privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காகூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடு! சென்னை பொதுக்கூட்ட காட்சிகள்!!

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடு! சென்னை பொதுக்கூட்ட காட்சிகள்!!

-

ஆபத்தான அணு உலை வேண்டாம் ! அனைவருக்கும் மின்சாரம் வேண்டும் ! என்ற தலைப்பில் சென்னை எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட் பகுதியில், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புக்களின் சார்பில்  பிப்ரவரி 25ம் தேதி, மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது.  அப்பகுதி உழைக்கும் மக்கள், வியாபாரிகள், சென்னை முழுவதிலிமிருந்து திரண்ட அரசியல் ஆர்வலர்கள், என அனைவரின் ஆதரவோடும்  கூட்டம் நடைபெற்றது. சரியாக 6 மணிக்கு நிகழ்ச்சிகள் தொடங்கின. இந்த கூட்டத்திற்கு  பு.ஜ.தொ.மு  மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன் தலைமை வகித்தார்.  பின்னர் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக்கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

பவர் கட்டு, பவர் கட்டு,  பன்னாட்டு கம்பெனிக்கு பாடையை கட்டு என்ற பாடல்  நாட்டின் மொத்த மின்சாரத்தையும் விழுங்கி சிறு தொழில்களுக்கும் மக்களுக்கும்  இருளைத் தருகின்ற பன்னாட்டு கம்பெனியை ஒழித்துக்கட்டாமல் தீர்வு இல்லை என்றது. ”கரண்ட் வேணுமின்னா ரிஸ்க் எடுக்க வேண்டும் என்ற மக்களிடம் உபதேசம் செய்யும் அறிவாளிகளை’ அம்பலப்படுத்தி தனது வாழ்க்கையையே தினமும் ரிஸ்க் ஆக கொண்டு செல்லும் மீனவர், கட்டிடத்தொழிலாளி, சுரங்கத்தொழிலாளி, ஓட்டுனர்  ஆகிய தொழிலாளர்களின்  உழைப்பினை பறிக்கும் பன்னாட்டு முதலாளிகளுக்கு எதிரான “மண்ணைத்தோண்டி வெட்டியெடுக்கும் தங்கம் யாருக்கு? என்ற பாடல் முழங்கியது.

யாருக்கோதானே பிரச்சினை நமக்கென்ன என்று இல்லாமல் நாம் உழைப்போராய் ஒன்றுபட வேண்டும் என்பதை வலியுறுத்தி ”உழைக்கும் மக்களே ஒன்று படு” என்ற பாடல் இசைக்கப்பட்டது. கூடங்குளம் மக்களின் போராட்டம் எந்த திசைவழியில் செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில்அணு உலையை விரட்டணும்னா போராட்டத்த மாத்தணும், கூடங்குளம் இன்னுமொரு நந்திகிராம மாறணும்என்று இசைக்கப்பட்ட பாடலுடன் தோழர்கள் மற்றும் மக்களின் பலத்த கைத்தட்டலுடன் கலை நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

அடுத்ததாக “ஆதிக்க அணு உலை அடங்காது இடிந்த கரைஎன்ற தனது கவிதையை மகஇக தோழர் துரை.சண்முகம் வாசித்தார். 30 லட்சம் கொள்ளையடித்தால் என்கவுண்டர், நாட்டையே கொள்ளையடித்தால் சீப் மினிஸ்டர் என்ற ஆரம்பித்து பஸ் ஸ்டாண்ட் கக்கூசின் நோயிலிருந்து காக்காத அரசு அணு விபத்திலிருந்து நம்மை எப்படி பாதுகாக்கும்? என்ற எள்ளலுடன் பொய்யில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் வந்தால் அதன் மூலம் பொய்யாய்ப்புழுகும் நாராயணசாமி மற்றும் கலாமின் வாயில் 10 ஆயிரம் MW மின்சாரம்  தயாரிக்கும்  திட்டத்தையும் முன்வைத்தார். கூடங்குளம் மக்களின் போராட்டத்தை வரவேற்றும் அப்போராட்டப் புயல் கரை சேர்ந்தே தீரும் என்பதையும் கூறி தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்ற கொள்கையின்படி அனைத்தையும் அன்னியனுக்கு தாரைவார்த்துவிட்ட இந்த அரசு,  நாட்டை கொள்ளையடித்து அடிமையாக்குவதற்கு பெயர் மறுகாலனியாக்கம் என்றால், நாங்கள்தான் நாட்டையே மக்களை காக்கும் நக்சல்பரி” என்று தனது கவிதையை நிறைவு செய்தார்.

