இன்று காதலர் தினம். ஊடகங்களின் உதவியால் ஊதிப்பெருக்கப்படும் இந்த தினத்தில் காதல் குறித்த இந்திய யதார்த்தம் கிஞ்சித்தும் இருப்பதில்லை. நம் சமூகத்தில் தோன்றும் காதல் எத்தகைய வில்லன்களையெல்லாம் எதிர்த்து போராட வேண்டியிருக்கிறது? குறிப்பாக சாதிவெறி கோலேச்சும் சமூகத்தில் காதல் வெற்றி பெறுவதற்கு வாழ்வா, சாவா என்று போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது. ஊடகங்களின் ஜிகினா காதலையும், யதார்த்தம் சுட்டெரிக்கும் உண்மைக் காதலையும் இந்தக் கட்டுரை அலசுகிறது. காதலர் தினத்திற்காக மீள் பதிவு.
விஜய் தொலைக்காட்சியின் நீயா நானா நிகழ்ச்சியில் காதலுக்குத் தேவை தோற்றமா, அணுகுமுறையா (அப்பியரன்சா, அப்ரோச்சா) என்ற தலைப்பில் காதலர்கள், காதலித்து மணந்தவர்கள், காதலிக்கக் காத்திருக்கும் இளைஞர்கள், இளம் பெண்கள் எல்லோரும் மனம் திறந்து ஒரு மாதிரியாக விவாதித்தார்கள்.
தோற்றத்தில் என்ன பிடிக்கும், பிடிக்காது வகையறாக்களை பட்டியலிட்டவர்கள் அழகு, தலைமுடி, சீரான பல், நடுத்தர உயரம், உடை நிறம், உடல் வண்ணம், உடை வகைகள், முதலானவற்றை அலசினார்கள். அடுத்து அணுகுமுறையைப் பட்டியலிட்டவர்கள் அசடு வழியாமை, எதிர் பாலை ஆதிக்கம் செய்யாமை, எதிர் பாலை உரிமை எடுத்துக் கொள்வது-கொள்ளாமை, என என்னவோ பேசினார்கள். பெண் சுதந்திரம் குறித்து தனது விருப்பப்படி உடை அணிவது, பேருந்தில் செல்வது, நண்பர்களிடம் பேசுவது, கேட்டதை வாங்கிக் கொடுப்பது, தன்னை அன்புடன் கவனிப்பது, இன்ன பிறவற்றை அடுக்கினார்கள். இப்படி ஒரு மணிநேரத்தில் காதலை அலசிவிட்டு காதலைப் பெண்களிடம் எப்படித் தெரிவிப்பது என்று பார்வையாளர்களை வைத்தே நடித்துக் காட்டினார்கள். மொத்தத்தில் காதலும், பெண்ணுரிமையும் ஒரு மணிநேரமாகப் படாதபாடு பட்டது என்றால் மிகையல்ல.
இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு இளைஞர் காதலிப்பது இவ்வளவு சுலபமா என்று ஆச்சரியப்பட்டு உடனே ஒரு பெண்ணைத் தெரிவு செய்து கணக்கு பண்ணுவதற்குத் திட்டமிடும் சாத்தியமும் உண்டு. இந்த ஜிகினாக் காதலைத்தான் பத்திரிகைகளும், காதலர் தினக் கொண்டாட்டங்களும் வருடா வருடம் போதித்து வருகின்றன. இந்திய நடைமுறையில் இந்த சரிகை வேலைப்பாடுகள் எவையும் செல்லுபடியாவதில்லை. உண்மையில் காதலிக்க வேண்டுமென்றால் பல தடைக்கற்களைக் கடக்கவேண்டும். காதலின் உயிராதாரமான இந்தப் பிரச்சினைகளின் பால் சினிமாவும், ஊடகங்களும் கவலை கொள்வதில்லை. காதல் டூயட்டுக்காக வெளிநாடு செல்லும் இயக்குநர்கள் எவரும் இந்த மண்ணின் உண்மைக் காதலை அதன் வலியை அறிந்து கொள்வதில்லை.
சாதி மதம் மாறி, ஜாதகம் பார்க்காமல், பெற்றோர்-உற்றோரை எதிர்த்துக்கொண்டு, மணம் செய்வது என்பது அவ்வளவு சுலபமானதல்ல. இதில் சமரசம் செய்து கொண்டு பெற்றொர் வழி திருமணம் செய்தவர்களே இங்கு அதிகம். அவர்களுக்கெல்லாம் காதல் விருப்பமற்றது என்பதல்ல, காதல் நடைமுறையில் சாத்தியமல்ல என்ற சமூக நிர்ப்பந்தமே காரணம். காதலிப்பவர்களும் கூட இந்த தடைக்கற்களைத் தாண்டுவதை விட சமரசம் செய்து கொண்டு குறுக்கு வழியைத் தேடுகிறார்கள். சாதி, மதம் மாறாமல் காதலிப்பது, தனது சாதியின் தரத்தினையொத்த சாதியில் காதலிப்பது, கீழ் சாதியைத் தவிர்ப்பது, தனது வர்க்க நிலைக்கேற்ப காதலிப்பது, காதலித்தாலும் ஜாதகப் பொருத்தம் பார்ப்பது, பெற்றோருக்காக வரதட்சணை கேட்டு காதலியை நிர்ப்பந்திப்பது, தாய் தந்தை விருப்பத்திற்காகக் காதலியை வேலையை விடச் செய்து வீட்டு விலங்காக நடத்துவது, பிறக்கும் குழந்தைகளை தந்தையின் சாதி அடையாளத்துடன் வளர்ப்பது, இருவரில் யார் மேல்சாதியோ அவர்களது சாதியப் பண்பாட்டைக் கடைபிடிப்பது….. இங்கே காதல் எங்கே இருக்கிறது?
