privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைகுழந்தைகள்குழந்தைகளை கொல்வது அரசா, பெற்றோரா?

குழந்தைகளை கொல்வது அரசா, பெற்றோரா?

-

1. கர்நாடாகாவில் 71,605 தீவிரமாக ஊட்டச் சத்துக் குறைபாடுடைய குழந்தைகளும், 11 லட்சத்து 29 ஆயிரத்து 947 ஊட்டச் சத்து குறைபாடுடைய குழந்தைகளும் இருக்கின்றனர். 2008-09-ல் 1070 சாவுகளும், 2009-10-ல் 1,144 சாவுகளும், 2010-11-ல் ஆகஸ்டு வரை 431 சாவுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. பிஜப்பூரில் 8983 தீவிரமாக ஊட்டக் குறைவு பீடித்த குழந்தைகளும் ராய்ச்சூரில் 4531 குழந்தைகளும் இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராய்ச்சூர் மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம், இதற்கான காரணங்களை ஆராய்ந்து, ‘உறவுக்குள் திருமணம் செய்து கொள்வது, இளம் வயதில் குழந்தை பெற்றுக் கொள்வது, படிப்பறிவின்மை, மூட நம்பிக்கைகள் போன்றவைகள்தான் இவற்றுக்கு காரணம்’ என்று அறிக்கை சமர்ப்பித்தனர்.

ராய்ச்சூரிலிருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் அப்பனடோடி கிராமத்தைச் சேர்ந்த மகாதேவிக்கு வயது மூன்று. அந்த ஊர் அங்கன்வாடியில் வழங்கப்பட்ட பிசிபேளாபாத்தை சாப்பிட்ட அன்று இரவு முழுவதும் வயிற்று வலியால் அவதிப்பட்டாள்.

‘படிப்பறிவு இல்லாததால் குழந்தைக்கு என்ன உணவு தேவை’ என்று தெரியாமல் இல்லை அவளது அம்மா நரசம்மாவுக்கு; சோறு, பருப்பு, சப்பாத்தி கொடுத்தால்தான் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் என்று அவருக்கு நன்றாகவே தெரியும். ஆனால் 60 ரூபாய் தினசரி வருமானத்தில் 5 குழந்தைகளுக்கு சாப்பாடு போட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அவர் சோற்றுடன் மிளகாய்ப் பொடி கலந்து கொடுப்பதைத்தான் செய்ய முடிகிறது.

அங்கன்வாடியில் இணைக்கப்பட்டுள்ள 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு அன்றன்று சமைக்கப்பட்ட சத்துணவு வழங்கப்பட வேண்டும் என்பது உச்ச நீதி மன்றத்தின் வழிகாட்டல். ஆனால், கர்நாடகாவின் 60,000 அங்கன்வாடியைச் சேர்ந்த குழந்தைகளுக்கு உணவு வழங்கும் ஒப்பந்தம் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டி பிரைட்கிராம் இண்டஸ்ட்ரீ என்ற தனியார் நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அரை கிலோ, ஒரு கிலோ பாக்கெட்டுகளில் வரும் பிசிபேளாபாத், கேசரி பாத், நியூட்ரியா கார்ன் பாப் மற்றும் சத்து மாவு குழந்தைகளுக்கு தரப்படுகிறது. அவை குழந்தைகள் சாப்பிடும் தரத்தில் இல்லாததோடு புதிதாக சமைத்த உணவைப் போல தேவையான சத்துகளையும் தருவதில்லை.

இப்படி மக்களின் மீது மோசடியை அவிழ்த்து விட்டுக் கொண்டே அந்த மக்களின் மீதே பழி போடுவது ஒரு ‘மக்கள் நல’ அரசின் கீழ்தான் நடைபெற முடியும். மக்களின் வாழ்வாதாரங்களை அழித்து விட்டு வறுமையில் தள்ளி, அரசு நலத் திட்டங்கள் என்ற பெயரில் தனியார் நிறுவனங்களுக்கு லாபம் சம்பாதித்துக் கொடுக்க செயல்படும் இந்த பாவிகள் அந்த மக்களின் மீதே பழி போடுகிறார்கள்.

கர்ப்பமுற்றிருக்கும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்காததிலிருந்து பிரச்சனை ஆரம்பமாகிறது. இதற்கு எந்த ஒரு மூட நம்பிக்கையும் காரணம் இல்லை. ‘நல்ல சாப்பாடு சாப்பிட்டால்தான் சரியான ஊட்டச்சத்து கிடைத்து ரத்த சோகை இன்றி ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்க முடியும்’ என்பதை தெரியாத தாய்மார்கள் யாருமே இல்லை. ஆனால், இந்தியாவின் ஒரே செயல்படும் தங்கச் சுரங்கம் இயங்கும் ராய்ச்சூரில் உழைக்கும் மக்களுக்கு அதற்கெல்லாம் ‘வசதி’ இல்லை, என்ன செய்ய?

குழந்தைகள் ஊட்டச் சத்து குறைவால் பாதிக்கப்பட்டதை ஆராய நியமிக்கப்பட்ட 15 உறுப்பினர் குழு குழந்தைகளுக்கு முட்டையும் பாலும் வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. இதுவும் மக்களின் மூட நம்பிக்கைகளால் அல்ல, இந்துமதவெறியர்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது.

