Thursday, November 7, 2024
முகப்புகட்சிகள்சி.பி.ஐ - சி.பி.எம்பாரதிராஜாவிற்கு ஒரு பகிரங்கக் கடிதம்!

பாரதிராஜாவிற்கு ஒரு பகிரங்கக் கடிதம்!

-

முன்னுரை:

தமிழ் சினிமாவில் கோடிகளில் வாங்கும் நட்சத்திரங்களின் சம்பளமும், சம்பள உயர்வும் உடனுக்குடன் முடிவு செய்யப்பட்டு விடும். ஆனால் அன்றாடக் கூலியாக வேலை செய்யும் தொழிலாளிகளின் ஊதிய உயர்வு மட்டும் மறுக்கப்படும் அல்லது தள்ளிப் போடப்படும். தற்போது ஊதிய உயர்வை அமல்படுத்தக்கோரி திரைப்படத் தொழிலாளர்கள் போராடி வருவதையும், அதை மறுத்து தயாரிப்பாளர் சங்கம் வேலை செய்வதையும் நீங்கள் படித்திருக்கலாம். இது இன்றைய தினத்தில் மட்டுமுள்ள பிரச்சினை அல்ல.

1997ஆம் ஆண்டு தமிழ்த் திரையுலகில் சினிமா தொழிலாளிகள் ஊதிய உயர்வுக்காக போராடினர். அப்போது பாரதிராஜா, பாலச்சந்தர் போன்ற இயக்குநர்களாகவும் முதலாளிகளாகவும் இருப்பவர்கள் இந்தப் பிரச்சினையை படைப்பாளிக்கும் தொழிலாளிக்குமான பிரச்சினையாகவும், தமிழனது அடையாள பிரச்சினையாகவும் திரித்து தொழிலாளிகளுக்கு எதிராக நடந்து கொண்டார்கள். அப்போது ம.க.இ.க சார்பில் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு தொழிலாளர்களை ஆதரித்து பிரச்சார இயக்கம் நடத்தப்பட்டது. அப்போது வெளியிடப்பட்ட சிறு நூலை இங்கே வெளியிடுகிறோம்.

–    வினவு

_________________________________

பாரதிராஜாவிற்கு ஒரு பகிரங்கக் கடிதம் !
சென்னையில் தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்திய கூட்டத்திலிருந்து – ஜனவரி 2012

டி.வி.எஸ். முதலாளி கையில் ஸ்பானருடன் வந்து நின்று, ‘நானும் தொழிலாளிதான்’ என்று வசனம் பேசினால் எப்படி இருக்கும்? இந்தக் கூத்தெல்லாம் தமிழ் சினிமாவில்தான் நடக்கும் என்பீர்கள். தமிழ்த் திரையுலகத்தில் இப்போது உண்மேயிலேயே அப்படியொரு கேலிக்கூத்து நடந்து கொண்டிருக்கிறது.

விநியோகஸ்தர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையிலான மோதல், நட்சத்திரங்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் இடையிலான மோதல், நட்சத்திரங்களுக்கிடையிலான மோதல்- என்று பல வடிவங்களில் கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருந்த தமிழ்த் திரையுலகப் பிரச்சினை இப்போது முதலாளி- தொழிலாளி பிரச்சினையாக, சந்திக்கு வந்துவிட்டது.

பிரச்சினையின் பின்னணி என்ன?

ஒரு ஆண்டில் வெளியாகும் சுமார் 150 படங்களில் 5 படங்கள் மட்டுமே போதிய லாபம் தருகின்றன. மற்ற தோல்வியடையும் படங்களுக்கு முன்பணம் கொடுத்து சூதாட விநியோகஸ்தர்கள் தயாராக இல்லை.

”ரஜினிகாந்த், கமலஹாசன் படங்களைத் தவிர மற்றவர்களின் படங்களை ‘அவுட்ரைட்’ முறையில் முன்பணம் கொடுத்து வாங்க முடியாது. படத்தை வெளியிடுங்கள். ஓடுகிறதா என்று பார்ப்போம். பிறகு விலையைத் தீர்மானிப்போம்” என்கிறார்கள், விநியோகஸ்தர்கள்.

வேறு விதமாகச் சொன்னால் மற்ற குதிரைகளின் மீது கோடிக்கணக்கில் பணம் கட்டிச் சூதாட விநியோகஸ்தர்கள் தயாராக இல்லை. ”தயாரிப்புச் செலவைக் குறை” என்று கூறுகிறார்கள்.

தயாரிப்புச் செலவில் கதாநாயகன், நாயகி மற்றும் முன்னணி நட்சத்திரங்களின் சம்பளம் சுமார் 30 சதவீதம்; இயக்குநருக்கு 10 சதவீதம்; தயாரிப்பு செலவு 50 சதவீதம்; தொழிலாளிகள் அனைவரின் சம்பளம் 10 சதவீதம் – இதுதான் உத்தேசமாக தமிழ் சினிமா ஒன்றின் தயாரிப்புச் செலவு கணக்கு என்று கூறப்படுகிறது.

இலட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் நட்சத்திரங்களும், நட்சத்திர இயக்குநர்களும் தங்கள் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளத் தயாராக இல்லை; கங்காருவை  முத்தமிடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கும், ரங்க ராட்டினம் சுற்றுவதற்காக அமெரிக்காவுக்கும் ‘அவுட்டோர்’ சென்று காசை அழிப்பதை நிறுத்த இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் தயாராக இல்லை.

இருந்தாலும் தயாரிப்புச் செலவைக்     குறைக்க வேண்டும். என்ன செய்யலாம்? ரசிகர்களாகிய மக்கள் தலையில்  கை வைக்கலாம். அல்லது திரையுல தொழிலாளர்கள் தலையில் கை வக்கலாம். டிக்கெட் விலையேற்றி மக்களை சமீபத்தில்தான் மொட்டையடித்திருக்கிறார்கள் என்பதால் கத்தியை இப்போது தொழிலாளர்களை நோக்கித் திருப்பியிருக்கிறார்கள்.

தொழிலாளி வேடத்தில் முதலாளிகள்!

பட முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான இந்தப் பிரச்சினை இயக்குநர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான மோதலாக மாறிய மர்மம் என்ன? அதுதான் ”டி.வி.எஸ். முதலாளி ஸ்பானர் பிடித்த கதை.”

மனோஜ் கிரியேஷன்ஸ் என்ற திரைப்பட நிறுவனத்தின் அதிபர் பாரதிராஜாவும், கவிதாலயா அதிபர் பாலச்சந்தரும் இயக்குநர் வேடத்தில் இப்போது களத்தில் நிற்கிறார்கள். ”வறுமையின் நிறம் சிவப்பு” – ”என்னுயிர்த்தோழன்” போன்ற ‘புரட்சிப் படங்களை’ எடுத்த இயக்குநர்கள்தான் இப்போது தொழிலாளிகளுக்கு எதிராக முண்டா தட்டுகிறார்கள்.

முதலாளிகள் என்று சொல்லிக் கொண்டு களத்தில் நின்றால் தங்கள் ”சுரண்டும் உரிமை” பற்றிப் பேச வேண்டியிருக்கும். மக்கள் ஆதரவும் கிடைக்காது. எனவேதான் இயக்குநர் வேடத்துக்கு மாறிக் கொண்டு ”படைப்புரிமை, கலைஞனின் சுதந்திரம், தமிழுணர்வு” என்று வசனம் பேசுகிறார்கள். தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்கங்களின் சம்மேளனமாகிய ஃபெப்சி சங்கத்தை உடைப்பது என்று தாங்கள் முடிவு செய்யக் காரணம் ராமன் – அப்துல்லா படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்சினைதான் என்று ரீல் சுற்றுகிறார்கள்.