இவ்வளவு பிற்போக்கு அழுக்குகளை அகற்றாமல், இதைப் பற்றி பேசாமல் காதலுக்கு தேவை தோற்றமா, அணுகுமுறையா என்று விவாதிப்பது அயோக்கியத்தனமில்லையா? தான் விரும்பிய உடைகளை அணிவதுதான் பெண்ணுக்கு சுதந்திரம் என்று பிதற்றுவது அக்கிரமில்லையா? இந்தியாவில் காதலுக்குத் தேவைப்படுவது போராட்டமும், கலகமும்தான். இந்த உண்மையை ரத்து செய்யும் ஊடகங்கள் காதலை மின்மினிப் பூச்சி போல உணர்த்துகின்றன. இருண்டு கிடக்கும் சமூக இருட்டை இச்சிறிய ஒளி அகற்றுவதில்லை.
மேம்போக்கான காதல் நடவடிக்கைகள் பெருநகரங்களில் வேண்டுமானால் சாத்தியமாகலாம். இதிலும் ஜாலிக்காகக் காதல், செட்டிலாவதற்கு பெற்றோர் நிச்சயிக்கும் திருமணம் என்பதே வழக்கமாக நடக்கிறது. ஆனால் சிறு நகரங்களிலும், கிராமங்களிலும் காதல் என்பது இன்னமும் அபாயகரமாகவே உள்ளது. டெக்கான் குரோனிக்கிள் செய்தித் தாளில் 10.9.08 அன்று வந்த ஒரு துயரக்காதல் சம்பவம் இதைக் கண்ணீருடன் தெரிவிக்கிறது.
தஞ்சை மாவட்டம் அரித்துவார் மங்கலத்ததைச் சேர்ந்த சிவாஜி எனும் 32 வயது தலித் இளைஞரும், அம்மாபேட்டைக்கு அருகில் வாழும் கள்ளர் சாதியைச் சேர்ந்த 29 வயது லட்சுமியும் காதலிக்கிறார்கள். தஞ்சை மாவட்டத்தின் அரசியல், சமூக வாழ்க்கையில் கோலேச்சும் கள்ளர் சாதி அவ்வட்டாரத்தில் பிரபலமான ஆதிக்க சாதியாகும். ஒரு கள்ளர் சாதிப் பெண்ணை அதுவும் ஒரு தலித் இளைஞன் திருமணம் செய்வது என்பது அங்கே நிலநடுக்கத்திற்கு ஒப்பானது. விசயம் வெளியே தெரிந்தால் தஞ்சையே சாதி வெறியால் கொந்தளித்துக் குமுறும். இச்சூழ்நிலையில் இக்காதலர்கள் எவ்வளவு சிரமங்களோடும், அச்சத்தோடும், இரகசியமாகவும் காதலித்திருப்பார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
காதலிப்பதற்கே இவ்வளவு சாகசம் தேவைப்படும் போது திருமணம் என்பதை அங்கே கற்பனை கூடச் செய்யமுடியாது.
இந்நிலையில் காதலர்கள் வேறுவழியின்றி தமது பெற்றோர், உறவினர் அறியாமல் திண்டுக்கல்லில் இருக்கும் ஒரு மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு அங்கேயே வாழ்கின்றனர். சிவாஜி ஆட்டோ ஓட்டுநராக பிழைப்பு நடத்தி இல்லறத்தை நடத்துகிறார். தஞ்சைக்கும், திண்டுக்கல்லுக்கும் தூரம் சற்றே அதிகமென்பதால் கள்ளர் சாதி வெறியின் கொடுக்குகள் தம்மைத் தீண்டாது என்றே அந்த அப்பாவிக் காதலர்கள் எண்ணியிருந்தனர். ஆனால் வன்மத்திலும், வெறியிலும் மையம் கொண்டிருக்கும் இச்சாதி வெறிக்கு இந்த தூரமெல்லாம் ஒரு பிரச்சினையே அல்ல.
லட்சுமியின் சகோதரர்கள் சுப்பிரமணியன், சிவக்குமார், மீனாட்சி சுந்தரம், மூவரும் காதலர்கள் திண்டுக்கல்லுக்கு புலம் பெயர்ந்ததைக் கண்டுபிடித்து சில ரவுடிகளுடன் ஒரு டாடா சுமோவில் செல்கிறார்கள். செப்டம்பர் 7 ஆம் தேதி இருப்பிடத்தை தெரிந்து கொண்டு சிவாஜியை அடித்து வண்டியில் ஏற்றுகிறார்கள். அதைத் தடுக்க முயற்சித்த லட்சுமி அடிபட்டவாறு செய்வதறியாமல் கதறுகிறார். எப்படியாவது தனது காதல் கணவனைக் காப்பாற்றவேண்டுமென போலீசில் புகார் கொடுக்கிறார். அடுத்த நாளே ஆனைமலைப் பகுதியில் சித்ரவதையுடன் கொலை செய்யப்பட்ட சிவாஜியின் உடலைப் போலீசார் கண்டுபிடிக்கிறார்கள். கோபத்தில் வந்த சகோதரர்கள் சிறிது அடித்துவிட்டு தனது கணவனை விட்டுவிடுவார்கள் என்று நினைத்தேன் இப்போது என்ன செய்வேன் என்று மனமுடைந்து கதறுகிறார் லட்சுமி.
