“இந்தியர்களுக்கு இனிமேலும் காபி தேவையில்லை; காப்பெச்சீனோ தான் தேவை” – பார்முலா 1 கார் பந்தையங்கள் குறித்து வலைபதியும் குணால் ஷா என்கிற ஆங்கில வலைபதிவர் சமீபத்தில் விடுத்திருக்கும் பிரகடனம்.
காபி கிடக்கட்டும், ஒழுங்காகத் தண்ணீர் விட்டாலே போதும் என்று நள்ளிரவில் குடங்களோடு ஊர்வலம் போகும் சாதாரண மக்களுக்கு காப்பெச்சீனோ பற்றி தெரிந்திருக்க நியாயமில்லை. அது ஒரு ஐரோப்பிய காபி வகை. சென்ற மாதம் நடந்து முடிந்த பார்முலா 1 கார் பந்தயத்தைத் தொடர்ந்து இந்திய மேன்மக்களின் உலகமே பெருமிதத்தில் உப்பிப் பெருத்து தரைக்கு ஒரு அடி மேலாக மிதப்பதாகக் கேள்வி. அவர்களின் ‘ஆல் பாரின்; நோ இண்டியன்’ மூளைகள் காபியில் கூட காப்பெச்சீனோவுக்குக் குறைந்து சிந்திப்பதாயில்லை.
ஜே.பி குழுமம் என்கிற கட்டுமான நிறுவனம் தில்லியை அடுத்துள்ள நோய்டாவில் சுமார் 2500 ஏக்கர் விவசாய நிலத்தை வளைத்து அதில் 875 ஏக்கர் பரப்பில் அமைத்துள்ள புத்தா சர்வதேச வளையம் (Buddh international circuit)என்கிற கார் ரேஸ் பந்தைய மைதானத்தில் கடந்த அக்டோபர் 28-ம் தேதி துவங்கி 30-ம் தேதி வரை பார்முலா 1 கார் பந்தயத்தை நடத்தி முடித்துள்ளது. இதற்காகவும் யமுனை அதிவிரைவுச் சாலை அமைப்பதற்காகவும் சுமார் 334 கிராமங்களைச் சேர்ந்த நிலங்களை சாதாரண விவசாயிகளை ஏமாற்றி சல்லிசான விலைக்கு அமுக்கியிருக்கிறார்கள்.
இந்தியப் பெருமிதம் சர்வதேச அரங்கில் நிலைநாட்டப்படுவதைப் பற்றி ஏதுமறியாத அப்பாவி விவசாயிகளோ சதுர மீட்டருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட தொகை மிகக் குறைவானது என்றும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக அளிக்கப்பட்ட உறுதிமொழியும் நிறைவேற்றப்படவில்லை, தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டதாகவும் அறிவித்து ஜே.பி குழுமத்தையும் இந்தியப் ‘பெருமிதத்தையும்’ எதிர்த்து போராடி வருகிறார்கள். இதையொட்டி இக்கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தொடுத்த வழக்கு ஒன்றில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்த அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சிர்பூர்கர், “பொதுநலனுக்காக சில தனிநபர்கள் தியாகம் செய்வது தவிர்க்க முடியாது” என்று ‘பஞ்சாயத்து’ பேசியிருந்தார். ஆயிரம் ஆனாலும் ‘பெருமிதம்’ சம்பந்தப்பட்ட விவகாரமென்றால் சும்மாவா?
விவசாயிகளின் எதிர்ப்புகளுக்கிடையே கடந்த மாத இறுதியில் நடத்தப் பட்ட முதல் பந்தயம் ஒருவழியாக இந்தியாவின் கவுரவத்தை சர்வதேச அளவில் உயர்த்தி விட்டதாக முதலாளித்துவ பத்திரிகைகள் புளகாங்கிதம் அடைந்து கொண்டிருக்கின்றன. இந்தப் புல்லரிப்பு ஒன்றும் சாதாரணமாய் வந்து விடவில்லை. சுமார் 400 மில்லியன் டாலர்கள் (சுமார் 2000 கோடி ரூபாய்) செலவில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள இந்த பந்தைய மைதானத்தில் விவசாயிகள் புகுந்து கடைசி நேரத்தில் ‘காரியத்தைக்’ கெடுத்து விடாமல் பார்த்துக் கொள்ள 35000 பேர் கொண்ட போலீசு படை குவிக்கப்பட்டிருந்தது.
