privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்ஈமு கோழி வளர்ப்பு : கவர்ச்சிகரமான மோசடி!

ஈமு கோழி வளர்ப்பு : கவர்ச்சிகரமான மோசடி!

-

ஈமு கோழி வளர்ப்பு: கவர்ச்சிகரமான மோசடி! நான்கு ஆண்டுகளுக்கு முன் சேலம் மாவட்டம், வெள்ளையனூர் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் என்ற விவசாயி, தன் குடும்பத் தேவைக்காக இரண்டரை ஏக்கர் நிலத்தில் இரண்டு ஏக்கரை எட்டு லட்ச ரூபாய்க்கு விற்றார். மகள்களின் திருமணச் செலவும் மகனின் படிப்புச் செலவும் போக கையில் சுமார் 2 லட்ச ரூபாய் இருந்தது. இந்தத் தொகையைக் கொண்டு அரை ஏக்கர் நிலத்தில் ஏதேனும் தொழில் செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் இருந்தார்.

இந்நேரத்தில் பத்திரிக்கைகளில் ஈமு கோழியைப் பற்றிய விளம்பரம் வந்திருந்தது. ஈமு கோழிக் குஞ்சுகளை வாங்கி வளர்த்து முட்டை உற்பத்தி செய்து கொடுத்தால், முட்டை ஒன்றை 2000 ரூபாய்க்கு வாங்கிக் கொள்கிறோம் என்று அந்த விளம்பரத்தில் அறிவிக்கப்பட்டிருந்து. அந்த விளம்பரத்தைப் பற்றி  அக்கம் பக்கத்தில் விசாரித்து நம்பிக்கை பெற்ற மாணிக்கம்,  2 லட்ச ரூபாயை ஈமு கோழி வளர்ப்பில்  முதலீடு செய்தார். ஈமு கோழிகளும் வளர்ந்தன. முட்டையும் இட்டன. ஆனால், இப்பொழுது 1000 ரூபாய்க்குக்கூட முட்டை வாங்க ஆளில்லை; வெளியிலும் விற்க முடியவில்லை. ஈமுவுக்குத் தீவனம் போட்டே ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் கடனாளியாகியிருக்கிறார். இன்று இவரைப்போல நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஈமு கோழிப் பண்ணை அமைத்துக் கடனாளியாகி நிற்கிறார்கள்.

விவசாயத்தில் இடுபொருட்களின் கிடுகிடு விலை உயர்வு, ஆட்கள் பற்றாக்குறை, நிச்சயமற்ற பருவ காலங்கள், விவசாயப் பொருட்களுக்கு சந்தையில் நிச்சயமற்ற விலை, இவற்றால் தொடர் நட்டம் முதலானவற்றின் காரணமாக விவசாயிகள் நொடிந்து போயுள்ளனர். விவசாயம் செய்வது தற்கொலைக்குச் சமம் என்று கருதிப் பலரும் மாற்றுத் தொழிலைத் தேட நிர்பந்திக்கப்படுகின்றனர். இப்படி நடுத்தர  சிறு விவசாயிகள் மற்றும் கிராமப்புற இளைஞர்களுக்கான வாழ்வாதாரங்கள் பிடுங்கப்பட்ட பின்னணியில், ஈமு பண்ணை முதலாளிகள் இந்தச் சூழலைப் பயன்படுத்தி விவசாயிகளை ஏய்த்துக் கொள்ளையிடக் கிளம்பியுள்ளனர். தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை சுசி பார்ம்ஸ் முதற்கொண்டு இருபதுக்கும் மேற்பட்ட ஈமு நிறுவனங்கள் அதிரடித் திட்டங்களை அறிவித்து விளம்பரம் செய்து வருகின்றன. “”ஒன்றரை முதல் இரண்டு லட்ச ரூபாய் முதலீடு செய்தால், உங்கள் நிலத்தில் எங்கள் நிறுவனத்தின் செலவில் கோழிகளுக்கான கொட்டகை போட்டு அதில் ஆறு குஞ்சுகள் விடப்படும்; அதற்கான தீவனமும் வழங்கப்படும்; ஈமு கோழி வளர்ப்புக்கு  மாதக் கூலியாய் ரூ. 6000 முதல் 9000  வரை கொடுக்கப்படும்” என்றும், “”கோழிகளுக்கு இரண்டு வயதாகி முட்டையிடும் தருவாயில் கோழியை எடுத்துக்கொண்டு, முதலீட்டுப் பணத்தைத் திருப்பித் தருவோம்” என்றும் இந்நிறுவனங்கள் கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்து வருகின்றன.