உடன் பிறந்த தங்கை தாலியறுத்தாலும் பரவாயில்லை, ஒரு தலித் ஒரு கள்ளர் பெண்ணை தொடக்கூடாது என்று பித்தம் தலைக்கேறிய இந்த சாதிவெறிக் கொடூரத்தை அரங்கேற்றியவர்கள் யாரும் வயதானவர்கள் அல்ல. செல்பேசியும், இருசக்கர வாகனங்களும் இன்னபிற நவநாகரீகங்களைப் பயன்படுத்தியும், விஜய் டி.வியைப் பார்ப்பவர்களாவும் உள்ள இளைஞர்கள்தான். தமது தங்கைக்கு அவளது கணவனது பிணத்தையே திருமணப் பரிசாக வழங்கியிருக்கிறார்கள், அந்தப் பாசமிகு அண்ணன்மார்கள். தஞ்சையில் இனி ஒரு கள்ளர் பெண்ணை ஒரு தலித் கை வைக்க நினைத்தால் என்ன நடக்கும் என்பதற்கு இது ஒரு பாடம் என்று தஞ்சை வாழ் கள்ளர் குலக் கூட்டங்கள் வீரக்கதையாக பெருமை பேசும். கல்லூரிக்கு செல்லும் கள்ளர் மாணவிகளும் இந்தக்கதை மட்டுமல்ல இதற்கு முன்னால் நடந்த பல கதைகளையும் மனதில் கொண்டு காதலைக் கற்பனையில் கூட அரங்கேற்றாத மனநிலையை வளர்த்துக்கொள்வார்கள். காதலின் முன்னுதாரணங்களை இலக்கியத்தின் வழியாக ஷாஜகான் – மும்தாஜ், அனார்கலி – சலீம், ரோமியோ – ஜூலியட் போன்ற காதலர்களை வைத்து யாரும் சிந்திக்க முடியாது. இங்கே கொலை செய்யப்பட்ட காதலர்களின் கதைதான் காதலின் யதார்த்த இலக்கியமாகக் கட்டியம் கூறுகின்றன.
இது இந்தியக் காதலின் உண்மை முகம். கலப்பு மணம் செய்த காதலர்கள் கட்டி வைத்து எரிப்பது இங்கு நெடுநாள் இருக்கும் ஒரு சடங்கு. சில ஆண்டுகளுக்கு முன்னர் விருத்தாசலம் அருகே ஒரு கிராமத்தில் ஒரு தலித் இளைஞனும், ஒரு வன்னியப் பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இதையறிந்து ஆத்திரமடைந்த மணமகள் தரப்பு இருவரையும் பிடித்து ஊர்கூடி ஆதரிக்க எரித்துக் கொன்றார்கள். ஒரு காதல் ஜோடி எரிந்து சாவதை ஊரின் வன்னியர்கள் திரண்டு வந்து வாழ்த்தும் போது அந்த சாதி வெறியின் வன்மத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. பல சமூக ஆர்வலர்களின் முயற்சிக்குப் பிறகு இப்போதுதான் இந்த வழக்கை சி.பி.ஐ விசாரித்து வருகிறது. வழக்கு முடிவடையவில்லை என்பதால் குற்றவாளிகள் சுதந்திரமாக உலா வருவதோடு எப்படியும் விடுதலை ஆவோம் என்று திமிராகவும் பேசிவருகிறார்கள். ஊரே இந்த எரிப்பில் பங்கெடுத்திருக்கும்போது சட்டம் மட்டும் என்ன செய்யும்?
சட்டமும், போலீசும், மொத்தத்தில் இந்த சமூக அமைப்பும் காதலர்களுக்கு எதிராகத்தான் அணிவகுக்கிறது. சாதி மாறி காதலிப்பதில் அதுவும் ஒரு தலித்தாக இருந்துவிட்டால் தண்டனை நிச்சயம் என்பதுதான் யதார்த்தம். ஆதிக்க சாதியின் பெண்ண ஒரு தலித் தொடுவதை சாதியின் புனிதம் கெட்டுப்போவதாக சாதிவெறி இயல்பாக சிந்திக்கிறது. இத்தகைய அடக்குமுறைகளுக்குள்ளே வாழும் ஒரு பெண்ணுக்கு காதலிக்கும் சுதந்திரம் எங்கே இருக்கிறது?