பந்தயத்தைக் கண்டு களிப்புற தில்லியின் மேன்மக்கள் திரளாகக் குவிந்தனராம். 2,500 ரூபாயிலிருந்து 35,000 ரூபாய் வரை விற்ற நுழைவுச் சீட்டுகளைக் பெற்றுக் கொண்டு சுமார் 95,000 பேர் இந்த மூன்று நாட்கள் நிகழ்வை வேடிக்கை பார்த்துள்ளனர். பந்தய மைதானத்தின் பிரத்யேக பகுதியில் ‘அழகிகள்’ ஊற்றிக் கொடுக்கும் சீமைச் சாராயத்தைச் சப்பிக் கொண்டே வேடிக்கை பார்க்கும் நுழைவுச் சீட்டுகள் 2.5 லட்சம் ரூபாய் வரை விலை போயுள்ளது. கார்கள் பறப்பதைக் கண்டு கண்கள் களைத்துப் போனவர்களுக்கு பின் மாலை நேரத்தில் பாப் பாடகி லேடி காகாவின் (Lady Gaga) களிப்பூட்டும் பாடல்கள் – இதற்கான டிக்கெட்டுகள் சுமார் பத்து லட்சம் வரை விற்றுள்ளது.
ஆக, அண்ணா ஹசாரே பாயைச் சுருட்டிக் கொண்டு ராலேகான் சித்தியைப் பார்க்கக் கிளம்பியதன் பின் இப்போது தான் தில்லியின் மேன்மக்களுக்கு இளைப்பாறும் தருணம் வாய்த்திருக்கிறது. கடந்த ஆகஸ்டில் அண்ணாவுக்குத் திரண்ட சொற்ப கூட்டத்திற்கே தில்லி மாநகரத்தில் 35% குற்றங்கள் குறைந்ததாக போலீசு இலாக்கா சொன்னது. இப்போது அதைவிட அதிகமான அளவிலான மேன்மக்கள் கூட்டம் நோய்டாவில் குவிந்திருந்ததால் குற்றங்கள் 100 சதவீத அளவுக்குக் குறைந்திருந்தாலும் ஆச்சரியமில்லை.
இப்படி இந்தியாவின் கவுரவக் கொடியை ஜே.பி குழுமம் கொடிமரத்தில் ஏற்றிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் நிம்மதியைக் குலைக்கும் துக்கச் சம்பவங்கள் ஒன்றிரண்டு நடக்கத்தான் செய்தன. மைதானத்தைச் சுற்றி போடப்பட்டிருந்த பல் அடுக்குப் போலீசு பாதுகாப்பு வளையத்தையும் மீறி பயிற்சி நாள் அன்றைக்குத் தெரு நாய் ஒன்று புகுந்திருக்கிறது. இதைக் கண்டு திடுக்கிட்ட பிரேஸிலைச் சேர்ந்த புருணோ சென்னா என்கிற ரேஸ் வீரர் போட்டி அமைப்பாளர்களை உஷார் படுத்தியுள்ளார். உடனடியாக தெரு நாய்களைக் கண்டுபிடித்து வெளியேற்ற ஒரு தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது. பந்தய மைதானத்தின் உள்ளே ரேஸ் வண்டிகளும் வெளியே நாய் வண்டிகளும் வலம் வர, ஒரு வழியாக போட்டியை சிறப்பாக நடத்தி முடித்துள்ளனர். நல்லவேளையாக இந்தியப் பெருமிதத்தின் மீது சொறி நாய் எதுவும் பின்னங்க்காலைத் தூக்கி மூத்ராபிஷேகம் செய்து விடும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையே போட்டியின் துவக்க நாளன்று மெட்டாலிக்கா என்கிற பாப் இசைக் குழுவின் குத்தாட்ட நிகழ்ச்சியொன்றும் ஏற்பாடாகியிருந்தது. இதைக் காணவென்றே சுமார் 25,000 இரசிகர்கள் குழுமியிருக்கிறார்கள். ஆட்டம் ஆரம்பிக்க ஒரு சில நிமிடங்களே இருந்த நிலையில் மேற்படி நிகழ்வு சில தொழில்நுட்ப காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளது. வெளியே பீர் பாட்டிலோடும் தேசபக்தியோடும் ஆவலோடு காத்துக் கிடந்த நேயர்கள், கைக்கெட்டியது வாய்க்கு எட்டாத ஆத்திரத்தில் பீர் பாட்டில்களை எரிந்து மேடையை அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். டைம்ஸ் ஆப் இந்தியாவோ தில்லியில் குத்தாட்டம் நடத்த முடியாதது மாபெரும் தேசிய அவமானம் என்று அடுத்த நாள் பொங்கித் தீர்த்தது.