அடுத்ததாக மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ தனது சிறப்புரையில் “2010ம் ஆண்டுக்குள் 50,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படும் என்று அப்துல் கலாமின் குரு விக்ரம் சாராபாய் சவடால் விட்டுப் போனதையும் நாட்டில் உள்ள 20 அணு மின் உலைகள் மூலம் தற்போது கிடைப்பதோ 4130 மெகாவாட் என்றும் அந்த அணு உலைகள் இயக்கவே 4000 மெகாவாட் மின்சாரம் அளிக்கப்படுவதையும் கூறி மின்வெட்டிற்கு அணு உலை மாற்று என்பதே பொய் என்றார்.

அந்த அணு உலைகள் பாதுகாப்பானவை என்று மக்களிடம் பொய்ப்பிரச்சாரம் செய்வதையும் செர்னோபிலில் ஏற்பட்ட கதிர்வீச்சு பரவி 2700 ச.கி தாண்டியுள்ள இங்கிலாந்தில் ஆடுகள் லட்சக்கணக்கில் புதைக்கப்பட்டதையும் கல்பாக்கம் பகுதி  மக்கள் தற்போது அணு கதிர்வீச்சினால் முன்னைவிட பல மடங்கு நோய்களினால் பாதிக்கப்பட்டு இருப்பதை டாக்டர் மஞ்சுளா அம்பலப்படுத்தியுள்ள அதே வேளையில், விளம்பரத்தில் டாக்டர் சாந்தா கூலிக்கு மாரடிப்பதையும் சுட்டிக்காட்டிப்பேசினார். அணு உலை பாதுகாப்பானது அல்ல என்பதற்கு இதுவரை நடந்த அணுக் கதிர்வீச்சு விபத்துக்களே சாட்சி என்றும்  இருந்தும் அணு உலை பாதுகாப்பானது என்று கூறும் விஞ்ஞானிகள் முதலாளிகளின் கைக்கூலிகள் என்பதை அம்பலப்படுத்தினார்.

பொதுசொத்துக்களை விழுங்க தனியார் மயம் – தாராளாமயம் – உலகமயக் கொள்கைகள் காத்திருப்பதையும் கூறி அதற்கு எதிராக உழைக்கும் மக்கள்  நெஞ்சுரத்தோடு போராடிக் கொண்டிருப்பதையும் மக்களைக் காக்க அது மட்டுமே தீர்வு” என்று கூறினார்.

அணுசக்திக்கெதிரான மக்கள் இயக்கத்தின் தலைவர் மனோ தங்கராஜ்  தனது சிறப்புரையில் “கூடங்குளம் மக்களின் போராட்டத்தை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்ற ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புக்களுக்கு நன்றியை தெரிவித்து, காங், பிஜேபி, இந்து முன்னணி கூட்டணிகள் இப்போராட்டத்தை நசுக்க முயலும் போதும் இப்போராட்டம் இவ்வளவு நாள் நீடிப்பதற்கு காரணம் அதை காக்க ம.க.இ.க போன்ற பல அமைப்புக்கள் தமிழகம் முழுவதும் தரும் ஆதரவே என்றும் கூறினார். போராட்டத்திற்கு வெளி நாட்டில் இருந்து பணம் வருவதாக ஒரு நாட்டின் பிரதமர் பொய் பேசுவதையும் மக்களின் போராட்டம் வெளி நாட்டு நிதியில் இருந்து அல்ல உழைக்கும் மக்களின் நிதியில் இருந்து நடப்பதையும் விளக்கினார். கூடங்குளத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறப்படுவதற்கு ஏற்கனவே 6 அடுக்கு பாதுகாப்பு உள்ள டெல்லியிலேயே அணு உலையை வைத்துக் கொள்ளுங்கள் என்றார். அணு உலை எதிர்ப்பு போராட்டம் இன்றல்ல, 25 ஆண்டுகளாக நீடித்து வருவதற்கு 1988ல் அணு உலைக்கு எதிரான போராட்ட்த்தில் தான் குளச்சலில் கைது செய்யப்பட்டதையும் கூறி  புரட்சிகர அமைப்புக்களின் துணையோடு அணு உலையை தடுப்போம்”” என்றும் கூறினார்.