காதலில் மட்டுமல்லா கடவுளிலும் இதே சாதிவெறி அடங்காமல் நர்த்தனமாடுகிறது. சேலம் கந்தம் பட்டி கிராமத்தில் இருக்கும் திரௌபதி அம்மன் கோவிலில் வழிபடுவதற்கு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அனுமதி இல்லை. வன்னியர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்தக் கோவிலில் வழிபடும் உரிமைக்காக தலித் மக்கள் நெடுங்காலமாக போராடி வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக உயர்நீதிமன்றம் வழிபடும் உரிமையை அமல்படுத்துமாறு உத்தரவிட்டதும் இம்மாதம் 8ஆம் தேதி போலீசார் பாதுகாப்புடன் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலில் நுழைந்து அம்மனை வழிபட்டனர். இதை எதிர்த்த வன்னியர் தரப்பின் 200 குடும்பங்கள் மதுரை உத்தப்பரம் பிள்ளைமார்கள் செய்தது போல ஊரைக் காலி செய்து விட்டு அருகாமை மலையில் தங்கி போராட்டம் செய்கிறார்கள். அதிலும் சில வன்னிய சாதி வெறியர்கள் கோவில் இருந்தால்தானே கும்பிட வருவாய், கோவிலையே இடித்துவிடுகிறோம் என்று பேசி வருகிறார்கள். கோவிலின் புனிதம் கூட சாதிவெறிக்கு தப்பவில்லை.
காதலித்தால் எரிப்பார்கள்: கும்பிட்டால் கோவிலையே இடிப்பார்கள். இப்போது சொல்லுங்கள் எது காதல்? காதலுக்குத் தேவைப்படுவது என்ன?
நீங்கள் சொன்ன கருத்துகளை அதில் சொன்னால் டி.ஆர்.பி ரேட்டிங் கிடைக்காதே. கவர்ச்சியான கருத்துகளுக்குத்தான் முதலிடம்.
சரிதன்!
// இவ்வளவு பிற்போக்கு அழுக்குகளை அகற்றாமல், இதைப் பற்றி பேசாமல் காதலுக்கு தேவை தோற்றமா, அணுகுமுறையா என்று விவாதிப்பது அயோக்கியத்தனமில்லையா? //
அருமை.. இனப்பால் கவர்ச்சிக்கும்(infatuation), காதலுக்கும் இடையில் கோபினாத்துக்கும் கூட வேறுபாடு தெரியவில்லை என்பது பரிதாபமானது.
அந்த நிகழ்ச்சியை ஒரு களிப்பூட்டும் நிகழ்ச்சியாகப் பார்க்கலாமே தவிர,கருத்திலேடுக்கப் படாது.
ஆனாலும் சில நாட்களில் நல்ல கருத்துக்கள் (நல்ல தலைப்புக்கள் வழங்கப்பட்டால்) பங்குபற்றுவோரிடமிருந்து வருவதுண்டு.
k vinavu i saw ur posts in every thing u hav made a wonderful explaination.
coming to the point u say every thing z wrong and every one is bad in india..
first explain ur stand how u see things and abt ur nature before interfering in any topic u ppl think tat when we hav a place to speak u speak everything u want… so in this nation wat u hav done for it except scholding it???????
hav u ever tried to change it?
how u lead a life?
u hav commented on hindhu ppl now u explain ur stand how u see ur religion…?
so i hav to explain my stand here
i hav stopped talking about the faults of my nation and trying to change some facts…
i am a member of shanthi ashram coimbatore and working for the poor ppl of my nation,i vl change my country as for as i could…
சவுக்கடி
வினவு அவர்களே!
நெத்தியடிப் போங்க..
’காதல்’ படத்தின் கதை போலவே இருக்கிறது. இப்படி பட்ட சாதி வெறியர்கள் இன்றும் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியம் தான்
இவனுங்கலாம், யாரும் திருத்தமுடியாது.
சத்யா அவர்களே,
”திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” என்பதை நினைவில் கொள்க.
நம்ம ஊர்ல சாதி, மதம் பற்றி தவறானதாக பேசி உயிர் வாழ முடியாது. இது நடவையில் உள்ளது.
sathya,
even if i stupidly take it that vinavu hasnt done anything for the country as per your accusation, what have you and people like you have done?
atleast in vinavu, there is a honest and direct criticism which is the most healthy beginning for a better tomorrow.
so joining santhi asram (whatever that is) is your way of contributing to the country?
i can personally vouch that casteism and arrogance are rampant in hinduism. i am a hindu and i say this with shame and anger.i know personally how much these cheap ideas have disturbed many young people in love.
so what is your asram doing for the poor people? make them lazy or make them think?
i wonder why you become more angry at this blog and not the previous one?
வினவு –
நியா நானாவெல்லாம் சீரியசா எடுத்துக்க வேண்டாம் எனப்து என் தனிப்பட்டக் கருத்து. அவங்க நோக்கம் வணிகம் அவ்வளவே.
இதே நீயா நானா நிகழ்ச்சியில் தான் தாலி என்பது வெறும் கயிறு என்று ஒரு பெண் கூறினாள். இதே நியா நானாவில் தான் “என் பூர்வ ஜென்ம புன்னியத்தால் தான் என் ஜாதியில் பிறந்தேன்” என்று ஓர் பெண் கூற அதற்கு அங்கு பங்கு கொண்டவர் பலரும் அது தவறானக் கண்ணோட்டம் என்பதைத் தெளிவுப் படுத்தினர்.