இப்படி ஒரு சில சில்லரைப் பிரச்சினைகளைத் தாண்டி பந்தயம் இனிதே நடந்து முடிந்தது. இப்போது சர்வதேச அளவில் இந்தியாவின் பணக்காரத்தனம் பறைசாற்றப்பட்டு விட்டதாகவும், இனிமேலும் ஐரோப்பியர்கள் இந்தியாவின் ஏழ்மையைக் காட்டி நம்மைப் பற்றி தாழ்வாக நினைக்க முடியாது என்றும் முதலாளித்துவ ஊடகங்கள் இறுமாப்புடன் செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தியாவின் பொருளாதார பலமும், இந்தியர்களின் கொண்டாட்ட விருப்பமும், செலவழிக்கும் வல்லமையும் உலகத்துக்கு பிரகடனம் செய்யப்பட்டு விட்டதாகவும், இந்தியர்கள் கட்டுப்பெட்டித்தனமிக்க கஞ்சர்கள் என்றோ, ஏழைகள் என்றோ இனிமேலும் வெள்ளைக்காரர்கள் நம்மைப் பற்றி ஏளனமாக கருத மாட்டார்கள் என்றெல்லாம் இப்பத்திரிகைகள் பெருமிதத்துடன் குறிப்பிடுகின்றன.
இந்தியர்களின் சமீபகால செல்வச் செழிப்பு உலகறியாத சிதம்பர இரகசியமல்ல. இப்போது கூட போட்டியைக் கண்டுகளித்த இரசிகர்களில் நாளுக்கு 32 ரூபாய் சம்பாதிக்கும் இந்தியாவின் ஆகப் பெரும்பான்மையான வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் என்பது பற்றிய கணக்குகளை மாண்டேக் சிங்கும் மன்மோகன் சிங்கும் அறிவார்கள். பந்தயம் நடந்த மாயாவதியின் உ.பி மாநிலமும் இதற்கு முன்பே பிரபலமானது தான். 2006-ம் ஆண்டிலிருந்து இன்றைய தேதி வரை சுமார் 3000 குழந்தைகள் வைரஸ் காய்ச்சலுக்கு இறந்த செய்திகள் வந்து கொண்டு தானே இருக்கிறது?
இந்தக் கார்பந்தயம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் கூட சுமார் 500 குழந்தைகள் வரை ஒருவகை மூளைக்காய்ச்சலுக்கு (encephalitis) பலியான செய்திகளும் பத்திரிகைகளில் வந்தன. இப்படி சீரோடும் சிறப்போடும் சர்வதேச அளவில் ஒளிவீசி வரும் இந்தியாவின் கிரீடத்தில் சமீபத்தில் பதித்த வைரம் தான் பார்முலா 1 கார் பந்தயம்.
மட்டுமல்லாமல், இந்தப் பந்தயம் சிறப்பாக நடந்ததை முதலாளித்துவ பத்திரிகைகள் பாராட்டிக் கொண்டிருப்பதில் மேட்டுக்குடி இந்தியர்களின் இன்னுமொரு கல்யாண குணமும் குன்றிலேற்றிய தீபமாய் ஒளிவீசிப் பிரகாசிக்கிறது. பக்கத்தில் டெட்பாடியே கிடந்தாலும் சங்கடமேற்படாமல் ஃபுல் பிளேட் பிரியாணியை அலேக்காக உள்ளே தள்ளும் சொரணை கெட்டத்தனம் தான் அந்த சிறப்பு குணம். நாட்டின் ஆகப் பெரும்பான்மையான மக்கள் அன்றாடங்காய்ச்சிகளாய் வயிற்றுப்பாட்டுக்கும் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே நித்தம் நித்தம் அல்லாடிக் கொண்டிருக்கும் நிலையில் தங்கள் செழிப்பையும் வளப்பத்தையும் ஆபாசமாக வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டுமானால் சாதாரணத் திமிரும் கொழுப்பும் மட்டும் இருந்தால் போதாது – அதற்கென்று விசேடமான வன்மமும், வக்கிரமும் தேவை. அது இந்திய மேன்மக்கள் சமூகத்தில் கடந்த இருபதாண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருவது யாவரும் அறிந்த ஒன்று தான்.
மேற்படி நபர்களின் ‘பொதுநலனுக்காக’ நிலங்களைத் தியாகம் செய்து விட்டு வயிற்றுப்பாட்டுக்கு எதாவது வழி பிறக்குமா பிறக்காதா என்கிற நிச்சயமின்மையின் மத்தியில் அல்லாடிக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு மன்மோகன் மற்றும் முதலாளித்துவ பத்திரிகைகள் வாசிக்கும் தாலாட்டு இது தான் – ‘அதான் டிராக்டர்களும் மாட்டு வண்டிகளும் ஓடிய மண்ணில் லூவில் ஹாமில்டன்னையும் செபஸ்டியன் வெட்டேலையும் விட்டு விலையுயர்ந்த பந்தயக் கார்களை ஓட விட்டிருக்கிறோமே. நாடு வல்லரசாகுதுன்னு கனவு கண்டு கொண்டே தூங்குங்கள். அந்த ஈரத்துணியை கட்டிக் கொள்ள மட்டும் மறந்து விடாதீர்கள்!’
