privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஅப்துல் கலாம் வாயிலிருந்து ஆறாயிரம் மெகாவாட்

அப்துல் கலாம் வாயிலிருந்து ஆறாயிரம் மெகாவாட்

-

12.2.2012 அன்று சென்னை லயோலா கல்லூரியில் அணுசக்திக்கு எதிரான பெண்கள் போராட்டக்குழு சார்பில் நடைபெற்ற கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதை.

___________________________

வன் கொடுப்பதை குடிக்க வேண்டும்,
அவன் தருவதை படிக்க வேண்டும்,
நம் தினச்சாவு கூட – இனி
அணுச்சாவாகவே அமைய வேண்டும்
எனும் அமெரிக்க திமிரின்
ஆதிக்க குறியீடே,
கூடங்குளம் அணு உலை !

போராடும் தமிழகத்தின்
ஒரு பகுதியாக இக்கவியரங்கம்…
அனைவர்க்கும் வணக்கங்கள்.

***

டிந்தகரை உணர்ச்சிகள்
ஒரு கவிதைக்குள் அடங்குமா ?
தெக்கத்தி உப்புக்காற்றில்
புதைந்திருக்கும் போர்க்குணங்கள்
திக்கற்ற அறிவாளிகளின்
தோலில் வந்து உரைக்குமா ?

கொலைவெறிக்கு இரையான காதுகள்
அணுவெறிக்கும் இசையுமென்ற
ஆளும் வர்க்க ஏளனத்தை,
கலைத்தெறியும் பெரும் பணிக்கு
கலைப்பணிகள் துணை சேர்ப்போம் !

போராடும் மக்களின்
உணர்ச்சிகர உண்மைகளை – நாடெங்கும்
வேரோடச் செய்வதற்கு வேண்டும்
நிறைந்த கவிதைகளும்,
நிறைய களப்பணியும்.

க்கத்து மனிதரிடம்
தெக்கத்தி கதை சொல்வோம்..
புன்னையும் புலி நகக்கொன்றையும்
தென்னையும், வழிகாட்டும் பனையும்
பால்வடி மாரோடு எங்கள் அன்னையும்,

உன்னையும் என்னையும் காக்க
உண்ணா நிலையிருக்கும் உண்மையும்,

ப.சிதம்பரம், நாராயணசாமி, கலாமின்
பாசம் படிந்த உதடுகளில்
வழுக்கி விழுந்தவர்கள் உணரும்படி,
பக்கத்து மனிதரிடம்
தெக்கத்தி கதை சொல்வோம் !

கரத்து பிட்சா காடுகளில்
நாகரீக மேய்ச்சலிருப்போரே,
உங்களுக்கும் சேர்த்து தான்
இடிந்தகரை பட்டினிப்போரில்
காய்ந்து கிடக்கிறது
ஒரு தாயின் கருவறை.

நான் வேறு சாதியென்று
நழுவ முடியாது நீ !
பன்னாட்டு கம்பெனிகளின்
அணுக்கழிவுகள்
திண்ணியத்து மலமாய்
திணிக்கப்படுகிறது உனது வாயில் !

கெடுநிலை மத்தியில்
நடுநிலை இல்லை !
இரண்டிலொன்று –
இடிந்தகரை பக்கம் வந்தால்
நீ மனிதனாகலாம்,
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பக்கம் போனால்
காங்கிரசு மிருகமாகலாம் !

பொய்கள் ரதமேறி
புறப்பட்டுவிட்டன,
உண்மைகள் ஊரடங்கி கிடப்பதுவோ ?

இனி.. கவிதைகள்
அரங்கினில் மட்டும் போதாது,
காங்கிரசு பி.ஜே.பி
சிரம்களில் செலுத்தப்பட வேண்டும் !

றிந்து கொள்வோம் !
அபாயம்
அணு உலை மட்டுமல்ல,
அதனை கொண்டுவரும் அரசியல்…
ஆதரிக்கும் கட்சிகள்…

காங்கிரசும் – பா.ஜ.கவும்
ஏகாதிபத்திய இதழ் வழியும் எச்சில்கள் !
கைராட்டையாலேயே
நூல் விட்டவர் காந்தி,
நாட்டை காட்டிக்கொடுக்க
கண்ணாலேயே
நூல் விடுபவர்
மன்மோகன்சிங் !

நேரு, குழந்தைகளுக்குத்தான் மாமா,
மன்மோகனோ
இந்த குவலயத்திற்கே மாமா !
அமெரிக்க அடிமைத்தனத்தில்
அத்வானியும், மோடியும்
பன்னாட்டு கம்பெனி வேள்விக்கு
வில் பிடிக்கும் ராமா !

கனிமொழி ஆபத்தை
காப்பதே பெரும்பாடு !
அணு உலை பாதிப்பில்
அழியட்டும் தமிழ்நாடு
இது கருணாநிதி தமிழனின் நிலைப்பாடு !

ரொம்பவும் நோண்டிக்கேட்டால் நோ கமெண்ட்ஸ் !

அறிவிக்கப்படாத மின்வெட்டால்
அணு உலைக்கு ஆதரவாய்
பொதுக்கருத்தை உருவாக்க
ஜெயலலிதா ஏற்பாடு !
அன்னிய மூலதனத்தில்
கனக்குது அம்மாவின் மடிசாரு !

எழுந்து நீ போராடு !
இல்லையேல் சுடுகாடு !
கோக்கடித்தாலும் விடாது
அமெரிக்கா சாகடிக்கும்,
நீ.. ஆதரித்தாலும்
அணு உலை உன்னையும் கொல்லும் !