ஆனால், சம்பவம் பற்றி பாலுமகேந்திரா இயக்குநர்கள் சங்கத்திடம் கொடுத்த புகாரை இந்தப் ‘படைப்பாளிகள்’ அப்போது யாரும் கண்டுக் கொள்ளவில்லை. படப்பிடிப்பும் தொடர்ந்து நடந்து கொண்டுதானிருந்தது.

ஃபெப்சியை ‘வழிக்குக் கொண்டு வருவதற்கு’ இந்தப் பிரச்சினையைப் பெரிதாக்கலாம் என்ற முடிவு தயாரிப்பாளர் சங்கத்தில்தான் எடுக்கப்பட்டது. தயாரிப்பாளர் என்ற முறையில் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த பாரதிராஜாவிடம் ”இந்த ஸ்டோரியை டெவலப் செய்யும் பொறுப்பு” ஒப்படைக்கப்பட்டது. இயக்குநர்கள் களத்தில் இறங்கினார்கள்.

‘படைப்பாளி’களின் வாதம் என்ன?

ஃபெப்சியை உடைத்து ”தமிழ்நாடு படைப்பாளிகள் –தொழிலாளிகள் கூட்டமைப்பு” என்ற கருங்காலி சங்கத்தைத் துவக்குவதற்கு இயக்குநர்கள் (அதாவது பட முதலாளிகள் ) கூறும் காரணம் என்ன?

”இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், நடிகர்கள் போன்ற படைப்பாளிகளும் –லைட்மேன், துணை நடிகர்கள், சண்டை நடிகர்கள், சமையல்காரர்கள் போன்ற படைப்பாற்றலுக்குத் தொடர்பில்லாத தொழிலாளிகளும் ஒரு சங்கத்தில் இருக்க முடியாது; தயாரிப்பாளரிடம் சம்பளம் வாங்குகிறவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக எல்லோரும் ஒரு சங்கத்தின் கீழ் இருக்க முடியாது. படைப்பாற்றலுக்கு எள்ளளவும் தொடர்பில்லாத தொழிலாளிகள் கும்பல், எண்ணிக்கையில் அதிகமாக இருக்கின்ற ஒரே காரணத்தினால் சங்கத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. படைப்பாளி வேறு; தொழிலாளி வேறு. படைப்பாளிகள் உரிமையில் எந்தவிதத்திலும் தொழிலாளி தலையிட முடியாது”- என்று இயக்குநர்கள் சார்பாக சண்டமாருதம் செய்கிறார் பாரதிராஜா.

முகமூடியைக் கிழிக்கிறார்கள் தொழிலாளர்கள்!

இயக்குநர்களின் வாதம் வெறும் பித்தலாட்டம் என்று மறுக்கின்றனர், போராடி வரும் ஃபெப்சி தொழிலாளர்கள்.

”இயக்குநர்கள் என்ற பெயரில் கருங்காலி வேலை செய்யும் இவர்களில் பெரும்பான்மையினர் தயாரிப்பாளர்கள் அதாவது முதலாளிகள். 10 மாதங்களுக்கு முன்னால் முதல்வர் முன்னிலையில் ஏற்றுக்கொண்ட தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் இன்று வரை இவர்கள்  கையெழுத்திடவில்லை.”

”தெலுங்கு, கன்னட, மலையாள தயாரிப்பாளர்கள் அனைவரும் இதில் கையெழுத்திட்டு விட்டார்கள். சம்பள உயர்வை மறுப்பதற்குத்தான் இவர்கள் நாடகம் ஆடுகிறார்கள். சங்கத்தை உடைக்கிறார்கள். இன்று தொழிலாளிகளுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கும் இந்த இயக்குநர்கள் தொழிலாளர்களுக்கு வரவேண்டிய பல கோடி ரூபாய் சம்பள பாக்கியை தயாரிப்பாளர்களிடமிருந்து வசூலித்துத் தர, தங்கள் சுண்டுவிரலைக் கூட அசைத்ததில்லை.”

”தற்போது தயாரிப்பில் இருக்கும் படங்களில் வேலை செய்த தொழிலாளிகளுக்கு ஒவ்வொரு தயாரிப்பாளரும் ஆயிரக்கணக்கில் சம்பள பாக்கி வைத்திருக்கிறார்கள். பாதி படத்திற்க்கு வேலை செய்ததற்கு கூலி கொடுக்க வக்கில்லாதவர்கள், மீதி படத்தை வேறு ஆள் வைத்து வேலை செய்கிறோம் என்கிறார்களே, இது என்ன நியாயம்?”

”இந்த திடீர்த் தமிழர்கள் தங்கள் படங்களை பிற மொழிகளில் டப்பிங் செய்யாமல் இருப்பார்களா? அனைத்திந்திய சந்தையை கைகழுவி விடுவார்களா? அதெல்லாம் இருக்கட்டும் முதலில் தங்கள் படத்துக்கு தமிழில் பெயர் வைப்பார்களா?”- என்ற பதிலடி கொடுக்கிறார்கள்  தொழிலாளர்கள்.

தொழிலாளர்களின் கேள்விகளுக்கு இயக்குநர்களிடமிருந்து நாணயமான பதில் எதுவும் இல்லை. தன் முன்னிலையில் ஏற்றுக் கொண்ட ஊதிய ஒப்பந்தத்தில் 10 மாதமாகக் கையெழுத்து போடாதது பற்றியோ, பல கோடி ரூபாய் சம்பளம் பாக்கி பற்றியோ முதலாளிகளிடம் ஒரு கேள்வி கூடக் கேட்காமல் கட்டைப் பஞ்சாயத்து செய்திருக்கிறது, கலைஞர் அரசு.

பிற தொழில்களைப் போன்றதல்ல திரைப்படத் தொழில்!

சினிமா தொழிலாளர்களின் வேலை நிலைமைகளும், அவர்களது பிரச்சினைகளும் மிகச் சிக்கலானவை. பிற தொழில்களைப் போல ஒரு நிர்வாகம் – ஒரு முதலாளி என்பது இங்கே கிடையாது.

முப்பதாண்டுகளாகப்  பணியாற்றும் தொழிலாளிகள் இங்கே உண்டு. ஆனால் முதலாளிகள் பலர் முகவரி இல்லாதவர்கள். சூது, மோசடி, வாய் ஜாலம் ஆகியவற்றையே மூலதனமாக வைத்துப் படப்பிடிப்பைத் தொடங்கும் பல முதலாளிகள் எப்போது ஓடுவார்கள் என்பதைச் சொல்லவே முடியாது.

தொழிலாளிக்கு அன்றைய வேலைக்கு அன்றே சம்பளம் கிடைக்காது; வாரத்திற்கு ஒரு முறையும் கிடைக்காது; படம் முடிந்தபின் தருகிறோம் என்று உறுதி சொல்லி பாக்கி வைப்பார்கள்; பாதியில் ஓடுவார்கள்.

எனவே சம்பள உயர்வுக்கும், உரிமைக்கும் போராடும் மற்ற தொழிற்சங்கங்களைப் போல இல்லாமல், உள்ளே சம்பளத்தை வசூல் செய்யும் வேலையையே இங்கே தொழிற்சங்கம் செய்ய வேண்டியிருக்கிறது.

ஃபெப்சி என்ற திரைப்பட ஊழியர் சம்மேளனம், இயக்குநர்கள் சங்கம் முதல் சமையல் தொழிலாளர்கள் சங்கம் வரையிலான  24 சங்கங்களை உள்ளடக்கிய சம்மேளனமாகும். இயக்குநர் முதல் கடைநிலைத் தொழிலாளிவரை ஒவ்வொரு பிரிவினருக்கும் ஊதிய ஒப்பந்தப்படி சம்பளம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. தொழிலாளிகளுக்கு இந்த நிர்ணயிக்கப்பட்ட கூலி மட்டுமே கிடைக்கும்.

