Thursday, July 18, 2024
முகப்புஉலகம்அமெரிக்காகூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடு! சென்னை பொதுக்கூட்ட காட்சிகள்!!

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடு! சென்னை பொதுக்கூட்ட காட்சிகள்!!

-

ஆபத்தான அணு உலை வேண்டாம் ! அனைவருக்கும் மின்சாரம் வேண்டும் ! என்ற தலைப்பில் சென்னை எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட் பகுதியில், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புக்களின் சார்பில்  பிப்ரவரி 25ம் தேதி, மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது.  அப்பகுதி உழைக்கும் மக்கள், வியாபாரிகள், சென்னை முழுவதிலிமிருந்து திரண்ட அரசியல் ஆர்வலர்கள், என அனைவரின் ஆதரவோடும்  கூட்டம் நடைபெற்றது. சரியாக 6 மணிக்கு நிகழ்ச்சிகள் தொடங்கின. இந்த கூட்டத்திற்கு  பு.ஜ.தொ.மு  மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன் தலைமை வகித்தார்.  பின்னர் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக்கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

பவர் கட்டு, பவர் கட்டு,  பன்னாட்டு கம்பெனிக்கு பாடையை கட்டு என்ற பாடல்  நாட்டின் மொத்த மின்சாரத்தையும் விழுங்கி சிறு தொழில்களுக்கும் மக்களுக்கும்  இருளைத் தருகின்ற பன்னாட்டு கம்பெனியை ஒழித்துக்கட்டாமல் தீர்வு இல்லை என்றது. ”கரண்ட் வேணுமின்னா ரிஸ்க் எடுக்க வேண்டும் என்ற மக்களிடம் உபதேசம் செய்யும் அறிவாளிகளை’ அம்பலப்படுத்தி தனது வாழ்க்கையையே தினமும் ரிஸ்க் ஆக கொண்டு செல்லும் மீனவர், கட்டிடத்தொழிலாளி, சுரங்கத்தொழிலாளி, ஓட்டுனர்  ஆகிய தொழிலாளர்களின்  உழைப்பினை பறிக்கும் பன்னாட்டு முதலாளிகளுக்கு எதிரான “மண்ணைத்தோண்டி வெட்டியெடுக்கும் தங்கம் யாருக்கு? என்ற பாடல் முழங்கியது.

யாருக்கோதானே பிரச்சினை நமக்கென்ன என்று இல்லாமல் நாம் உழைப்போராய் ஒன்றுபட வேண்டும் என்பதை வலியுறுத்தி ”உழைக்கும் மக்களே ஒன்று படு” என்ற பாடல் இசைக்கப்பட்டது. கூடங்குளம் மக்களின் போராட்டம் எந்த திசைவழியில் செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில்அணு உலையை விரட்டணும்னா போராட்டத்த மாத்தணும், கூடங்குளம் இன்னுமொரு நந்திகிராம மாறணும்என்று இசைக்கப்பட்ட பாடலுடன் தோழர்கள் மற்றும் மக்களின் பலத்த கைத்தட்டலுடன் கலை நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

அடுத்ததாக “ஆதிக்க அணு உலை அடங்காது இடிந்த கரைஎன்ற தனது கவிதையை மகஇக தோழர் துரை.சண்முகம் வாசித்தார். 30 லட்சம் கொள்ளையடித்தால் என்கவுண்டர், நாட்டையே கொள்ளையடித்தால் சீப் மினிஸ்டர் என்ற ஆரம்பித்து பஸ் ஸ்டாண்ட் கக்கூசின் நோயிலிருந்து காக்காத அரசு அணு விபத்திலிருந்து நம்மை எப்படி பாதுகாக்கும்? என்ற எள்ளலுடன் பொய்யில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் வந்தால் அதன் மூலம் பொய்யாய்ப்புழுகும் நாராயணசாமி மற்றும் கலாமின் வாயில் 10 ஆயிரம் MW மின்சாரம்  தயாரிக்கும்  திட்டத்தையும் முன்வைத்தார். கூடங்குளம் மக்களின் போராட்டத்தை வரவேற்றும் அப்போராட்டப் புயல் கரை சேர்ந்தே தீரும் என்பதையும் கூறி தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்ற கொள்கையின்படி அனைத்தையும் அன்னியனுக்கு தாரைவார்த்துவிட்ட இந்த அரசு,  நாட்டை கொள்ளையடித்து அடிமையாக்குவதற்கு பெயர் மறுகாலனியாக்கம் என்றால், நாங்கள்தான் நாட்டையே மக்களை காக்கும் நக்சல்பரி” என்று தனது கவிதையை நிறைவு செய்தார்.

அடுத்ததாக மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ தனது சிறப்புரையில் “2010ம் ஆண்டுக்குள் 50,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படும் என்று அப்துல் கலாமின் குரு விக்ரம் சாராபாய் சவடால் விட்டுப் போனதையும் நாட்டில் உள்ள 20 அணு மின் உலைகள் மூலம் தற்போது கிடைப்பதோ 4130 மெகாவாட் என்றும் அந்த அணு உலைகள் இயக்கவே 4000 மெகாவாட் மின்சாரம் அளிக்கப்படுவதையும் கூறி மின்வெட்டிற்கு அணு உலை மாற்று என்பதே பொய் என்றார்.

அந்த அணு உலைகள் பாதுகாப்பானவை என்று மக்களிடம் பொய்ப்பிரச்சாரம் செய்வதையும் செர்னோபிலில் ஏற்பட்ட கதிர்வீச்சு பரவி 2700 ச.கி தாண்டியுள்ள இங்கிலாந்தில் ஆடுகள் லட்சக்கணக்கில் புதைக்கப்பட்டதையும் கல்பாக்கம் பகுதி  மக்கள் தற்போது அணு கதிர்வீச்சினால் முன்னைவிட பல மடங்கு நோய்களினால் பாதிக்கப்பட்டு இருப்பதை டாக்டர் மஞ்சுளா அம்பலப்படுத்தியுள்ள அதே வேளையில், விளம்பரத்தில் டாக்டர் சாந்தா கூலிக்கு மாரடிப்பதையும் சுட்டிக்காட்டிப்பேசினார். அணு உலை பாதுகாப்பானது அல்ல என்பதற்கு இதுவரை நடந்த அணுக் கதிர்வீச்சு விபத்துக்களே சாட்சி என்றும்  இருந்தும் அணு உலை பாதுகாப்பானது என்று கூறும் விஞ்ஞானிகள் முதலாளிகளின் கைக்கூலிகள் என்பதை அம்பலப்படுத்தினார்.