ஈழத்தமிழனுக்கு.. முள்ளிவாய்க்கால் !
இந்தியத்தமிழனுக்கு.. கூடங்குளம் !
மேலாதிக்க அடையாளங்கள் வேறு,
நோக்கம் ஒன்று.

த்துக்கொள்ளாத ஈராக்குக்கு
குண்டுவீச்சு !
ஒத்துக்கொண்ட இந்தியாவுக்கு
கதிர் வீச்சு !
உதவாது வெறும் வாய்ப்பேச்சு..

மவுனம் காத்தால் –

தலைமுறைகளின் சினைமுட்டையில்
அணுக்கரு வளரும்
தாயின் மார்பிலும் அணுக்கதிர் சுரக்கும்
அதையும் குடிக்க எத்தனித்து
உதடுகள் பிளந்த குழந்தை அலறும்
பிதுங்கிய விழிகளில் ப்ளூட்டோனியம் வழியும்.
தன்னிறம் மாறும்

புல்லினம் பார்த்து
தாழப் பறக்கும் பறவைகள்
இறக்கைகள் அடித்து குழறும்.
நிலத்தடி நீரும்… நெல்மணி குணமும்
தென்கடல் உப்பும்… தென்றல் காற்றும்
கடைசியில் நஞ்சாய் போய் முடியும்.

சம்மதித்தால் –

அப்துல் கலாம்
கனவு கண்ட இந்தியா
உன்னில் புற்று நோயாய் வளரும்
மன்மோகன்சிங்
நாட்டை முன்னேற்றும் திசையில்
தைராய்டு தசைப் பிண்டம் அசையும்.

அனுமதித்தால் –

அணு உலையும் அணு சார்ந்த படுகொலையும்
நெய்தல் திணையின்
முதல் பொருளாய் மாறிவிடும்.
அய்வகை நிலமும்
அணுக்கழிவின் பிணமுகமாய் ஆகிவிடும்.

இவ்வளவுக்கும் பிறகு –
நம் இழவெடுத்த மின்சாரம்
பன்னாட்டு கம்பெனிகளுக்கு,
இந்தியனாய் இருந்ததற்கு
அணுமின் மயானம் தமிழகத்திற்கு !

செர்நோபில், புகுஷிமா அணுக்கசிவில்
சிதைந்தொழிந்த முகங்களில்
பிழைத்திருக்கும் உண்மைகளை பார்த்து
உலகமே தெளிவுபெறும் வேளையில்
புதுச்சேரியில் போட்ட சரக்கு
தில்லிக்கு போயும் தெளியவில்லை நாராயணசாமிக்கு !

”அணு உலை.. யாரையும்… ஒன்னுமே செய்யாதாம் !
காசை கொட்டிய வேலை வீணாகிவிடுமாம் !”

கட்டிய அணு உலை வீணாகக் கூடாதென்றால்
கொட்டி மூடுங்கள் அதில் காங்கிரசு கழிவுகளை.

பார்ப்பன மனு உலைக்கும் காவல்
பன்னாட்டு அணு உலைக்கும் காவல்
தோரியமும் ஆரியமும் கலந்த

வீரியக் கலவை அப்துல் கலாமும்
‘அணுவுக்கு அஞ்சினால் கனவு நடக்குமா ?’
வாருங்கள் கனவு காணுவோம்
‘முதலில் கண்ணை மூடுவோம்’ என்கிறார்.

பொய்யிலிருந்து
மின்சாரம் தயாரிக்கும்
புதுவழி ஒன்றிருந்தால்
நாராயணசாமி வாயிலிருந்தே
நாலாயிரம் மெகாவாட்டும்
அப்துகலாம் வாயிலிருந்து
ஆராயிரம் மெகாவாட்டும்
தமிழகத்திற்கு கிடைக்கும்.

அன்றாடம் இவர்கள்

அவிழ்க்கும் பொய்கள்
அணுவுக்கே அடுக்காது…
அணுக்கழிவே சகிக்காது.

ளர்ச்சி என்பதற்காய்
புற்று நோயை ஏற்க முடியுமா ?
அறிவியல் சுகம் அடைவதற்காய்

மின்சாரத்தை முத்தமிட முடியுமா ?

பாதுகாப்பான முல்லைப் பெரியாறை
பாதுகாப்பற்றதென்றும்
பாதிப்பான அணு உலையை பாதுகாப்பென்றும்
திரிக்கும் தேசிய பொய்யர்கள்
திசையெங்கும்… ஜாக்கிரதை !
அணு உலைகளை விடவும் ஆபத்தானவை
இந்த அயோக்கியர்களின் வாய்கள்.

த்தாம் பசலிகளாம் நாம்
ப.சிதம்பரம் கேட்கிறார்.
“உங்களுக்கு மின்சாரம் வேண்டுமா ?
வேண்டாமா ?
மாண்புமிகு மத்திய அமைச்சரே
கொஞ்சம் பொறுங்கள்,
எங்கள் மாட்டிடம் கேட்டுவந்து
மறுபடியும் பதில் சொல்கிறேன்…

புல்லினமும், பூ வனமும்
கல்லினமும், கடலினமும்
எம் தமிழின் மெல்லினமும்
இடையினமும், வல்லினமும்

உழைக்கும் மக்களின் சொல்லினமும்,
தொடுவானம் தொடங்கி
கடலாழம் வரைக்கும்
பல்லுயிரினமும் சேர்ந்ததெங்கள் நாடு !

நீங்கள் நாட்டை முன்னேற்ற
நாங்கள் காட்டை இழந்தோம்..