ஆனால் இயக்குநர் போன்றோரின் சம்பளம் அவர்களது மார்க்கெட்டைப் பொருத்து கருப்பு நிறத்தில் தீர்மானிக்கப்படும். முதன் முதலில் இயக்குநராகி தன் பெயரைத் திரையில் பார்ப்பதற்க்கு தவம் கிடக்கும் காலங்களில் இவர்களுக்கு தொழிற்சங்கத்தின் ஆதரவு தேவைப்படுகிறது. இயக்குநராக உயர்ந்து விட்டவர்கள் இன்னும் ஒருபடி மேலே போய் தயாரிப்பாளராக மாறி சொந்தப் படம் எடுக்கிறார்கள்.

தயாரிப்பாளர்கள் என்ற முறையில் முதலாளியாகவும் இயக்குநர் என்ற வகையில் தொழிலாளியாகவும் ஒரே நேரத்தில் இரண்டு சங்கங்களிலும் அங்கம் வகிக்கின்றனர். டி. ராஜேந்தர், பாக்கியராஜ் போன்ற ‘சகலகலா வல்லவர்களாக’ இருந்தால் சமையல்காரர் சங்கத்தைத் தவிர எல்லா சங்கத்திலும் தொழிலாளி என்ற முறையிலும் உறுப்பினராகிக் கொள்ளலாம். அதே நேரத்தில் முதலாளியாகவும் இருந்து கொள்ளலாம்.

எனவே பெப்சியை உடைப்பதற்கு காரணமான பிரச்சினை படைப்பாளி – தொழிலாளி பிரச்சினை அல்ல; முதலாளி – தொழிலாளி முரண்பாடுதான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதைப் புரிந்து கொண்டால்தான் தொழிலாளிகள் தரப்பின் நியாயத்தையே புரிந்து கொள்ள முடியும்.

பாரதிராஜாவிற்கு ஒரு பகிரங்கக் கடிதம் !
சென்னையில் பெப்சி நடத்திய கூட்டத்திலிருந்து – ஜனவரி 2012

பாரதிராஜாவுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்  

இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களே, மற்றும் சிகரங்களே, குன்றுகளே,

‘ஜனநாயகம் என்றால் என்ன’ என்ற தத்துவக் கேள்வியை எழுப்பியிருக்கிறார்கள் உங்கள் சகோதர இயக்குநர்கள்.

”பல லட்சம் சம்பாதிக்கும் எனக்கும் ஒரு ஓட்டு, நூறு ரூபாய் சம்பளம் வாங்கும் லைட்மேனுக்கும் ஒரு ஓட்டா?” என்பதுதான் உங்கள் உண்மையான உள்ளக் குமுறல்.

இதை வெளிப்படையாகக் கேட்க வேண்டியதுதானே! ”படைப்பாளி – கலை – எதார்த்தம்” என்று எதற்க்காக குப்பையைக் கிளற வேண்டும்? நீங்கள் குப்பையைக் கிளற ஆரம்பித்து விட்டதனால் நாங்களும் மூக்கைப் பிடித்துக்கொண்டு அந்த குப்பைத் தொட்டிக்குள் குதிக்க வேண்டியிருக்கிறது.

படைப்பாளியா வியாபாரியா?

கலைத் தாய், கலைச் சேவை போன்ற 40 வருடங்களுக்கு முந்தைய வசனங்களையெல்லாம் எடுத்து விடுகிறீர்களே, எந்தத் தேதியிலிருந்து நீங்கள் படைப்பாளிகள் ஆனீர்கள்? ஆபாசக் காட்சிகளையும், கதைக்கு சம்பந்தமில்லாத காட்சிகளையும் பற்றிக் கேட்டால் இது ‘வியாபார சமரசம்’ என்று கூறும் உங்கள் சகோதரர்கள் திடீரெனப் படைப்பாளிகளாக மாறிய மாயம் என்ன?

”சோப்பு வியாபாரி சோப்பு விற்கிறான்; நான் சினிமா விற்கிறேன்” என்று ஒருமுறை சொன்னார் மணிரத்தினம். வியாபாரி என்ற சொல்லுக்குப் பன்மை- வியாபாரிகள். தனியாளாக இருந்தால் வியாபாரி;கூட்டமாய்ச் சேர்ந்தால் படைப்பாளிகளா? அதெப்படி?

‘தனியாக இருந்தால் தென்னங் குச்சி –சேர்த்துக் கட்டினால் விளக்குமாறு’ என்பது போலவா?

ரொம்பவும் தரக் குறைவாக எழுதுகிறோம் என்று வருந்த வேண்டாம்.நாங்கள் தலைகீழாய் நின்றாலும் உங்கள் படைப்பாளிகள் எடுக்கும் படங்களை விடத் தரம் தாழ்ந்து போக முடியாவே முடியாது.

ராமன் –அப்துல்லா படப்பிடிப்பில் நடந்த பிரச்சினை என்ன? வசனம் இல்லாத பாத்திரங்களில் துணை நடிகர்களைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பது நீங்கள் அனைவரும் ஏற்றுக்கொண்ட விதி. அதைக் கடைப்பிடிக்கச் சொல்லி கேட்பதில் என்ன தவறு?

கவர்ச்சிக்கு பம்பாய்! கலைக்கு கிராமத்து ஆள்!!

‘கிழக்குச் சீமையிலே’ திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் கிராமத்து ஆட்கள் கட்டிப் புரண்டு சண்டை போடும் காட்சி யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரிஜினல் கிராமத்து ஆட்களை, ஒரிஜினல் வயலில், ஒரிஜினலாக கட்டிப் புரண்டு சண்டைபோட வைத்து படமெடுத்ததாகவும் ‘அந்தக் காட்சியில் சண்டை நடிகர்களாகிய எங்களை ஏன் பயன்படுத்தவில்லை?’ என்று தொழிலாளர்கள் சண்டைக்கு வந்ததாகவும் கூறியிருக்கிறீர்கள்.

இதுபோன்று படைப்பாளிகளான இயக்குநர்கள் பல பேர், பல சந்தர்ப்பங்களில் தொழிற்சங்கத்தால் துன்புறுத்தப்பட்டிருப்பதாகவும் கூறியிருக்கிறீர்கள்.

சினிமா என்கிற உன்னதமான கலையை வாழ வைப்பதற்காக  எத்தனை இன்னல்களையும், அவமானங்களையும் நீங்கள் மெளனமாக சகித்துக் கொண்டு வந்திருக்கிறீர்கள் என்ற உண்மை இப்பொழுதல்லவா தெரிய வருகிறது!

அட உத்தமபுத்திரர்களே! கிளைமேக்ஸ் சண்டையில் கட்டிப் புரள ஸ்டண்டு நடிகர்களைச் சேர்த்தால் யதார்த்தம் கெட்டு விடும். ஆனால் படம் முழுவதும் கதாநாயகனுடன் கட்டிப் புரள கதாநாயகி மட்டும் பம்பாயில் இருந்து வரவேண்டுமோ? ஏன் அதற்கு அல்லி நகரம், ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டியில் ஒரிஜினல் முத்துப்பேச்சிகள் யாரும் கிடைக்கவில்லையா?

நக்மா நாத்து நட்டதையும், குஷ்பூ கரகாட்டம் ஆடியதையும், பால்காரன் பவர் ஷூ போட்டுக்கொண்டு  பால் கறப்பதையும், விவசாயி ஜீன்ஸ் அணிந்து வருவதையும், அவ்வளவு ஏன்…. அகத்தியரே ஹவாய் செருப்பு போட்டு நடந்ததையும் காசு கொடுத்துப் பார்த்துச் சகித்துக் கொண்டிருப்பவர்கள் நாங்கள்.

தாத்தாவும் பேத்தியும் டூயட் பாடலாம்; புகைக்குப் பின்னால் ஆடும் பெண்கள் மட்டும் பருவக் குமரிகளாக இருக்க வேண்டுமோ? டோப்பா தலையர்கள் கல்லூரி மாணவனாக நடிக்கலாம்; அவனைச் சுற்றி வரும் துணை நடிகர்கள் கூட்டம் மட்டும் கட்டிளங் காளைகளாக இருக்க வேண்டுமோ?