மறுபக்கம், விவசாயிகளோ இரண்டு லட்ச ரூபாயை விவசாயத்திலோ அல்லது வங்கியிலோ போடுவதற்குப் பதிலாக இத்திட்டத்தில் முதலீடு செய்தால் கூடுதலாக வருவாய் கிடைக்கும்  என்ற எண்ணத்துடன், இத்தகைய ஈமு கோழிப் பண்ணை நிறுவனங்களின் வாயிலில் வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.  இது மாற்றுத் தொழிலாகவும்,  விவசாயிகள் காலங்காலமாக செய்து வரும் கால்நடை வளர்ப்பை ஒத்ததாக இருப்பதாலும்  இத்தொழிலை விவசாயிகள் பெருத்த நம்பிக்கையுடன் பார்க்கின்றனர்.  தமிழகத்தில் ஈரோடு, திருச்சி, பல்லடம், புதுக்கோட்டை, வாலாஜாபாத், கொடைக்கானல் முதலான பகுதிகளில் இத்தகைய ஈமு வளர்ப்புப் பண்ணைகள் அதிகரித்து வருகின்றன. தமிழகம் மட்டுமின்றி, புதுச்சேரி, ஆந்திரா, கோவா, மகாராஷ்டிரா, ஒரிசா, ம.பி. முதலான மாநிலங்களிலும் ஈமு கோழிப்பண்ணைகள் விரிவடைந்து வருகின்றன.

உண்மை நிலவரம் என்னவென்றால், ஈமுவின் தாயகமான ஆஸ்திரேலியாவில் 1987ஆம் ஆண்டில்தான் வணிகரீதியான ஈமு பண்ணைகள் ஆரம்பிக்கப்பட்டன. அங்குள்ள  ஈமு பண்ணைகள் ஒவ்வொன்றிலும் ஆயிரக்கணக்கான கோழிகள் இருந்தன. இப்படிப் பல ஆண்டுகளாக இத்தொழில் இருக்கும் அந்நாட்டில் ஈமு கோழியின் இறைச்சிக்கான நவீன தொழிற்சாலைகளோ, பதப்படுத்தும் நிறுவனங்களோ இல்லை.  ஆஸ்திரேலியாவின் உள்ளூர்ச் சந்தையிலே  மதிப்பிழந்த பொருளாக ஈமு மாறிவிட்டதால்,  1996இல் ஆஸ்திரேலியப் பண்ணைகளில் 2 லட்சமாக இருந்த ஈமு கோழிகளின் எண்ணிக்கை  2005இல் 18,600  ஆகக் குறைந்துவிட்டது.  ஆனால், இங்குள்ள நிறுவனங்களோ உள்ளூர் சந்தை விரிவடைகிறது; ஏற்றுமதி செய்கிறோம் எனக் கூசாமல் புளுகி, விவசாயிகளை ஏய்த்து வருகின்றன.

ஈமு கோழி வளர்ப்பு : கவர்ச்சிகரமான மோசடி !   ஐந்தாண்டுகளுக்கு முன் 3 மாத வயது கொண்ட ஒரு ஜோடி குஞ்சை 15,000 முதல் 20,000 ரூபாய் வரை இந்நிறுவனங்கள் விவசாயிகளிடம் விற்றன.  குஞ்சுகள் வளர்ச்சி அடைந்து முட்டை இடும்பொழுது முட்டையை ரூ.1500 முதல் 2000 வரை கொள்முதல் செய்ய உத்திரவாதம் கொடுத்தன. ஆனால் இப்போது ரூ. 1000க்குக்கூட முட்டையை வாங்க மறுக்கின்றன. மேலும், கொள்முதல் என்பதே அரிதாகத்தான் நடக்கிறது. இந்நிறுவனங்கள் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த முட்டையிலிருந்து குஞ்சு உற்பத்தி செய்து மீண்டும் புதிதாக வரும் விவசாயிகளிடம் விற்கின்றன. முட்டை கொள்முதல்  குஞ்சு உற்பத்தி  விநியோகம்  முட்டை கொள்முதல் என்ற சுழற்சிதான் தொடர்ந்து நடந்தேறி வருகிறது. ஈமு கறி ஏற்றுமதி என்பது நடப்பதில்லை. ஈமு கோழித் தீவன நிறுவனங்களோ, கறியை வெட்டிப் பதப்படுத்தும் நிறுவனங்களோ, தோலை உரித்துப் பதப்படுத்தும் நிறுவனங்களோ, கறியிலிருந்து எண்ணெய் எடுக்கும் நிறுவனங்களோ இந்தியாவில் இல்லை. கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் ஈமு கோழியின் உடற்கூற்றியல், மருத்துவம், நோய்கள்  பற்றிய எந்தப் பாடமும் இல்லை.