நீங்கள் தொழிலை முன்னேற்ற

எங்கள் வயலை இழந்தோம்..
எங்கள் காற்றை இழந்துவிட்டு
உங்களிடம் ஏ.சி வாங்கவேண்டும்..

எங்கள் ஆற்றை அள்ளிக் கொடுத்துவிட்டு
உங்களிடம் ‘கின்லே’ ’பெப்சி’ வாங்கவேண்டும்..
எங்கள் கடலை இழந்துவிட்டு உங்களிடம்
உப்பு வாங்கவேண்டும்..
எங்கள் மகரந்தங்களை இழந்துவிட்டு
மானியத்தில் உங்களிடம்
சாம்பல் வாங்கவேண்டும்..

முதலாளித்துவ லாபவெறிக்கு
மொத்த இயற்கையையும்
இழந்த பிறகு தான்,
நாங்கள், செத்துப்போனதே
எங்களுக்கு தெரிய வந்தது !

மழை முடிந்தபின்
இலை சொட்டும் ஓசைகளைக் கேட்கவியலாமல்,
மரங்களை இழந்த எங்களை
நகரத்துக் கொசுக்கள்
காதோரம் வந்து கண்டபடி ஏசுகிறது !

குடியிருப்பின்
இறுக்கம் தாளாமல்
குடும்பத்தையே திட்டித்தீர்த்து
தீண்டப்பயந்து
வெறுத்து வெளியேறுகிறது தேள் !

வந்தமர மலரின்றி
வெறுமையில்,
தேடிக்களைத்த வண்ணத்துப்பூச்சி
எங்கள் இயலாமை பார்வை மீது
கண்டனம் பொழிகிறது வண்ணங்களை !

நம்பி ஒப்படைத்த,
ஊருணி, குளங்கள்,
ஆறு, ஏரியைக்
காப்பாற்ற வக்கில்லாத என்மேல்,
காக்கை எச்சமிடுகிறது !

தருவேன் என்ற நம்பிக்கையில்
வாசலில் வந்து மாடு கத்துகிறது,
ஒரு வாய்
தண்ணி தர இயலாமல்
கூனி குறுகுகிறேன் நான் !

வாழையும்… தாழையும்
உப்பும் மீனும், கடலும் கலனும்
செருந்தி மரத்தில் பொருந்தி வாழும்
பூச்சியும்.. எறும்பும்
கேட்கும் கேள்விகளுக்கு

என்னிடம் பதிலில்லை !

மாடு மடி நனைய.. நீரில்லை,
தும்பி குடிக்க தேனில்லை,
வண்டு படுக்க வளமான மண்ணில்லை,
கொண்டு வாராணாம் அணு உலை !
இயற்கையையே கொளுத்தி
எவனுக்கு வெளிச்சம் !

மின்சாரம்,
வேண்டுமா ? வேண்டாமா ?
எனக்கேட்ட அமைச்சர் அவர்களே,
உங்கள் அணுத்திமிர் பார்த்து
அஃறினைகளும் கேட்கின்றன,
“நீங்கள் சொல்லுங்கள் –
உங்களுக்கு இந்தியா வேண்டுமா ?
வேண்டாமா ?

– துரை.சண்முகம்

  1. //நீங்கள் நாட்டை முன்னேற்ற
    நாங்கள் காட்டை இழந்தோம்..

    நீங்கள் தொழிலை முன்னேற்ற

    எங்கள் வயலை இழந்தோம்..
    எங்கள் காற்றை இழந்துவிட்டு
    உங்களிடம் ஏ.சி வாங்கவேண்டும்..

    எங்கள் ஆற்றை அள்ளிக் கொடுத்துவிட்டு
    உங்களிடம் ‘கின்லே’ ’பெப்சி’ வாங்கவேண்டும்..
    எங்கள் கடலை இழந்துவிட்டு உங்களிடம்
    உப்பு வாங்கவேண்டும்..
    எங்கள் மகரந்தங்களை இழந்துவிட்டு
    மானியத்தில் உங்களிடம்
    சாம்பல் வாங்கவேண்டும்..

    முதலாளித்துவ லாபவெறிக்கு
    மொத்த இயற்கையையும்
    இழந்த பிறகு தான்,
    நாங்கள், செத்துப்போனதே
    எங்களுக்கு தெரிய வந்தது !//

  2. இவ்வளவுக்கும் பிறகு –
    நம் இழவெடுத்த மின்சாரம்
    பன்னாட்டு கம்பெனிகளுக்கு,
    இந்தியனாய் இருந்ததற்கு
    அணுமின் மயானம் தமிழகத்திற்கு !

    இனியும் இந்தியனாக இருக்கத்தான் வேண்டுமோ ?

  3. //தலைமுறைகளின் சினைமுட்டையில்
    அணுக்கரு வளரும்
    தாயின் மார்பிலும் அணுக்கதிர் சுரக்கும்
    அதையும் குடிக்க எத்தனித்து
    உதடுகள் பிளந்த குழந்தை அலறும்
    பிதுங்கிய விழிகளில் ப்ளூட்டோனியம் வழியும்.
    தன்னிறம் மாறும்

    புல்லினம் பார்த்து
    தாழப் பறக்கும் பறவைகள்
    இறக்கைகள் அடித்து குழறும்.
    நிலத்தடி நீரும்… நெல்மணி குணமும்
    தென்கடல் உப்பும்… தென்றல் காற்றும்
    கடைசியில் நஞ்சாய் போய் முடியும். //

    இந்த வரிகள் வலிகளை உணர்த்துகின்றன, உண்மையையும் கூட .