தங்கள் வயிற்றுப்பாட்டுக்கு இந்தத் தொழிலையே நம்பியிருக்கும் துணை நடிகர்களும் தொழிலாளிகளும் இதைக் கேட்கக் கூடாதா? அவர்கள் கதையை மாற்றச் சொன்னார்களா, காட்சிகளை திருத்தச் சொன்னார்களா? ”இருக்கின்ற வேலை வாய்ப்பையும் பறித்து வயிற்றில் அடிக்காதே” என்கிறார்கள். இதில் என்ன குற்றம்?

படைப்புக்காக உயிர் கொடுத்த படைப்பாளி யார்?

பாலு மகேந்திராவின் ‘மறுபடியும்’ திரைப்படத்தில் ஒரு காட்சி வருகிறது. பாடல் காட்சியை ஆபாச நடனமாக மாற்ற முடியாது என்று மறுத்து விநியோகஸ்தர்களுடன் கட்டிப் புரளுவார் இயக்குநராக நடிக்கும் நிழல்கள் ரவி.

பாரதிராஜா அவர்களே, உங்கள் படைப்பாளிகள் கூட்டமைப்பில் இப்படி படைப்புக்காகப் போராடி உயிர் நீத்த இயக்குநர்கள் எத்தனை பேர்? தியாகிகள் பட்டியலைக் கொஞ்சம் வெளியிடுவீர்களா?

நாங்கள் வெளியிடுகிறோம். உங்கள் மயிர்க் கூச்செறியும்,பயங்கரமான சண்டைக் காட்சிகளில் அடிபட்டு எலும்பு நொறுங்கிய சண்டை நடிகர்கள், கேட்பாரின்றி இறந்துபோன சண்டை நடிகர்கள், எலக்ட்ரிசியன்கள், லைட்மேன்கள் போன்ற சாதாரண தொழிலாளிகளின் பட்டியலை நாங்கள் வெளியிடுகிறோம்.

உங்கள் பணப்பெட்டியை நிரப்புவதற்காகச் சவப்பெட்டிக்குள் போனவர்கள் ”படைப்புத் தொழிலுக்கு எந்த விதத்திலும் சம்பந்தமில்லாதவர்களா?”

பணத்துக்குத் தலைவணங்கும் படைப்பாளிகள்!

சன் டி.வி.யில் பாலு மகேந்திரா கொடுத்த ‘உருக்கமான’ பேட்டியை நீங்கள் பார்க்கத் தவறியிருக்க மாட்டீர்கள். தான் எடுத்த படங்களில் இரண்டைத் தவிர மற்றவைகளிலெல்லாம் பல சமரசங்கள் செய்து கொண்டதை அவர் நாணயமாக ஒப்புக் கொண்டார். யாருடன் சமரசம் செய்து கொண்டார்? ஃபெப்சியுடனா, அல்லது தயாரிப்பாளருடனா?

படைப்பாளியின் உரிமையில் தொழிலாளி தலையிடுவதை எதிர்த்து இப்போது போராடுகிறீர்களே, தயாரிப்பாளரும் விநியோகஸ்தரும் தலையிட்டதை எதிர்த்து எப்போதாவது நீங்கள் போராடியதுண்டா?

பணத்துக்குத் தலை வணங்குவதில் உங்களுக்குக் கூச்சமில்லை; உழைப்புக்குத் தலை வணங்குவதுதான் அவமானமாக இருக்கிறது போலும்! அடடா… எப்பேர்ப்பட்ட சுயமரியாதை!

காசுக்காகத் தன்னை விற்றுக் கொள்ளும் பெண்ணை ‘விபச்சாரி’ என்று சமூகம் அழைக்கிறது. அதுவே, ஆணாய் இருந்தால் அவனை என்ன சொல்லி அழைப்பது என்று கேட்டார் பெரியார். ‘படைப்பாளி’களே பதில் சொல்லுங்கள்!

தொப்புளில் ஆம்லெட் போடச் சொன்னவன் தொழிலாளியா?

தமிழ் ரசிகர்களுக்கு கிராமங்களை அறிமுகப்படுத்தியது மட்டுமல்ல, தமிழ்க் கதாநாயகிகளுக்கு டூ பீஸ் நீச்சல் உடையை அறிமுகம் செய்ததும் பாரதிராஜாதான் என்கிறார்கள். ‘டிக் டிக் டிக்’ திரைப்படத்தின் கதாநாயகிகளுக்கு நீச்சல் உடை தவிர வேறெதுவும் தைத்துத் தர மாட்டோம் என்று கட்டாயப்படுத்தியவர்கள் யார், தையற் கலைஞர்களா?

கதாநாயகிகளின் தொப்புளில் ஆம்லெட் போடுவது போன்ற கற்பனை செய்ய முடியாத காட்சிகளை உருவாக்கியிருக்கிறார்களே, உங்கள் படைப்பாளி சகோதரர்கள், அத்தகைய காட்சிகளை திணித்தவர்கள் யார், சமையல் கலைஞர்களா?

என்ன இருந்தாலும் உங்கள் துணிச்சலைக் கண்டால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. கொல்லன் தெருவில் ஊசி விற்பதென்றால் சும்மாவா?

ஹீரோவுக்குத் தகுந்த மாதிரி கதை தயார் செய்து, கதாநாயகிக்கும், பிற நடிகர்களுக்கும் அவர்களுக்கு ஏற்ற மாதிரி கதை சொல்லி, படப்பிடிப்பின் போது ரிலீசாகும் வேறு படங்களைப் பார்த்து அதற்கேற்ப கதையைத் திருத்தி, கடைசியில் விநியோகஸ்தரின் ஆசைக்கேற்ப சில காட்சிகளை சேர்த்து / நீக்கி ஒருவழியாக நீங்கள் தயார் செய்யும் படத்தைப் ‘படைப்பு’ என்கிறீர்கள்.

படைப்பாளியா, அழிப்பாளியா?

சன்  டிவியில் உங்கள் பேட்டியைப் பார்த்தோம். சத்தமே வராமல் ஏதோ கையைக் காட்டிக் கொண்டிருந்தீர்கள். சரி. ஊமை நியூஸ் போலிருக்கிறது என்று நினைத்தோம். ”விஷூவலாகவே திங்க் பண்ணிப் பழகியவர் பாரதிராஜா” என்ற உண்மை அப்புறம்தான் எங்கள் மண்டையில் உறைத்தது.

சிந்திப்பதை வார்த்தைகளில் சொல்வதற்கே இவ்வளவு கஷ்டப்படுகிறீர்களே, அதைப் புரிந்து கொண்டு அதற்குச் செயல்வடிவம் கொடுப்பதென்ன அத்தனை சுலபமா?

‘சந்தையில் ஹீரோ அறிமுகம்’ என்று ஒரு சீட்டில் உங்கள் இயக்குநர்கள் எழுதிக் கொடுத்தவுடனே டீக்கடை, மளிகைக் கடை ஜவுளிக் கடை, கசாப்புக் கடை, பழ வண்டி, ஐஸ் வண்டி முதல் வில்லன் விழுந்து உடைப்பதற்க்குப் பூசணிக்காய், பானை, கட்டைவண்டி, சர்பத் கடை அனைத்தையும் தயார் செய்து வைப்பவர்களும், எதன்மீது எப்படி உருண்டு விழுவது என்று விழுந்து பார்த்து ரெடியாக இருக்கும் சண்டை நடிகர்களும், லைட்மேன்களும் இன்ன பிற தொழிலாளிகளும் உங்கள் படைப்புக்கு எள்ளளவும் சம்பந்தமில்லாதவர்கள்! நீங்கள்தான் படைப்பாளிகள்!

எல்.ஐ.சி. கட்டிடத்தைக் காகிதத்தில் வரைந்து காட்டுபவன் படைப்பாளி. 14வது மாடியில் கயிற்றில் தொங்கிக்கொண்டு சுண்ணாம்பு அடிப்பவன் படைப்புக்குச் சம்மந்தமில்லாதவன்- அப்படித்தானே!

ஒவ்வொரு காட்சி அமைப்பிலும் ‘அழிப்பது எப்படி’ என்பதை நட்சத்திர ஓட்டல்களில் ரூம் போட்டு டிஸ்கஷன் நடத்தும் இயக்குநர்கள் படைப்பாளிகள் என்று சொன்னால் சிரிக்கத்தான் தோன்றுகிறது. பூவாலே சாலை போட்டு அதன்மீது நடந்து சென்ற புரட்சித் தலைவி, இத்தகைய வக்கிரங்களை எல்லாம் தமிழ் சினிமாவைத் தவிர வேறு எதிலிருந்து கற்றுக் கொண்டிருக்க முடியும்?

உரிமைக் குரலெல்லாம் உழைப்பாளியை எதிர்த்துத்தான்!

படைப்பு உரிமைக்காக சங்கம் கட்டிக் குரல் கொடுக்கும் படைப்பாளிகளே! அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட, யோக்கியமான திரைப்படங்கள் பலவற்றில் ஒன்றையாவது ஆதரித்து உங்களில் ஒரு படைப்பாளியாவது குரல் கொடுத்ததுண்டா?

தொழிலாளியின் வயிற்றில் அடிப்பதற்காக உரிமைக் குரல் எழுப்புகிறீர்களே, உங்கள் படைப்பாளி மணிரத்தினம் ‘பம்பாய்’ படத்திற்காக தாக்கரேயின் காலில் விழுந்தாரே, அப்பொழுது உங்களுக்கெல்லாம் தொண்டை அடைத்துக் கொண்டதா?

எச்சரிக்கை தமிழர்கள் வருகிறார்கள்!   

உங்கள் கருங்காலித் தனத்திற்குத் தமிழ் முகமூடி வேறு. முப்பந்தைந்து ஆண்டுகளாக திராவிட இயக்கங்கள் மென்று துப்பிய தமிழை இப்பொழுது நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். படத்தின் பெயர் ஆங்கிலத்தில், கதாநாயகியோ இந்தி, பாட்டு கதம்ப மொழி, பணம் கொடுப்பவன் சேட்டு – நீங்கள் தமிழ்ப் படைப்பாளிகள்!

ஹெலிகாப்டரிலிருந்து தேசியக் கொடியை பறக்க விடுவதற்காகவே சிவப்பு, வெள்ளை, பச்சையில் சேலை கட்டி மூன்று தமிழச்சிகளை உட்கார வைத்து அவர்களது சேலையை உருவி பறக்க விட்ட உங்கள் இயக்குநர்கள் தமிழ் படைப்பாளிகள்!

சின்னக் கவுண்டர், பெரிய கவுண்டர், கவுண்டர் பொண்ணா கொக்கா, தேவர் மகன், பசும்பொன், மண்வாசனை…… என்று படமெடுத்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிராகச் சாதி வெறியைத் தூண்டி விட்டவர்களும், ‘வானமே எல்லை’ படத்தில் இட ஒதுக்கீட்டிற்கு எதிராகக் குரலெழுப்பிய பாலசந்தரும், குஞ்சுமோனும், ஆர்.பி.சவுத்தியும்,மார்வாடிகளும், சேட்டுகளும்…நீங்கள் எல்லோரும் ‘தமிழ்’ படைப்பாளிகள்!

சாதி, மதம், இனம் கடந்து வர்க்க ரீதியாக ஒன்றுபட்டிருக்கும் நீங்கள், தொழிலாளிகளின் வர்க்க ஒற்றுமையைக் கண்டு வயிறெரிகிறீர்கள். சினிமா சென்டிமெண்டால் அடிக்கப் பார்க்கிறீர்கள்.

”பத்து வருஷமா எங்கிட்ட வேல பார்த்த பையனே என்ன மோசமா பேசிட்டான்” என்று கண் கலங்குகிறீர்கள்.

”தொழிலாளிகளின் வீட்டுப் பிள்ளைகளுக்குப் பள்ளிக்கூடத்திற்கு நாங்கள் பணம் கட்டுகிறோம்” என்கிறார்கள் சில இயக்குநர்கள். பத்து வருஷமென்ன, முப்பது வருடமாக இந்தத் துறையில் குப்பை கொட்டிவரும் தொழிலாளிகள் இன்னும் தொழிலாளிகளாகத்தான் இருக்கிறார்கள்.”இதுதான் ஸ்டூடியோ” என்று உங்களை உள்ளே அழைத்துச் சென்று காட்டிய தொழிலாளிகள் இன்னும் சைக்கிளில்தான் வருகிறார்கள். கார்,பங்களா, செல்ஃபோன் போன்ற வசதிகள் அவர்களுக்கு வாய்க்கப் பெறவில்லை.

வெற்றிப் படமோ, வெள்ளி விழாவோ அவர்களுக்கு நீங்கள் கொடுப்பது நிச்சயிக்கப்பட்ட கூலிதான். இன்று கண்ணீர் வடிப்பவர்கள் அன்று லாபத்தைப் பகிர்ந்து கொண்டீர்களா என்ன? மாதத்தில் பாதி நாள் வேலை இல்லாமல் கிடக்கும் தொழிலாளி எப்படி சாப்பிடுவான் என்பதை அப்பொழுது சிந்தித்திருக்கிறீர்களா? இப்போது சிந்திப்பதில் வியப்பில்லை.

போராட்டம் நடக்கும் பொழுதுதான் தொழிலாளிகளின் மீது முதலாளிகளுக்குக் கரிசனம் அதிகமாகும். நீங்கள் வள்ளல்களாக இருக்க விரும்புகிறீர்கள்; ஆனால் தொழிலாளிகள் அடிமைகளாக நீடிக்கத் தயாராக இல்லையே- என்ன செய்வது?

வாலாட்டுகின்றன பத்திரிகைகள்!

ஆனால் பத்திரிகைகள் உங்களுக்குத்தான் வாலாட்டுகின்றன. மனோரமா திரையரங்கில் தாக்கப்பட்ட தொழிலாளர்களை யாரும் படமெடுக்கவில்லை. மறியல் செய்த உங்களைப் படமெடுக்கிறார்கள். பேட்டி எடுக்கிறார்கள். ”பாத்திரம் கழுவுகிறவனுக்கு இயக்குநர் அடிமையா” என்று கொதிக்கிறார்கள்.

”படப்பிடிப்பு தொடங்கியது” என்று கொட்டை எழுத்தில் போடுகிறார்கள். அடுத்த நாள் தொடர்ந்ததா என்று போடுவதில்லை. 30,000 பேர் படைப்பாளிகள் சங்கத்தில் சேர்ந்ததாகப் போடுகிறார்கள். சேர்ந்தவர்கள் தொழிலாளிகளா, ரசிகர்களா என்று போடுவதில்லை.

சினிமா முதலாளிகளும், பத்திரிகை முதலாளிகளும் தொழில் கூட்டாளிகளல்லவா? நட்சத்திர ஓட்டல்களில் தின்றதற்கும் குடித்ததற்கும் வாங்கின ‘கவர்’களுக்கும் விசுவாசமாக ‘கவரேஜ் கொடுக்க வேண்டாமா, அதுதான் வாலாட்டுகிறார்கள்.

அரசாங்கமும் உங்கள் பக்கம். இதுவும்கூடத் தொழில் கூட்டுதான். அரசியல்வாதிகள் எல்லாம் அயோக்கியர்கள் என்று படமெடுப்பீர்கள். ஊரறிந்த அயோக்கியனின் காலில் விழுவீர்கள்.

ஜெயலலிதாவின் ஆட்சியில் தமிழ் மக்கள் சூறையாடப்பட்டபோது, வேட்டையாடப்பட்டபோது, பத்திரிகைகள் தாக்கப்பட்டபோது, ‘தமிழ்’ படைப்பாளிகளே நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? பூனையைப் போல ஜெயலலிதாவின் காலடியில் சுருண்டு கிடந்தீர்கள்.

இப்போது கலைஞர் ஆட்சி. எந்த ஆட்சியானாலும் உங்கள் ஆட்சிதான். கலைஞர் பகிரங்கமாக உங்கள் பக்கம் நிற்கிறார். ”காமம் கலையாகுமென்றால் களவும்கூடக் கலைதான்” என்று மந்திரிகுமாரியில் வசனம் எழுதியவர் உங்கள் பக்கம் நிற்பதும் பொருத்தம்தான்.

படைப்பாளிகள் கூட்டமைப்புக்கு போலீசு காவல், படைப்பாளிகள் வீட்டுக்கு போலீசு காவல், படப்பிடிப்புக்கு போலீசு காவல், காமராவை எடுத்துச் செல்ல போலீசு காவல்…. அடேயப்பா! போலீஸ்காரர்களுக்கு மட்டும் லைட் மேன் வேலை பார்க்கத் தெரிந்திருந்தால் உங்கள் பாடு கொண்டாட்டம்தான்.

‘கம்யூனிஸ்டு’களின் ஆதரவு பெற்ற பாரதிராஜா – தொழிலாளியே!

வலது, இடது கம்யூனிஸ்டு கட்சிகளும்கூட உங்கள் பக்கம்தான். ”நாங்கள் முதலாளிகளாக இருந்தால் கம்யூனிஸ்டுகள் எங்களை ஆதரிப்பார்களா? என்று ஒரு கேள்வியை தினமணிக் கதிர் பேட்டியில் எழுப்பியிருக்கிறீர்கள்.

என்ன அற்புதமான கேள்வி! தொழிலாளிகளை ஆதரிப்பவர்கள் கம்யூனிஸ்டுகள் என்றுதான் இதுவரை நாங்கள் அறிந்திருக்கிறோம். கம்யூனிஸ்டுகளால் ஆதரிக்கப்படுபவர்கள்தான் தொழிலாளிகள் என்று புதியதொரு கோணத்தைக் காட்டியிருக்கிறீர்கள்.

”எங்கள் சங்கம் வேலை நிறுத்தமே செய்யாது” என்று அடுத்த வரியிலேயே கொள்கைப் பிரகடனம் செய்து உங்களை ஆதரிக்கும் போலி கம்யூனிஸ்டுகளின் முகத்திரையை நீங்களே கிழித்து விட்டீர்கள்.

விற்பதற்கு உழைப்பைத் தவிர வேறு உடைமையில்லாத தொழிலாளி, தன் உழைப்பை விற்க மறுப்பதற்குப் பெயர்தான் வேலை நிறுத்தம். உங்கள் சங்கம் வேலை நிறுத்தம் செய்ய முடியாது என்பதும் உண்மைதான். முதலாளிகள் கதவடைப்புதானே செய்ய முடியும்!

பண்பாட்டைச் சீரழிக்கும் நச்சுக் கிருமிகள்!

அரசும், போலீசும், பத்திரிகைகளும், கட்சிகளும் உங்கள் பக்கம் என்று இறுமாந்து இருக்கிறீர்கள். இவர்களைப் பற்றிய மூடநம்பிக்கைகளைத் தொழிலாளர்கள் உதிர்த்து வருகிறார்கள் என்பதற்காக நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

மக்கள் உங்கள் பக்கம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். இல்லை. மனோரமா திரையரங்கில் நீங்கள் அடிபட்டு விட்டது போல பொய்ச் செய்தி பரப்பினீர்களே, அதைக்கேட்டு மக்கள் யாரும் மனம் பதறவில்லை; மாறாக மகிழ்ச்சியடைந்தார்கள்.

எவ்வளவுதான் சினிமா போதையில் நீங்கள் மக்களை ஆழ்த்தியிருந்தாலும் லட்சாதிபதிகளுக்காகவும்,கோடீசுவரர்களுக்காகவும் கண்ணீர் விடும் அளவுக்குத் தமிழகம் இன்னும் தாழ்ந்து போகவில்லை; அதற்கு நாங்கள் அனுமதிக்கவும் மாட்டோம்.

அரசியல், சமூகம், பண்பாடு ஆகிய அனைத்துத் துறைகளிலும் தமிழகத்தைச் சீர்குலைத்திருக்கிறீர்கள். படைப்பாளிகள் என்ற முறையில் நீங்கள் படைத்தவை ஏதாவது உண்டென்றால் அவை பண்பாட்டைச் சீரழிக்கும் நச்சுக் கிருமிகள்தான். தமிழகத்தின் பண்பாட்டுச் சூழலை மாசுபடுத்தியதற்கு நீங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்.

காற்றையும், நீரையும், சுற்றுச்சூழலையும் மாசுபடுத்தும் ஆலைகளுக்கெதிராக ஆங்காங்கே மக்கள் போராடுகிறார்கள். நீதிமன்றங்கள் ஆலைகளை மூடுகின்றன.

டெல்லியில் ஆலைகள் மூடப்பட்டதால் 3 லட்சம் தொழிலாளர்கள் தெருவில் நிற்கிறார்கள். கோவையில் விஸ்கோஸ் ஆலை மூடப்பட்டதால் பல்லாயிரம் பேர் வேலையிழந்திருக்கிறார்கள். ஆனால் பண்பாட்டை மாசுபடுத்தும் உங்கள் கனவுத் தொழிற்சாலைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தொழிலாளர்கள் தடை விதித்திருக்கிறார்கள்.

பண்பாட்டை மாசுபடுத்தும் நச்சுக் கிருமிகளுக்கெதிராக நாங்கள் வெளியிலிருந்து போராடுகிறோம். ‘உள்ளிருந்தே போராடுங்கள்’ என்று தொழிலாளர்களுக்கு அறைகூவல் விடுகிறோம்.

”படைப்பாளிகளின் விசயத்தில் தொழிலாளி தலையிடவே கூடாது” என்று நீங்கள் கூச்சலிடுகிறீர்கள். ”மேலும் தலையிடுங்கள்” என்று நாங்கள் கோருகிறோம்.

”உங்கள் பிழைப்புக்காக மட்டுமல்ல, தமிழ் மக்களின் நலனுக்காகவும் தலையிடுங்கள்” என்கிறோம்.

”ஆபாசக் காட்சிகளுக்குப் பணியாற்ற மாட்டோம்;. ஆங்கிலப் பெயர் வைத்த படங்களுக்குப் பணியாற்றமாட்டோம்; சாதி வெறியைத் தூண்டும் படங்களுக்குப் பணியாற்ற மாட்டோம்” என்று தொழிலாளர்கள் குரல்கொடுக்க வேண்டுமெனக் கோருகிறோம்.

பேசட்டும். இதுவரை வசனம் தரப்படாதவர்களெல்லாம் பேசட்டும். தொழிலாளர்கள் பேசட்டும். லைட்மேன்களும், ஓட்டுனர்களும், தையல்காரர்களும், சண்டை நடிகர்களும், துணை நடிகர்களும் இன்ன பிறரும் பேசட்டும்.

”எங்கள் படைப்புரிமையில் தொழிலாளர்கள் தலையிடுகிறார்கள்” என்று நீங்கள் கூவுவீர்கள். தெருவுக்கு வருவீர்கள்.

அப்போது மந்திரி வந்தாலும் வராவிட்டாலும் மக்கள் வருவார்கள்.

படைப்பு எது, படைப்பாளிகள் யார், படைப்பாளிகளின் உரிமை என்ன என்ற கேள்விகளுக்கான விடை வீதியில் அளிக்கப்படும்.

***********************************************************

–    “திரைப்படத் தொழிலாளர் போராட்டத்தை ஆதரிப்போம்”

–    1997ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ம.க.இ.கவின் சிறு வெளியீடு.