பொதுசொத்துக்களை விழுங்க தனியார் மயம் – தாராளாமயம் – உலகமயக் கொள்கைகள் காத்திருப்பதையும் கூறி அதற்கு எதிராக உழைக்கும் மக்கள்  நெஞ்சுரத்தோடு போராடிக் கொண்டிருப்பதையும் மக்களைக் காக்க அது மட்டுமே தீர்வு” என்று கூறினார்.

அணுசக்திக்கெதிரான மக்கள் இயக்கத்தின் தலைவர் மனோ தங்கராஜ்  தனது சிறப்புரையில் “கூடங்குளம் மக்களின் போராட்டத்தை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்ற ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புக்களுக்கு நன்றியை தெரிவித்து, காங், பிஜேபி, இந்து முன்னணி கூட்டணிகள் இப்போராட்டத்தை நசுக்க முயலும் போதும் இப்போராட்டம் இவ்வளவு நாள் நீடிப்பதற்கு காரணம் அதை காக்க ம.க.இ.க போன்ற பல அமைப்புக்கள் தமிழகம் முழுவதும் தரும் ஆதரவே என்றும் கூறினார். போராட்டத்திற்கு வெளி நாட்டில் இருந்து பணம் வருவதாக ஒரு நாட்டின் பிரதமர் பொய் பேசுவதையும் மக்களின் போராட்டம் வெளி நாட்டு நிதியில் இருந்து அல்ல உழைக்கும் மக்களின் நிதியில் இருந்து நடப்பதையும் விளக்கினார். கூடங்குளத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறப்படுவதற்கு ஏற்கனவே 6 அடுக்கு பாதுகாப்பு உள்ள டெல்லியிலேயே அணு உலையை வைத்துக் கொள்ளுங்கள் என்றார். அணு உலை எதிர்ப்பு போராட்டம் இன்றல்ல, 25 ஆண்டுகளாக நீடித்து வருவதற்கு 1988ல் அணு உலைக்கு எதிரான போராட்ட்த்தில் தான் குளச்சலில் கைது செய்யப்பட்டதையும் கூறி  புரட்சிகர அமைப்புக்களின் துணையோடு அணு உலையை தடுப்போம்”” என்றும் கூறினார்.

அடுத்ததாக கூடங்குளத்தின் போராளிகள் மேடையில் அறிமுகம் செய்யப்பட்டனர். அப்பெண்களின் ”வெல்கவே! அணு உலையை எதிர்க்கும் மக்களின் போராட்டம் வெல்கவே ” என்ற பாடலை கூட்டத்திற்கு வந்திருந்த நூற்றுக்கணக்கான கூடங்குளம் பெண்கள் கைத்தட்டி சேர்ந்து பாடினார்கள். அணு உலையை வைப்பதற்கு எங்கள் நிலம் என்ன சாக்கடையா? என்ற அவர்களின் கேள்வி சூடு சொரணை உள்ள எவரையும் அசைத்துப் பார்ப்பதாக இருந்தது.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப்பொதுச்செயலர் தோழர் மருதையன் “இந்த கூடங்குளம் போராட்டம் என்பது  ஓட்டுக் கட்சிகள் அல்லாமல் தன்னந்தனியாக மக்களால் மட்டுமே நடத்தப்படுவதுதான். இது தமிழகத்திற்கே முன் மாதிரி அதனால்தான் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. ஓட்டுக்கட்சிகளை தமிழகத்திலிருந்தே அகற்ற இது ஒரு முன்னறிவிப்பு” என்று  தனது சிறப்புரையை தொடங்கினார்.

திடீரென போராட்டம் செய்கிறார்கள் என்று கூறுபவர்கள் மஹாராஷ்டிராவில் பிரெஞ்சு நிறுவனத்துடனான 10,000மெகாவாட் அணு உலைக்கு எதிராக விவசாயிகள் ஒரு அங்குலம் கூட தரமுடியாது என்று நடத்தும் போராட்டத்தை ஆதரிப்பது இல்லை என்பதை அம்பலப்படுத்தினார். பல ஆயிரம் கி.மீ தாண்டியும் அணுக்கதிர் வீச்சினால் ஏற்பட்ட பாதிப்புக்களையோ உயிர்ப்பலிகளையோ அரசு திட்டமிட்டு இருட்டடிப்பு செய்கிறது . இது ஏதோ செர்னோபில், புகுஷிமா, கூடங்குளம் பிரச்சினை அல்ல, இந்தியாவின் உலகம் முழுமைக்குமான பிரச்சினை. பல தலைமுறைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்குதான் இந்த மக்களின் போராட்டம் தொடர்கிறதென்பதையும் இதில் மக்களின் கருத்தையே கேட்காத தமிழக அரசின் நிபுணர் குழு ஒரு ஏமாற்று வேலை” என்று கூறினார்.

மேலும் “நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்படுவதையும், மின்வெட்டு சமமாக பிரிக்கப்படாமல் அதில் 70% சிறு தொழில்கள் மேல் சுமத்தப்படுவதையும் இதனால் சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டு  நசிந்து போகிறது எடுத்துக்காட்டிப் பேசினார். சென்னையில் அளிக்கப்படும் மொத்த மின்சாரத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் கழிவறைக்கும் கூட ஏசியை பயன்படுத்தும் மேட்டுக்குடிகள் 80%  மின்சாரத்தை எடுத்துக்கொண்டு அதனால் ஏற்படும் பற்றாக்குறையை சிறு தொழில்கள் மற்றும் உழைக்கும் மக்களின் மீது சுமத்துவதை விவரங்களுடன் அம்பலப்படுத்தினார்.

மருத்துவம், தண்ணீர் என அனைத்தையுமே விற்பனைப் பண்டமாக மாற்றிய தனியார்மயம் தாராளமயம் உலகமயம் தான் மின்சாரத்தையும் மாற்றி உள்ளது. மின்சாரத்தை தேக்கிவைக்க முடியாது என்ற ஒரே காரணத்திற்காக ஒரு யூனிட் மின்சாரம் ஒரே மாதத்தில் ரூ1.10 முதல் ரூ12.00 வரை தனியார் முதலாளிகளால் விற்கப்படுகிறது.