    முதற்கண் நாம் நமது வீட்டில் , ஊரில் அனுவுலையின் கேடுகளைப் பற்றி விளக்க வேண்டும்.அப்பொழுது தான் ஒரு போராட்டம் என்று வந்தால் அனைவரின் உணர்ச்சியும் ஒருமுகமாய் இருக்கும்.

    நன்றி.

  4. கூடி வாழும் கூடங்குளம் வேண்டும்; எழுந்த மக்களின் குரலை, இடிமுழக்கத்தை இந்திய அரசு உற்று நோக்க வேண்டும்.என் இடத்தில் வாரா அரசியல் கட்சிகள் எதற்காக என் வரிப் பணத்தில் ஆங்காங்கே கூட்டம் நடத்துகிறது. என்னையும் என் மக்களையும் நேரில் சந்திக்க வெட்கப்படுகிறதோ? வெல வெலத்துப் பின் வாங்குகிறதோ! ஓர் உதயகுமாரைக் கண்டு உதறி ஓடும் சிதம்பரமே,நாவில் நரம்பின்றிப் பொய்யை அள்ளி வீசும் நாராயணசாமியே,வந்து பார்ப்பதற்கே அச்சப்படும் வாசனே நீங்கள் அத்தனை பேரும் மனிதர்கள் தானா? அணு உலை எங்களின் உயிருக்கு வைக்கும் உலை எனத் தெரிந்தும் அளவுகாணா அளவு கோடிக்கோடியாகத் தொகையை வாங்கியதால் வெளிநாட்டின் வேலைக்காரனாக இருக்கவே மன்மோகன்சிங்கு,அப்துல்கலாம்,பேராசையின் மொத்த உருவமான பேரியக்கம் எனச் சொல்லும் காங்கிரசில் உள்ளவர்கள் அதற்குத் துணைபோகும்,விலை போகும் நிலையில் வெட்கமின்றி வலம் வருவதை என்னவென்று சொல்ல.

  5. //பாதுகாப்பான முல்லைப் பெரியாறை
    பாதுகாப்பற்றதென்றும்
    பாதிப்பான அணு உலையை பாதுகாப்பென்றும்
    திரிக்கும் தேசிய பொய்யர்கள்
    திசையெங்கும்… ஜாக்கிரதை !
    அணு உலைகளை விடவும் ஆபத்தானவை
    இந்த அயோக்கியர்களின் வாய்கள்.//

    கவிதை வரிகள் அருமை!

  6. முதலாளித்துவ லாபவெறிக்கு மொத்த இயற்கையையும் இழந்த பிறகுதான், நாங்கள், செத்துப் போனதே எங்களுக்கு தெரியவந்தது. அருமையான வரிகள். மெல்ல மெல்ல சாகடித்தவர்கள் ஒரேயடியாக கொலை செய்யும் திட்டம்தான் இந்த அணு உலை திட்டம்.

  7. தோழருக்கு வாழ்த்துக்கள்.
    பிணம் எரிக்கும் நெருப்பில்
    பலகாரம் செய்து விற்கும் சாதி.
    ஆதரவு இயக்கம் அதில் மீதி.
    இதற்கு பைணான்ஸ் பண்ணுறான் அரசியல்வாதி.
    வாய்க்கரிசி காசையும் பங்கு போடும் கூட்டம்,
    அதில் ஏனோ மன்மோகனுக்கு அப்படி ஒருநாட்டம்.
    பாடை கட்டும் ஓலையிலும் பழுதாய்ப் போன ப சி,
    இந்த பழாய்போன கூடங்குளத்தால்
    உனக்கென்ன இலாபம் தைரியம் இருந்தால் நீ வாசி.
    வாங்கின காசுக்கு வக்கனையாய் குரைக்கும் நாராயணசாமி,
    நீ புதுச்சேரி சரக்கு போட்டு புதுதில்லி பொணத்துகாக ஆடாதே சாமி.
    இடிந்தகரை மக்களொன்றும் நொடிந்து போன மக்கள் அல்ல.
    நெடிய வளர்ந்தத் தேக்காய் வைரம் பாய்ந்த உள்ளங்கள்.
    நெய்தல் தினையின் வீரம் என்ன நைந்துப் போன பழந்துணியோ?
    உங்கள் தாயக்கட்டைக்கு பலியான முள்ளிவாய்க்கால் அல்ல இது.
    உங்கள்திமிரெடுத்தத் தலைமேல்
    இரங்கும் மக்க்ள் இயக்கம் இது.
    முடிக்கும் வரை ஓயாது…

  8. அணு உலைக்கு எதிராக தொன்னூறுகளில் விவரம் தெரிந்த மக்கள் போராடும் பொழுது கூடங்குளம் பகுதி மக்கள் அதனை ஏற்கவில்லை. தங்களுக்கு வரும் வேலைவாய்ப்பு மற்றும் வசதிகளை இந்த எதிர்ப்பாளர்கள் தடுக்கிறார்கள் என்றே அப்பகுதி மக்கள் எண்ணினார்கள். ஜப்பானில், புகுஷிமாவில் விபத்து ஏற்பட்ட பின்னரே, அந்த விபத்தினை தொலைகாட்சி மற்றும் பேப்பர் ஊடகங்கள் வெளிப்படுத்திய பின்னரே (இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நமக்கு இப்படியான ஊடகங்கள் கிடையாது, அப்பொழுது விபத்தும் நடக்கவில்லை), அப்பகுதி மக்கள் உதயகுமாரையும், ஏனைய எதிர்ப்பாளர்களையும் அழைத்து வந்து போராடுகிறார்கள். ஆண்கள் மீன் பிடிக்கிறார்கள், பெண்கள் போராடுகிறார்கள்.