  1. இமயமும் சிகரங்களும் மக்களுக்கு,ஏன்? திரைப்படத் தொழிலாளிக்குக்கூட பயன்பட்டதாக வரலாறே கிடையதே? இமயத்தையும் சிகரத்தையும் உடைக்காமல் பயன்பெறமுடியாதே!

  2. பாரதிராஜாவின் கோபத்திற்குக் காரணம் கலைஞர்களான துணை நடிகர்களின் தலையீடே தவிர தொழிலாளர்களின் கோரிக்கைகளால் அல்ல எனத் தோன்றுகிறது. முன்னணியில் உள்ள கலைஞர்களோ, பிற தயாரிப்பாளர்களோ பாரதிராஜாவின் இயககத்தில் தலையிட்டாலும் இதே கோபம்தான் அவருக்கு வந்திருக்கும்.

    மற்றபடி, திரைப் படத்துறையை நம்பியிருக்கும் வறுமை நிலையிலுள்ள கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் கடமை படைப்பாளிகளுக்கு உள்ளது. படைப்பாளிகளின் உள்ளத்திலுள்ள கனவுலகை உழைப்பால் உருவாக்கும் தொழிலாளர்களின் நியாயமான ஊதிய உரிமையை மறுக்கும் உரிமை படைப்பாளிகளுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இல்லை.

      • // ‘கிழக்குச் சீமையிலே’ திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் கிராமத்து ஆட்கள் கட்டிப் புரண்டு சண்டை போடும் காட்சி யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரிஜினல் கிராமத்து ஆட்களை, ஒரிஜினல் வயலில், ஒரிஜினலாக கட்டிப் புரண்டு சண்டைபோட வைத்து படமெடுத்ததாகவும் ‘அந்தக் காட்சியில் சண்டை நடிகர்களாகிய எங்களை ஏன் பயன்படுத்தவில்லை?’ என்று தொழிலாளர்கள் சண்டைக்கு வந்ததாகவும் கூறியிருக்கிறீர்கள். //

        தலையீடு இல்லை சண்டை. சண்டைக்கு வந்தவர்கள் தொழிலாளர்களா இல்லை சண்டை நடிகர்களா என்பது தெரியவில்லை.

  3. சிந்தனைக்கு இது வரை எட்டாத பல கோணங்களில் தொழிலாளர் முதலாளி பிரச்னையை முன்வைக்கும் கட்டுரை.உழைப்பை சுரண்டும் மொள்ளமாறி தனத்திற்கு படைப்பாளி என்று பெயர் வைத்துக்கொண்டு நம்மையும் செண்டிமெண்டு வைத்து துணைக்கு அழைக்கும் அயோக்யத்தனம்.மொழியுணர்வையும் நடிப்பாற்றலையும் அனுதாபத்தையும் தூண்டிலாக வைத்து நம்மை தூண்டுகிறார்கள் சதை வியாபாரிகள்.திரையரங்கத்திற்கு நம்மை வரவழைக்கும் மசாலாக்களை அறிந்து விழித்தவன் புரிந்துக்கொள்வான்.

  4. நடிகனுக்கு கட்டவுட், பாலாபிஷேகம், விசேஷப்பிரார்த்தனைகள் செய்யும் ரசிகர்கள் திருந்தினால் ஒழிய – இமய, சிகர சிகாமணிகள் திருந்தினாலும் – இதை நிவர்த்திப்பது சிரமம்

  5. பதினைந்து ஆண்டுகள் ஆனாலும் அன்றைய நிலைமை மட்டும் இன்னும் மாறவில்லை!!

  6. நீண்ட நாட்களுக்குப் பின்.. மிகச் சிறந்த, உன்னதமான கட்டுரை ஒன்றைப் படித்த திருப்தி ஏற்பட்டது. நன்றி.

  7. சினிமாவில் நடக்கும் சுரண்டலை வெளிப்படுத்துகிறது இந்த கட்டுரை.

  8. unfortunately in this country, camera has become a focal point for insensibly attracting people. they forget in that bright light the pains and agonies of the black skins that are working behind it. the mask of that bright light can no longer hold people in darkness. film industry is neither a creative medium, nor has responsible people thinking for the people and art. its no more better than the brothal houses, which offer momentous pleasure just for a few hours. of course, here there are pretentions of sentiment and social concern. a few persons with social commitment are also sidelined and backlocked by this general comertial trend. those few directers(if any) and those artists with social concern and respect for the fello people and labourers must unite with the struggling labourers.

  9. நடிகன் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குறான், தொழிலாளிக்கு சம்பளம் மிகச் சொற்பம். இதெல்லாம் ஒரு பிரச்சினையா, எத்தனையோ எளிய வழியேயில் இதைத் தீர்க்கலாம். பேசாமல் அந்தத் தொழிலாளிகளையே மெயின் ரோலில் நடிக்கச் சொல்லி படத்தை முடித்து விடுங்களேன்? அந்த கோடிக் கணக்கான பணத்தை நீங்களே எடுத்துக் கொள்ளலாமே?

  10. \\படம் முழுவதும் கதாநாயகனுடன் கட்டிப் புரள கதாநாயகி மட்டும் பம்பாயில் இருந்து வரவேண்டுமோ? ஏன் அதற்கு அல்லி நகரம், ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டியில் ஒரிஜினல் முத்துப்பேச்சிகள் யாரும் கிடைக்கவில்லையா?\\ வினவு அவர்களே இவங்களை வைத்து படம் எடுக்க டைரக்டர்கள் தயார், பணத்தை முதலீடு செய்ய நீர் தயாரா?

  11. \\தங்கள் வயிற்றுப்பாட்டுக்கு இந்தத் தொழிலையே நம்பியிருக்கும் துணை நடிகர்களும் தொழிலாளிகளும் இதைக் கேட்கக் கூடாதா?\\ உம்மை யார் இதையே நம்பியிருக்கச் சொன்னது? கிராமங்களில் விவசாயம் செய்ய ஆட்களே இல்லை என்று புலம்புகிறார்கள், அங்கே போய் வேலை செய்யலாமே?

  12. \\தொப்புளில் ஆம்லெட் போடச் சொன்னவன் தொழிலாளியா?\\ ஆனால் அதற்க்கு விளக்கு புடித்தவன் [ஆங்கிலத்தில் லைட் மேன் வேலை பார்த்தவன்] தொழிலாளி. அது மோசம் என்றால் விளக்கு புடிக்க மாட்டேன் என்று விலக வேண்டியதுதானே?

  13. \\தாத்தாவும் பேத்தியும் டூயட் பாடலாம்; டோப்பா தலையர்கள் கல்லூரி மாணவனாக நடிக்கலாம்; நக்மா நாத்து நட்டதையும், குஷ்பூ கரகாட்டம் ஆடியதையும்….\\ சினிமா ஒரு பொழுது போக்கு. எப்படி எடுக்க வேண்டுமென்பதை நூற்றுக் கணக்கான கோடிகளில் முதலீடு போடுபவன் தான் தீர்மானிக்க வேண்டும். எதை மக்களுக்கு காண்பிக்க தகுதியுடையது என்பதைத் தீர்மானிக்கத்தான் சென்சார் போர்டு உள்ளது. அதைத் தான் செய்ய வேண்டும், இதைத்தான் செய்ய வேண்டும் என்று சட்டம் போட நடுவில் நீர் என்ன சட்டாம்பிள்ளையா?? நீர் பணத்தை போட்டு உமது இஷ்டத்துக்கு பிடித்ததை எடும், அப்போது நடிகனுக்கு ஆயிரங்களிலும் தொழிலாளிக்கு கோடிகளிலும் நீர் தாராளமாகக் கொடுக்கலாம். யார் தடுத்தது?

  14. \\”தொழிலாளிகளின் வீட்டுப் பிள்ளைகளுக்குப் பள்ளிக்கூடத்திற்கு நாங்கள் பணம் கட்டுகிறோம்” என்கிறார்கள் சில இயக்குநர்கள். \\ கல்வி தருவது நீங்கள் தேர்ந்தெடுத்த அரசு செய்ய வேண்டிய வேலை. சினிமா டைரக்டர் வேலையல்ல.