அப்ரோச், அப்யரென்ஸ் ஒரு லைட்டான தலைப்பு என்றே கோபி இரு முறைக் கூறினார் என்று நம்புகிறேன். அதற்காக அதில் சொல்லியதெல்லாம் சரி என்று சொல்ல வரலை.
அந்நிகழ்ச்சியில் கூறப்பட்டக் கருத்துக்களின் படி மக்கள் பார்க்கக்கூடாது என்பதை மக்களே அறிவார்கள் என்று நம்புகிறேன்.
சத்யா சொன்னது போல் வின்வியாச்சே மூன்று மாதங்களா…இரண்டு மூன்று வினைகளுக்கும் அடிக்கல் நாட்டலாமா?
சிறப்பான கட்டுரை
பாராட்டுக்கள் தோழர் வினவு.
இன்றைய உலகமய அழிவுக்கலாச்சாரத்தில் மூழ்கி இருப்பவர்களுக்கு தங்களின் சுயநல இச்சைகளை தீர்த்துக்கொள்ள காதல் ஒரு கருவி, அவ்வளவு தான் காதலுக்குள்ள இன்றைய மதிப்பு. அதை மாற்றி காதலை சமூகத்திற்கு பயன்படுத்துவதற்கான முனைப்புடன் தீட்டப்பட்ட கட்டுரை.
தோழமையுடன்,
செங்கொடி.
k this is a reply for mr rudhran….
wat our ashram do is not making the poor people lazy by providing every thing they needed we help them to think if u hav some time plz visit their website..thankx for ur reply…
o din say to vinav tat he does nt do anything for the country i am asking wat he has done so far to change it tats my question to every one who speak about such things…
even as a hindhu i am more shame ful to happenings of gujarat and orissa…
Hi
Vinavu has opened the topic very nicely. He is just pointing out the faults the way we look at them. All the media is taking life so light. Vinavu is saying that doing love in our place is not that easy.
For this he does not need to join in any group and do social service. It is his way of showing the feelings of him.
Where is the religion which plays any role in our society except when you want it?
If i do not go to temple god is not going to call me. But if you say that I am not allowed inside the temple when I am willing then where is the freedom?
In india only caste can play role in our society to kill each other.
//சாதி மதம் மாறி, ஜாதகம் பார்க்காமல், பெற்றோர்-உற்றோரை எதிர்த்துக்கொண்டு, மணம் செய்வது என்பது அவ்வளவு சுலபமானதல்ல. இதில் சமரசம் செய்து கொண்டு பெற்றொர் வழி திருமணம் செய்தவர்களே இங்கு அதிகம். அவர்களுக்கெல்லாம் காதல் விருப்பமற்றது என்பதல்ல, காதல் நடைமுறையில் சாத்தியமல்ல என்ற சமூக நிர்ப்பந்தமே காரணம். காதலிப்பவர்களும் கூட இந்த தடைக்கற்களைத் தாண்டுவதை விட சமரசம் செய்து கொண்டு குறுக்கு வழியைத் தேடுகிறார்கள். சாதி, மதம் மாறாமல் காதலிப்பது, தனது சாதியின் தரத்தினையொத்த சாதியில் காதலிப்பது, கீழ் சாதியைத் தவிர்ப்பது, தனது வர்க்க நிலைக்கேற்ப காதலிப்பது, காதலித்தாலும் ஜாதகப் பொருத்தம் பார்ப்பது, பெற்றோருக்காக வரதட்சணை கேட்டு காதலியை நிர்ப்பந்திப்பது, தாய் தந்தை விருப்பத்திற்காகக் காதலியை வேலையை விடச் செய்து வீட்டு விலங்காக நடத்துவது, பிறக்கும் குழந்தைகளை தந்தையின் சாதி அடையாளத்துடன் வளர்ப்பது, இருவரில் யார் மேல்சாதியோ அவர்களது சாதியப் பண்பாட்டைக் கடைபிடிப்பது….. இங்கே காதல் எங்கே இருக்கிறது?//
வினவு,
நான் இந்தப் பதிவை எழுதி இருந்தால் மேற்க்கூறிய கருத்தை கண்டிப்பாக எழுதி இருப்பேன். எனக்குத் தோன்றியதை அப்படியே பிரதிபலித்துள்ளீர்கள்.
வாழ்த்துக்கள்!!
Wonderful post. Questions asked in this post need to be addressed by young men and women before plunging into “love”.
It is possible to overcome all the hurdles and have love and respect . But that calls for extreme maturity on the part of the man and woman.
Taking a TV programme lightly is our usual habit. But this kind of social relevant subjects should be handled with sensitivity. Where are the tV programmes that weave in social awareness.? Most of the channels, almost all, are only time pass and mind numbing.
Pathetic.!
Any marriage dies or gets into a irrevertible monotony unless it has a social goal and a common cause to work together foregoing selfish private life…
Dear All,
This reply to all, especially to Mr.Satya & Mr.Vinavu,
The people who are replied to here are having high potential to change our society. Every body expressed here on their own way. Let me tell one thing, You can’t change the all the things in world , but you can do something, but do that something without any hesitation. I’m ready to do that something. I’ll get help from you when required. I have the big plans to do something for this society and I’ll join with people who is already doing the same.