    அப்படியே அந்த மக்கள் ஏற்றுக் கொண்டு அணு மின் நிலையம் செயல் படத் துவங்கினாலும், அம்மக்களுக்கு ஒரு வேலை வாய்ப்பும் வரப் போவதில்லை. மருத்துவ, சுகாதார வசதிகள் கிடைக்கப் போவதில்லை. கல்பாக்கத்தில் பெரிய மாற்றம் ஒன்றும் இல்லை. (சென்னையில் இருக்கும் எனது வீட்டிற்கு மட்டும் 24 மணி நேரமும் மின்சாரம் உள்ளது)

    சில ஆண்டுகளுக்கு முன், கருணாநிதி ஆட்சியில் இருக்கும் பொழுது ஒரு அணுமின் கப்பல் சென்னை துறைமுகத்தில் ஒரு வாரம் நின்றது. அப்பொழுது ஜெயலலிதா அதை கடுமையாக எதிர்த்தார். சென்னை மக்களுக்கு அணுக்கதிர் ஆபத்து ஏற்படுமாம். அப்ப எல்லாம் ஒரு பயலும் ஜெயாவை எதிர்க்க வில்லை.

    இந்திரா உயிருடன் இருக்கும் பொழுது அணு நீர்மூழ்கி கப்பலை கட்டமைக்க அணு விஞ்சானிகளைப் பணித்தார். ஐந்து வருடம் அரசுப் பணத்தை செலவழித்தும் (தின்றும்) ஒன்றும் நடக்க வில்லை. அதன்பின் இந்திரா, ரஷ்யாவிடம் அணு நீர்மூழ்கி கப்பலை விலைக்கு கேட்டார். ரஷ்சியா அணு நீர்மூழ்கி கப்பல் வேண்டும் என்றால், அணு உலைகளையும் வாங்க வேண்டும் என்று நிர்பந்திக்கிறது. இந்திரா மறைந்தார். ராஜீவ் ரஷ்யாவிடம் கைஎழுத்து இட்டார். மராட்டா , கேராளாவில் துரத்தப்பட்டு, கூடங்குளம் ரெடி.

    இன்றும் பல ஆயிரம் கோடி வாடகைப் பணம் ரஷ்யாவிடம் கொடுத்து அணு நீர் மூழ்கி கப்பல் இந்தியா ஓட்டுகிறது. இதை எல்லாம் பிரசாந்த் பூசான் அவர்களும் எதிர்க்கிறார்கள்.

    அணு மின்சாரம் கேட்கும் நாம், அதே தென் மாவட்டங்களில் தொழில் சாலைகள் கேட்கிறோமா ?? நீர் ஆதாரங்களைப் பெருக்க அரசை கேட்டுப் போராடுகிறோமா ? தமிழகத்தில் தொடர்வண்டித் திட்டங்கள் கேட்டுப் போராடுகிறோமா ?

    அமெரிக்காவில் நூறு அணு உலைகள் உள்ளன. அமெரிக்க அரசு அம்மக்களுக்கான பாதுகாப்பை, வாழ்வாதாரத்தை உறுதி செய்கிறது. நம் அரசு ? மக்கள் போராட ஆரம்பித்த பின்னர் அப்துல் கலாம் சொல்கிறார் சுமார் இருநூறு கோடி ரூபாயில் பத்து அம்ச திட்டம் வேண்டும் என்கிறார். இதை எல்லாம் முன்னரே செய்து இருந்தால் பாராட்டலாம். அமெரிக்காவில் கடந்த முப்பது ஆண்டுகளாக ஒரு அணு உலை கூட ஆரம்பிக்கவில்லை. அமெரிக்காவில் இருபது விழுக்காடு அணு மின்சாரம், எண்பது விழுக்காடு மாற்று வழி மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

    இந்தியாவில் நாற்பது விழுக்காடு குழந்தைகளுக்கு ஊட்ட சத்து இல்லாமல் சாகின்றன. ரேசன் உணவுப் பொருட்களைப் பாதுகாக்க அரசு கிட்டங்கிகளை கட்டவில்லை. ஆனால், பல லட்சம் கோடி செலவில் அணு உலை கட்டுகிறது. வருடத்திற்கு பல லட்சம் கோடிகளை இந்திய ராணுவத்திற்கு நமது அரசு செலவிடுகிறது – இது ஏன் என்று ஒரு மாணவி அப்துல் கலாம் அய்யாவிடம் கேட்டால் அவரால் பதில் சொல்ல முடியவில்லை. உங்களால பதில் சொல்ல முடியுமா ?

    அமெரிக்காவில் மின் கடத்தல் இழப்பு எழு விழுக்காடு மட்டுமே. ஆனால் இந்தியாவில் மின் கடத்தல் இழப்பு இருபத்தைந்து விழுக்காடு. எந்த விஞ்சானிகள் இதைத் தடுக்க ஆய்வு செய்கிறார்கள் ? உங்களால பதில் சொல்ல முடியுமா ?

    • //இந்தியாவில் நாற்பது விழுக்காடு குழந்தைகளுக்கு ஊட்ட சத்து இல்லாமல் சாகின்றன//

      மரம் நடணும், We can do it, India can do it அப்படீன்னு மனப்பாடமா சொல்லிக்கிட்டே இருக்கணும், கவுந்துப் படுத்து கனவு காணனும், மேல ராக்கெட் பறந்தா அத வேடிக்கை பார்க்கணும், நாடு வல்லரசாகணும்னு மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்யணும். இப்படியெல்லாம் செய்தா, தட்டுல சோறு வரும்னு தெரியாது?! கேர்லெஸ் இடியட்ஸ்…

  9. தினமலரின் யோக்கியதை என்ன என்று பார்போம்.

    ஒன்று : இந்திய விடுதலைக்குப் பின் மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கும் பொழுது கன்னியாகுமரி மாவட்டம் கேரளத்தின் திருவாங்குதூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்தது. இங்கு பிறந்த தினமலர் நிறுவனர் ராமசுப்பு அய்யர் திருவாங்குதூர் மன்னரின் தொந்தரவுக்கு ஆளானார். அதனால் குமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க போராடிய மார்சல் நேசமணி, சங்கரலிங்கம் போன்றவர்களுடன் இணைந்து போராடினார். அவருடைய நன்மைக்காக இந்த போராட்டம் (இல்லை என்றால் குமரி மாவட்டம் தமிழகத்தில் இருந்தால் என்ன, கேரளாவிடம் இருந்தால் என்ன, எல்லாம் இந்தியாவில் தானே இருக்கிறது – என்று ராமசுப்பு அய்யர் தினமலரில் எழுதி இருப்பார் )

    இரண்டு – 2008 ஆண்டுகளில் அலைக்கற்றை ஊழல் பற்றி வட இந்திய ஏடுகள், தமிழக ஆங்கில ஏடுகள் எல்லாம் எழுதி பல மாதங்கள் ஆகியும் தினமலர் அதைப் பற்றி ஒரு வரி கூட எழுதவில்லை. ஊழலே நடக்கவில்லை என்று ஆ. ராசாவும் , சிதம்பரமும் மண்ணு மோகனை சந்தித்து விளக்கியதாக தினமலர் செய்தி வெளியிட்டது. என்னடா தினமலம் இப்படி பண்றானே என்ன காரணம் என்று யோசித்தால் …….ஆங் , தினமலர் நிறுவனர் ராமசுப்பு அய்யரின் தபால் தலையை நம்ம திகார் அமைச்சர் ஆண்டிமுது ராசா வெளியிடுகிறார். அவர் அதை வெளியுட்டு முடிக்கும் வரை நம்ம தினமலம் அலைக்கற்றை ஊழல் பற்றி ஒரு வார்த்தை கூட எழுதவில்லை – என்னே பத்திரிகை தர்மம்.
    அதன்பின்னர் தமிழக் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னரே தினமலம் அலைக்கற்றை ஊழல் பற்றி எழுத ஆரம்பித்தது. தபால் தலை தான் வெளியிட்டாச்சா அப்புறம் என்ன, எழுத வேண்டியதுதானே..மானம் கெட்ட பிழைப்பு .. ..

    (இதே போன்றே தேவிகுளம், பீர்மேடு தமிழகத்துடன் இணைக்க போராடிய பொழுது நம்ம பெருந்தலைவர் காமராசு அய்யா மேடாவது, குளமாவது எல்லாம் இந்தியாவில் தான் இருக்கு என்று தடுத்துவிட்டார். அதன் பலனை இப்பொழுது அனுபவிக்கிறோம்.)

  10. ஒரு கவிதை ஒரு கோடி விடையங்களை சுமந்து வந்திருக்கிறது. ஆன்மாவைக்கூட வலிஎடுக்கசெயும் இந்த கவிதையைப்பார்க்கும் போது
    தமிழ்நாடு இனியும் இந்திய மத்திய அரசின் கீழ் இயங்கத்தான் வேணுமா?
    தமிழ்நாட்டின் படித்தமாணவார்கள் இதை கருத்தில் கொள்ளமாட்டார்களா?
    உடனடி மாற்றம் ஏற்படாதா?
    ஈழத்தமிழர்கள் எங்களைப்போல் நீங்களும் அடிமையாகத்தான் இருக்கப்போகிறீர்களா?

  11. சிறு சிறு தொழிற்சாலைகள், கதவை மூடிவிட்டன. பாத்திரப் பட்டறை, தோல் தொழிற்சாலைகள், மர அறுவை மில்கள், மருந்து கம்பெனிகள், பால் விற்பனை நிலையங்கள், மாவுமில்கள் போன்ற ஏராளமான இயக்கங்கள், மின்வெட்டால் சீரழிந்துவிட்டன.அன்றாடக் கூலிக்கு பணிபுரியும் ஏழைத்தொழிலாளர்கள், கூலியின்றி, வேலையின்றி, பட்டினிச் சாவை நோக்கிப் பயணிக்கின்றனர். வட்டிக்கு வாங்கி முதலீடு செய்தோர், மீள வழியின்றி முழிக்கின்றனர். அடுக்குமாடி வீட்டில் குடியிருப்போர், தண்ணீர் பெற வழியின்றித் தவிக்கின்றனர்.தேர்வு நேரத்தில், வாழ்க்கையை நிச்சயிக்கும் தேர்விற்குப் படிக்க வழியின்றி, மாணவர்கள் வாடிநிற்கின்றனர். வாழ்க்கைத் திசையே மாறிவிடுமோ என, அஞ்சி நடுங்குகின்றனர். கடன் வாங்கி படிக்க வைக்கும் பெற்றோர், கலங்கி நிற்கின்றனர்.அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், அறுவை சிகிச்சைகளை செய்ய இயலாமல், நோயாளிகள் மெல்லச் சாகின்றனர். கணினிமயமாக்கப்பட்ட அரசு, தனியார் அலுவலகங்கள், எந்தப் பணியும் மேற்கொள்ள இயலாது, இயக்கத்தைப் படிப்படியாக குறைத்து இன்னல்படுகின்றன.மக்கள் வாழ்க்கையே ஸ்தம்பித்து நிற்கிறது. அன்றாட வாழ்க்கை உதயமில்லாமல், அஸ்தமனமாகவே நிற்கிறது. எண்ணிறந்தவர்களின் வயிற்றெரிச்சல், சுட்டெரிக்காமல் விடாது!அல்லல்படும் அனைவரின் சாபமும், வயிற்றெரிச்சலும், ஆதங்கத்திலிருந்து ஆர்ப்பரிப்பாக மாறி, ஆழியின் சூறாவளியாக வந்து, உங்கள் கூட்டத்தை அழித்துவிட, ஆண்டவன் தீர்மானித்து விடுவான். அல்லல்படுவோரை அதிக காலம், ஆண்டவன் கைவிட்டு விடுவதில்லை. அணு உலை ஆதரவுக் குரல் ஓங்கி ஒலிக்கும்; உங்கள் அடாவடிக்கு சாவு மணி அடிக்கும்!