“”நன்கு வளர்ச்சியடைந்த ஈமு கோழி 5-6 அடி உயரமும் 50 முதல் 60 கிலோ வரை எடையும் கொண்டதாக இருக்கும். அதில் குறைந்தபட்சம் 35 கிலோ கறி தேறும். சுவைமிக்க ஈமு கறி விலை ஒரு கிலோ ஏறத்தாழ ரூ. 450 ஆகும். ஈமு கோழிகள் கொழுப்பு கொலஸ்ட்ரால் இல்லாதது; ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், ஆஸ்த்துமா உள்ளவர்கள் தாராளமாக இதன் இறைச்சியை உண்ணலாம். இக்கோழியின் தோல் சாயமிடுவதற்குப் பயன்படுகின்றன. இதன் இறகுகள் பிரஷ் தயாரிக்கப் பயன்படுகின்றன. முட்டை ஓடுகள் அலங்கார வேலைகளுக்குப் பயன்படுகிறது. ஈமு கோழியின் எண்ணெய் மருத்துவத்துக்குப் பயன்படுகிறது. கோழிக்கறி, ஆட்டுக்கறிக்கு இணையாக ஈமு கோழிக்கறி இனி இந்தியாவில் செல்வாக்கு பெறும்” என்று ஈமு பண்ணை நிறுவனங்களும் ஊடகங்களும் ஆரூடம் கூறுகின்றன. ஆனால், ஈமுவின் இறைச்சியை மிகவும் சொற்பமானவர்களே சாப்பிடுகிறார்கள். அப்படிச் சாப்பிடுபவர்கள் கூடச் சோதனை அடிப்படையில்தான் சாப்பிடுகிறார்களே தவிர, ஈமு கோழி இறைச்சியை ருசிப்பதற்காக அல்ல.

அப்படியென்றால் ஈமு கோழிப்பண்ணை நிறுவனங்கள் எப்படித் தொழில் நடத்த முடிகிறது என்ற கேள்வி எழலாம்.  இத்திட்டத்தில் ஆரம்பத்தில் சேரும் விவசாயிகளுக்கு , அடுத்தடுத்து வந்துசேரும் விவசாயிகளின் முதலீட்டு பணத்திலிருந்து எடுத்துக் கொடுக்கப்படுகிறது. “”எனக்கு முறையாகப் பணம் கிடைத்துவிட்டது” என்று ஆரம்பத்தில் இத்திட்டத்தில் சேரும் விவசாயி தெரிவிப்பதால், மற்றவர்களும் நம்பிக்கை பெற்று பணத்தைக் கட்டுகிறார்கள். இது சங்கிலி போல் தொடர்கிறது. முன்னால் வந்தவனுக்கு பின்னால் வந்தவனின் முதலீட்டுப் பணத்திலிருந்து கொடுக்கப்படுகிறது. விவசாயிகள்  அனைவரும் இக்கோழியை வளர்த்து முட்டைகளை விற்கின்றனர். முட்டை வியாபாரம் மட்டும்தான் நடக்கிறதே தவிர, கறி வியாபாரம் எதுவும்நடப்பதில்லை.

ஈமு வளர்ப்புக்கு நிலமும் நேரமுமில்லாதவர்களுக்கு,  நிறுவனங்களே முதலீடு செய்பவரின் சார்பாக ஒரு இடத்தில் பண்ணையை அமைத்து கோழிகளைப் பராமரிக்கும் திட்டத்தை வைத்துள்ளன. இத்திட்டத்திலும் கணிசமானவர்கள் இணைந்துள்ளார்கள். முதலீடு செய்தவர்கள் அவ்வப்பொழுது தங்கள் பண்ணையைப் பார்வையிட்டு வரலாம். இப்படி முதலீடு செய்தவர்கள் பார்வையிடச் செல்லும் பொழுது, ஒரே பண்ணையை திருப்பித் திருப்பி முதலீட்டாளர்களுக்கு காட்டி, “”இதுதான் உங்கள் பண்ணை” என்று முதலீட்டாளர்களை இந்நிறுவனங்கள் ஏமாற்றுகின்றன. இப்படி ஈமு வளர்ப்பைக் கொண்டு, விவசாயிகளை ஏய்த்தும் பல மோசடித் திட்டங்களின் மூலமாகவும் இந்நிறுவனங்கள் பல கோடிகளைச் சுருட்டியுள்ளன.