கட்டுரை மிக அருமை….பட்டவர்தமான உண்மைகளை எள்ளலொடு தந்துள்ளீர்கள்
நாடு வல்லரசாகுதுன்னு கனவு கண்டு கொண்டே தூங்குங்கள். அந்த ஈரத்துணியை கட்டிக் கொள்ள மட்டும் மறந்து விடாதீர்கள்!’
நல்ல பதிவு.
//நாட்டின் ஆகப் பெரும்பான்மையான மக்கள் அன்றாடங்காய்ச்சிகளாய் வயிற்றுப்பாட்டுக்கும் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே நித்தம் நித்தம் அல்லாடிக் கொண்டிருக்கும் நிலையில்//
இது மாற பல வருடங்கள் ஆகலாம், மாறாமல் கூட போகலாம் அதற்காக _______________________________________________________________________?
நான் இதுவரை வினாவில் படித்த கட்டுரைகளில் ஆகச் சிறந்த கட்டுரை இதுதான். அந்த நக்கலும் நையாண்டியும் உண்மையை உரக்க சொல்லும் கருவியாக பயன்பட்டிருப்பது மிகவும் சிறப்பு. நன்றி!
கட்டுரை பிரமாதம். ஆனா அன்னா ஹசாரேயை வுடமாட்டேங்றேள்.
இது ஒரு பொழப்பா?வெட்ககேடு.
அருமை!
இந்த கட்டுரை சொல்லும் விசியங்களில் ஒரே ஒரு விசியத்தில் மட்டும் உடன்படுகிறேன்.
விவசாயிகளின் நிலங்களை அரசே கையகபடுத்தி (சந்தை விலையை விட குறைவான விலையில்), இந்த மைத்தானம் அமைக்க அளித்த விசியம் பெரும் தவறு. (நெடுஞ்சாலை அமைக்கவே நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன் என்றே உங்க சுட்டியின் முதல் பகுதி சொல்கிறது. சரியான தகவல் எது ?). நெடுஞாலைகள் நாட்டில் மொத்த பொருளாதார வளர்ச்சிக்கும், வறுமை ஒழிப்பிற்க்கும் கட்டாயம் தேவை. நிலங்களை எடுத்த பின்பு, பண வீக்கத்தினாலும், அதன் மூலம் உருவாகும் speculative real estate bubblesகளாலும், அச்சாலை பகுதியை ஒட்டிய நிலங்கள் துரிதமாக பல மடங்கு விலை உயர்வது இங்கு மிக சாதாரணம். எனவே, தங்கள் நிலங்களை மிக குறைந்த விலைக்கு அரசு எடுத்து கொண்டதாகவே விவசாயிகளுக்கு தோன்றும்..
தனியார் விவசாயிகளின் நிலங்களை அரசு சட்டப்படி கையகப்படுத்தும் விசியம் / முறை பல கொடுமைகளுக்கும், அநீதிகளுக்கும் வழிவகுத்துள்ளது. இந்தியாவில் தான் இப்படி. மேலை நாடுகளில் இப்படி எல்லாம் இஸ்டத்துக்கு நிலத்தை எடுத்துக்க முடியாது. காரணம் அங்கு சொத்துரிமை பலமாக உள்ளது. இங்கு நீர்த்து போக வைக்கப்பட்டது. (சோசியலிசம் பேசிய காலங்கள் நடந்த கொடுமை இது). தனியார் ஆலைகள், சுரங்களை கட்டமைக்க அங்கு, அரசு தலையிடாது. வாங்குபவர்களும், விற்பவர்களும் தாங்களே நேரடியாக பேசிக்கொள்ள வேண்டியது தான். ஆனால் இந்தியாவில் அப்படி இல்லை.
கருப்பு பணம் மற்றும் நிலங்களில் உண்மையான விலை கருப்பில் தான் நிர்னியம் (வரி அதிகம் மற்றும் பத்திர செலவும் அதிகம் என்பதால்) பல சிக்கல்களையும், distortions in valuations, compensations அய் உருவாக்குகிறது. இதுவும் இங்கு மட்டும் தான்.
ஆனால் இந்த மைத்தானம் அமைக்க (கேளிக்கை) வரி சலுகை கோரப்பட்டதை அரசு மறுத்துவிட்ட செய்தியை விட்டுவிட்டீர்கள்.
இதற்க்கான நிலம் விவசாயிகளிடம் இருந்து, அந்நிறுவனம் நேரடியாக, பேரம் மூலம் வாங்கியிருந்தால், குற்றம் சொல்ல வேறு எதுவும் இல்லை.
\\இதற்க்கான நிலம் விவசாயிகளிடம் இருந்து, அந்நிறுவனம் நேரடியாக, பேரம் மூலம் வாங்கியிருந்தால், குற்றம் சொல்ல வேறு எதுவும் இல்லை.//
அதியமான்,
மேற்குலக முதலாளித்துவத்தின் இந்தியப் பிரதிநிதியாக தன்னைத் தானே நியமனம் செய்து கொண்டு இந்திய மேட்டுக்குடி கும்பல் நடத்தும் அத்தனை வக்கிர கூத்துக்களையும்,அநியாய அக்கிரமங்களையும் நீங்கள் நியாயப்படுத்துவது காண சகிக்கவில்லை.
விவசாய நிலங்களை கைப்பற்றி மைதானம் அமைத்தது தவறில்லையா.ஏன் தார் பாலைவனத்தில் அமைக்க வேண்டியதுதானே.சில பல லட்சங்களை செலவிட்டு போட்டிகளை காணும் மேட்டுக்குடி உல்லாச பிரியர்கள் சில ஆயிரங்களை செலவிட்டு அங்கு போய் பார்க்க மாட்டார்களா.
இப்படி வந்த விலைக்கு நிலங்களை விற்று விட்டு விவசாயத்தை விட்டே ஓடும் நிலைக்கு விவசாயிகளை தள்ளிய அரசுகளின் விவசாய கொள்கை உங்களுக்கு தவறாக தெரியவில்லையா.
கும்பி கூழுக்கு அழும்போது கொண்டைக்கு பூ வைத்த கதையாக பட்டினியால் பரிதவிக்கும் மக்கள் வாழும் நாட்டில் வரி ஏய்ப்பு,ஊழல்,வங்கி மோசடி செய்தும் முறைகேடாக பொதுச்சொத்துக்களை சூறையாடியும் சொத்து சேர்த்த மேட்டுக்குடி ஊதாரி கும்பல் விளையாட்டு என்ற பெயரில் பல ஆயிரங்களையும் சில லட்சங்களையும் வீசியெறிந்து குடித்து கும்மாளமிட அனுமதிப்பது தவறில்லையா.
இத்தகைய நிகழ்வுகள் நமது கலாசார பண்பாட்டு விழுமியங்களின் மீது திட்டமிட்டு ஏற்படுத்தும் தாக்கத்தையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.பதிவில் வெளியாகியுள்ள படத்தைப் பாருங்கள். இரண்டு கிழட்டுப் பயல்கள் அரைகுறையாக ஆடையணிந்த இளம்பெண்களுடன் அருவருப்பூட்டும் வகையில் ஆபாசமாக நெருங்கி நின்றவாறு புகைப்படத்திற்கு காட்சி தருகிறார்கள்.மேட்டுக்குடி கும்பல் தங்களது கேடுகெட்ட மேற்கத்திய பாணி சீரழிவு கலாசாரத்தை நம் மக்கள் மீது திணிக்க மட்டைப்பந்து விளையாட்டுக்கு அடுத்து இத்தகைய பணக்கார விளையாட்டு போட்டிகளை தேர்ந்தெடுத்துள்ளார்கள்.
//மேற்குலக முதலாளித்துவத்தின் இந்தியப் பிரதிநிதியாக தன்னைத் தானே நியமனம் செய்து கொண்டு இந்திய மேட்டுக்குடி கும்பல் நடத்தும் அத்தனை வக்கிர கூத்துக்களையும்,அநியாய அக்கிரமங்களையும் நீங்கள் நியாயப்படுத்துவது காண சகிக்கவில்லை.///
திப்பு, என்னை ரொம்ப ’புகழ்றீக’. என்னை விட பல ஆயிரம் ‘பிரதினிதிகள்’ பெரிய லெவலில் உள்ளனர். ஆனா வழக்கம் போல் தப்பு கணக்கு தான் போடுகறீக.
அநியாய, அக்கிரமங்கள் எவை என்பதில் நமக்குள் மாறுபாடு உண்டு. இந்த ஃபார்முலா மைதானம் மற்றும் ரேஸ், தனியார்கள், தனியார்களுக்காக நடத்துவது. வளர்ந்த நாடுகளில் இது சகஜம். நாம் இன்னும் வளரந்த நாடாகவில்லை, ஏழ்மை அதிகம் உள்ள நாடு என்பது வேறு விசியம் (ஆனால் முன்பு பரம் ஏழை நாடாக இருந்தோம். இப்ப சுமார் ரகம்). இந்த மைதானத்திற்க்கு அரசு மானியம், வரி சலுகை அல்லது வேறு ஏதாவது சலுகை வழிங்கியிருந்தால் தான் அது அநியாயம். விவசாயிகளை மிரட்டி நிலத்தை வாங்கியிருந்தால் அது பெரும் குற்றம். ஆனால் நல்ல விலைக்கு வாங்கியிருந்தால், அது இரு தரப்பினரின் விருப்பம்.