    • there 7000 mega watts power shortage in tamil nadu.If we start KKNPP we will get 500 mega watts power.This is the statement from central minister Narayanasamy.

      My questions to you:
      1.there is no gurantee that this power will be for public useage or MNCs.

      2.what you do for remaining 6500 mega watts.

      3.They said it is 2000 mega watts capacity,who will consume other 1500 mega watts?

  12. இனி தினந்தோறும் 8 மணி நேர மின்வெட்டாமே..?
    கூடாங்குளம் திறக்கும்வரை இதுதான் திட்டமாமே. ..

    போராட்டக்காரளுக்கும் பொதுசனங்களுக்கும்
    அரசு
    வம்பிலத்து விடுவது வாடிக்கைதான்….

    நமது விளக்கு எறியும் குடிலருகில்
    அவர்கள் பங்களாவுக்கு
    தாயாராகும் மின்சாரமா..?

    பூகம்பம் வந்து போன பின்பு
    மூக்கை பிடித்துக் கொண்டே
    எட்டிப்பார்த்து விட்டு போவீர்கள்..!

    இதற்காகவா..?

    நமது வயிறு இளைக்க
    அவ்ர்கள் வயிறு பெருத்தார்கள்..!

    அவர்கள் வெண்னிறமாக ஆடை அணிவதற்கு
    நாம் ஏன் அழுக்கானோம்..?

  13. தமிழ் கவிதையில் விளையாடுகிறது. அருமை. ஒவ்வொன்றும் தங்க எழுத்துக்கள். ஒரு விண்ணப்பம். இதை முடிந்தால் தமிழ் பேசும் புது பாப்பான்களாகிய சிதம்பரம், அப்துல் கோமாளி, போன்றவர்களுக்கு நகல் எடுத்து அனுப்பவும். மான ரோசம் இருந்தால் படித்துப் பார்த்து சாகட்டும்.

  14. “புதுச்சேரியில் போட்ட சரக்கு
    தில்லிக்கு போயும் தெளியவில்லை நாராயணசாமிக்கு”

    சாட்டை அடி வரிகள் .

    படிக்காத முட்டாள்கள்
    பாரத நாட்டை ஆண்டால்
    இதுதான் கதி
    மெத்தப்படித்து
    மத்தியில் ஆண்டாலும் அவர்கள்
    அமெரிக்காவின் அடிவருடிகளாகத்தான்
    இருப்பர் .
    பாரத தாய்க்கு இதுதான் விதி

  15. ஒத்துக்கொள்ளாத ஈராக்குக்கு
    குண்டுவீச்சு !
    ஒத்துக்கொண்ட இந்தியாவுக்கு
    கதிர் வீச்சு !
    உதவாது வெறும் வாய்ப்பேச்சு..

  16. சங்கரன்கோவில் இடைத் தேர்தலை விட மிக முக்கியமானது, வரக்கூடிய இந்திய நாடாளுமன்றத் தேர்தல். இந்த தேர்தலில் தமிழர் நலன் சார்ந்த கட்சிகள் எல்லாம் ஒரு கூட்டணியின் கீழ் வர வேண்டும். மக்கள் வலிமையான மூன்றாவது அணியை ஆதரிக்க தயாராகவே இருக்கிறார்கள். ஆனால், தலைவர்கள் தான் தன்முனைப்பு பார்க்காமல் ஒன்று படவேண்டும்.

    விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம்,ம தி மு க, நாம் தமிழர், இந்திய கம்யூனிஸ்ட், மனித நேய மக்கள் கட்சி போன்றவை ஒரே அணியில் வர வேண்டும்.

    அரசியல் சார்பற்ற இயக்கங்கள் சாந்த தோழர்களே, தயைகூர்ந்து இக்கருத்தினை வலியுறுத்துவோம். ஒன்று படுவோம், வெற்றி பெறுவோம்.

    இந்தியாவில் தேசிய இனங்களின் கூட்டாட்சியை ஏற்படுத்த முனைவோம்.