Till now I have not done much bigger things to this society. but waiting for do my best at right time.
coming to this topic, I promise here, I can do something on this regard,
i . If i do a Love marriage (any caste) I WILL convenience my parents and this society and get marry the same girl who loved me.
ii. The most important thing is, If I go any level in job carrier or any circumstance I WILL not at all do any partiality to any one because of caste.
iii. I never ask people to which caste or religion or any thing such regard. (now also I’m following this.)
Pls let me know if any thing to improve myself.
I’m requesting to all, be a quality person in this world and try to make others also quality in all ways.
Regards,
navahesk.
// இந்தியாவில் காதலுக்குத் தேவைப்படுவது போராட்டமும், கலகமும்தான். இந்த உண்மையை ரத்து செய்யும் ஊடகங்கள் காதலை மின்மினிப் பூச்சி போல உணர்த்துகின்றன. //
ஆயிரத்தில் ஒரு வார்த்தை…மிகவும் யோசிக்க வைத்த பதிவு….வாழ்த்துக்கள் !!
காதலென்பது பொதுவுடமை இளையராசா இசையில் சரி,,,,,,,,,
காதலென்பது கத்திரிக்காயா
காரணம் சொல்லி கழித்து தள்ள
காதலென்ன கணக்கா, இரண்டும் இரண்டும் நான்கு என சூத்திரத்தில் அடக்க, காதலென்பது அனபு………. ஆம் அன்பு விட்டுக் கொடுக்கும்.
கலந்து பேசி விட்டு கொடுத்து வாழும் காதல் நெஞ்சங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். விட்டு கொடுக்க முடியாதவர்களே மேற்கண்டவாறு விவாதம் செய்து கொண்டு வாழ்க்கையை தொலைத்து கொண்டிருக்கின்றனர்.
காதல் என்பது ஒருவர் மீதுள்ள, அவர் நடந்துகோலும் உண்மையான நல்ல அபிப்ராயமே ஒழுக்கமான நல்ல அபிப்ராயத்தை வரவேற்பதை நேர்த்தியான காதல் எனல்லாம். அன்பேசிவம் புபேஷ்
வாழ்க்கையை இன்னும் புரிந்து கொள்ள வில்லை நண்பரே .
இன்னமும் ஆழமாய் சிந்தியுங்கள் .
” இப்போது சொல்லுங்கள் எது காதல்? காதலுக்குத் தேவைப்படுவது என்ன?”
பெரும்பாலான தற்கால நகர காதல்களில் பெண்கள் நாடுவது காமம் மற்றும் பணம் .
ஆண்கள் நாடுவது காமம் .
அதிகமான காதல்கள் கற்பழிப்பு என கூறப்பட்டு சிறையில் முடிகின்றன
“Male spiders are often the losers of the dating game. The females of many species are cannibals, literally combining dinner and a date. Some males do their best to escape their mate’s post coital appetite while others, like the red back spider, accept their fate by somersaulting into the female’s fangs.”
http://www.newscientist.com/article/dn3876-spider-sex-causes-spontaneous-death.html
காதல் கனவிலில்லை; கொள்கையில் –
ஆணை நிர்பந்திக்கும் காதலோ
பெண்ணை நிர்பந்திக்கும் காதலோ
காதலல்ல; அவ்வளவு ஏன் –
அதே நிர்பந்தங்கள் மணமுடித்து
வாழ்க்கையிலிருந்தாலும்
அது மணமுமல்ல; நிறைந்த வாழ்க்கையுமல்ல.
சமுதாயத்தின் பிற்போக்குகளையும்,
அவலங்களையும் புரிந்து கொள்பவர்கள்
யாரையும் நிர்பந்திக்க முடியாது; நிர்பந்திப்பதுமில்லை.
அப்படி வாழ்ந்தவர்கள் மார்க்ஸ் தம்பதிகள்.
வறுமை அவர்களை வதக்கியெடுத்தாலும்
அன்றாடம் பூத்த
‘தாஸ் காபிடல்’ புத்தகத்தின் பூக்களை
ஒருவருக்கொருவர் கொடுத்துக் கொண்டனர்.
கொள்கைக்காக வாழ்ந்த காதலர்கள் அவர்கள்.
அவர்கள் பெற்றெடுத்த குழந்தைதான் கம்யூனிசம்.
நிர்பந்தத் தம்பதிகள் பெற்றெடுத்தது :
1. ஒருதலைப் பட்ச கொள்கையுடைய ‘அரிச்சந்திர புராணம்’.
2. கடலில் பாலங்கட்டி, மலையைப் பெயர்த்து, பல்லாயிரக்கணக்கான வீரர்கள் போதாதென்று,
வானரங்களையும் பயன்படுத்தி, எப்படியோ மீட்க்கப்பட்ட சீதையை, கற்பை சோதனையிட (அனுமன் வாரண்டி கொடுத்த பின்னும்)
தீக்குளிகச் சொன்ன ராமனின் ‘ராமாயணம்’.
காதலோ, திருமணமோ, அது கடைசிக் காலம் வரை
தொடர வேண்டுமென்றால் அவர்கள் கொள்கையுடைய காதலர்களாக இருக்கவேண்டும்.
கொள்கை எதைப் பொறுத்து என்பதில் அவர்களின் வாழ்க்கை நீளும்.