அது சரி, அது என்ன கலாசார பண்பாட்டு விழுமியம் ? பல வகையான பந்தையங்கள் நம் நாட்டில் தொன்று தொட்டு நடக்கிறது தான். ரேக்ளா ரேஸ், மாட்டுவண்டி ரேஸ் என்று. இன்று நவீன காலம். எனவே ஃபார்முலா ஒன். அரைகுறை ஆடை அணிவது தவறு என்றால், நம் கோவில்களில் இருக்கும் சிற்பங்கள், கஜ்ரோகா சிற்பங்களை என்னவென்பது ? மேலும் தொலைகாட்சியில், சினிமாவில் இருக்கும் அளவு கூட அவர்களின் ஆடைகளில் ‘ப்ற்றாகுறை’ இல்லை. (தனிப்பட்ட முறையில் எனக்கும் இதில் உடன்பாடு இல்லை. I am a bit old fashioned in this matter. but as a libertarian, i cannot object to my fellow citizens following their personal tastes or wishes in dress, etc)
///கும்பி கூழுக்கு அழும்போது கொண்டைக்கு பூ வைத்த கதையாக பட்டினியால் பரிதவிக்கும் மக்கள் வாழும் நாட்டில் வரி ஏய்ப்பு,ஊழல்,வங்கி மோசடி செய்தும் முறைகேடாக பொதுச்சொத்துக்களை சூறையாடியும் சொத்து சேர்த்த மேட்டுக்குடி ஊதாரி கும்பல்///
அங்கு குழுமியிருந்த ‘மேட்டுகுடி’ மக்கள் அனைவரையும் பொத்தாம் பொதுவாக இப்படி ஒரே தட்டில் வைப்பது பொதுப்படுத்தல்கள். ஊழல் செய்பவர்களும் அங்கு இருந்தனர் தான். (எங்கு தான் இல்லை, இந்தியாவில்). மற்றபடி பட்டினியை, வறுமையை போக்க இவர்களை ’ஒழித்துகட்டினால்’ முடியவே முடியாது. தொழில்முனைவோர்கள் தான் உற்பத்தியை பெருக்கி, வேலை வாய்ப்புகளை, வரி வசூலை அதிகம் உருபாக்குபவர்கள். பண்டங்களை மலிவாக, எளிதாக அனைவருக்கும் கிடைக்க வழிவகுப்பவர்கள். இதை ஏற்க்காமல், உங்களை போன்ற ‘மனிதனேயர்கள்’ உருவாக்கிய சோசியலிச பாணி அமைப்பில் தான் வறுமை மிக மிக அதிகரித்து. பட்டினி சாவுகளும் உருவாகின. (1930 சோவியத் ரஸ்ஸியாவிலும், 1959இல் செஞ்சீனாவிலும், இன்றைய வட கொரியாவிலும்). மாற்றாக சுதந்திர சந்தை பொருளாதாரத்தை அமலாக்க முயன்ற கனடா, அமெரிக்கா தான் 60களிலும், பின்னரும் சோவியத் ரஸ்ஸியாவிற்க்கு கோதுமை ஏற்றுமதி செய்து காப்பாறியது. இந்தியாவுக்கும் தான்.
இதெல்லாம் சரித்திர உண்மைகள். ஆனால் நீங்க இதை பொருட்படுத்தமாட்டீக என்று தெரியும்.
//தொழில்முனைவோர்கள் தான் உற்பத்தியை பெருக்கி, வேலை வாய்ப்புகளை, வரி வசூலை அதிகம் உருபாக்குபவர்கள்///.
என்ன பிரயோசனம். மீண்டும் வாராக் கடன் தள்ளுபடி மூலம் கட்டிய சொற்ப வரிக்கும் மேலாக சுருட்டிக்கொள்கின்றார்களே!
கொடுக்கற மாதிரி கொடுத்து.. எடுக்கற மாதிரி எடுத்தும் கொள்வது!!
அதியமான்,
வழக்கம் போல் வாதம் செய்ய தோதானவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு பேசும் நீங்கள் மற்றவை குறித்து பேச மறுக்கிறீர்கள்.விளைநிலங்களை வளைத்துப் போட்டது,தில்லிக்கு அருகில்தான் அமைக்க வேண்டுமா,சற்று தொலைவில் விவசாயத்துக்கு பாதிப்பின்றி நிலம் கையகப்படுத்தாமை, விவசாயிகளை போண்டியாக்கும் அரசு கொள்கைகள் முதலானவற்றுக்கு உங்களிடம் விடை ஏதுமில்லை.