  15. \\வெற்றிப் படமோ, வெள்ளி விழாவோ அவர்களுக்கு நீங்கள் கொடுப்பது நிச்சயிக்கப்பட்ட கூலிதான்.\\ நீங்கள் ஒன்றும் கொத்தடிமைகள் இல்லை. சம்பளம் போதவில்லை என்றால் வேலையை உதறித் தள்ளிவிட்டு வேறு வேலைக்குச் செல்லலாம். நூறு கோடி முதலீடு செய்த பின்னர் படம் ஊத்திக் கொண்டால் நஷ்டத்தை தொழிலாளிகளா கொடுக்கிறார்கள்? அதை முதலாளி தானே தாங்கிக் கொள்கிறான்? லாபம் வந்தால் மட்டும் உங்களிடம் கொடுத்துவிட்டு அவன் தலை மேல் துண்டை போட்டுக் கொண்டு போகவேண்டுமா?

    • // நூறு கோடி முதலீடு செய்த பின்னர் படம் ஊத்திக் கொண்டால் நஷ்டத்தை தொழிலாளிகளா கொடுக்கிறார்கள்? அதை முதலாளி தானே தாங்கிக் கொள்கிறான்? லாபம் வந்தால் மட்டும் உங்களிடம் கொடுத்துவிட்டு அவன் தலை மேல் துண்டை போட்டுக் கொண்டு போகவேண்டுமா? //

      தொழிலாளர்கள் அளித்த உழைப்பால்தான் ஊத்திக்கொண்டன என்று ஏதாவது ஒரு படத்தைக் கூறமுடியுமா?!

      படம் வெற்றியடைந்தால் தொழிலாளர்களின் உழைப்பும் அதில் பங்காற்றி இருக்கும்போது லாபத்தில் பங்கு என்று ஏதாவது அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறதா?!

  16. \\நாங்கள் வெளியிடுகிறோம். உங்கள் மயிர்க் கூச்செறியும்,பயங்கரமான சண்டைக் காட்சிகளில் அடிபட்டு எலும்பு நொறுங்கிய சண்டை நடிகர்கள், கேட்பாரின்றி இறந்துபோன சண்டை நடிகர்கள், எலக்ட்ரிசியன்கள், லைட்மேன்கள் போன்ற சாதாரண தொழிலாளிகளின் பட்டியலை நாங்கள் வெளியிடுகிறோம்.\\ இவ்வளவு கஷ்டம்னு தெரியும் தானே? வேறு தொழிலைப் பார்க்கலாமே? சினிமாத் தயாரிப்பாளர் என்ன நாட்டை ஆளும் வேலையையா செய்கிறார்? அவன் செய்வது தொழில், வியாபாரம், அதில் ஏதோ ஒரு வேலை வாய்ப்பு கொடுக்கிறான், அது சரியில்லை என்றால் நீர் உமது தொழிலை மாற்றிக் கொள்ள வேண்டும். வேறு தொழில் வேண்டுமென்றால் தேடு, அல்லது நீ தேர்ந்தடுத்த அரசாங்கத்திடம் போய் கேள்வி கேள். சும்மா இங்கேயே பிடித்து தொங்கிக் கொண்டிரு என்று யாரும் உம்மை வற்ப்புறுத்தவில்லை.

    • மேம்போக்காக பார்த்தால் உங்கள் கருத்து நியாயமாகவும் நீங்கள் ஒரு புத்திசாலியாகவும் தெரிகிறது. ஆனால் நீங்க வரிந்து எழுதியிருக்கும் ஒவ்வொரு வரிகளும் நீங்கள் ஒரு சுய நலவாதி, இரக்கம் அற்றவர் என்பதை பறைசாற்றுகிறது. ஒருவேளை உங்கள் பெயரில் ‘ஜெயா’ இருப்பதாலோ என்னவோ?

      • //மேம்போக்காக பார்த்தால் உங்கள் கருத்து நியாயமாகவும் நீங்கள் ஒரு புத்திசாலியாகவும் தெரிகிறது. //

        அவர வச்சு காமெடி பண்றீங்களா? மேம்போக்காவோ இல்ல —-போக்காவோ பாத்தாலும் ஒருநியாயமும் தெரியல.

        • கேட்ட கேள்விக்கு பதில் இருந்தா சொல்லணும்… அதை விட்டுட்டு அவரு புத்திசாலி, காமெடி பண்றாரு, சுயநலவாதின்னு கிண்டல் பண்ணிட்டு நழுவுறதே இங்கு சில பேருக்கு வழக்கமா இருக்கு…

    • //நீர் உமது தொழிலை மாற்றிக் கொள்ள வேண்டும். வேறு தொழில் வேண்டுமென்றால் தேடு, //
      இனிமே அரசு பணியாளர்கள் சம்பள உயர்வு கேட்டு போராட்டம் நடத்தினாலும் இதே தீர்வதான் சொல்லுவீங்களா?

      • அரசு பணியாளர்களை முதலில் வேலை செய்ய சொல்லுவோம்… பிறகு சம்பளத்தை பத்தி பேசலாம்…

  17. i feel some things are warranted like insurance,benefits and all but the big problem is in such a risky business,actors should work with a lower fixed and higher variable salary.That ll solve most of the problems.

    But per say,most things are not transparent in the industry.Rumors go that heroines act in films only for publicity and make most money from the flesh trade.well however.

  18. 15 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட உண்மைகள் இன்றும் பசுமையாக இருக்கின்றன.திரைக் கலைஞர்கள் மேலும் மேலும் சீரழிந்துகொண்டு போகிறார்கள்.முதலளி தொழிலாளி முரண்பாடு முற்றிக்கொண்டு தான் போகிறது.எல்லாவற்றிலும்போல திரைத் துரையையும் தொழிலாளிகளே மாற்றியமைப்பார்கள்.

  19. வாழ்க உலக மக்கள் அனைவரும்! வாழ்க ஈரேழு லோகங்களும்!!!

    “தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் பெயரை மாற்றமாட்டோம்: சரத்குமார்”

    நீங்க சொல்வது உங்கள் சம்பத்தப்பட்ட வகையில் மிகவும் சரியே. ஹி…ஹி..ஹி.. ஏன்னா திராவிடத்தையும் தாண்டி நீங்க பொது கலாசார முன்னேற்றத்தின் தலைவர் என்பது எங்களுக்கு தெரியாதா என்ன??? வாழ்க உலக மக்கள் அனைவரும்! வாழ்க ஈரேழு லோகங்களும்!!!

  20. “இயக்குநர் சங்கமே சம்பளத்தை நிர்ணயித்தது.”

    வரவேற்கத்தக்க முடிவு. முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

    ஹி….ஹி..ஹி ஆட்டுரவர்களுக்கு ஒன்னரை கோடி கொடுக்கும் போது ஆட்டுவிப்பவர்களுக்கு

    கொடுத்தால் தப்பில்லே. நல்ல கருத்துள்ள திரைப்படங்கள் வந்தால் சரி.

  21. பாஞ்சாலி பாத்திரத்தை காவியத்தில் சிருஷ்டிக்க முடியும்- கலியுகத்திலும் உருவாக்க சொன்னால் எப்படி?

    “தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் பெயரை மாற்றமாட்டோம்:–சரத்குமார்”

    பாஞ்சாலி பாத்திரத்தை காவியத்தில் சிருஷ்டிக்க முடியும்- கலியுகத்திலும் உருவாக்க சொன்னால் எப்படி? ஹி..ஹி..ஹி .. அவனவன் அவன் பொண்டாட்டி,புள்ளையுடன் குடும்பம் நடத்தும் முறையை விரும்பாதவர்கள் யாரேனும் இருக்க முடியாதே???

    c Link:
    http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Tamilnadu&artid=544550&SectionID=129&MainSectionID=1

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க