ஆயுள் நீடிக்கும் காதலுக்கு முற்போக்குச் சிந்தனைகள் அவசியம்!
காதல் என்பது நம்மையே நமக்கு அறிமுகம் செய்து வைக்கும்.
எப்படியென்றால் பலர் சொல்லியும் திருந்தாத சிலர் தன் காதலியோ/காதலனோ சொல்லி திருந்தி உள்ளனர்.
ஆனால் காதல் என்ற பெயரில் இன்றைய தலைமுறைகள் செய்யும் தவறுகள் ஏற்று கொள்ள கூடியது அல்ல…
அன்புடன்…மணி
காதல் என்பது பெரும் நகரங்களில் வேண்டுமென்றால் சாத்தியப்படலாம் என்கிறிர்கள். தஞ்சையை சேர்ந்த ஒரு கிராமத்தின் கள்ளர் சாதி வெறிப்பிடித்த ஒருவர். போலீசு அதிகாரியாக திருச்சி நகரத்தில் வாழ்ந்து வந்தார். தன் மகள் ஒரு தலித்து இளைஞனை காதலித்தால் என்பதற்க்காக தன்னோட ஒரே பெண்ணை சாப்பாட்டில் விசம் வைத்து சாகடித்துவிட்டு. தன் கிராமத்துக்கு பினத்தை எடுத்துவந்து தன் உறவினர்களிடம் சாதியின் கௌரவத்தை காப்பாற்றிவிட்டதாக பெருமைப்பட்டுக்கொண்டார். சட்டத்தின் உதவியோடு அந்த தலித்து பையனையும் சாகடித்துவிட்டார்கள் . படித்து நகரத்தில் வாழும் போலீசு அதிகாரியான இவர் இப்படி என்றால். காதல் நகரத்திலும் சாத்தியமில்லை என்பதுதான் உண்மை.
வேணி அவர்களே, தற்போது இருக்கும் சமூக அமைப்பை மாற்றி அமைத்தால் மட்டுமே காதல் எங்கும் சாத்தியம்.புதிய கலாச்சார புரட்சிகர இந்தியா தான் காதலுக்கு ஒரே தீர்வு.
Wonderful article and must think everyone about this.
* In India love is based on the caste.
* If love is not based on the caste it is surely based on Class………….
Very wonderful article from Vinavu
காதல் என்பது மனதில் ஏற்படும் ஒருவித சுகம். அது அனைவருக்குகம் கிடைக்க வாழ்த்துகள்.
இந்த கட்டுரை கொடுத்த வினவுக்கு நன்றி.
காதல் என்பது பாலுணர்ச்சியின் வெளிப்பாடே.இத தான்யா காதல்னு சொல்லிகிட்டு திரியராங்க……..ஒரு ஆண் பெண் மீதும், பெண் ஆண் மீதும் ஏதோ ஒரு காரணத்தால் ஈர்க்கப்படுவதல்ல காதல்.காமத்தால் ஈர்க்க படுவதே காதல்….அனைத்து அவலங்கலையும் சுமந்து கொன்டிருக்கும் சமூகத்தின் மீது கொள்ளும் காதலே உண்மையானது.
“கோவிலின் புனிதம் கூட சாதிவெறிக்கு தப்பவில்லை” is this line from Vinavu?
Good… Can see some good signs from Vinavu.
சாதி-மதம்-இனம்-மொழி கடந்து திருமணங்கள் – அவை – நிறம் பார்த்தோ அல்லது பணம் பார்த்தோ – பல நடக்கத்தான் செய்கின்றன. கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளபடி காதலர்கள் பல்வேறு துன்பங்களையும் துயரங்களையும் அனுபவிக்கிறார்கள். இவைகளுக்கு எதிராக பலர் போராடவும் செய்கிறார்கள். திருமணத்தில் வெற்றியும் பெறுகிறார்கள். ஆனால் அதன் பிறகு அவர்களின் வாழ்க்கை வெறுமையாகி விடுகிறது. இதைப்பார்க்கிற பலர் காதல் திருமணங்களின் மீது நம்பிக்கை இழக்கின்றனர்.
”இந்தியாவில் காதலுக்குத் தேவைப்படுவது போராட்டமும்…”,
இங்கே சுட்டிக்காட்டப்படும் போராட்டம் மிகவும் ஆழமான பொருள் பொதிந்தது எனக் கருதுகிறேன். காதலுக்கான போராட்டமும் சமூக விடுதலை மற்றும் சமூக இழிவுகளுக்கு எதிரான போராட்டங்களோடு பிணைக்கப்பட வேண்டியது. இத்தகைய போராட்டங்களில் ஈடுபடாத காதலர்கள் திருமணம் செய்து கொள்வதில் வேண்டுமானால் வெற்றி பெறலாம். ஆனால் காதலில் வெற்றி பெற்றதாகக் கருத முடியாது. காதலின் வெற்றி புரட்சிகரப் போராட்டங்களோடு தொடர்புடையது.
எனவே வாலிபர்களே! காதலியுங்கள்! உங்கள் காதல் வெற்றி பெற வேண்டுமானால் புரட்சியை நோக்கி வாருங்கள். காதலுக்கு எதிரான சாதி-மத-இன வெறியர்களின் தாக்குதல்களை – திருமணத்திற்குப் பிறகும் – களத்திலும்/கருத்திலும் – தவிடு பொடியாக்க முடியும்!