ஊழல் பற்றி பேசும்போது வரி ஏய்ப்பை பேச மறுப்பது ஏன்.வருமான வரியை ”ஆட்டையை” போடாத ஒரே ஒரு பணக்காரனை காண்பித்து விடுங்கள், நான் ஒரு பக்க காதை அறுத்துக் கொள்கிறேன்.[எத்தனை நாளைக்குத்தான் ஒரு பக்க மீசையை வைத்து பந்தயம் கட்டுவது]
பண்பாட்டு தாக்குதலை சற்று விரிவாக எண்ணிப் பாருங்கள்.இந்த வாகனப் போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்கள் மதுபான புட்டியை குலுக்கி நுரை பொங்க பீய்ச்சி அடிக்கிறார்கள்.மட்டை பந்து போட்டிகளின் முடிவில் வீரர்களுக்கு விலை உயர்ந்த மதுப்புட்டிகளை பரிசளிக்கிறார்கள்.இவையெல்லாம் மதுவின் மீது ஈர்ப்பையும் கவர்ச்சியையும் சிறுவர்கள்,இளைஞர்கள் மனதில் விதைப்பதாகாதா.
ரிசிபத்தினிகளை அவர்தம் கணவர் உருவில் வந்து தேவர்கள் ”கசமுசா” செய்த பார்ப்பன புராண கதைகளின் அடிப்படையிலான கோவில் சிற்பங்களுக்கு தமிழர்களாகிய நாம் ஏன் வக்காலத்து வாங்க வேண்டும். கள்ளுண்ணாமையையும்,பிறன்மனை நோக்கா பேராண்மையையும் வலியுறுத்தும் தமிழர் வாழ்வியல் நெறிகள் மக்கள் மனதில் ஆழப்பதியும் வகையில்தான் நமது பொது நிகழ்ச்சிகள் அமைய வேண்டும்.
//வருமான வரியை ”ஆட்டையை” போடாத ஒரே ஒரு பணக்காரனை காண்பித்து விடுங்கள், நான் ஒரு பக்க காதை அறுத்துக் கொள்கிறேன்.[எத்தனை நாளைக்குத்தான் ஒரு பக்க மீசையை வைத்து பந்தயம் கட்டுவது]///
Infosys former Chairman and founder : Thiru.N.R.Narayanamurthy and his wife Mrs.Sutha Murthy : இருவரும் சுமார் 10,000 கோடி சொத்துகளுக்கு அதிபதி. சில ஆயிரங்கள் முதலீட்டில் 30 ஆண்டுகளுக்கு முன்னாள் இன்ஃபோசிஸ்சை துவக்கினர்.
அவர்கள் என்றும் கருப்பு பணத்தை தொட்டதில்லை என்பது விசியம் அறிந்தவர்களுக்கு தெரியும். மேலும் பலரும் இதே பாணியில் இருக்கிறார்கள்.
சரி, காத அறுத்துகறீகளா ?
//பண்பாட்டு தாக்குதலை சற்று விரிவாக எண்ணிப் பாருங்கள்.இந்த வாகனப் போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்கள் மதுபான புட்டியை குலுக்கி நுரை பொங்க பீய்ச்சி அடிக்கிறார்கள்.மட்டை பந்து போட்டிகளின் முடிவில் வீரர்களுக்கு விலை உயர்ந்த மதுப்புட்டிகளை பரிசளிக்கிறார்கள்.இவையெல்லாம் மதுவின் மீது ஈர்ப்பையும் கவர்ச்சியையும் சிறுவர்கள்,இளைஞர்கள் மனதில் விதைப்பதாகாதா.///
அப்ப மதுவிலக்கை முன்மொழிகிறீர்களா என்ன ? சோமபானம் என்பதும் புராண காலத்தில் இருந்தது. கிராமங்களில் கள் மிக சாதாரணமாக பருகப்பட்டது. எங்கு குடும்பத்தை ‘குடியானவர்கள்’ என்பார்கள். காட்ட வித்து கள்ளு குடித்தாலும்…என்ற பழமொழி எல்லாம் உண்டு.
take it easy. this is not that serious. and car racing in Cholamandalam and Sriperumbudur in Chennai is going on for decades. this F1 is on large scale. that is the difference.
அதியமான்,
இந்த சுட்டிகளை ஒருமுறை படித்துவிட்டு நாராயணனின் புகழை ”முழங்குக”.
படித்து முடித்தபின்
”யாரைத்தான் நம்புவதோ பேதையின் நெஞ்சம்,அம்மம்மா,
பூமியிலே யாவும் வஞ்சம்”
என்று நீங்கள் பாடுவதை கேட்க எனக்கு காது வேண்டும்.ஆகவே அறுத்துக் கொள்ள முடியாது.காது மிகவும் முக்கியம் அமைச்சரே.
http://www.searchindia.com/2011/06/22/new-york-times-slams-indian-coolie-factory-infosys/
http://indiatoday.intoday.in/story/Infosys+asked+to+cough+up+Rs+33+cr+for+tax+evasion/1/26110.html
http://www.deccanherald.com/content/202830/infosys-named-top-indian-company.html
think you are very clever Mr.Thippu ? eh ?
that was a service tax notice and the company was contesting the claim as invalid since it was for services in a foreign country and not India. and what happened in the end ? why no news about any further action or penalities in this matter of Rs.32 crore claim in 2004 ? that means Infosys had successfully countered the invalid claim. you may bluff that it was thru corruption but that is your assumption with no proof.
And i was talking about Narayanamurthy’s track record in non-evasion of personal income taxes inspite being one of the richest man in India.
and the other links about Infy’s work culture : tell it to the millions of aspirants for an Infy job first. you guys do not deserve your cushy job in UK Thipu. try creating jobs for your fellow men first before maligning CREATORS.
and i am sure you deal in black money in your transactions in India, etc. don’t try to ride the high horse ok.
முதலாளித்துவ வர்க்கத்தைச் சேர்ந்த 95000 ஊதாரிகளின் சுகபோகங்களுக்கு இடைஞ்சல் வராதிருக்க, மக்களின் வரிப்பணத்தில் மக்களின் நலனுக்கு செயல்படுவதற்காக பயிற்றுவிக்கப்பட்ட 35000 பேர் அடங்கிய போலீஸ் படை காவல் காத்துள்ளது. அருமை! அபாரம்! நிச்சயமாகக் குற்றம் சொல்ல எதுவுமேயில்லை!!
ஆக, சுற்றி வளைத்து கடைசியில் நிலம் கையகப்படுத்தியதிலும் தனக்கு ஒன்றும் மாறுபாடு இல்லை என்று கூறுகிறார் அதியமான். ஏழை மக்களின் தாலியை அறுத்து மேட்டுக்குடி கும்பல் நடத்தும் இது போன்ற வக்கிர கூத்துகளை கூட ஆதரிக்கும் நல்லவர் தான் நமது அதியமான் குறித்துக்கொள்ளுங்கள் நண்பர்களே !
கொறச்ச காசுல நிலத்தை ஆட்டையை போடுவது தான் மன்மோகனின் ‘பார்முலா’.
அதில் அவர் எப்போதுமே ‘நம்பர் ஒன்’ தான்.
//நாட்டின் ஆகப் பெரும்பான்மையான மக்கள் அன்றாடங்காய்ச்சிகளாய் வயிற்றுப்பாட்டுக்கும் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே நித்தம் நித்தம் அல்லாடிக் கொண்டிருக்கும் நிலையில்//
இன்றையத் தேவை வல்லரசு இல்லை, நல்லரசு !!!
நல்லரசாக இருக்கமுடியாததால்தான் வல்லரசாகப் போறோம், எல்லரும் கைதட்டுங்கனு வித்தை காட்டிண்டுருக்கா.
Simply we can differentiate adhiyaman group and vinavu group. While the later one try to save our gals (mother/sister/wife/daughter) from mallya group. The former one trying to offer their gals to mallya group.
“பந்தய மைதானத்தின் உள்ளே ரேஸ் வண்டிகளும் வெளியே நாய் வண்டிகளும் வலம் வர, ஒரு வழியாக போட்டியை சிறப்பாக நடத்தி முடித்துள்ளனர்.”
சூப்பரான வரி
இன்போசிசு நார வாயன பத்தி போட்ட உடனே எங்க அதியமான ஆளயே காணோம், ஒரு வேளை தன்னோட இன்போசிசு வேலையை விட போயிருப்பாரோ. சே சே அப்படி எல்லாம் இருந்தாதான் விவசாய நிலம் கையகப்படுத்தப் பட்டதை ஆதரிக்க மாட்டாரே.
இன்ரைய இந்தியவின் நிலமை ….
வெளிநாட்டையும் இந்தியாவையும் ஒப்பிட்டு எழுதும்போது அவர்கள் ரேஸ் ஓடுகிறார்கள் நாம் ஓடவில்லை என்று சொல்லுவீர்கள். ஓடவிட்டால் இது இப்ப தேவையா என்று சொல்லுவீர்கள்.