Thursday, December 12, 2024
முகப்புஉலகம்அமெரிக்காஇந்திய அணுசக்தித் திட்டம்: மாயையும் உண்மையும்!

இந்திய அணுசக்தித் திட்டம்: மாயையும் உண்மையும்!

-

இந்திய அணுசக்தித் திட்டம் : கூற்றுகளும் உண்மையும் சுவ்ரத் ராஜு

வினவு குறிப்பு: அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் விபத்து நிவாரணம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெறுகின்றன.  இதில் அமெரிக்க நிறுவனங்களை காக்கும் சரத்துக்களை சேர்ப்பதற்கு இந்திய அரசு பெரிதும் முயன்று வருகிறது. எனில் போபாலில் இந்திய மக்கள் பட்ட துன்பம் அணு விபத்து மூலம் திரும்பலாம்.

இந்தக் கட்டுரை அணுசக்தி குறித்த முழுமையான அறிவை வாசகருக்கு நிச்சயம் தரும். இந்தியாவில் ஐம்பதாண்டுகளாக செயல்படும் அணுமின் நிலையங்கள் சொல்லிக் கொள்ளும் வண்ணம் உற்பத்தியை செய்ய முடியாமல் இருப்பதும், இந்நிலையில் எதிர்காலத்தில் அணுமின்சாரம் பற்றிய பிரமைகள் உருவாக்கப்படுவதையும் ஆசிரியர் அம்பலப்படுத்துகிறார். இதனால் அணு ஆயுதம் என்ற ஒற்றைக் குறிக்கோளுக்காகவே அணுமின்நிலையங்கள் இயங்கி வந்திருப்பதையும் அவர் எடுத்துரைக்கிறார். சுதேசி திட்டமாக போற்றப்படும் தோரியம் குறித்த யதார்த்தத்தையும் அவர் விளக்குகிறார். அதன்படி தோரியம் வணிக ரீதியில் சாத்தியமாகாது என்பதோடு உலக அளவில் அது தேவையற்ற ஒன்றாகவும் உள்ளதை கூறுகிறார்.

அமெரிக்க ஏகாதிபத்திய அரசின் நம்பகமான கூட்டாளி அல்லது அடியாள் என்ற நிலையை பெறவே இந்த அணுசக்தி ஒப்பந்தம் உதவும் என்பதையும் ஆசிய அளவில் சீனாவை எதிர்கொள்ள இந்தியாவை அணு ஆயுத நாடாக வைத்திருப்பதை அமெரிக்கா விரும்புவதையும் சொல்கிறார். கூடவே அணுமின்நிலையங்களின் தேவைக்காக எப்போதும் அமெரிக்காவையே நம்பி இருக்க வேண்டிய நிலை வரும் என்பதையும் சொல்கிறார். முக்கியமாக உலக அளவில் அணு மின்நிலையங்கள் வணிக ரீதியில் தோல்வி அடைந்திருப்பதையும், அவற்றின் கழிவை புதைக்கும் பிரம்மாண்டமான செலவையும் வைத்துப்பார்க்கும் போது அதனால் பெரிய நன்மை இல்லை என்பதையும் கூறுகிறார். எனவே அரசியல் ரீதியில் இந்தியாவை அமெரிக்காவின் அடியாளாக வைத்திருப்பது ஒன்றுதான் இந்த அணுசக்தி ஒப்பந்தத்தின் இலக்காக இருக்கிறது. அது உண்மைதான் என்பதை இந்த நீண்ட கட்டுரை விவரங்களோடும், வாதங்களோடும் நிறுவுகிறது. இந்த அரிய கட்டுரையை மொழிபெயர்த்து அனுப்பிய தோழர் அனாமதேயனுக்கு நன்றிகள். வாசகர்கள் இந்த அரிய கட்டுரையை படிப்பதோடும் பலருக்கும் சுற்றுக்கு விட்டு பரப்புமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

__________________________________________________________________________

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு:

மனித உரிமை செயல்வீரரும், இயற்பியலாளருமான சுவ்ரத் ராஜு எழுதிய இந்தக் கட்டுரை, ஜனவரி, 2010-ல் ஆஸ்பெக்ட்ஸ் ஆஃப் இண்டியா’ஸ் எகானமி ஏட்டில் வெளிவந்திருந்தது.  இந்திய அணுசக்தித் திட்டத்தின் தொடக்கம் முதல் இன்று வரையிலான செயல்பாடுகளைப் பற்றிய முழுமையானதொரு கண்ணோட்டத்தைத் தரத்தக்க கட்டுரை இது.

இக்கட்டுரையின் முதன்மையான நோக்கம் அறிவியல் விளக்கம் அளிப்பது அல்ல. மாறாக, அணுசக்தித் துறையின் செயல்பாடு பற்றிய பொதுப் புரிதலை ஏற்படுத்துவதும், தொடர்புடைய அரசியல், பொருளாதார, இராணுவ விவகாரங்களைப் புரியவைப்பதும் ஆகும்.  படிப்பவருக்கு ‘யு’ என்பது அணுப்பிளவுத் தன்மைகொண்ட தனிமம் என்ற அளவுக்கு அறிவியல் தெரிந்தால் போதும் என்று ஆசிரியரே ஓரிடத்தில் சொன்னதால் துணிந்து, பலரும் படிக்கவேண்டுமே என்ற ஆவலில் இந்த சிறப்பான கட்டுரையை மொழிபெயர்ப்பு செய்துவிட்டேன். தவறுகளுக்கு நானே பொறுப்பு. வாசகர்களின் கருத்தை அறிய ஆவலாய் இருக்கிறேன். நன்றி

– அனாமதேயன்.

____________________________________________________________________________

இந்திய அணுசக்தித் திட்டம்

கூற்றுகளும் உண்மையும்

சுவ்ரத் ராஜு

அரசியல் பொருளாதார ஆய்வுக் குழுவின் (RUPE) ஆஸ்பெக்ட்ஸ் ஆஃப் இண்டியாஸ் எகானமி – இதழ் எண் 48ல் [ஜனவரி, 2010] வெளியிடப்பட்டது.

1. அறிமுகம்

அணுசக்தி தொடர்பாக இந்தியாவில் நடைபெறும் பிரதான விவாதங்களில், நவீனத்துவத்துக்கும், வல்லரசு என்ற தகுதிக்குமான ஒரு துருப்புச் சீட்டைப் போலவே அணுசக்தி நெடுநாட்களாகவே முன்னிறுத்தப்பட்டு வருகிறது.  1957ல் இந்தியாவின் முதல் அணுவுலையைத் துவக்கிவைத்துப் பேசும்போது, “அணுசக்திப் புரட்சி என்பது தொழிற்புரட்சியைப் போன்றதே; இந்தியா அணுசக்தித் துறையில் முன்னேறவில்லை என்றால் அது மீண்டும் ஒருமுறை தோற்றுப்போகும். நாம் இத்துறையில் முன்னேற வேண்டும் இல்லையேல் பணிந்து பிறருக்கு வழிவிட்டுப் பின் அதே பாதையில் இழுபட நேரிடும்என்று நேரு விவரித்தார்.[1]

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான சமீபத்திய விவாதத்தில் இவ்விரு கருத்துக்களும் [நவீனத்துவம், வல்லரசு] வலுவாய் புத்தெழுச்சி பெற்று நின்றன.  உதாரணமாக, 2006-ஆம் ஆண்டு ஜார்ஜ் புஷ் இந்தியா வந்திருந்தபோது, டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு அவருடன் நடத்திய நேர்காணலை பிரம்மாண்டமாக வெளியிட்டிருந்தது.[2]  அதன் முதல் பக்கத்தின் கால் பகுதியை ஒரே ஒரு கேள்வியே நிறைத்திருந்தது: “டாய் டு புஷ் [புஷ் இடம் டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் கேள்வி]: இந்தியாவை ஒரு பொறுப்பு மிக்க அணுசக்தி வல்லமையுள்ள நாடாகக் கருதுகிறீர்களா? பதில்: ஆம், கருதுகிறேன்” [3] இது மற்ற முதல் பக்கத் தலைப்புச் செய்திகளைப்போல் நான்கு மடங்கு பெரிதாக அச்சிடப்பட்டிருந்தது! இப்பதில் சந்தேகமில்லாமல், டைம்ஸ் ஆஃப் இண்டியா ஆசிரியர்களையும், இந்திய நிறுவனத்தின் பிற அங்கங்களையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது.

எனினும், வல்லரசுக் கருத்துக்கு ஆதரவான விவாதங்கள் விரிந்த அரசியல் ஆதரவைப் பெற்றுத் தருவதற்குப் போதுமானதல்ல என்று காங்கிரஸ் தலைமை உணர்ந்தது. எனவே, இந்த ஒப்பந்தம் நாம் ‘அணுசக்தித் துறையில் அனாதையாக இருக்கும் நிலைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்கு மட்டுமல்லாமல் நமது வளர்ச்சிக்கும் அத்தியாவசியமானது என்று வலியுறுத்தியது.  ஜஜ்ஜார் என்ற இடத்தில் அனல் மின் நிலையம் ஒன்றுக்கு அடிக்கல் நாட்டிய சோனியா காந்தி, வளர்ச்சிக்கு மின்சாரம் தேவை, மின்சாரத்துக்கு இந்த அணுசக்தி ஒப்பந்தம் தேவை.  ஆக, இந்த ஒபந்தத்தை எதிர்ப்பவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் எதிரிகள் என்று விளித்தார்.[4]

பாராளுமன்றத்தில் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக நடந்த விவாதத்தில் இக்கருத்தும் பிரதானமாக இழையோடியது.  2007-ம் ஆண்டு நவம்பர், 28 அன்று நடைபெற்ற விவாதத்தில், “அடிமட்ட அளவிலான(grass root level) வளர்ச்சிக்கு “சிவில் அணுசக்தித் தெரிவு[civilian nuclear option] அத்தியாவசியமானது என்றும் 2020-ல் இந்தியா 30,000 40,000 மெகாவாட் அணுமின் உற்பத்தி செய்யும் ஆற்றலைப் பெற்றிருக்கும் என்றும் காங்கிரஸ் தரப்பின் முதல் பேச்சாளராக எழுந்த ஜோதிராதித்ய சிந்தியா கூறினார். சிந்தியாவைப் பொருத்தவரை இந்த ஒப்பந்தம் இந்தியாவை விசுவரூபம் கொள்ளச் செய்ய மிக அவசியமாக இருக்கிறது.[5]  2008 ஆம் ஆண்டு ஜூலை 21 அன்று நம்பிக்கைத் தீர்மானத்தின் மீதான விவாதத்தைத் தொடக்கி வைத்த பிரணாப் முகர்ஜி, ஆற்றல் அனைத்துக்கும் தேவைஎன்பதை விளக்கினார். அணுசக்தி இல்லையேல் 2050-ல் நமது மின்சக்திப் பற்றாக்குறை 4,12,000 மெகா வாட்களாக இருக்கும் என்ற அபாயத்தைச் சுட்டிக் காட்டினார்.  அணுசக்தி இப்பற்றாக்குறையை வெறும் 7000 மெகா வாட்களாகக் குறைக்கும் என்றும், மின்சக்தித் தேவைக்கான நெருக்கடியை நிவர்த்தி செய்யும் என்றும் விளக்கிக் கூறினார். [6]

இந்தப் புள்ளிவிவரங்கள் எல்லாம் இந்திய அணுசக்தித் துறையால் தரப்பட்டவையே.  ஆனால், இந்த புள்ளிவிவரங்களுக்கு ஏதாவது அடிப்படை இருக்கிறதா? காங்கிரஸ் பெற்ற அரசியல் வெற்றிக்குப் பிறகும் கூட இந்தக் கேள்வி முக்கியமானதாகவே தொடர்கிறது. முதலில், அமெரிக்க நிர்வாகத்தில் ஏற்பட்ட மாற்றம் இந்தியா அமெரிக்கா இடையிலான அணுசக்திப் பேச்சுவார்த்தையின் வேகத்தை மட்டுப்படுத்தியது; அணுசக்தி ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டு ஓராண்டு கடந்த பின்னும் இந்த பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரவில்லை.  அமெரிக்காவில் இருந்து பெறப்படும் அணு எரிபொருளின் மறுசுழற்சி பற்றிய கருத்து வேறுபாட்டைக் களைவதே நவம்பர் 2009-ல் மன்மோகன் சிங் அமெரிக்கா சென்றதன் முதன்மையான குறிக்கோள்களில் ஒன்றாக இருந்தது.[7]   இவ்வரசு ஏற்கனவே ஏழு நாடுகளுடன் தனித்தனியே அணுசக்தி உடன்படிக்கைகளைச் செய்துகொண்டுள்ளது.  அமெரிக்கா, பிரான்சு மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு அணுவுலை அமைப்பதற்கான நிலமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டது.[8]

இந்த சூழலில், அரசால் முன்வைக்கப்படும் அணுசக்தி உற்பத்தி இலக்குகளின் சாத்தியப்பாடுகள் பற்றிய ஒரு மறுபரிசீலனை அவசியம் செய்யப்பட வேண்டியிருக்கிறது.  இந்தியாவில் அணுசக்தி உற்பத்தி பற்றிய இதுநாள் வரையிலான வரலாற்று அனுபவம் என்ன கூறுகிறது? இந்தியாவின் மின்சாரத் தேவையில் ஒரு முக்கியப் பங்களிப்பை செலுத்த அண்மை எதிர்காலத்தில் அணுசக்தித் துறைக்கு வாய்ப்பு இருக்கிறதா?  அணுசக்தியில் சமூக மற்றும் இராணுவத் திட்டங்களுக்கு இடையிலான இணைப்பு என்ன? அணுஆயுத உற்பத்தியின் மீது இந்த அணுசக்தி ஒப்பந்தத்தின் தாக்கம் என்ன? பிரம்மாண்டமான அணுசக்தி விரிவாக்கத்தை நோக்கி இந்த அரசு முன்னேறவில்லை என்றால் அது ஏகாதிபத்திய சக்திகளை அண்டிப் பிழைக்கும் நிலைக்கு இந்தியாவைக் கொண்டுவிடுமா? இப்படிச் சில கேள்விகளைப் பற்றிக் கீழே விவாதிப்போம்.

2. அணு மின்சக்தி பற்றிய கணிப்புகள்:

அணுசக்தித் தேவை பற்றிய இந்த அரசின் வலியுறுத்தல்களில் இருந்து தொடங்குவோம்.  முன்னர் குறிப்பிட்டது போலவே, அடுத்த சில பத்தாண்டுகளில் அடையத்தக்கதாக சில பெருத்த ஆவலாதித்தனமான கணிப்புகளை அணுசக்தித் துறை முன்வைத்துள்ளது.  இந்தியா தனது நிதி ஆதாரங்களை அணுசக்தி வளர்ச்சியை நோக்கித் திருப்பவேண்டும் என்ற வாதத்தைத் தூண்டும்படியாக இந்த கணிப்புகள் அமைந்துள்ளன.

பல்வேறு ஆய்வுகளைப் பரிசீலித்து, 2050-களில் இந்தியாவின் மின்சாரத் தேவை ஆண்டுக்கு 8 டிரில்லியன் கிலோவாட்-மணிகளாக (kWh) இருக்கும் என அணுசக்தித் துறை 2004-ம் ஆண்டில் மதிப்பீடு செய்தது.[9,10]  2002-2003-ல் மின் உற்பத்தி 0.6 டிரில்லியன் கிலோவாட்- மணிகளாக(kWh) இருந்தது என்றும், இது 13 மடங்கு அதிகரிக்கும் என்றும் அணுசக்தித் துறையின் ஆய்வு குறிப்பிடுகிறது.  மேலும், மக்கள்தொகை அதிகரிப்பைக் கருத்தில் கொண்டபின் (மக்கள் தொகை அதிகரிப்பு சுமார் 1.5 பில்லியனில் [150 கோடி]- நிலைகொள்ளும் எனக் கணிக்கப்படுகிறது) நபர்வாரி மின்சாரப் பயன்பாடு 614 kWh யில் இருந்து 5305 kWh ஆக, சுமார் 9 மடங்கு உயரும் என்றும் இந்த ஆய்வு முன்னறிவிக்கிறது.

அணு மின்சாரம் இல்லாமல் இவ்வளவு பெரிய தேவையை சமாளிக்க சாத்தியமில்லை என்றும் இந்த ஆய்வு வாதிடுகிறது. 2050-களின் மொத்த மின்சாரத் தேவையில் 25 சதவீதத்தை அணுமின் சக்தி வழங்கும் என்றும் இந்த ஆய்வு மதிப்பிடுகிறது.  இக்கூற்றின்படி, 275 ஜிகாவாட் திறன் கொண்ட அணுமின் நிலையங்கள் நிறுவப்பட்டு ஆண்டுக்கு 2 டிரில்லியன் கிலோவாட்-மணி(kWh) அளவுக்கான அணு மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்றாகிறது.

இருப்பினும், அணுசக்தித் துறையின் இந்த ஆரம்ப ஆய்வு, புஷ்- மன்மோகன் சிங் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்னால் 2004-ல் வெளியிடப்பட்டது. அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வந்த நேரத்தில், இந்த அணுசக்தி உற்பத்தி பற்றிய கணிப்புகள் எல்லாம் மேலும் உயர்த்தப்பட்டன.  விவாதங்களில் இன்று சுட்டிக்காட்டப்படும் அணுசக்தி உற்பத்தி தொடர்பான அளவுகள் எல்லாம் அணுசக்தித் துறையின் புதிய கணிப்புகளில் இருந்து எடுத்தாளப்படுபவை.

நவம்பர், 2009 முடிய அணுசக்தித் துறையின் தலைவராய் இருந்த அனில் ககோத்கர், (இடதுசாரிக் கட்சிகளோடு தனது உறவை முறித்துக்கொண்டு அணுசக்தி ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்ல அரசு முடிவெடுத்துவிட்ட சமயத்தில் ஜூலை 4, 2008 அன்று,) இந்திய விஞ்ஞானக் கழகத்தில் உரையாற்றியபோதும்,[11] டாடா அடிப்படை ஆய்வு நிறுவனத்தில் (Tata Institute of Fundamental Research) உரையாற்றியபோதும் (ஜூன் 2009-ல்) மின் தேவை பற்றிய தங்களது கணிப்புகளை அப்படியே இருத்திக்கொண்ட போதிலும், அணுஉலைகளின் மொத்த உற்பத்தித் திறன் பற்றிய தங்களது கணிப்புகளை 250 சதவீதம் உயர்த்திக் காட்டினார்.  இந்த அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறி, இந்தியா குறிப்பிடத்தக்க அளவுக்கு மென்னீர் அணுவுலைகளையும் (LWR) எரிபொருளையும் (யுரேனியம்) இறக்குமதி செய்துகொள்ள அனுமதிக்கப்படுமானால், இந்த அணுஉலை எரிபொருட் கழிவுகளின் மறுசுழற்சி அணுவுலைகளின் உற்பத்தித் திறனை 650 ஜிகாவாட்டுகள் அளவுக்கு உயர்த்தும் என்று அறுதியிட்டுக் கூறினார்! இந்தப் புள்ளிவிவரங்கள்தான் இருவாரங்களுக்குப் பின்னர் பாராளுமன்ற விவாதத்தில் பிரனாப் முகர்ஜியால் எடுத்தாளப்பட்டன.

ஆக, 2050-ம் ஆண்டு வாக்கில் இந்திய மின் உற்பத்தியில் 50 சதவீதத்துக்கும் அதிகமான அளவை அணுமின் சக்தி வழங்கும் என்று ககோத்கர் அனுமானித்தார்.  இந்த அனுமான அளவானது, இன்றைய இந்திய மொத்த மின் உற்பத்தியில் 2.64 சதவீதத்தை மட்டுமே வழங்கும் 4.12 ஜிகாவாட் அணுமின் உற்பத்தித் திறனைப் போன்று சுமார் 150 மடங்கு அதிகம் என்பதைக் கவனிக்கவும்.[12]  ககோத்கரின் கூற்றுக்கு அடிப்படையான இரண்டு வரைபடங்கள் அப்படியே படம் 1ல் தரப்படுகிறது.

இந்திய அரசாங்கத்தின் உயர் அதிகார மட்டத்தில் உள்ளோரால் இவ்வாறான புள்ளிவிவரங்கள் திரும்பத் திரும்ப எடுத்தாளப்படுகின்றன.  2050ம் ஆண்டுகளில் 470 ஜிகாவாட் மின்சாரத்தை அணுசக்தி வழங்கும் என்று சமீபத்தில் இந்தியப் பிரதமர் தனது அனுமானத்தை வெளியிட்டார். [13] இக்கூற்றுக்கான பிறப்பிடம் எதுவென்பது தெளிவாய் இல்லை. எனினும், அது ஒருக்கால் க்கோத்கர் தனது பேச்சில் தெரிவித்த பல்வகை மென்நீர் உலைகள் இறக்குமதி தொடர்பான இரண்டாவது சாத்தியப்பாட்டை அடிப்படையாகக் கொண்ட கூற்றாக இருக்கலாம்.