ராய்ச்சூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் ஊட்டச் சத்து நிவாரண மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஐந்தரை கிலோ எடை மட்டும் இருந்த 18 மாத குழந்தை ஸ்ரீகாந்த் ஊட்டச் சத்து நிவாரண மையத்துக்குக் கொண்டு வரப்பட்ட பத்தே நாட்களில் அவனது எடை 1 கிலோ அதிகரித்தது. வாழைப்பழங்கள், பால், சோறு, பருப்பு, காய்கறிகள், சப்பாத்திகள், ராகி, அவித்த முட்டை போன்றவை தினமும் சாப்பிடுவதன் மூலம்தான் அது நடந்ததே தவிர, ஆய்வுக் குழு கண்டறிந்தது போல அறியாமையை அகற்றி விட்டதால் அல்ல.

_____________________________

2. நைட்ரஸ் ஆக்சைட் என்ற மயக்க வாயு இல்லாததால் அவசரமில்லாத (elective surgery) அறுவை சிகிச்சைகளை தள்ளிப் போட்டிருக்கிறது சென்னை அரசு பொது மருத்துவமனை. நவம்பர் 29 செவ்வாய் கிழமை அன்று அவசர சிகிச்சைகளுக்கு முதலிடம் கொடுத்து 64 அறுவை சிகிச்சைகள் மட்டும் நடத்தப்பட்டன, 29 அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்பட்டன.

‘மழை வெள்ளத்தினாலும், மின்சார தடையினாலும் உற்பத்தி 50% குறைந்து விட்டது. 24 மணி நேரமும் இயக்கப்பட வேண்டிய தொழிற்சாலையில் மின் தடை காரணமாக உற்பத்தி தடைப்பட்டது. அதனால்தான் ஜிஎச்சுக்கு  தேவைப்படும் 10 சிலிண்டர்களுக்கு பதிலாக 7 சிலிண்டர்கள் அனுப்பினோம்’ என்று காரணம் சொல்கிறார்கள் ஐநாக்ஸ் ஏர் புரோடக்ட்ஸ் என்ற நைட்ரஸ் ஆக்சைடு அனுப்பும் நிறுவனம்.

உண்மையில் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் கூட கையிருப்பில் இருக்காது என்பதுதான் சென்னை அரசு மருத்துவமனையில் வாடிக்கை. நோயாளிகளை வெளியில் அனுப்பி கடைக்குப் போய் விலைக்கு வாங்கி வரச் சொல்வதுதான் நடைமுறை. அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் நைட்ரஸ் ஆக்சைட் சிலிண்டர்களை அப்படி கடையில் வாங்கி கொண்டு வரும் சாத்தியம் இல்லாததால் விஷயம் வெளியில் வந்து விட்டிருக்கிறதே தவிர, இவர்கள் சப்பைக் கட்டு கட்டும் மழை, மின்தடை காரணம் இல்லை. சில உதாரணங்கள் கீழே:

ஒரு நாள் ஊசி போடுவதற்கான 10 மிலி சிரிஞ்சு இருக்காது. 5 மிலி சிரிஞ்சு மட்டும்தான் இருக்கும். ஒரு நோயாளிக்கு 10 மிலி மருந்து செலுத்த வேண்டுமென்றால் இரண்டு சிரிஞ்சுகளை நிரப்பி முதல் சிரிஞ்சுடன் ஊசி குத்தி விட்டு, அதை அப்படி பிடித்துக் கொண்டிருந்து விட்டு, சிரிஞ்சை மட்டும் கழற்றி விட்டு அப்படியே இரண்டாவது சிரிஞ்சை பொருத்தி ஊசி போட்டு முடிக்க வேண்டும்.

அடுத்த வாரம் 5 மிலி சிரிஞ்சு இருக்காது, 10 மிலி சிரிஞ்சு மட்டும்தான் இருக்கும். 4 மிலி மருந்து கொடுக்க 10 மிலி சிரிஞ்சை வீணாக்க வேண்டியிருக்கும்.

இதற்கு எந்த மழை அல்லது மின்தடை காரணம்?

ஒரு நாள் அளவு 7 கையுறைகள் மட்டும்தான் இருக்கும். 7.5 அளவு கை உடைய மருத்துவர் விரல்கள் வலிக்க வலிக்கத்தான் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். இரண்டு வாரம் கழித்து 7.5 அளவு கையுறை மட்டும்தான் வழங்கப்படும். கை அளவு சிறிதாக இருக்கும் ஒருவர் நிமிடத்துக்கொரு முறை கையுறையை இழுத்து விட்டுக் கொண்டே அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும்.

இவற்றுக்குமா மழை பெய்ததும், மின்சார தடையும் காரணமாக இருக்கும்?

இந்த லட்சணத்தில் நிர்வாகம் செய்யும் அரசு, புதிய தலைமைச் செயலகம் கட்டிடத்தையும், அண்ணா நூற்றாண்டு நூலகத்தையும் புதிய மருத்துவமனைகளாக மாற்றி நடத்த திட்டமிட்டுள்ளது!

மேற்கண்ட இரண்டு செய்திகளையும் பார்க்கும் போது மருத்துவத்தில் அரசின் அக்கறையின்மையையும் அதனால் பாதிக்கப்படும் மக்களையும், மறுபுறத்தில் தனியார் மருத்துவமனைகள் கொள்ளையடிப்பதற்கு அரசே முன்னின்று உதவி செய்வதையும், காப்பீட்டு திட்டம் என்ற பெயரில் கார்ப்பரேட் மருத்துவமனைகள் கொள்ளையடிப்பதற்கு கடை விரிக்கப்பட்டிருப்பதையும் புரிந்து கொள்ள முடியும்.

– அப்துல்