privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காலிபியா: ஐரோப்பிய எண்ணெய்க் கழகங்கள் ஏலத்தில் எடுத்த ஆட்சி!

லிபியா: ஐரோப்பிய எண்ணெய்க் கழகங்கள் ஏலத்தில் எடுத்த ஆட்சி!

-

லிபியா: ஐரோப்பிய எண்ணெய்க் கழகங்கள் ஏலத்தில் எடுத்த ஆட்சி!

லிபியா மீதான ஆக்கிரமிப்புப் போர், ஏகாதிபத்திய எண்ணெய் முதலாளிகளின் ஆதாயத்துக்காகவே நடத்தப்பட்ட போர் என்பதையும், ஜனநாயகம் பற்றி வாய்கிழியப் பேசும் ஏகாதிபத்திய நாடுகளின் தலைவர்கள் எண்ணெய் முதலாளிகளின் பாக்கெட்டில் இருக்கிறார்கள் என்பதையும் போருக்கு முன்பாக நடந்துள்ள நிகழ்ச்சிகள் மெய்ப்பித்துக் காட்டுகின்றன.

உலகின் மொத்த எண்ணெய் உற்பத்தியில் லிபியாவின் பங்கு 2 சதவீதமாகும். லிபிய எண்ணெயில் கந்தகத்தின் அளவு குறைவாக உள்ளதால், சுத்திகரிப்பதற்கான செலவு குறைவாக இருப்பதன் காரணமாக ஐரோப்பிய எண்ணெய் வர்த்தக நிறுவனங்கள் லிபிய எண்ணெய் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருந்தன. லிபிய பாலைவனப் பகுதிகளில் எண்ணெய் வளம் அகழ்ந்தாராயப்பட்டு, புதிய எண்ணெய் வயல்களில் உற்பத்தி தொடங்கப்பட்டால், அடுத்த பத்தாண்டுகளில் லிபியாவின் எண்ணெய் உற்பத்தி இருமடங்கு அதிகரிக்கும் என்பதால், ஐரோப்பாவின் மிகப்பெரிய எண்ணெய் கம்பெனிகளான ஈனி, டோட்டல், பிரிட்டிஷ் பெட்ரோலியம், ரெப்சால் ஆகியன இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளத் துடித்தன.

அதிபர் கடாபியின் ஆட்சிக் கவிழ்ப்புக்கு முன்புவரை, லிபியாவின் தேசிய எண்ணெய்க் கழகம், அமெரிக்க  ஐரோப்பிய ஏகபோக எண்ணெய் நிறுவனங்களை அகழ்வு  சுத்திகரிப்புப் பணிகளில் ஈடுபடுத்தி வந்த போதிலும், நாட்டுடமையாக்கப்பட்ட அந்நிறுவனம் சுயேட்சையாக எண்ணெய் வர்த்தகத்தை நடத்தி வந்தது. ஐரோப்பிய எண்ணெய்க் கழகங்களின் நிர்ப்பந்தம் ஒருபுறம் இருந்தாலும், முற்றாக ஐரோப்பிய சந்தையை மட்டுமே நம்பியிருக்க முடியாது என்று கருதிய லிபியா, எண்ணெய் அகழ்வு  சுத்திகரிப்பு, வர்த்தகம் முதலானவற்றில்,  சீனா, ரஷ்யா, பிரேசில் ஆகிய நாடுகளையும் அனுமதித்தது. இதனால் ஐரோப்பிய எண்ணெய்க் கழகங்களின் நிர்ப்பந்தங்கள் லிபியாவில்  செல்லுபடியாகவில்லை.

எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் அமைப்பிடம்(OPEC) தமது நாட்டின் எண்ணெய் விலையை டாலரில் அல்லாமல் தினாரில் தீர்மானித்து, அதன்படி வழங்குமாறு கடாபி கோரிவந்தார். நாட்டின் செல்வத்தை டாலரில் அல்லாமல் தினாரில் சார்ந்திருக்கச் செய்ய அவர் முயற்சித்தார். அந்நிய கடனுதவியைச் சார்ந்திராமல் நிலத்தடி நீர் திட்டங்களை அவர் நிறைவேற்ற முயற்சித்தார். வளைகுடா நாடுகளின் சில வங்கிகளைத் தவிர,  மேற்கத்திய பன்னாட்டு ஏகபோக வங்கிகளை லிபியாவில் நுழைய அவர் அனுமதிக்கவில்லை. டாலரை மையமாகக் கொண்ட ஏகாதிபத்திய நிதி மூலதன ஆதிக்கத்தின் கீழ் லிபியா வராததும், எண்ணெய் வளங்களும் வர்த்தகமும் முழுமையாக ஐரோப்பிய ஏகாதிபத்தியக் கொள்ளைக்குத் திறந்துவிடப்படாமலிருந்ததும் ஏகபோக எண்ணெய் நிறுவனங்களுக்கு பெரும் இடையூறாக இருந்தன.

இந்நிலையில், பிரிட்டனின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் வர்த்தக நிறுவனமான விடோல், லிபியாவின் எண்ணெய் வர்த்தகத்தைக் கைப்பற்றத் துடித்தது. இதற்காக பிரிட்டிஷ் அனைத்துலக வளர்ச்சித்துறை அமைச்சரான அலன் டங்கனுடன் அடிக்கடி பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இவர் அமைச்சராவதற்கு முன், விடோல் நிறுவனத்தின் ஆலோசகராகச் செயல்பட்டவராவார். இன்னொருபுறம், பிரான்ஸ் நாட்டின் எண்ணெய் வர்த்தக நிறுவனங்களும் லிபியா மீது குறிவைத்தன. எண்ணெய் நிறுவனங்களின் நோக்கம் இந்நாட்டு அரசுகளின் கொள்கையாக மாறியது. பிரிட்டனும் பிரான்சும் லிபியாவில் கடாபியின் ஆட்சியை நீக்கிவிட்டு, தமது விசுவாச ஆட்சியைக் கொண்டுவரத் தீர்மானித்தன.

பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சர் அலய்ன் ஜூப்பி, கடாபி எதிர்ப்புக் கலகப் படையினருக்கு ராணுவ உதவி செய்வதாகவும், அதற்கீடாக அப்படையினர் எதிர்காலத்தில் லிபியாவின் மொத்த எண்ணெய் உற்பத்தியில் 35 சதவீதத்தைப் பிரான்சுக்குத் தர வேண்டுமெனவும் ஒரு இரகசிய ஒப்பந்தம் போட்டிருந்தார். இது ஊடகங்களில் அம்பலமாகி நாறியது. கடந்த மார்ச் மாதத்தில் பிரெஞ்சு அதிபர் நிகோலஸ் சர்கோசி, தனது சொந்த மக்களையே கொன்றொழிக்கும் கடாபியின் சர்வாதிகார ஆட்சி சட்டபூர்வமாக நீடிக்க எவ்வித அருகதையும் இல்லை எனக் கொக்கரித்தார். பிரிட்டன் இப்படி வெளிப்படையாகக் குறிப்பிடவில்லையே தவிர, அந்நாட்டின்  உளவுப்படையினர் கடாபி எதிர்ப்பு படையினருடன் இரகசிய பேரங்கள்  பேச்சுவார்த்தைகளை  நடத்தி வந்தனர்.

ஆப்பிரிக்க கண்டத்தில் செல்வாக்கு பெற்றுவரும் சீனாவை வெளியேற்றிவிட்டால், மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்கா தனது எண்ணெய்த் தேவையில் 25 சதவீதத்தைப் பெறமுடியும் என்றும், இது வளைகுடா நாடுகளிலிருந்து பெறும் எண்ணெயைவிட அதிகமாக இருக்கும் என்றும் அமெரிக்காவின் வலதுசாரி பிற்போக்கு அமைப்பான ஹெரிடேஜ் பவுண்டேசனின் தலைவர்கள் தெரிவித்தனர். அந்தக் கொள்கையின் அடிப்படையில்தான் லிபியா மீது அமெரிக்கா தனது மேலாதிக்க ஆக்கிரமிப்புப் போரை நடத்தியுள்ளது என்று இப்போது மெதுவாகக் கசிந்துள்ளது.

