privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்திண்டுக்கல் காகித ஆலைத் தொழிலாளர் போராட்டம்!

திண்டுக்கல் காகித ஆலைத் தொழிலாளர் போராட்டம்!

-

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், விளாம்பட்டியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் தனலட்சுமி, சர்வலட்சுமி, விஜயலட்சுமி ஆகிய 3 காகித ஆலைகளின் தொழிலாளர்கள் தங்களது உரிமைகளுக்காகவும், கடந்த 7 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கூலி உயர்வுக்காகவும் 10.4.12 முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளர் இணை ஆணையர்  அழைத்தும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள முதலாளி மறுத்து விட்டார். மாறாக எந்த முடிவும் எடுக்க அதிகாரமற்ற ஆலையின் நிர்வாகிகளைப் பேச்சுவார்த்தைக்கு அனுப்பி வைத்துள்ளார். முதலாளியின் கைபேசி எண்ணைக் கேட்ட இணை ஆணையருக்குத் அதனைத் தர மறுத்து விட்டனர் நிர்வாகத் தரப்பினர்.

முன்னர் நடந்த பேச்சுவார்த்தையின் போது தொழிலாளர்கள் மது அருந்தி விட்டு வந்து தங்களை மிரட்டியதாகப் பொய்ப்புகார் கூறி, அதனால் தற்போது பேச்சுவார்த்தைக்கு வர முடியாது என்று தட்டிக்கழிக்கிறது முதலாளி தரப்பு.  தொழிற்சங்கங்கள் மூலம் அறிவிப்பு செய்து அனுமதி பெற்று நடத்துகின்ற வேலை நிறுத்தத்தை சட்ட விரோதமானது என்றும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார் முதலாளி.

முப்பது ஆண்டுகளாக வேலை செய்து வரும் அனுபவம் வாய்ந்த தொழிலாளர்களுக்கே சம்பளம் ரூ.7500 க்குள்தான். 150 க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைந்த கூலி மாத்திரம்தான்; எந்தச் சலுகையும் கிடையாது. தலா 500 பேர் வரை வேலை செய்யும் இந்த ஆலைகளில் தொழிலாளர்களுக்கு உணவக வசதி கூட கிடையாது.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வு தரப்பட வேண்டும் என்ற தற்போதைய ஒப்பந்தத்தை மதிக்காமல், கடந்த 7 ஆண்டுகளாக சம்பள உயர்வு தராமல் இழுத்தடித்து வரும் முதலாளி தரப்பு, அதற்குக் காரணம் ஆலை மேம்பட்ட தொழில் நுட்பத்தால் மாத்திரமே இயங்குவதாகவும், தொழிலாளர் உழைப்பால் அல்ல என்றும் கூறி வருகின்றது. ஆரம்பத்தில் ஒரு ஆலை என்பதிலிருந்து இன்றைக்கு 7 ஆலைகளாக மாறியுள்ளதற்கு தொழிலாளர்களது உழைப்பு காரணமல்ல என்று கூசாமல் பேசுகிறார் அம்முதலாளி.

அண்மையில் நெல்லை மாவட்டத்தில் தொடங்கியுள்ள புதிய ஆலைக்கு இங்கிருந்து  போன தொழிலாளர்களுக்கு ரூ 15 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது. கேட்டால் அது வேறு, இது வேறு என்று சொல்கிறார்கள். கிராமப்புற விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களைக் குறைந்த சம்பளத்துக்கு அமர்த்தி, அவர்களது உழைப்பை ஒட்டச் சுரண்டி, பல கோடிகளைக் குவித்துள்ளார் இம்முதலாளி. மாறாக இன்று தொழிலாளர்களெல்லாம் குடும்பமாகி, எல்லாப் பொருட்களும் ஒன்றுக்கு பத்து மடங்கு விலை உயர்ந்து நிற்கும் விஷச் சூழலில் வாழக் கூட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இதுவரை இப்பகுதியில் உள்ள 3 ஆலைகளின் தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தியதே இல்லை. ஆனால் இம்முறை அனைத்துத் தொழிலாளர்களும், சங்கங்களும் ஒருமித்து ஒற்றுமையாகப் போராடுகிறார்கள் என்றால், அதற்கு காரணம் எல்லா தொழிலாளர்களும் ஒரே மாதிரியான வாழ்க்கை நெருக்கடியைச் சந்திப்பது தான். ‘மூத்த தொழிலாளர்களுக்கு ரூ 5 ஆயிரம் சம்பள உயர்வு, 3 ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய உயர்வுக்கான ஒப்பந்தம், முன் தேதியிட்டு ஊதிய உயர்வு’ ஆகிய முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்துப் போராடும் தொழிலாளர்களுக்கு பேச்சுவார்த்தையின் போது ‘ஊதிய உயர்வில் ரூ. 1000 க்கு மேல் சல்லிக்காசு கூட தர முடியாது’ என்று நிர்வாகம் சண்டித்தனம் செய்து வருகின்றது.

தொழிலாளர்களது அழைப்பின் பேரில் 26.4.12 அன்று ஆலை வாயிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மதுரை மாவட்ட மனித உரிமைப் பாதுகாப்பு மையச் செயலாளர் தோழர் லயனல் அந்தோணிராஜ் கலந்து கொண்டு உரையாற்றினார். நூற்றுக்கணக்கில் திரளாகத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். தொழிலாளர்களின் போராட்டத்துக்கு எல்லா வகையிலும் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் ஒத்துழைப்பு நல்கும் என்று உறுதியளிக்கப்பட்டது. தொடர்ச்சியான இப்போராட்டம் தொழிலாளர்களிடையே வர்க்க ஒற்றுமையையும், புதிய நம்பிக்கையை தோற்றுவித்துள்ளது.

_______________________________________________

– மனித உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை

________________________________________________

வினவுடன் இணையுங்கள்