தனியாரிடம் 19 ரூ/ யூனிட்க்கு மின்சாரத்தை வாங்கும் அரசு, நோக்கியா, போர்டு போன்ற பன்னாட்டு கம்பெனிகளுக்கு சலுகை விலையில் அளிப்பது தான் இந்த மின் பற்றாக்குறைக்கு காரணம் என்றார். மேலும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு தற்போது ரூ5.50ல் வழங்கப்படும் மின்சாரத்தை 3.50ரூ ஆக குறைக்க மின்சார வாரியம் ஒழுங்கு முறை ஆணையத்திடம் முறையிட்டிருக்கும் அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்திப் பேசினார்.

“கடந்த 30 ஆண்டுகளில் ஒரு அணு உலையைக்கூட திறக்காத நாடுகள்தான் இந்தியாவில் அணு உலையை விற்க ஒப்பந்தம் போடுகின்றன. இந்தச் சூழலில் கொண்டுவரப்படும் அணு உலை மின்சாரத்திற்கு அல்ல. அது 17 லட்சம் கோடி ரூபாய்களுக்கு போடப்பட்ட  இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தின் விளைவு. இந்த அணு உலையின் கழிவினை பாதுகாக்க இடம் இன்று வரை உலகில் கண்டுபிடிக்கப்படவே இல்லை என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இதற்கு மாற்று கூடங்குளம் அணு உலையை அங்கே புதைப்பதுதான் ஒரே வழி.  அதை நாட்டின் மீது பற்று கொண்ட நக்சல்பாரிகளால், மக்களுடைய வலிமையால் மட்டுமே சாதிக்க முடியும்” என்று தனது சிறப்புரையை நிறைவு செய்தார்.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சென்னைக்கிளைத் தோழர்களின் நாடகம், ”பன்னாட்டு நிறுவனங்களால் நமது மின்சாரம் பறிக்கப்படுவதையும் அதற்கு மாற்றாக கூறப்படும் அணு உலை என்பது மக்களை கொல்லவந்த இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தின் பிண உலை என்பதையும் தனியார்மயம் தாராளமயம் உலகமயத்தின் விளைவான  இந்த அணு உலையை மக்கள்  அடித்து விரட்ட வேண்டும்” என்பதை வலியுறுத்தும் வகையில் அமைந்தது.

நன்றியுரை பு.மா.இ.மு.-ன் மாநில அமைப்பாளர் தோழர் கணேசன் கூறினார். இறுதியில் பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்துடன் பொதுக்கூட்டம் நிறைவு பெற்றது.

ஆபத்தான அணு உலை வேண்டாம் ! அனைவருக்கும் மின்சாரம் வேண்டும் ! என்பதை வலியுறுத்தும் வகையில் புகைப்படக் காட்சிகள் இந்தக்கூட்டத்தில் இடம் பெற்றது. இந்தக்கூட்டத்தில் சென்னை, கூடங்குளம் பகுதி மக்கள், தொழிலாளர்கள், மாணவர்கள், பெண்கள் உழைக்கும் மக்கள் என 5000த்திற்க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். எம்.ஜி.ஆர் பகுதி மக்களோ இந்த பொதுக்கூட்டத்திற்கு தங்களது நிதியை அள்ளித்தந்தனர்.  பொதுக்கூட்ட செலவுகளுக்காக துண்டேந்தி பெறப்பட்ட 15,000 ரூபாய் என்பது அப்பகுதி மக்கள் இந்த கருத்துக்கு கொடுத்த ஆதரவையே காட்டியது.  கூட்டத்தின் பின்புறம் பார்வையாளர்களுக்காக  நிகழ்ச்சி திரையிடப்பட்டது. அந்த புரஜெக்டருக்கு மின்சாரம் தடைபட்ட போது உடனே அருகில் இருந்த கடைக்காரர் தன்னுடைய கடையில் இருந்து மின்சாரம் கொடுத்து உதவினார்.

கூட்டம் முடிந்த உடன் ஒரு சிறு வியாபாரி,”வழக்கமா 8 மணிக்கு கடைய மூடிட்டு போயிருவேன், இன்னைக்கு கூட்டத்துக்காக கடைசி வரை திறந்திருந்தேன், எங்களுக்கு எவ்வளவு வேணாலும் கரண்டு கட்டு வரட்டும், ஆனா அந்த மக்களோட தாலிய அறுத்துட்டு அணு மின்சாரமெல்லாம் எங்களுக்கு வேண்டாம்” என்று நெகிழ்ச்சியாக சொன்னார். தோழர்கள் நிதி வசூல் செய்த போது பெண் போலீசு உட்பட சில போலிசுக்காரர்களும், “எங்க்கிட்ட கேட்கமாட்டீங்களா” என்று நிதி அளித்தனர்.

கூடங்குளம் அணு உலை என்பது மின்வெட்டை தீர்க்க வந்ததல்ல, அது அமெரிக்க இந்திய அணு சக்தி ஒப்பந்தத்தின் விளைவு, தனியார்மயம் தாராளமயம் உலகமயத்தின் பிரதிபலிப்பு. மின்வெட்டினால் பாதிக்கப்படும் மக்களுக்கு மொத்த மின்சாரத்தையும் பறித்து தங்களுக்கு மின்வெட்டை மட்டுமே பரிசாகத்தரும் பன்னாட்டு கம்பெனிகளையும் அதற்கு சேவை செய்யக்கூடிய அரசு மற்றும் ஓட்டுக்கட்சிகளையும் விரட்டுவது மட்டுமே இதற்கு தீர்வு என்பதாக இந்த பொதுக்கூட்டம் அமைந்தது.

  • ( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
 1. கூடங்குளம் வேனும்னு சொல்பவன், AC வேணாம்னு சொல்லனும்.ஏன்னா மக்களோட தாலியறுத்தாவது கரண்டு வேனும்கிற அளவுக்கு அக்கறையிருக்கிறவனுக்கு ACயைத் தியாகம் செய்வதில் பிரச்சினை இருக்காது இல்லையா?