அடுத்ததாக கூடங்குளத்தின் போராளிகள் மேடையில் அறிமுகம் செய்யப்பட்டனர். அப்பெண்களின் ”வெல்கவே! அணு உலையை எதிர்க்கும் மக்களின் போராட்டம் வெல்கவே ” என்ற பாடலை கூட்டத்திற்கு வந்திருந்த நூற்றுக்கணக்கான கூடங்குளம் பெண்கள் கைத்தட்டி சேர்ந்து பாடினார்கள். அணு உலையை வைப்பதற்கு எங்கள் நிலம் என்ன சாக்கடையா? என்ற அவர்களின் கேள்வி சூடு சொரணை உள்ள எவரையும் அசைத்துப் பார்ப்பதாக இருந்தது.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப்பொதுச்செயலர் தோழர் மருதையன் “இந்த கூடங்குளம் போராட்டம் என்பது  ஓட்டுக் கட்சிகள் அல்லாமல் தன்னந்தனியாக மக்களால் மட்டுமே நடத்தப்படுவதுதான். இது தமிழகத்திற்கே முன் மாதிரி அதனால்தான் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. ஓட்டுக்கட்சிகளை தமிழகத்திலிருந்தே அகற்ற இது ஒரு முன்னறிவிப்பு” என்று  தனது சிறப்புரையை தொடங்கினார்.

திடீரென போராட்டம் செய்கிறார்கள் என்று கூறுபவர்கள் மஹாராஷ்டிராவில் பிரெஞ்சு நிறுவனத்துடனான 10,000மெகாவாட் அணு உலைக்கு எதிராக விவசாயிகள் ஒரு அங்குலம் கூட தரமுடியாது என்று நடத்தும் போராட்டத்தை ஆதரிப்பது இல்லை என்பதை அம்பலப்படுத்தினார். பல ஆயிரம் கி.மீ தாண்டியும் அணுக்கதிர் வீச்சினால் ஏற்பட்ட பாதிப்புக்களையோ உயிர்ப்பலிகளையோ அரசு திட்டமிட்டு இருட்டடிப்பு செய்கிறது . இது ஏதோ செர்னோபில், புகுஷிமா, கூடங்குளம் பிரச்சினை அல்ல, இந்தியாவின் உலகம் முழுமைக்குமான பிரச்சினை. பல தலைமுறைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்குதான் இந்த மக்களின் போராட்டம் தொடர்கிறதென்பதையும் இதில் மக்களின் கருத்தையே கேட்காத தமிழக அரசின் நிபுணர் குழு ஒரு ஏமாற்று வேலை” என்று கூறினார்.

மேலும் “நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்படுவதையும், மின்வெட்டு சமமாக பிரிக்கப்படாமல் அதில் 70% சிறு தொழில்கள் மேல் சுமத்தப்படுவதையும் இதனால் சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டு  நசிந்து போகிறது எடுத்துக்காட்டிப் பேசினார். சென்னையில் அளிக்கப்படும் மொத்த மின்சாரத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் கழிவறைக்கும் கூட ஏசியை பயன்படுத்தும் மேட்டுக்குடிகள் 80%  மின்சாரத்தை எடுத்துக்கொண்டு அதனால் ஏற்படும் பற்றாக்குறையை சிறு தொழில்கள் மற்றும் உழைக்கும் மக்களின் மீது சுமத்துவதை விவரங்களுடன் அம்பலப்படுத்தினார்.

மருத்துவம், தண்ணீர் என அனைத்தையுமே விற்பனைப் பண்டமாக மாற்றிய தனியார்மயம் தாராளமயம் உலகமயம் தான் மின்சாரத்தையும் மாற்றி உள்ளது. மின்சாரத்தை தேக்கிவைக்க முடியாது என்ற ஒரே காரணத்திற்காக ஒரு யூனிட் மின்சாரம் ஒரே மாதத்தில் ரூ1.10 முதல் ரூ12.00 வரை தனியார் முதலாளிகளால் விற்கப்படுகிறது.

தனியாரிடம் 19 ரூ/ யூனிட்க்கு மின்சாரத்தை வாங்கும் அரசு, நோக்கியா, போர்டு போன்ற பன்னாட்டு கம்பெனிகளுக்கு சலுகை விலையில் அளிப்பது தான் இந்த மின் பற்றாக்குறைக்கு காரணம் என்றார். மேலும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு தற்போது ரூ5.50ல் வழங்கப்படும் மின்சாரத்தை 3.50ரூ ஆக குறைக்க மின்சார வாரியம் ஒழுங்கு முறை ஆணையத்திடம் முறையிட்டிருக்கும் அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்திப் பேசினார்.