படம் 1

 

3. அணு மின்சக்தி பற்றிய கணிப்புகளின் சுருக்கமான வரலாறு

இவ்வகை ஆர்வக்கோளாரான கணிப்புகளை அணுசக்தித் துறை கடந்த காலத்திலும் பலமுறை செய்துள்ளது. 1987-ம் ஆண்டில் நிறுவப்பட்ட அணுசக்தித் திறன் 18-20 ஜிகாவாட் அளவுக்கு இருக்கும் என அணுசக்தித் துறையின் முதல் செயலர் ஹோமி பாபா 1962-ம் ஆண்டில் அறிவித்தார்.[14]  எதார்த்தத்தில், 1987-ல் அது பாபாவின் கணிப்பில் வெறும் 5% ஆக, அதாவது 1.06 ஜிகாவாட்டுகளாக மட்டுமே இருந்தது.[15]  “செயல்பாடு இலக்கை மோசமாக நழுவ விட்டுவிட்டது” என்று பாபாவுக்கு அடுத்து வந்த விக்ரம் சாராபாய் 1970-ம் ஆண்டிலேயே ஒப்புக்கொள்ளவேண்டி இருந்தது.[16] இருப்பினும், அச்சமயம் தனது பத்தாண்டுக்கான செயல் திட்ட அறிக்கையை (profile) வெளியிட்ட சாராபாய், 1980-ல் அணுசக்தி 2.7 ஜிகாவாட்டுகள் என்ற இலக்கை அடையும் என்று குறிப்பிட்டார்.  ஆனால், எதார்த்தத்தில் அது இந்த கணிப்பில் 5ல் ஒரு பங்குக்கும் குறைவாக 510 மெகாவாட்டுகளாகவே இருந்தது. இந்த பத்தாண்டு செயல்திட்ட அறிவிப்புக்கு சற்று முன்னர்தான் மூலதனச் செலவை ஈடுகட்டும் வகையில் 500 மெகாவாட் திறன்கொண்ட பெரிய அணுவுலைகளை நிறுவவேண்டிய தேவை இருப்பதாக அவர் முடிவு செய்திருந்தார்.  அதன்படி, ”1972-73 ஆம் ஆண்டுக்குப் பின் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 500 மெகாவாட் திறன்கொண்ட ஒரு புதிய அணு மின் நிலையத்தை அமைக்கவேண்டிய அதீதமான பொறுப்பு நமக்கு இருக்கிறது” என்று அவர் அறிவித்தார்.[17]  இந்த அறிவிப்பு வந்து 35 ஆண்டுகள் கடந்த பின்னர்தான் இந்தியாவின் முதல் 500 மெகாவாட் அணுமின் நிலையம் – தாராப்பூர் 4 – 2005-ம் ஆண்டில் செயல்படத் தொடங்கியது.

1974-ம் ஆண்டின் பொக்ரான் அணுகுண்டு வெடிப்புப் பரிசோதனைக்குப் பின் சிவில் அணுசக்தித் துறையில் அன்னிய ஒத்துழைப்பு சரிந்ததே இலக்குகளில் அடைந்த தோல்விக்குக் காரணம் என்று சில நேரங்களில் குறிப்பிடப்படுகிறது. ஆயினும், 2000 ஆண்டு அளவில், 10000 மெகாவாட் அணுமின் உற்பத்தித் திறன் கொண்ட உலைகளை அமைத்துவிடுவோம் என 1984-ம் ஆண்டில் தனது அணு சக்தி ”செயல் திட்டஅறிக்கை” (profile)யின் வாயிலாக அணுசக்தித் துறை அறிவித்தது.  1989-ல் அணுசக்தித் துறையால் நியமிக்கப்பட்ட கமிட்டி இந்த இலக்கை மறுபரிசீலனை செய்து அதன் சாத்தியப்பாட்டைக் கண்டறிந்ததுடன் நில்லாமல், தன் பங்குக்கு முன்வைக்கப்பட்ட அந்தத் திறன் இலக்கை சற்றே உயர்த்தவும் செய்தது.   இந்தத் திறன் இலக்கு பலமுறை வெளிப்படையாக மேற்கோள்காட்டிப்  பேசப்பட்டுள்ளது.  உதாரணமாக, ” நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் சுமார் 3 சதவீதமாக இருக்கும் அணு மின்சக்தி 2000-ம் ஆண்டில் 10% அளவுக்கு அதிகரிக்கும்படியான வேலைகள், 10000 மெகாவாட் அணுமின் உற்பத்திச் செயல் திட்ட அமலாக்கம் என்ற வகையில் எடுத்துக்கொள்ளப் பட்டுள்ளது” என அணுசக்தி ஆணையத்தின் தலைவர் 1989-ல் எழுதினார்.[18]

இச் செயல் திட்டம் களமிறங்கி ஏறத்தாழ 15 ஆண்டுகள் கடந்த பின்னால் இந்திய கணக்குத் தணிக்கை முதன்மை அலுவலர் (Comptroller and Auditor General of India) அதன் செயல்பாடுகளைப் பரிசீலனை செய்தார்.  அவர் தனது பரிசீலனையின் முடிவாக, “மார்ச் 1998 முடிய ரூ.5291.48 கோடிகளை செலவழித்து இந்தச் செயல் திட்டம் அளித்த கூடுதல் மின் உற்பத்தி பெரிய பூச்சியமே” என எழுதினார்.[19] [அழுத்தம் சேர்க்கப்பட்டது]  மேலும்,  2009ம் ஆண்டு வரையிலும் கூட இந்த அணுமின்சக்தி இந்திய மொத்த மின் உற்பத்தியில் அதே 3% அளவுக்கே நீடிக்கிறது.

இந்த அணுசக்தித் துறை தனது குறுகிய கால இலக்கைக் கூட எட்ட முடிந்ததில்லை.  உதாரணமாக, “இன்றிலிருந்து நான்கு ஆண்டுகளில் அணுசக்தித் துறை 6800 மெகாவாட் உற்பத்தித் திறன் இலக்கை எட்டும்” என்று 2003-ம் ஆண்டு ககோத்கர் அறிவித்தார்.[20]  ஆனால், ஆறு ஆண்டுகள் கழிந்த பின்னும் அணுசக்தி உற்பத்தித் திறன் 4120 மெகாவாட் என்ற அளவிலேயே இருக்கிறது.[21]

4. முப்படிநிலை அணுமின் திட்டம்

அணுசக்தித் துறை தனது முந்தைய வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றியதில்லை என்பது தெள்ளத் தெளிவு.  இந்நிலையில், அவர்களது தற்போதைய கணிப்புகள் நடைமுறை சாத்தியமானவையா? முதன்மையான விசயம் என்னவெனில், அணுசக்தித் துறையின் கணிப்புகள் ஆவலாதித் தனமானவையாகவும், சர்வதேச அளவிலான எதிர்பார்ப்புகளையும் விஞ்சி வெகுதொலைவில் நிற்பவையாகவும் உள்ளன. உதாரணமாக, மசாசுசெட்ஸ் தொழில்நுட்பக் கழகம் (MIT) 2003-ம் ஆண்டு நடத்திய விரிந்த பல்நோக்கு ஆய்வின்படி, 2050-ம் ஆண்டில் உலக அளவிலான அணு மின்சக்தி உற்பத்தித் திறன் 1000 ஜிகா வாட்டுகளாக அதிகரித்து இருக்கும் என கணிக்கப்பட்டு இருக்கிறது.[22]  இதற்கு சற்றும் ஒவ்வாத வகையில், 2050-ல் இந்தியா மட்டும் 650 ஜிகாவாட் அணுமின் உற்பத்தித் திறன் பெற்றிருக்கும் என்கிறது நமது அணுசக்தித் துறை.  அதாவது, உலக உற்பத்தித் திறனில் 65 சதவீதத்தை இந்தியா மட்டுமே பெற்றிருக்குமாம்!

அணுசக்தித் துறையின் இந்த கணிப்புகள் எல்லாம் பாபாவால் முதன்முதலில் 1954-ம் ஆண்டு முன்மொழியப்பட்ட முப்படிநிலை அணுமின் திட்டத்தின் அடிப்படையில் அமைந்தவை.  இத்திட்டத்தை பின்னர் விவரமாக ஆய்வுக்கு உட்படுத்துவோம்.  இடையே, அதன் சாராம்சமான உண்மைகள் இவையே: திட்டத்தில் உள்ள மூன்று படிநிலைகளில் முதல் படிநிலை மட்டுமே யுரேனியத்தை எரிபொருளாகக் கொள்ளும் வழமையான அணுவுலைகளைக் கொண்டிருக்கிறது.  இரண்டாவது, மூன்றாவது படிநிலைகள் முறையே வீரிய ஈனுலைகள் (F.B.Rs) மற்றும் தோரிய அணுவுலைகளைக் கொண்டவை.  இந்த மூன்று படிநிலைகளில் முதல் படிநிலை அணுவுலைகள் மட்டுமே 50 ஆண்டுகளுக்கும் மேலான காலத்துக்குப் பின், ஓரளவுக்கு நிறைவற்ற நிலையில் என்றபோதிலும், செயல்படுத்தப் பட்டுள்ளது.

இரண்டாவது, மூன்றாவது படிநிலைகள் உலக அளவில் எங்குமே வணிக ரீதியாகவும், விரிவாகவும் பயன்பாட்டில் இல்லாத ஒரு தொழில்நுட்பத்தைச் சார்ந்திருக்கின்றன.  வீரிய ஈனுலைகள் பல நாடுகளில் முயன்று கைவிடப்பட்டவை. இந்தியாவின் எதிர்காலக் கனவான தோரியம் உலைகள் எங்குமே இதுவரை வணிகரீதியான செயல்பாட்டுக்கு வந்ததில்லை.

இருப்பினும், நமது அணுசக்தித் துறையின் மின் உற்பத்தி பற்றிய மேற்படிக் கணிப்பில், முதல் படிநிலை அணுவுலைகளின் பங்களிப்பு என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஏதுமில்லை.  கணிப்பின் 90% மின்னாற்றல் திறன் 2வது மற்றும் 3வது படிநிலை அணுசக்தித் திட்டங்களில் இருந்து மட்டுமே வரவேண்டி இருக்கிறது.  ஆக, கிட்டத்தட்ட அணுசக்தித் துறையின் மின் ஆற்றல் பற்றிய முன்மொழிவுகள் அனைத்தும் இல்லாத தொழில்நுட்பத்தையும், சாத்தியமில்லை என்று உலகளவில் கைவிடப்பட்ட தொழில்நுட்பத்தையும் சார்ந்து இருக்கிறது!

இது வெறொரு விசயத்துக்கு இட்டுச் செல்கிறது.  சுயசார்பே அனைத்திலும் முதன்மையானதாய்க் கருதப்பட்ட காலகட்டத்தில் எழுந்த தொலைநோக்குப் பார்வையே இந்த முப்படிநிலை அணுமின் திட்டம்.  இந்தியாவின் யுரேனியத் தாதுவள இருப்போ தரத்திலும், அளவிலும் மிகக் குறைவானது.  உலக அளவிலான அணு உலைகளில் யுரேனியமே மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுவதால் பெரிய அளவிலான சுயசார்பு அணு சக்தித் திட்டதை இந்தியாவால் தாக்குப்பிடிக்க முடியாது. எனவே குறைந்த தரத்திலுள்ள எரிபொருளில் இருந்து சாத்தியப்பட்ட அளவுக்கு சக்தியை உறிஞ்சி எடுக்கும்படியாக இத்திட்டத்தின் இரண்டாவது படிநிலை வடிவமைக்கப்பட்டது. மூன்றாவது படிநிலை இந்தியாவில் விரவிக் கிடக்கும் தோரிய வளத்தில் கவனம் செலுத்தியது.

உலகில் அபரிமிதமான யுரேனிய இருப்பு உள்ளதால் பிந்தைய தொழில்நுட்பங்கள் வேறெந்த நாட்டிலும் பின்பற்றப்படவில்லை.  அண்மை எதிர்காலத்தில் இத் தொழில்நுட்பங்கள் முன்னிலைக்கு வருவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை.  ”குறைந்தபட்சம் அடுத்த 50 ஆண்டுகளுக்காவது ஒற்றைச் சுழற்சி எரிபொருள் முறையே சிறந்த தெரிவு” என்று முன்னர் குறிப்பிட்ட எம்.ஐ.டி ஆய்வு வலியுறுத்திக் கூறுகிறது. அதாவது வழமையான யுரேனிய அணுவுலையே சிறந்த தேர்வு என்கிறது.

இந்தியா தனது இரண்டாவது, மூன்றாவது படிநிலைகளை சுயசார்பாய்க் கட்டியமைப்பதில் வெற்றி காணவில்லை என்பதால், முப்படிநிலை திட்டம் தோற்றுவிட்டது என்று சொல்லுவதே நல்லது.  இருப்பினும், இதில் முக்கியமான விசயம் என்னவென்றால், கொள்கை வகுப்போருக்கு (சுயசார்பை முதன்மைப்படுத்திய) இந்த முப்படிநிலை அணுமின் திட்டம் என்பது இனியும் ஒரு பொருளற்றது. ஏனெனில், கடந்த இருபது ஆண்டுகளில் சுயசார்புக்கான முக்கியத்துவம் என்பது வெகுவாய் நீர்த்துப் போய்விட்டது.

உண்மையில், இந்த அணுசக்தி ஒப்பந்தத்தின் முக்கியமான விளைவுகளில் ஒன்று, சர்வதேச யுரேனிய வர்த்தகத்தில் பங்கேற்கவும், வெளிநாடுகளில் இருந்து அணுவுலைகளை இறக்குமதி செய்துகொள்ளவும் இந்தியா அனுமதிக்கப்பட்டிருப்பதாகும்.  வீரிய ஈனுலை அல்லது தோரியம் அணுவுலை மூலம் தயாரிக்கப்படும் மின்சக்திக்கு ஆகும் செலவைக் காட்டிலும் இவ்வகையில் (யுரேனியம் அணுவுலை மூலம்) உற்பத்தி செய்யப்படும் மின்சக்தி (இறக்குமதி செய்யப்பட்ட போதிலும்) மலிவாய் இருக்கப்போவதால் முப்படிநிலை அணுசக்தித் திட்டத்தின்பால் செலுத்தப்படும் கவனமும் அமைதியாகக் கைகழுவப்படக் கூடும்.  [இந்திய அணுஆயுதத் திட்டத்திற்கு வீரிய ஈனுலைகள் தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்தவை.  ஆகவே கட்டுமானத்தில் இருக்கும் சில அணுவுலைகளுக்கு அப்பால் மேலும் சிலவும் கட்டியமைக்கப்பட சாத்தியம் உண்டு.  ஆனால், அதற்கும் மின்சக்தி உற்பத்தி பற்றிய முன்மொழிவுகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.]

இருப்பினும் மூன்று படிநிலைகளைக் கொண்ட இந்திய அணுசக்தித் திட்டத்தைப் பற்றி கீழே விவாதிப்போம்.

4.1 சுருக்கமான தொழில்நுட்ப விவரிப்பு

இந்தியாவின் யுரேனியக் கனிமவள இருப்பு குறைவானது என்ற ஒப்புதலே இந்த முப்படிநிலைத் திட்டத்துக்கு அடிப்படை. ககோத்கர் கூறியதுபோல, ”அணு மின்சக்திக்கு இந்தியாவில் யுரேனியம் இல்லை”.[23]  பதிலாக, உலக அளவில் ஏராளமான தோரிய இருப்பு கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று.  இந்த சாதகத் தன்மையைப் பயன்படுத்திக்கொள்ளும் பொருட்டுதான் முப்படிநிலை வழிமுறை வடிவமைக்கப்பட்டது.

இந்த முப்படிநிலைத் திட்டத்தின் அடிப்படை நோக்கங்கள் பற்றிய நல்லதொரு ஆய்வை வெங்கடராமன் அவர்கள் எழுதிய நூலில் காணலாம்.[24] மற்றொரு ஆய்வை பாபா அணுசக்தி ஆய்வு மையத்தின் வலைத்தளத்தில் காணலாம்.[25]  இதை மிகச் சுருக்கமாக இங்கு தொகுத்துத் தருகிறோம்.  அணுசக்தித் திட்டத்தின் முதல் படிநிலை அதியழுத்த கனநீர் அணுவுலையைப் (PHWRs) பயன்படுத்துகிறது. இயற்கையில் கிடைக்கும் யுரேனியத்தில் 0.7% அளவே யுரேனியம்-235 (U235) உள்ளது. மற்றது U238. அணுவுலையில் பயன்படும் அணுப்பிளவு எரிபொருள் U235.  எனவே பெரும்பாலும் இயற்கையில் கிடைக்கும் யுரேனியம், மைய விலக்கு விசையை அடிப்படையாகக் கொண்ட அதிவேகக் கடைசல்களைக் கொண்டு  [centrifuges ] U238ஐ பிரித்தெடுப்பதன் மூலமாக  U235இன் விழுக்காட்டை அதிகரித்து செறிவூட்டப்படுகிறது.

அதியழுத்த கனநீர் அணுவுலையில் (PHWR) எரிபொருளை செறிவூட்டுத்தல் இன்றி நேரடியாகப் பயன்படுத்த முடியும்.  இது செறிவூட்டுத்துதலுக்கான செலவை மிச்சப்படுத்துகிறது.  ஆனால், இவ்வகை அணுவுலைகளில் அணுக்கருப் பிளவை ஒரு வரம்புக்குள் கட்டுப்படுத்தி நடத்துவதற்கான தணிப்பானாக [moderator] செயல்படும் கனநீரின் விலை மிக அதிகம் என்பதே இந்த வகை உலைகளின் பாதக அம்சமாகும். இந்த அணுவுலைகளின் செயல்பாட்டின்போது U238 களில் சில புளூடோனியம்-239 (Pu239) ஆக மாற்றமடைவதால் பாபா இவ்வகை அணுவுலைகளைத் தேர்ந்தெடுத்தார்.

இரண்டாவது படிநிலையில், வீரிய ஈனுலையில் (FBR) மேற்சொன்ன புளூடோனியம், முதல் படிநிலையில் பயன்படுத்தப்பட்டு எஞ்சிய யுரேனியக் கழிவுடன் சேர்த்து எரிபொருளாக அளிக்கப்படுகிறது.  இவ்வுலைச் செயல்பாட்டின்போது புளூடோனியம் எரிபொருளாக எடுத்துக்கொள்ளப்படுகையில் அதனுடன் சேர்த்து அளிக்கப்பட்ட யுரேனியக் கழிவையும் புளூடோனியமாக மாற்றி தனக்கான எரிபொருளைத் தானே ஈன்றெடுத்துக் கொள்கிறது.  கோட்பாட்டளவில், இந்த வழிமுறை யுரேனியக் கழிவையும் பயன்படுத்திக்கொள்வதால் இயற்கையில் கிடைக்கும் யுரேனியத்தின் முழு சக்தியையும் உறுஞ்சி எடுத்துவிடுகிறது.

மூன்றாவது படிநிலை வேறுவிதமான ஒரு தற்பெருக்கத்தைக் கொண்டது. வீரிய ஈனுலையின் அணுப்பிளவுச் செயல்பாட்டுப் பகுதி அல்லது மையம் தோரியம்-232 (Th232) ஆல் போர்த்தப்படுகிறது.  இவ்வுலையின் செயல்பாட்டின்போது போர்த்தப்பட்ட தோரியம் யுரேனியமாக (மற்றொரு யுரேனியத் தனிமமாக- isotope ) U233 மாற்றம் அடைகிறது. இது ஒரு அணுப்பிளவு எரிபொருளாகப் பயன்படக் கூடியது.  [இவை யுரேனியத்தின் பொதுவான இரு தனிமங்கள்.  அதாவது, ஒரே இரசாயனக் கூறுகளையும் –properties- மாறுபட்ட பௌதீகக் கூறுகளையும் கொண்டவை.  அவற்றின் மேல் குறிக்கப்பட்டுள்ள எண் –பொருண்மை எண்- அதன் அணுக்கருவில் உள்ள ப்ரோட்டான் மற்றும் நியூட்ரான்களின் கூட்டுத்தொகையைக் குறிக்கும்.  இக்கட்டுரை தொடர்பாக வாசகர் U என்ற வடிவம் தாங்கிய தனிமம் அணுப்பிளவு எரிபொருளாகப் பயன்படக் கூடியது என்ற அளவுக்குத் தெரிந்துகொண்டால் போதுமானது] தோரியத்தில் இருந்து யுரேனியமாக உருமாற்றப்பெரும் இந்த ஆரம்பத் திரட்சி மூன்றாவது படிநிலை அணுவுலையில் எரிபொருளாக அளிக்கப்படுகிறது.  இந்த அணுவுலையின் மையமும் முந்தைய வீரிய ஈனுலையில் போலவே தோரியத்தால் போர்த்தப்படக் கூடியது.  ஆக இந்த அணுவுலைகளின் செயல்பாடு கூடுதலான யுரேனியத்தை U233உற்பத்தி செய்த வண்ணம் இருக்கும். எனவே, இந்தியாவின் ஏராளமான தோரீய இருப்பைப் பயன்படுத்துவதற்கு இந்த முப்படிநிலை வழிமுறை வகை செய்யும் என்று பாபா பரிந்துரைத்தார்.

நடப்பைக் கணக்கில் கொண்டு பார்க்கையில் இந்த முப்படிநிலை அணுசக்தித் திட்டம் பற்றிய பாபாவின் பரிந்துரைகள் காலத்தை முந்தியவையும் நடைமுறைச் சாத்தியம் அற்றவையும் ஆகும் என்பது தெளிவு.  இந்தப் பரிந்துரைகள் செய்யப்பட்டு 55 ஆண்டுகள் கடந்த பின்னும் திட்டம் முதல் படியிலேயே சிக்கிக் கிடக்கிறது.

5. முதல் படிநிலை

முதல் படிநிலை என்பது முப்படிநிலைத் திட்டம் தொடங்கப்படுவதற்கான முதல் படி என்ற அளவுக்கே முக்கியமானது.  பாபாவின் மாபெரும் திட்டத்தின் மீசிறு துளியே இது.  இந்தியாவின் யுரேனிய இருப்பு 10 ஜிகாவாட் [1000 மெகாவாட் = 1 ஜிகாவாட்] திறன் கொண்ட அணுவுலைகள் அமைக்கப்படுவதற்கு மட்டுமே போதுமானது என அணுசக்தித் துறை மதிப்பீடு செய்துள்ளது.  அது ககோத்கரின் 2050-ம் ஆண்டுக்கான இறுதிக் கணிப்பில் வெறும் 2% மட்டுமே.[11]  இந்த சுதேசித் திறனுடன் இறக்குமதி யுரேனியம் மற்றும் அணுவுலைத் திறனையும் இணைக்க அணுசக்தித் துறை திட்டமிடுகிறது.  இந்த இறக்குமதி அணுவுலைகளும் கூட அதிகரிக்கப்போகும் மின்சக்தி 2050-களின் அணுசக்தித் திறனில் அற்பமான ஒரு பின்னமே என்று வெளிப்படையாகவேனும் அணுசக்தித் துறை கூறிக்கொள்கிறது.

இருப்பினும், வணிகரீதியாக செயல்படுத்தப்படப் போவது என்னவோ அணுசக்தித் திட்டத்தின் இந்த முதல் படிநிலையை மட்டுமே.  நாம் முன்னர் குறிப்பிட்டது போலவும், பின்னர் விரிவாய் விவாதிக்க இருப்பது போலவும், இப்படித்தான் நடக்க சாத்தியமுள்ளது.  ஆக, இந்தியாவில் அணு மின் உற்பத்தி பற்றிய நடைமுறை சாத்தியப்பாடுள்ள விவாதம் சாராம்சத்தில் அணுசக்தித் திட்டத்தின் இந்த முதல் படிநிலையைப் பற்றியதாகவே உள்ளது.  இந்தப் படிநிலை (2வது, 3வது நிலைகளுக்கு மாறாக) வழமையான தொழில்நுட்பத்தைக் கொண்டிருப்பதால் இது பற்றிய விவாதம் அணு மின்சக்தி பற்றிய உலகளாவிய விவாதத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது.

கீழ்க்கண்ட முக்கியமான கேள்விகளை நாம் பரிசீலிப்போம்:

  • அணுசக்தி பற்றிய கருத்து உலகளாவிய புத்தெழுச்சி கண்டிருப்பது ஏன்?
  • அணுசக்தி பற்றிய பொருளியல் கூறுகள் பகர்வது என்ன?
  • அணுசக்தி அமைப்புகளால் தோற்றுவிக்கப்படும் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் எத்தகையவை?
  • இக்காரணிகள் இந்தியாவுக்கு எப்படிப் பொருந்துகின்றன?

5.1 அணுசக்தி மறுமலர்ச்சி

பெருத்த மூலதன உள்ளீடு மற்றும் பாதுகாப்புக் காரணங்களால் ஆண்டுகள் பலவாய் மீளா உறக்கத்தில் இருந்த அணுசக்தித் துறை, குறிப்பாக மேலைநாடுகளில், புத்தெழுச்சி பெற்றது போல் காணப்படுகிறது.  [சீனாவைப் போன்ற சில வளர்முக நாடுகளும் அணுசக்தி விரிவாக்கத்துக்கான ஆவல்மிகு திட்டங்களை அறிவித்திருக்கின்றன] தட்பவெப்ப மாறாட்டம் மற்றும் பசுமைக்குடில் வாயு வெளியேற்றம் ஆகியவை தோற்றுவித்த பதற்றம் பகுதியளவுக்கு இந்த புத்தெழுச்சிக்குக் காரணமாக இருக்கிறது. இரண்டாவதும், பெரிதும் வெளிப்படுத்தப் படாததுமான காரணம் புவி-அரசியல் ஆகும். எகானமிஸ்ட் ஏடு தெரிவிப்பதுபோல், “எண்ணை, எரிவாயு வளங்கள் நம்பத்தகாத …அரசுகள் வசம் இருப்பதாக மேலை நாட்டு அரசுகள் அஞ்சுகின்றன.  அணுசக்தித் துறைக்குத் தேவையான மூலப்பொருள் ஆஸ்திரேலியா, கனடா போன்ற நட்புப் பிரதேசங்களில் கிடைக்கின்றன”[27]

கடந்த சில ஆண்டுகளாக இப்படிப்பட்ட விரிவான விவாதங்களும், அதற்குப் பொருத்தமான கொள்கை மாற்றங்களும் நடந்துவரும் வேளையில், பெரிதாய் முன் தள்ளப்படும் இந்த அணுசக்தி மறுமலர்ச்சி பெருத்த பிரச்சினைகளில் சிக்கித் தத்தளிக்கிறது. மகாராட்டிர மாநிலத்தின் ஜெய்தாபூரில் அணுவுலை நிர்மாணிக்க இருப்பதாக அறியப்படும் அரிவா என்ற பிரெஞ்சு நாட்டு நிறுவனம் உலக அளவில் முதன் முறையாக தலைமுறை III ரக அணுவுலையை பின்லாந்தில் நிறுவிவருகிறது. இருப்பினும், இது கால இலக்கிற்கு மூன்று ஆண்டுகள் தாமதமாகும் என்றும், திட்டச் செலவைவிட 60% கூடுதலாகும் என்றும் தற்போது எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்சொன்ன அரிவா நிருவனமும், இந்தியாவில் அணுவுலை அமைக்க இருக்கும் வெஸ்டிங்ஹவுஸ் என்ற அமெரிக்க நிறுவனமும் பிரிட்டனில் புதிய அணுவுலைக் கட்டுமானங்களை செய்ய இருகின்றன.  அவை தற்சமயம் ஒழுங்குமுறைப் பிரச்சினைகளில் சிக்கியுள்ளன. இந்த நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட இருக்கும் அணுவுலைக் கட்டுமானங்கள் குறித்து பிரிட்டிஷ் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு இயக்குனர் [Health and Safety Executive] ஒரு அறிக்கை சமர்ப்பித்திருக்கிறார்.  அந்த கட்டுமானங்கள் பற்றிய தனது ஒத்த அறிக்கைகளில் இந்த இரு நிறுவனங்களின் வடிவமைப்புகள் பற்றியும் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன், “இந்த வடிவமைப்புகளில் பாதுகாப்பு தொடர்பான ஏராளமான ஓட்டைகளை நாங்கள் இனங்கண்டிருக்கிறோம்… இவை திருப்திகரமாக சரிசெய்யப்படவில்லை என்றால் நாங்கள் வடிவமைப்பு ஒப்புதல் அளிக்க மாட்டோம்” என்றும் கூறியிருக்கிறார்.[28, 29] (இந்த அறிக்கைகளின் சுருக்கம் கார்டியன் பத்திரிகையில் வெளிவந்துள்ளது.[30])

தட்பவெப்பநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினையை எதிர்கொள்ள வல்லது அணுசக்தியே என்ற வாதமும் வன்மையாக மறுக்கப்பட்டிருக்கிறது.  உதாரணமாக, காற்றாலை மற்றும் சிறு நீர்மின் திட்டங்கள் உள்ளிட்ட மாற்று சக்தி மூலங்களை முன்னிருத்தி லொவின்ஸும் ஷேக்கும் விவாதித்துள்ளனர்.[31]  இவ்வாறான மாற்றுக் கருத்துகளுக்கு இடையிலும், அணுவுலை விபத்தையும், பல துறைகளில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப முன்னேற்றத்தையும் புறந்தள்ளிவிட்டு அடுத்த சில பத்தாண்டுகளில் அணுவுலைகள் பல நிர்மாணிக்கப்பட உள்ளதுபோல் தெரிகிறது.

எனவே, முதலில் இந்த அணு மின் உற்பத்திச் செலவு கட்டுப்படியாகக் கூடியதா, அணுசக்தி பாதுகாப்பானதா என்பன பற்றியும்; அடுத்து, அணுசக்தி பற்றிய உலகளவிலான விவாதம் இந்தியாவுக்கு எவ்வகையில் பொருந்தும் என்பது பற்றியும் முக்கியமான கேள்விகளை எழுப்ப வேண்டியுள்ளது.  குறைந்தபட்சம் அடுத்த சில பத்தாண்டுகளுக்காவது இந்தியாவின் மீது விதிக்கப்படும் தட்பவெப்ப உடன்படிக்கைகளின் படியான கடப்பாடுகள் வளர்ந்த நாடுகளின் மீதான கடப்பாடுகளில் இருந்து மாறுபட்டதாய் இருக்கும்.  அடுத்து, மிகக் குறைந்த யுரேனிய வளத்தைக் கொண்டுள்ள இந்தியாவின் விரிந்த அளவிலான அணுசக்தித் திட்டங்கள் எரிபொருளுக்காக இந்நாட்டை ஏகாதிபத்தியங்களுக்கு அடிபணியச் செய்யும்.  தெளிவாக இவ்விளைவு விரும்பத்தக்கது அல்ல. இது பற்றியும், மேலும் சில பிரச்சினைகள் குறித்தும் கீழே விவாதிப்போம்.

5.2 அணுசக்தியின் பொருளியல்

அணுமின் உலைகளின் நிர்மாணச் செலவு ஏராளம். ஆனால், நிலக்கரி-அனல் மின்நிலையங்கள் போன்றவற்றோடு ஒப்பிடும்போது இவற்றின் இயக்கச் செலவு மிகவும் சிக்கனமானது என்பது அணுசக்தி செலவீனம் பற்றிய மையமான உண்மை.  எனவே, பிற சக்தி மூலங்களோடு அணு மின்சக்திக்கு ஆகும் செலவை ஒப்பிடுவதற்கு “சமன்செய் ஆற்றல் செலவீனம்” [ levelized cost of energy] என்ற பொது நிலைப்பாடு பயன்படுத்தப்படுகிறது.  சுருக்கமாக, இந்த சமன்செய் ஆற்றல் செலவீனம் l என்பது கீழ்க்காணும் சூத்திரத்தால் வரையறுக்கப்படுகிறது.

இங்கு Ct என்பது t என்ற ஆண்டில் நிர்மாணம், பராமரிப்பு, எரிபொருள் மற்றும் பிறவற்றை உள்ளடக்கிய செலவீனத்தின் மொத்தத் தொகையைக் குறிக்கிறது. Et என்பது t ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தைக் குறிக்கிறது. n என்பது உலையின் ஆயுட்காலத்தைக் குறிக்கிறது; r என்பது தள்ளுபடி விலையைக் ( discount rate) குறிக்கிறது.

இங்கு சொல்லப்பட்ட கருத்து எளிமையானது.  அணுவுலையில் உள்ளீடு செய்யப்பட்ட மூலதனம் வேறுவகையில் பயன்பட்டிருக்கக் கூடும். எனவே இந்த மூலதனம் ஈட்டியிருக்கக்கூடிய வருவாய்க்கு ஈடுசெய்யும் வகையில் அணுவுலையின் இயக்கச் செலவு மலிவாய் இருக்கவேண்டும். [அதற்குப் பொருத்தமான] தள்ளுபடி வீதத்தால் இந்த லாப சதவீதம் உறுதிசெய்யப்படுகிறது.

இந்த கருத்தாக்கத்தைத் தெளிவாய்ப் புரிந்துகொள்ள உதவும் ஒரு எளிய உதாரணத்தைப் பார்ப்போம்.  ஒரு அனல் மின் நிலையம் அமைக்க ஆகும் செலவு ரூ.100 என்றும் அதை இயக்க ஆகும் செலவு ஆண்டொன்றுக்கு ரூ.10 என்றும் கொள்வோம்.  அதே சமயம் அணுமின் நிலையம் அமைக்க ரூ.150-ம் இயக்குவதற்கு ஆண்டுக்கு ரூ.5-ம் ஆவதாகக் கொள்வோம்.  மேலும், இரண்டும் ஏககாலத்தில் திடீரென அமைக்கப்படுவதாகவும், அவற்றின் ஆயுட்காலம் 15 ஆண்டுகளாகவும், அவை சம அளவு மின்சக்தியை உற்பத்தி செய்வதாகவும் கொள்வோம். ஒரு பொதுக் கணக்கில், அணுமின் நிலையத்தில் ஆனதைவிட (ரூ.225) அனல்மின் நிலையத்தில் அதிகச் செலவீனம் (ரூ.250) ஆகியுள்ளது.  ஆனால் இக் கணக்கு, அணுமின் நிலையத்தின் துவக்ககாலத்திலேயே உள்ளீடு செய்யப்பட்ட கூடுதல் தொகையான ரூ.50  வேறெங்கும் பயன்பட்டிருக்கக் கூடும் என்பதைக் கணக்கில் கொள்ளவில்லை. தள்ளுபடி விலை வீதம் 10 ஆக இருக்கும்போது அணுமின் சக்தியும், 5% ஆக இருக்கும்போது அனல் மின்சக்தியும் பெருத்த செலவீனமாக இருப்பதை வாசகர் மேற்படி சூத்திரத்தில் பொருத்திப் பார்த்துக்கொள்ள முடியும்.  இரண்டுக்குமான வெட்டுப்புள்ளி 5.56% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. [என்னைப் போன்ற, மேற்படி சூத்திரத்தில் பொருத்திப் பார்க்கத் தெரியாதவர்களுக்கான எளிய வழி: மேற்சொன்ன உதாரணத்தில் அனல் மின்நிலையத்தின் பதினைந்து ஆண்டுகளுக்கான சராசரி நிலை மூலதனம்+ மாறும் மூலதனம் ரூ.180.  அணு மின்நிலையத்தில் அது ரூ.190.  ஆக, கூடுதல் மூலதனமான ரூ.10 க்கு ஈடு செய்ய வேண்டிய லாபக் குறைவு வீதம் (10/180 x 100) 5.555 அதாவது 5.6% ..  மொ-ர்.]

5.2.1 இந்தியாவில் அணுசக்தியின் பொருளியல்

நாம் முன்னரே குறிப்பிட்டதுபோல, வழமையானதிலிருந்து சற்றே மாறுபட்ட அணுவுலைகளை இந்தியா பயன்படுத்துகிறது.  இயற்கையாகக் கிடைக்கும் யுரேனியத்தை செறிவூட்டுதல் இன்றி அப்படியே பயன்படுத்தும் சாதகத் தன்மை இந்த வகை அணுவுலைகளுக்கு இருக்கிறது.  இவ்வழியில் செறிவூட்டும் செலவு மிச்சமானாலும், இந்த அணுவுலைகள் விலை உயர்ந்த கனநீரைப் பயன்படுத்துகின்றன.  இந்திய அணுசக்தித் துறை எதிர்காலத்தில் இவ்வாறான மேலும் பல அதிஅழுத்த கனநீர் அணுவுலைகளை (PHBRs) நிர்மாணிக்கத் திட்டமிட்டுள்ளது.

இந்திய அணு மின்சக்தி பற்றிய பொருளியலை அறிந்துகொள்வது இரண்டு காரணக்கூறுகளால் சிக்கலாக்கப்பட்டுள்ளது. முதலாவதாக, கனநீர் உற்பத்தி உள்ளிட்ட அணு மின்சக்தி தொடர்பான பல்வேறு அம்சங்களுக்கு அளிக்கப்படும் மானியம் பற்றி துல்லியமான மதிப்பீட்டைப் பெறுவது கடினமாக உள்ளது.[32]  இரண்டாவதாக, பயன்படுத்தப்பட்ட எரிபொருள் மறுசுழற்சி செய்யப்படும் இடத்தில் அணுசக்தித் துறை சொல்லப்படும் ஒரு “மூடிய சுழற்சி” [closed cycle] முறையைப் பயன்படுத்துகிறது. இந்த மறுசுழற்சி முறை பெருத்த செலவு பிடிக்கக் கூடியது. எனினும், தயாரிக்கப்பட்ட மின்சாரத்தின் அடக்கவிலை பற்றிய அதிகாரபூர்வமான மதிப்பீட்டில் இதற்கான செலவு சேர்க்கப்படவில்லை.  அணுசக்தித் திட்டத்தின் இரண்டாவது படிநிலையில் இந்த மறுசுழற்சி செய்யப்பட்ட எரிபொருள் இறுதியாகப் பயன்படுத்தப்படக் கூடியது என்பதே இதற்கான காரணமாக இருக்கிறது. இந்த இரண்டாவது படிநிலை இதுநாள் வரை நடைமுறைக்கு வரவில்லை என்பதால், உண்மையில் இக்காரணம் அடிப்படை ஏதும் அற்றது.

சில சமயங்களில் அணு மின்சக்தி அனல் மின்சக்தியை விட மலிவானது என்ற வாதமும் வைக்கப்படுகிறது.[33,34] ஆனால், அளிக்கப்படும் மானியம் மற்றும் மேற்படி செலவீனங்களை இந்த வாதங்கள் மொத்தமாகப் புறந்தள்ளிவிட்டுப் பேசுகின்றன. கனநீர் உற்பத்திக்கு அளிக்கப்படும் மானியங்கள் பற்றிய குறைந்தபட்ச மதிப்பீட்டின் அடிப்படையில்[32] தள்ளுபடி விலை வீதத்தை ஆகக் குறைவாக 3 சதவீதத்தில் இருத்திப் பார்த்தாலும், அணுமின்சக்தி, அனல் மின்சக்தியின் உற்பத்திச் செலவோடு ஒப்பிடத்தக்க வகையில் இல்லை.  மேற்சொன்ன மறுசுழற்சிக்கு ஆகும் செலவை முழுமையாக விலக்கிப் பார்த்த பின்னும் இந்த முடிவே உறுதிசெய்யப்படுகிறது. [35,36]

சர்வதேச அளவிலான வரையரைகளுக்கும் இந்த நிலைப்பாடு பொருந்தி நிற்பதைக் கீழே விவரிப்போம்.

5. 2. 2 சர்வதேச அளவில் அணு மின்சக்தியின் பொருளியல் சாத்தியப்பாடுகள்

மேற்சொன்ன எம்.ஐ.டி. யின் 2003-ம் ஆண்டு ஆய்வு, பல்வேறுபட்ட தள்ளுபடி விலைகளையும் பரிசீலித்த பின்னர், “கட்டுப்பாடற்ற சந்தையில், நிலக்கரி மற்றும் எரிவாயு மின்சாரத்தின் அடக்க விலையோடு அணு மின்சக்தியின் அடக்கவிலை தற்போதைக்குப் போட்டியிடும் நிலையில் இல்லை” என்று இறுதிசெய்தது.[22]  சிக்காக்கோ பல்கலைக்கழகம் மேற்கொண்ட விரிந்த ஆய்வும் இதே முடிவைத்தான் வந்தடைந்தது. பிரான்சைத் தவிர, “பெரும்பாலான பிற நாடுகளில் அணுசக்திக்கு ஆகும் பெருத்த மூலதனச் செலவு, அது நிலக்கரி, எரிவாயுவகை மின்சாரத் தொழில்நுட்பங்களுடன் போட்டியிடும் நிலையைத் தடுக்கிறது” என்றும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.[37] மேலும், “மிகச் சாதகமான எடுத்துக்காட்டுகளிலும்”  அமெரிக்காவின் முதன்மையான புதிய அணுவுலைகளின் நிர்மாணச் செலவு நிலக்கரி மற்றும் எரிவாயு மின் நிலையங்களின் அதிகபட்ச நிர்மாணச் செலவைக் காட்டிலும் கூடுதலாகவே இருக்கும்  என்று அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. [ 1998 முதல் மின்சார உற்பத்தியின் அடக்கவிலை பற்றிய OECD-யின் மதிப்பீடுகளை சிகாகோ பல்கலைக்கழகத்தின் இந்த ஆய்வு பயன்படுத்தியுள்ளது.  2005-ம் ஆண்டில் OECD-யின் மதிப்பீடுகள் மாற்றப்பட்டு இருக்கின்றன.  அதன்படி அணு மின்சக்தியின் உற்பத்திச் செலவு பல நாடுகளில் மலிவாகி உள்ளதாக அதன் அறிக்கையில் காணப்படுகிறது.[39]  பலநாடுகளுக்கும் அனுப்பிய கேள்விப்படிவத்தில் பெற்ற விவரங்களின் அடிப்படையில் OECD-யின் இந்த முடிவு வந்தடையப்பட்டுள்ளது.  2005-ம் ஆண்டு அது பயன்படுத்திய புள்ளிவிவரங்கள் சந்தேகத்துக்கு இடமானவை.  உதாரணமாக அந்த அறிக்கையின் 43-ம் பக்கத்தில், பின்லாந்தின் அணுவுலைக் கட்டுமானச் செலவு கிலோவாட்டுக்கு சுமார் 2000 அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.  ஆனால் பின்லாந்தில் அரிவா நிறுவனத்தால் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் 1600 மெகாவாட் திறன்கொண்ட அணுவுலையின் கட்டுமானச் செலவு 6 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  அதன்படி ஒரு கிலோவாட் மின்சாரத்துக்கான அடக்க விலை OECD எடுத்தாண்டதைப்போல இரு மடங்கு ஆகும்.]

“கொட்டிக் கிடக்கும் மலிவான சரக்கு” என்று இதன் ஆர்வலர்களால், முன்னர் பேரார்வத்துடன் கூத்தாடப்பட்ட அணு மின்சக்தி அதற்கு மாறாக, 1970-ம் ஆண்டு தொட்டு பெருத்த செலவீனமானது என்பதையே நிரூபித்திருக்கிறது என்று எகானமிஸ்ட் ஏடு தொகுத்துக் கூறுகிறது. [42]  இதன் காரணமாகவே கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்காவில் புதிய அணுவுலைக் கட்டுமானத்திற்கான விண்ணப்பம் ஏதுமில்லை.

அணுசக்தியின் அடக்க விலை பற்றிய இந்த கணக்குகளை எல்லாம் கரியமில வாயு வெளியேற்றத்தின் மீது சுமத்தப்படும் ஒரு விலை மாற்றிவிடுமா என்பது மற்றொரு கேள்வி.  இது தொடர்பாக, “ஐரோப்பிய கார்பன் வெளியேற்ற வர்த்தகத் திட்டத்தின் படி வெளியேற்றப்படும் ஒரு டன் கார்பனுக்கு  €14 (யூரோக்கள்) என்று விலை வைக்கப்பட்டுள்ளது.  அணுவுலைகளைக் கவர்ச்சிகரமானதாக்கும் என மின் உற்பத்தி முதலாளிகள் எதிர்பார்த்த € 50 விட இந்த விலை மிகவும் குறைவாகிப் போனது” என்று எகானமிஸ்ட் ஏடு குறிப்பிடுகிறது.[43]

எனவே நிலக்கரி சக்தியைக் காட்டிலும் அணுசக்தி மிகவும் செலவீனமானது எனும் ஒருமித்த கருத்து சர்வதேச அளவில் நிலவுகிறது. [இருப்பினும், சூரிய சக்தி போன்ற சில மாற்று சக்தி வளங்களைக் காட்டிலும் அணுசக்தி கணிசமான அளவு மலிவானதாகவே இருந்துவருகிறது.] [இது பொதுவான உலக வழக்கு.  ஆனால், ஆண்டுதோரும் அதிகரிக்கும் அணுக் கழிவுப் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புக்கு ஆகும் செலவு; சுமார் 25 ஆண்டுகளில் மூடுவிழா காணும் அணுவுலைகள் அமைந்த இடமும் அதன் நெருங்கிய சுற்றுவட்டாரமும் புவிப்பரப்பில் நிறந்தரமாய்ப் பயனற்றுப் போவதற்கான இழப்பீட்டுக் கணக்கு; செயல் முடக்கப்பட்ட உலையைப் பல்லாயிரம் ஆண்டுகாலம் போர்த்திப் பாதுகாப்பதற்கு ஆகும் செலவு .. இன்னும் பலவும் அணு மின்சக்தியின் அடக்க விலையைக் கணக்கிடுகையில் சேர்க்கப்படுவதாகவே தெரியவில்லை –மொ-ர்] இந்தியாவும் இந்த வரையரையுடன் ஒத்துப்போகிறது.  இந்த ஆய்வு முடிவுகள் அணுசக்தித் தொழிற்துறை வளர்ச்சியை சோர்வடையச் செய்த போதிலும், புதிய அணுவுலைகள் கட்டப்படுவதைத் தடுத்து நிறுத்திவிடவில்லை.  மாறாக, அணுசக்தி பெருத்த செலவீனமானது என்ற இந்த உண்மை, சில சமயங்களில், அணுசக்தித் துறைக்கு கொள்கை ரீதியான உதவிகளும், மானியங்களும் வழங்கப்படுவது அவசியம் என்ற வகையில் சிந்திக்க வைத்திருக்கிறது!

5.3 பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மீதான தாக்கம் பற்றி

முன்னர் கூறியது போல தட்பவெப்ப மாற்றம் தொடர்பான கவலைகள் அணுசக்தித் தொழிலின் சமீபத்திய புத்தெழுச்சிக்குப் பகுதியளவுக் காரணமாக அமைகிறது.  அணு மின்சக்தி பசுமைக் குடில் வாயுக்களை வெளியிடுவதில்லை என்ற சாதக அம்சத்தைப் பெற்றிருக்கிறது.  இதன் விளைவாக (வேறு சில அற்பக் காரணங்களும் உள்ளிட்டு) க்ரீன்பீஸ் அமைப்பின் செல்வாக்கு மிக்க முன்னாள் உறுப்பினர் பாட்ரிக் மூர் போன்ற சில சூழலியலாளர்கள் அணுசக்தியின் பிரச்சாரகர்கள் ஆகியிருக்கிறார்கள்.  இருப்பினும், க்ரீன்பீஸ் அமைப்பும் பிற பெரும்பாலான சுற்றுச்சூழல் ஆர்வலர் குழுக்களும் இன்றளவும் அணு மின்சக்தியை ஒப்புக்கொள்ள மறுக்கின்றன.  அவர்களது முதன்மையான மறுப்புரைகளில் ஒன்று அதிகரித்துவரும் அணுக் கழிவுகள் பற்றியது.

அணுவுலைகள் கதிரியக்கக் கழிவுகளை உற்பத்தி செய்கின்றன. அவற்றில் சில நீண்ட நெடுங்காலத்துக்கு அபாயகரமானதாகத் தொடரக்கூடியவை.  உதாரணமாக, அணுவுலைக் கழிவான புளூடோனியத்தின் (Pu239 ) அரை ஆயுள் 24,000 ஆண்டுகள்.  (அதாவது புளூடோனியம் தன் கதிரியக்க சக்தியில் பாதியை இழக்க 24000 ஆண்டுகள் பிடிக்கும்.  எஞ்சியதில் பாதியை இழக்க மேலும் 24000 ஆண்டுகள் … இப்படி)

துரதிஷ்டவசமாக, இக்கழிவுகளை வெளியேற்ற அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்பம் ஏதுமில்லை.  அணுசக்தித் திட்டவியலாளர்களிடையே இந்த நீண்ட காலப்போக்கில் ஏற்பட்டிருக்கும் சற்றே உடன்பாடான கருத்து, இந்தக் கழிவுகளை அழிக்கவொண்ணா அடியாழ இடுகாடுகளில் (geological repository) இட்டு மூடிவிடுவது என்பதே.  இன்று வரை அத்தகைய ஒரே ஒரு இடுகாடு மட்டும்தான் –அமெரிக்க அணுக்கழிவு தனிமைப்படுத்தல் முன்மாதிரி இடுகாடு – அமைக்கப்பட்டுள்ளது.  அதுவும் இராணுவம் தொடர்பான அணுக் கழிவுகளை இடுவதற்காகவே இயங்குகிறது.  அணுசக்தியின் சமூகப் பயன்பாடு வெளிப்படுத்திய கதிரியக்கக் கழிவுகளில் ஒரு பகுதியை யூக்கா மலை அணுக்கழிவு இடுகாட்டில் போட்டுவிடலாம் என அமெரிக்கா திட்டமிடுகிறது.  ஆனால், அந்த இடுகாடு இன்னும் கட்டப்படவில்லை. இது தொடர்பான திட்டங்கள், அவற்றின் செயலாக்க வழிமுறைகள் பற்றிய விவாதங்களை அணுப் பொறியியல் கையேட்டில் காணலாம்.[44]

இந்தியாவில், எரிக்கப்பட்ட யுரேனியம் மறுசுழற்சி செய்யப்படுகிறது.  ஆயினும், இந்த மறுசுழற்சி முறையும் அபாயகரமான கதிரியக்கக் கழிவுகளை உற்பத்தி செய்கிறது. தற்போதைக்கு இதன் அளவு குறைவானதே.  2001-ம் ஆண்டளவில் இந்தியாவில் திரண்டிருக்கும் இறுதி நிலைக் கதிரியக்கக் கழிவின் ( high-level-waste ) [மா பாதகக் கழிவின்] அளவு 5000 கனமீட்டர் (m3) என மதிப்பிடப்பட்டது (இது சுமார் இரு பெரும் ஒலிம்பிக் நீச்சல் குளங்களின் அளவுக்கு ஒப்பானது)[45]. இந்தக் கழிவுகளின் அளவு மளமளவென அதிகரிக்க இருக்கிறது. 2011-ம் ஆண்டு தொடங்கி ஆண்டுக்கு 700 கனமீட்டர் அளவுக்கு இறுதி நிலைக் கதிரியக்கக் கழிவு உற்பத்தி செய்யப்படும் என இந்திய அணுசக்தித் துறை 2004-ம் ஆண்டில் மதிப்பிட்டிருக்கிறது. இறுதியாக இந்தக் கழிவுகள் அடியாழ இடுகாடுகளில் புதைக்கப்படுவதன் மூலம் வெளியேற்றப்படும் என்கிறது அணுசக்தித் துறை. ஆயினும், ”இந்த நடவடிக்கையின் சாத்தியப்பாடு பற்றிய செயல் விளக்கம் மற்றும் இந்த வழிமுறையின் பாதுகாப்புத் தன்மை குறித்த விசயங்கள் நம் முன் நிற்கும் பெருத்த சவாலாக இருக்கின்றன” என்று ஒப்புக்கொள்ளும் நிர்ப்பந்தத்திற்கு அணுசக்தித் துறை உள்ளாகியிருக்கிறது.[46]

அணு மின்சக்தி தொடர்பான மற்றொரு கவலைக்குறிய அம்சம் அணுவுலைகளின் பாதுகாப்பு பற்றியது.  முன்னாள் சோவியத் யூனியனின் உக்ரைன் குடியரசில் இருந்த செர்னோபில் என்ற இடத்தில் 1986-ம் ஆண்டு நிகழ்ந்த அணுவுலை விபத்தின்போது கதிர்வீச்சுத் தன்மை கொண்ட ஏராளமான பொருட்கள் வளிமண்டலத்தில் கலந்தன.  இவை சோவியத் எல்லையைத் தாண்டி வடக்கே வெகு தொலைவில் இருந்த ஸ்வீடன் வரையிலான அண்டை நாடுகளிலும் பரவின.  2006-ம் ஆண்டு வெளியான உலக சுகாதார நிறுவனத்தின் மதிப்பீட்டின்படி இந்த விபத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஆறு லட்சம் மக்களின் வாழ்நாளில் நாலாயிரத்துக்கும் மேலானோர் கதிர்வீச்சுப் பாதிப்பினால் புற்றுநோய் பீடித்து இறந்தனர்.  இவ்விபத்தால் “சீர்கேடடைந்த பிற பகுதிகளில்” வாழ்ந்த அறுபது லட்சத்துக்கும் மேலான மக்களிடத்தில் இதன் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பு ஐயாயிரத்துக்கும் மேல். (உ.சு.நி அறிக்கையின் பட்டியல் எண் 12)[47]

எனினும் க்ரீன்பீஸ் அமைப்பு சுட்டிக்காடியது போல,[48] இப்படிப்பட்ட ஒரு பாரிய பேரழிவின் தொடர்பாக, “அதன் விளைவுகளை ஒருமைப்படுத்தியும், அதிகரித்த புற்றுநோய் சாவுகள் பற்றிய மதிப்பீடாக ‘எளிமைப்படுத்தியும்’ காட்ட முயலும் எந்த விவரணைகளும், இவ்விபத்தால் மக்கள் அனுபவித்த பன்முகப்பட்ட துயரங்கள் அனைத்தையும் மோசமான முறையில் சிறுமைப்படுத்துவதாகவே இருக்கும்”.

செர்னோபில் விபத்து பெரும்பாலும் மோசமான வடிவமைப்பினாலும் இயக்குனரின் (operator) தவறினாலும் நிகழ்ந்திருக்கிறது. குறிப்பாக, இந்த அணுவுலை முறையான தடுப்பரணால் சுற்றிவளைக்கப்பட்டு இருக்கவில்லை. மேலும், அந்த விபத்து நிகழ்ந்த நேரத்தில், positive void coefficient விளைவு ஏற்பட்டதாகத் தெரிகிறது.[49] அதாவது அணுக்கருப் பிளவால் தோற்றுவிக்கப்படும் வெப்பத்தைத் தாங்கி வெளியேற்றும் குளிர்விப்பான் தப்பித்து வெளியேறத் தொடங்கியிருக்கிறது. இதன் விளைவாக, அணுக்கருப் பிளவின் கட்டற்ற செயல்பாட்டு தூண்டப்பட்டிருக்கிறது.  இவ்வாறு தூண்டப்பட்ட கட்டற்ற அணுக்கருப் பிளவு ஏராளமான குளிர்விப்பான்கள் வெளியேற வழிசெய்திருக்கிறது.  இவ்வாறாக ஒன்றுக்கொன்று துணை செய்யும் படுபயங்கரமான எதிர்வினை நிகழ்வு நடந்திருக்கிறது.   (it seems to have had a positive void coefficient,49 which meant that the escaping coolant increased the intensity of the reaction which in turn caused more of the coolant to escape, thus leading to catastrophic positive feedback. )  புதிய அணுவுலைகள் தடுப்புறுதி மிக்கதாய் நல்ல முறையில் வடிவமைக்கப் படுவதாகத் தோன்றுகிறது. இவ்விபத்தின் மூலம் அணுசக்தித் தொழிற்துறை தனது பொறியியல் பாடத்தை நல்லமுறையில் படித்திருக்கும் என்று மட்டுமே ஒருவர் எதிர்பார்க்க முடியும்.

நாம் மேலே விவரித்ததைப்போல, அணுசக்தி என்பது உள்ளியல்பாகவே விபரீதமானது.  இருப்பினும், அணுவுலைகளின் பாதுகாப்புத் தன்மை குறித்த எந்த ஒரு விவாதத்திலும் அணுசக்தியை முன்னெடுப்போரால் வைக்கப்படும் புறக்கணிக்க முடியாத ஒரு கருத்து இருக்கிறது.  அணுசக்தி பொதுவாகவே, நாமும் செய்தது போலவே, நிலக்கரியுடன் ஒப்பீடு செய்யப்படுகிறது.  ஆயினும், நிலக்கரியும் தீங்கானதே என்பதே அந்த கருத்து.

இதன் காரணமாகத்தான் நிலக்கரி சுரங்கங்களில் ஆண்டாண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் மடிகிறார்கள்.  இதற்கு சீனா ஒரு அதிர்ச்சிகரமான உதாரணம். அதிகாரபூர்வ புள்ளிவிவரப்படி 2006-ம் ஆண்டு சீன நிலக்கரி சுரங்கங்களில் இறந்தோரின் எண்ணிக்கை 4,746; 2007-ல் அது 3,786. [50,51]

நிலக்கரி சுரங்கங்கள் இந்தியாவிலும் ஆண்டாண்டும் நூற்றுக்கணக்கானோரைப் பாதிக்கிறது.  ஆனால், இங்கு இதுபற்றிய புள்ளிவிவரங்கள் சற்று பிரச்சினைக்கு உரியதாய் இருக்கின்றன. நிலக்கரி அமைச்சகத்தின் விவரப்படி இந்திய நிலக்கரி சுரங்கப்பணி மிகவும் பாதுகாப்பானது.  இங்கு சாவு எண்ணிக்கை நபர்வாரி சாராசரிக் கணக்கில் அமெரிக்காவை விடக் குறைவு; கிட்டத்தட்ட ஆஸ்திரேலியாவுடன் ஒப்பிடும் அளவுக்குக் குறைவானது.[52]  இது உள்ளபடியே நம்பத்தக்கதாய் இல்லை.  இருப்பினும், அமைச்சகம் அளித்த விவரப்படியே பார்த்தாலும் 2006-ல் நிலக்கரிச் சுரங்கப் பணியில் இறந்தவர்களின் எண்ணிக்கை 128 ஆகவும் பலத்த காயமுற்றோரின் எண்ணிக்கை 966 ஆகவும் இருக்கிறது.  2007-ல் அது  முறையே 69 ஆகவும் 904 ஆகவும் இருக்கிறது.[52] [யுரேனிய சுரங்கப் பணியும் தீங்கானதே.  இருப்பினும் அது நிலக்கரி சுரங்கப்பணியோடு ஒப்பிடுகையில் மிகச் சிறிய அளவே நடப்பதால் விபத்தும் குறைவாகவே நடக்கிறது] .

நமது சமுதாயத்தில் நிலவும் பாரதூரமான ஏற்றத்தாழ்வும் இந்த நிலைமை தொடர ஒரு காரணமாக இருக்கிறது. அணு விபத்து பேரழிவு விளைக்கத் தக்கதாய், அனைவரையும் பாதிப்பதாய் இருக்கிறது.  எனவே அணுசக்தி அமைப்புகளில் பாதுகாப்பு குறித்து பாரிய கவனம் செலுத்தப்படுகிறது.  நூற்றுக்கணக்கான மக்கள் ஆண்டாண்டும் நிலக்கரிச் சுரங்கங்களில் செத்தாலும், அம்மக்களில் ஆகப் பெரும்பான்மையோர் ஏழைகளாகவும், நாதியற்றவர்களாகவும் இருப்பதால் இந்த விபத்துகள் யாரது கவனத்தையும் ஈர்க்கவும் இல்லை, பெரிதாய் இதற்கு ஒரு எதிர்ப்பும் இல்லை.

5.4 இந்தியாவுக்கான பிரத்தியேக அம்சங்கள்

இந்தியாவில் அணுசக்தியின் விருப்பார்வம் பற்றிய விவாதத்தை மாற்றக்கூடிய இரண்டு அம்சங்கள் இருக்கின்றன.

முதலாவது அம்சம், இந்தியாவின் மோசமான யுரேனியத் தாதுவள இருப்பு பற்றியது.  நாம் முன்னரே சொன்னதுபோல, இந்தியாவின் யுரேனிய இருப்பு மிகக் குறைவு என்பது மட்டுமல்ல, அதன் தரமும் மோசமானதே.  திட்டக் கமிசனால் நியமிக்கப்பட்ட கிரித் பாரிக் தலைமையிலான நிபுணர் குழு சக்திவளக் கொள்கை தொடர்பான ஒரு ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது. அவ்வறிக்கையில், “இந்தியாவின் யுரேனிய வளம் மிகக் குறைவானது.  கிடைக்கப்பெறும் யுரேனியத்தைக் கொண்டு மொத்தத்தில் 10000 மெகா வாட் உயர் அழுத்த கனநீர் அணுவுலைகளை மட்டுமே இயக்க முடியும்.  மேலும், வெளிநாடுகளில் சில இடங்களில் கிடைக்கும் தாதுவளம் 12-14% யுரேனியத்தைக் கொண்டு இருக்கையில், இந்தியாவில் ஒப்பீட்டளவில் மிகவும் குறைந்த தரத்திலுள்ள தாதுவிலிருந்து (0.1% அளவுக்குத் தரம் குறைந்த யுரேனியத் தாது) யுரேனியம் பிரித்தெடுக்கப்படுகிறது.  இதன் காரணமாக இந்தியாவின் அணுவுலை எரிபொருளின் அடக்கவிலை சர்வதேச விலையோடு ஒப்பிடுகையில் 2-3 மடங்கு அதிகமாக இருக்கிறது” என்று குறிப்பிடப் பட்டுள்ளது.[54]  ஆக, விரிவான ஒரு அணுசக்தித் திட்டம் இறக்குமதி எரிபொருளை நம்பியே தாக்குப்பிடிக்க முடியும் என்பது இந்த அறிக்கையில் இருந்து தெளிவாகிறது.  மேலும், இந்த இறக்குமதி அணு மின்சக்தியை செலவு மிக்கதாக்கி விடுகிறது.

இருப்பினும், இவ்வாறான யுரேனிய இறக்குமதி, எரிபொருளின் நிலைத்த தேவையைப் பெறுவதற்காக ஏகாதிபத்திய நாடுகளை அண்டி இருக்கும் நிலைக்கு நமது நாட்டைக் கொண்டுவந்து விடும் என்பதே மிகவும் அபாயகரமான விசயம் ஆகும்.  1974-ம் ஆண்டு நிகழ்த்திய அணுவெடிப்புப் பரிசோதனைக்குப் பின் தாராப்பூர் அணுவுலைக்கு அளித்துவந்த எரிபொருளை அமெரிக்கா நிறுத்திவிட்டது.  கடந்த ஆண்டு அணுசக்தி மூலப்பொருள் வர்த்தகர்கள் குழுவால் [Nuclear Suppliers Group] [சர்வதேச அணுசக்தி வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தும் ஏகாதிபத்திய நாடுகள் அடங்கிய சுயநலக் கும்பல். இதில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்துகிறது] அணுசக்தி வர்த்தகத்தில் ஈடுபட இந்தியாவை அனுமதிக்கும் படியான ஒரு விலக்கு அளிக்கப்பட்டது. அமெரிக்காவின் உலகளாவிய போர்த்தந்திரக் கூட்டாளியாக இணைந்ததன் காரணமாகவே இந்த விலக்கு இந்தியாவுக்குப் பெற்றுத்தரப்பட்டது. இறக்குமதி எரிபொருளை நம்பி மேற்கொள்ளப்படும் விரிவான அணுசக்தித் திட்டம் எதிர்காலத்தில் பொறுப்புக்கு வரும் எந்த ஒரு அரசும் அமெரிக்காவுடனான உறவைத் துண்டித்து வெளியேற முடியாதபடி புதைகுழியில் சிக்கியதைப்போல் ஆக்கிவிடும்.

இரண்டாவது முக்கியமான அம்சம், இங்கு அணுசக்தி அமைப்புகளை ஒழுங்குபடுத்தும் உறுதியான நிர்வாகக் கட்டமைப்பு இல்லை என்பதே. நிலவுகின்ற மோசமான நிர்வாக வடிவத்தின் அடிப்படைக் கூறுகளை பாபா-நேரு இடத்தில் தேடிக் காணமுடிகிறது. ”அணுசக்தியை வளர்த்தெடுக்கும் பொறுப்பு மிகச் சிறிய உயர் அதிகார அமைப்பின் வசம் ஒப்படைக்கப்படவேண்டும். மேலாண்மை செலுத்தும் இணைப்பு ஏதுமின்றி, நேரடியாகப் பிரதமருக்குப் பதில்சொல்ல வேண்டிய நிலையில், செயல் அதிகாரத்துடன் கூடிய சுமார் மூன்று நபர்களைக் கொண்டதாக இவ்வமைப்பு இருக்கலாம் .. .. அணுசக்தி ஆணையம் என்று இதைக் குறிப்பிடலாம்” என்று பாபா 1948-ல் நேருவுக்கு எழுதினார்.[55] (அழுத்தம் சேர்க்கப்பட்டது).  பாபா ஜனநாயகத்தில் பெரிதும் நம்பிக்கை கொண்டவர் அல்ல என்பது தெளிவு. மேலும் பலவற்றைப் போல, இந்த விசயத்திலும், நேருவுடன் தனக்கு இருந்த தனிப்பட்ட நெருக்கத்தைப் பயன்படுத்தி அரசாங்கத்தின் பிற அங்கங்களில் செயல்படும் குறைந்தபட்ச கண்காணிப்பு மற்றும் சீர்செய்தல் வழிமுறைகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டார் பாபா. அணுசக்தி ஆணையம் 1954-ல் நிறுவப்பட்டு 55 ஆண்டுகள் கடந்தபின்னும் அதே கெட்டித்தட்டிப்போன சிறிய அதிகாரவர்க்கக் கும்பல் இந்த நாட்டின் அணுசக்தி தொடர்பான அனைத்து அம்சங்களையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. [தற்போது இந்த அணுசக்தி ஆணையம் சற்றே விரிவுபடுத்தப்பட்டுள்ளது.  டிசம்பர், 2009ல் அது அணுசக்தித் துறைத் தலைவரின் தலைமையின் கீழ், அவரும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதமர் அலுவலத்தில், அறிவியல் தொழில்நுட்ப ஸ்டேட் அமைச்சராக இருக்கும் ப்ரிதிவிராஜ் சவ்கான் உள்ளிட்ட 12 உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கிறது]

பல பத்தாண்டுகளாகியும் இந்த அணுசக்தி நிறுவனம் ஒரு சுதந்திரமான ஒழுங்குமுறை அமைப்பின் தேவையைக் கூட உணரவில்லை. அணு மின்சக்தி அமைப்புகளை நிறுவுதல் மற்றும் நெறிப்படுத்துதல் ஆகிய இரண்டு செயல்களையும் அணுசக்தித் துறையே தனது பொறுப்பில் வைத்திருந்தது.  அமெரிக்காவில் பென்சில்வேனியா மாகாணத்திலுள்ள மூன்று மைல் தீவில் 1979-ல் நடந்த பாரதூரமான அணுவுலை விபத்துக்குப் பின்னர்தான் தனியாக ஒரு அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தை (AERB)அமைக்கும் நடவடிக்கையை அணுசக்தித் துறை தொடங்கியது.[57]  அணுசக்திப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் குறிக்கோளுடன் 1983-ல் இந்த வாரியம் அமைக்கப்பட்டது.  இருப்பினும், இந்த வாரியம் (AERB) அணுசக்தித் துறைத் தலைவர் தலைமைவகிக்கும் அணுசக்தி ஆணையத்திடமே நேரடியாக அறிக்கை அளிக்க வேண்டியிருக்கிறது. இச்செயல், அணுசக்தித் துறையிலிருந்து தனித்து சுதந்திரமாகச் செயல்படும் ஒழுங்குமுறை அமைப்பு என்ற கூற்றை கேலிக்குறியதாக்குகிறது.

எதார்த்தவாதியான ஏ. கோபாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் 1995-ல் இயங்கிய இந்த வாரியம் (AERB) இந்திய அணுசக்தி அமைப்புகளில் காணப்பட்ட, உடனடிக் கவனிப்பு தேவைப்பட்ட 95 பிரச்சினைகள் உள்ளிட்ட 130 பாதுகாப்புப் பிரச்சினைகளைத் தொகுத்து ஒரு அறிக்கை தயாரித்துக் கொடுத்தது.  அந்த அறிக்கை தொடர்பாக நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட்டதா, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது பற்றி எதுவும் தெரியவில்லை.

இந்த வாரியத்தை (AERB) விட்டு விலகிய பின்னால், திரு.கோபாலகிருஷ்ணன்,  “அணுசக்தித் துறையின் அணுவுலை அமைப்புகளில் பாதுகாப்பு நிலைமை சர்வதேசத் தர நிர்ணயத்துக்கு மிகவும் பின்தங்கி இருக்கிறது” என்றும், “உண்மையிலேயே சுதந்திரமான ஒரு அணுசக்தி ஒழுங்குபடுத்தல் வழிமுறை இன்மையும், அணுசக்தித் துறை வகிக்கும் ஈடிணையற்ற அதிகாரமும், செல்வாக்கும், இவற்றுடன் இணைந்த உண்மைகளை மூடிமறைக்க விரிவாய்ப் பயன்படுத்தப்படும் அலுவல் கமுக்க சட்டமும் (Official Secrets Act) ஆகிய இவைதான் இந்த படுமோசமான நிலைமைகளுக்கு முதன்மையான காரணங்கள்” என்றும் எழுதினார்.[58].  இதற்குப் பதிலளிக்கும் முகமாக அணு மின்சார நிறுவனம் (Nuclear Power Corporation) இந்த கவன ஈர்ப்புகளை வெறும் “பதற்றக் கூச்சல்” என்று புறந்தள்ளியதுடன் கோபாலகிருஷ்ணன் “காற்றடிக்கும் திசையில் பறக்கிறார்” [“tilting at windmills”] என்று தனது வருத்தத்தையும் வெளியிட்டது. மேலும், “இந்த அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தை நாங்கள் எதிரிகளாகக் கருதவில்லை.  நாங்கள் அனைவரும், சிக்கனமானதும் பாதுகாப்பானதுமான முறையில் அணுசக்தித் துறையை வளர்த்து அணுசக்தியின் எண்ணற்ற பலன்களை நாட்டுக்கு வழங்கவேண்டி நமது தேசப்பிதாக்களால் பணிக்கப்பட்ட ஒரே அறிவியல் குடும்பத்தின் சகோதரர்கள்”  என்றும் கூறியது.[59]

இந்த சகோதரத்துவ ஒத்துழைப்பு பற்றிய பரிந்துரை சந்தேகத்துக்கு இடமின்றி அடியொற்றிச் செல்லும் வேளையில், அணுசக்தியைப் போன்றதொரு அபாயகரமான தொழில்நுட்பத் துறையில் அதன் நெறியாளர்களும், அமைப்பாளர்களும் இவ்வளவு நெருக்கமாக இருப்பது ஓரளவுக்குப் பிரச்சினைக்கு உரியதாகவும் இருக்கிறது.  உண்மையில் இது, திரு. கோபால கிருஷ்ணன் குறிப்பிடுவது போல, அணுசக்திப் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச நியதியை மீறுவதாக இருக்கிறது. அந்த நியதிப்படி சம்பந்தப்பட்ட (இந்தியா உள்ளிட்ட) அனைவரும், “ஒழுங்குமுறை அமைப்புக்கும் … அணுசக்திப் பயன்பாட்டுடன் .. தொடர்புடைய .. வேறெந்த அமைப்புக்கும் இடையே திறம்படச் செயல்படத் தக்கதொரு பிரிவினையை உத்தரவாதப்படுத்தத் தகுந்த நடவடிக்கையை எடுக்கவேண்டும்”.[60]

அணு விபத்துகள் அறிதாய் நிகழ்பவையே. எனவே, நமது அணுசக்தித் துறை செய்திருப்பது போன்று, பாதுகாப்பு நெறிமுறையை மீறுகின்ற செயல்கள் பெரிதும் சாத்தியமானவையாகவே இருக்கின்றன.  விபத்துக்கான வாய்ப்புகள் குறைவாயினும், ஒரே ஒரு விபத்தே பேரழிவைக் கொண்டுவரக் கூடிய காரணத்தால் பாதுகாப்பு குறித்து பாரதூரமான கவனம் செலுத்தப்படுகிறது. ஆனால், இங்கோ ஒழுங்குமுறைக் கட்டமைப்பு சிதிலமடைந்து கிடப்பது தெளிவு.   இந்த நிலைமையில் அணுசக்தித் திட்டம் விரிந்த அளவில் முன்னெடுக்கப்பட இருப்பது, குறிப்பாகப் பெருத்த கவலைக்குறியதாக இருக்கிறது.

6. அணு சக்தித் திட்டத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது படிநிலைகள் பற்றி

மேற்சொன்னது போல, முப்படிநிலை அணு சக்தித் திட்டத்தில் முதலாவது படிநிலை மற்ற இரண்டு படிநிலைகளைக் காட்டிலும் மிகச் சிறியது. அணுசக்தித் துறையின் முன்மொழிவுகளின்படியே மின்சக்தியின் பெரும்பகுதி வீரிய ஈனுலை மற்றும் தோரிய அணுவுலைகளாகிய இரண்டாவது மற்றும் மூன்றாவது படிநிலைகளில் இருந்தே கிடைக்க வேண்டி இருக்கிறது என்பதையும் மேலே விவரித்தோம். துரதிஷ்டவசமாக, பாபாவின் தொடக்ககாலக் கணிப்புக்குப் பின் 55 ஆண்டுகள் கடந்த பின்னும் இந்த இரு படிநிலைகள் தொடர்பான தொழில்நுட்பங்களும் நம்பிக்கை அளவிலேயே தொடர்கின்றன. ரஷ்யாவில் இருக்கும் 30 ஆண்டு பழமையான ஒரு வீரிய ஈனுலையைத் தவிர [61] மேற்சொன்ன இரு படிநிலைகளுக்கான தொழில்நுட்பங்கள் உலகில் வேறெங்குமே வர்த்தக ரீதியான செயல்பாட்டில் இல்லை.

இரண்டாவது படிநிலைக்கான தொழில்நுட்பம் மூன்றாவது படிநிலையினதை விட ஒரளவுக்கு அதிகமாக வளர்ந்திருக்கிறது.  பல்வேறு நாடுகள் முன்மாதிரி வீரிய ஈனுலைகளை (Prototype Fast Breeder Reactor) நிர்மாணித்து, நிர்மாணித்த கையோடு அதைக் கைவிடவும் செய்திருக்கின்றன. ஆனாலும், இந்தியா தனது சொந்த  முன்மாதிரி வீரிய ஈனுலையைக்  கல்பாக்கத்தில் நிர்மாணித்து வருகிறது.  மூன்றாவது படிநிலை என நமது மனக்கண்ணில் விரிந்த தோரியம் அணுவுலை போன்றதொன்றை கட்டுவதற்கான முயற்சியைக்கூட யாரும் இதுவரை எடுத்ததில்லை. தோரியம் எரிபொருட் சுழற்சி முறையை வணிக ரீதியாக நடைமுறைப்படுத்துவதற்கு பிரம்மாண்டமான ஆய்வு முயற்சிகள் தேவை.  தொழில்நுட்ப ரீதியான ஏராளமான தடைதாண்டல்கள் இல்லையேல் வழமையான யுரேனிய அணுவுலைகளைவிட தோரிய அணுவுலைகள் கணிசமான அளவுக்கு பெருத்த செலவு பிடிக்கக் கூடியவையாய் அமையும். (இந்தியாவில் இல்லாவிடினும்) உலகில் மிகப் பெரும் அளவில் யுரேனியம் கிடைப்பதால் இந்த தோரிய அணுவுலை முயற்சிக்கு உலகளவில் ஒரு பொருளாதார உந்துதல் இல்லை.  தோரிய அணுவுலைத் திட்டத்தின்பால் தனது ஆய்வைத் தொடரும் நாடு உலகளவில் இந்தியா மட்டுமே.

முதல் படிநிலை “உலகத் தரத்திலான செயல்பாட்டிலும்”, இரண்டாவது படிநிலை “உலகின் முன்னேறிய தொழில்நுட்பம்”  என்ற நிலையிலும், மூன்றாவது படிநிலை “உலகளவில் தனித்துவமானது” என்ற நிலையிலும் இருப்பதாக இந்த நிலைமையை அணுசக்தித் துறை வர்ணிக்கிறது! [11]

6.1 இரண்டாவது படிநிலை

ஒரு முன்மாதிரி வீரிய ஈனுலையைக் கட்டியமைக்க இந்தியா நீண்ட காலமாகத் திட்டமிட்டு வருகிறது. “பெரியதொரு 500 மெகாவாட் முன்மாதிரி வீரிய ஈனுலையை வடிவமைத்துக் கட்டியமைப்பது” என்பதை ”1970-80 ஆகிய பத்தாண்டுகளுக்கான வேலைத் திட்ட அறிக்கை”  தனது இலக்குகளில் ஒன்றாகக்  கொண்டிருந்தது.  கல்பாக்கத்தில் அமைக்கப்பட்டுவரும் இந்த PFBR 2010-ல் செயல்படத் தொடங்கும் எனற தற்போதைய கால அட்டவணைப்படி குறைந்தது 30 ஆண்டுகள் காலதாமதம் ஆகியிருக்கிறது!

இன்றைய நிலவரப்படி, எடுத்துக்கொண்ட இந்தப் பணி பெருத்த காலதாமதமாகி இருப்பதுடன் நிதி இலக்கையும்  வெகுவாகத் தாண்டிச் செல்கிறது. எனவே, இந்த காலக்கெடுவும் கூட நடைமுறைச் சாத்தியமில்லை என்பதே உண்மை. இந்த அணுவுலைத் திட்டப் பணி, ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியான ரூ.3492 கோடிகளுக்குள் செப்டம்பர், 2010 என்ற கால இலக்கில் முடிவடையும் என திட்ட அமலாக்க அமைச்சகம் மார்ச் 2009-ல்,  தொகுத்தளித்தது.[62]  எனினும், சில மாதங்கள் கழித்து வெளியான பாவினி-யின் (இந்த திட்டப்பணியை மேற்பார்வையிடுவதற்காக அமைக்கப்பட்ட  பொதுத்துறை நிறுவனம்) ஆண்டறிக்கை 2009-ல் வேறு வழியின்றி குறிப்பிடப்பட்டிருந்தது என்னவென்றால், “திருத்தப்பட்ட திட்டச் செலவு ரூ.5,677 கோடிகள் ஆகும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது”  என்பதே.[63] இது தொடக்க நிலை திட்டச் செலவை விட 60% அதிகம். மேலும், “இந்த கட்டுமானப் பணி மே 31, 2008 அளவில் அடைந்திருந்த 35% முன்னேற்றத்தோடு ஒப்பிடும்போது,   மே 31, 2009 அளவில் 45% முன்னேறியிருக்கிறது” என்றும் அந்த ஆண்டறிக்கை குறிப்பிட்டுகிறது.  இதிலிருந்து, இந்த திட்டப்பணி செப்டம்பர், 2010-ல் முடியப்போவதில்லை என்று தெளிவாக அனுமானிக்க முடியும்.

உலகின் பிற பகுதிகளில் இந்த வீரிய ஈனுலைகள் தொடர்பான வரலாற்றைப் பரிசீலிப்பது பயனுள்ளதாக இருக்கும். பல நாடுகள் முன்மாதிரி வீரிய ஈனுலைகளைக் கட்டி அமைத்திருக்கின்றன.  சர்வதேச அணுசக்தி முகாமை (IAEA) யின் விவரத்திரட்டு பயனுள்ள வகையில் இந்த வரலாற்றைப் பரிசீலிக்கிறது.[64] 1980-களில் பிரான்சு, ஜெர்மெனி, பிரிட்டன், அமெரிக்கா, சோவியத் யூனியன் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் வர்த்தக அளவிலான வீரிய ஈனுலைகளை நிர்மாணிக்கத் தொடங்கின.  அந்த திட்டங்கள் ஒவ்வொன்றும் தோல்வியே கண்டன.  பெருவாரியான மக்கள் எதிர்ப்புக்குப் பின்னர் 1998-ல் இந்த வகை பிரெஞ்சு ஈனுலை மூடப்பட்டது.  பெருத்த பொருட்செலவில் கட்டிமுடிக்கப்பட்ட பின்னும் ஜெர்மானிய ஈனுலை இயக்கப்படவே இல்லை!  இவ்வகை ஜப்பானிய ஈனுலை 1995-ல் பாரதூரமான விபத்துக்கு உள்ளான பின்னால் நிரந்தரமாக மூடப்பட்டது.  அமெரிக்கத் திட்டமும் காலப்போக்கில் கறைந்து மறைந்தது. நடப்பில் இருக்கும் வர்த்தக ரீதியான வீரிய ஈனுலை  ரஷ்யாவின் 30 ஆண்டுகள் பழைமையான ஒன்றே ஒன்று மட்டுமே.  இந்த எதார்த்த நிலைமைகள் வலியுறுத்திய வகையில் “வீரிய ஈனுலைகளை அமைப்பதற்கான பொருளாதார நிர்ப்பந்தம் ஏதுமில்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்”  என்று சர்வதேச அணுசக்தி முகாமை இது பற்றிய தனது தொகுப்பறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்த்து. இத்திட்டத்தின் மூல மதிப்பீட்டின் படியே கல்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வரும் PFBR ஒரு சிக்கனமான சக்தி மூலம் என எதிர்பார்க்கப் படவில்லை.[65]  திட்டச் செலவை அதிகப்படுத்தி இருக்கும் மறு மதிப்பீடு இந்த மோசமான நிலைமையை மேலும் கொடுமையானதாக்கவே உதவுகிறது.

மேலும், இந்த வீரிய ஈனுலையின் பாதுகாப்பு அம்சம் பற்றிய மிகப் பாரதூரமான பிரச்சினைகள் இருக்கின்றன.  செலவை மிச்சப்படுத்த வேண்டி அணுசக்தித் துறை பலவீனமான தடுப்பு மதில்களைக் கொண்டதாக இந்த வீரிய ஈனுலையை வடிவமைத்திருக்கிறது என்று குமாரும் ரமணாவும் வாதிடுகின்றனர்.[66]  அவர்களுடைய கணிப்பின்படி, வளிமண்டலத்தில் கதிர்வீச்சை வெளிவிடும்படியான ஒரு பாரிய விபத்து நிகழுமானால், அது இந்த அணுவுலையின் தடுப்பு மதில்களை நிச்சயமாக உடைத்து வெளியேறும். இந்த ஆசிரியர்கள் தமது ஆய்வில் விவாதிக்கும் மிக மோசமான பிரச்சினை என்னவென்றால், இவ்வகை அணுவுலை (PFBR) positive void coefficient என்ற குணாம்சத்தைக் கொண்டிருக்கிறது.   நாம் முன்னர் விவரித்தது போல, செர்னொபில் அணுவுலை வெடிப்பு விபத்துக்குக் காரணமான பண்புகளில் இதுவும் ஒன்று. “அணுக்கருப் பிளவு நிகழ்த்தப்படும் அணுவுலை மையத்தை உடைத்து வெளியேறும் நிகழ்வு பெரிதும் அசாத்தியமானது” (voiding of the core is highly improbable) என்றும் “கோட்பாட்டு அளவிலானதொரு மைய ஒழுங்கு குலைவு விபத்து என்ற அளவுக்கு மட்டுமே இது பார்க்கத்தக்கது” (is of concern only in the case of hypothetical core disruptive accident) என்றும் அணுசக்தித் துறை தனது வடிவமைப்பு தொடர்பான அறிக்கையில் வாதிடுகிறது. [67]  அது ”கோட்பாட்டளவிலான”  பிரச்சினையே என்று கொண்டாலும் பெருநாசம் விளைவிக்கக் கூடியதாய் இருப்பதால், இதைப் பகுப்பாய்வு செய்வதில் பாரதுரமான அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றே ஒருவர் எதிர்பார்க்க முடியும். ஆனால் அணுசக்தித் துறையோ (அனாமதேய ”ஆய்வுகளை” சுட்டிக்காட்டி)  “positive void coefficient .. விளைவு அனுமதிக்கத் தக்கதாகவே கருதப்படுகிறது” என்று வெறுமனே கூறுகிறது.

அணுசக்தித் திட்டத்தின் இந்த இரண்டாவது படிநிலைதான் அணுசக்தித் துறையால் தெரிவிக்கப்பட்டிருக்கும் அணு மின்சக்தி உற்பத்தித் திறனில் பெரும்பகுதியை வழங்க வேண்டியிருக்கிறது என்பதை இங்கே வலியுறுத்துகிறோம்.  அணு மின்சக்தி பற்றிய இந்த சவடாலை எல்லாம் பெரிதாய் எடுத்துக்கொள்ளக் கூடாது என்பது வாசகருக்கு இச்சமயம் தெளிவாகி இருக்கும்.  இருந்தும், இன்னமும் ஒருவர் அணுசக்தித் துறையை நம்புவாராயின், அணுசக்தித் துறையின் மின் உற்பத்தி பற்றிய அனுமானங்கள் அடிப்படையிலேயே நிலையற்றவை என்று ரமணனும் சுசித்ராவும் வாதிடுவதைப் பார்க்கவும். [68] சுருக்கமாக, வீரிய ஈனுலைகளின் வளர்ச்சி பற்றிய அணுசக்தித் துறையின் மதிப்பீடுகள் இரட்டிப்பு நேரம் (doubling-time) என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.  முன்னர் விவரித்ததுபோல இந்த அணுவுலைகள் தனது எரிபொருளைத் தானே தயாரிக்கின்றன; ஆக, ஒரு குறிப்பிட்ட காலச் செயல்பாட்டில் ஒரு ஈனுலை மற்றொரு அணுவுலையில் எரிபொருளாக இடத்தக்க புளூடோனியத்தை உற்பத்தி செய்கிறது.

இருப்பினும், இங்கு கவனிக்கத் தக்கது என்னவென்றால், மேற்சொன்ன செயல்பாடு (இரட்டிப்பு) ஒரு தாமதத்தை உள்ளடக்கி இருக்கிறது. முதல் அணுவுலைக்குத் தேவையான புளூடோனியம் முன்னதாகவே ஒதுக்கி வைக்கப்பட வேண்டும்.  இரண்டாவதாக, அந்த அணுவுலை குறிப்பிட்ட நேரம் இயக்கப்பட்ட பின்னர்தான் அதன் மையத்தில் இருந்து புளூட்டோனியத்தைப் பிரித்தெடுக்க முடியும். பிறகு, மற்றொரு அணுவுலையில் பயன்படுத்துவதற்காக இது மறுசுழற்சிக்கு உட்படுத்தப்பட வேண்டும்.  இதற்கு ஆகும் தாமதத்தை அணுசக்தித் துறை பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.  அணுசக்தித் துறையின் ஜோசியம் பலிக்குமானால், அவர்களிடம் “ப்ளூட்டோனியம் ஏதும் மிச்சமிருக்காது”! என்கிறது ரமணன் மற்றும் சுசித்ராவின் ஆய்வுக் கட்டுரை.  அணுசக்தித் துறை தனது கணிப்புகளை சாதிக்க முடியாது அல்லது அதிகபட்சம் 40 விழுக்காட்டுக்கு மேல் சாதிக்க முடியாது என்றும் இவர்கள் வாதிடுகிறார்கள்.  இந்த அளவுக்கான சாத்தியப்பாடும் கூட அசாத்தியமே என்பதை நாம் விவாதித்த பிற கூறுகள் உட்கிடையாக வலியுறுத்துகின்றன.