  மேலும், தோழர் ராஜு குறிப்பிட்டது போல, ஏற்கனவே இயங்கும் பகுதிகளில் கதிர்வீச்சு பாதிப்பால் மனிதர்களும், மீன்களும் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆனால் இந்த விவரங்களை பாதுகாப்பு காரணங்களால் வெளியிட இயலாது என்கிறது அரசும், நீதிமன்றமும். மக்களோட உயிர் சம்பந்தப்பட்ட விசயத்தில் என்னடா புடலங்கா தேசப் பாதுகாப்பு பித்தலாட்டம்? அணு உலையில் நடக்கும் எல்லாவற்றையும் அமெரிக்காவோட பகிர்ந்து கொள்வானாம் ஆனால் அதன கதிர்வீச்சால் பாதிக்கும் மக்களுக்கு கதிர்வீச்சு அபாயம் பற்றிய உண்மையைக் கூட சொல்ல மாட்டானாம். அணு உலையில் மின்சாரம் மட்டும் தயாரிக்கிறதா பொய்தான சொல்ற?

  மேலும், விபத்தே ஏற்படாது எனில் அணு உலை நிறுவனங்கள் தைரியமாக கேரண்டி கொடுக்கலாமே என்று தோழர் ராஜு கேட்டதற்கு அணு உலை ஆதரவாளர்கள் யாராவது பதில் சொல்ல இயலுமா? இவ்வளவு பக்காவா பாதுகாப்பு செஞ்சிருக்கோம் 100% விபத்து வராது, வந்தாலும் உன்னியும் ஆவாது அதனால ஒரு வேள விபத்து நடந்தா அத்தன செலவயும் நான் ஏத்துக்கிறேன்னு ரஸ்யா சொல்லலாமே? ஏன் அவனாலயோ இல்லை அமெரிக்க, பிரெஞ்சு உள்ளிட்ட அணு உலை நிறுவனங்களாலேயோ அப்படியொரு கேரண்டி கொடுக்க இயலவில்லை? அணு உலை பாதுகாப்பு மசோதாவில் கையெழுத்திட்டு தமது பொறுப்பை கைகழுவி விடுகின்றனரே ஏன்?

  தோழர் மருதையன் குறிப்பிட்டது போல, மின்வெட்டில் 70% பல லட்சம் தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் சிறு தொழிற்த்துறையின் மீதும், மக்கள் மீது சுமத்தி விட்டு ஐடி கம்பனிக்கும், பன்னாட்டு கம்பனிக்கும் 100% கரெண்ட் சப்ளையா? இதில், ஐடி கம்பனிகளுக்கும், பன்னாட்டு கம்பனிகளுக்கும் மின் கட்டணத்தை குறைக்கக் கோரி வேறு மின்சார வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது. அயோக்கியத்தனத்துக்கு ஒரு அளவு வேண்டாம்?

  தமிழ்நாட்டின் மொத்த மின் உற்பத்தில்யில் பெரும்பகுதி சென்னை மாநகரின் பன்னாட்டு கம்பனிகளுக்கும், கொழுத்த பிரிவினரின் AC உள்ளிட்ட ஆடம்பரங்களுக்குமே செலவாகிவிடும் பொழுது தேசத் துரோகிகள் கூடங்குளத்தில் உள்ளனரா இல்லை சென்னையிலா?

  பிக்காரித்தனமாக பொதுக்கூட்டத்திற்கு கரண்ட் கட் செய்தது அரசு, அதை திரைப்படப்பிடிப்புகளுக்கு பயன்படும் ஜெனரேட்டர் வாகனத்தை வைத்து பதிலடி கொடுத்த புரட்சிகர அமைப்பினருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

 2. நாடகத்தில் நாரவாயன் நாரயணசுவாகி, அண்டப் புளுகன் அப்துல் கலாம் இவர்களின் பிம்பங்கள் சுக்கு நூறாக உடைத்தெறியப்பட்டன. அப்துல் கலாம் கனவு காணச் சொன்ன போதெல்லாம் கூட்டத்தில் சிரிப்பலை பொங்கியது.

 3. சிறப்பானதொரு பொதுக்கூட்டம். இடிந்தகரை மக்களும் பங்குகொண்டு ஆதரவளித்தது வரவேற்கத்தக்கது. நிகழ்ச்சி முடிந்த பிறகும் 10 மணி நிறைவடைய 15 நிமிடங்கள் மீதமிருந்த நிலையிலும் மருதையன் அவர்களை விரைவாக முடித்துக்கொள்ள கோரியதை தவிர்த்திருக்கலாம். மருதையன் அவர்கள் கவனிக்கத்தகுந்த ஒப்பீடுகளை விளக்கிக் கொண்டிருந்தார். பின்னர் அவரது உரை திசைமாறி முடித்துக்கொள்ளப்பட்டது. இது போன்ற பொதுக்கூட்டங்களில் சிறப்புரையாளர்களுக்கு 1.30 மணிநேரம் ஒதுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

 4. // பொய்யில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் வந்தால் அதன் மூலம் பொய்யாய்ப்புழுகும் நாராயணசாமி மற்றும் கலாமின் வாயில் 10 ஆயிரம் MW மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தையும் முன்வைத்தார். //

  லயோலா கல்லூரி, பெரியார் நகர்.. கவிஞரே, அப்துல் கலாம் அவர்களை இப்படி அறம் பாடியே படுத்துவது சரியா??!!..

 5. ம.க.இ.க. அணிகளின் பட்டியலில் ம.உ.பா.மை. இடம் பெறவில்லையே? ஏன் என்று விளக்கமுடியுமா?

  • இதற்கு போயி விளக்கமெல்லாம் எதுக்குடா அம்பி. மகஇக அணியில் மஉபாமை இல்லையென்று புரியலையோ!

   • இந்தப்பக்கத்தின் இடதுபுறம் ”சிறப்புப் பகுதிகள்”->”போராட்டத்தில் நாங்கள்” என்ற பகுதியில் ( https://www.vinavu.com/category/us/ ) ம.க.இ.க.அணிகளுடன், ம.உ.பா.மை (HRPC) போராட்டங்களும் தொகுக்கப்பட்டிருக்கிறதே என்பதால் விளக்கம் கேட்டேன். விளக்கமெல்லாம் கேட்கப்படாது என்று உம்முடைய பதிலைப் பார்த்தால் தெரிகிறது.

 6. கவிஞரே, அப்துல் கலாம் அவர்களை இப்படி அறம் பாடியே படுத்துவது சரியா?//

  கவிஞரைக் கேளாதீர்! ஒரு கவிஞர், மக்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, ஐந்தாண்டு பதவியில் கிடந்தவர் ஏன் கொடுக்கவில்லை. அந்த நயவஞ்சகன் கலாமைக் கேளும் “படுத்துவது சரியா?” என்று!

 7. தோழர் மருதையன் மிக அருமையாக பேசினார். பன்னாட்டு கம்பனிகளின் அசுர வளர்ச்சிக்காகவும்,அவர்கள் போடும் எலும்பு துண்டுக்காகவும். அரசு எவ்வளவு அயோக்கியத்தனமாக செயல்படுது என்பதை, மக்களுக்கு புரியும் வகையில் எளிமையாக பேசினார்.

 8. கூடங்குளம் தமிழகநந்திகிராமம் அரசியலில் தாழ்ந்துக்கிடக்கும் தமிழகத்திற்கே பெருமை அளிக்கும் போராட்டம். அணு உலை எதிர்ப்புப் போராட்டம் தமிழகம் முழுவதும் பரவட்டும்.

 9. 26-2-2012 அன்று நடந்த போராட்டத்தை எல்லா ஊடகங்களும் மறைத்து விட்டன. அனேகம் பேர் கலந்துகொன்டனர் என்று அறிந்தேன். வினவு அதனை கட்டுரையாக எழுதுமா?

 10. //பிக்காரித்தனமாக பொதுக்கூட்டத்திற்கு கரண்ட் கட் செய்தது அரசு//

  அணு உலை வேண்டாம் என்று சொல்பவர்கள் அதை இருட்டிலேயே சொல்லலாமே?

  • ராம் இந்த திமிரு இருக்கும் அளவுக்கு உங்ககிட்ட சரக்கில்லை, அதனாலதான் ஏற்கனவே கேட்ட கேள்விக்கு பதில் சொல்லமுடியாம இருட்டுல ஒளிஞ்சிருந்தீங்க போல.

  • ராம்,

   ‘ஆபத்தான அணு உலை வேண்டாம், அனைவருக்கும் தடையில்லா மின்சாரம் வேண்டும்’ என்பதுதான் முழக்கம்.
   அணு உலைக்கும் மின்சார பயன்பாட்டுக்கும் தொடர்பு இல்லை என்பது தெளிவாக விளக்கப்பட்டது.

   • அணு உலை = அணு குண்டு

    அணு உலை ≠ மின்சாரம்

    இந்த சமன்பாட்டை அணு உலை எதிர்ப்பாளர்கள் இன்னும் விளக்கவில்லை.

    • முன்னர் நடந்த விவாதம்.

     https://www.vinavu.com/2012/02/10/shut-down-koodankulam-tuticorin-protest-news/#comment-56913

     வேறு ஒரு வலைப்பதிவிலிருந்து

     தமிழினத்தின் புதிய விபீடணன் அப்துல் கலாம்.

     அணு உலைகள் மின் உறபத்திக்காகவா,அணு குண்டு உறபத்திக்காகவா.

     அணு உலைகள் பெரும் பொருட்செலவில் நிறுவப்படுவது மின் உற்பத்திக்காக என்று நம்மை நம்பச் சொல்கின்றது இந்திய ஆளும் கும்பல்.ஒரு எளிய கேள்வி இந்த பித்தலாட்டத்தை தோலுரித்து விடும். இரண்டு முறை அணு குண்டுகளை வெடித்து சோதனை செய்துள்ளது இந்திய அரசு.சோதனை நடந்தது தார் பாலைவனத்தில் பொக்ரான் என்ற இடத்தில் என்று நமக்கு தெளிவாக அறிவித்த அரசு அந்த அணு குண்டுகளை எங்கு,எப்போது செய்தோம் என்பதை தெரிவிக்கவில்லையே. ஏன். எங்கே செய்திருப்பார்கள் எனபது ஊரறிந்த கமுக்கம்.வேறு எங்கே செய்ய முடியும்.கலாம் ஏற்றிப் போற்றும் அணு உலைகளில்தான். மின் உற்பத்தி என்ற போர்வையில் அணு உலைகள் அணு குண்டு செய்யவே பயன்படுத்தப் படுகின்றன என்பது இதிலிருந்தே தெளிவாகவில்லையா.

     அணு உலையின் முதன்மை விளைபொருள் அணுகுண்டே.பக்க விளைபொருளே மின்சாரம்.

     அணு உலைகளின் முதன்மையான விளைபொருள் எதுவென புரிந்து கொள்ள அவற்றின் செயல்பாட்டை சுருக்கமாக பார்ப்போம். இயற்கையாக கிடைக்கும் யுரேனிய தாதுவை அணு உலைகளில் செறிவூட்டி யுரேனிய அணுக்களை அணுப்பிளவு [fission] செய்வதன் மூலம் .ப்ளுட்டோனியம் உற்பத்தி செய்யப்படுகிறது.இந்த புளுட்டோனியம்தான் அனுகுண்டுகளுக்கான மூலப்பொருள்.

     இந்த மூலப்பொருளை உருவாக்குவதற்கான அணுப்பிளவின் போது மிகுந்த வெப்பம் வெளிப்படுகிறது.அதை தணிக்காவிட்டால் யுரேனியம் வைக்கப்பட்டிருக்கும் கொள்கலனை உருக்கி பெரும் கதிரியக்க விபத்தை ஏற்படுத்திவிடும்இதுதான் புக்குசிமாவில் நடந்தது. வெப்பத்தை தணிப்பதற்காக அந்த கொள்கலனில் மீது குளிர்ந்த நீர் பாய்ச்சப் படுகிறது.அந்த நீர் வெப்பத்தினால் நீராவியாக மாறி வெளியேறும் பாதையில் மின்னாக்கியின் சுழல் சக்கரங்களை வைத்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இப்படியாக அணுகுண்டு செய்வதற்கான ஏற்பாட்டையே மின் உற்பத்தி என மாய்மாலம் செய்கிறது இந்திய அரசு.

     • திப்பு,

      சைரஸ், அப்ஸாரா, காமினி, துருவா, பூர்ணிமா1, பூர்ணிமா2
      என்று நம்மிடம் இருக்கும் அணு உலைகளை கொண்டு குண்டு செய்ய தேவையான புளூடோனியத்தை எளிதாக பெற முடியும். இதற்காக 14,000 கோடி செலவு செய்து அணு உலை அமைக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் “மெகாடண் டு மெகாவாட்” (megaton to megawatt) என்ற திட்டத்தின் மூலம் அணு ஆயுதங்கள் எல்லாம் மீண்டும் அணு உலை எரிபொருளாக மாறிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் நீங்கள் சொன்னதயே திரும்ப திரும்ப சொல்வது உங்களுக்கே அபத்தமாக படவில்லை?

      http://www.world-nuclear.org/info/inf13.html

      • ஒரு அணுஉலை இயங்கும் கால அளவை வைத்து ஏன் கூடங்குளம் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

      • ராம்,

       இருக்கும் அணு உலைகளில் இருந்து புளுடோனியத்தை பெற முடியும் என்று ஒப்புக் கொண்டமைக்கு நன்றி.பெறுகிறார்கள் என்பதுதான் உண்மை.குறைந்த பட்ச தடுப்பரண் என்ற பெயரில் குவித்து வைத்திருக்கும் அணு ஆயுதங்களே அதற்கு சான்று.[இதுவே ஒரு அயோக்கியத்தனம்.பேரழிவு ஆயுதம் அணுகுண்டு என்று சொல்லாமல் எளிதில் புரியாவண்ணம் தடுப்பரண் என்று சொல்வது ஏன்.]

       அப்புறம் அந்த அணு ஆயுதங்களை சுமந்து சென்று பல்லாயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள இலக்குகளையும் தாக்க வல்ல ஏவுகணைகளை கோடிக்கணக்கில் செலவிட்டு செய்து குவிப்பது அடுத்த சான்று.அவற்றை பாரத மாதாவின் பல் குத்தும் குச்சி என்று சொல்லாமல் விட்ட வரைக்கும் மகிழ்ச்சி.

       அணு உலைகளின் செயல்பாடுகளை நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் மூடு மந்திரமாகவே நடத்தி வருகிறது இந்திய அரசு.ஆகவே எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கும் எனபது இந்திய மக்கள் அறியாத கமுக்கமாகவே இருக்கும். கூடங்குளம் அணு உலை உற்பத்தி செய்யும் புளுடோனியம் என்னவாகும் என்பதை யார் விளக்குவது.சோனியா வீட்டில் சாம்பிராணி போட பயன்படுத்தப்படும் என்று சொல்லி விடாதீர்கள்.ஏன் இப்படி சொல்கிறேன் என்றால் முந்தய விவாதமொன்றில் அணு கழிவு என்று எதுவும் இருக்காது என துண்டு போட்டு தாண்டி குதித்தீர்கள்.

       அணு ஆயுதங்களை குவித்து வல்லரசு ஆவது இந்திய ஆளும் கும்பலின் நீண்ட நாள் கனவு.அதனால்தான் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து வந்துள்ளது.அது பாரபட்சமானது என்பதெல்லாம் நொண்டிச்சாக்கு. பாரபட்சம் மிகுந்த ஐ.நா.வை ஏற்றுக் கொள்ளும்போது NPT யில் மட்டும் ஏன் பிடிவாதம்.ஐ.நா வில் ரத்து அதிகாரத்துடன் கூடிய நிரந்தர உறுப்பினர் பதவிக்காக அலை மோதுவது போலத்தான் தன்னையும் அணு ஆயுத நாடாக உலகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஏகாதிபத்தியங்களிடம் பிச்சை எடுக்காத குறையாக கெஞ்சுகிறது இந்திய ஆளும் கும்பல்.சொந்த நாட்டு மக்கள் பட்டினியிலும் பசியிலும் பரிதவிக்கும்போது வல்லரசு கனவில் கோடிகளை விரயமாக்கும் இந்த அயோக்கியர்களை எதை கொண்டு அடிக்கலாம்.

       சரி ராம்.இத்தனை நீண்ட விளக்கத்திற்கு பிறகும் அணு உலைகள் மின்சாரத்திற்கு மட்டுமே என்பதை வாதத்திற்காக ஏற்றுக்கொண்டாலும் அவை அணு உலைகளை உருவாக்கி விற்கும் நிறுவனங்களின் கொள்ளை லாபத்திற்காகவே இந்திய மக்களின் தலையில் கட்டப்படுகின்றன என்பதை ஏராளமான சான்றுகளுடன் விளக்கி வினவில் பல கட்டுரைகள் வெளியாகியுள்ளன.அவற்றுக்கெல்லாம் எந்த மறுப்பும் சொல்ல முடியாமல் மௌனம் சாதிக்கும் நீங்கள் இதை வெறும் தொழில் நுட்பம் சார்ந்த பிரச்னையாக மட்டும் சுருக்கி காட்டுவது நேர்மையற்ற செயல்.

       • //பேரழிவு ஆயுதம் அணுகுண்டு என்று சொல்லாமல் எளிதில் புரியாவண்ணம் தடுப்பரண் என்று சொல்வது ஏன்?//

        திப்பு,

        1945 ஆகஸ்ட் 9 ஆம் தேதி நாகசாகியில் விழுந்த அணுகுண்டுக்குப் பின் இன்றுவரை (அதாவது கடந்த 67 ஆண்டுகளில்) அணு ஆயுதம் எதுவும் பயன்படுத்தப் படவில்லை. 1945ல் அணு ஆயுதம் வத்திருந்த நாடு ஒன்றே ஒன்று. இன்று அணு ஆயுதம் வத்திருக்கும் நாடுகள் 9. 1985ல் சுமார் 65000 ஆயுதங்கள் இருந்த இடத்தில் இன்று 8000.

        http://en.wikipedia.org/wiki/List_of_states_with_nuclear_weapons

        நீங்கள் “தடுப்பரண்” என்று சொல்வது “deterrence” என்று ஊகிக்கிறேன்.
        டிடரண்ஸ் என்பதை தடுப்பரண் என்று நீங்களாக அர்த்தம் பண்ணிக் கொண்டு எளிதில் விளங்கவில்லை
        என்று குறையும் சொல்கிறீர்கள். அச்சமூட்டி தயங்க செய்தல் என்ற பொருள் படும் Nuclear Deterrence என்பது அமெரிக்க – ரஷ்ய பனிப்போர் காலத்தில் புழக்கத்துக்கு வந்தது.

        http://en.wikipedia.org/wiki/Deterrence_theory

        weapons of Mass Destruction(WMD)பட்டியலில் கெமிகல், பயலாஜிகல்,நியூக்ளியர் ஆகிய மூன்றும் உண்டு.67 ஆண்டுகளாக இப்படிப்பட்ட ஆயுதங்களை வைத்து மிரட்டியே சர்வதேச அரசியல் நடந்து வருகிறது. இந்தியாவிடமும் பாகிஸ்தானிடமும் அணு ஆயுதங்கள் இல்லையென்றால் கார்கிலுக்குப் பிறகு மூன்றாவது இந்தோ-பாக் போர் மிக உக்கிரமாகவும் பலத்த உயிரிழப்புடனும் இருந்திருக்கும்.