கடந்த பிப்ரவரியிலிருந்தே கலகக்காரர்களுக்கு ஆலோசனை வழங்குவது என்ற பெயரில் ஏகாதிபத்திய நாடுகளின் உளவுப்படையினர், குறிப்பாக சி.ஐ.ஏ. லிபியாவின் கிழக்குப் பகுதியில் நுழைந்து ஆயுதங்களை எகிப்தின் வழியாகக் கடத்தி வந்து கொடுத்தனர். சொந்த நாட்டு மக்களைக் கொடூரமாகக் கொன்றொழிக்கிறார் என்று குற்றம் சாட்டி, கடாபி அரசை முடக்கும் நோக்கத்துடன் ஏகாதிபத்திய வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டிருந்த லிபியாவின் சேமிப்புகள் முடக்கப்பட்டன. ஐ.நா. தீர்மானத்தைக் கொண்டு, ஜனநாயகத்தை நிலைநாட்டுவது என்ற பெயரில் நேட்டோ கூட்டணி நாடுகள் வான்வழியேயும் கடல் வழியேயும் லிபியா மீது தாக்குதலைத் தொடங்கின.

கடாபி எதிர்ப்புக் கலகப்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த எண்ணெய் நிறுவனமான “அகோகோ’’வின் தலைவராக இருந்த அகமத் மஜ்பிரி, விடோல் நிறுவனம் ஏறத்தாழ 100 கோடி டாலர் அளவுக்கு கலகப் படையினருக்கு உதவியதாகவும், அதற்கீடாக அகோகோ மூலமாக கச்சா எண்ணெயையும் நாப்தாவையும் விடோலுக்குக் கொடுப்போம் என்றும் பச்சையாகவே அறிவித்தார். “எங்களுக்கு இத்தாலி, பிரான்ஸ், பிரிட்டிஷ் கம்பெனிகளுடன் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், சீனா, ரஷ்யா, பிரேசிலுடன் அரசியல் ரீதியாக சில பிரச்சினைகள் உள்ளன” என்று ஏகாதிபத்தியவாதிகளின் குரலை எதிரொலிக்கிறார், இடைக்கட்ட அரசின் தலைவரும் கலகப்படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள அகோகோ எண்ணெய் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியுமான அப்தல் ஜலீல் மயோஃப்.

கலகப் படைகளின் வெற்றியைத் தொடர்ந்து,  ஸ்பெயின் நாட்டின் ரெஸ்பல் நிறுவனமும் இத்தாலியின் ஈனி நிறுவனமும் லிபியாவில் எண்ணெய் உற்பத்தியைத் தொடங்கிவிட்டன. எதிர்காலத்தில் ஈனி நிறுவனம் லிபியாவின் எண்ணெய் உற்பத்தியில் முதலிடத்தை வகிக்கும் என்று பெருமையுடன் குறிப்பிடுகிறார், இத்தாலிய வெளியுறவு அமைச்சரான பிரான்கோ பிராட்டினி. ஐரோப்பிய எண்ணெய் நிறுவனங்களின் நிர்ப்பந்தத்தைத் தொடர்ந்து, ஏறத்தாழ 70 சதவீத எண்ணெய் உற்பத்தியும் வர்த்தகமும் புதிய ஒப்பந்தங்கள் மூலம் ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளின் எண்ணெய் நிறுவனங்களிடம் கைமாறியுள்ளன.

ஏதோ கடாபியின் சர்வாதிகாரம்தான் பிரச்சினை என்பதாகவும், லிபிய நாட்டின் மக்களைக் காக்கப் போவதாகவும், அதற்காகத்தான் இந்தப் போர் என்றும் ஏகாதிபத்தியவாதிகள் கூப்பாடு போட்டனர். ஆனால், இவற்றின் பின்னே ஒளிந்திருப்பது எண்ணெய் கொள்ளைதான் என்பதை அவர்களின் சதித் திட்டங்கள் அம்பலப்படுத்திக் காட்டிவிட்டன.

__________________________________________

புதிய ஜனநாயகம், அக்டோபர் – 2011

________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்