“கடந்த 30 ஆண்டுகளில் ஒரு அணு உலையைக்கூட திறக்காத நாடுகள்தான் இந்தியாவில் அணு உலையை விற்க ஒப்பந்தம் போடுகின்றன. இந்தச் சூழலில் கொண்டுவரப்படும் அணு உலை மின்சாரத்திற்கு அல்ல. அது 17 லட்சம் கோடி ரூபாய்களுக்கு போடப்பட்ட  இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தின் விளைவு. இந்த அணு உலையின் கழிவினை பாதுகாக்க இடம் இன்று வரை உலகில் கண்டுபிடிக்கப்படவே இல்லை என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இதற்கு மாற்று கூடங்குளம் அணு உலையை அங்கே புதைப்பதுதான் ஒரே வழி.  அதை நாட்டின் மீது பற்று கொண்ட நக்சல்பாரிகளால், மக்களுடைய வலிமையால் மட்டுமே சாதிக்க முடியும்” என்று தனது சிறப்புரையை நிறைவு செய்தார்.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சென்னைக்கிளைத் தோழர்களின் நாடகம், ”பன்னாட்டு நிறுவனங்களால் நமது மின்சாரம் பறிக்கப்படுவதையும் அதற்கு மாற்றாக கூறப்படும் அணு உலை என்பது மக்களை கொல்லவந்த இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தின் பிண உலை என்பதையும் தனியார்மயம் தாராளமயம் உலகமயத்தின் விளைவான  இந்த அணு உலையை மக்கள்  அடித்து விரட்ட வேண்டும்” என்பதை வலியுறுத்தும் வகையில் அமைந்தது.

நன்றியுரை பு.மா.இ.மு.-ன் மாநில அமைப்பாளர் தோழர் கணேசன் கூறினார். இறுதியில் பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்துடன் பொதுக்கூட்டம் நிறைவு பெற்றது.

ஆபத்தான அணு உலை வேண்டாம் ! அனைவருக்கும் மின்சாரம் வேண்டும் ! என்பதை வலியுறுத்தும் வகையில் புகைப்படக் காட்சிகள் இந்தக்கூட்டத்தில் இடம் பெற்றது. இந்தக்கூட்டத்தில் சென்னை, கூடங்குளம் பகுதி மக்கள், தொழிலாளர்கள், மாணவர்கள், பெண்கள் உழைக்கும் மக்கள் என 5000த்திற்க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். எம்.ஜி.ஆர் பகுதி மக்களோ இந்த பொதுக்கூட்டத்திற்கு தங்களது நிதியை அள்ளித்தந்தனர்.  பொதுக்கூட்ட செலவுகளுக்காக துண்டேந்தி பெறப்பட்ட 15,000 ரூபாய் என்பது அப்பகுதி மக்கள் இந்த கருத்துக்கு கொடுத்த ஆதரவையே காட்டியது.  கூட்டத்தின் பின்புறம் பார்வையாளர்களுக்காக  நிகழ்ச்சி திரையிடப்பட்டது. அந்த புரஜெக்டருக்கு மின்சாரம் தடைபட்ட போது உடனே அருகில் இருந்த கடைக்காரர் தன்னுடைய கடையில் இருந்து மின்சாரம் கொடுத்து உதவினார்.

கூட்டம் முடிந்த உடன் ஒரு சிறு வியாபாரி,”வழக்கமா 8 மணிக்கு கடைய மூடிட்டு போயிருவேன், இன்னைக்கு கூட்டத்துக்காக கடைசி வரை திறந்திருந்தேன், எங்களுக்கு எவ்வளவு வேணாலும் கரண்டு கட்டு வரட்டும், ஆனா அந்த மக்களோட தாலிய அறுத்துட்டு அணு மின்சாரமெல்லாம் எங்களுக்கு வேண்டாம்” என்று நெகிழ்ச்சியாக சொன்னார். தோழர்கள் நிதி வசூல் செய்த போது பெண் போலீசு உட்பட சில போலிசுக்காரர்களும், “எங்க்கிட்ட கேட்கமாட்டீங்களா” என்று நிதி அளித்தனர்.

கூடங்குளம் அணு உலை என்பது மின்வெட்டை தீர்க்க வந்ததல்ல, அது அமெரிக்க இந்திய அணு சக்தி ஒப்பந்தத்தின் விளைவு, தனியார்மயம் தாராளமயம் உலகமயத்தின் பிரதிபலிப்பு. மின்வெட்டினால் பாதிக்கப்படும் மக்களுக்கு மொத்த மின்சாரத்தையும் பறித்து தங்களுக்கு மின்வெட்டை மட்டுமே பரிசாகத்தரும் பன்னாட்டு கம்பெனிகளையும் அதற்கு சேவை செய்யக்கூடிய அரசு மற்றும் ஓட்டுக்கட்சிகளையும் விரட்டுவது மட்டுமே இதற்கு தீர்வு என்பதாக இந்த பொதுக்கூட்டம் அமைந்தது.

    • ( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )