம் அதைவிட பலமடங்கு கொடியது.

ஏனெனில் ஜெயேந்திரன் ஒரு அப்பாவியை கொன்றதோடு, அந்தக் கொலை குறித்து நடக்கும் வழக்கில் சாட்சிகளை விலைக்கு வாங்கியதோடு, இறுதியில் தீர்ப்பு தர இருக்கும் நீதிபதிக்கே விலை பேசியிருக்கிறார். ஆக இந்து மதத்தின் சர்வதேச தலைவரும், குற்றவாளிகளை விசாரித்து தண்டிக்க வேண்டிய ஒரு நீதிபதியும் இப்படி அப்பட்டமாக பிசினஸ் பேசுவது போல ரேட் பேசியிருப்பதை பார்த்து இந்த ஊழல் எதிர்ப்பு அம்பிகள் சும்மா இருப்பது ஏன்?

ஊழலுக்கு எதிரான உலகப் போரை துவங்கியிருப்பதாக பீற்றிக் கொள்ளும் இவர்கள் அம்பி அந்நியனாவதைப்போல, காந்தியவாதியாக இருந்து கொண்டே சத்ரபதி சிவாஜியாக மாறும் அண்ணா ஹசாரே வழியில்  பெரிய அம்பி ஜெயேந்திரனுக்கு ஒரு தூக்கோ, என்கவுண்டரோ ஏற்பாடு செய்வார்களா?

ஏனெனில் ஜனலோக்பால் வந்தால் கூட அதில் வரும் ஊழல் வழக்குகளை இத்தகைய நீதிபதிகள்தான் விசாரித்து நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள். அந்த நீதிபதி இனத்தை சேர்ந்தவரையே ஒரு சர்வதேச புகழ் சாமியார் விலைக்கு வாங்குவது என்றால் இது மாதிரி ஊழல் இதுவரை இந்தியாவே கண்டதில்லையே?

சும்மா ஆளே இல்லாத கடையில் ஊழல் ஊழல் என்று கூப்பாடு போடுவதை  விட்டு ஊழலுக்கு இலக்கணமே படைத்திருக்கும்  இந்த ஜெயேந்திரனை நரபலி கொடுத்தால் ஊழல் எதிர்ப்பு சாமிக்கு அளவில்லா ஆனந்தமாக இருக்குமே? செய்வார்களா?

கலெக்டர் ஆபீஸ் பியூனையும், கை வண்டியில் கத்திரிக்காய் விற்கும் பாமரனையும் ஊழலுக்காக தண்டிக்க வேண்டும் என்று சீன் மேல் சீன் போடும் இந்த மேட்டுக்குடி கனவான்கள், தங்களது இனத்தை சேர்ந்த ஆன்மீக தலைவரை மட்டும் கண்டு கொள்ளாத மர்மம் என்ன? இதுதான் இனப் பாசமோ?