போராடி ஜெயித்தால்தான் அதன் அருமை தெரியும்
காதலில் தோல்வி உற்றவனின் புலம்பல்.
இப்படியெல்லாம் சாதி கொடுமை செய்யும் மக்களுக்கு
“இவர் சாதி கொடுமையால் துன்பப்பட்டவர் , இட ஒதுக்கீடுக்கு தகுதியானவர்” என்று இருக்கும் அமைப்பை மாற்றி
“நான் சாதியை விடுகிறேன்
சாதி பெயர் பயன்படுத்த மாட்டேன்,
சாதி சான்றிதழை உதறுகிறேன்.இந்தியன் என்று பதிவு செய்கிறேன்”
என்று முன்வரும் ஆதிக்க சாதியினருக்கு மட்டுமே இட ஒதுக்கீடு தரவேண்டும்
Problem is with our reward system. we reward people to keep up their caste identity not for giving up
காதல் வெற்றி பெற புரட்சிகர அமைப்பில் அணி சேருங்கள் என்றுல்ல சொல்லிக்கிட்டு இருக்கேன்
புதிய பாமரன் அவர்களே…
உங்களுக்கு ஹெலன் டெமூத் பற்றி தெரியும் என்று நினைக்கிறேன்.
வினவு,
கொள்கையில்லாத காதல் ,எந்த சடஙில் தழுவி வளர்ந்தாலும் அழிந்துவிட்டது தான்.
பால் கவர்ச்சி தவிற்க முடியாத மனித வளர்ச்சி முழுமைகளில்,கொள்கையில்லாத காதலர்கள் தினசரி பேப்பரைகூட படிக்கமாட்டார்கள்.அரசியல் சுத்தமாகதெரியாது.
அலைபேசி,ச்பரிசம்,இனிப்பு,கொள்கையில்லாதநன்பர்கள் ஆலோசனை வேறு.
கற்பிக்கப்பட்ட சாதி எப்படி அழியும்.காரல்மார்க்ஸ் ,சே,சீவானந்தம்,எண்ணற்ற தோழர்களின் காதலை படிக்கும் பாடத்துடன் இணைத்தால் நல்ல காதல் வளரும்.அந்த காதலை எந்த கொம்பனாளும் அசைக்கக்கூட முடியாது.
அத நம்ம ஆட்சியில் பார்க்கலாம்.—- மெய்தேடி
இப்போது சொல்லுங்கள் எது காதல்? காதலுக்குத் தேவைப்படுவது என்ன?
எனக்கு இதைப் படிக்கும் போது புரட்சி, காதல் என்ற் ரீதியில் சாதி மதம் மாறி திருமணம் செய்வதால் சாதி வெறி தான் இன்னும் மேலோங்குவதாகத் தெரிகிறது. ஆதிக்க வெறியில் மரணத்தைச் சுவைப்பது (சுமப்பது) தாழ்த்தப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள்.
இப்போது சொல்லுங்கள்: காதல் என்றால் என்ன? சாதி வெறியில் மிதக்கும் இந்த சாக்கடை சமுதாயத்தை மாற்றுவதற்கு தேவைப்படுவது என்னெ?
உங்களுக்கும் ஆர்.ஆர்.எஸ்ஸுக்கும் என்ன வித்தியாசம் வினவு
காதல்ல ஆரம்பிச்சு கடைசில தலித் விடுதலை, சாதி ஒழிப்பு-ங்கற பழைய பல்லவிக்கே வந்துட்டியே வினவு.
எதோ எல்லா காதல்களும் ரொம்ப புனிதம் மாதிரியும் காதலிக்கறவங்க எல்லாம் ரொம்ப யோக்கியம் மாதிரி இல்ல ரீல் சுத்தர. நம்மூர்ல இந்த புனிதக்காதல் எல்லாம் மைனாரிட்டி. மெஜாரிட்டி டுபாக்கூர் காதல் தான்–ஜாதி விட்டு ஜாதி காதல் ஆகட்டும், ஒரே ஜாதில, ஒரே சமூக அந்தஸ்துள்ள காதல்களும் ஆகட்டும்.
ஒரே ஜாதில காதலிச்சா அத நீ ஒதுக்க மாட்ட. அதெல்லாம் உன் கண்ணுக்கு உண்மையான காதலா தெரியாது. உனக்கு தெரிஞ்ச “புனிதக் காதல்” எல்லாம் தலித் பையன் தேவர் பொண்ண இழுத்துகிட்டு ஓடறதுதான்.
பத்து பைசாவுக்கு பிரயோஜனமில்லாதவனெல்லாம் பொண்ணுங்கள மடக்க ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கானுங்க. இதெல்லாம் காதலா? இதுக்கு சமுதாயம் விளக்கு புடிக்கணுமா? மேல் ஜாதிப்பெண்ணை விரும்புகிறான் என்ற ஒரே காரணத்துக்காக அந்த குப்பை காதலா ஆதரிக்க முடியுமா? நல்ல கதையா இருக்கே.
வினவுக்கு இது சவுக்கடி….
பாசிசகோமாலி போல் தெரியவிலை பாசிசக்கொலைகாரன் போல் தெரிகிரது.