இந்த வீரிய ஈனுலைத் திட்டம் அணு ஆயுதத் திட்டத்துடனும் முக்கியமான தொடர்பைக் கொண்டிருக்கிறது. இந்த அம்சத்தைப் பின்னர் விரிவாய்க் காண்போம்.

6.2 மூன்றாவது படிநிலை

அணுசக்தி எரிபொருளாகத் தோரியத்தைப் பயன்படுத்துவது தொடர்பான தொழில்நுட்பம் இன்னமும் குறைவளர்ச்சி கண்டதாகவே இருக்கிறது. யுரேனியத்தை விடவும் தோரியம் மிகப் பெரும் அளவில் இப்புவியின் மேற்பரப்பில் கொட்டிக் கிடக்கிறது.  ஆயினும், தோரிய எரிபொருட் சுழற்சி விரிவாய் வளர்க்கப்படவில்லை என்பதற்கான காரணம் மிகச் சாதாரணமானது.  யுரேனியத்தில் அணுப்பிளவுத் தன்மைகொண்ட ’யு’ இயற்கையாக அமையப் பெற்றிருக்கிறது.  எனவே, இயற்கையாய்க் கிடைக்கும் அந்த தாதுவை சுத்திகரித்தாலே எரிபொருள் கிடைத்துவிடுகிறது.   தோரியத்தில் அவ்வாறு இல்லை.  இயற்கையில் கிடைக்கும் தோரியம் அணுக்கருப் பிளவு எரிபொருளாகப் பயன்படுத்தப்படக் கூடியது அல்ல.  தோரியம், அணுக்கரு வெடிப்பு எதிர்வினைக்கு உட்படும்போது அணுப்பிளவுத் தன்மைகொண்ட யுரேனியம்-233 உற்பத்தி செய்யப்படுகிறது. ஆக, தோரியத்திலிருந்து எரிபொருளை உற்பத்தி செய்வதற்கான வழிமுறை சுத்திகரித்தல் பொன்ற நேரடி செயல்பாடோ, இரசாயன மாற்றமோ அல்ல.  மாறாக, அதற்கு ஒரு யுரேனிய அணுக்கரு வெடிப்பினால் ஏற்படும் தோரிய அணுக்கருவின் எதிர்வினை செயல்பாடே தேவைப்படுகிறது.

மேலும், இந்த வழிமுறையும் கூட சிக்கலான புதிர்கள் நிறைந்தது.  அதற்கான காரணங்கள் இரண்டு.  முதலாவதாக, இந்த யு-வை [ U233 ] உற்பத்தி செய்யும் அணுசக்தி எதிர்வினையின்போது வேறொரு யுரேனிய வகைத் தனிமமும் [ U232 ] உற்பத்தி செய்யப்படுகிறது.  இந்தத் தனிமத்தின் சிதைவு பெரிய அளவிலான காமா கதிர்வீச்சைத் தோற்றுவிக்கும்.  எனவே, எரிபொருள் உருவாக்கம் மற்றும் மறுசுழற்சி செயல்பாடுகள் வெகுதொலைவில் கையாளப்பட வேண்டியவை.

இரண்டாவதாக, தோரிய எரிபொருள் சுழற்சிமுறை மேற்சொன்ன வகையிலான தற்பெருக்கத்திற்கு உட்படுத்தப் படவேண்டும்.  எரிபொருளின் முதல் தொகுப்பு (பெருத்த பொருட்செலவில் அறிதாய்த் தயாரிக்கப்பட்ட இது) அணுவுலையில் இடப்பட்ட பின்னால், எரிக்கப்பட்ட கழிவும் மறுசுழற்சி செய்யப்பட்டு மீண்டும் உலையில் இடப்பட வேண்டும். இருப்பினும், காமாக் கதிர்வீச்சுப் பிரச்சினைக்கு அப்பாலும் கெட்டித்தட்டிப் போனதும்  கரைக்க முடியாததும் வேதிவினை அற்றதுமான தோரியம்-டை-ஆக்சைடு எஞ்சி நிற்கிறது.

உண்மைகள் இவ்வாறு இருக்க, உலகில் வேறு எந்த நாட்டிலும் தோரியத்தைப் பயன்படுத்துவதற்கான ஒரு செயல்திட்டம் இல்லாதது ஆச்சரியப்படத் தக்க ஒன்றல்ல.  இந்தியா இந்த அபாயகரமான பாதையில் தொடர்வதுதான் உண்மையில் வியப்பளிக்கிறது.  உலக அணுசக்திச் சங்கம் குறிப்பிடுவது போல, “ பல ஆண்டுகளாக இந்தியா மட்டுமே தனித்து நின்று தோரியப் பயன்பாட்டுக்கான பெருத்த ஆய்வு முயற்சிகளை எடுத்துவருகிறது”[69]

மேற்சொன்ன பிரச்சினைகளின்பால் சிறிது முன்னேற்றம் கண்டிருப்பதாகவும் [70] தோரிய சுழற்சி பற்றிய அனுபவத்தைப் பெறுவதற்காக முன்னேறிய கனநீர் அணுவுலையை (AHWR) கட்டுவதற்குத் தற்போது திட்டமிட்டு வருவதாகவும் அணுசக்தித் துறை அறிவிக்கிறது.  இருந்தபோதிலும், இந்தத் தடைகளை எல்லாம் கடந்து முன்னேறுவதற்கு மிகப் பிரம்மாண்டமானதும் ஏராளமான செலவு பிடிக்கக் கூடியதுமான ஆய்வுப் பணிகள் தேவை.  யுரேனிய எரிபொருள் சுழற்சிமுறை மன்ஹாட்டன் திட்டத்திற்குப் பின்னர்தான் வளர்த்தெடுக்கப்பட்டது.

இந்த பகீரத ஆய்வுகளின் முடிவில், தோரிய வழி மின்சாரம் எப்போதாவது பொருளாதார ரீதியில் போட்டியிடத் தக்கதாக உற்பத்தி செய்யப்பட முடியுமா என்பது விளங்காமலேயே உள்ளது.  தனித்து நின்று தோரிய எரிபொருள் சுழற்சித் தொழில்நுட்பத்தை வளர்த்தெடுப்பதற்கு செய்யப்படும் ஏராளமான செலவுகள் நியாயமானவைதானா?  கொடுப்பினையற்ற வகையில், வெளிப்படையற்ற தன்மையும், ஜனநாயக பூர்வமான விவாதம் இன்மையும் நிலவும் இந்தியாவில் இப்படி ஒரு கேள்வி எழுப்பப்படும் அல்லது வெளிப்படையாக விவாதிக்கப்படும் என்று தோன்றவில்லை.

7.  அணுஆயுதமயமாக்கம்

அணுசக்தியின் இராணுவ அம்சமான அணுகுண்டுகளில் இருந்து அதன் சமூக அம்சமான அணுமின்சாரத்தைத் தனித்துப் பார்ப்பது பெருங் கடினம்.  பாபா, நேரு இருவருமே இதை உணர்ந்திருந்தனர்.  “அணுசக்தித் தொழிற்துறை வளர்ச்சி, பல நாடுகளின் கரங்களில் ஏராளமான அணுப்பிளவுப் பொருட்களைக் குவிக்கும்; அவற்றில் இருந்து அணுகுண்டு தயாரிப்பது என்பது ஒப்பீட்டளவில் மிக எளிதான செயல்” என்று பாபா குறிப்பிட்டார்.[71]  பின்னாளில் பாபா அணுசக்தி ஆய்வு மையம் எனப் பெயர் மாற்றப்பட்ட அணு சக்தி நிறுவனத்தை டிராம்பேயில் தொடக்கி வைத்து உரையாற்றுகையில்,  ”எனது அரசாங்கத்தின் சார்பாகவும் … ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் எதிர்காலத்தில் அமையவிருக்கும் எந்த ஒரு இந்திய அரசாங்கத்தின் சார்பாகவும், … நாங்கள் அணுசக்தியை அழிவுப் பணிக்கு எந்நாளும் பயன்படுத்த மாட்டோம் எனக் கூற விரும்புகிறேன்” என்று நேரு கூறினார்.  அணுசக்தியின் சிவில் மற்றும் இராணுவத் தன்மைகள் எனத் தனித்துப் பிரிக்கவொண்ணாத் தன்மையை நேருவும் உணர்ந்திருந்தார்.  பல ஆண்டுகள் முன்னர், அரசியல் நிர்ணய சபை விவாதங்களின்போது, “ நீங்கள் இந்த இரண்டையும் (அணுசக்தியின் அமைதிவழி மற்றும் இராணுவப் பயன்பாடுகள்) எப்படி வேறுபடுத்திப் பார்க்கிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை” என்று (தனது இப் புரிதலுக்கு) ஒப்புதல் அளித்திருந்தார். (p.49 [72])

இருப்பினும், அடுத்த நாற்பது ஆண்டுகளுக்கு, அடுத்தடுத்து பதவிக்கு வந்த இந்திய அரசுகள் தோற்றத்தின் அளவில் இந்த வேறுபாட்டைத் தொடரவே விரும்பின.  1974-ல் முதல் பொக்ரான் அணுகுண்டுப் பரிசோதனைக்குப் பின், இது அணுவெடிப்பின் சமூகப் பயன்பாட்டுச் சாத்தியப்பாடுகளை அறிவதற்காக செய்யப்பட்ட பரிசோதனையே  என விவரிக்கப்பட்டது.  ஆகவே, இது ”அமைதிக்கான அணுசக்தி வெடிப்பு” என அழைக்கப்பட்டது. [பரவலாய் நம்பப்படுவதற்கு மாறாக, இந்த கோளாறான சொற் பிரயோகம் இந்திய அரசின் கண்டுபிடிப்பு அல்ல.  கால்வாய்களை விரிவுபடுத்துதல் போன்ற சமூக நடவடிக்கைகளுக்கு அணுசக்திக் கருவிகளைப் பயன்படுத்துவது தொடர்பாக அமெரிக்க அரசு நெடுங்காலமாக விவாதித்து வருகிறது.  “அணுவெடிப்பின் அமைதிவழிப் பயன்பாடுகள்பற்றிய இப்படிப்பட்ட ஒரு அமெரிக்க ஆய்வில் இருந்து பொருத்தமான அந்த சொற்றொடரைப் பெயர்த்தெடுத்துப் பயன்படுத்திக்கொண்டார் பாபா]

“நாங்கள் அணு ஆயுதத்தை வைத்திருக்கவில்லை என்று முற்றிலும் தெளிவான முறையில் நான் கூறமுடியும்” என்று ராஜீவ் காந்தி 1985-ல் அறிவித்தார். (p . 267 [73]).  இந்தக் கூற்றுகள் எல்லாம் 1998-ம் ஆண்டு பொக்ரான் வெடிப்புடன் முடிவுக்கு வந்தன.  “எதிர்கால அரசின்”  அந்த நேரத்துப் பிரதிநிதியான பிரமோத் மகாஜன், அணு ஆயுதங்கள் ”பாதுகாப்பு சம்பந்தப்பட்டவை அல்ல”.  ”இந்தியா எங்கு இருக்கிறது என்பதை இனி உலகம் அறிந்துகொள்ளும். ஆதலால், எந்த இந்தியனும் தனது பாஸ்போர்ட்டைக் காட்டத் தேவையில்லை”.   இதுவே இந்த பொக்ரான் வெடிப்பின் முக்கியத்துவம் என்று தெளிவுபடுத்தினார்.

1974-ன் ”அமைதிக்கான அணுவெடிப்பு”, 1998-ன் அணுகுண்டுப் பரிசோதனை ஆகிய இரண்டுக்குமான ஆய்வு பெரிதும் பாபா அணுசக்தி ஆய்வு மையத்தில்தான் மேற்கொள்ளப்பட்டது. அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் பி.கே. அய்யங்கார், “அணு வெடிப்பொருளை வெடிக்கச் செய்த இந்த நடவடிக்கை… டிராம்பேயில் விஞ்ஞானிகள், பொறியாளர்களால் மேற்கொள்ளப்படும் வழமையான செயல்பாடுகளில் இருந்து சற்றே விலகிய நடவடிக்கையே.  மொத்த திட்டப்பணிகளும் இரகசியமாக இருப்பதற்கு … இதுவே காரணம்” என்று இது பற்றி நன்கு புரிந்துகொள்ளத்தக்க வகையில் விவரிக்கிறார். [75]

ஆய்வின் ஒன்றுக்கொன்று தொடர்புடைய தன்மை என்ற பிரச்சினைக்கு அப்பால் அணுப் பிளவுத் தன்மையுடைய பொருட்களின் குவிப்பு என்ற முக்கியமானதொரு பிரச்சினையும் உள்ளது.  இந்தியாவின் அணுவெடிப்பு ஆராய்ச்சி புளூடோனியத்தைப் பயன்படுத்தியுள்ளது.  பொதுவாய் அணுகுண்டுகளில் பயன்படுத்தப்படும் புளூடோனியம் ஆயுதத் தரத்திலான புளூடோனியம் என்று அழைக்கப்படுகிறது.  இதன் வரையறைப்படி இந்த ப்ளூடோனியம் 93 விழுக்காட்டுக்கும் அதிகமான  Pu239 வைக் கொண்டிருக்கிறது.

நாம் ஏற்கனவே விவரித்தபடி, மின்சார உற்பத்திக்கான அணுவுலை செயல்பாட்டிலும் கூட, யுரேனியம் ஒரு நியூட்ரானை உட்கிறகிக்கும் போது, [நியூட்ரானால் யுரேனிய அணுக்கரு சிதைக்கப்படும் பொழுது] இந்த Pu239உற்பத்தியாகிறது.  இருப்பினும், ஒரு அணுவுலை மின்சாரத் தயாரிப்புக்கானதாக இருக்கும்போது யுரேனிய எரிபொருள் தண்டுகள் [rods] சாத்தியமான அளவுக்கு அதிகபட்ச யுரேனியத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், உலையில் நீண்ட நேரத்திற்கு வைக்கப்படுகின்றன.  இந்த காலப் போழ்தில் பிற அணுசக்தி எதிர்வினைகளும் நிகழ்கின்றன.  அதன் விளைவாக இந்த அணுவுலைகளில் இடப்பட்ட எரிபொருட் கழிவில் Pu240 உள்ளிட்ட பிற புளூடோனியத் தனிமங்களும் கலந்திருக்கின்றன.  இந்த வகையிலான அணுவுலைத் தர புளூடோனியத்தில் கலந்திருக்கும் இன்னபிற புளூடோனியத் தனிமங்கள் அவற்றிலிருந்து அணுகுண்டு தயாரிப்பதைக் கடினமானதாக்கி விடுகின்றன. (இது தொடர்பான விவாதத்தை அமெரிக்க அணுசக்தித் துறையின் வகைபிரிக்கப்படாத ஆவணத்தில் பக்கம் 37-39-ல்  பார்க்கவும்[76])

எனினும், ஆய்வு அணுவுலைகளில் செலுத்தப்படும் யுரேனிய எரிபொருள் தண்டுகள் குறைந்த அளவு எரிப்புக்குப் பின்னர் வெளியே இழுக்கப்படுகின்றன.  ஆயுதத் தரத்திலான புளூடோனியத்தை உற்பத்தி செய்ய எரிக்கப்பட்ட இந்த தண்டுகளைப் பயன்படுத்த முடியும்.  1974-ம் ஆண்டின் பொக்ரான் வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட அணுப்பிளவு எரிபொருள் ‘சிரஸ்’  (CIRUS) ஆய்வு அணுவுலையில் இருந்து பெறப்பட்டதே.  இந்த சிரஸ் பற்றிய வரலாறு சுவாரசியமானது.[72,73] கெனடியன் இந்தியன் ரியாக்டர், யூ.எஸ் என்பதே ‘சிரஸ்’ என்பதன் விரிவு ஆகும்.  ஏனெனில், இந்த அணுவுலையின் வடிவமைப்பு கனடாவினது, பயன்படுத்தப்படும் கனநீர் அமெரிக்காவினுடையது மற்றும் எரிபொருள் இந்தியாவினுடையது.  இந்த அணுவுலையில் இருந்து எடுக்கப்படும் எரிபொருள் எப்படிப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது பற்றிய கட்டுப்பாடுகள் எதையும் கனடா விதிக்கவில்லை.  இந்த எரிபொருளை அமைதி வழிக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்ற இந்தியத் தரப்பின் கடப்பாடு, உண்மையில், இந்த உடன்படிக்கையின் இரகசிய இணைப்பு ஒன்றில் மட்டுமே இடம் பெற்றிருந்தது.  மேலும் பார்க்கையில், எரிபொருள் கனடாவில் இருந்து அளிக்கப்படும் என்பதே தொடக்கநிலைக் கருத்தாக இருந்தது. எனினும், இதற்கு வாய்ப்பில்லாத வகையில் இந்தியத் தரப்பு முந்திக்கொண்டு அந்த அணுவுலையில் பயன்படுத்துவதற்கான எரிபொருள் தண்டுகளைக் குறித்த காலத்துக்குள் சுயசார்பாகத் தயாரித்துவிட்டது. இந்த செயல், என்ன இருந்தாலும் அணுவுலையில் எரிக்கப்பட்ட எரிபொருள் இந்தியாவினுடையது தானே, அதைத் தன் விருப்பத்திற்குப் பயன்படுத்தினால் என்ன என்ற வாதத்தை முன்வைக்க வழிசெய்தது.

அமைதிவழி அணுசக்தித் தொழில்நுட்பம் அளிக்கப்படுவதன் விளைவாக நிகழும் அணு ஆயுதப் பரவல் பற்றிய விவாதங்களில், ‘சிரஸ்’-ல் இருந்து பெற்ற புளூடோனியத்தின் அணு வெடிப்புப் பயன்பாடு அடிக்கடி சுட்டிக்காட்டி விவாதிக்கப்படுகிறது. [“அணுஆயுதப் பரவல்என்ற பதப் பிரயோகம் ஐயப்பாடான ஒன்றாகவே இருக்கிறது. ஏனெனில், இது ஏகாதிபத்திய அரசுகளின் கட்டுப்பாட்டுக்கு அப்பால் நிகழும் பேரழிவு ஆயுதங்களின் பரவலை மட்டுமே குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது] ஆப்ரகாம் போன்ற சிலரது பதிவுகள் இத் தொடர் நிகழ்வுகளை, நல்லெண்ணம் கொண்ட ஆனால், சற்றே ஏமாளித்தனமான கனடாவினரை வஞ்சகமான இந்தியர்கள் சூழ்ச்சித்திறனால் வென்றுவிட்டார்கள் என்பதுபோல் படம்பிடிக்கின்றன.  மேலை நாடுகள் எப்போதுமே நல்லெண்ணம் கொண்டவை என்ற மூதுரையின் வெளிப்பாடாகவே இவ்வகை முடிவுகள் வந்தடையப்படுகின்றன.

இவ்வாறான விவரணைகளைப் பாரதூரமாகக் கருதத் தேவையில்லை.  ஆயுதத் தரத்திலான அணுப்பிளவுப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு இது இந்தியாவுக்கு உதவும் என்று சந்தேகத்துக்கு இடமற்ற வகையில் தெள்ளத் தெளிவாகத் தெரிந்துதான் இந்த கனடாவின் தொழில்நுட்பக் கையளிப்பு நடந்துள்ளது.  இது தொடர்பாகக் கேட்கப்படவேண்டிய பொருத்தமான கேள்வி, “தன்னை அணுஆயுதபாணி ஆக்கிக்கொள்ளும்படி  இந்தியாவை ஊக்குவிக்க ஏகாதிபத்திய உலகைத் தூண்டிய கணிப்புகள் எவை?” என்பதுதான்.

உண்மையில், சில ஆண்டுகள் கழித்து, அமெரிக்கா கிட்டத்தட்ட நேரடியாக அணுகுண்டையே இந்தியாவிற்கு வழங்க இருந்தது! சீனாவுக்கு எதிராகப் பிரயோகிப்பதற்காக “ஆசிய நட்பு” இராணுவச் சக்திகளின் கையில் ”அமெரிக்கக் கட்டுப்பாட்டின் கீழ் அணுஆயுதங்களை வழங்குவதன் சாத்தியப்பாடுகளைப்”  பரிசீலிக்கும் ஒரு இரகசிய ஆய்வை அமெரிக்கப் பாதுகாப்புத் துறை 1964-ல் நடத்தியது என்று பெர்கோவிச் விவரிக்கிறார்.[73 – பக்கம் 90-93]  அதே காலகட்டத்தில், ‘சமூகத்’ தேவைகளுக்காக இந்தியா அணு வெடிப்புப் பரிசோதனைகளை நடத்த உதவுவதன் சாத்தியப்பாடுகளை ‘தனிப்பட்ட முறையில்’ அமெரிக்க அணுசக்திக் கமிஷன் பரிசீலித்து வந்தது.  இந்த இரண்டு சாத்தியப்பாடுகளும் நடைமுறையற்றுப் போனாலும், இந்தியாவின் கரங்களில் அணு ஆயுதங்கள் இருப்பது பற்றி அமெரிக்காவை ஆளும் மேட்டுக்குடிகள் நிம்மதியற்று இருக்கிறார்கள் என்ற பொத்தாம்பொதுவான கற்பிதம் ஒரு அபத்தம் என்பதையே இவை காட்டுகின்றன.  அமெரிக்காவை ஆளும் நிறுவனத்துள்ளும் இதற்கான எதிர்ப்புச் சக்திகள் இருக்கின்றன.  நாம் கீழே விவாதிக்க இருப்பது போல, அதைப் பெரிதும் ஒத்த பதட்டம் இன்றும் தொடர்ந்து அவர்களை இயக்குகிறது.