        எனவே உதார் விடுவதற்காக ஒன்றிரண்டு குண்டுகளை செய்து பத்திரமாக ராணுவம் வைத்துக் கொள்ளட்டும். Atom for Peace என்று நாம் சமத்தாக மின்சாரம், மருத்துவம், விவசாயம், என்று ஆக்க பூர்வமான வேலைகளுக்கு பயன் படுத்துவோம்.

    • அணு உலை = மின்சாரம் இந்த சமன்பாட்டை முதல்ல விளக்குங்க ….

 11. //.ஐ.நா வில் ரத்து அதிகாரத்துடன் கூடிய நிரந்தர உறுப்பினர் பதவிக்காக அலை மோதுவது போலத்தான் தன்னையும் அணு ஆயுத நாடாக உலகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஏகாதிபத்தியங்களிடம் பிச்சை எடுக்காத குறையாக//

  1 பில்லியன் மக்கள் தொகை கொண்ட சீனா U.N Security Council உறுப்பினராக VETO பவருடன் இருக்கலாம் என்றால் அதே அளவு மக்கள் தொகை கொண்ட இந்தியா அந்த பதவிக்கு ஏன் ஆசைப்படக் கூடாது?

  இறுதி வரை N.P.T யில் கையெழுத்து போடாதபோதும் இந்திய சந்தை மதிப்பை வைத்து Nuclear Suppliers Group (NSG)வியாபாரம் தான் பெரிசு என்று இறங்கி வந்தார்கள். பாகிஸ்தான் கூடத்தான் மின்சார உற்பத்திக்காக அணு உலை கேட்கிறது, அங்கேபோய் ஏன் யாரும் விற்பனை செய்வதில்லை?

 12. //இத்தனை நீண்ட விளக்கத்திற்கு பிறகும் அணு உலைகள் மின்சாரத்திற்கு மட்டுமே என்பதை வாதத்திற்காக ஏற்றுக்கொண்டாலும் அவை அணு உலைகளை உருவாக்கி விற்கும் நிறுவனங்களின் கொள்ளை லாபத்திற்காகவே //

  திப்பு,

  வாதத்திற்காகவாவது அணு உலைகள் மின்சாரத்திற்கு மட்டுமே என்று நீங்கள் ஒப்புக் கொண்டதற்கு நன்றி.

  அணு உலை விற்பவர்களின் கொள்ளை லாப விஷயத்திற்கு வருவோம்.அணு உலை பிஸினஸை ஏரோபிளேன் பிஸினஸூடன் ஒப்பிடலாம். போயிங், ஏர்பஸ் இந்த ரெண்டு கம்பெனியில் ஒன்றிடம் தான் பிளேன் வாங்க முடியும்.
  பிளேன் மாதிரியே அணு உலையும் complex and complicated technology.ஆரம்பத்தில் அமெரிக்காவில் General Electric, Westinghouse என்று ரெண்டு கம்பெனிதான்.ஐரோப்பாவில் ஜெர்மன் கம்பெனியான ஸீமன்ஸ், பிரெஞ்ச் அரீவா, ஜப்பானில் தோஷிபா ,மிட்ஸுபிஷி ஆகியவை. இன்று உலக அளவில் அணு உலைகளுக்கு பெரிய சந்தை இல்லாததாலும், licensing விஷயத்தில் உள்ள முட்டுக்கட்டைகளினாலும், இந்த கம்பெனிகள் எல்லாம் இன்று கிட்டத்தட்ட இரு குடைகளுக்கு கீழ் வந்து விட்டன.

  GE, Westinghouse, Toshiba ஆகிய கம்பெனிகளின் மொத்த விற்பனையில் அணு உலை பிஸினஸ் மிஞ்சிப் போனால் 5% இருக்கும்.இந்த கம்பெனிகளிடம் நீங்கள் அணு உலை வாங்கா விட்டாலும் டர்பைன், -ஹெவி எலக்ட்ரிகல்ஸ், என்று மற்ற மின் உற்பத்தி சாதனங்கள் வாங்கியே ஆகவேண்டும். இந்திய அணு ஆராய்சியில் நிறைய சாதித்திருந்தாலும் ஆயிரம் மெகாவாட் அளவு மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதில் உள்ள தொழில் நுட்ப சவால்களை இன்னும் சில பத்தாண்டுகள் பிடிக்கும். எனவே 40-50 ஆண்டு அனுபவம் பெற்ற உலக தரமுள்ள இந்த நிறுவனங்களை பயன்படுத்திக் கொள்வதா அல்லது நம்மூர் லார்சன்&டூப்ரோ, BHEL,போன்ற கம்பெனிகள் இத்தகைய தொழில் நுட்பத்தை பெறுமளவும் காத்திருப்பதா என்பதே இந்திய அணு சக்தி துறையின் முன்னுள்ள கேள்வி?

  அதிலும் கூடங்குளம் நமக்கு சல்லிசான விலையில் கிடைத்திருப்பதற்காக நாம் நிச்சயம் சந்தோஷம்தான் படவேண்டும்.

  உடன்குடியில் 1600 மெகாவாட்டுக்கு 8000 கோடி ரூபாய், அப்புறம் நிலக்கரி இறக்குமதிக்கு விலை, லஞ்சம் எல்லாம் சேர்த்து பல ஆயிரம் கோடிகள் என்பது மட்டும் சீப்பா?