  17. காஙிரசு கோமாளிகலை சுண்ணாம்பு காளவாயில் போட்டால் எல்லாம் சரியாகிவிடும்

  18. அறிந்து கொள்வோம் !
    அபாயம்
    அணு உலை மட்டுமல்ல,
    அதனை கொண்டுவரும் அரசியல்…
    ஆதரிக்கும் கட்சிகள்

  19. நாராயணசாமி வாயிலிருந்தே
    நாலாயிரம் மெகாவாட்டும்
    அப்துகலாம் வாயிலிருந்து
    ஆராயிரம் மெகாவாட்டும்
    தமிழகத்திற்கு கிடைக்கும்போது
    கூடங்குளம் அணு மின்சாரம்
    எதுக்குடா !!!

  20. மன்மோகனோ
    இந்த குவலயத்திற்கே மாமா !

    கனிமொழி ஆபத்தை
    காப்பதே பெரும்பாடு !
    அணு உலை பாதிப்பில்
    அழியட்டும் தமிழ்நாடு
    இது கருணாநிதி தமிழனின் நிலைப்பாடு !
    ரொம்பவும் நோண்டிக்கேட்டால் நோ கமெண்ட்ஸ் !

    ஒத்துக்கொள்ளாத ஈராக்குக்கு
    குண்டுவீச்சு !
    ஒத்துக்கொண்ட இந்தியாவுக்கு
    கதிர் வீச்சு !

    புதுச்சேரியில் போட்ட சரக்கு
    தில்லிக்கு போயும் தெளியவில்லை நாராயணசாமிக்கு !

    ”அணு உலை.. யாரையும்… ஒன்னுமே செய்யாதாம் !
    காசை கொட்டிய வேலை வீணாகிவிடுமாம் !”

    கட்டிய அணு உலை வீணாகக் கூடாதென்றால்
    கொட்டி மூடுங்கள் அதில் காங்கிரசு கழிவுகளை.

    பொய்யிலிருந்து
    மின்சாரம் தயாரிக்கும்
    புதுவழி ஒன்றிருந்தால்
    நாராயணசாமி வாயிலிருந்தே
    நாலாயிரம் மெகாவாட்டும்
    அப்துகலாம் வாயிலிருந்து
    ஆராயிரம் மெகாவாட்டும்
    தமிழகத்திற்கு கிடைக்கும்.

    அணு உலைகளை விடவும் ஆபத்தானவை
    இந்த அயோக்கியர்களின் வாய்கள்.

    கவிதையை பாராட்ட வார்த்தைகள் இல்லை.
    தெரிவு செய்யப்பட்ட வரிகள் திக்கெட்டும் பரவட்டும்.
    நன்றி.

  21. கூடங்குலம் அணுமின் திறப்பை எதிர்க்கும் இந்த கூட்டம் இவர்கள்தான் அணுமின் சக்தியின் “பெரிய அறிவியல் மேதை” என்று நினைக்கிரது. உலகம் முழுவதும் உள்ள மக்கள் எல்லாம் அணுமின்சாரத்தைத்தான் பயன் படுத்தி வருகிரர்கள்.நமக்கு மின்சாரம் இல்லாவிட்டால் பெரும்பாலான தொழிளாலர்கள் அல்லல் படுவார்கள். வேலையில்லாமல் குடும்பத்துடன் பட்டினிகிடைக்க வேண்டியிருக்கும். இந்த நிலை நமக்கு தேவைதானா!

  22. AHA!! DEAR ALL!!
    PLEASE WAIT…
    GOD IS THE GREATEST POWER..
    WAIT TILL HE COMPLETELY ANNIHILATES ALL EVILS–LIKE WHAT HAPPENED
    IN ROME-AT POMPAII ..
    THAT WAS THE BEGINNING OF END OF ROME..
    THE ONLY END IS VERY NEAR…
    YOU JUST KEEP YOUR FINGERS CROSSED..
    AS WE CAN DO NOTHING NOW..BECAUSE EVERY THING IS GONE
    BEYOND REPAIR..
    LUST GREED,ALL EVILS FILLED WITH OUR INDIAN POLITICIANS..
    SO THE WAY OUT IS COMPLETE DESTRUCTION..BY ALMIGHTY..
    AT THAT TIME ALL OUR PAIN WILL BE RELIEVED…PEOPLE LIKE US WILL
    BE ENTERING THE BRIGHTEST LAND OF LOVE,TRUTH AND HAPPINESS…
    HAVE FAITH IN YOU..BECAUSE YOU WANTED ONLY TRUTH AND LOVE….
    AND YOU WILL GET PEACE AND HARMONY VERY SOON..
    I AM NOT A CHRISTIAN..I BELIEVE IN TRUTH,LOVE AND PEACE.
    ALL THE BEST…

  23. கூடன்குலம் அணு உலை வேண்டாம் என்று அந்த பகுதி மக்கள் போராடுகிரார்கலம்!! பொய்யை பலமுறை கூறி உண்மையாக்க முயற்சிக்கிறார்கள். போராடுபவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில தேச துரோகிகள்தான். அனைத்து மக்களும் அணு மின்சாரம் வேண்டும் என்றுதான் அமைதியாக இருக்கிறார்கள். ஏதேனும் பேசினால் இந்த தற்குறி கூட்டம் நம்மை தாக்கிவேடுமோ என்று பயந்து கொண்டு வாழ இருக்கிறார்கள்.

  24. ரஷ்ய அணு உலையென்றாலும் அமெரிக்க ஆதிபத்தியம் என்று சொல்லியாகி விட்டது.

    ஓரே ஒரு விஷயம்தான் குறைகிறது. என்னவென்று கண்டு பிடியுங்கள் பார்க்கலாம். கரெக்ட் – பார்ப்பன சதி என்பதுதான் சரியான விடை.

Leave a Reply to நேயத்தமிழ் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க