1985-ம் ஆண்டு ’துருவா’ என்ற பெயரில் ‘சிரசுக்கு’ [CIRUS] ஒரு கூட்டாளியை இந்தியா கட்டியமைத்தது.  சிரசை ஒத்த, ஆனால் கணிசமான அளவு பெரிதாக, அணுஆயுதத் திரம் கொண்ட புளூடோனியத்தை உற்பத்தி செய்யத் தக்க வகையில் துருவா அமைக்கப்பட்டது.  சிரஸ் மற்றும் துருவாவில் இருந்து 500 கிலோ அணுஆயுதத் தரத்திலான புளூடோனியத்தை இந்தியா உற்பத்தி செய்து குவித்துள்ளது என்று மியான் எட் அல்-ன் ஆய்வு மதிப்பிடுகிறது.[77] இது நூற்றுக்கும் மேலான அணுஆயுத ஏவுகணையின் வெடிப்பு முனையை நிரப்பப் போதுமானது.

நாம் முன்னர் குறிப்பிட்டது போல, மின்சக்தி உற்பத்திக்கான அணுவுலைகளில் உற்பத்தியாகும் புளூடோனியத்தில் இருந்து அணு ஆயுதங்களைத் தயாரிப்பது கடினமானது. எனினும், இது அறவே முடியாதது அல்ல; மின் அணுவுலைத் தர ப்ளூடோனியத்தில் இருந்தும் அணுகுண்டுகள் தயாரிக்கப்பட முடியும்.  உண்மையில், 1998-ம் ஆண்டு அணுவெடிப்பில் மின் அணுவுலைத் தர புளூடோனியமே பயன்படுத்தப்பட்டது என்பதற்கு சில சான்றுகள் உள.[73]  இது உண்மையானால், அணுவுலை எரிபொருட் கழிவுகள் மலையெனக் குவிந்து இருப்பதால், இந்திய அரசின் கையிலுள்ள அணுவெடிப்புப் பொருட்களின் இருப்பு, மேற்சொன்ன மதிப்பீடுகளைவிட கணிசமான அளவு அதிகமாக இருக்கும்.

முப்படிநிலை அணுசக்தித் திட்டத்தின் இரண்டாவது நிலையான வீரிய ஈனுலைத் திட்டம் இங்கே பெருத்த முக்கியத்துவம் வாய்ந்ததாய் இருக்கிறது.   நாம் முன்னர் குறிப்பிட்டதுபோல, இந்த வீரிய ஈனுலைகள் அதன் மையத்தில் இடப்பட்ட எரிபொருளுடனும், யுரேனியப் போர்வையுடனும் இயங்குகின்றன.  இந்த யுரேனியப் போர்வை அணுஆயுதத் தரத்திலான புளூடோனியத்தைப் பெற்றெடுக்கிறது.  கல்பாக்கத்தில் கட்டுமானத்தில் உள்ள PFBR மட்டுமே ஆண்டாண்டும் 140 கிலோ கிராம் புளூடோனியத்தை உற்பத்தி செய்ய முடியும் என க்ளாசர் மற்றும் ரமணா ஆகியோர் மதிப்பிடுகின்றனர். [78]  இது மிகப்பெரிய அளவில் அணுஆயுதக் குவிப்பை செய்துகொள்ள இந்திய அரசுக்கு வழிவகை செய்யும்.

இந்த வீரிய ஈனுலைத் திட்டம் சர்வதேச அணுசக்தி முகாமையின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படுமா என்பது பற்றிய கேள்வி இந்தியா அமெரிக்கா இடையிலான ஆரம்ப காலக் கருத்து வேறுபாடுகளில் முக்கியமான ஒன்றாக இருந்ததை இந்த சூழலில் கவனிப்பது பொருத்தமானதாக இருக்கும்.[79]  இந்த ஈனுலைகள் கண்காணிப்பின் கீழ் வைக்கப்படுமா என்ற கேள்விக்கு, “சாத்தியமில்லை.  ஏனெனில் இது நமது போர்த்தந்திர நலனைப் பாதிக்கிறது” என்றும் இவ்வாறு ஆவதை விட இந்த ஒப்பந்தத்தை மூழ்கடித்து விடுவதே மேல் என்றும் ககோத்கர் பதிலளித்தார். [80]

இறுதிசெய்யப்பட்ட ஒப்பந்தத்தில் இந்த வீரிய ஈனுலைகள் ஐ.ஏ.ஈ.ஏ கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படவில்லை.  இந்த முடிவை இந்தியாவின் பேரம்போசும் திறமை என்றோ, அமெரிக்கர்களின் அறியாமை அல்லது சூதுவாதற்ற தன்மை என்றோ மீண்டும் ஒருமுறை கற்பித்துக் கூறுவது ஒருவரின் அரைவேக்காட்டுத்தனத்தையே காட்டும்.  அமெரிக்காவை ஆளும் மேட்டுக்குடிப் பிரிவினரிடையே இது பற்றிய முரண்பட்ட கருத்து வெளிப்படையாக நிலவியது.  செல்வாக்கு மிக்க ப்ரூகிங்ஸ் கழகத்தின் ஸ்டீஃபன் கோஹன், “நாங்கள் (அமெரிக்கா) வீரிய ஈனுலைத் திட்டத்தின் மீது பல கட்டுப்பாடுகளை விதித்திருந்திருப்போம்”. இருப்பினும், “புஷ் பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டார்” என்று கூறுகிறார் .[81]  எனவே, இது ஒரு அரசியல் முடிவாகவே இருந்தது. ’சிரஸ்’ விசயத்தில் நடந்தது போலவே, இந்தியா அணுஆயுதம் தரித்து நிற்பதற்கு ஏகாதிபத்திய ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவு தனது சொந்த நலனை முன்னிட்டு அனுமதி வழங்க முடிவெடுத்துவிட்டதாகவே தோன்றுகிறது.   இந்தியாவை சீனாவுக்கு எதிராக அணுஆயுதம் தரித்த பிராந்திய சக்தியாக வளர்க்க வேண்டிச் செய்யப்பட்டவையே இவை என்று மேற்சொன்ன இரு நிகழ்வுகளில் இருந்தும் ஒரு முடிவுக்கு வர நியாயமிருக்கிறது.

வெகுவாய் செறிவூட்டப்பட்ட யுரேனியமும் இராணுவத் தேவைக்கு ஆகக்கூடியதே.  யுரேனிய செறிவூட்டலுக்கான இந்திய அமைப்புகள் ஓரளவுக்கு தறக்குறைவானவையே.  பாபா அணுசக்தி ஆய்வு மையத்தில் ஒன்றும், மைசூருக்கு அருகே ரத்திஹல்லி-யில் ஒன்றுமாக, இரண்டு வாயுவழி மைய விலக்கு விசையாற்றல் செறிவூட்டு நிலையங்கள் – gas centrifuge enrichment facilities – இந்தியாவில் உள்ளன. இந்தியா சுமார் 400-700 கிலோ அளவுக்கு 45-30% செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைத் தயாரித்துக் குவித்திருக்கிறது என்கிறார் மியன் எட் அல் .  இந்தியாவின் வசம் 94 கிலோ அளவுக்கு 90% செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருக்கலாம் என்கிறது மற்றொரு ஆய்வு. [82]  இந்தியாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தில் இந்த செறிவூட்டப்பட்ட யுரேனியம் சந்தேகத்திற்கு இடமின்றி பயன்படுத்தப்பட்டுள்ளது.  மேலும் இதைக்கொண்டு அணுகுண்டு தயாரிக்கவும் முடியும்.

இத் தலைப்பின் கீழான விவரங்களைத் தொகுத்துக் கூறுவோமாயின், இந்திய அணுசக்தித் திட்டம் தன் முதன்மை அங்கமாக அணுஆயுத அம்சத்தைக் கொண்டிருக்கிறது என்பது தெளிவு.  வீரிய ஈனுலை போன்ற சில விசயங்களில், அணுவுலைகளின் குறிக்கோள் மின்சார உற்பத்தி என்பதாகத் தோன்றவில்லை.  மாறாக, ஆயுதத் தொழிற்சாலை என்ற பொருளை மறைப்பதற்கான மூடியாகவே மின் உற்பத்தி என்ற சொல் உண்மையில் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.  விரிவாகப் பார்த்தால், அணுசக்தித் திட்டம் மின் உற்பத்தி செய்வதில் அடைந்த பெரும் தோல்விக்குப் பின்னரும் அரசின் பேராதரவைப் பெற்றுத் திகழ்வதற்குக் காரணம் இந்தியாவின் அணுகுண்டுத் தயாரிப்புக்கு அதன் பங்களிப்பே எனக் கொள்ளலாம். இது தொடர்பான ஒரு இழையை, உறுதிசெய்யப் படாததெனினும், இங்கு குறிப்பிடுவது பொருந்தும். சாராபாய், ஹோமி சேத்னா காலத்தில் பிரதமர் இந்திரா காந்தியின் அறிவியல் ஆலோசகராக இருந்தவர் அசோக் பார்த்தசாரதி.   இவர், அணு மின்சக்தி உற்பத்தியில் அணுசக்தித் துறை கண்ட தோல்வியை தொடர்ச்சியாக முன் நிறுத்தி வாதிட்டதாகவும், அதன் விரிவாக்கத் திட்டங்களை மறுதலித்துப் பேசியதாகவும் கூறுகிறார்.  “நமது அணுசக்தித் திட்டத்திற்கு அணு மின்சக்தியைக் காட்டிலும் பெரிய குறிக்கோள்கள் இருக்கின்றன.  எக்காரணம் கொண்டும் இந்த குறிக்கோள்களை நாம் விட்டுக்கொடுக்க முடியாது”  என்ற விளக்கத்தின் மூலம் இறுதியாக, பி.என். ஹக்சர் தனது கருத்தை வீழ்த்தினார் என்றும் இவர் குறிப்பிடுகிறார். [அழுத்தம் அவருடையது] [83]

8. முடிவுரை

இந்தியாவில் அணுசக்தி பற்றிய விவாதம் நேர்மையின்மையின் உச்ச கட்டத்தில் இருப்பதைத் தெளிவாய் உணர முடிகிறது.  ஒவ்வொரு முறையும் குப்புற விழுவதற்காகவே, நமது அணுசக்தித் துறை தான் உற்பத்தி செய்ய இருக்கும் மின்சாரத்தின் அளவு பற்றித் தொடர்ந்து அசத்தும் முன் அறிவிப்புகளை வெளியிட்ட வண்ணம் இருக்கிறது.  இவ்வாறான கணிப்புகள் சென்ற ஆண்டு (2008) அணுசக்தி ஒப்பந்தத்திற்கு ஆதரவாக வாதிடுவதற்குப் பயன்படுத்தப்பட்டன.

எக்கேடுகெட்டாலும், அணுசக்தித் துறையில் ஏராளமான முதலீடு செய்வது என்ற முடிவில் அரசு உறுதியாக இருப்பதுபோல் தெரிகிறது.  அணுசக்தி விரிவாக்கம் முப்படிநிலை அணுசக்தித் திட்டத்தின் வழிநின்று நடந்தேறும் என்று அணுசக்தித் துறை உறுதியாகக் கூறுகிறது.  ஆனால், இது பெரிதும் அசாத்தியமானது.  யுரேனியத்தை எரிபொருளாகக் கொண்ட வழமையான சுதேசி மற்றும் இறக்குமதி அணுவுலைகள் மூலம் அணு மின்சக்தி அதிகரிக்கப்படுவதற்கே இன்றைய சூழலில் அதிகபட்ச சாத்தியப்பாடு இருக்கிறது.

தட்பவெப்ப மாறாட்டம் காரணமாக உலகெங்கும் அணுசக்தி மீதான ஆர்வம் ஓரளவுக்குப் புத்தெழுச்சி பெற்றிருக்கிறது.  இருப்பினும், நிலக்கரி போன்ற ஒப்பிடத்தக்க சக்தி மூலங்களை விட அணுசக்தி பெருத்த செலவு பிடிக்கக் கூடியதாகவே தொடர்கிறது.  இந்தியாவின் யுரேனியத் தாதுவள இருப்பு அளவிலும், தறத்திலும் குறைவானதாக இருப்பதால், பெரிய அளவிலான அணுசக்தி விரிவாக்க நடவடிக்கை தவிர்க்க ஒண்ணாமல் ஏகாதிபத்திய நாடுகளை அண்டிப் பிழைக்கும் நிலைக்கு இந்தியாவை இட்டுச் செல்லும்.  மேலும், இங்கு ஒரு முறையான ஒழுங்குமுறை கட்டமைப்பு இல்லாததால் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் படுமோசமாகி உள்ளன.

அணுசக்தித் திட்டத்தில் சிவில் மற்றும் இராணுவ அம்சங்கள் எப்போதும் பின்னிப் பிணைந்துள்ளன.  அணுஆயுதத் தயாரிப்பு அணுசக்தி விரிவாக்கத் திட்டத்தின் பெருமுக்கியத்துவம் வாய்ந்த அம்சமாகவும் இருக்கிறது.  புதிய முன்மாதிரி வீரிய ஈனுலையும் அணுசக்தி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து கிடைக்க இருக்கும் ஏராளமான யுரேனியமும் இந்தியாவின் பெருத்த அணுஆயுதக் குவிப்புக்கு வழிவகுக்கும்.  இந்த ஆயுதமயத் திட்டத்தை அமெரிக்கா தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.  இச்செயல், ஆசியாவில் கண்மூடித்தனமான ஆயுதப் போட்டியைக் கட்டவிழ்த்து விடும் அபாயத்தைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது.

தற்போது நிலவுகின்ற சமூக அமைப்பு முறை என்ற கட்டமைப்புக்குப் பெரிதும் உட்பட்ட வகையிலேயே அணுசக்தி பற்றிய நமது விவாதம் அமைந்திருக்கிறது என்பதை நாம் இங்கு வலியுறுத்துகிறோம்.  குறிப்பாக, தாராளவாத முதலாளித்துவ வளர்ச்சிக்கு முடிவிலா மின்சக்தி அதிகரிப்பு தேவைப்படுகிறது.  பல்வேறுபட்ட மனிதப் பயன்பாடுகளுக்கு மின்சாரம் தேவையாய் இருக்கையில், நிலவுகின்ற வளர்ச்சி மாதிரியோ மின் தேவையை எல்லையற்ற அளவுக்கு நீட்சியுறச் செய்கிறது. அளப்பறிய தேவை பற்றிய இக் கருத்தாக்கம் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று.  இருப்பினும், அவக்கேடான வகையில், நிலவுகின்ற புதிய தாராளவாத முதலாளித்துவ வளர்ச்சிக் கட்டமைவின் உள்ளும் கூட மோசமான கொள்கைகளால் அணுசக்தி விரிவாக்கம் திட்டமிடப்பட்டுள்ளது.

9. இணைப்பு : அணுசக்தி ஒப்பந்தத்தின் அரசியல்.

மேற்கண்ட நமது பகுப்பாய்வின் தொடர்ச்சியாக ஒரு சுவாரசியமான கேள்வி எழுகிறது: இந்த அணுசக்தி ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் பெறவேண்டித் தன்னையே பலிக்கடாவாக நிறுத்தத் துணியும் அளவுக்கு காங்கிரசு அரசுக்கு என்ன அவசியம் வந்தது?  இந்த கட்டுரையின் மையப் பொருளில் இருந்து சற்றே விலகியதாய் இருப்பினும், இக்கேள்வி தன்னளவிலேயே சுவாரசியமானதும், முக்கியத்துவம் வாய்ந்த்தும் கூட.  இக்கேள்வி வேறு இடங்களிலும் விவாதிக்கப்பட்டிருக்கிறது. [84]

இது பற்றிய விவாதம் சரியான காலத்தொடர்புடன் பொருத்திப் பார்க்கப்பட வேண்டும் . இந்த அரசு (2008-ம் ஆண்டு மத்தியில்) அணுசக்தி ஒப்பந்தததை நிறைவேற்றத் தீர்மானித்ததை ஒட்டி ஐ.மு. அரசுக்கு அளித்துவந்த ஆதரவை இடது சாரிக் கட்சிகள் விலக்கிக் கொண்டன. எனவே இந்த முடிவு ஒரு அரசியல் நெருக்கடியை முன் தள்ளியது.  இறுதியாக, காங்கிரசு அரசு இந்த நெருக்கடியில் இருந்து சிறிதும் பாதிப்பில்லாமல் தப்பியதோடு, கூடுதல் பெரும்பான்மையோடு மீண்டும் ஆட்சிக்கு வந்தது. எனினும், பின்னர் அடையப் பெற்ற இந்த வெற்றிகள் அந்த நேரத்தில் தெளிவானதாக இல்லை.  இந்த அரசு நம்பிக்கைத் தீர்மானத்தில் தோல்வி அடைந்து வீழ்ந்திருக்கக் கூடியதாய் இருந்தது.  மேலும், அது தேர்தலை சந்திக்க உகந்த நேரமாகவும் இல்லை.  இதற்கான பிற காரணங்களுக்கு மத்தியில், அப்போது பணவீக்க விகிதம் கடந்த 13 ஆண்டுகால உச்சத்தில் இருந்தது.[85]  இந்த சூழலில் காங்கிரசு தனது அரசை ஆட்டங்காணச் செய்வது தற்கொலைக்கு ஒப்பானதாக இல்லையா? இப்படி ஒரு விசித்திரமான நடத்தையை மேற்கொள்ளத் தூண்டிய பலம் வாய்ந்த சக்திகள் எவை?

தலைப்பு 1-ன் கீழ் நாம் பார்த்ததுபோல, ஆற்றல் உத்தரவாதத்திற்கு அணுசக்தி ஒப்பந்தம் அவசியம் என்ற வாதத்தை இந்த அரசு முன்வைத்தது.  எனினும், மேற்கண்ட பரிசீலனையின்படி, இந்தியாவின் சக்தித் தேவைக்கு அணுசக்தி முக்கியத்துவமற்ற ஒன்றாக இருக்கிறது, இருக்கவும் போகிறது. சர்வதேச யுரேனியம் கிடைக்கப் பெறும் வாய்ப்பு உள்நாட்டு யுரேனியத் தாதுவளத்தை ஆயுதத் தேவைக்கு என விடுவிக்கும் என்றாலும், அணுப்பிளவுப் பொருட்களின் முதன்மையான குவிப்பு சுதேசி ஈனுலைகளில் இருந்தே வரக்கூடியதாக இருக்கிறது.  ஆக, இந்தியாவின் அணுஆயுதத் திட்டத்துக்கும் இந்த ஒப்பந்தம் அவசியமான ஒன்றல்ல.

தனது சொந்த பிரச்சாரத்திற்கு இந்த அரசு தானே பலியாகிவிட்டது என்றொரு வாதமும் இருக்கிறது.  எனினும், மேலே சொல்லப்பட்ட புள்ளிவிவரங்கள் எல்லாம் முற்றிலும் வெளிப்படையானவை.  கணிப்புகள் ஏதும் நடப்புக்கு வர சாத்தியமில்லை என்பதும் நன்கு அறிந்ததே. மேலும்,  அணுசக்தித் துறையின் முன்வைப்புகளின்படியே கூட வரவிருக்கும் பல ஆண்டுகளுக்கு இந்தியாவின் சக்திக் கலவையில் அணுசக்தி குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்யப்போவதில்லை. ஆக, இவ்வகையான வாதம், பல பத்தாண்டுகளுக்குப் பின்னால் இந்தியாவின் சக்திவள உறுதிப்பாட்டிற்குக் கிடைக்க இருக்கும் சிறியதொரு அனுகூலத்திற்காக இன்றைய தனது அரசைத் தியாகம் செய்யும் அளவுக்கு காங்கிரசு தெளிந்த தொலைநோக்கு உடையது என்ற கருத்தை நோக்கித் தள்ளுகிறது.  இந்த வாதம் சரியல்ல என்பது வெளிப்படை.

தள்ளாடிக்கொண்டிருக்கும் தனது மின் உற்பத்தித் திட்டத்திற்கு உயிர்ப் பிச்சை தேவையாய் இருந்ததால், இந்திய அணுசக்தி நிருவனமே இந்த அணுசக்தி ஒப்பந்தத்தை முன் தள்ளியது என்கிறது மற்றொரு வாதம்.[86]  இது ஒரு காரணக்கூறாக இருப்பினும், ஒரு சில தொழில்நுட்பவாதிகளின் செல்வாக்கால் இவ்வாறான ஒரு பாரிய அரசியல் முடிவு எடுக்கப்படுவது அசாத்தியமானது.

பெரிதும் ஏற்கத்தக்க ஒரு பதிலை புஷ் நிர்வாகத்தின் முக்கிய ஆலோசகர்களில் ஒருவரன ஆஷ்லி டெல்லிஸ் அளித்திருக்கிறார். [87]  இந்த ஒப்பந்தம் ” மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது” என்று அவர் குறிப்பிடுகிறார்.  மேலும் கூறுகையில், “நம்பிக்கையின் புதிய அத்தியாயத்தைக் கட்டியமைக்கும் அதிபர் மற்றும் பிரதமரின் கடுமுயற்சியில் அஸ்திவாரமாகத் திகழ்கின்ற வெளிப்படையான காரணத்திற்காகவே வரவிருக்கும் அனைத்துக்குமான ஈர்ப்பு மையமாக இந்த ஒப்பந்தம் திகழ்கிறது… … எனது கருத்துப்படி, ஏன் இந்த ஒப்பந்தம் தோற்க முடியாதது, தோற்கக் கூடாதது என்பதற்கு அறுதிக் காரணமாக அமைவது இதுவே.  ஏனென்றால், உண்மையிலேயே அதிமுக்கியத்துவம் வாய்ந்த குறிப்பிட்ட ஏதோ ஒன்றை செய்யும் முயற்சியில் இரு தலைவர்களும் கட்டுண்டு கிடக்கிறார்கள். அந்த ஏதோ ஒன்று தனது உறவை நீட்டிப்பதற்கு வலியுறுத்திக் கோருவது, நம்பகத்தன்மை,  கடமையில் உறுதிப்பாடு மற்றும் இறுதியாக பரஸ்பர நம்பிக்கை தொடர்பான செயல்பாடுகளையே” என்று ஆஷ்லி டெல்லிஸ் குறிப்பிடுகிறார்.