  எனவே, accident risk and consequent radiation effects, என்பதற்காக உங்கள் அணு உலை எதிர்ப்பென்றால், இதை வெறும் தொழில் நுட்பம் சார்ந்த பிரச்னையாக மட்டும் சுருக்கி காட்டுவது தான் நேர்மையாக இருக்கும்.

  அரசியல், பொருளாதார, ராணுவ, காரணங்களுக்காக உங்கள் அணு உலை எதிர்ப்பென்றால் உங்களிடம் நேர்மையான அறிவியல் , தொழில் நுட்ப விவாதங்கள் விழலுக்கிரைத்த நீர்.

 13. ராம்,
  அணு மின்சாரம் மலிவானது என்ற புரட்டை நற்றமிழன் இங்கு உங்களுடன் நடத்திய விவாதத்தில் அம்பலப்படுத்திய போது மறுமொழி சொல்ல முடியாமல் வாயடைத்து போனீர்கள்.இப்போது கூசாமல் அதே பொய்யை மீண்டும் மீண்டும் சொல்கிறீர்கள்.

  பார்க்க.https://www.vinavu.com/2012/02/01/koodankulam-trash-congress-saffron-criminals/#comment-56685

  நீங்கள் சொல்வது போல் அணு ஆயுதங்களை nuclear deterrence என இந்திய ஆளும் கும்பல் சொல்வதில்லை.credible minimum deterrent என்றுதான் சொல்கிறார்கள்.சரி எப்படி சொன்னாலும் அது தகிடுதத்தம்தான்.மின் கட்டண உயர்வு என்பதை மின் கட்டண சீரமைப்பு என்று புரட்டுவது போன்றதுதான்.

  உங்கள் வாதப்படி ஏகாதிபத்தியங்களே ஒழித்துக்கட்டும் அணு ஆயுதங்களை இந்திய, பாகிசுத்தானிய கிறுக்கன்கள் இதே கால கட்டத்தில் செய்து குவிப்பதை எப்படி ஏற்றுக் கொள்வது.

  இந்தியா இரண்டாவது முறையாக அணுகுண்டு வெடித்து சோதனை செய்த ஓராண்டுக்குள்ளாகவே பாகிசுதான் போர் வெறியர்கள் கார்கில் பகுதியில் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமித்து ஒரு போருக்கு வித்திட்டனர்.உங்கள் credible minimum deterrent வேலைக்கு ஆகவில்லை எனும்போது நாய் பெற்ற தெங்கம் பழமாக உருட்டிக் கொண்டிருக்க பல்லாயிரம் கோடிகளை வீணடிப்பதை எப்படி ஏற்றுக் கொள்வது.

  அணு ஆயுத வலுவே கார்கில் பிரச்னை பெரும் போராக மாறாமல் தடுத்தது எனபது அறியாமை. ”சை ச்சை சும்மா இருக்க மாட்ட”என்று கிளிண்டன் அதட்டல் போட்டவுடன் இரண்டு அமெரிக்க அடிமைகளும் வாலை சுருட்டிக் கொண்டன என்பதுதான் உண்மை.

  பார்க்க.

  http://hinduworld.tripod.com/views/kargil.html

  பாக்.ஒரு அணு ஆயுத நாடு என தெரிந்த நிலையிலும் இந்திய நாடாளுமன்ற தாக்குதலுக்கு பிறகு இந்தியா படைகளை பாக்.எல்லையில் குவித்து பெரும் போருக்கு ஆயத்தமானது.அவனது அணு ஆயுத வலு இதை தடுக்கவில்லை.ஆனாலும் அமெரிக்க ஆண்டைகளை மீறி ஒரு வெங்காய வெடியை கூட பாக்.மீது வீச முடியாமல் திரும்பி வந்தார்கள்.

  அணு உலை எதிர்ப்பாளர்கள் அனைத்து அம்சங்களையும் அலசி ஆராய்ந்து அதன் சாதக பாதகங்களை எடுத்துச் சொல்லித்தான் அணு உலைகளை அனுமதிக்க கூடாது என மக்களிடம் பரப்புரை செய்கிறார்கள்.அணு உலை ஆதரவாளர்கள்தான் நாளொரு பொய்யும் பொழுதொரு புரட்டுமாக மக்களை ஏய்க்க முயல்கிறார்கள்.

  \\accident risk and consequent radiation effects, என்பதற்காக உங்கள் அணு உலை எதிர்ப்பென்றால், இதை வெறும் தொழில் நுட்பம் சார்ந்த பிரச்னையாக மட்டும் சுருக்கி காட்டுவது தான் நேர்மையாக இருக்கும்.அரசியல், பொருளாதார, ராணுவ, காரணங்களுக்காக உங்கள் அணு உலை எதிர்ப்பென்றால் உங்களிடம் நேர்மையான அறிவியல் , தொழில் நுட்ப விவாதங்கள் விழலுக்கிரைத்த நீர்.//

  அணு உலை கூடாது என்பதற்கான அரசியல், பொருளாதார, ராணுவ, காரணங்கள மறுக்க முடியாத அளவுக்கு வலுவாக உள்ளன என்பதை உங்களை அறியாமல் ஒப்புக் கொள்கிறீர்கள். உங்களிடம் மீதி இருப்பது அணு உலைகள் பாதுகாப்பானவை என்ற வாதம்தான்.அதுவும் சொத்தை வாதம்தான் என்பதை முன்னரே நடந்த விவாதங்கள் காட்டியுள்ளன.

  உங்களுக்கு சாதகமான வாதங்களை மட்டுமே இணையத்தில் தேடி படித்துக் கொண்டிருக்காமல் எதிர்கருத்துக்களையும் தேடிப படியுங்கள்.உங்களுக்கு என்னாலான சிறு உதவி. ஏன் கூடாது கூடங்குளம் என விளக்கும் சுட்டி.

  http://www.dianuke.org/thirteen-reasons-against-the-koodankulam-nuclear-power-project/

 14. எது எபிடியோ தயவுசேஞ்சு மின்சாரத்துக்கு ஒரு வழி பண்ணுங்க இங்க எல்லாரும் தொழில் பண்ண முடில…அடுத்த மாசம் வீட்டுக்காரன், மலிகைகாரன் வந்து நிக்க போறான்…யாரு உங்களில் பதில் சொல்ல போறீங்க..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க