privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்ரீஜென்சி செராமிக்ஸ் தொழிற்சங்கச் செயலர் முரளிமோகன் அடித்துக் கொலை!

ரீஜென்சி செராமிக்ஸ் தொழிற்சங்கச் செயலர் முரளிமோகன் அடித்துக் கொலை!

-

ரீஜென்சி செராமிக்ஸ் தொழிற்சங்கச் செயலர் முரளிமோகன் அடித்துக் கொலை! பாண்டிச்சேரி – யேனம் போலீசாரின் கொலைவெறிச் செயல்!

தொழிலாளர் உரிமைக்காகப் போராடிய ரீஜென்சி செராமிக்ஸ் தொழிற்சங்கச் செயலரை விசாரணைக்காக அழைத்துச் சென்ற பாண்டிச்சேரி – யேனம் போலீசார் அடித்துக் கொன்று விட்டனர். இக்கொலையைக் கண்டித்து போரட்டம் நடத்திய தொழிலாளர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பலர் காயமடைந்தனர். சிலர் கவலைக்கிடமாக உள்ளனர்.

இப்படி கொலை செய்யும் அளவிற்கும், துப்பாக்கிச் சூடு நடத்தும் அளவிற்கும் என்ன குற்றம் செய்தனர்? ரீஜென்சி செராமிக்ஸ் தொழிலாளர்களாகிய இவர்கள் தொழிற்சங்கம் அமைத்தனர். அவர்களுக்கான கொரிக்கையை வலியுறுத்திப் போராடினர். இதுதான் அவர்கள் செய்த ‘குற்றம்’! இச்சங்கத்தை நிர்வாகம் ஏற்கவும் இல்லை. சங்கத்தை கலைப்பதற்கான முயற்சியையும் மேற்கொண்டது. மேலும், தொழிற்சங்கத்தைத் துவங்கியதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக நிர்வாகிகளை, முரளிமோகன் உட்பட 6 பேரை ரீஜென்சி செராமிக்ஸ் நிர்வாகம் வேலை நீக்கம் செய்து விட்டது. இதை எதிர்த்து தொழிற்சங்கம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.

நீதிமன்றமும் தொழிற்சங்கத்திற்க்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. இதையும் நீதுமன்றம் நிராகரித்து விட்டது. வேறு வழியின்றி நிர்வாகம் பணிந்தது. ஆனால், அடிமைச்சாசனம் எழுதி தந்து விட்டு வேலைக்கு வரும்படி கூறியது. இதை மறுத்த தொழிலாளர்கள், மீண்டும் போராட்டத்தை துவக்கி நீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் வேலைக்கு எடுக்கக் கோரியும், மேலும் 15 வருடத்திற்கு மேல் வேலை செய்யும் தினக்கூலித் தொழிலாளர்களை நிரந்தரம் செய்யக் கோரியும், விலைவாசி உயர்வுக்கேற்ப சம்பளத்தை உயர்த்தக் கோரியும், பழிவாங்கும் அடிப்படையில் சிலரை வேறு கிளைக்கு மாற்றம் செய்ததை ரத்துச் செய்யக் கோரியும் போராடி வந்தனர்.

1983-இல் ரீஜென்சி செராமிக்ஸ் கம்பெனி முதலாளி ஜி.என். நாயுடு ரூ. 4 கோடியை வைத்துக் கொண்டு ரூ. 8 கோடியைக் கடனாகப் பெற்று மொத்தம் 12 கோடியை மூலதனமாகக் கொண்டு இத்தொழிற்சாலையைத் தொடங்கினான். இன்று அந்தக் கம்பெனியின் சொத்து மதிப்போ ரூ. 2500 கோடி. கோடிக்கணக்கான ரூபாய் சொத்தை தனது உழைப்பால் பெருக்கிக் கொடுத்த தொழிலாளியோ இன்னும் அற்பக் கூலிக்காக கையேந்தி நிற்கிறார். தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டிக் கொழுத்த ஜி. என். நாயுடுவுக்கு தொழிலாளர் கோரும் அற்பக் கூலி உயர்வைக் கூட கொடுக்க மனமில்லை.

‘பசித்தவனைப் பார்க்க வைத்து தான் மட்டும் புசித்தவனை போல’ வக்கிர (வர்க்கப்) புத்தி பிடித்த ஜி.என். நாயுடுவோ இவர்களின் கோரிக்கையை நிராகரித்ததோடு தொழிற்சங்கத்தையும் ஒழிக்க முயன்றான்.

ஜி.என். நாயுடுவுக்கு மேலும் நிர்ப்பந்தம் கொடுத்து கோரிக்கையை நிறைவேற்றி வைக்கும் வகையில் கடந்த ஜனவரி மாதம் முதல் வேலைநிறுத்தம் செய்தனர்! இதில் சில தொழிலாளர்கள் அவ்வப்போது வேலைக்குச் செல்ல முயல்வதும் அதை போராடும் தொழிலாளர்கள் தடுப்பதும் நடந்துள்ளது. இப்படி வேலைக்குச் செல்ல முயலும் தொழிலாளர்களைத் தடுப்பதை நிறுத்த, நிர்வாகிகளை போலீசை வைத்து மிரட்டினான் ஜி.என். நாயுடு. போலீசு மிரட்டலுக்கு தொழிலாளர்கள் அஞ்சாததால், ஆத்திரம் அடைந்த போலீசார் தொழிற்சங்க நிர்வாகிகள் செயலர் முரளி மோகன் உட்பட 10 பேரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று கொடூரமாக தாக்கினர். போலீசாரின் இந்தக் கொலைவெறி தாக்குதலினால் தான் ரீஜென்சி செராமிக்ஸ் தொழிற்சங்க செயலர் முரளி மோகன் இறந்தார்.

போலீசாரால் முரளிமோகன் அடித்துக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய தொழிலாளர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தி பலரை படுகாயப்படுத்தியதோடு, சிலரை கவலைக்கிடமாகவும் கிடத்தி விட்டனர். இக்கொலைவெறியர்களை கைது செய்யவும் அவர்களை தூக்கிலிடும் வரை போராடுவதும் தொழிலாளர்களாகிய நமது கடமை என்பதை உணர்வோம்.

நம்முடைய உழைப்பைச் சுரண்டி கோடிக்கணக்கான பணத்தைச் சுருட்டிக் கொள்ளும் முதலாளிகளின் கொட்டத்தை அடக்க தொழிலாளர்களாகிய நாம் சாதி, மதம், இனம் என்பதை மறந்து ஒரு வர்க்கம் என்ற அடிப்படையில் ஒன்றுபடுவோம். அனைத்து ஒடுக்கமுறைகளில் இருந்தும் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள நமக்கென்று ஒரு படையைக் கட்டுவோம். தொழிலாளர்களையும் – இதர உழைக்கும் மக்களையும் ஒட்டச் சுரண்டும் மூலதனக் கொடுமைக்கு முடிவு கட்டுவோம். அதற்கு தேவை ஒரு மாற்றம் என்பதை உணர்வோம். அந்த மாற்றத்தை ஒரு புதிய ஜனநாயகப் புரட்சியின் மூலம் கொண்டு வருவோம்.

 _____________________________________________________________________________

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, சென்னை. 

தொடர்புக்கு: அ.முகுந்தன், 110,2-வது மாடி, மாநகராட்சி வணிக வளாகம், 63, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், சென்னை-24. PH 9444834519.

_______________________________________________________________________________

போலீசின் வெறிச்செயலைக் கண்டித்து 2.2.2012 அன்று சென்னையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்களும் தொழிலாளிகளும் கலந்து கொண்டனர்.