இருப்பினும்,  அமெரிக்காவுடனான கூட்டு என்ற நிலையில், இந்த “நம்பகத்தன்மை” , “கடப்பாடு” போன்ற சொற்கள் உணர்த்தும் உண்மைப் பொருள் என்ன?  அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்வதுதான் இச்சொற்கள் உணர்த்தும் பொருள் என்பது வெட்டவெளிச்சமானது.

அமெரிக்க நலன்களை உறுதியாய் பற்றி நிற்பதைத் தடுக்கும் ஜனநாயக அரசியல் நிர்ப்பந்தங்களை அனுமதிக்காதவையே இந்த நம்பத்தக்க அரசுகள்.  இந்த அம்சம் அதி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. ஏறுமாறாய் இருக்கின்ற மூன்றாம் உலக வாசிகளுடன் சேர்ந்து இயங்குவதை அமெரிக்காவை ஆளும் மேட்டுக்குடிகள் விரும்புவதில்லை.  ஜனநாயக அரசியலை நன்கு சமாளித்து, தனது ‘சர்வதேசக் கடமைகளை’ வழுவாது நிற்கும் நாடு எதுவோ அதுவே ’நம்பத்தக்க கூட்டாளி’.

“[ஈராக்கிற்கு எதிரான] போருக்கான அணிதிரட்டலின்போது ஜனநாயகத்தைப் பற்றிய அணுகுமுறை என்றுமில்லாத் தெளிவுடன் தன்னை வெளிப்படுத்திக்கொண்டது” என்று சாம்ஸ்கி குறிப்பிடுகிறார் [88].  ”மக்களின் கருத்துக்கு இணங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஈராக் மீதான போரை ஆதரிக்கவிடாமல் பிரான்சு, ஜெர்மெனி போன்றோ நாடுகளைத் தடுத்துவிட்டன. எனவே, தனது முந்தைய மேற்கத்தியக் கூட்டாளிகளான இவர்களும் “பழைய ஐரோப்பா”வை நோக்கித் தள்ளப்பட்டனர்.  பழைய மற்றும் புதிய ஐரோப்பிய அரசுகள் ஒரே ஒரு எளிய வரையறையால் தெளிவாய் வேறுபடுத்திக் காட்டப்படுகின்றன. பிரச்சினையில் தனது ஆகப்பெரும் குடிமக்களின் நிலையைத் தானும் எடுத்து, வாஷிங்டன் ஆணைகளைப் பின்பற்ற மறுத்தால், மறுத்ததாலேயே ஒரு அரசு அநீதியான பழைய ஐரோப்பாவில் சேர்ந்துவிடுகிறது” என்றும் குறிப்பிடுகிறார் சாம்ஸ்கி .

இது பற்றி அமெரிக்கா மற்றும் இந்தியாவின் செல்வாக்கு மிக்க நபர்களும் ஒத்த கருத்துடையவர்களாகவே இருக்கிறார்கள். இந்த ஒப்பந்தத்தின் தோல்வி இந்தியாவை “அறவே நம்பத்தகாத நாடு” என்ற நிலைக்குத் தள்ளிவிடும் என்று அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் ரோனன் சென் விவரிக்கிறார்.  (ஒருவர் மாற்றி ஒருவர் வரும்படியான) “சுழற் கதவு”  அரசாங்கங்கள் அமையும் நிலைமைக்கு இடையே, இந்தியாவைத் தனித்துக் காட்டும் ஓர் அம்சம், இது ஏதோ ஜனநாயக நாடு என்பதல்ல … நாம் நமது கடப்பாடுகளுக்கு என்றும் மதிப்பளித்து வருகிறோம் என்பதே” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.  மாநிலங்கள் அளவில் எப்போதும் அது அவ்வாறு இல்லை என்று தெரிவிப்பதுடம், “ அதற்கு ஒரு உதாரணமாக … ஒரு தேர்தலுக்குப் பின் வந்த மாநில அரசு ஒரு ஒப்பந்தத்தை மாற்றிவிட்டது, அதுதான் என்ரான் ஒப்பந்தம்”! என்றும் வருந்துகிறார். சென்-ஐப் பொருத்தவரை, எவ்வளவு கடுமையானதாகவும், நியாயமற்றதாகவும் இருந்தபோதிலும் பன்னாட்டு நிறுவனங்களுடனோ அல்லது அமெரிக்க அரசுடனோ செய்துகொண்ட ஒப்பந்தக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு தேர்தல்களோ மக்களின் விருப்பங்களோ குறுக்கீடு செய்யக்கூடாது.

”உலக ஒழுங்கமைவு, பொருளாதார வளர்ச்சி மற்றும் அணுசக்திப் பாதுகாப்பு போன்ற விசயங்களில் இந்திய அதிகாரவர்க்கத்தினரும் அரசுப் பிரதிநிதிகளும் தமது தனித்துவத்தைப் பேணுவதில் உறுதிமிக்கவர்கள் என்ற பெருமைமிகு பாரம்பரியம் கொண்டவர்கள்” என்று கிளிண்டன் நிர்வாகத்தில் ஒரு உறுப்பினராக இருந்த அஷ்டன் கார்டர் அமெரிக்க செனட் சபைக்கு விளக்கினார். எனினும், “இந்தியா .. ஒரு ஜனநாயக நாடாக”  இருப்பதால் “தில்லியின் எந்த அரசும் அமெரிக்க நலன்களுக்கு ஆதரவாக விரிவான பல நடவடிக்கைகளை எடுக்க முடியாது” என்றும் அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.

இந்தியாவை ஆளும் மேட்டுக்குடிகளுக்கு இந்த உண்மையும் பெருங் கசப்பாய் இருந்தது. இடதுசாரிக் கட்சிகள் அணுசக்தி ஒப்பந்தத்தை முன்னேறவிடாமல் தடுத்தபோது “முடிவெடுக்கும் திறனை இந்திய ஜனநாயகம் பெரிதும் முடக்குகிறது… இந்த போக்கு மாறயே தீரவேண்டும்” என்று அறுதியிட்டுக் கூறினார் சிதம்பரம். [91]   பலகட்சி ஜனநாயக அமைப்புமுறையின் பயன்பாடு பற்றியே கேள்வி எழுப்பும் அளவுக்கு மனம் நொந்து போனார் மன்மோகன் சிங். கூட்டாட்சிக் கோட்பாடு பற்றிய மாநாடு ஒன்றில் பேசும்பொது, “ஒரு கட்சி ஆட்சி ஏதேனும் சாதக அம்சங்களைக் கொண்டிருக்கின்றதா” என்றும் “தேசீய-அரசுகள் பெரிதும் செயல்படுத்திக் காட்ட வேண்டிய வகையில் பயனுள்ள ஒரு ஒற்றுமையைக் கூட்டரசு வழங்க சாத்தியமிருக்கிறதா” என்றும் வினவினார்.

முடிவு என்னவென்றால், நீண்ட தேக்கநிலைக்குப் பிறகு, ஜப்பானில் G8 நாடுகளின் கூட்டத்திற்கு மன்மோகன் சிங் செல்வதற்கு ஒரு வாரம் முன்பு இடதுசாரிக் கட்சிகளுடன் ஒரு சண்டையை விரைவுபடுத்தியது காங்கிரசு.  டைம்ஸ் ஆஃப் இண்டியா விவரித்தது போல, “சர்வதேச சமூகத்தின் முன்னால் காங்கிரஸ் தலைமைக்கு ஒரு தலைகுனிவு ஏற்படும் என்று மன்மோகன் தொடர்ச்சியாக குறிப்பிட்டு வந்தார்”.[93]   ஆக, மன்மோகன் சிங் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றியே தீரவேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றது, மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக அல்ல. மாறாக, தாங்கள் நம்பத்தக்க ஏகாதிபத்தியக் கைக்கூலி என்ற தகுதியைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவே என்பது இதிலிருந்து தெளிவாகிறது. எல்லா இடர்பாடுகளையும் கடந்து அரகள் தமது தொடர்ந்த இருப்புக்கான சிறப்புரிமை பெற்றிருக்கின்றன என்ற கருத்தாக்கத்தை இந்தியப் பாராளுமன்ற அமைப்பு முறை தனது அடிப்படையாகக் கொண்டு இருக்கிறது.  அமெரிக்காவுக்குத் தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக காங்கிரசு இந்த அடிப்படைக் கோட்பாட்டை மீற முனைந்ததும், தனது சொந்த அரசின் இருத்தலையே அபாயத்துக்கு உள்ளாக்க விரும்பியதுமான எதார்த்த உண்மை ஏகாதிபத்தியத்திடம் அது கொண்டிருக்கும் நெருக்கத்தின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் அம்சமாக இருக்கிறது.

_____________________________________________________________________________

– சுவ்ரத் ராஜு

அரசியல் பொருளாதார ஆய்வுக் குழுவின் (RUPE) ஆஸ்பெக்ட்ஸ் ஆஃப் இண்டியாஸ் எகானமி – இதழ் எண் 48ல் [ஜனவரி, 2010] வெளியிடப்பட்டது.

ஆங்கில மூலம் – India’s Atomic Energy Programme: Claims and Reality

– தமிழாக்கம்: அனாமதேயன்
________________________________________________________________________

படிக்க

  1. இந்திய அணுசக்தித் திட்டம்: மாயையும் உண்மையும்! | வினவு!…

    இந்தியாவை அமெரிக்காவின் அடியாளாக வைத்திருப்பது ஒன்றுதான் அணுசக்தி ஒப்பந்தத்தின் இலக்கு என்பதை இந்த கட்டுரை விவரங்களோடும், வாதங்களோடும் நிறுவுகிறது….

  2. என்ன மக்களே? விளையாடுறீங்களா?

    பள்ளியில் கல்லூரியில் பயந்து ஓடிவந்த சமாச்சாரங்களை, கொட்டாவி வர வழைத்த பாடங்களை இத்தனை பெரிசா போட்டு பின்னி பெடல் எடுத்துருக்கீங்க.

    ஒன்னு சிறிதா எழுதுறீங்க. இல்லைன்னா தண்டவாளம் போல போய்க்கிட்டே இருக்கு.

    இந்த இடுகையை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சித்து உருப்படியாக படிப்பார் என்றார் குறைந்தது இரண்டு மணி நேரம் வேண்டும்.

    மறுபடியும் வருகின்றேன்.

  3. நல்ல முறையிலான தமிழாக்கம்! வாழ்த்துக்கள்!

    தோரியப் பயன்பாட்டைப் பற்றி, கட்டுரையாளர் குறிபிட்டதும், நான் முன்னர் தெரிவித்ததும் ஒன்றாக இருப்பதாக எனக்கு தோன்றுகிறது!

    மின் தேவை வளர்ச்சி, பூதாகரமானது என்பது யாராலும் மறுக்க முடியாது!

    மரபு வழியில், மின்சார உற்பத்தி செய்வதை, ஒரு அளவுக்கு மேல் அதிகரிக்க முடியாத சூழ்நிலையில், மரபு சாரா வழிமுறைகள் அனைத்தும்,செலவு மிக்கதாகவோ, நுட்ப அறிவுக்கு, பிறரைச் சார்ந்திருக்கதாகவும், இருப்பதால், கட்டுரையாளர், இந்திய அரசுக்கு மின் உற்பத்தியைப் பெருக்க மாற்று வழிகளைத் தெரிவிக்க வேண்டும்!

  4. கட்டுரை நீளமாகவும், நல்ல பொருட்செறிவுடனும் இருப்பதால் ஒரே வீச்சில் படிப்பது சிரமமாக உள்ளது. பி.டி.எப் கோப்பாக தரவிறக்கம் செய்ய ஏற்பாடு செய்தீர்கள் என்றால், அதை பிரிண்ட் அவுட் எடுத்து படிக்கவோ அல்லது இணையம் இல்லாத நேரங்களிலிலோ படிக்க
    வசதியாக இருக்கும்.

    தமிழ்மணம் டூல் பாரில் இருக்கும் பி.டி.எப் ஆப்சன் எல்லோருக்கும் சரியாக வேலை செய்வதில்லை.

  5. கட்டுரையின் நீளம் பார்த்து…கண்ணீர் வடித்துவிட்டேன் ஆனந்த கண்ணீர். இந்த மாதிரி ஆய்வு கட்டுரைகளை தமிழில் மொழி பெயர்த்து தர ஆளே இல்லை. நன்றி அனாமதேயன். படித்துவிட்டு, பின்னூட்டமிடுகிறேன். (இரண்டு நாளாவது கொடுங்கப்பா!)

  6. மிக விரிவான, ஆழமான கட்டுரை. படிக்கத் தொடங்கி இடையில் நிறுத்த முடியாத அளவிற்கு கட்டுரையின் போக்கும் தகவல்களும் உள்ளது. உலகளாவிய அரசியல் நோக்கு கொண்டவர்களுக்கு தேவையான கட்டுரை.

    மேலும்,
    மூன்றாம் படிநிலையான தோரியத்தை பயன்படுத்தும் தொழிநுட்பத்தை பிற வளர்ந்த நாடுகள் (ரஷ்யா தவிர) கைகழுவிய பிறகும் இந்தியா அதிலே முயற்சி செய்வது நமக்கு (எனக்கு) மகிழ்ச்சியான விடயமாகவே இருக்கிறது. ஒப்பந்தம் போட்டு இந்தியாவில் அதிகம் இல்லாத யுரேனியத்தை இறக்குமதி செய்வதை விட நம் நாட்டிலே அதிகளவிலே கிடைக்கும் தோரியத்தை பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை இந்தியா முயற்சிப்பது தான் தேவையானது. இதில் வியப்படைய எதுவும் இல்லையே! சில இடங்களில் கட்டுரையாசிரியர் சீனராக இருப்பாரோ என எண்ணத் தோன்றியது. இந்தியா சீனாவுக்கு நிகராக அணுஆயுதம் தயாரிக்க இந்த ஒப்பந்தம் வழி வகுக்குமோ என்ற சீன அரசின் அச்ச உணர்வை பிரதிபலித்திருக்கிறார் கட்டுரையாசிரியர். இந்திய மக்கள் நலனை விட அமெரிக்க எதிர்ப்பு தான் கட்டுரை முழுவதுமாக உள்ளது.

    மற்றபடி அணுசக்தித் திட்டத்தின் பாதிப்புகள், தோல்விகள், பண விரயங்கள் எல்லாம் மறுக்க முடியாத உண்மைகள் தான்.

  7. இந்த கட்டுரையை சிறு வெளியீடாக கொண்டு வரலாம். அணு சக்தி மற்றும் ஆற்றல் எதிர்ப்பு பணியில் ஈடுபடுவோருக்கும், அணு சக்தி குறித்த மயக்கத்தில் இருப்போருக்கும் பயன்படும்.

  8. நல்ல மொழிபெயர்ப்பு முயற்சி. படித்துக் கொண்டிருக்கின்றேன்

  9. நன்றி அநாமதேயன் & வினவு. படித்துக் கொண்டிருக்கிறேன்.

  10. சிறப்பான மொழிபெயர்ப்பு.
    நன்றி அநாமதேயன் & வினவு. படித்துக் கொண்டிருக்கிறேன்.

  11. இந்தியாவின் கனவாகவும் இலட்சியமாகவும் இருக்க வேண்டியது வல்லரசாக ஆவதல்ல, தனது குடிமக்கள் அனைவருக்கும் குறைந்தபட்சப் பாதுகாப்பையாவது வழங்க முடிந்த நாகரிகச் சமுதாயமாக ஆவதே.

    • ஆனாலும் மன்மோகன்சிங்கின் கனவு வேறாகவல்லவா இருக்கிறது. ரொம்ப நாள் பேசாமல் இருந்த குழந்தை முதன்முறையாக பேசியபோது தனது அம்மாவைப் பார்த்து எப்போம்மா தாலியை அறுப்ப என்று கேட்டாதாம் அதுபோல போபால் விசியத்தில் கல்லுலிமங்கனைப்போல இருந்த நம்ம பிரதமர் முதன்முறையாக வாயைத் திறந்து போபால்கள் நடக்கலாம் அதற்காக நாடு முன்னேறாமல் இருக்கமுடியாது என்று திருவாய்மலர்ந்திருக்கிறார். அதாவது நாட்டில் எத்தனை பேர் செத்தாலும் பரவாயில்லை அதனால் முதலாளிகள் முன்னேறுவது (கொள்ளையடிப்பது) தடைபடக்கூடாது என்பதுதான் இந்த அயோக்கியனின் கொள்கை. அமெரிக்க முதலாளிகளை குளிர்விப்பதற்காகவே ஒபாமாவின் இந்திய வருகைக்கு முன்னதாக அனுசக்தி இழப்பீடு மசோதாவை நிறைவேற்றியிருக்கிறான் இந்த அயோக்கியன். மற்ற கட்சிகளும் நீலிக்கண்ணீர் வடித்துக் கொண்டே இம்மசோதாவை நிறைவேற ஆதரவளித்து மக்களுக்கு துரோகமிழைத்திருக்கின்றனர். மாவன்னா.காந்தி முதல் சோவன்னா .காந்திவரை நக்கிப் பிழைப்பதையே கொள்கையாகக் கொண்ட ஒரு கும்பலுக்கு நாகரிகமாவது மண்ணாங்கட்டியாவது?

  12. ///புதிய முன்மாதிரி வீரிய ஈனுலையும் அணுசக்தி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து கிடைக்க இருக்கும் ஏராளமான யுரேனியமும் இந்தியாவின் பெருத்த அணுஆயுதக் குவிப்புக்கு வழிவகுக்கும். இந்த ஆயுதமயத் திட்டத்தை அமெரிக்கா தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. ///

    அப்படியானால் ஏன் அமெரிக்க மற்றும் NSG குழு நாடுகள் 123 ஒப்பந்தத்தில் கடுமையான, இங்கு பலரும் எதிர்க்கும் கடும் கட்டுபாடுகளை விதித்தனர் ? முரண்பாடாய் உள்ளதே. தாங்கள் அளிக்கும் டெக்னாலாஜி மற்றும் தாதுபொருட்கள் அணு ஆயுத உற்பதிக்கு பயன் படுத்துவதை தடுக்கவே கடும் கட்டுபாடுகள் மற்றும் inspectionகளை விதித்தனர்.

    //இச்செயல், ஆசியாவில் கண்மூடித்தனமான ஆயுதப் போட்டியைக் கட்டவிழ்த்து விடும் அபாயத்தைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது.////

    இல்லை. இதை தடுக்கவே கடும் நிபந்தனைகள் என்பதே எம் புரிதல். மற்றபடி அணு சக்தி உலைகள் பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டிய காலங்கள் தான் இது.

  13. இது பதிவல்ல. புத்தகம்!!!
    Latha Font 8 Size – இதுக்கே 29 பக்கம் வருது.
    இதைப் படிச்சு முடிக்கறதுக்குள்ள இன்னும் நாலு பதிவு போட்டுடுவீங்க!!
    எதை நாங்க படிக்க!!!
    நல்உழைப்புக்கு வந்தனங்கள்..

  14. வினவு…

    பள்ளிகளில் மதிப்பென்னிற்க்கு பதிலாக, ரேங்க் என மாற்றி உள்ளார்கள்,
    இதில் உங்களுடைய நிலைப்பாடு என்ன? என்பதை தெரிவிக்கவும்….

    நன்றி.

  15. எப்போதும் அமெரிக்காவை சாடும் இவர்கள் இவர்களுக்கு மிகவும் பிடித்த ரசியாவின் ஒத்துழைப்புடன் கூடங்குளத்தில் கட்டப்பட்டு வரும் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தை பற்றி மட்டும் வாய் மறுப்பது ஏன்?

  16. // எல்லா இடர்பாடுகளையும் கடந்து அரகள் தமது தொடர்ந்த இருப்புக்கான சிறப்புரிமை பெற்றிருக்கின்றன என்ற கருத்தாக்கத்தை இந்தியப் பாராளுமன்ற அமைப்பு முறை தனது அடிப்படையாகக் கொண்டு இருக்கிறது. அமெரிக்காவுக்குத் தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக காங்கிரசு இந்த அடிப்படைக் கோட்பாட்டை மீற முனைந்ததும், தனது சொந்த அரசின் இருத்தலையே அபாயத்துக்கு உள்ளாக்க விரும்பியதுமான எதார்த்த உண்மை ஏகாதிபத்தியத்திடம் அது கொண்டிருக்கும் நெருக்கத்தின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் அம்சமாக இருக்கிறது.//

    இந்தியா மறுகாலனி ஆகிவருவதை இந்த வரிகள் உறுதிப்படுத்துகின்றன. – ஆதவன்

  17. சிறப்பான மொழிபெயர்ப்பு.
    நன்றி அநாமதேயன் & வினவு.
    தாமதமாக வந்தாலும் நல்ல கட்டுரை.
    களப்பணி செய்வீர்கள் என நம்புகிறேன்

  18. இதை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்தால் வேற்று மொழிக்காரர்களுக்கும் அனுப்ப வசதியாக இருக்கும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க