இன்றைய சந்தை நிலவரப்படி வளர்ச்சியடைந்த ஈமுவின் இறக்கை முதல் நகங்கள் வரை அனைத்தையும் விற்றாலும் கூட, அதனின் மொத்த மதிப்பு ரூ.25,000/ ஐக்கூடத் தாண்டாது. ஆகையால் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நிற்கும் பொழுது முட்டை கொள்முதலும் நிறுத்தப்பட்டு, கம்பெனியும் காணாமல் போய்விடும். முதலீட்டு பணமும்  திரும்பி வராது. இந்த மோசடியில் ஈமு வெறும் கண்கட்டு வித்தையாக மட்டும் பயன்படுகிறது.

இப்படிப்பட்ட மோசடிகள் தினந்தோறும் நடந்து வருகின்றன. ஏற்கெனவே அனுபவ் தேக்கு மர வளர்ப்புத் திட்டம், சந்தன மரம் வளர்த்தல், கண்வலி கிழங்கு விவசாயம், முயல் வளர்ப்பு, மருந்துநறுமணச் செடிகள் வளர்ப்பு முதலான மோசடித் திட்டங்கள் மூலம் தமிழகத்தில் விவசாயிகள் ஏ#க்கப்பட்ட கதை யாவரும் அறிந்தது. இதேபோல கோல்ட் குயிஸ்ட், டேட்டா என்டரி, இரிடியம் சுரங்கம் தோண்டுதல் , திருப்பூர் பாசி நிறுவன மோசடி, ஸ்பீக் ஆசியா ஆன் லைன், மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் லாட்டரி பரிசு, மல்டி லெவல் மார்க்கெட்டிங் முதலானவை நகர்புறத்தின் படித்த மேட்டுக்குடி மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை ஏய்ப்பதற்கான மோசடி திட்டங்களாகும். இப்படிப் புதுப்புது உத்திகளில் ஆண்டுதோறும் மோசடிகள் வந்த வண்ணம் இருக்கின்றன.  இவ்வகையான திட்டங்களுக்கு முன்னோடி, அமெரிக்காவைச் சேர்ந்த போன்சி என்ற மோசடிப்பேர்வழித்தழானழ்.  இவன் 1930களில் அமெரிக்கா பெரும் பொருளாதார மந்தத்தில் சிக்கி இருந்தபோது, அங்கு ஈமு வளர்ப்பை ஒத்த பல மோசடிகளை மேற்கொண்டு பல நூறு கோடி டாலர்களைச் சுருட்டிய பின்னர் பிடிபட்டான். ஆகையால், இவ்வகை மோசடிகள் “”போன்சி திட்டம்” என்றழைக்கப்படுக்கின்றன.

உலகமயமாக்கலின் விளைவாக மக்களின் வேலை வாய்ப்புகள், வாழ்வாதாரங்கள் பிடுங்கப்படுகின்றன. அதேநேரத்தில் மக்களை நுகர்வு வெறியில் இழுத்து, உழைப்பின் மேலிருந்த மதிப்பீடுகள் ஒழிக்கப்பட்டு, சம்பாதிப்பதற்கான நெறிமுறைகள் உடைக்கப் படுவதும் நடந்து வருகிறது. இந்தச் சூழல் ஈமு வளர்ப்பு போன்ற போன்சி திட்டங்களுக்கு உரமாக அமைகிறது. ஆகையால், விவசாயிகளும் உழைக்கும் மக்களும் உலகமயமாக்கலுக்கு எதிராக நின்று, இழந்து வரும் வேலைவாய்ப்புகளையும் வாழ்வாதாரங்களையும் மீட்க, மோசடியை மூதலனமாகக் கொண்டுள்ள ஈமு கோழி வளர்ப்பு போன்ற திட்டங்களை எதிர்த்துப்  போராட முன்வரவேண்டும்.

________________________________________________

– புதிய ஜனநாயகம், நவம்பர் – 2011

_________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்: